சனி, 20 ஜூன், 2009

அரையிறுதியும் இறுதியும்.....!

மேற்கிந்தியாவின் தோல்வி
========================
வெற்றிக்களிப்பும் சோக வடுவும்

நேற்றைய 20-20 அரையிறுதிப்போட்டியில் மேற்கிந்தியா தோற்க வேண்டும் என்று விளையாடி அதில் வெற்றி கண்டு இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் தமது நாடு திரும்புகிறார்கள். சிறீலங்கா வெல்ல வேண்டும் என்று விளையாடி அதிலே வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்கிறார்கள். அங்கே பாகிஸ்தானுடன் மோத உள்ளார்கள்.

மேற்கிந்தியரின் பொறுப்பற்ற ஆட்டம் எரிச்சலையே எவனுக்கும் தரும். கிறிஸ் கைல் அரைச்சதம் பெற்றார். அடுத்த கூடிய ஓட்டம் பெற்றவர் 'திருவாளர்' உதிரி. மிகுதி 10 பேரும் ஒற்றை இலக்கத்துடனேயே ஆட்டம் இழந்தனர். போவதும் வருவதுமாக இருந்தார்கள். மேற்கிந்தியர்களுக்கு அதிர்ஷ்டம் வேறு போட்டு வாங்கியது. முதலாவது ஓவரிலேயே எல்லாம் முடிந்தது போல ஆகிவிட்டது. அஞ்சலோ மத்தியூஸ் அதிசயம் நிகழ்த்தினார். (ஏன் நிகழ்த்தினால் என்ன? யுவ்ராஜ் சிங் மாத்திரம் 2 ஹட்ரிக் எடுக்கலாம், ரோஹித் சர்மா ஹட்ரிக் எடுக்கலாம், இவர் நிகழ்த்த முடியாதா என யாரும் கேட்க வேண்டாம்) அதிசயம் தானய்யா இது! முதல் ஓவரிலேயே மூன்று விக்கட். மூன்றும் நேரடியாக விக்கட். அதுவும் துடுப்பில் பட்டு. ஒன்று தொடை காப்பிலே பட்டது. இப்படித்தான் முதல் ஓவர் 1 w 0 w 0 w. வேணாம் விளையாட்டு என்றாகிவிட்டது. எனக்கு கிரிக்கட்டில் பிடிக்காத அவுட் இந்த துடுப்பில் பட்டு விக்கட்டில் படுவது ( 'இன்சைட் எட்ஜ்'. ). ஒரு போட்டி. ஒரு ஓவர். ஒரு மூன்று விக்கட். இப்பொழுதே இணையங்கள் தொடங்கிவிட்டன. Beware Angelo Mathews, The Fourth 'M' (நன்றி : கிரிக்கெட்வேர்ல்ட்) . முரளி, மலிங்கா, மெண்டிஸ், மத்தியூஸ். ம்ம்ம்ம்ம். பார்ப்போம்.
நாலாவது 'M'
பின்னர் வந்து ஆடியவர்களோ உங்களை வெல்லப்பண்ணுவதே எமது நோக்கம் என்பது போல விக்கட்டுக்களை தாரை வார்த்து கொடுத்தனர். சிரிப்பதா அழுவதா என்று இருந்த ஆட்டம் ஜெரோம் ரெய்லர் உடையது. மனிதர் அண்மையில் நியூசிலாந்திற்கு எதிராக சதம் அடித்தவர் நியூசிலாந்தில் வைத்து. நான் அவரை நம்பி இருந்தேன் ஒரு ஓட்டமாக பெற்று கிறிஸ் கைல் இற்கு துடுப்பாட வாய்ப்பு கொடுப்பார் என்று. அவரோ தன்னை நம்பியே மேற்கிந்தியா இருக்கு என வானத்துக்கு பட்டம் விடுகிறார். அதுவும் முரளியின் பந்துக்கு. முரளிக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து கைல் ஆடினார் என்று போட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும். துடுப்பு பிடித்து பழக்கம் இல்லாத எமக்கு தெரிந்த பொது அறிவு கூட ரெய்லரிடம் இல்லை என்பதை நினைக்க வேதனையாக இருந்தது.

