வெள்ளி, 2 அக்டோபர், 2009

வானொலியே வரம்....!!

இது 1995 ற்கு முற்பட்ட காலத்தின் கண்ணாடிப்பதிவு. பொருளாதாரத்தடை என்ற அரக்கன் எம்மை நசுக்கிய துன்பமான காலம். மின்சாரம் என்பதை கண்ணால் காணமுடியாத கொடுமையான காலம். மெழுகுதிரி, மண்ணெண்ணை, ஜாம் போத்தல் விளக்கு, தேங்காய் எண்ணை விளக்கு என்பவைதான் எமது இருளினை விரட்டிய வேதனையான காலம். மின்சாரம் இல்லை என்பதால் தொலக்காட்சிகள் எல்லாம் வடிவாக பெட்டிகளில் அடைக்கப்பட்டு அறைகளில் பேணப்பட்ட சோகமான காலம். செய்திகளுக்காக சில அச்சு ஊடகங்கள் தவிர வேறு எதுவும் எமக்காக இல்லை என்ற வருத்தமான காலம். இந்த காலத்தில் எல்லாம் எமக்கு வானொலிதான் நண்பன். உறவினன். உற்ற சகோதரன். ஏன் எல்லாமே வானொலிதான். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு சைக்கிளாவது நிற்கும். அதே போலத்தான் அநேகமாக எல்லோர் வீட்டிலும் வானொலியும் இருந்தது.

செய்திக்காக மட்டுமல்ல எமது பொழுது போக்கு அம்சமாக, எமது மனங்களை ஓரளவு சாந்தப்படுத்த கூடிய ஒரு சாதனமாக வானொலி விளங்கியது என்றால் மிகையல்ல. பாட்டு கேட்பதுதான் பிரதானமான ஒரு பொழுது போக்கு. ஒலிப்பேழை (கசெற்) வாங்கி கேட்குமளவிற்கு வசதிகள் எல்லோரிடமும் கிடைக்கவில்லை. எனவே வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள்தான் எமக்கு கண்கண்ட தெய்வம் போல விளங்கியது. மத்திய அலைவரிசைகளில் தவழ்ந்து வரும் இசைதான் எம்மை எல்லாம் பரவசப்படுத்தும். பன்பலையில்(FM) வலம் வந்தது ஒரே ஒரு தாயக வானொலி புலிகளின் குரல் தான். இதே நேரத்தில் செய்திகளுக்காக பிலிப்பைன்ஸ் மணிலாவில் இருந்து ஒலித்த வெரித்தாஸ் வானொலி, இலண்டன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாகிய பிபிசி போன்றவைதான் எமக்கு தஞ்சம். இதைவிட நாம் பெரிதும் ரசித்தது சிங்கப்பூர் ஒலி 96.8 . இவைதவிர அகில இந்தியா வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்தோம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளை சிற்றலைவரிசைகளிலும், சர்வதேச வானொலியை மத்திய அலைவரிசை 882 அதிர்வெண்ணிலும், சிங்கப்பூர் வானொலி, பிபிசி மற்றும் வெரித்தாஸ் வானொலிகளை நாம் சிற்றலை வரிசையிலும் கேட்க கூடியதாக இருந்தது எமக்கு. இந்திய வானொலிகளின் நிகழ்ச்சிகள் எல்லாம் மத்திய அலைவரிசையில் தெளிவாக கேட்க முடியும். அந்தக் காலத்தில், இப்பொழுது புளுத்து போயிருக்கும் தனியார் வானொலிகள் எதுவும் இருக்கவில்லை. இலங்கை வானொலிதான் கொடி கட்டி பறந்தது. அவர்களுடைய செய்தியை தவிர மற்ற எல்லாவற்றையும் மக்கள் கேட்க தயாராகவே இருந்தனர்.

