திங்கள், 31 ஆகஸ்ட், 2009

பகிடிவதை - ராகிங்

வந்தியர் 'ராகிங்' தொடர்பாக உளறியது (தப்பாக எண்ண வேண்டாம், அவரது வலைப்பூவின் பெயர் 'என் உளறல்கள்')கண்டு அது தொடர்பாக எனது எண்ண அலைகளையும் பதிவிடலாம் என்று நினைத்து வரைந்தது இது.

அது 1997 ம் ஆண்டின் ஒரு நாள். பத்திரிகைகள் எல்லாம் பல்கலைக்கழகங்கள் மீது வசைமாரி பொழிந்த நாள். பகிடிவதையின் உச்சக்கட்டமாக பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வரப்பிரகாஷ் என்ற ஒரு மாணவன் 1000 தோப்புக்கரணம் போட பணிக்கப்பட்டு முடியாது போக இடையில் மயக்கமுற்று விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட, அங்கே சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக வைத்தியர்கள் அறிவித்து சில நாட்களில் அவன் இவ்வுலகை விட்டு நீங்குகிறான்.

என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிலை. ஒரு சில மாணவர்களிடையே எழும் ஒரு வக்கிரபுத்திதான் இதற்கு காரணமா? இல்லை இதை ஒரு உளரீதியான பாதிப்பு என்று அணுகுவதா? என்று பார்த்தால் இரண்டும் கலந்த கலவை என்றே சில சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஏன் இவ்வாறு நடக்கிறார்கள். இதனால் சாதிக்கப்போவது என்ன? 'ராகிங்' என்ற நிகழ்வுக்கு நான் முற்றிலும் எதிரானவன் அல்ல. உடல் ரீதியாக இழைக்கும் தீங்கு, சில வார்த்தைப் பிரயோகங்கள் என்பன தவிர்க்கப்பட்டு, பகிடிவதையாக இல்லாமல் பகிடியாக இருக்கவேண்டும் என பிரயாசைப்படுபவன். அதில் இருக்கும் சுகம் தனிசுகம் அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

எனக்குத்தெரிந்த எமது கல்லூரி மாணவன் நல்ல புள்ளிகள் எடுத்தும் சந்தர்ப்பவசத்தால் யாழ்ப்பாண் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு தெரிவு செய்யப்படுகிறான். அவன் புகுமுக மாணவனாக அங்கே சென்றதும் நடந்த சம்பவங்கள் அவனை வெறுப்புக்கு உள்ளாக்குகின்றன. அவன் உள்ளம் உடைந்தவனாக சொன்னான் "காத்திருப்பு பட்டியலில் உள்ளே சென்றவன் எல்லாம் எனக்கு ராகிங் தாறானடா..இதைவிட என்ன கொடுமை வேண்டிக்கிடக்கு". இவனின் உளப்பாங்கு இப்படி இவனை சிந்திக்க தூண்டுகிறது. காத்திருப்புப் பட்டியலில் பல்கலைக் கழகம் சென்றால் அங்கே நடக்கும் செயற்பாடுகளில் பங்கெடுக்க கூடாதா? அது சரி பிழை என்பது அடுத்த நிலை. இந்த மனப்பாங்கு மாறவேண்டும் என்பது எனது அவா.

பொதுவாக சொல்வார்கள் "நல்லா ராகிங் வாங்கினவனும், ராகிங் வாங்காதவனும் ராகிங் கொடுக்க மாட்டார்கள் என்று". இது ஒரு குறிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உண்மைதான். ஆனால் நான் ராகிங் வாங்கினான் கட்டாயம் கொடுப்பேன் என்போரும் உள்ளனர். நான் குறிப்பிட்ட அந்த மாணவன் பின்னர் தனக்கான சந்தர்ப்பம் வரும்போது கண்டபடி ராகிங் கொடுத்து பிரச்சினைகளைச் சந்தித்து ஒரு வாரம் பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார். வேதனையான ஒரு விடயம்.