நான் மட்டும் போதுமா...?
மேற்கிந்தியரிடம் பிடித்ததும் பிடிக்காததும் ஒன்றே ஒன்று. விளையாட்டை விளையாட்டாய் விளையாடுவது. கொஞ்சம் கூட அக்கறை இல்லை. அடி அடி என்று அடித்து நொருக்குவார்கள். அடுத்த போட்டியிலேயே அவர்களா இவர்கள் என்று எண்ண வைப்பார்கள்.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவர் யூனிஸ்கானின் தலைமைத்துவத்தை நான் நன்றாக ரசித்தேன். சங்கக்கார மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் அவர் சரியான பதட்டக்காரர் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார். வெற்றி பெறும் நேரம் வந்த உடன் மட்டும் ஓடி வந்து பந்து வீச்சாளரிடம் அடிக்கடி உரையாடுகிறார். கிறிஸ் கைல் சலனமற்ற சடலம் போன்ற மனிதனாக மைதானத்துக்குள்ளே. இயல்பாகவே அந்த மனிதர் ஒரு சோம்பேறி போல இருப்பவர். அவருடைய துடுப்பாட்டமும் அப்படித்தான் இருக்கிறது என் எண்ணுகிறேன். காரணம் அடிப்பதில் 70% ற்கு மேல் ஆறும் நான்கும். ஓட அவருக்கு 'பஞ்சி' என கருதுகிறேன். கைல் தலைவர் என்ற அந்த பதவிக்கான துடிப்பான மனிதர் இல்லை என்பது என் கருத்து.

டில்ஷான் ஒரு புறம் பெரும் வியப்பான மனிதராகி விட்டார். வேறு யாராவது 'அப்படி' அடித்தால் 'அந்த' அடியை 'டில்ஷான் ஷொட்' எனும் அளவிற்கு பெயர் எடுத்துவிட்டார். முன்பும் இப்படித்தான் சிம்பாப்வே யின் டக்லஸ் மரிலியர் விளையாடினார். அவரும் இந்த 'ஷொட்' மூலம் ரொம்ப பிரபலமாகி இருந்தார். நேற்றைய போட்டியில் சனத் ஜயசூர்யா தட்டுத்தடுமாற (37 பந்தில் 24) டில்ஷான் பொழந்து கட்டினார். கடைசிப்பந்தில் 6 அடித்தால் சதம். ஆனால் 2 ஓட்டம் மட்டும் எடுத்து 57 பந்தில் 96 ஓட்டங்கள். ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோன்றுதான் கிறிஸ் கைலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேற்கிந்தியரின் இரண்டு அற்புதமான பிடி தவிர களத்தடுப்பு மிக மிக மோசமாகவே இருந்தது. மேலதிக ஓட்டங்களை கொடுத்தமை, ரன்-அவுட் களை தவறவிட்டமை என்பவற்றுக்குமப்பால் துல்லியமற்ற பந்து வீச்சும் அவர்களுக்கு வினையாக அமைந்து விட்டது. நல்ல அணி. ஏனோ தோற்று விட்டார்கள். இறுதியில் கிறிஸ் கைல் இனை பேட்டி எடுக்கும் போது அழத் தொடங்கி விடுவாரோ என்று இருந்தது. தனியாக இருந்து இழுத்து வந்தார் அணியை. அவருக்கு எவரும் தோள் கொடுத்து ஆடவில்லை. இதே நிலைமைதான் டில்ஷானுக்கும். அவரும் தனியாகத்தான் கை கொடுத்தார். அதே நேரம் வெற்றியை தேடிக் கொடுத்து போட்டியின் நாயகனாகினார்.

