புதன், 7 அக்டோபர், 2009

மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

“கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா...” இந்தப் பாடலை உச்சரிக்காத நா இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பெற்ற ஒரு அருமையான பாடல். ஆனந்த பைரவி இராகத்தில் ஆரம்பமாகி அமைந்த ஒரு ராகமாலிகா. இந்தப் பாடலை பாடியவர் தென்னிந்திய பிரபல பின்னனிப் பாடகர் ரி.எம்.சௌந்தரராஜன். இதை எழுதியவர் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர்.
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்....பாடல்
இன்றுதான் அவர் எம்மை பிரிந்த நாள் ( 08.10.2003 ) இசையுலகும் நடன உலகும் அதிர்ந்து நின்ற நாள். ஈழதேசம் மிகப்பெரிய ஒரு மஹாவித்துவானை இழந்த நாள். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் மூழ்கி அதிலிருந்து முத்துக்களை மட்டுமே எமக்கு தந்த இயலிசைவாரிதி மறைந்தநாள். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடல்கள் இயற்றுவதாகட்டும் எல்லாத்துறையிலும் தனது பன்முக ஆளுமையை வெளிப்படுத்திய சாகித்ய சாகரம் வீரமணி ஐயாவின் நினைவுதினப் பதிவு இது.


சைவமும் தமிழும் தழைத்தோங்கும் இணுவையம்பதியில் 1931ம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ம் திகதி இந்த பூவுலகில் கால் பதித்தார். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். படிக்கும் காலத்திலேயே தன்னுடைய கலைத்திறமையை வெளிக்காட்டி மிகவும் ஆணித்தரமாக தன்னுடைய காலை கலை உலகில் பதித்தார். 1947 ம் ஆண்டு 16 வது வயதில் பாடசாலையில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் “மனோகரா” நாடகத்தில் பெண்வேடமிட்டு நடனமாடி பல முகபாவங்களை காட்டி நடித்தார். அரங்கத்தில் இருந்தோர் எல்லாம் மெய்சிலிர்த்து பார்த்துக் கொண்டு இருந்தனர். பார்த்துக் கொண்டு இருந்த கல்லூரி அதிபர் உடனேயே அலுவலகத்திற்கு சென்று “சகல துறைகளிலும் மிளிர்ந்த மாணவன்” என்ற ஒரு வெள்ளிப்பதக்கத்தை அந்த மேடையிலேயே வீரமணி அய்யாவிற்கு சூட்டி மகிழ்ந்தார். வளர்ந்து பட்டப்படிப்புக்காக சென்னை வந்தார். விஞ்ஞான மானி பட்டம் படிக்கவே வந்தார். ஆனால் புலன்கள் எல்லாம் இசையிலும் நடனத்திலும் சென்றது. உலகமே போற்றும் இசை மேதை பாபநாசம் சிவன் மற்றும் எம்.டி. இராமநாதன் ஆகியோரை தனது இசைக்கான குருவாகவும், கலாஷேத்திரத்தில் புகழ்பூத்த நாட்டிய மேதை ஸ்ரீமதி ருக்மிணி தேவி அருண்டேல், சாரதா ஆகியோரை நாட்டியத்துக்கான குருவாகவும் வரித்து கொண்டு இசையிலும், நடனத்திலும் தனது திறனை செவ்வனே வெளிப்படுத்தினார்.
சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயா

