செவ்வாய், 18 மே, 2010

இது இங்கே மலிவு....!!!

"இஞ்சே உங்க யாரையும் ஒரு ரெண்டு வேலைகாரரைப் பிடிக்கலாமே?” என்று தனக்குத் தெரிந்த ஒரு ஐயாவிடம் கேட்டாள் லட்சுமி. “எங்கயனை பிடிக்கப் போறாய் இந்த நேரத்தில...அது சரி என்னத்துக்கு மோனை?” என்ற ஐயாவிடம் . “ஒரு பங்கர்* வெட்ட வேணும் அப்பு, காசு கூட எண்டாலும் குடுக்கலாமனை, குறைஞ்சது ஒராளைத் தன்னும் பிடிச்சுத் தரமாட்டியளே...?” என்றவளிடம் “பாப்பம் உதில சந்திக்குத்தான் போறன், ஆரும் நிண்டால் கூட்டியாறன்......” என்று சொல்லி வெளிக்கிட்டார் ஐயா.

“ப்ச்ச்ச்...” என்றபடி நகர்ந்தாள் லட்சுமி. வீடு இல்லை. பத்தோடு பதினொன்றாக எல்லோருடனும் அவள் இருந்தாள். “ச்சீ ஒரு வேலைக்காரரையும் பிடிக்க முடியல...இந்த ஊட்டுக்க** வெட்டினாத்தான் உண்டு...இல்லாட்டி பாழ்படுவார் தொடங்கிடுவானவை..” என புறுபுறுத்தவளிடம் வந்தார்கள், அருகில் இருந்த மணியத்தாரும் மனைவி கமலாவும். ”என்ன பிள்ளை என்ன ஆச்சு..” என்று வாடிய முகத்துடன் இருந்த லட்சுமியிடம் கேட்டார் மணியண்ணை. “ஒரு பங்கர் வெட்ட ஆள் தேடினால் ஒருத்தரும் கிடைக்கல...இந்த அமைதிக்குள்ள வெட்டி முடிச்சிடோணும்.....” என்றாள் லட்சுமி. “ஏன் பிள்ளை அவர் எங்க..? நீங்கதானே ஒரு பங்கர் வெட்டி வச்சிருந்தனியள் .....அதுக்கு என்ன நடந்தது ..?” என கேட்டாள் கமலா.

கமலாவை விளித்து பார்த்துவிட்டு....எங்கோ பார்த்தபடி சொன்னாள், “ நேற்றைக்கு இரவு என்னை பங்கருக்குள்ள இருக்க சொல்லிப்போட்டு மனுசன் வெளியாலை வந்தவர். அந்த நேரம் பார்த்து கூவிக்கொண்டு வந்த ஷெல் அவருக்கு பக்கத்துல விழுந்தது போல.....அவர் அதிலையே .........” என்று இழுத்தாள். எந்த சலனமும், துக்கமும் இன்றி சொன்ன அவளின் கண்களில் நீர் உருண்டு கன்னத்தில் வழிந்தது. விம்மல்கள் எதுவும் இல்லை. உதடு துடித்து அழுகை எதுவும் இல்லை. ”அதுக்குள்ளயே அவரை புதைச்சுப் போட்டன். இப்ப ரெண்டு பிள்ளையளையாவது காப்பாத்த வேணும் அதுக்கு புது பங்கர் வெட்ட வேணும்” என்றவளைப் பார்த்து விறைத்து, விக்கித்து நின்றனர் மணியண்ணையும் கமலாவும்....!

* பங்கர் - பதுங்குகுழி
** ஊட்டுக்க - இடைவெளிக்குள் (வட்டாரச்சொல்)

மே 18 முள்ளிவாய்க்காலில் மரணமடைந்த அனைத்து ஈழத்தமிழ் உறவுகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்....!!!!!

திங்கள், 8 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா....!!!!