'ராகிங்' - இது மாணவர்களிடையே கூச்ச சுபாவத்தை போக்குவதற்கும், வரும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வினை போக்கி ஒரு சீராக அவர்களிடத்தில் நெருக்கத்தினை பேணுவதற்கும், ஈகோ போன்ற அற்ப உளப்பிரச்சினைகளை அகற்றுவதற்குமாக உருவாக்கப்பட்ட ஒன்று. அந்த காலப்பகுதியில் காலில் பாத்ரூம் ஸ்லிப்பர்ஸ் மட்டும் அணிய வேண்டும். சேர்ட். உள்ளே பனியன் இல்லை. கையில் மணிக்கூடு இருக்காது. எந்த ஆபரண அணிகலன்களும் இருக்க முடியாது. இது ஒரு நல்ல விடயம்.காரணம் ஒரு வறிய மாணவன் இந்த நிலையில் தான் பல்கலைக்கழகம் புகுவான். அவன் அங்கே வந்து வசதிபடைத்தவர்கள் முன்னால் கூனிக்குறுகி நின்று (காதல் கொண்டேன் தனுஷ் நிலையை காட்சிப்படுத்தலாம். அது கொஞ்சம் ஓவராக இருந்தாலும்..நல்ல உதாரணம்) என்னால் எதையும் செய்யமுடியாது என்ற ஒரு மோசமான முடிவெடுக்க அவன் உந்தப்படலாம். இவ்வாறு அந்தஸ்துகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு வருவது அவர்களுக்கு இடையிலான இடைவெளியினை அதிகரிக்குமே தவிர குறைக்காது. எனவேதான் இப்படியான சில உப்புச்சப்பற்ற பிரச்சினைகளைக் களைந்து மாணவர்கள் எல்லோரும் சரிசமமாக மதிக்கப்பழகுவதற்காக இப்படியான 'ராகிங்' என்ற கரு உருவானது. ஆனால் இதனை புரிந்துகொள்ளாமல் அதனை காட்டுமிராண்டித்தனமாகவும் வன்முறையாகவும் சிலர் மாற்றியமைத்து விட்டார்கள்.

சிங்கள மாணவர்களில் பெம்பாலானோர் 'ராகிங்' இல் ஈடுபடுவதில்லை என்ற ஒரு கருத்து இருக்கின்றது. அது பெரும்பாலும் உண்மையே. ஒன்று அவர்களில் ஒரு சதவீதம் காதலோடும், பெண்களோடும் பொழுதைப் போக்கும். சிலர் வார இறுதிநாட்களில் வீடு சென்று திரும்புவர். அவர்களிலும் சிலர் இந்தக் கொடுமையை செய்யத் தவறுவதில்லை.

ஒரு மூத்த மாணவன் ‘ராகிங்’ இன் போது எமக்கு உடல்ரீதியாக (அடி.......)தாக்குகிறார் என்றால் எமக்கு எவ்வளவு கோபம் வருகிறது. அதை நாம் இன்னொருவருக்கு செய்ய எப்படி எங்கள் மனம் விழைகிறது. அவன் திருப்பி அடிக்க மாட்டான் என்ற நப்பாசை. இப்படி வன்முறையோடு பழகும் அந்த சிரேஷ்ட மாணவனோடு எவ்வாறு சிரித்து கதைக்க மனம் வரும். அவர்கள் அந்த ’ராகிங்’ காலம் முடிந்த பின்னர் அவர்களிடம் சென்று “இது ராகிங் ற்காக மட்டும்தான்...மனசில வச்சிருக்க கூடாது...இதையெல்லாம் மறந்து இனி நண்பர்களாக இருப்போம்...என்று பாசக்கரம் கூட நீட்டுவதில்லை..! சில மாணவர்கள் அப்படி செய்வார்கள். சிலர் அப்படி நான் எதுவுமே செய்யவில்லை என்பது போல திரிவார்கள். பல்கலை வாழ்வு முடிந்த பின்னர்....நாம் ‘ராகிங்’ கொடுத்த ஒரு மாணவன் நமக்கு மேல்திகாரியாக இருந்தால், அவருக்கு கீழே வேலை செய்ய மனம் இடம் கொடுக்குமா....!

என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சிரேஷ்ட மாணவர்கள் ஒரு 10 பேர் அளவில் அறைக்குள் பூட்டி போட்டு அடித்தனர். எவ்வாறு அவர்களுடன் நட்பு பாராட்ட மனம் வரும்...! இதே போல இன்னுமொரு நண்பனுக்கு அவன் இருந்த வீடு புகுந்து தாக்கினார்கள். அடுத்தநாள் அவனின் சிவந்த மேனியில் கன்னத்தில் கறை. முஷ்டியால் இடித்த கறை அது. அந்த நண்பன், ”அண்ணா எனது 22 வருட வாழ்வில் எனது அப்பா அம்மா கூட ஒருதடவை அடித்ததில்லை” என்றான் அழுது கொண்டு. நட்போ அல்லது எந்தவிதமான உறவோ மலரும் என எவ்வாறு எதிர்பார்க்கலாம்...?

