
ஆழிப்பேரலை அடித்து இன்றுடன் 4 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும் அது தந்த வடுக்களும் துயரங்களும் இன்னமும் ஆறாமல் மனங்களில் உள்ளது. மீள் கட்டுமானம் இன்றியும் எமது மக்கள் இன்னும் சொல்லொனாத்துயரத்துள். அதன் நினைவாக இந்தப்பதிவு.
ஏய் சுனாமியே !
நின்னை நினைக்கையில்
நெஞ்சு வெடிக்குது.
அன்னை தமீழீழம்
ஆ... வென்று அலறுது.
இதற்கு முன் எப்போதும் - உனை
அறிந்திலோம்
இனிமேல் ஒருபோதும் - உனை
மறக்கிலோம்.
இந்தமண்ணில் இனவாதம்
கால் நூற்றாண்டில்
காவு கொண்டதில் பாதியை – நீ
கால் மணி நேரத்துள்
கவர்ந்து சென்றாயே!
சொத்தோடு சேர்த்து
எம்மினத்தை சுத்தமாய்
துடைத்து விட்டாய்.
ஆர்ப்பரிக்கும் கடலே!
உனைஅம்மா கடல்தாயே – என
ஆராதனைகள் செய்தோமே
இன்று
ஐயோ என அழவைத்த
அரக்கியாகி விட்டாயே!
பெற்றதுகளை, பெற்றவர்களை
பிரித்துச்சென்று – மற்றோரை
பித்தராக்கி விட்டாயே!
கட்டடங்கள், களஞ்சியங்கள்
கல்விச்சாலைகள்
கல்வீடுகள், களிமண்வீடுகள் - என
எல்லாம் கரைத்து - இன்று
கண்ணீரைத் தந்தாயே!
வந்து பார் !
பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரை - இன்று
பொலிவிழந்து போச்சு.
இதுவரையும் இனிமேலும்
நிம்மதியும் இல்லை.
நித்திரையும் இல்லை.
ஒரு புறம்
இனவாதம் எம்மை
அணுஅணுவாய் அழிக்க
இயற்கை நீயோ – எம்மை
அப்படியே முழுங்கினாயே!
பிஞ்சுகள் , காய்கள்,கனிகள் - என்று
மொத்தமாய் உண்டுவிட்டு
மிச்சமாய் மரத்தை - ஏன்
விட்டு வைத்தாய்?
வெஞ்சமராடி வெற்றிகள் பெற்றது - உனக்கு
பிடிக்கவில்லையா?
ஏ கடலே!
இத்துடன் நிறுத்து!!
இனியும் வேண்டாம் இந்த அழிவு.
அந்நியர் ஆக்கிரமிப்பால்
அழிந்து அழிந்து
நொந்து போனது எம்மினம்.
இனவாதத்துடன்
போட்டி போட்டு – இயற்கையே
நீயும் வதைக்காதே!
கடல் தாயே!
எம்மை வாழவிடு
என்றும் உமைப் பணிவோம்!
(2004 ம் ஆண்டின் சுனாமிக்கு பின்னரான மீட்புப்பணியில் நின்ற பின்னர் ஏற்பட்ட தாக்கத்தில் கிறுக்கியது....)
இதில் இருக்கும் பாடல் தாயகத்தில் இருந்து மலர்ந்த ஒரு பாடல். எத்த்னை பாடல்கள் சுனாமிக்கு என வந்தாலும் இந்தப்பாடல் என் மனதை எப்போதும் பிழியும்.
பாடியவர் : வசீகரன்
பாடல் : கலைப்பருதி
இசை : இசைப்பிரியன்
|