‘தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....?’
’வாற சனிக்கிழமையனை? உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர?’
‘ஒண்டும் வேண்டாமப்பு, சுகமா வந்து போனால் காணும்’
‘திரும்பி வரேக்க என்னோட வாறியேனை..?’
‘அதெல்லாம் பிறகு பாப்பம்...நீ முதல்ல வா..’ என்று சொல்லி ரெலிபோனை வைச்சிட்டா அம்மா.
அருகில் இருக்கும் போது அருமை உணராமல் ஆடிப்பாடித்திரிஞ்சம். இப்ப தனிமையில் இருக்கும் போது அம்மாவோட இருக்க வேணும் போல இருக்கு. ம்ம்ம்..இதுவும் ஒரு சுயநலம் தான். அப்பவெல்லாம், ’தம்பி இந்த முத்தத்தை கூட்டப்பு, ஒரே மாஞ்சருகும், வேப்பஞ்சருகுமா கிடக்கு’ என்றவளிடம் ‘சும்மா போனை...என்னால ஏலாது, எனக்கு வகுப்பிருக்கு போகவேணும்’ என்பேன். ‘இந்தா அப்பிடியெண்டால் ராத்திரி அவிச்ச புட்டும், நேற்றையான் பகலேக் குழம்பும் கிடக்கு ஒரு பிடி சாப்பிட்டு போ....வெறு வயித்தோட போகாதையப்பு....’என்பாள். பிறகென்ன அம்மாவை சிம்பிளா வெட்டிப்போட்டு எங்காவது கோவில் வீதியில் பிள்ளையார் பந்து விளையாடப் போயிடுவன். இப்ப என்னடாவெண்டால் இங்க வீட்டைக் கூட்டுறம், வக்கியூம் கிளீனர் போட்டு மூலை முடுக்கில இருக்கிற தூசு கஞ்சல் எல்லாம் இழுக்கிறம், ‘மொப்’ பண்ணுறம். காலம்தான் எண்டு யோசிச்சன்.
விடியப்பறமா வீட்டுவாசல்ல இறங்கினன்...’வந்தாச்சே...வா’ எண்டா. பயணக்களைப்பு, பஸ் நல்லாக் குலுக்கியடிச்சுக் கொண்டுவந்திருப்பினம், நீ ஒழுங்கா நித்திரையும் கொண்டிருக்க மாட்டாய்...தேத்தண்ணி போட்டாறன்..குடிச்சிட்டுப் படு...வெய்யில் ஏறக் குளிக்கலாம். சரி போடு எண்டு அம்மா பின்னால போனன்...அலுமினியக் கேத்தல் வைச்சு தண்ணியை சூடாக்கிக் கொண்டிருந்தா. ‘ஏனனை போனமுறை கொண்டுவந்த கீட்டரைப் பாவிக்கலாமே?’ என்றால் அது ‘பயமப்பு தண்ணியை வைச்சுப் போட்டுப் பார்த்துக் கொண்டு நிக்க வேணும். எனக்கு உதுகளை வடிவா நிப்பாட்டவும் தெரியாது. ஏன் சோலியை, கைவிளக்கில பன்னாடையை பத்த வைச்சாச்சு, கொக்கறை, பாளை, ஊமல் கொட்டை வைச்சு எரிச்சா அது உடன கொதிச்சுப் போடும், நான் அதுக்கிடையிலை கொத்துப்பேணியையும், மூக்குப் பேணியையும் கழுவிப்போடுவன் என்று சொல்லிக் கொண்டே கதவைத்திறந்து பின்னால போனா. வெளியால ஒரு தென்னம்பிள்ளை நிண்டது. அதுக்குப் பக்கத்தில இருந்த வாளித்தண்ணில சாம்பல் போட்டு பொச்சால உரஞ்சிக் கழுவினா. ’என்னம்மா நீ, பைப் போட்டு தந்தனானெல்லே, அதுல கழுவன்’. ‘நான் கக்கூசுக்குத்தான் அந்தத் தண்ணி பாவிக்கிறது. சிலவேளை வாளியில கொண்டு போகேலாதப்பு. பாழ்பட்ட கரண்டும் ஒழுங்கா வராது. ஏன் அந்தத்தண்ணியை வீணாக்குவான்’ எண்டு சொன்னா. உள்ள போனால் தண்ணி கொதிச்சிட்டுதுதான், நல்ல சூடா ஒரு தேத்தண்ணி தந்தா மூக்குப்பேணில...! வாயை வைச்சு உறிஞ்சி உறிஞ்சி குடிச்சன்.