இவ்வண்ணம் பயின்று வரும் காலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வர ஆலய கற்பாகம்பாள் மீது கொண்ட பக்தி காரணமாக உருவானதுதான் ”கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..” என்ற சாகித்தியம். மிகப்பிரபல்யமான ஒரு பாடல். வெளிவந்த ஆண்டு 1956. ரி.எம்.எஸ் அவர்களின் குரல் கேட்பவரை நெகிழச்செய்யும். இந்தப் பாடலிற்கு வயலின் வாசித்தவர் உலகம் போற்றும் குன்னக்குடி வைத்தியநாதன். இவ்வளவு காலமாகியும் பாடல் இன்றுவரை இதயத்துள் கூடாரமிட்டு ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு முறை வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள் வீரமணி ஐயா அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். நீங்கள் இயற்றிய பாடல்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ரி.எம்.எஸ் பாடிய எத்தனையோ பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன், ஏன் நீங்கள் இயற்றிய இந்தப்பாடல் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று. வீரமணி ஐயா அவர்கள் ஒரு கணம் ஆடிப்போனார். பின்னர் சுதாரித்துக் கொண்டு சொன்னாராம் இவ்வாறு... “நான் அந்தப் பாடலை இயற்றி என்னுடைய குருநாதர் பாபநாசம் சிவனிடம் காட்டினேன். அவரும் ராகத்திற்கு ஏற்றாற்போல் பாடிப் பார்த்துவிட்டு... ‘சிற்பம் நிறைந்த சிங்கார கோயில் கொண்ட...’ என்ற வரியில் ஏதோ ஒன்று தவறவிடப்பட்டது போன்ற உணர்வு வருகிறது. நான் ஏதாவது மாற்றம் செய்யலாமா? என்று கேட்டார். நானும் அதற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க பாபநாசம் சிவன் அவர்கள் “சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோவில் கொண்ட..” என்று ‘உயர்’ என்ற சொல்லை சேர்த்தார். சேர்த்த அந்த உயர் என்ற சொல்லால் பாடலை யாத்த எனக்கு உயர்வைத் தந்தது. பாடலைப் பாடிய ரி.எம்.எஸ் ற்கு உயர்வைத்தந்தது. பாடலுக்கு வயலின் வாசித்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு உயர்வைத்தந்தது”. குருவின் அந்த ஆசீர்வாதமே அவரை இந்தப் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது என்றால் மிகையல்ல. இதனை இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றும் போது சொல்லி மகிழ்ந்தார். நேரடியாகவே என் காது பட கேட்டேன். அநேகமாக அதுதான் அவர் கலந்து கொண்ட இறுதி விழாவாக இருந்திருக்க வேண்டும்.
டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் தம் கைப்பட வீரமணி ஐயர் பற்றி எழுதியது

வீரமணி ஐயா அவர்கள் பலதுறை கலைஞர். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடலாக்கம் ஆகட்டும் இவர் இறுதிக்காலம் வரை அதில் புதுமைகளை செய்து கொண்டு இருந்தார். நடனத்தில் புதிய புதிய முத்திரைகளை உருவாக்குவதிலும், இசையில் புதிய ராகங்கள், சாகித்தியங்கள் இயற்றுவதிலும், இராகங்களுக்கு பாடல்கள் இயற்றுவதிலும், கோவில்களுக்கு பாடல்கள் என அவர் எப்பொழுதும் தான் சார்ந்த கலைக்கு தொண்டாற்றி கொண்டே இருந்திருக்கிறார். இராகங்களுக்கு பாடல் இயற்றுவதை தமிழில் “வாக்கேயகாரர்” என்று சொல்லுவார்களாம். யாழ்ப்பாணம் தந்த மிகப்பெரும் வாக்கேயகாரரை நாம் இழந்து இற்றைக்கு 6 வருடங்கள் ஆகிவிட்டன. கர்நாடக இசையிலே 72 மேளகர்த்தா ராகங்களுக்கான பாடல்கள் இயற்றி இசை உலகை தன்பக்கம் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்தார். காரணம் இப்படி 72 மேளகர்த்தா இராகங்களுக்கும் பாடல்கள் இயற்றியவர்கள் கோடீஸ்வர ஐயர், ராமசுவாமி தீக்‌ஷிதர், மகாவைத்தியநாதர், போன்ற சிலரே. இதனால்தான் இவர்பால் அனைவர் கண்ணும் திரும்பியது.
கர்நாடக சங்கீத மேதை டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா வீரமணி ஐயர் பற்றி அனுப்பிய வாழ்த்து