வானொலி என்றதும் இப்போதுள்ள டிஜிற்றல் தொழில் நுட்பத்தோடு வந்த வானொலிகள் அல்ல. சாதாரண றேடியோக்கள் தான். National Panasonic றேடியோதான் எல்லோர் வாயிலும் வரும் பெயர். சின்ன றேடியோ பெரிய றேடியோ என எல்லா வகையிலும் மக்கள் பாவித்தனர். ஆனால் அந்தக்காலத்தில் யாரிடமாவது RX செற் (இப்படித்தான் அழைப்பார்கள்) இருந்தால் அவர்கள் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கப்படுவார்கள். சரி வானொலி இருந்து மட்டும் போதுமா அதற்கு மினசார முதல் தேவை இல்லையா? தேவைதான். அப்படி என்றால் கரண்ட் இருந்ததா? இல்லை. அப்படி என்றால் பற்றறி இருந்ததா? அது கூட மிகப்பெரும் தட்டுப்பாடு. பெரிய பற்றரி ஓரளவு வந்து கொண்டு இருந்தது. ஆனால் சிறிய பற்றரிக்குத்தடை (ஏன் தெரியும்தானே). இதையெல்லாம் சவாலாக எடுத்து சமாளித்தோம். சைக்கிள் டைனமோ வில் இருந்து வரும் ஆடலோட்ட மின்னை(AC Current) நேரோட்ட மின்னாக(DC Current) மாற்ற இருவாயி என்ற சொல்லப்படுகின்ற டயோட் (Diode) பயன்படுத்தப்பட்டது. ஒரு சைக்கிளை கவிழ்த்து வைத்துவிட்டு அதன் கால்மிதியை - பெடல் - கையால் சுற்றுவோம். அல்லது இரட்டைத் தாங்கி (டபுள் ஸ்ராண்ட்) யில் சைக்கிள் நிற்கும் போது அதன் மேலே ஏறி இருந்து சுற்றுவோம். டைனமோவில் உருவாகும் மின் இரவாயி கொண்ட பொறிமுறை ஊடாக றேடியோவை வந்தடையும். பிறகென்ன றேடியோ உயிர் பெற்று கத்த ஆரம்பித்து விடும். இவைகள் தான் எமக்கு அந்தக்காலங்களில் சொர்க்கம். புலிகளின் குரல் செய்திகள் அந்தநாட்களில் எல்லோர் வீடுகளிலும் பலமாக ஒலிக்கும்.

ஒலிப்பேழைகளிலே பாட்டு கேட்பதும் நடக்கும். அதற்கும் மேற்படி செயற்பாடுதான். பாடல்கள் பதியப்பட்ட ஒலிப்பேழைகள் நண்பர்களிடத்தில் வாங்கி கேட்போம். பாடல்களை அன்று பதிந்து கொடுப்பதில் யாழ் நகரினுள் சண் றெக்கோடிங் ஸ்பொட், சுப்பஸோ, நியூ விக்ரேஸ் என பிரபலமான கடைகள் இருந்தன. கடைகளுக்கு போய் அங்கே இருக்கும் இறுவட்டுகளை பார்த்துவிட்டும், அந்தக் கடையில் இருக்கும் பாட்டுக் கொப்பியை பார்த்துவிட்டும் திரும்புவதே எங்கள் வாடிக்கை. இந்தக் கடைகளில் பாடல் ஒலிப்பதிவு செய்ய கொடுத்தால் கூடுதலாக 7 நாட்கள் எடுப்பார்கள். அவ்வளவு அவர்கள் பிஸி.
வானொலிகள் பாட்டுகளுக்கு மட்டுமன்றி சிலருடைய திறமைகளை படைப்புகளாக வெளிக்கொணர்வதிலும் அவை அளப்பரிய சேவையே செய்தனர். கவிதைகள், கதைகள், கதையும் கானமும் அல்லது இசையும் கதையும் அத்துடன் பலதரப்பட்ட பட புதிய பாடல்கள் , பழைய பாடல்கள், இடைக்காலப் பாடல்கள் என் அனைத்தையும் எமக்கு அள்ளி வழங்கின. பாடல்களுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் சுவார்ஸ்யமாக இருக்கும். "கை வலிக்குது கை வலிக்குது மாமா, கவலை வேண்டாம் கண்ணே, இதோ வந்து விட்டது போலார் ஹை பவர் லோ வோல்ட்டேஜ் கிறைண்டர் மோட்டர்" என்ற விளம்பரம் தாங்கி வரும் சர்வதேச வானொலியும், "உடம்பைக் குறை உடம்பைக் குறை என்று சொன்னால் கேட்கிறாயா நீ, நான் என்ன குறைக்க மாட்டேன்னா சொன்னேன் அது குறைய மாட்டேங்குதே" என்ற விளம்பரத்துடன் உலா வந்த சிங்கப்பூர் ஒலி96.8 உம் எமக்கு மகிழ்வைத் தந்த வானொலிகள். அந்த விளம்பரங்கள் எல்லாம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. தமிழக மக்களுக்கு இலங்கை வானொலி மீது தீராத காதல். அதனால்தான் இலங்கை வானொலியின் சர்வதேச வானொலி தமிழக மக்களுக்காக தனது சேவையை வழங்கியது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் சர்வதேச வானொலி காலை 10 மணியுடன் நிறைவுறும். ஞாயிற்களில் மட்டும் 11 மணியாகும். மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி 6 மணிக்கு நிறைவுறும். தமிழக மக்களின் வணிக விளம்பரங்களைத் தாங்கித்தான் பெரும்பாலும் வரும். சில நிறுவனங்களின் அனுசரனையுடன் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்னமும் சாகா நிகழ்ச்சிகளே. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. இதைத் தொகுத்து வழங்கிய பெருமகன் பி.எச்.அப்துல் ஹமீது. உலகறிந்த ஒரு அறிவிப்பாளர். இவர் தொகுத்து வழங்கிய இன்னொரு நிகழ்ச்சி “இசையும் கதையும்”. லீ.வீ யின் சினிமாப்பாடல், ஸ்ரீராம் சிப்ஸ் நிறுவனத்தாரின் ஒரு நிகழ்ச்சி, என பல நிகழ்ச்சிகளைச் சுமந்து வந்தது அந்தக்கால வானொலிகள்.