தேத்தண்ணியோட வெளியால வந்து வளவை சுத்தி ஒரு நோட்டம் விட்டன். மனிசி எல்லாம் கூட்டித் துடைச்சு துப்பரவாத்தான் வைச்சிருக்குது. வீட்டுக்குப் பக்கத்தில ஒரு பத்தி போட்டு அதுக்குள்ள எல்லா விறகுகளும் அடுக்கிக் கிடக்கு. நான் வருவன் எண்டதால, பழைய தென்னோலையை கீற்று கீற்றா கிழிச்சு கட்டி வைச்சிருக்கிறா. தோசை தென்னோலை நெருப்பில சுட்டா நல்லா வேகும். மாரிகாலத்தில எரிக்கிறதுக்கெண்டு ஊமல்கொட்டை, கங்குமட்டை, கொக்கறை, பாளை, பன்னாடை எல்லாம் அடுக்குப்பண்ணி கிடக்கு. ஒரு கரையில தென்னம்பாளை, மடல் எல்லாத்தோடையும் ரெண்டு பன்னாடையும் சேர்த்து கட்டி வைச்சுக்கிடக்கு. எனக்கு விளங்கிட்டுது, என்னைக் கூட்டிக்கொண்டு போய் வைரவருக்கு ஒரு பொங்கல் கட்டாயம் இருக்கு. கொஞ்சம் பின்னால பார்த்தா....பக்கத்தில பக்கத்திலையா நிண்ட 2 பனைக்கு நடுவில பழைய மூரிமட்டைகளை வடிவா அடுக்கி, தண்ணி உள்ளுக்குள்ள போகாம மேல காவோலை போட்டு மூடிக்கிடக்கு. அம்மாண்ட பக்கா பிளானை நினைச்சா சிரிப்புத்தான் வருது. வேலி அடைக்கப் போறா போல, பனையோலை வெட்டி மிதிச்சுகிடக்கு. அது பார்க்க வடிவா இருந்தது. ரெயில் தண்டவாளம் போல இருக்கும். அதுக்கு மேல சின்னன்ல சுக்கு பக்கு சுக்கு பக்கு கூ.....எண்டு ஓடித்திரிஞ்சு, செம்மறியள் இஞ்சால வாங்கோ எண்டு ஈசுவரி ஆச்சிட்ட அடிவாங்கின ஞாபகம் வந்திச்சு. ஒரு பக்கம் பனம்பாத்தியைப் பார்த்தேன். ம்ம்ம்...பூரானும் பனங்கிழங்குத் துவையலும் சாப்பிடாலாம் எண்டு மனம் கணக்குப் போட்டுது.
இங்கை வாவன்...உங்கை என்ன ஆவெண்டு கொண்டு நிக்கிறாய்...அம்மாண்ட பிரபல வசனம் இது.வந்தனி உடுப்பை மாத்தி, ஆறிக் கொண்டு, குளிச்சிட்டு மத்தியானப் பூசையைப் பார்த்திட்டு வா. தேங்காய் உரிச்சுத்தாறன். கற்பூரமும் கிடக்கு. மறக்காம கொண்டு போ எண்டு மண்வெட்டி விளிம்பில தேங்காய் உரிக்கத் தொடங்கிட்டா. அண்டையில இருந்து இண்டைக்கு வரைக்கும் அம்மா எனக்கு எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்யுறா. அம்மாவை ஒருக்கா பிளேனில ஏத்தி நான் இருக்குற இடத்தைக் காட்டுவம் எண்டால், அவ வாறாவேயில்லை. தனிய இருந்து இருந்து பழகி இப்ப ஓரளவு சமைக்கப் பழகிட்டன். என்ர கையால அம்மாவுக்கு சமைச்சுப் போடுவம் எண்டால் அது ஏலுதில்லை. நீயும் வாவெனணை கோயிலுக்கு எண்டு கேட்டன், அது நாங்கள் நித்தம் பாக்கிற கடவுளப்பு, நீங்கள் இப்பிடி இடைக்கிடைத்தான் பார்ப்பியல் நீ போட்டு வா, நான் சமைச்சு வைக்கிறன். உனக்கும் நக்கல் கூடிப்போச்சு எண்டு சொல்லிக்கொண்டே வெளிக்கிட்டன்.