கர்நாடக சங்கீத உலகில் பாலமுரளிகிருஷ்ணா ஒரு சகாப்தம். அவர்கள் ஒருமுறை 1980 ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் வந்த போது இவரது வாக்கேயகாரத் திறனை அறிந்து வியந்து நாலு சுரத்தில் இராகம் அமைத்துப் பாடமுடியுமா என கேட்டார். அடுத்த கணமே வீரமணி ஐயா ‘ஸகமநிஸ’ என்ற ஆரோகணத்தையும் ‘ஸநிமகஸ’ அவரோகணத்தையும் கொண்ட ‘ஜெயம்’ என்ற இராகத்தை உடனேயே ஆக்கி ஆதி தாளத்தில் “ஜெயமருள்வாய் ஜெகதீஸ்வரா / ஜெயகௌரி மணாளா - தயாளா” என்ற கீர்த்தனையை உடனே இயற்றினார். வாயடைத்து நின்ற பாலமுரளிகிருஷ்ணா பாராட்டுப்பத்திரம் வழங்கி விட்டு சென்றார்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரமணி ஐயர் பற்றி இயற்றிய வெண்பா

தான் ஒரு மேம்பட்ட கலைஞன் என்று அவருக்கு வித்துவச்செருக்கு என்றைக்குமே இருந்ததில்லை. சிறுவர்களுடன் சேர்ந்து பரராஜசேகரப்பிள்ளையார் வீதியில் ஆடி மகிழ்வார். அவர்களை கைகளால் தாளம் போட வைத்து ஆட்டுவித்து மகிழ்வார். இதைவிட பெரிய பண்பு இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் தன்மை. சக கலைஞனை மதிக்கும் தன்மை. நான் தான். தான் தான். என்ற மமதை அற்ற மாமனிதர். இதற்கு சிறந்த உதாரணமாக, இவர் தொடர்பாக நல்லூர் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களுடன் உரையாடிய சமயம் அவர் பகிர்ந்து கொண்டது. ஒருநாள் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்தில் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி மற்றும் உதயநாதன் குழுவினருடன் பாலமுருகனும் வாசித்து கொண்டிருந்தார். ‘கனகாங்கி’ இராகத்தை நாதஸ்வரத்தில் வாசித்துக் கொண்டிருந்தாராம். அந்த இராகத்துக்கான கீர்த்தனை தொடர்பான சகல நெளிவு சுளிவுகளை முன்னரே வீரமணி ஐயா அவர்களிடம் படித்திருந்தார் பாலமுருகன். அன்று அந்த கடினமான இராகத்தை வாசித்து கொண்டு இருக்க, திடீரென ஆலயத்துக்குள் குளித்து உடல் துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட வீரமணி ஐயா நுழைந்து கையில் கொண்டு வந்த ஒரு பதக்கத்தை பாலமுருகனுக்கு அணிவித்து விநாயகரில் சாத்தி இருந்த அறுகம்புல் எடுத்து கையில் கொடுத்து.. “நீ நீடுழி வாழணும் நல்லா இருக்கணும்டா கண்ணா, இன்னும் இன்னும் நிறைய வாசித்து புகழ் அடையணும்” (அவர் சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அவரோடு பழகியவர்கள்) என்று வாழ்த்திவிட்டு அந்த இடத்தை விட்டும் நீங்கிவிட்டார். அந்த நாதஸ்வர இசை அவரை ஈர்த்துவிட்டது. அடடா இப்படி வாசிக்கிறானே என்று தான் நின்ற கோலத்தையும் மறந்து ஈர வேட்டியுடன் வந்து வாழ்த்திய பண்பு எந்தக் கலைஞனுக்கும் வராது. கலைஞனை அவனது நிகழ்ச்சி முடியும் முன்னர் வாழ்த்துவது அல்லது விமர்சிப்பது என்பது அந்தக் கலைஞன ஊக்கபடுத்துவதோடல்லமால் மேன்மேலும் வளர உதவும். அந்த வாழ்த்திய தருணத்தை கண்டு பாலமுருகன் திகைத்து போனாராம். இன்றும் அதை நினைக்கும் போது நெகிழ்ந்தும் உணர்ச்சி வசப்பட்டும் போய்விடுகிறார்.