இந்த இடத்திலே குறிப்பாக ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதமாகிய தூத்துக்குடி வானொலி எம்மை நிறையவே பாதித்தது. காரணம் இரவு 8.45 மணியில் இருந்து 9.00 மணிவரை 3 பாடல்களை ஒலிபரப்புவார்கள். அந்த மூன்றும் முத்தான பாடல்கள். இந்த பாடலை பற்றி அடுத்த நாள் நாம் நண்பர்களை சந்திக்கும் போது "நேற்று தூத்துக்குடி கேட்டாயா? சுப்பர் பாட்டுகள் மச்சான்" என்று கேட்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி எல்லோர் மனதிலும் இடம்பெற்றதை மறுக்க முடியாது.

வானொலி நிகழ்ச்சிகளைப் படைக்கும் அறிவிப்பாளர்கள் மக்கள் மனதிலே நிறையவே இடம் பிடித்தார்கள். குறிப்பாக இந்த இடத்திலே இலங்கை வானொலி அறிவிப்பாளர் குரல் வளம், அவர்களின் மொழி ஆளுகை, கடைசிவரை அந்த நிகழ்ச்சியை சேர்க்கும் திறன் என்பவற்றில் ஆட்சி செலுத்தினர் என்றால் மிகையாகாது. 'லலிதாவின் பாட்டுக்கு பாட்டு', 'கதையும் கானமும்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பி.எச்.அப்துல் ஹமீத் எல்லோர் இதயத்திலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார். அவரை வானொலி நிகழ்ச்சிகள் கேட்டவர்கள் மறக்க மாட்டார்கள். கம்பீரமான குரல். அழகான தமிழ். பிசிறில்லாத உச்சரிப்பு. வார்த்தைகள் பாயும் விதம். அவருக்கு நிகர் அவரேதான். ஏ.ஆர்.எம்.ஜெப்ரி, ஜெயகிருஷ்ணா போன்றவர்களின் குரலும் மிக அழகானவை. இவர்களோடு பெண் அறிவிப்பாளினிகளாக 'வானொலிக்குயில்' இராஜேஸ்வரி சண்முகம், புவனோலஜனி நடராஜசிவம், றேலங்கி செல்வராஜா, சற்சொரூபவதி நாதன் (இவர் வர்த்தக துறைக்குள் தலை காட்டவில்லை என எண்ணுகிறேன்) இப்படிப்பலர். அதே போன்று ஒலி 96.8 இல் பாலசுப்ரமணியன், சோமு, பிரேமா, மீனாட்சி சபாபதி. பிபிசி யில் ஆனந்தி அக்கா. அவர்கள் தொகுத்து வழங்கிய “பாலியல் விவேக பக்குவப் பயிற்சி” இதனை நாம் வீட்டுக்காரருக்கு தெரியாமல் ஒளித்துக் கேட்டோம். எல்லோர் நெஞ்சங்களையும் பிழிந்த ஒரு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைகளில் ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்கள் வெரித்தாஸ் வானொலியில் செய்த பிரார்த்தனை.....நெக்குருக வைத்துவிடும்.

