செவ்வாய், 27 அக்டோபர், 2009

இதயம் வலிக்கும் ஒரு இடப்பெயர்வு....!

எமது வாழ்வில் ஒரு பெரும் சோகத்தை தந்தது, 1995 இன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு. ஒக்ரோபர் 30, வலிகாமம் வலிகளை தாங்கிக் கொண்டு ஒரு இரவுக்குள் தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்தது. வார்த்தைகள் கொண்டு இதனை வடித்துவிட முடியாது. அனுபவித்தவன் ஒவ்வொருவனும் ஒரு பெருமூச்சோடு அதனை நினைவு கூர்ந்து கொள்வான். 'சூரியக்கதிர்’ என்ற ஒரு இராணுவ நடவடிக்கை யாழ். தீபகற்பத்தினை விழுங்க ஆரம்பித்தது. மிகச்செறிவான எறிகணைகள்....! பலமான வான் தாக்குதல்கள்...!! கவச வாகனங்களின் குண்டு உமிழ்தல்...!!! என குடாநாடு அதிர்ந்த வண்ணமே இருந்தது. இதன் உச்சக்கட்டமாக நடந்ததுதான் அந்த பாரிய இடப்பெயர்வு. இன்று இலகுவாக 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. எத்தனை மாற்றங்கள். அதனை விட இப்போது எத்தனை கொடிய வலிகள்.

எல்லா இடத்திலும் பதட்டம். எல்லோர் முகத்திலும் கலக்கம். இப்படியான பல இடப்பெயர்வுகளை முன்னரே சந்தித்திருந்தாலும் இது ஒரு வித்தியாசமாக இருந்தது. காரணம் ஒரு சொற்ப பொழுதுக்குள் எல்லோரும் அகதியாக்கப்படுகிறோம் என்ற ஆதங்கம் தெரிந்தது. ஒரு இரவுக்குள் யாழ். குடாநாட்டின் வலிகாம பிரதேச மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து தென்மராட்சிக்குள் புகுந்தனர். ஏறத்தாழ அனைத்து மக்களும் ஊரோடின் ஒத்தோடு என புறப்பட்டே விட்டனர். தேடிய சொத்துக்கள், பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்த முதுசங்கள், சொந்த வீடு, காணி, வயல், தோட்டம், கால்நடைகள் எல்லாம் கண் முன் தெரியவில்லை. அரக்கர் கூட்டத்தின் கைகளில் அகப்படக்கூடாது என்பதும், எறிகணைகளுக்குள் அகப்பட்டு அநியாயமாக சாகக் கூடாது என்பதும் உடைமைகள் பற்றி எண்ண முடியாமல் போய்விட்டது. கையில் அகப்பட்டவற்றுடன் புறப்பட வேண்டிய ஒரு சூழல். ஆண்டாண்டு காலமாக வசித்த பூமியை விட்டு கணப்பொழுதில் அகல வேண்டிய ஒரு இக்கட்டான நிலை. இருந்தும் புறப்பட்டே தீரவேண்டும் என்பதால் அனைவரும் அகன்றனர்.

தென்மராட்சிப் பிரதேசத்துக்குள் நுழைய இரண்டு பாதைகள் மட்டுமே. அதுவும் பெரிய அளவில் இல்லை. இரண்டு வாகனங்கள் சமாந்தரமாக போக முடியும். இடையில் கடல் நீரேரிகள். அந்த சாலையில் பாலங்கள் வேறு. இலட்சக்கணக்கான மக்கள் இரவோடிரவாக புறப்பட்டனர். கால்கள் போகும் பாதையில் பயணம். இருளும் சூழ்ந்து கொண்டு விட்டது. எங்கே போகிறோம் என்பது தெரியாது. என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாது. எமக்கு என்ன நிகழப்போகிறது என தெரியாது. கர்ப்பினி, நிறைமாதக் கர்ப்பினி, கைக்குழந்தை, சிறுவர், இளைஞர்கள், வயது வந்தவர்கள், முதியவர்கள்....என எல்லோரும் ஏதிலிகள் போல் நடந்தனர்.

"பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடமறியாமல் - இங்கே
சாகும் வயதினில் வேரும் நடக்குது
தங்கும் இடம் தெரியாமல்............”

என்ற வரிகளை இங்கே தவிர்க்க முடியவில்லை. செம்மணி சுடலை தாண்டியவர்களில் சில பேரிற்கு நாவற்குழி சவக்குழியானது. கைதவறி விடப்பட்ட முதியவர்கள் நீரூள் மூழ்கினர். இருட்டுக்குள் எதுவும் தெரியவில்லை. பாதை எது தண்ணீர் எது என்று எண்ணுவதற்குள் சிலரது வாழ்வு முடிந்து விடுகிறது. ஒரு பத்து மீற்றர் தூரம் நடக்க ஒரு மணி நேரக் காத்திருப்பு. வாகனங்களும் அதற்குள்ளே. அழுகுரல்கள், அய்யோ, கடவுளே, என்ற ஓசைகள் தான் எங்கும். தரையில் தமிழனின் அவலம் கண்டு வானமும் கண்ணீர் சொரிந்தது... ! அது தாகமாக இருந்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. குடைகளில் தண்ணீரை ஏந்தி குழந்தைகளுக்கு பருக கொடுத்தனர். அண்ணாந்து வாய் திறந்து ஆகாயம் தந்த நீர்த்துளிகளை குடித்து பசி முடித்தனர். நினைத்துப் பார்க்க முடியாத அவலம். ஆனால் அந்த மழையும் மக்களை வதைத்ததாகவே தோன்றுகிறது. தெப்பமாக நனைந்து விறைத்து போனது பலரது உடல். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. பசிக்கு உணவில்லை. ஒரு வெட்ட வெளிக்குள் நின்றது போன்ற உணர்வு.