இவர் பெற்ற பட்டங்கள் ஏராளம். இங்கே அவற்றை தருவதற்கு போதிய இடம் இல்லை. ஆனால் அவரை யாழ்ப்பாணப் பல்கலைகழகம் சிறுமைப்படுத்தி விட்டது என்று என்னுடைய சிற்றறிவு சொல்கிறது. அவரை சிறுமைப்படுத்தி தன்னையே தாழ்த்திக் கொண்டு விட்டது. காரணம் உலகம் போற்றுகின்ற ஒரு ஒப்பற்ற கலைஞனுக்கு இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 1999 ம் ஆண்டு வெறும் கௌரவ முதுகலைமாணி(M.A) பட்டம் மட்டுமே வழங்கியிருந்தது. என்னைப் பொறுத்த வரை, எந்தவிதத்தில் அவர் குறைந்தவர் ‘கலாநிதி’ பட்டம் பெறுவதற்கு என தெரியவில்லை. இதே அடிப்படையில் கௌரவிக்கப்படாத ஒரு கலைஞன் அளவெட்டி நாதஸ்வர வித்துவான் கலாசூரி என்.கே பத்மநாதன். அவர் இறந்த பின்னர் அவருக்கு அந்த கலாநிதி பட்டத்தை வழங்கி மேலும் ஒரு முறை தான் இன்னமும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிற்கிறேன் என்று நிரூபித்தது. நான் சிந்திப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அதற்கான காரணத்தை அறியத்தந்தால் நன்றாக இருக்கும்.

2002 ம் ஆண்டளவில் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒன்றினை நடாத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த வீரமணி ஐயர் அவர்கள் மெய்மறந்து அந்த நிகழ்ச்சியினை ரசித்தார். அந்த நிகழ்ச்சிக்கு அனுசரனையாளர்களாக இருந்த இலங்கை வங்கியினர் தமது வங்கி பற்றி ஒரு பாடலை எழுதித்தருமாறு கேட்டனர். நீங்கள் எழுதித்தந்தால் தாங்கள் அதனை நித்யஸ்ரீ மூலம் பாடுவிப்போம் என்று கூற, வீரமணி ஐயரும் தமக்கே உரித்தான விதத்தில் உடனடியாக பாடலை எழுதிக்கொடுத்தார். நித்யஸ்ரீ அவர்களும் சவாலாக எடுத்து அதனை மேடையிலேயே உடனே பாடி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதுதான் வீரமணி ஐயா. சீர்காழி அவர்களுடன் சுட்டிபுரம் அம்மன் கோவிலில் நிகழ்ச்சிக்காக சென்ற போது காருக்குள்ளேயே பாடல் எழுத அதனை சீர்காழி மேடையில் பாடினார். இப்படியான நிகழ்வுகள் ஐயா அவர்களுக்கு அடிக்கடி நிகழ்ந்தது.

ஒரு கலைஞனை கௌரவிக்கும் பண்பு வளர்ந்து சென்றால் கலைகள் காக்கப்படும். அதனை பலரும் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து இப்படியான நிகழ்வுகளுக்கு ஆதரவு நல்க வேண்டும். 1971 காலப்பகுதிகளில் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழக உருவாக்கம் தொடர்பான ஒரு கூட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நடனம், இசை, சித்திரம் என்பன சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தி அதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வீரமணி ஐயா என்று யாழ்ப்பாணப் பல்கலைகழக சமஸ்கிருதத் துறை தலைவர் கலாநிதி.வி.சிவசாமி ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். இன்று அவர் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கடைசிவரை தான் சார்ந்த கலைகளை தன் தாய்மண்ணிலே பரப்புவதற்கு அவர் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருந்தார். இன்றும் அவற்றை அவருடைய துணைவியார் ஸ்ரீமதி சுசீலாதேவி தனித்து நின்று செய்து கொண்டு இருக்கிறார்.

