வியாழன், 28 ஆகஸ்ட், 2008

நல்லைக் கந்தனின் தேர்த்திருவிழா......


'நல்லூரான் திருவடியை
நான் நினைத்த மாத்திரத்தில் - எல்லாம்
மறப்பேனடி கிளியே!
இரவு பகல் காணேனடி கிளியே!!'

- நற்சிந்தனை, சிவயோக சுவாமிகள்

எங்கள் நல்லூர் கந்தனுக்கு தேர். இருபத்துமூன்று நாட்களும் எப்படி போனது என்று தெரியவில்லை. நேற்றுத்தான் கொடியேறியது போல் உள்ளது. இன்றே அடியவர்கள் பரபரக்கத்தொடங்கி இருப்பார்கள். காலை தேர். விடிய எழும்ப வேணும். அழிவான்கள் இன்னும் ஊரடங்கு சட்டம் பற்றி சொல்லவில்லை. காலையே அங்கே போய்விடவேணும். வசந்தமண்டபத்தில் முன்னுக்கு இருந்து அழகன் ஆறுமுகசுவாமியை பார்க்க வேணும். அழித்தல் தொழிலுக்கு என்று அவதரித்த முகூர்த்தம். தேருக்கும், சூரசங்காரத்திற்கும் மட்டுமே வெளி வீதிவருவான். அந்த அழகனை கண்குளிர காண வேணும். கைகூப்பி தொழவேணும். கண்சொரிய வேண்ட வேணும். எத்தனை எண்ணங்கள். எத்தனை எதிர்பார்ப்புகள். இன்றே எல்லா ஆயத்தங்களை அடியவர்களும் ஆலய நிர்வாகமும் நிறைவேற்றுவர். சில வேலைகள் மாலை சப்பரத்திருவிழா முடிந்த பின்னர்தான் செய்யலாம். அவை சற்றே கிடப்பில் கிடக்கும்.

வெளியே தேர் தூசிகள் துடைக்கப்பட்டு, கழுவி சகலமும் முடிந்து இருக்கும். இனி புன்னியாவாகனம். அது சப்பரம் முடிந்த பின்னர். சப்பரம் இருப்புக்கு வரும். சுவாமிகள் உள்ளே போனதும், தருமண்ணை வருவார். தனக்கேயுரிய குரலில், "வாங்கோடாப்பா சப்பரத்தை பின்னுக்கு இழுத்துவிடுவோம்" என அழைப்பார். எல்லோரும் 'ஒரு கை' பிடிக்க சப்பரம் அசைந்து தேர்முட்டிக்கு பின்னால் நகர்த்தப்படும்.

உள்ளே இளைஞர்கள் ஆறுமுகசுவாமி வீற்றிருக்கப்போகும் வெள்ளி சிம்மாசனத்திற்கு கொம்பு(சுவாமியை துக்குவதற்கு பாவிக்கும் மரம்) கட்டி குருக்கள் ஐயாவின் கிரியைக்காக அந்த பீடத்தை சுற்றி அமர்ந்திருப்பர். குருக்களும் வந்து தன்னுடைய கிரியைகளை அந்த சிம்மாசனத்திற்கு செய்வார். முடிந்ததும் சிம்மாசனம் உள்ளே போகும். அங்கு ஆறுமுகசுவாமிக்கு அழகிய சிவப்பு நிறம் கொண்ட சாத்துப்படி நடக்கும். ஆலய தொண்டர்களும் பரபரப்பாக இயங்குவர். அடியவர்களும் ஆலயத்தை பெருக்கி சுத்தப்படுத்தி தங்களால் ஆன உதவிகளை செய்வர்.

நேர்த்திக்கு காவடி எடுப்பவர்கள் எல்லோரும் தங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருப்பர். காவடிக்கென மேளம்,நாதஸ்வரம் எல்லாம் பிடிப்பது சிரமமாக இருக்கும். அதிக கேள்வி இருக்கும். பறவைக்காவடி, தூக்குக்காவடி, செதில்காவடி, பால்க்காவடி என இன்னும் நிறைய அணிவகுக்கும் கந்தனை நோக்கி. அதிகாலை வீதியால் பிரதட்டை செய்து அல்லது பிரதட்டை காவடியுடன் சில அடியவர்கள் ஆலயம் நோக்கி விரைவர். கற்பூரச்சட்டி தூக்குபவர்கள் அதற்கான பொருட்களை தேடி முடித்திருப்பர்.