என்னுடைய சக பிரிவு தோழன், அவன் ‘ராகிங்’ கொடுத்த பின்னர், கனிஷ்ட மாணவர்கள் அதை எண்ணி பிற்காலங்களில் சிரித்து மகிழ்வார்கள். அவனுடன் அவர்கள் நட்பு பாராட்டிய விதம் அல்லது அந்த உறவு எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ‘ராகிங்’ தான்.

வரப்பிரகாஷ் என்ற மாணவன் எம்மைப் பிரிந்த நேரம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் தான் இதனை செய்தது என்று சாரப்பட அன்றைய ‘உதயன்’ பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. உடனே எங்களுக்கு எல்லாம் ரோசம் வர, எமது நண்பன் ஒருவன் ’கண்டிக்கின்றோம்’ என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் எழுதி...அதில் 1000 பிரதிகள் அளவில் அச்சடித்து எல்லா இடங்களிலும் விநியோகித்தோம். காரணம், அந்த மாணவன் செய்த தவறுக்கு கல்லூரி எவ்வாறு காரணமாக முடியும்..? அது அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு..அவரின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினை...!

அன்றைய தினம் எமக்கு கற்பித்து கொண்டிருந்த பௌதிகவியல் ஆசான் திரு. ரவீந்திரநாதன் தங்களுடைய காலத்தில் இருந்த ‘ராகிங்’ தொடர்பாகவும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இரண்டு பாடவேளையும் இதுதான் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருந்தது. அப்படியான ‘ராகிங்’ இருந்திருந்தால் வரப்பிரகாஷை இழந்திருக்க மாட்டோமல்லவா?

ஒரு சில மாணவர்கள் தங்களது மேலாதிக்கத்தை காட்ட நினைப்பதும், தம்முடைய பலத்தை காட்ட நினைப்பதும், தாங்கள் ஒரு நாயகனாக வலம் வரவேண்டும் என நினைப்பதும்..இதற்கு காரணமாக அமையலாம். இது என்னைப் பொறுத்தவரை எல்லாம் அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சினையே தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் ‘ராகிங்’ என்ற ஒன்றை நான் எப்போதும் எதிர்ப்பவன் இல்லை. மீண்டும் சொல்கிறேன் அது பகிடி ‘வதை’ யாக இல்லாமல் பகிடியாக நடந்தால் நல்லது.

புதன், 19 ஆகஸ்ட், 2009

தேரேறி வருகிறான் நல்லைக் கந்தன்...!

"வெள்ளை மணல் மீதுருண்டு
வேலவனே என்றழுதேன்
எங்கயடா போய் ஒழிந்தாய் முருகா...!"

நல்லூர்....நாவினில் உச்சரிக்கும் போதெல்லாம் உடலில் ஓர் பரவசம். தன்னையறியாமலே உள்ளம் பூரிக்கும். ஏனோ தெரியவில்லை அந்தக்கந்தனை எண்ணும் போதெல்லாம் என்னுள் ஒரு கிறக்கம். இதை அனுபவித்தவர்கள் ஏராளம்.
இன்று நல்லைக்கந்தன் தேரேறி வருகிறான். பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் இந்த தருணம் அலங்காரக்கந்தனாம் ஆறுமுக சுவாமிக்கு வசந்த மண்டப பூசை நிறைவுற்றிருக்கும்.

வசந்த மண்டப பூசை.......வார்த்தைகள் இல்லை விபரிக்க. அற்புதமாக இருக்கும். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கே ஆலயத்துக்கு வந்து அந்த வசந்த மண்டபத்தில் கூடி கந்தவேள் பெருமானின் பூசை பார்க்க காத்திருப்பர். அது சன சமுத்திரம். அழித்தல் தொழில் குறிக்கும் சிவப்பு நிறத்துடன் இருக்கும் சாத்துப்படி. ஆலயக் குருக்கள் மற்றும் ஏனைய அந்தணப்பெருமக்களும் சிவப்பு நிற வேட்டியுடன் நின்றிருப்பர்.

வெள்ளிப்பீடத்தில் வேலவன் எழுந்தருளி அடியவர்களின் தோளில் அசைந்து வருகின்ற காட்சி....காணக் கண் கோடி வேண்டும். அழகனைக் காண கோடி அல்ல பல கோடிக் கண்கள் வேண்டும். தங்கம் தகதகவென மின்னும். சுவாமியின் அருகே நின்றவர்களுக்கு தெரியும் 'சிலிங் சிலிங்' என்ற மெல்லிய ஒலியுடன் பன்னிருகரத்தான் வந்து கொண்டிருப்பான்.