இறுதிப்போட்டி ஒரு கண்ணோட்டம்
================================
இப்போது 'போஸ்' ற்காக நட்பு. பின்னர் போட்டிக்காக மோதல்
ஞாயிறு இறுதிப்போட்டி. பாகிஸ்தானா? இலங்கையா? இலங்கை இதுவரை தோற்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் அசத்தும் முன்னேற்றம். உமர் குல் பந்துகள் எல்லாம் மிரட்டுகின்றன. அவருக்கு ஏற்றாற் போல இங்கே மலிங்க. அங்கே பாகிஸ்தானில் அப்ரிடி, அஜ்மல். இங்கே முரளி, மெண்டிஸ். துடுப்பாட்டத்தில் பல வேறுபாடுகள். அப்ரிடியும் ஜயசூர்யாவும் அடித்தாடினால் எதிரணி நிலைமை மோசம். களத்தடுப்பு இரண்டு அணிகளும் நன்றாகவே செய்கின்றன. ஆனால் பொதுவாக பாகிஸ்தான் களத்தடுப்பில் சொதப்புவது வழமை. யூனிஸ்கானின் அனுபவமான தலைமைத்துவம் இங்கே இல்லை. ஆனால் இங்கே ஜயசூர்யா, மஹேல போன்றவர்களின் ஆலோசனை களத்திலே கிடைக்கும். பார்ப்போம் எப்படி இறுதிப்போட்டி என்று. மைதான ஆதரவு இலங்கைக்கு அதிகமாக இருக்கலாம். காரணம் இந்திய ரசிகர்கள் அதிகம் இலங்கைக்கு ஆதரவாக இருப்பார்கள். ஒன்று பாகிஸ்தான் அவர்களின் பரம வைரி. அடுத்தது இம்முறையும் இந்தியாவிற்கே கோப்பை என்ற எண்ணத்தில் அனுமதிச்சீட்டு வாங்கி வைத்திருப்பார்கள். அடுத்தது......வேணாம் விடுங்கள். போட்டியை பார்ப்போம்.

வெள்ளி, 19 ஜூன், 2009

தென்னாபிரிக்கா VS அரையிறுதி

மீண்டும் ஒரு அரையிறுதிப்போட்டி. மீண்டும் அதிலே தென்னாபிரிக்கா. மீண்டும் ஒரு பரிதாப தோல்வி. இரண்டாவது உலக 20-20 கிண்ணத்துக்கான போட்டித்தொடரில் தோல்வியே இல்லாமல் வலம் வந்து பாகிஸ்தானிடம் இன்று மண் கவ்வி பரிதாபமாக வெளியேறுகிறது.


1992 இல் வருணபகவானின் வரம் சாபம் ஆனதால் ஒரு பந்தில் 22 என்ற ஒரு நினைத்துப்பார்க்க முடியாத இலக்கால் தோல்வியுற்றது. 1999 உலகக் கோப்பையில்

லான்ஸ் குலூஸ்னர் ஏமாற்ற தென்னாபிரிக்காவின் கோப்பைக் கனவு தகர்ந்தது. 2003 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக மழை குறுக்கிட்டது.
ஆனாலும் அவர்கள் கணித்த டக்வேர்த்-லூயிஸ் கணிப்பில் ஏற்பட்ட தவறால் தொடரில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. வலுவான அணியாக இருந்தும் கோப்பையை தட்டிசெல்லக்கூடிய அணி என்று எதிர்பார்த்தாலும் அவர்களை ஏனோ ஒரு காரணி தடுத்தே வந்தது. இம்முறை அப்படி அல்ல என்று நினைக்கிறேன்.
150 என்ற இலக்கு. எட்டக்கூடிய ஓட்ட எண்ணிக்கை. ஏனோ அவர்கள் வெற்றியை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்து கொடுத்தனர். கிறீம் ஸ்மித் அணித்தலைவர் என்ற ரீதியில் சில விமரிசனங்களுக்கு ஆளாகிறார் இங்கே.
12 ஓவர்களுக்கு பிறகு உமர் குல் வந்து மிரட்டுவார் என்பதை கணிக்கத்தவறி விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அதே நேரத்தில் எனது அபிப்பிராயப்படி ஜேபி டும்னி T20 போட்டிகளுக்கான ஒரு விசேட வீரர் இல்லை என்றே சொல்வேன். இங்கே 100 என்ற ஓட்டவிகிதம் வைத்திருப்பதை பெரிய விடயமாக கருத முடியாது. அடித்தாடும் ஆற்றல் கொண்டவர்கள் வேண்டும். டும்னியை களம் இறக்கிய இடத்திற்கு அல்பி மோர்க்கல் வந்திருக்க வேண்டும். தொடர்ந்து பௌச்சரும் பின்னர் வன்டர் மேவ் களமிறங்கியிருக்க வேண்டும். இந்த 3 பேரும் டும்னியை விட அடித்தாடும் வல்லமை படைத்தவர்கள்.