சப்பரத்திருவிழா முடிந்ததும் தேர்த்திருவிழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கும். அவையும் நிறைவுற்றால் சரி. அடியவர்கள் வீடேகுவர். நாளை தேர்த்திருவிழாவிற்கான அருச்சனைப் பொருட்களை சரிபார்ப்பர். தேர்முட்டிக்கு என இரண்டு தேங்காய்கள் எடுத்து வைப்பர். கோபுர வாசலில் உடைக்க ஒரு தேங்காய் என வகுப்பர். எல்லோரும் அதிகாலை எழும்ப வேணும் என்பதால் வேளைக்கே படுக்கை செல்வர்.

அதிகாலை 3 மணிக்கு எல்லாம் எழுந்து விடுவார்கள். குளித்து சுத்தமான ஆடை அணிந்து அடியவர்கள் சாரை சாரையாக ஆலயம் விரைவர். கால் கழுவி "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என இருகை கூப்பி அந்த தூலலிங்கத்தை வழிபடுவர். தேர்முட்டிக்கு முன்னால் தேங்காய்கள் மலைபோல குவிக்கப்பட்டிருக்கும். பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். உள்ளே சென்றால் அடியவர்கள் அலைமோதுவார்கள். நேரத்திற்கு வந்தும் இவ்வளவு சனமா என எண்ணும் அளவிற்கு உள்ளே பக்தர் கூட்டம் இருக்கும். வசந்த மண்டபத்திற்கு நேரே எல்லோரும் காத்திருப்பார்கள். போக்கு வரவிற்கென சிறிய பாதை தவிர மிகுதி இடங்களில் எள் கூட மண்ணைத்தொடமுடியாது. காத்திருப்பர் கந்தனை தொழுவதற்கு. அடி அழிப்பவர்கள் ஒருபுறம். பிரதட்டை செய்பவர்கள் மறுபுறம். வெளிவீதியும் அந்த அதிகாலை நேரத்திலேயே அமளிதுமளிப்படும்.

பள்ளியறைப்பூசை 3 திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களுடன் தொடங்கும். பின்னர் காலைப்பூசை. அது முடிந்ததும் வசந்தமண்டபத்திற்கு நேரே பின்னால் உள்ள கதவுகள் திறக்கப்படும். உள்ளே வரமுடியாதவர்கள் அழகுக்குமரனை வெளிவீதியில் நின்று வழிபடலாம். அந்த நேரத்தில் வெளிவீதியிலும் சனம்தான். பிரதட்டை செய்தவர்கள் அந்த வேப்ப மரத்தின் கீழே காத்திருப்பர். வடம் பிடிக்க வேணும். சிதறுதேங்காய் உடைக்கவேணும். இதுதான் அவர்களின் எண்ணம். சரியாக 6.30 மணிக்கு, மணி ஒலிக்க, அரோகரா ஓசை வானை பிழக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, அந்தோ.... அந்த முருகவேற்பெருமானின் வசந்தமண்டப திரைவிலகும். அப்பப்பா...அப்பப்பா...என்ன அழகு. எத்தனை அழகு. கோடிக்கண் வேண்டும் அந்தக் குமரனைக்காண. நிச்சயமாக அன்பு மேலீட்டால் ஆனந்தக்கண்ணீர் சொரியும். சொரிய வேணும். பிரபல தவில், நாதஸ்வர வித்துவான்கள் அங்கே காணமழை பொலிந்து கொண்டிருப்பர். ஆறுமுகசுவாமி என்பதால் ஆறு குருக்கள்மார் நின்று ஆறுமுகத்திற்கும் தீபாராதனை செய்து கொண்டிருப்பர். அற்புதமான அழகு. "அழகனை காண ஆயிரம் கண் வேண்டும்....." என்ற பாடல் தான் நினைவுக்கு வரும். அழித்தலை தேர்த்திருவிழா குறிப்பதால் குருக்கள்மார் எல்லோரும் சிவப்பு நிறத்திலேயே வேட்டி உடுத்திருப்பர். சாத்துப்படியும் சிவப்பாகவே இருக்கும்.