இந்த முறை அம்மாவை எப்படியும் கிளப்ப வேணும். மனசு முழுக்கு இதுதான் யோசனை. எத்தனை வருசம் எனக்காக கஷ்டப்பட்டுவிட்டா. இப்பவும் இஞ்ச தனிய இருந்து கொண்டு கிடுகு பின்னை அது இது எண்டு சும்மா இருக்காமல் ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்கிறா. கொஞ்சநாள் தன்னும் காரில் ஏத்திக்கொண்டு திரிஞ்சு எல்லா இடமும் காட்டவேண்டும். பேரப்பிள்ளையளின்ர மழலை மொழியை கேட்டால் அம்மா எப்பிடி சந்தோசப்படும். இப்ப இப்பதான் அதுகள் கொஞ்சம் தமிழ் பேசப்பழகுதுகள். அம்மா இருந்தால் அதுகளுக்கு தமிழாவது சொல்லிக் குடுக்கும். பக்கத்தில் இருந்து பார்க்கும். அதுகள் அப்பாச்சி அப்பாச்சி எண்டு வாய் நிறையப் பேசுறதை நான் மனம் நிறையக் கேக்க வேணும். ரெலிபோனில பேசினாலும், அம்மாவுக்கு பெரிசா விளங்கிறேல்லை. எப்பிடிக்கேட்டாலும் அம்மா வரமாட்டன் எண்டே நிக்குது. கடைசியா கந்தையாக் குஞ்சிட்ட சொல்லியும் கேட்டுப்பார்த்திட்டன். அசையிற நோக்கமில்லை. எப்பிடி செண்டிமெண்டா பேசினாலும், அம்மா மசியிறா இல்லை.
படலையைத் திறந்தன். அந்த கிறீச் எண்ட சத்ததித்திற்கு, ஆரது எண்டு எட்டிப்பார்த்துட்டு, நீயே வா.....சமைச்சுப்போட்டன் சாப்பிட்டு ஆறிப்படு. பிறகு வெயில் தாழ எங்கெயெண்டாலும் போகலாம். அம்மாவின்ர கையால சாப்பாடு. அமிர்தமாத்தானே இருக்கும். எத்தினை சில்வர் சாமான் கொண்டு வந்து கொடுத்தாலும் அம்மாக்கு மண்சட்டிலதான் காதல். இந்தா உனக்குப் பிடிக்குமெண்டு வட்டில் புளி போட்டு மினுக்கிக் கழுவி வைச்சிருக்கிறன். இதுல சாப்பிடு. வட்டில் எண்டதும் சிரிப்புத்தான் வந்திச்சு. எத்தனை பேருக்கு வட்டில் தெரியுமோ தெரியாது. அம்மா இன்னமும் வைச்சிருக்கு. கோயில் எப்பிடி இருக்கு? ஆரேன் கண்டவையோ? எண்டு சொல்லி பதிலுக்கு காத்திராமல் கோயில் எல்லாம் முன்னையப் போல இல்லை. வழக்குகளும் கணக்குகளும். எல்லாம் அடிபிடிதான்...சலிச்சுக்கொண்டே சொன்னா. ஏதோ போறம் கற்பூரத்தை கொளுத்தி ஒரு தேங்காயை அடிச்சுப்போட்டு அப்பனே நீதான் துணை எண்டு நடையைக் கட்ட வேண்டியதுதான். உதுகளைக் கதைச்சு என்னத்துக்குத் தம்பி, அங்கை எப்பிடி இருக்கிறாய்? வேலையள் என்ன மாதிரி? இவன் யோகனைக் காணுறனியோ என்று பக்கத்துவீட்டு ஆட்களை விசாரிச்சா. அவையெல்லாம் கடவுளேயெண்டு நல்லாயிருக்கினம். அப்பிடியே கதையை விட்டன், அம்மா வாறியேனை என்னோட. அங்க வந்தா நீ நிறைய இடம் பார்க்கலாம். பேரப்பிள்ளையளைப் பார்க்கலாம். அதுகளும் உன்னைப் பார்க்க ஆசையா இருக்குதுகள். ஒருக்கா வந்தியெண்டா எல்லாரையும் ஒரு சுத்தில பார்த்திட்டுப் போகலாம். பக்கத்துவீட்டு நேசம் அக்கா எல்லாம் இப்ப இடம் பிடிபட்டு ஊருக்கே வரமாட்டன் எண்டு நிக்கிறா. அதெல்லாம் அப்பு பிறகு பார்க்கலாம். கையைக் கழுவிப்போட்டு நீ சத்து நேரம் நாரியை நிமித்து நான் இதுகளைக் கழுவி வைச்சிட்டு வாறன் எண்டு எழும்பிட்டா.