அழகு தமிழில் புகுந்து விளையாடி அற்புதமான படைப்புக்களை தந்ததோடு மட்டுமல்லாமல் நடனத்துறையிலும் தமக்கென ஒரு தனியிடத்தை அமைத்து அந்த பாதையில் நிறைய மாணாக்கர்களை பயணிக்கவைத்து தமிழ் பேசும் நல்லுலகிற்கு அரும்பெரும் சேவையாற்றியுள்ளார். அவர் வழி வந்த பலர் இன்றும் பேரும் புகழோடும் இசையுலகில் இருக்கின்றார்கள் என்பது ஐயா அவர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய புகழே. சாகித்திய சாகரம் இன்று எம்மோடு இல்லை. அவர்களை நினைவு கூர்ந்து அவரது படைப்புக்களை நாம் பேணிப் பாதுகாத்து அதனை இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படியான ஒரு நேரத்தில் அவர்களது பாடல்களை உள்ளூர் கலைஞர்கள் தவிர்ப்பது ஏன் என்று விளங்கவில்லை. அப்படி ஒரு பாடலை பாடி மேடையை அலங்கரிப்பதில் அவர்களுக்கு என்ன இடைஞ்சல் என்றும் தெரியவில்லை. நாமே அவற்றை வளர்ப்பதற்கு முன்னிற்கவில்லை என்றால் மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும். இந்த விடயத்தை வட-இலங்கை சங்கீத சபையினருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

வீரமணி ஐயா பற்றி குறிப்பிடுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் பதிவு நீண்டு விடும் என்ற காரணம் ஒருபக்கம் இருக்கிறது. மீண்டும் ஒருதடவை ஒரு அந்தப் பெரும் கலைஞனை மனதிலே போற்றி, மண்ணிலே கலை வளர்க்க எம்மாலான காரியங்களை செய்ய வேண்டும்.

வாழ்க ஐயா நாமம்..!! வளர்க அவர் புகழ் !!!

நன்றி : திருமதி சுசீலாதேவி வீரமணி ஐயர் , வசந்தி வைத்திலிங்கம், பூலோகநாதன் கோகுலன்

27 கருத்துகள்:

தங்க முகுந்தன் சொன்னது…

கற்பகவல்லி பாடலை இயற்றியவர் வீரமணி ஐயா என்ற செய்தி இன்றுதான் எனக்குத் தெரியும்! பல தெரியாத விடயங்களைக் குறிப்பிட்டு அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! நன்றியும் வாழ்த்துக்களும்!

சீர்காழி கோவிந்த ராஜன் சுட்டிபுரம் மற்றும் புங்குடுதீவுச் சிவன் கோவிலுக்கு வருகைதந்தபோது அமரர் வீரமணி ஐயா இயற்றிய பல பாடல்களை பாடியதை நான் நேரடியாகவே கண்டு களித்து ரசித்தவன்.

இசைக்குருவாகிய அமரரின் சரித்திரத்தின் ஒரு பகுதியையாவது - (பல மாணவர்கள் எழுதப்பட முடியாதளவுக்கு) நீங்கள் அருமையாக அவரை நினைவு கொள்ள எழுதிய இக்கட்டுரை மிகவும் சிறப்பானது!

அவரது அற்புதமான சந்தங்கள் கொண்ட பாடல்களை வெளிக்கொண்டுவர வேண்டியது அவசியமே!

மலைநாடான் சொன்னது…

வீரமணி ஐயர் பற்றி அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.
வீரமணிஐயர் பற்றி இங்கும் காணலாம்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பா

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

வீரமணி ஐயாவின் கம்பீரத்தோற்றம் என்னால் மறக்க முடியாதது.

வலசு - வேலணை சொன்னது…

ஈழத்துக் கலைஞர்களை நினைவுறுத்திவரும் உங்கள் பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகின்றன. வாழ்த்துக்கள்

கிடுகுவேலி சொன்னது…

நன்றி தங்க முகுந்தன்
ஆமாம் நிச்சயமாக எல்லாப் பாடல்களையும் வெளிக்கொணர முயற்சிகள் எடுக்கிறோம். காலம் கைகூடும் போது சரிவரும் என்று எண்ணுகிறோம்.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் மலைநாடான், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் வலைப்பூவை முன்னரே பார்த்து உங்களோடு ஒருதடவை தொடர்பு கொண்டேன்.

அந்த கானொளிக்காட்சி இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் வீரமணி ஐயர் அவர்கள் பேசியது. அந்தப் பேச்சை அடியேன் நேரடியாகவே கேட்டு மகிழ்ந்தேன். இது கூட இளையதம்பி தயானந்தா அவர்கள் வீரமணி ஐயா அவர்கள் மறைவினை முன்னிட்டு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது என நினைக்கிறேன். இருந்தாலும் உங்கள் ஆவனக் காப்பை நினைத்து மகிழ்வதோடு வாழ்த்துகிறேன்.