காதல் எவ்வளவு சுகமானது. எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறது என்பது கேள்வியே....!. சிலருக்கு கற்பனையாக, சிலருக்கு வாழக்கையாக, காதல் இனித்தே இருக்கிறது. சிலருக்கு அது கசக்கத்தான் செய்கிறது. இன்னும் சிலர் அது எமக்கு ஒவ்வாது என்று ஒதுங்கியே செல்கிறார்கள். திரைப்படங்களில் ஒவ்வொரு காதல் காட்சிகளையும் பார்க்கும் போதும் அல்லது சிறந்த ஒரு காதல் கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போதும் ஏன் ஒவ்வொரு காதலர்களையும் பார்க்கும் போதும் நாம் இப்படி எல்லாம் காதலிப்போமா அல்லது ஏன் எமக்கு இப்படி அமையவில்லை என்று எத்தனை பேர் மனதுக்குள் மறைவாக நினைத்திருப்போம். இரகசியமாக இரசித்தும் இருக்கிறோம், ஏங்கியும் இருக்கிறோம். எமக்கு அது கிடைக்கவில்லை என்றால் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது என எம்மை நாமே சமாதனாப்படுத்தி போய்க் கொண்டே இருக்கிறோம்.

படைப்பு என்பது எந்த ஒருவிதத்திலாவது ஒருவரின் மனதில் பதிந்து விட்டால் அது அந்தப் படைப்பாளியின் வெற்றியே. ரசனைகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டே தீரும். ஒத்த ரசனைகள் கொண்டவர்களை காண்பது அரிது. ரசிக்கும் பொருள் எது என்பதில் இங்கே பிரச்சினை இல்லை. ரசிப்புத்தன்மை என்பதுதான் வேறுபடுகிறது. ஒவ்வொருவர் மனதிலும் எது கூடியளவு தாக்கத்தை செலுத்துகிறதோ அதனை அவர்கள் ரசிக்கத்தொடங்கி விடுவார்கள். திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு கோணத்திலேயே இருக்கும். திரைப்பட அறிவு பூச்சியமாக கொண்ட ஒருவரின் இரசனையும் அதிலே அதிக நுணுக்கங்கள் தெரிந்த ஒருவரின் ரசனையும் வேறுபடும். ஒரு பொதுவான நிலைக்கு வரமுடியாமல் இரசனைகள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களா அல்லது இளையராஜா பாடல்களா சிறந்தது என்று இன்றும் வாதிட்டு காலத்தைக் கழிப்போர் பலர். சிவாஜிகணேசனா கமல்ஹாசனா சிறந்த நடிகர்கள் என்று போட்டி போடுவோர் அதிகம். ஒரு துறையில் அதிக அறிவு கொண்டவர்களின் பார்வையும், அந்தத்துறையில் பாமர அறிவு கொண்டவர்களின் பார்வையும் வேறுபடுகின்றது. எது நல்ல இசை, எது நல்ல திரைப்படம், எது நல்ல படைப்பு என்று விவாதங்களைத்தவிர்த்து அவரவர் ரசனைக்கேற்ப எதனையும் ரசிப்பது நல்லது.

கவிதைப் புத்தகங்கள் நிறைய வாசித்திருந்தும் ஒரு காதல் கவிதைத் தொகுப்பை முழு மூச்சில் ரசித்து வாசித்த திருப்தி “விண்ணைத்தாண்டி வருவாயா...” என்ற திரைப்படம் பார்த்தபின்பு கிடைத்தது. காதல்....! ஒரு மகத்தான வார்த்தை. எல்லோர்க்கும் கைகூடுவதில்லை. கைகூடியவர்களும் அதனை இறுதி வரை கட்டிக்காத்தார்களா என்பதெல்லாம் கேள்வியே...! ஆனால் அந்தக் காதல் வயப்பட்ட கணங்கள் எப்படி இருக்கும், ஒரு காதலன் அல்லது காதலியின் தவிப்பு எப்படி இருக்கும், இவையெல்லாம் நாம் நண்பர்களின் காதலின் போதோ அல்லது தெரிந்தவர்களின் காதலின் போது பார்த்திருக்கிறோம். அவற்றை எல்லாம் திரையில் வித்தியாசமான காட்சிகளோடு கண்டு களித்தேன்.