ஆட்ட முடிவில் நசீர் ஹுசைன் இன் "அல்பி மோர்க்கல் துடுப்பாட்ட வரிசையில் முன்னாலே வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? " என்ற கேள்விக்கு சரியான பதில் வராமல், ஏதும் ஆட்டமிழப்பு நடந்திருந்தால் அவருக்கு ஆட வாய்ப்பு கிடைத்திருக்கும். தூரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை என்றார். உண்மையில் அல்பி மோர்க்கல் 4 அல்லது 5 ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கியிருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் நிலைமை மாறி இருக்கும்.
கிறீம் ஸ்மித், இவரது துடுப்பாட்டம் T20 போட்டிகளில் மோசமாகவே உள்ளது. ஓட்டங்கள் குறைவாக பெற்றாலும் அவர் அதிக பந்துகளை தின்றே இந்த பெறுதிகளை பெற்றுக் கொள்கிறார். இது பின்னால் வரும் வீரர்களுக்கு சுமையாக இருக்கிறது. ஸ்மித் இனுடைய மோசமான துடுப்பாட்டம் ஐபிஎல் எல் இருந்தே ஆரம்பிக்கிறது. அங்கே ராஜஸ்தான் றோயல்ஸ் இனுடைய தோல்விகளுக்கு ஸ்மித் பெரிதாக துடுப்பெடுத்தாடாமை காரணம் என்றால் மிகையல்ல. 2007 ம் ஆண்டு போட்டிகளுக்கு பின்னர் ஸ்மித் சர்வதேச போட்டிகளில் ஒரு அரைச்சதத்தை தன்னும் பெறவில்லை. இத்தனைக்கும் அவர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர். அவருக்கு நீண்ட நேரம் துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைத்திருக்கும். சாதிக்க தவறிவிட்டார். தென்னாபிரிக்கா வெற்றிகளை பெறுவதால் அவர் மீதான விமரிசனம் குறைவாகவே உள்ளது.

ஸ்மித் ஒரு சுற்று பருத்திருக்கிறார். அவரால் முன்பு போல களத்திலே லாவகமாக விளையாட முடியவில்லை என்று கருதுகிறேன். உடல் எடை அவருக்கு பெரும் சிக்கலாக இருக்கலாம் என்பது எனது கருத்து. விழுந்து களத்தடுப்பு செய்ய சிரமப்படுகிறார். விக்கட்டுக்கு இடையில் ஓட முற்பட்டு எதிர்முனை வீரர் வேண்டாம் என்கிற போது திரும்பி வர சிரமப்படுகிறார். வயது 28. இடையிலேயே இவரது கிரிக்கட் காலம் முடியுமா அல்லது தொடருமா என்று...!
பாகிஸ்தான் ஒரு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என்று எண்ணிய போது அப்ரிடியின் ஆட்டம் இழப்புடன் அவர்களது ஓட்டக் குவிப்பை தென்னாபிரிக்கா கட்டுப்படுத்தியது. பாகிஸ்தானிலும் சொயிப் மலிக் பெரிதாக சோபிக்கவில்லை. யூனிஸ்கான் இடையில் அதிரடி என எண்ணி முட்டாள்தனமாக பாவெட் அலாம் இடம் பந்தினை வீசச்சொல்லி கொடுக்க கலிஸ் அதனை அற்புதமாக தமக்கு சாதகமாக மாற்றி 18 ஓட்டங்களை பெற்றார். ஏன் இப்படி இடையில் யூனிஸ் குழம்பினாரோ தெரியாது. அதே போல 20 ஓவரை உமர் குல் இடம் கொடுத்து 19வது ஓவரை மொஹமட் அமீர் இடம் கொடுத்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். காரணம் அமீர் 17 வயதான பாலகன். இதுதான் அவருக்கு கன்னி தொடர். அனுபவமற்ற வீரர். பொறுத்த நேரம். ஆனால் அவர் இறுதி ஓவரை வீச வரும் போது 23 ஓட்டங்கள் தேவை. அது கொஞ்சம் ஆறுதலாக அவருக்கு இருந்திருக்கும். ஆனால் கிரிக்கட்டில் எதுவும் நடக்கலாம். யூனிஸ்கான் நினைத்திருப்பார் 19வது ஓவரில் உமர் குல் வீசி ஓட்டங்களை கட்டுப்படுத்தினால் 20 வது ஓவர் வீசுபவருக்கு பதட்டம் இருக்காது என்று. ஆனால் உமர் குல் இனை பொறுத்தவரை ஒரு ஓவருக்கு 5 ஓட்டங்கள் தேவை என்றாலும் அதை தடுக்கக்கூடிய அளவிற்கு வல்லமையுள்ளவராக இருந்தார். எல்லாம் பாகிஸ்தானை வெற்றி பெற செய்தது. ஆட்ட நாயகன் சந்தேகமே இல்லாமல் அப்ரிடி. இப்பொழுதெல்லாம் அவரை பந்துவீச்சுக்காகத்தான் எடுக்கிறார்கள். அவரும் தனக்கு பந்துவீச்சில் தானாம் கூட விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் நல்ல அரசியல்வாதி.
வெல்ல வேண்டிய போட்டியை தென்னாபிரிக்கா தன்னாலேயே தோல்வியை தழுவியது. மீண்டும் ஒருதடவை அரையிறுதியில் தென்னாபிரிக்கா தோற்று தனக்கான ஒரு அனுதாபத்தை சுமந்து நிற்கிறது. தென்னாபிரிக்காவிற்கும் அரையிறுதிக்குமான போட்டியில் அரையிறுதியே மீண்டும் ஒரு தடவை வென்றுள்ளது.