எந்தக் கணமும் பிசகாத சரியாக 7.00 மணிக்கு கோபுர வாசலினூடாக வெளியே வரும் அந்தக்காட்சி அனைவரையும் நெக்குருக வைத்து விடும். தாமரை மலர்கள் சொரிய , அரோகரா ஓசை வானைப் பிளக்கும். மங்கள் வாத்தியங்கள் முழங்கும்.

சனசமுத்திரம் மத்தியில் முருகப்பெருமான் அசைந்து அசைந்து வருவார். "உன்னையல்லாது துணை எவருமுண்டோ வையகம் புகழ் நல்லை வாழ் வடிவேலனே....நீதான் உய்ய வழி காட்ட வேண்டும்" என்ற அடியவர்களின் மனக்குமுறல் மௌனமாகவே இருக்கும். அங்கப் பிரதட்டனை செய்பவர்களும் அடி அழிப்பவர்களும் கற்பூரச்சட்டி எடுப்பவர்களும் காவடிகளும் என அடியவர்களின் நேர்த்திக்கடன் வேலவனின் வீதியில் தீர்க்கப்படும்.

இவ்வளவு அழிவிற்கு பின்னமும் இந்த திருவிழா ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்ற சிலரின் கேள்வி மனதை நெருடாமல் இல்லைத்தான்.

ஆனாலும் கந்தனே நீ " வந்திருந்து பூச்சொரிந்து வாசலிலே கையசைத்தால் வல்ல வினைகள் எல்லாம் அகன்று விடும்". எம்மக்கள் அவலமற்ற அமைதி வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் எமது பிரார்த்தனை இருக்கும். அதுதான் அங்கிருக்கும் அடியவர்களின் இதயத்தில் அடியில் இருக்கும் ஒரு எண்ணமாக இருக்கும்.

ஒருமுறை வானொலி அஞ்சல் நிகழ்வில் இளையதம்பி தயானந்தா அற்புதமாக சொல்லுவார். தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. கற்பூரங்கள் எரிக்கப்படுகின்றன. உடைக்கப்பட்டதும் எரிக்கப்பட்டதுமான எண்ண அலைகளோடு அடியவர்கள் அங்கே காணப்படுகிறார்கள் என....!

உண்மைதான் கண்ணீரோடும் அவலங்களோடும் அலையும் ஈழத்தமிழன் இப்போது தண்ணீருக்குள் முகாம்களில் மிதக்கிறான். அவலம் அழிவில்லாமல் தொடர்கிறது. ஒன்றும் வேண்டாம் கந்தவேளே....! அது வேண்டாம் இது வேண்டாம் எமக்கு எதுவும் வேண்டாம்...! எம் கண் முன்னால் நிகழும் இந்த அவலம் அகலட்டும். "கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம்...' இன்று கூற்றுவர்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் எம்மினத்தவரை காப்பாற்றாதா? என்றே எண்ணுகிறோம்.

முருகா காப்பாற்று...! முழுவினைகளும் அகலட்டும்....!! அவலமற்று அமைதி வாழ்வு மலரட்டும்!!!

தேர்த்திருவிழா பற்றிய ஒரு அருமையான பாடல்......
பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்
இசை : இசைவாணர் கண்ணன்
பாடல் : புதுவை இரத்தினதுரை

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஈழத்துச் சதன் - பல குரல் - மிமிக்ரி

விஜய் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. பெயர் "கலக்கப் போவது யாரு". இது ஒரு வெறும் நகைச்சுவைக்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் உள்ளூர், வெளியூர் கலைஞர்கள் , இலை மறை காயாக சமூகத்திற்குள் ஒளிந்திருந்த சில கலைஞர்களை வெளிக்கொணரும் ஒரு முயற்சி. இதில் விஜய் தொலைக்காட்சி இலாபத்துக்காக செய்கிறதா என அலசும் அபத்தத்தை தவிர்ப்போம். அது தேவையற்ற ஒன்றே. இதை விடுத்து அவர்கள் 10 பெண்களை நடனமாட விட்டு பிழைத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு சமூக அக்கறையோடு இப்படியான நிகழ்ச்சிகளை தயாரிக்கின்றனர். அந்த நிகழ்ச்சிகள் தரமாகவும் இருக்கின்றன. இவைதான் இன்றளவும் இதயத்துள் 'விஜய் ரீவி' இருப்பதற்கான காரணங்கள். இவர்களைப் பின்பற்றி சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளும் இப்படியான நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடாத்தி வருகிறது.