வசந்தமண்டப பூசை முடிந்ததும் கொடித்தம்ப பூசை நடைபெறும். அதற்கு பின்னர் ஆறுமுகசுவாமி தேரிற்கு எழுந்தருழுவார். அடியவர்களுக்குள் ஒரே அடிபாடு அழகனைத் தூக்குவதில். பெரியவர்கள் அதனை ஒழுங்கு படுத்துவர். தருமண்ணை தன் கையில் சிறிய ஒலிபெருக்கி வைத்திருந்து அடியவர்களை வழிவிலக்குவார். தவில்,நாதஸ்வர வித்துவான்கள் தேர் மல்லாரி பொழிவார்கள். 30 செக்கண்டுகள் கூட ஒருவர் சுவாமியை காவ அனுமதிக்கப்படமாட்டார்கள். எல்லோரும் எம்பெருமானை தோளிலே சுமக்கவேணும் என்பதே காரணம்.

இங்கே வெளிவீதியில் தேர்முட்டிக்கு முன்னால் பார்த்தால் தேங்காய்கள் மலையென இருக்கும். நிறைய இளைஞர்கள் தயாராக இருப்பார்கள் அதனை உடைப்பதற்கு. சரியாக காலை 7.00 மணி கோபுர வாசலின் ஊடாக கந்தவேற்பெருமான் வருவார். கொள்ளை அழகு. அழகு என்ற சொல்லுக்கு முருகா என்று அழவேணும் போல இருக்கும். இப்பொழுதுதான் புகைப்படங்களும், வீடீயோக்களும் கந்தனை உள்வாங்கிக் கொள்ளும். கோபுரவாசல் கடந்து முன் மண்டப வாயில் கடக்கும் போது அங்கே சில அன்பர்கள் அந்த மண்டபத்தின் கூரையில் நின்று அழகிய ரோஜா மலர் இதழ்களை சொரிவார்கள். பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். அங்கே படார்,சடார்,கடார் என சத்தம் கேட்கும். பார்த்தால் தேங்காய்கள் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கும். சில சமயங்களில் விளையாட்டாக ஒரு சில மண்டைகளும் உடைந்து இரத்தம் எட்டிப்பார்க்கும் தேர்த்திருவிழாவை. ஒரு தேங்காயை ஒரு கையில் வைத்துக்கொண்டு மறுகையில் இன்னொரு தேங்காய் எடுத்து உடைத்து வரும் இளநீரை தம் தலையில் ஊற்றி ஆனந்தம் அடைவார்கள். தெரிந்தவர்கள் யாராவது இதில் கலந்து கொள்ளாமல் அருகில் இருந்தால் அவர்களுக்கும் அபிஷேகம் நடக்கும். அந்த இடம் ஒரு சில நிமிடங்களில் சேறும் சகதியுமாகிவிடும். ஈரத்துக்குள் காலில் சிரட்டைகள் குத்தும். வெட்டும். இரத்தம் ஒடும். எல்லாம் கந்தனுக்கே அடைக்கலம் என இருப்பார்கள். சுவாமி தேரிலே ஏறியதும். தீபாரதனை காட்டப்படும். பின்னர் சுற்றியிருந்த வடத்தினை பின்னே நீட்டுவார்கள். அடியவர்களின் தலைக்கு மேலாக வடம் வரும். அதைப்பிடிக்க அலைமோதும் கூட்டம். இங்கே தேங்காய்கள் உடைக்கப்பட்டு முடிந்ததும், அதை ஆலய தொண்டர்கள் கடகங்களில் பொறுக்கி உடனேயே அப்புறப்படுத்தி இருப்பார்கள்.
தேரிற்கு முன்பாக பெரிய காண்டாமணி 'டாங்' 'டாங்' என்ற ஓசையுடன் பின்னாலே தேர் வருகிறது என்பது போல முன்னாலே செல்லும். தேர் இழுக்க தயாரனதும் சில அடியவர்கள் தேரோடும் வீதி பிரதட்டை செய்வார்கள். அடி அழிக்க இருப்பார்கள். குருக்கள் ஐயா மணிஅடித்ததும் தேரில் இருக்கும் சிறு மணிகள் ஒலிக்க அரோகரா ஓசை முழங்க ஆறுமுகப்பெருமான் அழித்தல் தொழிலுக்கு புறப்படுவார். பின்னாலே பிரதட்டை செய்யும் அடியவர்கள், அடி அழிக்கும் பெண்கள், கந்தனை நினத்து பஜனை செய்பவர்கள் என ஒரே பக்தி மயம். இவர்களை எல்லாம் ஒழுங்கு படுத்திக்கொண்டு பாடசாலை சாரணர் அணி, பரியோவான் முதலுதவிப்படை, நலன்புரிச்சங்கம் போன்றன மக்களை நெறிப்படுத்திக் கொள்வார்கள். கைகளை கோர்த்து அரணாக நின்று நேர்த்தி செய்யும் அடியவர்களுக்கு பெரும் உதவி புரிவார்கள்.