கைதடிச் சந்தி தாண்டியதும் ஒவ்வொருவரும் கிடைக்கின்ற இடங்களில் இருந்தனர். மரத்தடி, கோவில், பாடசாலை, சனசமூக நிலையம், உறவினர் வீடு, வீதியோரம் என கால் கடுக்க நடந்தவர்கள் களைப்பாறினர். ஆனால் பின்னர் அதுவே அவர்களின் நிரந்தர குடியிருப்பு பிரதேசங்களாக மாறிவிட்டன. மாளிகை வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மரநிழலில் இருந்தனர். கணப்பொழுதில் வாழ்வின் தத்துவம் விளங்கியது. ஒரு இரவில் எல்லாம் நடந்து முடிந்தது. அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருந்தவர்களும் வெளியேறினர். தமக்கான இடங்களை ஓரளவு தெரிவு செய்தபின்னர் மீண்டும் சென்று சில பொருட்களை எடுத்துவந்தனர். பலவீடுகளில் 50 பேர் 60 பேர் என இருந்தனர். இவை எல்லாம் 5 பேர் வாழ்ந்த வீடு. ஆனால் எல்லோரையும் தாங்கி நின்றது. குழந்தைகளும் முதியோருமே அவதிப்பட்டனர். படுக்கை விரிப்புகள், சாரம் (லுங்கி), சாக்கு, சேலை என்பன கூரைகள் ஆகின. முட்கள், குப்பை, சுகாதாரம் பற்றி எந்தவித கவலையுமின்றி இடம்பெயர்ந்த வாழ்வு தொடங்கியது. வழிமாறி உறவினர்களைத் தேடி அலைந்தவர்களின் அவஸ்தை சொல்லிமாளாது. பெற்றோரை தவறவிட்ட குழந்தைகள். முதியவர்களைத் தவறவிட்ட உறவினர்கள். இன்னார் அவரைத்தேடுகிறார். அவர்கள் இவர்களைத்தேடுகிறார்கள். அறிந்தவர்கள் தகவல் தரவும் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்தும் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். பத்திரிகைகள் கூட ஒரு வாரம் கழித்தே வெளிவந்தது. கடைகளில் சாமான்கள் இல்லை. இருந்தவை கூட பதுக்கப்பட்டது.

முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு உணவு என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்தது. உணவுப் பொருட்கள் இல்லை. இருந்தாலும் சமைப்பதற்கு பாத்திரங்களோ அல்லது வசதிகளோ இருக்கவில்லை. முதல் நாள் மாலைப் பொழுதிலேயே சனம் வெதுப்பகங்களுக்கு (பேக்கரி) முன்னால் காத்திருக்க தொடங்கிவிடும், அடுத்தநாள் காலை விற்க இருக்கும் பாண் வாங்குவதற்கு. அதுவும் ஒருவருக்கு ஒரு இறாத்தல் (450கிராம்) அல்லது அரை இறாத்தல். சில பொதுமக்கள், தன்னார்வ ஊர் அமைப்புகள், ஆலயங்கள் தாமாக முன்வந்து சமைத்த உணவுகளை பொதிகளாக்கி வழங்கினர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயம் சுதாரிப்பதற்கு நீண்ட காலம் எடுத்தது. அதன் பின்னரே ஓரளவு நிலைமைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் 1996 ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்துக்குள் காலடி எடுத்து வைத்தோம். ஆனால் அதற்குள் நிறைய பட்டு விட்டோம். படித்து விட்டோம். முகத்தில் அறைந்தது போல் சில யதார்த்தங்களை ஏற்றுக் கொண்டோம். காலம் நிறையவே கற்றுத்தந்தது. சில மனிதர்களை அடையாளம் காட்டியது. சில மனித வேடம் தாங்கிய ஜீவன்களை அடையாளம் காட்டியது. செம்மணி கடக்கும் போது அதிலே இடப்பெயர்வின் போது இறந்தவர்களின் கனமான நினைவு வந்தது. ஆனால் அதே செம்மணிக்குள் யாழ்ப்பாணம் திரும்பிய பின் நடந்த அந்த படுகொலைகளும் புதைகுழிகளும் என்றென்றும் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிக்கொண்டே இருக்கும்.

இன்றளவும் நாம் சந்தித்த இடப்பெயர்வுகள், அவலங்கள் என நிறைய இருந்தாலும் இந்த வலிகாமத்தின் வெளியேறல் ஒரு சரித்திர புள்ளியே. ஒரு இரவுக்குள் சுமார் 4.5 லட்சம் மக்கள் வெளியேறியது என்பது அராஜகப் பிடிக்கு எதிரான ஒரு கிளர்ச்சியே. அன்று 1995 ஒக்ரோபர் 30 ந்திகதி வெளியேறிய எத்தனையோ மக்கள் இன்னமும் சொந்த ஊர் போகவில்லை. தாய் மண்ணில் சாகாமல் வாழ்வை முடித்தவர்கள் பலர். காலங்கள் மாறும். ஆனால் அது தந்த வடுக்கள் மாறாது.

திங்கள், 19 அக்டோபர், 2009

வாழ்க ”தமில்” - தீபா”வலி”