“விண்ணைத்தாண்டி வருவாயா..” என்ற திரைப்படம் பார்த்த பின்பு அது மனதில் எக்கச்சக்கமாக பதிந்து விட்டது. பாதித்துவிட்டது. காரணம் தெரியவில்லை. கௌதம் வாசுதேவ் மேனன் மீது கொண்ட நம்பிக்கையில் படம் பார்க்க சென்றேன் (நீண்ட காலத்தின் பின் பெரும் படையாக சென்றோம்). காதலை பல பரிமானங்களில் காட்டியாகிவிட்டது. இவர் எதை காதலில் புதிதாக சொல்லப் போகிறார் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் கௌதம் என்ற இயக்குநர் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தேன். சிம்பு என்ற ‘விரல் வித்தைக்காரன்’ கொஞ்சம் கண் முன்னால் வந்து மிரட்டினாலும்....இது கௌதம் படம் ஆகவே வாய் , கை பொத்திக் கொண்டு இருந்திருப்பார் என்பதால் துணிவோடே சென்றோம். இது விமர்சனம் அல்ல. அந்தப் படத்தைப் பார்த்ததும் எழுந்த என் எண்ணத்தின் பிரதிபலிப்பு அவ்வளவே....!!

பாடல்கள் வித்தியாசமாக இசையமைக்கப்பட்டிருந்தது. விருதுகளின் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல்களை மிக நுணுக்கமாகத்தான் வாங்கியிருக்கிறார் இயக்குநர். பாடல்களின் வெற்றியில் எனது சிற்றறிவுக்கு எட்டின வகையில் இசையமைப்பாளர்களை விட இயக்குநரே காரணமாக அமைகிறார் என்பது என் எண்ணம். அவர்கள்தான் இது வேண்டாம் அது வேண்டாம் அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என பிழிந்து வாங்குகிறார்கள். பிரபல இயக்குநர்கள் எடுத்த படங்களின் பாடல்களை நினைத்தால் உண்மை புலப்படும். பொதுவாகவே கௌதம் இயக்கும் படங்களின் பாடல்கள் ஒரு போதும் சோடை போனதில்லை. ஹரிஸ் ஜெயராஜ் உடன் முரன் பட்ட பின் பாடல்கள் தோற்று விடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருந்து ரஹ்மானிடம் வாங்கியிருக்கிறார். இதுவரை ரஹ்மானிடம் காணாத ஒரு வித்தியாசமான இசை.ஒரு காதல் நிரம்பி வழியும் ஒரு படத்திற்கு இசை எவ்வாறு இருக்க வேண்டும் என ரஹ்மானும் உணர்ந்து அனுபவித்து இசையமைத்திருக்கிறார்.

கௌதம் என்ற படைப்பாளி ஒவ்வொரு காட்சியையும் மிக அருமையாகவே எடுத்திருக்கிறார் என்பதை விட சிற்பத்தைப் போல செதுக்கியிருக்கிறார். அவருக்கு துணை புரிந்தவர்கள் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும். பின்னிப் பிணைந்து அருமையான ஒரு படத்தைத் தந்திருக்கிறார்கள். அனுபவித்து எடுத்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. அதுமட்டுமல்ல எம்மையும் அனுபவிக்க வைத்துவிட்டார். கேரளா அழகை அப்படியே கமெராவிற்குள் அள்ளிக் கொண்டு வந்து திரையில் எமக்கு முன்னால் கொட்டுகிறார்கள். கேரளாவிற்கு போகவேண்டும் என்ற ஆவல் நெருப்பில் எண்ணை ஊற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். கண்டதும் காதல்....! காதல் வரக் காரணம் த்ரிஷாவின் பேரழகும் நளினமும்....! சிம்பு காதலில் உருகுவதும், த்ரிஷாவை சந்தித்து கதைக்க முயற்சிக்கும் அல்லது கதைக்கும் காட்சிகள் அருமை...! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹைக்கூ கவிதைகள். ரசித்துத்தான் பார்க்க வேண்டும். வார்த்தைகளில் வெளிப்படுத்துவது என்பது கடினம். ஆனால் இவ்வளவு பெண்கள் இருக்கும் போதும் ஜெஸ்சியை ஏன் காதலித்தேன் என்று சிம்பு கேட்பதும் அந்தக் கேள்வியை அடிக்கடி ஒவ்வொருவரைக் கொண்டு கேட்கவைப்பதும் சிறப்பாக இருந்தது . காதலித்தவர்கள் எல்லோரும் மிக மிக இரசித்துத்தான் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். வாசகர்களில் அநேகம் பேர் “தபூ சங்கர்” அவர்களின் காதல் ஒழுகும் கவிதைகளை வாசித்திருப்பீர்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு அந்த உணர்வே இருந்தது.