தேர் இழுக்கும் அடியவர்கள் நெருக்கியடித்து முண்டியடித்து ஒரு கையால் மட்டும் பிடித்து இழுக்கக்கூடியாதாகவே இருக்கும் . அப்படி இழுத்துத்தான் தேர் இருப்புக்கு வரும். நினைத்தால் ஆச்சரியம்தான். சில நேரங்களில் விரலால் தொட்டுவிட்டாலே போதும் என்று அடியவர்கள் தொட்டு ஆனந்தம் அடைவார்கள்.

தேர் இருப்புக்கு வந்ததும் கோவில் ஆதீனகர்த்தாவின் மகன் பச்சை சாத்துவார். அதன் போது தேர் முட்டியில் நாதஸ்வர தவில் வித்துவான்கள் முழங்குவார்கள். குருக்கள் பஞ்சாராத்தி காட்டும் போது திரை விலகும். ஆறுமுகசுவாமியை அடியவர்கள் தூக்கி வரும் அழகு பேரழகு. பச்சை திருவாசி. பச்சை மாலை. அழித்தல் செய்து ஆக்ரோஷத்துடன் இருக்கும் ஆறுமுகனுக்கு குளிர்மையாக பச்சை சாத்துப்படி.

சுவாமி மீண்டும் வசந்தமண்டபம் போகும் போது வித்தியாசமாக "இசற்" வடிவிலே மெதுவாக ஆடி ஆடி எல்லாப்பக்கமும் உள்ள அடியவர்களுக்கு அருளியவாறு கோபுர வாசலால் உள்ளே நுழைந்து, பின்னர் வசந்த மண்டபத்திற்கு நேரே உள்ள பின்வாசலுக்கு சென்று மீண்டும் வசந்த மண்டபம் ஏகுவார். கந்தனின் பேரழகு காணக்கிடைக்காத ஒரு அரிய காட்சி. ஒருதடவை வாழ்வில் சென்று பார்த்தால் மீண்டும் மீண்டும் காணத்தூண்டும் அழகிய காட்சி.

இதற்கு பின்னர்தான் நிறைய காவடிகள் எல்லாம் வரும். அடியவர்கள் தங்கள் நேர்த்திகளை முடித்துக் கொள்வார்கள். 9.00 மணிக்கு முன்னர் திருவிழா முடிந்திருக்கும். வெளியூர் அடியவர்கள் நேரம் ஆக ஆக வந்து அருச்சனை செய்வார்கள். இது மாலை தேரடி வீதி பார்க்கும் உற்சவம் வரை தொடரும்.

2007 ம் ஆண்டு தேர்த்திருவிழா ஒளிப்படங்களை கானாபிரபாவின் வலைப்பூவில் பார்க்க இங்கே சொடுக்கவும்.

2008 ம் ஆண்டு நல்லக்கந்தன் திருவிழாப் படங்களைக்காண இங்கே சொடுக்குங்கள்

படங்கள் : நன்றி கானாபிரபா

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

நல்லூர் கந்தன் திருவிழா 2008

ஈழத்தமிழரின் ஒரு பெரும் கலாச்சார விழாவாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை(06.08.2008) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இதுவரையில் முடிந்திருக்கும். அதுதான் நல்லூரின் முகாமைத்துவ சிறப்பம்சம்.

இன்று நல்லூர் வாழ் மக்கள் வீதிகளையும், வீடுகளையும் பெருக்கி சுத்தப்படுத்தி நாளை அந்த கொடியேற்றும் நாளிகைக்காக காத்திருப்பர். யாழ்ப்பாண மாநகர சபையும் தன் பங்கிற்கு வீதிகளை சுத்தப்படுத்தி ஆங்காங்கே கழிவுப்பொருட்களை இட சிறிய தொட்டிகளை வைத்து சுத்தத்தை பேண நடவடிக்கை எடுப்பர். கச்சான், சிறு தீன் பண்டங்களை விற்பனை செய்வோர் தமக்கான இடங்களை யாழ்.மாநகர சபையிடம் இருந்து வாடகைக்கு பெற்று சிறு சிறு கொட்டில்களை தமது ஒரு மாத வியாபாரத்திற்காக தயார் செய்வார்கள். ஆங்காங்கே தண்ணீர்ப்பந்தல் அமைப்பதற்கு பொதுமக்கள் ஈடுபடுவார்கள். சிறுவர்கள் பெரும் கனவுடன் காத்திருப்பர் தாம் இம்முறை நிறைய விளையாட்டுப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று.

