வெள்ளி, 25 செப்டம்பர், 2009

அன்னை மண்ணை அவனும் பிரிந்தான்..!!!

2006.09.25 திங்கட்கிழமை...அன்றைய அவன் பொழுதும் அமைதியாகத்தான் விடிந்தது. வழமைபோல காலையில் பரபரப்பு இல்லை. காரணம் அந்த பொழுதுகள் எல்லாம் யுத்தம் தொடங்கி யாழ்ப்பாணம் சல்லடையாக்கப் பட்டு கொண்டு இருந்த காலம். ஆனால் அன்று இவன் சற்று சிக்கீரமாகவே எழுந்து குளித்து விட்டு அவனது அப்பா வாங்கி வர இருக்கும் ‘உதயன்’ மற்றும் ‘தினக்குரல்’ பத்திரிகைகளுக்காக காத்து இருந்தான். அதில் இன்று கப்பல் புறப்படும் என்ற செய்தியை தேடினான். எங்கும் இல்லை. அப்போது இவனின் நண்பன் வந்தான். அவன் ஒரு மருத்துவன். அவன் சொன்னான். ‘மச்சான் இண்டைக்கு கப்பல் போகுது, நீயும் வாற எண்டால் வா’ என அழைத்தான். இன்றும் அந்தக் கப்பல் பயணத்துக்கென அவன் புறப்பட்டால் அது அவனுடைய 10 வது முயற்சியாக இருக்கும். இதுவரை 9 தடவைகள் முயன்று முயன்று தோற்ற களைப்பு அவனை சோர்வடையச் செய்தது. நண்பன் உறுதி படத்தெரிவித்தான் கப்பல் புறப்படுவதாக. இவனும் புறப்பட தீர்மானித்தான்.

பயணப் பொதியுடன் யாழ்.புகையிரத நிலையம் நோக்கி விரைந்தான். அங்கு ஏராளமான பயணிகள். எப்படி வந்தார்கள் என்று அவனுக்கு வியப்பு. இம்முறை அவன் புதிதாக உத்தியோகத்தர்களுக்கான நிரையில் நின்றான். இதுவரை கப்பல் பயணம் அவனுக்கு அளித்த ஏமாற்றங்கள் , இந்தமுறையும் அவனை நம்பிக்கை இழக்கவே செய்துவிட்டது. இருந்து சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல முயன்றான். அவனது நிரையில் நின்றவர்களை உள்ளே எடுக்கத்தொடங்கி விட்டார்கள். இவனது முறை வந்தது. இதுவரையில் அவனைத் தடுத்து நிறுத்திவந்த இராணுவ மேலதிகாரிகளில் ஒருவரிடமே இம்முறையும் மாட்டிக் கொண்டான். அவர் எங்கே போவதாக சிங்களத்தில் கேட்க இவன் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கண்டி என்று பதிலளித்தான். ஏன் என்று கேட்க மேற்படிப்புக்காக பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற ஒரு கடிதத்தை காட்டினான். இம்முறை அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். துன்பம் என்னவென்றால் இதே கடிதத்தை பல முறை காட்டிய போது அவர்கள் அவனுக்கு சொன்ன பதில் இது புகைப்படப் பிரதி உன்னை எப்படி நம்புவது என்று கேட்டார்கள். இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது போல உனர்வு. அதுவும் பிரபல பேராதனைப் பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதம். என்ன செய்வது எல்லாம் அங்க பிறந்த குற்றம் என்று மனதுக்குள் நினைத்து தன்னை தேற்றி கொண்டு முன்னே நடந்தான். நான்கு பிரதான கொட்டில்கள். ஒவ்வொன்றிலும் வரிசையாக நின்று நின்று முன்னே போக வேண்டும். இப்படி நத்தை போல நகர்ந்து நகர்ந்து இரண்டாவது கொட்டிலுக்கு விரைந்தான். அங்கே பயண அனுமதிப் படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். சகல விபரங்கள், அலைபேசி இலக்கம், எங்கே போகிறான், ஏன், யாருடன் தங்க போகிறான், இப்படி பல விடயங்கள். எல்லாம் அறிந்து படிவம் ஏற்றுக்கொள்ளப் பட்ட உடன் அடுத்த கொட்டில் இராணுவ புலனாய்வுத் துறையினரது. அவர்கள் எல்லோரையும் வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களோடு சில தமிழ்க் குழுக்களும் இருந்தது அவனை கடுப்பாக்கியது. அதிலும் அவர்களது கேள்விகள் அவனை சினத்துக்குள்ளாக்கின.