கிடுகுவேலி சொன்னது…

நன்றி ஞானசேகரன்
நன்றி குருபரன்
நன்றி வேலணை வலசு

விரும்பி சொன்னது…

வீரமணி ஐயர் பற்றிய வரலாற்று பகிர்வு முயற்சிக்கு மிக்கநன்றி
உங்கள் இயல்பான நடையில் அழகான வரலாற்றுப்பகிர்வு
தேடலின் ஆழம்புரிகின்றது
தொடரட்டும்.
வாழ்த்துக்கள்

கானா பிரபா சொன்னது…

வீரமணி ஐயர் வாழ்ந்த சூழ்நிலையில் நானும் வாழ்ந்தேன் என்பதால் இந்தப் பதிவை படிக்கும் போது இயல்பாகவே தனிப்பிரியம் ஏற்படுகின்றது. அரிய புகைப்படங்களோடு சிறப்பாக இருக்கின்றது. மிக்க நன்றி

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் விரும்பி,

ஏதோ எம்மாலான முயற்சிகளை எடுத்து கொண்டு இருக்கிறேன். எல்லோரும் சேர்ந்தால் இன்னும் இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் செய்யலாம்.

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//....கானா பிரபா said...
வீரமணி ஐயர் வாழ்ந்த சூழ்நிலையில் நானும் வாழ்ந்தேன் என்பதால் இந்தப் பதிவை படிக்கும் போது இயல்பாகவே தனிப்பிரியம் ஏற்படுகின்றது. அரிய புகைப்படங்களோடு சிறப்பாக இருக்கின்றது. மிக்க நன்றி
..//

வணக்கம் கானா பிரபா அண்ணை, அதே மண்ணில் நீங்களும் வாழ்ந்தீர்கள். அவரோடு பழகினீர்கள் என்பதெல்லாம் பெருமைதரும் விடயங்கள். இந்த கலைகளைக் காக்கின்ற பணியில் உங்கள் வழியில் என்னாலனதை செய்து வருகிறேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...!

S. Athavan சொன்னது…

நன்றி உமது பதிவிக்கு அத்துடன் மேலும் உமது பணி தொடர என் உள்ளம் கனிந்த வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

உங்கள் வீர மணி ஐயா பற்றிய பதிவிற்கு நன்றி.
மிகவும் பெறுமதியான பதிவு.

அகிலன் சிவானந்தன்

கிடுகுவேலி சொன்னது…

நன்றி ஆதவன்

நன்றி அகிலன்.....
வீரமணி ஐயா அவர்களின் பாடல்களை அடுத்த தலைமுறைக்கு இசைமூலம் எடுத்துச் செல்ல வேண்டிய தலையாய கடமை உங்களைப் போன்றவர்களிடம் இருக்கிறது. அதனை செவ்வனே செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

S Mayurathan சொன்னது…

It’s a beautiful article. We sometimes forgot our own strengths, and look up for somebody else strength to show our greatness. It unfortunately happened during his era. I feel that we, as Ceylon Tamils, had missed a chance to exhibit our talented artist and creator Veeramani Iya to this world. Your article has given me chance to think about it. Thank you. Mayu

கிடுகுவேலி சொன்னது…

நன்றி மயூ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இவ்வாறு பல கலைஞர்கள் இன்னமும் இலைமறை காயாக இருந்து கொண்டு தம்மாலான சேவைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஏதாவது ஒரு வழியில் நாம்தான் முன்னாலே கொண்டு வரவேண்டும்.

NO சொன்னது…

அன்பான நண்பரே,

கற்பகவல்லி கீர்த்தனையை இயற்றியவர் ஒரு இலங்கை தமிழர் என்பதை நான் அறிந்திரிக்கவில்லை! நல்ல செய்திகள். அருமை.