இது ஒருபுறம் இருக்க இன்று நல்லூர் ஆலயத்திற்கு நாளை கொடியேற இருக்கின்ற 'கொடிச்சீலை' நல்லூர் முடமாவடியில் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள கதிர்காமசுவாமி ஆலயத்தில் இருந்து வீதிவலமாக எடுத்து வரப்படும். பின்னராக வைரவர் சாந்தி இடம்பெற்று அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டிருக்கும்.
இவை எல்லாம் விட பிரதட்டை செய்யும் வீதிக்கு இன்றே யாழ்.மாநகர சபை சுத்தமான வெள்ளை மணல் கொண்டு வந்து கொட்டி அதை பரவி கிருமிகளை அழிக்க மருந்து அடித்து துப்பரவாக வைத்திருப்பர்.

யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகள் இன்று தமது தொண்டர் படைகளை சேவைக்கு அமர்த்தியிருப்பர். சாரணர் அணி, பரி.யோவான் முதலுதவிப்படையணி, செஞ்சிலுவைச்சங்க அணி என எல்லோரும் காத்திருப்பர்.

பாடசாலை அல்லாமல் இருக்கும் சேவைக்கழகங்கள் ஆன இலங்கை செஞ்சிலுவைச்சங்கம், யாழ்ப்பாணம் நலன்புரிச்சங்கம், யாழ்.பரி.யோவான் முதலுதவிப்படை என எல்லோரும் சேவை புரிய தயாராக இருப்பர்.

யாழ். மாநகர சபையும் வீதித்தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்து வசதியினை சுலபமாக்குவர். நல்லூரில் உள்ள சனசமூக நிலையங்கள் சைக்கிள் பாதுகாப்பு நிலையங்கள் அமைத்து ஒரு சிறிய கட்டணத்துடன் வாகனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருப்பர்.
இளைஞர்கள் தங்களுக்குள் கதைக்க தொடங்கியிருப்பார்கள். "மச்சான் நாளை நல்லூர் கொடி இனி 25நாளுக்கு ஒண்டும் இல்லையடா (எது இல்லை)." சிறிய கவலையுடன் அதை மகிழ்ச்சியாக தெரிவிப்பர். "என்னமாதிரி நாளை பிரதட்டை செய்கிறியா? என ஒருவர் கேட்க "ஓமடாப்பா, செய்வம் எண்டு இருக்கன், நாளைவரை உயிரோடு இருந்தால் அல்லது காணாமல் போகாமல் இருந்தால் செய்வேன்டா" என ஒருவன் சொல்வான். இன்னொருவன் "கொஞ்சம் நேரம் சிக்கலடாப்பா, அப்ப தினத்துக்கு தினம் செய்வோம் எண்டு இருக்கேன்" என்பான் இன்னொருவன். இம்முறை காவடி எடுக்கிற ஒரு எண்ணம் இருக்கு மச்சான் எல்லாம் கை கூட வேணும் என உரைப்பான் மற்றுமொருவன். ஆலயத்திற்கு சென்றவர்களுக்கு தெரியும் எங்கு பார்த்தாலும் இளைஞர்களின் பக்தி சற்று தூக்கலாகத்தான் தெரியும்.

இவர்கள் இப்படி என்றால் மகளிர் அணி தங்களுக்குள் கொஞ்சம் வித்தியாசமாக பேசுவார்கள். தாங்கள் அடி அழிக்க போவதாகவும், ஒரு சிலர் தாம் அதிகாலை சென்று (ஆமி விட்டால்) உள்வீதியில் செய்வதாகவும், வேறு சிலரோ தாம் வெளிவீதியிலும் செய்வதாக எண்ணம் இருப்பதாகவும், எதோ அந்த நேரம் உள்ளபாடு என தம்முள் அலசும் நேரம், கொஞ்சப்பேர் தமது 25நாள் சேலை,அணிகலன்கள் பற்றி விவாதிப்பர்.