மூன்று நாட்களிற்கு முன்னர் முகப்புத்தகத்தில் ஒரு நண்பர் இரண்டு நிழற்படங்களை தன்னுடைய முதல் பக்கத்திலே போட்டிருந்தார். பார்த்ததும் ஒரு புறம் சிரிப்பு மறுபுறம் வேதனை. ஏன் என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள் புரியும்.
இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்பான “வெண் தாமரை இயக்கம்” என்ற அமைப்பே இந்தப் பிரசுரத்தினை வெளியிட்டிருக்க வேண்டும். அமைப்பினைப் பொறுத்தவரை அது ஒரு தேசிய அமைப்பு. இலங்கையிலே இருக்கின்ற அனைத்து தேசிய மக்களையும் இணைத்துத்தான் (பெயரளவில்)அது உருவாக்கப்பட்டது. அவர்களுடைய அசட்டைத்தனம் இந்தப் பிரசுரத்திலே அப்பட்டமாக தெரிகிறது. இதன் உள்நோக்கம் (உள்குத்து) என்ன..? என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் தமிழ் மொழியில் பிழையாக, பிரசுரம் ஒன்றை வெளியிட்டால் அதிலே பிழை இருந்தால் எவரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம்தான் மேலோங்கி நின்றிருக்க வேண்டும். ஒரு தேசிய அமைப்பிலே தமிழ் தெரிந்த ஒருவர் இல்லாது இருக்க வேண்டும். அப்படி என்றால் அது ஒரு தேசிய அமைப்பு அல்ல. தமிழர் ஒருவர் இருந்திருந்தால் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான பிரசுரங்கள் வெளியிடும் நேரத்தில் தன்னும் அவர்கள் அந்த தமிழ் அன்பரை நாடியிருப்பார்கள். ஆகவே எதுவாயினும் வேண்டும் என்றே செய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இப்படியான தமிழ் கொலை வெறும் அனாசயமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஏன் தமிழர் கொலையே அவ்வாறு நடக்கும் போது தமிழ் கொலை என்பது பற்றி கதைப்பது அர்த்தமில்லைத்தானே.
ஆனால் இப்படியான சம்பவங்கள் நிறைய இன்னமும் நடந்து கொண்டே இருக்கின்றன. இதனை கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் பார்த்தும் மௌனிகளாக இருக்கிறார்கள் என்று எண்ணும் போது வருத்தமே அதிகமாகிறது. இந்து சமுத்திரத்தின் முத்து என்ற அந்த அழகிய தீவின் அழிவுகளுக்கு காரணங்களில் முக்கியமானது மொழி மீதான வல்லாதிக்கமே.
சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா? திருந்தாவிட்டால்....இந்த பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

******************

தீபாவளி பற்றி அனைவரும் பதிந்தாகிவிட்டது. அடுத்தவர்களுக்கு தீபாவளி ஈழத்தமிழனுக்கோ அது தீபா’வலி’ என்று சொல்லி வலிக்களை தந்த வடுக்களை மீண்டும் ஒருதடவை வருடியாகி விட்டது. ஆனால் தீபாவளி தந்த வடுக்களில் முக்கியமானது. 1987 ம் ஆண்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மீது இந்திய அமைதி காக்கும் படையினரால் (?) நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான ஒரு படுகொலை. அங்கே வைத்தியர்கள், தாதியர்கள், அப்பாவி பொது மக்கள் என பலதரப்பட்டவர்களும் குண்டடி பட்டு கீழே வீழ்கிறார்கள். உயிரையும் விட்டுவிடுகிறார்கள். காலநதி உருண்டோடி கரைசேர்ந்தாலும் ஆறாமல் மனதில் இருக்கக்கூடிய வடுக்கள் இவை. ஆனால் இந்த இந்த வடுக்கள் என்றும் மாறதவை....அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் நினைக்காமல் இருக்கவும் முடியாது. இது தொடர்பாக வலைப்பூவில் உலாவிய போது இந்த இணைப்பு கிடைத்தது. உங்களுடனும் பகிர்ந்து கொகிறேன். அவலங்கள்

புதன், 7 அக்டோபர், 2009

மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

“கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா...” இந்தப் பாடலை உச்சரிக்காத நா இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பெற்ற ஒரு அருமையான பாடல். ஆனந்த பைரவி இராகத்தில் ஆரம்பமாகி அமைந்த ஒரு ராகமாலிகா. இந்தப் பாடலை பாடியவர் தென்னிந்திய பிரபல பின்னனிப் பாடகர் ரி.எம்.சௌந்தரராஜன். இதை எழுதியவர் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர்.
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்....பாடல்
இன்றுதான் அவர் எம்மை பிரிந்த நாள் ( 08.10.2003 ) இசையுலகும் நடன உலகும் அதிர்ந்து நின்ற நாள். ஈழதேசம் மிகப்பெரிய ஒரு மஹாவித்துவானை இழந்த நாள். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் மூழ்கி அதிலிருந்து முத்துக்களை மட்டுமே எமக்கு தந்த இயலிசைவாரிதி மறைந்தநாள். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடல்கள் இயற்றுவதாகட்டும் எல்லாத்துறையிலும் தனது பன்முக ஆளுமையை வெளிப்படுத்திய சாகித்ய சாகரம் வீரமணி ஐயாவின் நினைவுதினப் பதிவு இது.


சைவமும் தமிழும் தழைத்தோங்கும் இணுவையம்பதியில் 1931ம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ம் திகதி இந்த பூவுலகில் கால் பதித்தார். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். படிக்கும் காலத்திலேயே தன்னுடைய கலைத்திறமையை வெளிக்காட்டி மிகவும் ஆணித்தரமாக தன்னுடைய காலை கலை உலகில் பதித்தார். 1947 ம் ஆண்டு 16 வது வயதில் பாடசாலையில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் “மனோகரா” நாடகத்தில் பெண்வேடமிட்டு நடனமாடி பல முகபாவங்களை காட்டி நடித்தார். அரங்கத்தில் இருந்தோர் எல்லாம் மெய்சிலிர்த்து பார்த்துக் கொண்டு இருந்தனர். பார்த்துக் கொண்டு இருந்த கல்லூரி அதிபர் உடனேயே அலுவலகத்திற்கு சென்று “சகல துறைகளிலும் மிளிர்ந்த மாணவன்” என்ற ஒரு வெள்ளிப்பதக்கத்தை அந்த மேடையிலேயே வீரமணி அய்யாவிற்கு சூட்டி மகிழ்ந்தார். வளர்ந்து பட்டப்படிப்புக்காக சென்னை வந்தார். விஞ்ஞான மானி பட்டம் படிக்கவே வந்தார். ஆனால் புலன்கள் எல்லாம் இசையிலும் நடனத்திலும் சென்றது. உலகமே போற்றும் இசை மேதை பாபநாசம் சிவன் மற்றும் எம்.டி. இராமநாதன் ஆகியோரை தனது இசைக்கான குருவாகவும், கலாஷேத்திரத்தில் புகழ்பூத்த நாட்டிய மேதை ஸ்ரீமதி ருக்மிணி தேவி அருண்டேல், சாரதா ஆகியோரை நாட்டியத்துக்கான குருவாகவும் வரித்து கொண்டு இசையிலும், நடனத்திலும் தனது திறனை செவ்வனே வெளிப்படுத்தினார்.
சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயா

இவ்வண்ணம் பயின்று வரும் காலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வர ஆலய கற்பாகம்பாள் மீது கொண்ட பக்தி காரணமாக உருவானதுதான் ”கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..” என்ற சாகித்தியம். மிகப்பிரபல்யமான ஒரு பாடல். வெளிவந்த ஆண்டு 1956. ரி.எம்.எஸ் அவர்களின் குரல் கேட்பவரை நெகிழச்செய்யும். இந்தப் பாடலிற்கு வயலின் வாசித்தவர் உலகம் போற்றும் குன்னக்குடி வைத்தியநாதன். இவ்வளவு காலமாகியும் பாடல் இன்றுவரை இதயத்துள் கூடாரமிட்டு ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு முறை வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள் வீரமணி ஐயா அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். நீங்கள் இயற்றிய பாடல்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ரி.எம்.எஸ் பாடிய எத்தனையோ பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன், ஏன் நீங்கள் இயற்றிய இந்தப்பாடல் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று. வீரமணி ஐயா அவர்கள் ஒரு கணம் ஆடிப்போனார். பின்னர் சுதாரித்துக் கொண்டு சொன்னாராம் இவ்வாறு... “நான் அந்தப் பாடலை இயற்றி என்னுடைய குருநாதர் பாபநாசம் சிவனிடம் காட்டினேன். அவரும் ராகத்திற்கு ஏற்றாற்போல் பாடிப் பார்த்துவிட்டு... ‘சிற்பம் நிறைந்த சிங்கார கோயில் கொண்ட...’ என்ற வரியில் ஏதோ ஒன்று தவறவிடப்பட்டது போன்ற உணர்வு வருகிறது. நான் ஏதாவது மாற்றம் செய்யலாமா? என்று கேட்டார். நானும் அதற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க பாபநாசம் சிவன் அவர்கள் “சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோவில் கொண்ட..” என்று ‘உயர்’ என்ற சொல்லை சேர்த்தார். சேர்த்த அந்த உயர் என்ற சொல்லால் பாடலை யாத்த எனக்கு உயர்வைத் தந்தது. பாடலைப் பாடிய ரி.எம்.எஸ் ற்கு உயர்வைத்தந்தது. பாடலுக்கு வயலின் வாசித்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு உயர்வைத்தந்தது”. குருவின் அந்த ஆசீர்வாதமே அவரை இந்தப் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது என்றால் மிகையல்ல. இதனை இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றும் போது சொல்லி மகிழ்ந்தார். நேரடியாகவே என் காது பட கேட்டேன். அநேகமாக அதுதான் அவர் கலந்து கொண்ட இறுதி விழாவாக இருந்திருக்க வேண்டும்.
டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் தம் கைப்பட வீரமணி ஐயர் பற்றி எழுதியது

வீரமணி ஐயா அவர்கள் பலதுறை கலைஞர். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடலாக்கம் ஆகட்டும் இவர் இறுதிக்காலம் வரை அதில் புதுமைகளை செய்து கொண்டு இருந்தார். நடனத்தில் புதிய புதிய முத்திரைகளை உருவாக்குவதிலும், இசையில் புதிய ராகங்கள், சாகித்தியங்கள் இயற்றுவதிலும், இராகங்களுக்கு பாடல்கள் இயற்றுவதிலும், கோவில்களுக்கு பாடல்கள் என அவர் எப்பொழுதும் தான் சார்ந்த கலைக்கு தொண்டாற்றி கொண்டே இருந்திருக்கிறார். இராகங்களுக்கு பாடல் இயற்றுவதை தமிழில் “வாக்கேயகாரர்” என்று சொல்லுவார்களாம். யாழ்ப்பாணம் தந்த மிகப்பெரும் வாக்கேயகாரரை நாம் இழந்து இற்றைக்கு 6 வருடங்கள் ஆகிவிட்டன. கர்நாடக இசையிலே 72 மேளகர்த்தா ராகங்களுக்கான பாடல்கள் இயற்றி இசை உலகை தன்பக்கம் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்தார். காரணம் இப்படி 72 மேளகர்த்தா இராகங்களுக்கும் பாடல்கள் இயற்றியவர்கள் கோடீஸ்வர ஐயர், ராமசுவாமி தீக்‌ஷிதர், மகாவைத்தியநாதர், போன்ற சிலரே. இதனால்தான் இவர்பால் அனைவர் கண்ணும் திரும்பியது.
கர்நாடக சங்கீத மேதை டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா வீரமணி ஐயர் பற்றி அனுப்பிய வாழ்த்து

கர்நாடக சங்கீத உலகில் பாலமுரளிகிருஷ்ணா ஒரு சகாப்தம். அவர்கள் ஒருமுறை 1980 ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் வந்த போது இவரது வாக்கேயகாரத் திறனை அறிந்து வியந்து நாலு சுரத்தில் இராகம் அமைத்துப் பாடமுடியுமா என கேட்டார். அடுத்த கணமே வீரமணி ஐயா ‘ஸகமநிஸ’ என்ற ஆரோகணத்தையும் ‘ஸநிமகஸ’ அவரோகணத்தையும் கொண்ட ‘ஜெயம்’ என்ற இராகத்தை உடனேயே ஆக்கி ஆதி தாளத்தில் “ஜெயமருள்வாய் ஜெகதீஸ்வரா / ஜெயகௌரி மணாளா - தயாளா” என்ற கீர்த்தனையை உடனே இயற்றினார். வாயடைத்து நின்ற பாலமுரளிகிருஷ்ணா பாராட்டுப்பத்திரம் வழங்கி விட்டு சென்றார்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரமணி ஐயர் பற்றி இயற்றிய வெண்பா