நீங்கள் எழுதிய இந்த பதிவை திரு ராண்டார் கை (MR. Rangadorai) அவர்களிடம் அனுப்பிவைக்கவும்! அவர் யாரென்றால், அந்தகால தமிழ் சினிமா, இசை அமைப்பாளர்கள் மற்றும் personalities, அந்தகால சென்னை சமூகங்கள் போன்றவற்றைப்பற்றி அறிய செய்திகளை ஆராய்ச்சி செய்து தொகுத்து அளிப்பவர். இப்பொழுதுகூட, ஹிந்து நாளிதழில் (வெள்ளி சினிமா துணை ஏட்டில் கடைசிப்பக்கத்தில்) இவரின் கட்டுரைகள் வருகின்றது!

நீங்கள் உங்கள் பதிவை அனுப்புவீர்கள் என்றால் அவர் போடக்கூடும் (of course I am not sure, but you can always try)! ஒரு சிறந்த இசைக்கலைஞரை அதுவும் ஈழத்து இசை கலைஞரை தமிழகம் அறிய உதவும்!

Just see if its possible!

நன்றி

கிடுகுவேலி சொன்னது…

//...அன்பான நண்பரே,

கற்பகவல்லி கீர்த்தனையை இயற்றியவர் ஒரு இலங்கை தமிழர் என்பதை நான் அறிந்திரிக்கவில்லை! நல்ல செய்திகள். அருமை.

நீங்கள் எழுதிய இந்த பதிவை திரு ராண்டார் கை (MR. Rangadorai) அவர்களிடம் அனுப்பிவைக்கவும்! அவர் யாரென்றால், அந்தகால தமிழ் சினிமா, இசை அமைப்பாளர்கள் மற்றும் personalities, அந்தகால சென்னை சமூகங்கள் போன்றவற்றைப்பற்றி அறிய செய்திகளை ஆராய்ச்சி செய்து தொகுத்து அளிப்பவர். இப்பொழுதுகூட, ஹிந்து நாளிதழில் (வெள்ளி சினிமா துணை ஏட்டில் கடைசிப்பக்கத்தில்) இவரின் கட்டுரைகள் வருகின்றது!

நீங்கள் உங்கள் பதிவை அனுப்புவீர்கள் என்றால் அவர் போடக்கூடும் (of course I am not sure, but you can always try)! ஒரு சிறந்த இசைக்கலைஞரை அதுவும் ஈழத்து இசை கலைஞரை தமிழகம் அறிய உதவும்!

Just see if its possible!

நன்றி..///

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் தகவலுக்கும். ஆமாம் ஈழத்துக்கலைஞர் ஒருவரை நாம் வெளிக்கொணர்வதில் எமக்கு மகிழ்ச்சியே. ஆனால் அவருடன் எப்படி தொடர்பு கொள்வதென தெரியவில்லை...! முடிந்தால் தெரியப்படுத்துங்கள்...! kidukuveli@gmail.com

Unknown சொன்னது…

அறிந்ததும் மகிழ்ச்சி.பகிர்விற்கு நன்றி.

NO சொன்னது…

Dear Friend,

Try this blog of his.
http://www.galatta.com/community/profile.php?user=randorguy

Maybe you might be able to send your comments thro. Just try.

Thanks

பெயரில்லா சொன்னது…

He may be a great poet but sometimes i could not understand why he married second time to a young lady(from a poor family) in his 60+.......

வந்தியத்தேவன் சொன்னது…

அருமையான பதிவு. நேற்றைய சுடரொளி பத்திரிகையிலும் இதனை வெளியிட்டுருக்கிறார்கள்.

கிடுகுவேலி சொன்னது…

//... Anonymous said...

He may be a great poet but sometimes i could not understand why he married second time to a young lady(from a poor family) in his 60+.......///

வணக்கம் அனானி,

இதற்கு என்ன சொல்ல முடியும் என்னால்...அதில் தவறு இல்லை என்றே நான் கருதுகிறேன். இனியும் இது பற்றி தொடர்தல் நாகரீகம் இல்லை என எண்ணுகிறேன்..!

வணக்கம் வந்தியரே வருகைக்கும் கருத்துக்கும்..
உங்கள் தகவல் அறிந்துதான் சுடரொளியில் பிரசுரித்தமை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி..!

வாசுகி சொன்னது…

வீரமணி ஐயர் பற்றிய நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்ததில்லை.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடன விரிவுரையாளராக பணிபுரிந்தவர்.