புதன், 17 ஜூன், 2009

தோனியும் தோல்விகளும்....!

ஒரு போட்டி என்று வந்துவிட்டால் ஒருவர் தோற்றுத்தான் ஆக வேண்டும். அதுதான் நியதி. எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்த தோனி இப்போது அண்மைக்காலமாக சரிவுகளை சந்தித்து வருகிறார். ஒரு தொடர் தோற்றதும் இதனை சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம். தோனியை எல்லோரும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினார்கள். அப்பா நீதான் எங்கள் தெய்வம். எம்மை காக்க வந்த காவல் வீரன் என்பது போல வாழ்த்தியும் புகழ்ந்தும் தள்ளினர். ஊடகங்கள் அவரின் புகழை பலூனை ஊதி ஊதி தள்ளுவது போல பெரிதாக்கினர். இன்று வசை பொழிய தொடங்கிவிட்டனர். அதிர்ஷ்டம் தோனியை கைவிட ரசிகர்களும் கைவிட தொடங்கி விட்டார்கள் போலும். இங்கிலாந்துடனான போட்டிக்கு பின்னர் எரித்த கொடும்பாவி ரசிகர்களின் எண்ணங்களை சொல்லும்.

தோனியால் இந்தியா பல வெற்றிகளை பெற்றது. அவுஸ்திரேலியாவில் நீண்ட ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டித்தொடரை கைப்பற்றி கோப்பையை கொண்டு வந்தார். ஆனால் அதற்கு பின்னர் இரண்டு இறுதிப்போட்டிகளில் சொதப்பிவிட்டார். ஆனால் சில தொடர்களில் இந்தியாவிற்கு வெற்றியை குவித்தார். இப்போது நிலைமை கொஞ்சம் தலைகீழ்.