நானும் முன்னால இருந்த சின்ன கொட்டிலிலை துவாயை விரிச்சுப் போட்டு அதுல படுத்தன். பனையோலையால வேய்ஞ்சு கிடந்த மண் திண்ணை அது. சாணியாலை மெழுகிக் கிடந்தது. நல்ல குளுமை. கொட்டிலுக்கு மறைப்பா கட்டியிருந்த செத்தையில இருந்த சத்தகத்தையும்,அட்டளையையும் எடுத்துக் கொண்டு கையில பனை ஓலைச் சார்வோட அம்மாவும் வந்தா. என்னனை செய்யப் போறாய் எண்டு கேட்டன். நீத்துப்பெட்டி கொஞ்சம் இத்துப் போச்சு. புதுசா ஒண்டு இழைக்க வேணும் எண்டு சொல்லி ஓலைச்சார்வை வாரத்தொடங்கிட்டா. இந்தக் கொட்டிலையும் வேய்ஞ்சு போடலாம் எண்டு பார்த்தால் தோதாக ஆக்கள் அம்பிடுகினமில்லை. ஆ..இப்ப எவனுக்கு பனையோலையாலை கூரை வேயத்தெரியும். இது தழப்பார் காலமப்பு. பனையோலையில கரம் போடவே தெரியாது. சூரனும் இல்லை. ராமசாமியைப் பிடிச்சு கிடுகாலதான் வேய வேணும். கொஞ்சம் கொஞ்சமா பின்னி மூண்டு கட்டு சேத்துப்போட்டன். ஒரு கட்டு வாங்கத்தான் வேணும் போல கிடக்கு எண்டா. பிறகு ஊர்ப்புதினம் எல்லாம் பேசிக்கொண்டு இருந்தம். நானும் அப்படியே களைப்போடு அயர்ந்து போனேன். அம்மாவும் கொஞ்சம் கண்ணயர்ந்து போனா. பின்னேரம் எழும்பி பிளேன்ரி போட்டுக் குடிச்சிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு உலாத்தப் போனன். ஏமம் சாமம் வரை நிக்காமல் போற இடத்தால வேளைக்கு வரப்பார், தோசைக்கு போட்டு வச்சிருக்கிறன், நீ வந்த உடனதான் சுடுவன் என்றாள். சரி வாறன் எண்டு போட்டு வெளிக்கிட்டன்.
இருக்கிற இடத்தில எப்படி இருந்தாலும், ஊருக்குப் போனால் சாரம் கட்டி, சேட் பட்டன் இரண்டைத் திறந்து விட்டுத் திரிஞ்சால்தான் ஒரு திருப்தி இருக்கும். சந்திக்கடைக்கு போய் அதுல நிண்டு நாலு கதை பேசி, ஊர்ப்புதினம் கேட்டு, வம்புதும்புச் செய்தியள் பறையாட்டி மனம் பத்தியப்படாது. கொஞ்சம் இருட்டுப்பட்டவுடன் வீட்ட வந்து ‘என்னனை செய்யுறாய் எண்டு கேட்டேன். தோசை சுட அடுக்கு பண்ணுறன் கை, கால், முகத்தை அலம்பிக் கொண்டு வா எண்டா. சுடச்சுட நல்லெண்ணைய் விட்ட தோசை அதுவும் இடி சம்பலோட. சொல்லவோ வேணும். வெளிநாடுகளில் இருக்கிற ‘பவன்’களுக்கும், ‘விலாஸ்’களுக்கும் இதுகிண்ட சுகம் எங்கை தெரியப் போகுது. எல்லாப் புதினங்களையும் பேசி பிறகும் கேட்டேன் என்னோட வாறியேனை அங்க, அம்மா அதுக்கு ஒரு பெரிய விளக்கமே கொடுத்தா. இனிமேல் அதைப் பற்றி கேட்கேலாதபடி அது இருந்திச்சு. ஆனாலும் அதுக்குப் பிறகும் மனம் கேட்காமல் நச்சரிச்சுக் கொண்டே இருந்தன். அம்மா உறுதியாத்தான் இருக்கிறா எண்டது புரிஞ்சிச்சு.
அம்மாவின் கவனிப்புத் தொடர்ந்தது. பனங்கிழங்குத் துவையல், இராசவள்ளிக்கிழங்கு, கள்ளுவிட்டுச் சுட்ட அப்பம், உழுத்தம்மா களி, ஒடியற் கூழ், வகைவகையா செய்து தந்தா. அதோட கறுத்தக் கொழும்பான் மாம்பழம், பிலாப்பழம், எண்டு அது வேற பக்கம். இன்னொரு பக்கம் எள்ளுத் துவையல், பொரிமா எண்டு ஒரே சாப்பாடுதான்.