யாழ்ப்பாணத்தில் பிரசித்தமான கோயில்களுக்கு (இணுவில் கந்தன், பரராஜ சேகரப்பிள்ளையார் )
அவர் எழுதிய பாடல்களை ரசித்து கேட்டிருக்கிறேன்.அவரது பாடல்களில் ஒவ்வொரு வரியுமே ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

இன்று எம்முடன் இல்லை எனினும் கற்பகவல்லி பாடல் மூலம் அவர் என்றும் வாழ்வார்.
ஆனால் கற்பகவல்லி பாடல் விரும்பி கேட்கும் பலருக்கும் அதை இயற்றியது இணுவில் வீரமணி அய்யர் என்பது தெரியாது.

அவரது நண்பர்களில் ஒருவராக எனது அப்பாவும் இருந்தவர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை.
அப்பாவின் அம்மா இறந்ததை அவருக்கு சொன்ன போது உடனே பேப்பர் எடுத்து ஒரு பாடல்
எழுதி தந்ததாக அப்பா சிலாகித்து சொல்வார்.

அவரைப் பற்றிய புத்தகம் ஏதாவது வெளியிட்டுள்ளார்களா? அவர் எழுதிய‌
பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கிறதா?

கிடுகுவேலி சொன்னது…

//.. வாசுகி said...

இன்று எம்முடன் இல்லை எனினும் கற்பகவல்லி பாடல் மூலம் அவர் என்றும் வாழ்வார்.
ஆனால் கற்பகவல்லி பாடல் விரும்பி கேட்கும் பலருக்கும் அதை இயற்றியது இணுவில் வீரமணி அய்யர் என்பது தெரியாது...///

நிச்சயமாக, இந்தக் கவலைதான் என்னையும் எழுத தூண்டியது. வட இலங்கை சங்கீத சபையின் பாடத்திட்டத்துக்குள் வீரமணி ஐயா பற்றி கொண்டு வரவேண்டும் என்றும் அவர் பாடல்களை கொண்டு வரவேண்டும் என்றும் எனது மனம் ஆசைப்படுகிறது. நிறைவேற்றுவார்களா?

//..அவரது நண்பர்களில் ஒருவராக எனது அப்பாவும் இருந்தவர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை.அப்பாவின் அம்மா இறந்ததை அவருக்கு சொன்ன போது உடனே பேப்பர் எடுத்து ஒரு பாடல் எழுதி தந்ததாக அப்பா சிலாகித்து சொல்வார்...//
பகிர்விற்கு நன்றி சகோதரி...!!

//அவரைப் பற்றிய புத்தகம் ஏதாவது வெளியிட்டுள்ளார்களா? அவர் எழுதிய‌
பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கிறதா?//
எனக்கு தெரிந்தவரை இல்லை..அதுதான் இந்தப் பயணம்...என்னால் முடிந்தவரை தொகுக்க முயற்சிக்கிறேன். விரைவில் வெளிவரும்..!

K Sivanesan சொன்னது…

This is to inform you for Veeramani Iyer's many books were published and all are avilable online at www.vanifinearts.net web site and also from his wife. There are music in CD released by prime student and my wife Sivasakthy Sivanesan who is broughtup like his own daughter. She is promoting his music & books from London. She is the only Jaffna teacher teaching at Indian Institue of Indian Culture ( Bharatiya Vidya Bhavan, 4A, Castlet Town Road, London W14 9HQ, Tel 02073813086. She has produced two of his dance dramas with help of SMT Dr Saraswathi , Dr Balamuralikrishna and Maha Kavi Subramaniya Bharthy's grand son Sri Rajkumar Bharathy, Chennai. First they produced "Kathirgamkuravanji " , with the help of Dr Saraswathi, next been produced by Sivasakthy Sivanesan with the help of Smt LakshmiVishwanathan called " Nandala " These will be avilable from Sivasakthy Sivanesan at her web site www.vanifinearts.net. She still in contact with his family in Jaffna. There are three CDs of his music called Highgatemurgan I & II, Sharadangali at her web site. You might listen the music samples over there. Iyer's only student did Bharathanatyam Arnagetram with his natuvangam in Jaffna Veerasingham Hall, see the pictures at her web site www.sivasathimusic.co.uk.

கருத்துரையிடுக