எல்லாம் விதி என்று நினைத்துக் கொண்டு அவர்களிடம் முகத்தை கொடுத்தான். அவர்களும் அவனைப் போட்டு துளைத்தெடுத்தனர். அந்த பெரிய தடையை தாண்டி அவன் அடுத்த கொட்டிலுக்குள் நகர்ந்தான். அதில் நின்று பார்க்கும் போது அருகே ஓ.எல்.ஆர் சேர்ச் மாதா கோவில் ஒன்று இருந்தது. அவளிடம் இறைஞ்சினான் இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறாயே என.....! அவளும் எம்மைப் போல் ஏதும் செய்ய முடியா நிலையோ என பேரூந்துக்குள் ஏறினான். எல்லோர் முகங்களிலும் ஏதோ ஒரு மகிழ்ச்சி. அவன் மட்டும் அசையவில்லை. ஏனெனில் இதற்கு முன்னர் போனவர்களில் பலபேர் காங்கேசன்துறையில் வைத்து இடம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவன் பொறுமையாக இருந்தான். இதயம் முழுவது குலதெய்வம் நாமம் இரகசியமாக ஒலித்த வண்ணமே இருந்தது. 6 பேருந்துகள் தொடராக பயணித்தது தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை நோக்கி. காலையில் இருந்து எதுவும் இல்லை. வயிறு வாட்டத்தொடங்கியது.

1200 பயணிகள் வரும் வரை யூனியன் கல்லூரிதான். இரவு முழுவதும் அங்கே தங்க வேண்டும். அடுத்தநாள் தான் பயணம். வந்திறங்கியவுடன் மீண்டும் ஒரு பதிவு. அதிலே ஒரு கொடுமை என்னவென்றால், கடலில் பயணம் செய்யும் போது தமக்கு ஏதாவது நடந்தால் தாமே பொறுப்பு என ஒப்பமிட வேண்டும். நமது நாடாம். நமது கடலாம். ஆனால் நாம் போகும் போது எமக்கு ஏதும் நடந்தால் நாமே பொறுப்பு என்ற கையொப்பம். அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். என்னடா இழவு இது. எங்காவது இப்படி இருக்குதா? எல்லாம் போகட்டும். இதுதான் காலம். இரவு ரொட்டியும் பிளேன் ரீயும் தான் உணவு. கண்டபடி உண்ணவும் பயமாக இருந்தது அவனுக்கு. காரணம் மலசல கூட வசதிகள். 1200 பேர் , 6 மலசல கூடம் பெண்களுக்கும் சேர்த்து. இதுதான் தமிழ் மக்களை கவனிக்கும் பண்பு. எம்மவர்களோ இதற்குள்ளும் லக்ஸ் போட்டு குளிப்பது...சிக்னல் போட்டு பல் துலக்குவது என எந்த சலனமும் இல்லாமலும் இருந்தனர். அவனுக்கு இவைகள் மனதிற்குள் சிரிப்பைத்தந்தன. தன்னுடன் வந்த நண்பர்களுடன் சற்று நேரம் கதைத்து விட்டு ஓரமாக கிடந்த ஒரு வாங்கில் படுக்கத்தயாரானான். தீடிரென காதைப்பிளக்கும் சத்தத்துடன் வெடிகுண்டுச்சத்தம். திகைத்து போனான். அவனுக்கு தெரியும் அது யுத்தம் தீவிரமான காலம். ஆனால் அந்த் ‘ஆட்டிலறி’ அடிகளின் ஓசையில் பல குழந்தைகள் வீரிட்டு அழுதன. என்னால் மட்டும் என்ன எவராலும் எதுவும் செய்ய முடியாது என பொருமி விழித்திருந்தான்.

அடுத்தநாள் விடியலுடன் பேரூந்துகளில் பயணிகள் அடைக்கப்பட்டு துறை முகத்தை நோக்கி நகர்ந்தனர். பேரூந்துகளின் பக்கம் எல்லாம் கறுப்பு மெழுகு சீலைகளால் அடைக்கப்பட்டு இருந்தது. காரணம் அது உயர்பாதுகாப்பு வலயம். எவரும் எதையும் பார்க்க கூடாது என்பதற்காக. எல்லாம் எமது விதி என எண்ணி புறப்பட்டான். இன்னமும் அவன் மனது சமாதானம் அடையவில்லை. தனக்கு இன்று கூட கப்பலில் ஏற வாய்ப்பு கிடைக்குமா என எண்ணினான். பேரூந்தால் இறங்கிய உடன் மீண்டும் ஒரு சோதனையும் பதிவும். தமிழன் என்றாலே பதிவு சோதனையும் கலந்த வாழ்வுதானா என்றாகி விட்டது. அலைபேசியை ‘சிம் கார்ட்’ வேறாகவும் ‘பற்றறி’ வேறாகவும் பிரித்து வைக்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவை ஏற்று செய்தான். எல்லாம் பிரித்து மேய்ந்தார்கள். தன்னை அனுமதித்துவிட்டார்கள் என்றதும் கொஞ்சம் சந்தோஷப்பட்டவன், கப்பலில் இடம் இல்லை என்று தன்னை திருப்பி அனுப்புவார்களோ என்று மனதிற்குள் பயந்தான். காலை 7.30 மணியளவில் இருந்து காத்திருக்க தொடங்கினான்.
அனல் பறக்கும் வெய்யில். வெட்ட வெளி. பெண்கள் குழந்தைகளை ஒரு தகர கொட்டகைக்குள் இருக்க அனுமதித்தனர். குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. கொண்டு சென்ற சாரம்(லுங்க்) தான் அவனுக்கு உதவியது குடையாக. அவனது பொதியில் எல்லாம் வெயிலில் உருகிய தாரின் அடையாளம். எவ்வளவை பொறுத்தோம். இதை பொறுக்கமாட்டோமா. தண்ணீரை கூட தராமல் காத்திருக்க வைக்கப்பட்டோம். மதியம் 2.30 மணிக்குத்தான் அவர்களுக்கான கப்பல் கரையைத்தொட்டது. அதிலிருந்து வேக வேகமாக பயணிகள் இறக்கப்பட்டனர். அவர்களோடு சீருடையினரும் இறக்கப்படுவதை அவன் அவதானித்தான். இவர்களையும் ஏற்றத்தயாராகினர். பொதிகளைத் தூக்கிக் கொண்டு நிரையில் நின்று நடந்தான். இவர்களோடும் சீருடையினர் ஏற்றப்பட்டனர்.