நாளை அதிகாலை பள்ளியெழுச்சிப் பூசையுடன் அடியவர்கள் அங்க பிரதட்டை செய்ய தொடங்கி இருப்பார்கள். அடியவர்கள் செய்யும் அந்த பிரதட்டை காண்பதற்கு மிக அழகாக இருக்கும். ஒரு குழுவாக அல்லது தனியொருவராக தமது பிரதட்டை காரியத்தை செய்து முடிப்பார்கள். குழுவாக செல்வோரில் முன்னால் செல்பவர் பாதை காட்டுபவராகவும் இடைநடுவில் செல்பவர் 'அரோகரா' என்று ஓசை எழுப்பிய படி செல்ல அவருக்கு இசைவாக எனையோர் அதனை சொல்வர்.

"முருகனுக்கு அரோகரா,
கந்தனுக்கு அரோகரா,
அழகனுக்கு அரோகரா,
அப்பனுக்கு அரோகரா,
வள்ளிமணவாளனுக்கு அரோகரா,
ஞானபண்டிதனுக்கு அரோகரா,
ஈசன் உமை பாலனுக்கு அரோகரா,
பழனியாண்டவருக்கு அரோகரா,
அலங்காரக் கந்தனுக்கு அரோகரா,
அன்னதானக் கந்தனுக்கு அரோகரா,
அபிஷேகக் கந்தனுக்கு அரோகரா,
வேலுக்கு அரோகரா,
மயிலுக்கு அரோகரா,
வேல் வேல் வெற்றிவேல்,
வேலும் மயிலும் வேலாயுதம்,
அரோகரா அரோகரா"

என ஒரு கிரமமாகச் செய்வர். இதோ சில கானொளிக்காட்சிகள்...... காட்சித்துண்டு -01

காட்சித்துண்டு -02
காட்சித்துண்டு - 03
தொடங்கும் போது எல்லோரும் வேட்டியை மடித்துக்கட்டி அதற்கு மேல் தமது சால்வையை கட்டி பிரதட்டை செய்ய தயாராகுவர். சிலர் வேட்டியை கொடுக்கு போல கட்டுவர். பின்னர் கோபுர வாசலுக்கு நேரே நின்று கந்தனை வணங்கி கீழே விழுந்து கும்பிட்டு அரோகரா என தொடங்குவர். அப்படியே வீதி வழியே வந்து தேர்முட்டியை சுற்றி வந்து அப்படியே தூலலிங்கமாகிய இராஜகோபுர வாசலுக்கு வந்து கும்பிட்டு எழும்புவர். பின்னர் வேட்டியின் கட்டுக்களை அவிழ்த்து மீண்டுமொருமுறை வீதியை சுற்றி வருவர். வரும்போது மேற்கு வீதியில் தேநீர் கொடுப்பார்கள். அதனை அருந்தி விட்டு அப்படி சுற்றி வந்து கும்பிட்டு ஆலயத்திற்கு முன்னால் உள்ள மணலில் இருந்து உரையாடுவர். இந்த 25நாளும் மிக அற்புதமான நாட்கள் என்பர்.
இவை எல்லாம் நான் சொல்வது 3ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலைமையில் திருவிழாவிற்கு முதல் நாள் உள்ள எதிர்பார்ப்பு. இப்போதுள்ள நிலமை எல்லோரும் அறிந்ததே. இதுவரை பாதுகாப்பு படையினர் நல்லூர் தொடர்பாக வாய் திறக்கவில்லை. பார்ப்போம் பொறுத்திருந்து.
கந்தனை அழுது தொழுவதற்கு பக்தர்கள் தாயார். எம்மை காப்பாற்று. எமக்கான ஒரு நிம்மதி வாழ்வை தா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.
நாளை யாழ்ப்பாணம் களைகட்டும். 10மணிக்கு கொடியேற்றம்.
சென்றமுறை கானா பிரபா வின் பதிவு மிக அற்புதமானது.அரிய கருத்துக்களை தந்த கானா பிரபாவிற்கு நன்றிகள். அதற்கு செல்ல......
=========ஒளிப்பதிவில் உள்ள தெளிவின்மைக்கு வருந்துகிறோம். இது 2007ம் ஆண்டு எடுக்கப்பட்டது.