குறிப்பாக ஒலி 96.8 இன் மூலமே நாம் முதன் முதலில் தொலைபேசி மூலம் நேயர்கள் பாடல்களை விரும்பி கேட்கலாம் என்று அறிந்தோம். அதனைப் பற்றி அடுத்தநாள் பாடசாலையில் சிலாகிப்போம். எப்படி செய்வார்கள்? எப்படி பாடல்களை ஒலிபரப்புவார்கள்? இதன் போது என்ன செயன் முறை? அந்தளவிற்கு அது எம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. 1994 இல் உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு RX செற் கொண்டு வந்து சைக்கிளை வகுப்பறைக்குள்ளே வைத்து டைனமோவை சுற்றி பாட்டு கேட்டோம். அந்தக் காலத்தில்தான் ”காதலன்” வந்து இளைஞர் பட்டாளத்தை உலுப்பி எடுத்த காலம்.

இன்னும் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஆனால் பதிவு நீண்டு விடும். காலங்கள் கரைந்தோடி விடுகின்றன. ஆனால் அவை தந்த அந்த இனிமையான நினைவுகள் இன்னும் அழியாத பாதச்சுவடுகளாய் வாழ்க்கைப்பயணத்தில் இன்னும் மனங்களில் வியாபித்தே நிற்கின்றன. காலம் கனிகின்ற போது இந்த நினைவுகள் மீண்டும் வருடப்படும்.

30 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல நினைவுகளை பகிர்ந்துள்ளீர்கள் நண்பா.....

புழுதிப்புயல் சொன்னது…

கடந்த காலத்தை மீட்டிய ஒரு அருமையான பதிவு. நானும் சில விடயங்களை பகிர ஆசைப்படுகிறேன். அந்தகாலத்தில 'கிரிக்கட்' என்றால் எங்களுக்கு உசிர். தொலைக்காட்சியில பாக்க முடியாது. வானோலி நேர் முக வர்ணனை தான் தஞ்சம். அதிலையும் ஒரு இந்திய நேர்முக வர்ணனையாளர் இருப்பார். சென்னையில போட்டி என்றால் தமிழ்ல சொல்லுவினம். கேக்க ஒரு சந்தோசம் தான். சிங்களம் தெரியாத காலத்தில சிங்கள நேர்முக வரண்யை விளங்கவேண்டு அப்பாவிடம் சிங்களம் படிச்சது. இப்பிடி கனக்க சொல்லிக்கொண்டு போகலம். எண்டாலும் அப்ப நாங்கள் சந்தோசமாகவே இருந்தோம்.

அப்பாவி முரு சொன்னது…

நீங்கள் பட்ட கஷ்ட்டங்களை படிக்கும் போதே வருத்தமாக உள்ளது...

Prapa சொன்னது…

ரொம்ப நல்ல தகவல் எங்களுக்கும்............

அருண்மொழிவர்மன் சொன்னது…

நல்ல பதிவு.

இதே காலத்தில், இதே விடயங்களை நாமும் அனுபவித்து இருக்கிறோம்தானே?. தூத்துக் குடியில் மூன்று பாட்டுத்தான் போடுவார்கள். அதில் அடிக்கடி கறுத்த மச்சான்..., மெதுவா தந்தி அடிச்சானே போன்ற பாடல்களைப் போட்டுவிடுவார்கள்.

அது போல சிங்கப்பூர் வானொலியில் டப் டென் பாடல் என்றூ பத்துப் பாடல்களாஇ எடுத்து ஒரு கதம்பமாக ஒலிபரப்புவார்கள். அதி ஊழியன் என்ற திரைப்படத்தில் வரும் “போராடிப் பார்க்கனும்...” என்ற பாடல் எந்த சம்பந்தமும் இல்லாமல் இடம்பெறும். ம்ம்ம்...

இது போல கார், மோட்டார் சைக்கிள் பற்றரிகளைப் பயம்படுத்தியும் பாடல்கள் கேட்பார்கள். நினைவிருக்கிறதா?

கானா பிரபா சொன்னது…

நீங்கள் சொன்ன நினைவுகள் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தவன் என்பதால் எழுத்து மிக நெருக்கமாக இருக்கிறது. நான் நேசித்த வானொலிக்காலத்தை பதிவாகவும் 3 வருஷம் முன் இட்டிருந்தேன்.