4500 பேர் பயணிக்கும் கப்பல். 1200 பேர் பயணிகள். மிகுதிப்பேர் இவங்களா என வியந்தான்? எங்களை ஏற்றுகிறோம் என்ற பெயரில் அவங்கள் தங்களை அல்லவா ஏற்றுகிறார்கள். அவர்களை அனுப்ப வேண்டும். அதற்கு பாதுகாப்புக்கு நாம் தேவை போல..! எவரோடு இதைக் கதைக்க முடியும். மனதிற்குள் புழுங்கினான். கடலில் அவனுக்கு இப்படியான கப்பலில் புதிய பயணம். முன்னர் கிளாலி கடல்நீரேரியூடாக பலதடவைகள் சென்று வந்தாலும் இது அவனுக்கு புதியதே. ஆனால் இதையெல்லாம் அனுபவிக்கும் மனநிலையில் அவன் இல்லை. தனது தாய் மண்ணைப் பிரிகிறோம் என்ற கவலையே....! இனி எப்போது மீண்டும் கால் பதிப்பேன் என்ற ஏக்கமே...! கனத்த நெஞ்சத்தோடு நின்ற இவனையும்
சேர்த்து சுமந்து கொண்டு கடலில் நின்ற கப்பல் புறப்பட்டது.

‘விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா...!’

மூன்று வருடங்கள் கடந்தும் இதே ஏக்கத்தோடும்...மனக்குமுறலோடும் அவன் இன்றும் இருக்கிறான்...என்றாவது அன்னை மண்ணில் அடி வைப்பேன் என்ற எண்ணத்தோடு...!!! காத்திருப்புத்தானே வாழ்க்கை.

8 கருத்துகள்:

வலசு - வேலணை சொன்னது…

//
‘விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா...!’
//
பார்ப்போம் (பொறுத்திருந்து)

Sivamoorthy Kishokumar சொன்னது…

ம்.....நினைவுகளின் மீட்டல்.....?

விரும்பி சொன்னது…

யாழ்மக்கள் பயணத்திற்காக சந்தித்த துன்பங்களை நினைவுமீட்டி, நினைவூட்டி பதிவு செய்த லாவகம் தனியழகு.
துன்பங்களை சுமந்து வந்தும்
மண்வாசனையை மணக்க நினைத்து
ஏக்கங்களுடன் காத்திருக்கும்
அந்த உணர்வுவையும் பற்றையும் பதிவில் கொண்டுவந்தது நன்று

இறுதியில்
//மறுமுறை ஒருமுறை பார்ப்போமா// எனும் ஏக்கம்!

பார்ப்போம்! நம்புவோம்! காத்திருப்போம்!

புழுதிப்புயல் சொன்னது…

காத்திருப்புக்கள் ஒன்றும் எமக்கு புதியவை அல்ல. பிரிவுகள் இதுதான் முதல் தடவையும் அல்ல. ஆகவே பாதிவழியில் நில்லாது காத்திருங்கள்.
"விடியாத இரவென்று எதுவும் இல்லை".

அருண்மொழிவர்மன் சொன்னது…

ஒரு நினைவுமீட்டலாக மட்டுமல்லாமல், யாழ்- கொழும்பு இடையேயான பயணம் பற்றிய ஒரு ஆவணமாகவும் அமைந்துள்ளது பதிவு. வாழ்த்துக்கள்

முல்லைப்பிளவான் சொன்னது…

நல்ல அனுபவ பகிர்வு, மூன்று வருடங்களின் பின் மீட்பு செய்துள்ளீர்கள் ஆனால் இப்பதான் நடந்தது போல் இருக்கிறது . தொடரட்டும் தங்களின் அனுபவங்கள்.

கிடுகுவேலி சொன்னது…

நன்றி வேலனை வலசு
நன்றி skishok
நன்றி விரும்பி
நன்றி சுதர்ஷன்
நன்றி அருண்மொழிவர்மன்
நன்றி முல்லைப்பிளவான்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். ஆமாம் காத்திருக்கிறேன். கனியும் என்ற நம்பிக்கையில்.

கானா பிரபா சொன்னது…

அனுபவப்பதிவு நெஞ்சைத் தொட்டது, 14 வருஷங்களாக இன்னும் காத்திருக்கிறேன் நானும் உங்களைப் போலவே

கருத்துரையிடுக