தான் ஒரு மேம்பட்ட கலைஞன் என்று அவருக்கு வித்துவச்செருக்கு என்றைக்குமே இருந்ததில்லை. சிறுவர்களுடன் சேர்ந்து பரராஜசேகரப்பிள்ளையார் வீதியில் ஆடி மகிழ்வார். அவர்களை கைகளால் தாளம் போட வைத்து ஆட்டுவித்து மகிழ்வார். இதைவிட பெரிய பண்பு இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் தன்மை. சக கலைஞனை மதிக்கும் தன்மை. நான் தான். தான் தான். என்ற மமதை அற்ற மாமனிதர். இதற்கு சிறந்த உதாரணமாக, இவர் தொடர்பாக நல்லூர் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களுடன் உரையாடிய சமயம் அவர் பகிர்ந்து கொண்டது. ஒருநாள் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்தில் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி மற்றும் உதயநாதன் குழுவினருடன் பாலமுருகனும் வாசித்து கொண்டிருந்தார். ‘கனகாங்கி’ இராகத்தை நாதஸ்வரத்தில் வாசித்துக் கொண்டிருந்தாராம். அந்த இராகத்துக்கான கீர்த்தனை தொடர்பான சகல நெளிவு சுளிவுகளை முன்னரே வீரமணி ஐயா அவர்களிடம் படித்திருந்தார் பாலமுருகன். அன்று அந்த கடினமான இராகத்தை வாசித்து கொண்டு இருக்க, திடீரென ஆலயத்துக்குள் குளித்து உடல் துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட வீரமணி ஐயா நுழைந்து கையில் கொண்டு வந்த ஒரு பதக்கத்தை பாலமுருகனுக்கு அணிவித்து விநாயகரில் சாத்தி இருந்த அறுகம்புல் எடுத்து கையில் கொடுத்து.. “நீ நீடுழி வாழணும் நல்லா இருக்கணும்டா கண்ணா, இன்னும் இன்னும் நிறைய வாசித்து புகழ் அடையணும்” (அவர் சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அவரோடு பழகியவர்கள்) என்று வாழ்த்திவிட்டு அந்த இடத்தை விட்டும் நீங்கிவிட்டார். அந்த நாதஸ்வர இசை அவரை ஈர்த்துவிட்டது. அடடா இப்படி வாசிக்கிறானே என்று தான் நின்ற கோலத்தையும் மறந்து ஈர வேட்டியுடன் வந்து வாழ்த்திய பண்பு எந்தக் கலைஞனுக்கும் வராது. கலைஞனை அவனது நிகழ்ச்சி முடியும் முன்னர் வாழ்த்துவது அல்லது விமர்சிப்பது என்பது அந்தக் கலைஞன ஊக்கபடுத்துவதோடல்லமால் மேன்மேலும் வளர உதவும். அந்த வாழ்த்திய தருணத்தை கண்டு பாலமுருகன் திகைத்து போனாராம். இன்றும் அதை நினைக்கும் போது நெகிழ்ந்தும் உணர்ச்சி வசப்பட்டும் போய்விடுகிறார்.

இவர் பெற்ற பட்டங்கள் ஏராளம். இங்கே அவற்றை தருவதற்கு போதிய இடம் இல்லை. ஆனால் அவரை யாழ்ப்பாணப் பல்கலைகழகம் சிறுமைப்படுத்தி விட்டது என்று என்னுடைய சிற்றறிவு சொல்கிறது. அவரை சிறுமைப்படுத்தி தன்னையே தாழ்த்திக் கொண்டு விட்டது. காரணம் உலகம் போற்றுகின்ற ஒரு ஒப்பற்ற கலைஞனுக்கு இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 1999 ம் ஆண்டு வெறும் கௌரவ முதுகலைமாணி(M.A) பட்டம் மட்டுமே வழங்கியிருந்தது. என்னைப் பொறுத்த வரை, எந்தவிதத்தில் அவர் குறைந்தவர் ‘கலாநிதி’ பட்டம் பெறுவதற்கு என தெரியவில்லை. இதே அடிப்படையில் கௌரவிக்கப்படாத ஒரு கலைஞன் அளவெட்டி நாதஸ்வர வித்துவான் கலாசூரி என்.கே பத்மநாதன். அவர் இறந்த பின்னர் அவருக்கு அந்த கலாநிதி பட்டத்தை வழங்கி மேலும் ஒரு முறை தான் இன்னமும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிற்கிறேன் என்று நிரூபித்தது. நான் சிந்திப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அதற்கான காரணத்தை அறியத்தந்தால் நன்றாக இருக்கும்.

2002 ம் ஆண்டளவில் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒன்றினை நடாத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த வீரமணி ஐயர் அவர்கள் மெய்மறந்து அந்த நிகழ்ச்சியினை ரசித்தார். அந்த நிகழ்ச்சிக்கு அனுசரனையாளர்களாக இருந்த இலங்கை வங்கியினர் தமது வங்கி பற்றி ஒரு பாடலை எழுதித்தருமாறு கேட்டனர். நீங்கள் எழுதித்தந்தால் தாங்கள் அதனை நித்யஸ்ரீ மூலம் பாடுவிப்போம் என்று கூற, வீரமணி ஐயரும் தமக்கே உரித்தான விதத்தில் உடனடியாக பாடலை எழுதிக்கொடுத்தார். நித்யஸ்ரீ அவர்களும் சவாலாக எடுத்து அதனை மேடையிலேயே உடனே பாடி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதுதான் வீரமணி ஐயா. சீர்காழி அவர்களுடன் சுட்டிபுரம் அம்மன் கோவிலில் நிகழ்ச்சிக்காக சென்ற போது காருக்குள்ளேயே பாடல் எழுத அதனை சீர்காழி மேடையில் பாடினார். இப்படியான நிகழ்வுகள் ஐயா அவர்களுக்கு அடிக்கடி நிகழ்ந்தது.