ப்ரியா பக்கங்கள் சொன்னது…

\\திரைகடல் ஆடிவரும் ......\\
சரியா சொன்னீங்க நாங்களும் அடுத்த நாள் அதைத்தான் பெரிசா கதைப்பது.

(நல்ல)ஒரு நிஜ பதிவு பிரிச்சு மேய்ஞ்சு போட்டீங்க போங்க...........
வாழ்த்துக்கள்

வந்தியத்தேவன் சொன்னது…

இதெல்லாம் வரலாற்றுப் பதிவுகள்.
உந்த தூத்துக்குடி வானொலியின் மூன்று பாடல்கள் பெரும்பாலும் எல்லோரும் கேட்டிருக்கிறார்கள்.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு. சைக்கிள் ஓட்டிய படி எனக்கு உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வர்ணனை கேட்ட அனுபவமும் உண்டு. முக்கிய விக்கெட் ஒன்று வீழ்ந்த சமயம் என்னை அறியாமலே வானொலி பெட்டியை (சிறியது) எறிந்த சுவாரசியம் மறக்க முடியாது.

ஹேமா சொன்னது…

பொங்கும் பூம்புனல் மலரும் நினைவுகள் திரைவிருந்தாய்.நன்றி.

Unknown சொன்னது…

அருமையான பதிப்பு. அத்தனையும் உண்மை. இதனை வாசிக்கும் போதே அன்றைய யாழ் நகர் கண் முன்னே நிழலாடியது. பதிவுகள் என்றால இப்படியல்லா இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

குறும்பு குண்டன் சொன்னது…

மறக்கப்பட்டுக் கொண்டு போகும் சம்பவங்களை கிடுகு வேலி கொண்டு கதியாலாய் அணை போட்டு வைத்து சுவைபட தரும் அருமை நன்று.
பொருளாதார தடை காலத்தில் தகவலறிய, பொழுது போக்குக்காக எப்படியெல்லாம் முயற்சி செய்தனர் என்பது வெளிப்படுகின்றது. கடினப்பட்டு கிடைக்கும் போது அதை அனுபவிக்கும் சுகம் தனிதான்.
தற்போது அந்த சுவை நிகழ்சித்தரம் மருவிவிட்டதைப்போல ஒரு உணர்வு எழுவதை தடுக்கமுடியவில்லை

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

IMMMM
But Dont forget the DOUBT GANESHAN!!!
I still like that!!Suppu kuddy and other programs are just a copy of DOUBT Ganeshan!!!

வலசு - வேலணை சொன்னது…

அந்தக்கால நினைவுகளை மீண்டும் மலர வைத்தீர்கள். நன்றி.
எனக்குத் தெரிந்தவரை முதன்முதலாக தமிழில் 24 மணிநேர வானொலிச் சேவையினை வழங்கியதும் சிங்கப்பூர் வானொலியான ஒலி F.M. தான். ஆயினும் சிற்றலை வரிசையில் அதனைத் தொடர்ந்து ஒலிபரப்புச் செய்வதில்லை. மேலும் BBC தமிழோசையில் ஆனந்தி அக்காவுடன் சங்கர் அண்ணாவும் பணிபுரிந்தார். அப்போதைய எமது நிலைமையைக் கருத்திற் கொண்டு ஒரு நேயரின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழோசை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் போதே இலங்கை பற்றிய செய்திகள் இருக்குமெனின் “இன்றைய செய்தியரங்கில் இலங்கை பற்றிய கண்ணோட்டமும் இடம் பெறும்” என அறிவிப்பார்கள். இதனால் டைனமோ சுற்றி தொடர்நது செய்தி கேட்பதா வேண்டாமா என்பதை நாங்கள் தீர்மானிக்கக் கூடியதாகவும் இருந்தது.

கிடுகுவேலி சொன்னது…

நன்றி ஞானசேகரன்
நன்றி அப்பாவி முரு
நன்றி ஹேமா
நன்றி பிரபா
நன்றி பிரியானந்தா சுவாமிகள்
நன்றி விஜய்
நன்றி வந்தியத்தேவன்

கிடுகுவேலி சொன்னது…

/.. சுதர்ஷன் said...