மிமிக்ரி - பலகுரலில் பேசுவது. இந்த கலை எவ்வாறு ஆரம்பத்தில் உருவானது என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் எழுதினால் அறிய ஆர்வம். ஆனால் இந்தக்கலை மீது ஏனோ தெரியவில்லை ஒரு அபரிமிதமான காதல் இருக்கிறது. எங்காவது மிமிக்ரி நிகழ்ச்சி இருந்தால் அதை தவறவிடாமல் பார்ப்பது வழக்கம். இந்த பலகுரல் நிகழ்ச்சிகளை தமிழகத்தை சேர்ந்த கலைஞர்கள் நடாத்தி அதனை நான் பார்க்கும் முன்னர், நான் பார்த்த, ரசித்த , பிரமித்த ஒரு கலைஞன் "ஈழத்துச் சதன்".

ஈழத்தின் யாழ்ப்பாண வலிகாமத்தை சேர்ந்த ஒரு குள்ளமான மனிதன். சிறிய முகம். மிக மிக சிறுவனாக இருந்த போது (8 வயது) எமது ஊர் பாடசாலையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்காக இந்த மனிதரை முதலில் பார்த்தேன். அவரது நடவடிக்கைகளே நகைச்சுவையாக இருந்தது. அதிலும் சிறுவர் என்றால் சிறிய விடயங்களிற்கே சிரிப்பு வரும். அந்த நிகழ்ச்சியில் தான் அவர் பல மிருகங்களின் குரல்களை தனது வாய் மூலம் எமக்கு தெரியப்படுத்தினார். நிச்சயமாக அப்போதுதான் பல மிருகங்கள் எவ்வாறு கத்தும் எனத் தெரிந்தது. யானை பிளிறும் என படித்திருந்தாலும் பிளிறல் எப்படி இருக்கும் என தெரியாது. இப்படி பல மிருகங்களின் குரலை தெரியப்படுத்தியது ஈழத்துச் சதனே. அதேபோல பறவைகள். காகம், கிளி, மைனா, குயில் போன்ற சில குரல்களைத்தவிர எமக்கு வேறு ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அன்று பல பறவைகளின் குரல்களையும் அறிந்து கொண்டோம்.

புரட்டாதிச்சனி, அமாவாசை போன்ற தினங்களில் அல்லது விரத தினங்களில் காகத்துக்கு உணவு வைத்து விட்டு உண்ணுவது வழக்கம். அதற்காக உணவை ஒரு இடத்தில் வைத்து 'கா கா கா கா...' என அழைத்து அந்த காகம் உணவு உண்ணும் வரை காத்திருந்து உண்ணுவோம். அன்றும் ஈழத்துச்சதன் பல்வேறு விதமாக காகம் கரைவதை வெளிப்படுத்தி இருந்தார். உணவுக்காக அழைப்பது, ஒரு காகம் இறந்தால் அதற்கு எப்படி அழைப்பது என காகத்தின் கரைதலில் உள்ள வேறுபாடுகளை தெரியப்படுத்தினார். நிறைய காகங்கள் அந்த இடத்தில் கரைந்தபடி சூழ்ந்து கொண்டன. பிரமிப்பாக இருந்தது. விரத நேரங்களில் அழைக்கும் போது ஐந்திற்கு உட்பட்ட காகங்களே வரும். இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சி அவரது வெறும் வாய் மூலம் வந்த குரல்தான். ஒலிவாங்கியோ (மைக்) ஒலிபெருக்கியோ இல்லை. அப்படித்தான் எமது வாழ்வும் வசதிகளும் இருந்தது. ஆனாலும் நிம்மதியும் இருந்தது.