ஒரு கலைஞனை கௌரவிக்கும் பண்பு வளர்ந்து சென்றால் கலைகள் காக்கப்படும். அதனை பலரும் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து இப்படியான நிகழ்வுகளுக்கு ஆதரவு நல்க வேண்டும். 1971 காலப்பகுதிகளில் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழக உருவாக்கம் தொடர்பான ஒரு கூட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நடனம், இசை, சித்திரம் என்பன சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தி அதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வீரமணி ஐயா என்று யாழ்ப்பாணப் பல்கலைகழக சமஸ்கிருதத் துறை தலைவர் கலாநிதி.வி.சிவசாமி ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். இன்று அவர் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கடைசிவரை தான் சார்ந்த கலைகளை தன் தாய்மண்ணிலே பரப்புவதற்கு அவர் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருந்தார். இன்றும் அவற்றை அவருடைய துணைவியார் ஸ்ரீமதி சுசீலாதேவி தனித்து நின்று செய்து கொண்டு இருக்கிறார்.

அழகு தமிழில் புகுந்து விளையாடி அற்புதமான படைப்புக்களை தந்ததோடு மட்டுமல்லாமல் நடனத்துறையிலும் தமக்கென ஒரு தனியிடத்தை அமைத்து அந்த பாதையில் நிறைய மாணாக்கர்களை பயணிக்கவைத்து தமிழ் பேசும் நல்லுலகிற்கு அரும்பெரும் சேவையாற்றியுள்ளார். அவர் வழி வந்த பலர் இன்றும் பேரும் புகழோடும் இசையுலகில் இருக்கின்றார்கள் என்பது ஐயா அவர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய புகழே. சாகித்திய சாகரம் இன்று எம்மோடு இல்லை. அவர்களை நினைவு கூர்ந்து அவரது படைப்புக்களை நாம் பேணிப் பாதுகாத்து அதனை இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படியான ஒரு நேரத்தில் அவர்களது பாடல்களை உள்ளூர் கலைஞர்கள் தவிர்ப்பது ஏன் என்று விளங்கவில்லை. அப்படி ஒரு பாடலை பாடி மேடையை அலங்கரிப்பதில் அவர்களுக்கு என்ன இடைஞ்சல் என்றும் தெரியவில்லை. நாமே அவற்றை வளர்ப்பதற்கு முன்னிற்கவில்லை என்றால் மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும். இந்த விடயத்தை வட-இலங்கை சங்கீத சபையினருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

வீரமணி ஐயா பற்றி குறிப்பிடுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் பதிவு நீண்டு விடும் என்ற காரணம் ஒருபக்கம் இருக்கிறது. மீண்டும் ஒருதடவை ஒரு அந்தப் பெரும் கலைஞனை மனதிலே போற்றி, மண்ணிலே கலை வளர்க்க எம்மாலான காரியங்களை செய்ய வேண்டும்.

வாழ்க ஐயா நாமம்..!! வளர்க அவர் புகழ் !!!

நன்றி : திருமதி சுசீலாதேவி வீரமணி ஐயர் , வசந்தி வைத்திலிங்கம், பூலோகநாதன் கோகுலன்

வெள்ளி, 2 அக்டோபர், 2009

வானொலியே வரம்....!!

இது 1995 ற்கு முற்பட்ட காலத்தின் கண்ணாடிப்பதிவு. பொருளாதாரத்தடை என்ற அரக்கன் எம்மை நசுக்கிய துன்பமான காலம். மின்சாரம் என்பதை கண்ணால் காணமுடியாத கொடுமையான காலம். மெழுகுதிரி, மண்ணெண்ணை, ஜாம் போத்தல் விளக்கு, தேங்காய் எண்ணை விளக்கு என்பவைதான் எமது இருளினை விரட்டிய வேதனையான காலம். மின்சாரம் இல்லை என்பதால் தொலக்காட்சிகள் எல்லாம் வடிவாக பெட்டிகளில் அடைக்கப்பட்டு அறைகளில் பேணப்பட்ட சோகமான காலம். செய்திகளுக்காக சில அச்சு ஊடகங்கள் தவிர வேறு எதுவும் எமக்காக இல்லை என்ற வருத்தமான காலம். இந்த காலத்தில் எல்லாம் எமக்கு வானொலிதான் நண்பன். உறவினன். உற்ற சகோதரன். ஏன் எல்லாமே வானொலிதான். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு சைக்கிளாவது நிற்கும். அதே போலத்தான் அநேகமாக எல்லோர் வீட்டிலும் வானொலியும் இருந்தது.

செய்திக்காக மட்டுமல்ல எமது பொழுது போக்கு அம்சமாக, எமது மனங்களை ஓரளவு சாந்தப்படுத்த கூடிய ஒரு சாதனமாக வானொலி விளங்கியது என்றால் மிகையல்ல. பாட்டு கேட்பதுதான் பிரதானமான ஒரு பொழுது போக்கு. ஒலிப்பேழை (கசெற்) வாங்கி கேட்குமளவிற்கு வசதிகள் எல்லோரிடமும் கிடைக்கவில்லை. எனவே வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள்தான் எமக்கு கண்கண்ட தெய்வம் போல விளங்கியது. மத்திய அலைவரிசைகளில் தவழ்ந்து வரும் இசைதான் எம்மை எல்லாம் பரவசப்படுத்தும். பன்பலையில்(FM) வலம் வந்தது ஒரே ஒரு தாயக வானொலி புலிகளின் குரல் தான். இதே நேரத்தில் செய்திகளுக்காக பிலிப்பைன்ஸ் மணிலாவில் இருந்து ஒலித்த வெரித்தாஸ் வானொலி, இலண்டன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாகிய பிபிசி போன்றவைதான் எமக்கு தஞ்சம். இதைவிட நாம் பெரிதும் ரசித்தது சிங்கப்பூர் ஒலி 96.8 . இவைதவிர அகில இந்தியா வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்தோம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளை சிற்றலைவரிசைகளிலும், சர்வதேச வானொலியை மத்திய அலைவரிசை 882 அதிர்வெண்ணிலும், சிங்கப்பூர் வானொலி, பிபிசி மற்றும் வெரித்தாஸ் வானொலிகளை நாம் சிற்றலை வரிசையிலும் கேட்க கூடியதாக இருந்தது எமக்கு. இந்திய வானொலிகளின் நிகழ்ச்சிகள் எல்லாம் மத்திய அலைவரிசையில் தெளிவாக கேட்க முடியும். அந்தக் காலத்தில், இப்பொழுது புளுத்து போயிருக்கும் தனியார் வானொலிகள் எதுவும் இருக்கவில்லை. இலங்கை வானொலிதான் கொடி கட்டி பறந்தது. அவர்களுடைய செய்தியை தவிர மற்ற எல்லாவற்றையும் மக்கள் கேட்க தயாராகவே இருந்தனர்.