அந்தகாலத்தில 'கிரிக்கட்' என்றால் எங்களுக்கு உசிர். தொலைக்காட்சியில பாக்க முடியாது. வானோலி நேர் முக வர்ணனை தான் தஞ்சம். அதிலையும் ஒரு இந்திய நேர்முக வர்ணனையாளர் இருப்பார். சென்னையில போட்டி என்றால் தமிழ்ல சொல்லுவினம். கேக்க ஒரு சந்தோசம் தான். சிங்களம் தெரியாத காலத்தில சிங்கள நேர்முக வரண்யை விளங்கவேண்டு அப்பாவிடம் சிங்களம் படிச்சது. இப்பிடி கனக்க சொல்லிக்கொண்டு போகலம். எண்டாலும் அப்ப நாங்கள் சந்தோசமாகவே இருந்தோம்...//

ம்ம்ம் நாங்கள் சைக்கிள்ல சுற்றி நேர்முக வர்ணனை கேட்டோம். அந்த தமிழ் வர்ணனைகள் பற்றி விரைவில் ஒரு பதிவிடலாம் என்று இருக்கிறேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//...அருண்மொழிவர்மன் said...

இது போல கார், மோட்டார் சைக்கிள் பற்றரிகளைப் பயம்படுத்தியும் பாடல்கள் கேட்பார்கள். நினைவிருக்கிறதா?

..//

நிச்சயமாக அருண்மொழிவர்மன், ஆமாம் குறிப்பிடத்தவறி விட்டேன். நிறைய விடயங்கள் பதிவு நீண்டு விடும் என்பதால் தவிர்த்தேன். அந்த கார், மோட்டார் சைக்கிள் பற்றரி ‘சார்ச்’ செய்வதற்கும் கடைகள் இருந்தன. சிறு சிறு விடயங்கள் என்றாலும் எல்லாம் சுவையான நினைவுகளே..!!

கிடுகுவேலி சொன்னது…

//....கானா பிரபா said...

நீங்கள் சொன்ன நினைவுகள் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தவன் என்பதால் எழுத்து மிக நெருக்கமாக இருக்கிறது. நான் நேசித்த வானொலிக்காலத்தை பதிவாகவும் 3 வருஷம் முன் இட்டிருந்தேன்...//

நன்றி கானா பிரபா, நீங்களும் வானொலித்துறையுடன் தொடர்பில் இருப்பதால் உங்கள் நினைவுகளின் மீட்டலும் சுவையாகவே இருந்தது. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

lavanyan சொன்னது…

அருமையான பதிவு பணி தொடருட்டும். டவுட்டுக் கணேசனை ஞாபனப்படுத்திய குருவுக்கு நன்றி

Sudar Nimalan சொன்னது…

நன்றாக உள்ளது

Sudar Nimalan சொன்னது…

நன்றாக உள்ளது

tharuha சொன்னது…

உள்ளத்தின் ஓரத்தில் அழியாமல் உறங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளை மீட்கவைத்ததுக்கு நன்றிகள். இந்த நிகழ்ச்சிகளுக்கள் கேட்பதற்காக எங்கள் சைக்கிள் டயர்களும் , தோள் மூட்டுக்களும் தேய்ந்துபோனது நினைவுக்கு வருகிறது . தூத்துகுடி வானொலியின் பாடல்களுக்கு என்னைபோல் பலரும் ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள் போல .... காலத்தால் மறக்கபடக்கூடாத இப்படியான பதிவுகளை தொடருங்கள் . நன்றிகள்.......

tharuha சொன்னது…

குருபரன் அண்ணா சொன்னதுபோல "டவுட்டு கணேசனை " யாராலும் மறந்து விடமுடியாது. நினைவுகளெல்லாம் சுகமாகவும் அதேநேரம் கொஞ்சம் வலியாகவும் இருக்கிறது .

கிடுகுவேலி சொன்னது…

//...குறும்பு குண்டன் said...

கடினப்பட்டு கிடைக்கும் போது அதை அனுபவிக்கும் சுகம் தனிதான்.

தற்போது அந்த சுவை நிகழ்சித்தரம் மருவிவிட்டதைப்போல ஒரு உணர்வு எழுவதை தடுக்கமுடியவில்லை..//

ஆமாம், எவ்வளவு கடினப்பட்டோம். எல்லாம் சகித்துகொண்டோம். இந்த இடருக்குள் இருந்து வெளிவர வேண்டும் என்று நிரம்பவே பாடுபட்டோம். அதிகமாக சாதித்தோம். இன்னும் இருக்கிறது. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//..K.Guruparan said...