படத்தில் ஒரு கட்டத்தில் த்ரிஷாவின் திருமணம் குழம்பிய அந்தத் தினத்தின் இரவு நேரத்தில், த்ரிஷாவின் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருவரும் (சிம்பு + த்ரிஷா) பயந்து பயந்து கதைப்பார்கள். மிக அருமையான காட்சி. வசனங்களும் காட்சி அமைப்புகளும் நேர்த்தியாக இருந்தது. அப்படியே மனதை மயிலிறகால் வருடுவது போல இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே உன்னை காதலிக்க ஆரம்பித்தேன் என்று மிக லாவகமாக அனாசயமாக சிம்புவிடம் த்ரிஷா சொல்லும் காட்சி அதி அற்புதம். நடுநிசியில் எவருக்கும் தெரியாமல் காதலி வீட்டில் நுழைந்து காதலியுடன் பேசுவது என்பதனை கௌதம் எங்கோ தன்வாழ்விலும் சந்தித்து இருக்க வேண்டும். காரணம் அப்படி இருந்தது அந்தக் காட்சி. அதே போல சிம்புவின் நண்பர் கணேஷ் அவர்களின் வீட்டில் யாரும் இல்லாத ஒரு தனிமைப் பொழுதில் விரிகிறது திரையில்....அத்தனையும் கவிதையே...!! அந்த ஒவ்வொரு காட்சியிலும் காதல் வழிகிறது. ”ஏன் இந்தக் கணம் இவ்வளவு இனிமையாக இருக்கிறது..” என்று சிம்பு கேட்க....அதற்கு த்ரிஷா....”இப்படி நாம் இருப்பது இதுதான் கடைசியோ....” என்று சொல்வார். அதன் போது த்ரிஷாவை சிம்பு பார்க்கும் பார்வையும்....த்ரிஷாவின் பதட்டமில்லாத பதிலும்....அருமை...!!! இப்படி இப்படி சொல்ல்லிக் கொண்டே போகலாம்...!!

திடீர் திருப்பமாக அமெரிக்காவில் த்ரிஷாவைச் சந்திக்கும் சிம்புவிடம்...”எப்படி இருப்பாள் உன்னவள்...” என்பது போன்ற த்ரிஷாவின் கேள்விக்கு சிம்புவின் பதில்களும் நடிப்பும் இவ்வளவு நாளும் எங்கைய்யா இருந்தாய் என்று கேட்க தோன்றுகிறது. தன்னால் இதுவரை தான் அழிந்தார் என்பதே சிம்பு விடயத்தில் உண்மை....! எவருமே எதிர்பாராதவிதமாக அமைந்திருந்தது முடிவு. இந்த இடத்தில் கௌதம் மேனனுக்கு எழுந்து நின்று கைதட்டினால் என்ன...! அருமை..!! நிச்சயமாக எல்லோரையும் பாதித்தே இருக்கும். தெலுங்கில் வேறு ஒரு முடிவும் தமிழில் வேறு ஒரு முடிவுமாக கௌதம் அவர்களின் ஆளுமையும் அவரின் இரசிப்புத்தன்மையும் பட்டவர்த்தனமாக இதிலே தெரிந்தது. த்ரிஷாவை ஓவியமாக காட்டிய கௌதம் மேனன் சிம்புவில் கூடிய கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ’மின்னலே’ மாதவன்....’வாரணம் ஆயிரம்’ சூரியா இவர்களிடம் இருந்த அந்த ஒளிமுகம் சிம்புவிடம் இல்லை என்பது எண்ணம்....!!!

இது விமர்சனம் இல்லை...என்னளவில் இந்தப் படத்திற்கான பதிவு. ஆழமாக மனதில் ஊடுருவி விட்டது. இது புலம்பலாக இருந்தாலும் அதுவும் பாதிப்பின் ஒரு வெளிப்பாடே...! இன்னும் காதுகளில் ஒலிக்கும் இசை. வசன அமைப்பு, காட்சி அமைப்பு ஒளிப்பதிவு, இசையமைப்பு எல்லாமே அவரவர்களின் கைவண்ணங்களே...! விண்ணில் இருந்தாலும் என்னவளே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மண்ணுக்கு என்று கேட்க தோன்றுகிறது....!!! (எவரும் இல்லை என்பது வேதனை...!!)