பல வாகனங்களின் ஓசை எவ்வாறு இருக்கும் என எமக்கு ஒலி எழுப்பி காட்டினார். அவர் செய்ததிலேயே இரண்டு விடயங்கள் அசத்தலானவை. ஒன்று குரங்கு செய்யும் சேட்டைகள். மிக மிக தத்ரூபமாக இருந்தது. அதன் நடவடிக்கைகள் , அதன் உடல் அசைவுகள் என எல்லாவற்றையும் அனாசயமாக செய்து காட்டினார். அடுத்தது ஒரு பெண் எப்படி தன்னை அலங்கரிப்பாள் என்பது. அவரின் அந்த நிகழ்ச்சிகளை பார்த்தவர்களுக்கு தெரியும். உன்னதமான ஒரு அபிநயமாக இருக்கும். மிக மிக இலாவகமாக இருக்கும் அவரது செய்கைகள். தலை முடி வாருவது, வாரும் போது தலையில் இருந்து ஒரு பேன் அல்லது ஈர் வந்தால் அதை எடுத்து விரல் நகங்களுக்கு இடையில் வைத்து நசுக்குவது. நசுக்கும் போது 'ஸ்ஸ்..' என்று சத்தமிடுவது என எல்லா நுணுக்கங்களையும் உன்னிப்பாக அவதானித்து எம்முன்னே படைத்தார். அதிலும் தலைமுடியை பின்னுவது, முடிவது என அப்படியே அச்சொட்டாக ஏன் பெண்களிலும் பிரமாதமாக செய்வார். இன்னும் இன்னும் நிறைய.

பின்னர் ஒரு தடவை கல்லூரிக் காலத்திலும் கண்டு களித்தேன். கல்லூரியில் இயங்கும் ஒரு கழகம் தன்னுடைய வளர்ச்சி நிதிக்காக (எமது கல்லூரியில் வளர்ச்சி நிதி என்பது சிரிப்பான விடயம்) ரூபா5 வாங்கி எமக்கு அந்த நிக்ழச்சியை வழங்கினர். நான் நினைக்கிறேன் இந்த ஈழத்துச் சதன் இரணடாயிரம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் (2003 அல்லது 2004) அளவில் மரணமடைந்திருக்க வேண்டும். நிஜமாக சொல்வேன் மிக அற்புதமான ஒரு கலைஞன். ஒழுங்கான சந்தர்ப்பங்களும் களங்களும் கிடைக்காமல் எம்மோடு மட்டும் வாழ்ந்த மறைந்த ஒரு கலைஞன்.

நாம் செய்த அல்லது செய்கின்ற ஒரு வரலாற்றுத்தவறு என்னவென்றால் எமக்குள் இருக்கும் கலைஞர்களை ஊக்குவிக்காமலும், பாராட்டாமலும் அந்தக் கலைஞர்கள் பறிய பதிவுகளை பேணாமலும் விட்டு பெரும் குற்றத்தை இழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

தயவுசெய்து இந்த "ஈழத்துச் சதன்" பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாம். அவர் சம்பந்தமான தகவல்கள், படங்கள், ஒலிப்பேழைகள் இருந்தால் kidukuveli@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அல்லது நீங்களாகவே உங்கள் வலைப்பூவில் பதிவிடலாம். அல்லது ஏதாவது இணையத்தில் ஏற்றலாம். எவர் செய்தாலும் நல்லது நடக்கட்டும். தகவல்களை பேணுவோம்.

இந்த ஈழத்துச்சதனுக்கு பின்னர்தான் இப்படியான பலகுரல் நிகழ்ச்சிகளில் பல கலைஞர்களை தெரிந்து கொண்டேன். தாமு, சின்னி ஜெயந்த், படவா கோபி,சேது, ஜெயராம், விவேக், மயில்சாமி பலரும் இருந்தனர். இவர்கள் பல ஒலிகளோடு மட்டும் இல்லாமல் நடிகர்களின் குரலை தமது குரல் மூலம் வெளிப்படுத்தி கைதட்டல்கள் வாங்கினர். சின்னி ஜெயந்த் இதிலே எனக்குப் பிடித்த ஒரு கலைஞர். அவரது மிமிக்ரி கேட்டு பார்த்து பலதடவை மகிழ்ந்திருக்கிறேன்.

இப்போது விஜய் தொலைக்காட்சி கலக்கபோவது யாரு அறிமுகப்படுத்தியவுடன் ஏராளமான கலைஞர்கள் வெளியே தெரிந்தனர். இதனால் குரல் என்பதற்கு அப்பால் உடல் அசைவுகள், கருத்துக்கள், படைக்கும் பாணி என வேறுபடுத்தி பரிசில்கள் வழங்கினர். சன் தொலைக்காட்சியின் 'அசத்தப் போவது யாரு', பின்னர் கலைஞர் தொலைக்காட்சிலும் இது இருந்தது(பெயர் நினைவில்லை). கோவை குணா, ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன், குட்டிப்பையன் அர்ஜுன் என பலரும் கலக்கி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் விஜய் தொலைக்காட்சி மூலம் வெளியே வந்தவர்கள். இப்படி ஏனைய தொலைக்காட்சிகளும் ஒளிந்து கிடக்கும் கலைஞர்களை வெளியே தருவிக்கிறார்கள். நல்ல முயற்சியே.