IMMMM
But Dont forget the DOUBT GANESHAN!!!
I still like that!!Suppu kuddy and other programs are just a copy of DOUBT Ganeshan!!!...//

//....tharuha said...

குருபரன் அண்ணா சொன்னதுபோல "டவுட்டு கணேசனை " யாராலும் மறந்து விடமுடியாது. நினைவுகளெல்லாம் சுகமாகவும் அதேநேரம் கொஞ்சம் வலியாகவும் இருக்கிறது ...///


நிச்சயமாக இதிலே குறிப்பிடத்தவறி விட்டேன். ஆனால் அந்த ‘டவுட்டு’ கணேசனை எப்படி மறப்பது. சோமண்ணை சோமண்ணை.. என்று விளித்து கொண்டு வரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ராஜபுத்திரன் யோகராஜன் (கணேசன்) இன்றும் எம் மனதில் இருக்கிறார். நிறைய பேர்....ஒவ்வொருவராக சொல்லவேண்டும். நன்றி குருபரன் மற்றும் தாருகா வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

வேலணை வலசு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் அது ஒரு சின்ன விடயம். ஆனால் அது எமக்கு ஒரு பெரிய முக்கியமான விடயம் அந்த “இன்றைய செய்தியரங்கில் இலங்கை பற்றிய கண்ணோட்டமும் இடம் பெறும்” செய்தி. பொருத்தமான இடத்தில் நினைவு படுத்தினீர்கள். இது தொடர்பாக ஆனந்தி அக்காவின் செவ்வி ஒன்றுக்கான இணைப்பை இதிலே பகிர்ந்து கொள்கிறேன்.
http://www.keetru.com/vizhippunarvu/may07/poonguzhali.php

இந்தப் பேட்டியிலே ஆனந்தி அக்காவே தமிழ் மக்கள் எவ்வாறு துன்ப படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

கிடுகுவேலி சொன்னது…

நன்றி லாவன்யன்
நன்றி சுடர் நிமலன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....!

Gunalan G சொன்னது…

அருமையான ஒரு நினைவூட்டல் பதிவு; அதிலும் '94' இல் இடம்பெற்ற ஆசிரியர் தின ஞாபகங்கள், என்றென்றும் நெஞ்சில் நிற்பவை

கிடுகுவேலி சொன்னது…

ஆமாம் குணாளன், இன்றும் அவைகள் பசுமரத்தாணிதான். இடைவெளிகள் அகன்று இருந்தாலும் மனம் ஒரு புள்ளியில் குவிகிறதே. இதை செய்தது கூட அந்த நினைவுகளே....!! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

பெயரில்லா சொன்னது…

ஓம் இந்த சக்தி எப் எம் சூரியன் எப் எம் எல்லாம் வர முன் உந்த வானொலிகள் தான எங்களுக்கு ஒரே பொழுது போக்கு.,, அப்படியே பழைய ஞாபகத்தை கொண்டு வந்திட்டுது இந்த பதிவு,, சுப்பர் ஷோ வட்டக்கச்சியில் பிறகும் இருந்தார்கள். எப்படி எல்லா பெயர்களையும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.. வாசிக்க வாசிக்கத் தான் இவை எல்லாம் ஞாபகம் வருகுதே தவிர நானாக உவற்றை ஞாபக்த்தில் வைத்திருக்கவில்லை என்டு நினைக்க வெட்கமாக இருக்கு.. இந்த தூத்துக்குடி வானொலி செவ்வாயும் இன்னுமொரு நாளும் வாத்திய இசை ஒலிபரப்புவது ஞாபகம் இருக்கா?

உங்கள் பதிவுகளை பக்கப் பண்ணி வையுங்கோ.. தூயாவின்ட புளொக்கிற்கு நடந்தது மாதிரி நடந்தால் நல்ல தரவுகள் எல்லாம் போய்விடும்.. நானும் இயன்ற வரை உங்களுடையவற்றை வேட்டில் கொப்பி பேஸ்ட் பண்ணிக்க்கொண்டிருக்கிறன். இவ்வளவு நாளாக உங்கள் வலைப்பதிவு பற்றி தெரியாமல் இருந்துவிட்டனே... சை..

கருத்துரையிடுக