ஐபிஎல் போட்டிகளிலும் தோனியின் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் சரிந்தே இருந்தது. பின்னர் ஒருவாறாக தேறி அரை இறுதி வரை வந்தது. ஆனால் தோனியின் துடுப்பாட்டம் மந்தமாகவே காணப்பட்டது. இப்பொழுது அவரது அதிரடிகள் பெரிதாக இல்லை. காரணம் தெரியாது(பால் கிடைப்பதில்லை போலும்).
அவர் ஒரு அதிரடி துடுப்பாட்ட வீரர். அவ்வளவே. நல்ல துடுப்பாட்ட வீரரா? யோசித்துத்தான் சொல்ல வேண்டும். அவரது அடிகளை பார்ப்பவர்களுக்கு தெரியும், சிலவேளைகளில் பாடசாலை மட்ட வீரர்கள் ஆடுவது பார்க்க சிறப்பாக இருக்கும். பலம் ஒன்று உள்ளது. அது மட்டும்தான் அவருக்கு அதிக அளவில் கை கொடுக்கிறது. 20-20 போட்டிகளில் அவரின் 100 பந்துகளுக்கான ஓட்டவிகிதமும் அண்ணளவாக 100 தான். பெரிதாக துடுப்பாட்டத்தில் சாதிக்கவில்லை என்று சொல்லலாம். சில வீரர்களின் முட்டாள்தனமான முடிவு சில போட்டிகளை மாற்றி எதிரணிக்கு வெற்றியை தாரை வார்த்து கொடுக்கும். அதன்மூலம் சிலர் புகழ் அடைந்தனர் என்பதற்கு தோனியின் முதலாவது 20-20 போட்டி கோப்பை இறுதி போட்டியை சொல்லலாம். (இப்படித்தான் 1999 ல் குலூஸ்னர் பார்த்த அடி முட்டாள்தனமான செயல் தென்னாபிரிக்காவை பாதித்தது).

இந்தியாவின் பெரிய பலமே துடுப்பாட்டம்தான். அதுவும் பெரிதாக இந்த தொடரில் சோபிக்கவில்லை. தோனியோடு சேர்ந்து அவருக்கு பின்னால் இளம் அணி இளம் அணி என்று அலைந்த தேர்வாளர்கள் இனி என்ன செய்வார்கள்.

இதற்கிடையில் விரேந்தர் ஷேவாக் உடன் முறுகல் என்ற கதையும் உள்ளது. இது எவ்வளவு உண்மை என்று தெரியாது. எல்லாம் சேர்ந்து தோனியை வாட்டி வதைக்கின்றன. களத்தில் எடுக்கும் முடிவுகளில் குழப்பம். அணித்தெரிவுகளில் குழப்பம் (இதை விட நல்ல அணி எவ்வாறு எடுப்பது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) என்றெல்லாம் விமரிசனம் பலவாறாக உள்ள நிலையில் தோனி நிலை கவலைக்கிடமே. ஆனால் அவருக்கோ அவர் தலைமைப்பதவிக்கோ இப்போதைக்கு எந்த ஆபத்தும் அண்மையில் இருக்காது.

இந்த வலைப்பூக்களில் ஒரு பதிவிலே தோனிக்கு அதிர்ஷ்டம் மட்டுமே உள்ளது என்று எழுதிய ஒருவர், பின்னர் சொன்னார் இதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். என்னை அடிக்க வருவார்கள். ஏன் வம்பு நான் ஒதுங்குகிறேன் என்றார். அவர் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

அடுத்து மேற்கிந்திய தொடர். அதுவும் அவர்கள் மண்ணில். பார்ப்போம் சாதிப்பாரா என்று. இது ஒன்றும் தோனிக்கு எதிராக எழுதிய பதிவல்ல. ஆனால் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களுக்கான பதிவு. அவ்வப்போது தோல்விகள் வரத்தான் செய்யும். தாங்கித்தான் ஆக வேண்டும். விமரிசங்கள் கடுமையாக வரும். புகழ்ந்து புகழ்ந்து எழுதிய ஊடகங்கள் தோல்வியை சந்தித்த உடன் காலில் போட்டு மிதிப்பது போல எழுதுவார்கள். கங்குலியிடம் இருந்து இதை படிக்க வேண்டும். எனவே இந்தியா நன்றாக விளையாடக்கூடிய அணி. அவர்களைப்போல அணி உலகில் இல்லை. ஏனெனில் எப்பொழுது வெல்வார்கள். எப்பொழுது கவிழ்ப்பார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது. எதிர்பாராத நேரத்தில் அடித்து நொருக்கி ஆட்டம் போடுவார்கள். ஆனால் எதிர் பார்க்கின்ற நேரத்தில் காலை வாரிவிடுவார்கள். அதுதான் இம்முறையும் ரசிகர்களுக்கு நடந்துள்ளது.

இதுதான் கிரிக்கட். அதிலும் இதுதான் இந்திய கிரிக்கட்...!