வானொலி என்றதும் இப்போதுள்ள டிஜிற்றல் தொழில் நுட்பத்தோடு வந்த வானொலிகள் அல்ல. சாதாரண றேடியோக்கள் தான். National Panasonic றேடியோதான் எல்லோர் வாயிலும் வரும் பெயர். சின்ன றேடியோ பெரிய றேடியோ என எல்லா வகையிலும் மக்கள் பாவித்தனர். ஆனால் அந்தக்காலத்தில் யாரிடமாவது RX செற் (இப்படித்தான் அழைப்பார்கள்) இருந்தால் அவர்கள் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கப்படுவார்கள். சரி வானொலி இருந்து மட்டும் போதுமா அதற்கு மினசார முதல் தேவை இல்லையா? தேவைதான். அப்படி என்றால் கரண்ட் இருந்ததா? இல்லை. அப்படி என்றால் பற்றறி இருந்ததா? அது கூட மிகப்பெரும் தட்டுப்பாடு. பெரிய பற்றரி ஓரளவு வந்து கொண்டு இருந்தது. ஆனால் சிறிய பற்றரிக்குத்தடை (ஏன் தெரியும்தானே). இதையெல்லாம் சவாலாக எடுத்து சமாளித்தோம். சைக்கிள் டைனமோ வில் இருந்து வரும் ஆடலோட்ட மின்னை(AC Current) நேரோட்ட மின்னாக(DC Current) மாற்ற இருவாயி என்ற சொல்லப்படுகின்ற டயோட் (Diode) பயன்படுத்தப்பட்டது. ஒரு சைக்கிளை கவிழ்த்து வைத்துவிட்டு அதன் கால்மிதியை - பெடல் - கையால் சுற்றுவோம். அல்லது இரட்டைத் தாங்கி (டபுள் ஸ்ராண்ட்) யில் சைக்கிள் நிற்கும் போது அதன் மேலே ஏறி இருந்து சுற்றுவோம். டைனமோவில் உருவாகும் மின் இரவாயி கொண்ட பொறிமுறை ஊடாக றேடியோவை வந்தடையும். பிறகென்ன றேடியோ உயிர் பெற்று கத்த ஆரம்பித்து விடும். இவைகள் தான் எமக்கு அந்தக்காலங்களில் சொர்க்கம். புலிகளின் குரல் செய்திகள் அந்தநாட்களில் எல்லோர் வீடுகளிலும் பலமாக ஒலிக்கும்.

ஒலிப்பேழைகளிலே பாட்டு கேட்பதும் நடக்கும். அதற்கும் மேற்படி செயற்பாடுதான். பாடல்கள் பதியப்பட்ட ஒலிப்பேழைகள் நண்பர்களிடத்தில் வாங்கி கேட்போம். பாடல்களை அன்று பதிந்து கொடுப்பதில் யாழ் நகரினுள் சண் றெக்கோடிங் ஸ்பொட், சுப்பஸோ, நியூ விக்ரேஸ் என பிரபலமான கடைகள் இருந்தன. கடைகளுக்கு போய் அங்கே இருக்கும் இறுவட்டுகளை பார்த்துவிட்டும், அந்தக் கடையில் இருக்கும் பாட்டுக் கொப்பியை பார்த்துவிட்டும் திரும்புவதே எங்கள் வாடிக்கை. இந்தக் கடைகளில் பாடல் ஒலிப்பதிவு செய்ய கொடுத்தால் கூடுதலாக 7 நாட்கள் எடுப்பார்கள். அவ்வளவு அவர்கள் பிஸி.
வானொலிகள் பாட்டுகளுக்கு மட்டுமன்றி சிலருடைய திறமைகளை படைப்புகளாக வெளிக்கொணர்வதிலும் அவை அளப்பரிய சேவையே செய்தனர். கவிதைகள், கதைகள், கதையும் கானமும் அல்லது இசையும் கதையும் அத்துடன் பலதரப்பட்ட பட புதிய பாடல்கள் , பழைய பாடல்கள், இடைக்காலப் பாடல்கள் என் அனைத்தையும் எமக்கு அள்ளி வழங்கின. பாடல்களுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் சுவார்ஸ்யமாக இருக்கும். "கை வலிக்குது கை வலிக்குது மாமா, கவலை வேண்டாம் கண்ணே, இதோ வந்து விட்டது போலார் ஹை பவர் லோ வோல்ட்டேஜ் கிறைண்டர் மோட்டர்" என்ற விளம்பரம் தாங்கி வரும் சர்வதேச வானொலியும், "உடம்பைக் குறை உடம்பைக் குறை என்று சொன்னால் கேட்கிறாயா நீ, நான் என்ன குறைக்க மாட்டேன்னா சொன்னேன் அது குறைய மாட்டேங்குதே" என்ற விளம்பரத்துடன் உலா வந்த சிங்கப்பூர் ஒலி96.8 உம் எமக்கு மகிழ்வைத் தந்த வானொலிகள். அந்த விளம்பரங்கள் எல்லாம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. தமிழக மக்களுக்கு இலங்கை வானொலி மீது தீராத காதல். அதனால்தான் இலங்கை வானொலியின் சர்வதேச வானொலி தமிழக மக்களுக்காக தனது சேவையை வழங்கியது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் சர்வதேச வானொலி காலை 10 மணியுடன் நிறைவுறும். ஞாயிற்களில் மட்டும் 11 மணியாகும். மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி 6 மணிக்கு நிறைவுறும். தமிழக மக்களின் வணிக விளம்பரங்களைத் தாங்கித்தான் பெரும்பாலும் வரும். சில நிறுவனங்களின் அனுசரனையுடன் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்னமும் சாகா நிகழ்ச்சிகளே. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. இதைத் தொகுத்து வழங்கிய பெருமகன் பி.எச்.அப்துல் ஹமீது. உலகறிந்த ஒரு அறிவிப்பாளர். இவர் தொகுத்து வழங்கிய இன்னொரு நிகழ்ச்சி “இசையும் கதையும்”. லீ.வீ யின் சினிமாப்பாடல், ஸ்ரீராம் சிப்ஸ் நிறுவனத்தாரின் ஒரு நிகழ்ச்சி, என பல நிகழ்ச்சிகளைச் சுமந்து வந்தது அந்தக்கால வானொலிகள்.