எமது மண்ணிலே பிறந்த ஒரு கலைஞன் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் அந்தக்கலைஞனை நாம் சரிவரக் கையாளாமல் விட்டு விட்டோமோ எனத் தோன்றுகிறது. அந்தக் கலைஞன் மறைந்தாலும் என்றும் எமது நெஞ்சத்துள் வாழ்வான்.

கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் வீரர்களை அப்படியே பிரதிபலிப்பாக செய்யும் ஒரு கானொளிக்காட்சி இது. பார்த்து மகிழுங்கள்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பங்களாதேஷின் பாய்ச்சல்...!

ம்ம்ம்...டெஸ்ட் போட்டித்தொடர் கோப்பை எம் வசம்.....!

இந்தியா வென்றால் இணையம் எல்லாம் அலறும். தோற்றால் கதறும். அதோடு நக்கல் பதிவுகளும் பளிச்சிடும். ஆஸ்திரேலியா வென்றால், மீண்டும் அசத்தல் என்று அதிரடி பதிவுகள் வரும். இலங்கை வென்றால், அவர்களுக்கு என்னவோ இப்ப வெற்றிகள்தான் அடிக்கடி என்பது போல கட்டுரைகள் வரும். ஆனால் பங்களாதேஷ் வென்றுவிட்டது. எங்கும் எதிலும் பதிவுகளோ ஆர்ப்பாட்டங்களோ இல்லை. காரணம் ஒன்று அது பங்களாதேஷ் தானே என்கிற இளப்பம். இரண்டாவது அது பெற்ற வெற்றி மேற்கிந்தியரின் இரண்டாம் தர அணியுடன் தானே என்ற ஏளனம்.

பங்களாதேஷ் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் மேற்கிந்தியரை வாரிச்சுருட்டி விட்டது. டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்றும் ஒருநாள் போட்டிகளில் 3-0 என்றும் WHITE WASH அடிப்படையில் மேற்கிந்தியரை மண்கவ்வச் செய்தது.

ஒரு காலத்தில் கிரிக்கட்டின் ஜாம்பவான்கள் மேற்கிந்தியர்கள். அதுவும் அவர்கள் மண்ணில் அவர்களை அசைப்பது கடினம். அவர்களின் எகிறுப்பந்துகளுக்கான ஆடுகளங்களில் ஆசிய அணிகள் உட்பட அனைத்து அணிகளும் தடுமாறித்தான் இருந்தது. விக்கட்டுகளை வீச்சாளர்கள் பதம்பார்க்கிறார்களோ இல்லையோ துடுப்பாட்டக்காரர்களை பௌன்சர் பந்துகளால் மிரட்டுவர். இதனால்தானோ என்னவோ விக்கட்டுகள் எடுப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. துடுப்பாட்டமும் அதிரடிதான். அவர்கள் ஆடும் பாணி எல்லோரையும் விட வித்தியாசமானது. எல்லோரும் ஜாம்பவான்கள். அடித்து நொருக்கும் வல்லமை படைத்தவர்கள்.
ம்ம்ம்...ஒருநாள் போட்டித்தொடர் கோப்பையும் எம் வசம்.....!!

ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழ். குறிப்பாக 1990 களின் ஆரம்பத்தில் இருந்து இந்த சரிவினை மேற்கிந்தியர்கள் சந்தித்து வருகின்றனர். பந்துவீச்சில் ஓரளவு அசத்தினர். அதுவும் அம்புறோஸ், வோல்ஷ், பிசப் ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் அதிலும் அவர்களுக்கு சரிவே. ஆங்காங்கே லாரா தனி ஒருவராக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அவர்களின் துடுப்பாட்டம் இன்னமும் மறையவில்லை என காட்டுவார். அவரோடு சந்தர்போல் உம் தம்பங்கினை சரிவர செய்தார். இப்போதும் செய்தும் வருகிறார். இவைகளைத் தவிர மேற்கிந்தியரின் சாதனைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லைத்தான். காரணம் தேடிப்போனால் நிறைய இருக்கிறது. அவர்களுடைய கட்டுப்பாட்டுச்சபையினுடைய அக்கறையின்மை காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன். அதேவேளை அந்த அணி வீரர்கள் அனைவரும் விளையாட்டாய் விளையாட்டாய் விளையாடுவது. இதுதான் அவர்களின் பலமும் பலவீனமும். இன்னும் நிறைய காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது பற்றி பின்னர் ஒருமுறை பார்க்கலாம்.

பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை எதிர்பார்ப்புகளோ அழுத்தங்களோ அற்ற அணி. அவர்கள் தோற்றாலும் அவர்களுக்கான விமரிசனங்கள் குறைவாகவே இருக்கும். அது அவர்களைப் பொறுத்தவரை ஒரு கவலையற்ற விடயம். ஆனால் பெரிய அணிகள் அவ்வாறில்லை. தோற்றால் போதும் ஊடகங்களோ ரசிகர்களோ வறுத்தெடுத்துவிடுவார்கள். மிகுந்த அழுத்தம் அவர்களுக்கு சிறிய அணிகளுடன் விளையாடும் போது இருக்கும். ஆனால் அவர்கள் இலகுவில் வெற்றி பெற்றுவிடுவார்கள் காரணம் அவர்களின் அனுபவம். கத்துக்குட்டிகளாக இருக்கும் சிறிய அணிகள் பெரும் அணியுடன் விளையாடுகிறோம் என்ற பயத்திலேயே விளையாடுவார்கள். வெற்றிக்கான ஒரு வாய்ப்பு இருந்தால் என்ன விலை கொடுத்து என்றாலும் பெறத்தயங்காமல் விளையாடுவார்கள். இதற்கு நல்ல உதாரணமாக அமைந்த போட்டிகள் தான் அண்மையவை.

இந்த போட்டிகளை கவனித்தவர்களுக்கு தெரியும். முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடி மேற்கிந்தியரை அசத்தலான பந்துவீச்சில் துவைத்தெடுத்துவிட்டது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் விரட்டினார்கள் அவர்களின் ஓட்ட எண்ணிக்கையை. இரண்டும் பெரிய இலக்குகள். அவரவர் தங்கள் தங்கள் பங்கிற்கு துடுப்பெடுத்தாடி அணியை கரைசேர்த்தனர் வெற்றியை நோக்கி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அணியை வழிநடத்தி ஒருநாள் போட்டித்தொடரிலும் வெற்றிக்கனியைத் தேடித்தந்த பெருமைக்குரிய அணித்தலைவராக ஸகிப் அல் ஹசன் திகழ்கிறார். மிக இளம் வயதிலே இப்படி ஒரு வெற்றியைத் தேடிகொடுத்திருக்கிறார். முன்னாலே இருந்து வழிநடத்தி சகலதுறைகளிலும் பிரகாசித்தார்.
இப்போதைக்கு பங்களாதேஷில் நானே ஹீரோ....!

பங்களாதேஷ் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது 2000ம் ஆண்டில். இன்று வரை அது 61 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கின்றது. இதில் கடைசியாகப் பெற்ற வெற்றிகளுடன் அது மொத்தம் 3 போட்டிகளில் வென்றுள்ளது. அதில் இறுதியாக பெற்ற வெற்றி ஒரு தொடர் வெற்றி. அதுவும் வெளிநாட்டு மண்ணில். பொதுவாக ஆசியர்கள் வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்வது மிகவும் சவாலான விடயம். இப்போது பங்களாதேஷ் அணி அதனை சாதித்துவிட்டது. அவர்களுக்கு இப்போ உளவுரன் அதிகாமாகி இருக்கும். இது அடுத்துவரும் போட்டித்தொடர்களில் நிறைய எதிர்பார்ப்புகளைக் கூட்டும். அடுத்து வரும் தொடர்களை அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது சவாலான விடயமே.

மேற்கிந்திய அணியைப் பொறுத்தவரை அந்த அணி இரண்டாம் தர அணி என்ற ஒரு நிலை இருக்கிறது. ஆனால் அதில் அனேகம் பேர் முன்பு தேசிய அணிக்காக விளையாடி இருக்கிறார்கள். அனுபவம் குறைவுதான். அதுவும் வங்க தேச அணிக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதை அவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். எது எவ்வாறாகினும் பங்களாதேஷ் வென்றுவிட்டது. அவ்வளவுதாங்க. இனி எவ்வாறு இந்த வெற்றி முகத்தை தக்கவைக்கிறார்களோ என்று பார்ப்போம்.