இந்த இடத்திலே குறிப்பாக ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதமாகிய தூத்துக்குடி வானொலி எம்மை நிறையவே பாதித்தது. காரணம் இரவு 8.45 மணியில் இருந்து 9.00 மணிவரை 3 பாடல்களை ஒலிபரப்புவார்கள். அந்த மூன்றும் முத்தான பாடல்கள். இந்த பாடலை பற்றி அடுத்த நாள் நாம் நண்பர்களை சந்திக்கும் போது "நேற்று தூத்துக்குடி கேட்டாயா? சுப்பர் பாட்டுகள் மச்சான்" என்று கேட்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி எல்லோர் மனதிலும் இடம்பெற்றதை மறுக்க முடியாது.

வானொலி நிகழ்ச்சிகளைப் படைக்கும் அறிவிப்பாளர்கள் மக்கள் மனதிலே நிறையவே இடம் பிடித்தார்கள். குறிப்பாக இந்த இடத்திலே இலங்கை வானொலி அறிவிப்பாளர் குரல் வளம், அவர்களின் மொழி ஆளுகை, கடைசிவரை அந்த நிகழ்ச்சியை சேர்க்கும் திறன் என்பவற்றில் ஆட்சி செலுத்தினர் என்றால் மிகையாகாது. 'லலிதாவின் பாட்டுக்கு பாட்டு', 'கதையும் கானமும்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பி.எச்.அப்துல் ஹமீத் எல்லோர் இதயத்திலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார். அவரை வானொலி நிகழ்ச்சிகள் கேட்டவர்கள் மறக்க மாட்டார்கள். கம்பீரமான குரல். அழகான தமிழ். பிசிறில்லாத உச்சரிப்பு. வார்த்தைகள் பாயும் விதம். அவருக்கு நிகர் அவரேதான். ஏ.ஆர்.எம்.ஜெப்ரி, ஜெயகிருஷ்ணா போன்றவர்களின் குரலும் மிக அழகானவை. இவர்களோடு பெண் அறிவிப்பாளினிகளாக 'வானொலிக்குயில்' இராஜேஸ்வரி சண்முகம், புவனோலஜனி நடராஜசிவம், றேலங்கி செல்வராஜா, சற்சொரூபவதி நாதன் (இவர் வர்த்தக துறைக்குள் தலை காட்டவில்லை என எண்ணுகிறேன்) இப்படிப்பலர். அதே போன்று ஒலி 96.8 இல் பாலசுப்ரமணியன், சோமு, பிரேமா, மீனாட்சி சபாபதி. பிபிசி யில் ஆனந்தி அக்கா. அவர்கள் தொகுத்து வழங்கிய “பாலியல் விவேக பக்குவப் பயிற்சி” இதனை நாம் வீட்டுக்காரருக்கு தெரியாமல் ஒளித்துக் கேட்டோம். எல்லோர் நெஞ்சங்களையும் பிழிந்த ஒரு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைகளில் ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்கள் வெரித்தாஸ் வானொலியில் செய்த பிரார்த்தனை.....நெக்குருக வைத்துவிடும்.

குறிப்பாக ஒலி 96.8 இன் மூலமே நாம் முதன் முதலில் தொலைபேசி மூலம் நேயர்கள் பாடல்களை விரும்பி கேட்கலாம் என்று அறிந்தோம். அதனைப் பற்றி அடுத்தநாள் பாடசாலையில் சிலாகிப்போம். எப்படி செய்வார்கள்? எப்படி பாடல்களை ஒலிபரப்புவார்கள்? இதன் போது என்ன செயன் முறை? அந்தளவிற்கு அது எம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. 1994 இல் உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு RX செற் கொண்டு வந்து சைக்கிளை வகுப்பறைக்குள்ளே வைத்து டைனமோவை சுற்றி பாட்டு கேட்டோம். அந்தக் காலத்தில்தான் ”காதலன்” வந்து இளைஞர் பட்டாளத்தை உலுப்பி எடுத்த காலம்.

இன்னும் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஆனால் பதிவு நீண்டு விடும். காலங்கள் கரைந்தோடி விடுகின்றன. ஆனால் அவை தந்த அந்த இனிமையான நினைவுகள் இன்னும் அழியாத பாதச்சுவடுகளாய் வாழ்க்கைப்பயணத்தில் இன்னும் மனங்களில் வியாபித்தே நிற்கின்றன. காலம் கனிகின்ற போது இந்த நினைவுகள் மீண்டும் வருடப்படும்.