நாட்கள் ஓடியது.
அம்மாவுக்கு உதவியா நிண்டு வேலைகாரரோட சேர்ந்து வேலியடைச்சன். சாணியை தண்ணில கரைச்சு வேலிக்கு அடிச்சா. அப்பிடி எண்டா மாடு பனையோலையை சாப்பிடாது. ஒரு மாதிரி கொட்டிலும் வேய்ஞ்சாச்சு. நானும் கூடநாட நிண்டு உதவி செய்ததில அவவுக்கு ஒரு புளுகம். வெளிக்கிட வேண்டிய நாள் வந்திட்டு, அடுத்தநாள் விடிய பயணம். முதல் நாள் பின்னேரம் அம்மா என்னை இருத்தி வைச்சு ஒவ்வொரு பக்கற் பக்கற்றா தந்தா. அரிசிமா, கைக்குத்தரிசி, பச்சை அரிசி, பயறு, உழுத்தம்மா, மிளகாய்த்தூள், சீரகம் மிளகுத்தூள், கோப்பித்தூள், புழுக்கொடியல், பினாட்டு, ஒடியல், வடகம், ஊறுகாய் எண்டு எல்லாம் இருந்திச்சு. எப்பவனை இதையெல்லாம் செய்தனி எண்டு கேட்டா, அப்பப்ப செய்து வைக்கிறது. கிட்டடியில இவள் சரசுவைப் பிடிச்சு உதுகளை இடிச்சு, வறுத்து வச்சனான் எண்டா அம்மா. ஒவ்வொண்டும் ஒவ்வொருத்தருக்கு எண்டே தந்தா, பினாட்டை சின்னன்களிட்டை குடு, அதுகள் ஆசையாய் சாப்பிடும் எண்டேக்க, எனக்கு உள்ளுக்குள்ள அம்மாவை நினைக்கப் பாவமா கிடந்திச்சு. அவைக்கு கேஎப்சி சிக்கின் இல்லாமல் சாப்பாடு இறங்காது, எப்பிடி பினாட்டு சாப்பிடப் போகினம். அவ ஆசை ஆசையாய் தன்ர பிள்ளைக்கும், மருமேளுக்கும், பேரப்பிள்ளையளுக்கும் எண்டு செஞ்சதை ஏன் இதைச் சொல்லி மனசை நோகடிப்பான் எண்டு விட்டுட்டன். இண்டைக்கும் இந்த நொடியும் எனக்காகவே வாழ்ந்து, என்னைப் பற்றியும் என்ர பிள்ளையளைப் பற்றியுமே சிந்திச்சுக் கொண்டு இருக்கிறா. அழுகை வருமாப் போல இருந்திச்சு. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு எல்லாத்தையும் அடுக்கினன். என்னட்டை நல்ல நீத்துப் பெட்டி ஈக்கில செஞ்சது கிடக்கு அதை மா அவிக்கப் பாவிக்கலாம், அதோட குருத்தோலை நீத்துப் பெட்டியும் கிடக்கு புட்டவிக்க நல்லது எண்டு தந்தா. சின்னச் சின்ன பனையோலைப் பெட்டி கிடக்கு கொண்டு போனால் ஏதும் போட்டு பாவிக்கலாம். ஒரு சுளகும் கிடக்கு தேவையெண்டால் சொல்லு எண்டா. வேண்டாமம்மா, அங்க சுளகு தேவைப்படாது எண்டே சொல்லி 2 சின்ன பெட்டியை வாங்கி உள்ள வைச்சன். எனக்குத் தெரியுந்தானே மனிசுக்கு சுளகால பிடைக்கத் தெரியாது எண்டது.
அயலட்டைக்கு நாளைக்குப் போறன் எண்டு சொல்லிப்போட்டு வந்து இரவு புட்டும் பொரியலும் சாப்பிட்டன். அம்மாவும் சாப்பிட்டுட்டு றொட்டி சுடுறன் நாளைக்குப் போகேக்க கொண்டு போ எண்டா. அப்படியே கதைச்சுக் கொண்டு இருந்தம். அப்பான்ர பென்சன் காசில உன்னைப் படிக்க வைச்சன் எண்டு தொடங்கினா. நீயும் படிச்சுப் போட்டு இஞ்ச ஒரு உத்தியோகம் பார்க்கேலாம அங்கால போட்டாய். சரி போனனி உழைச்சுப் போட்டு வருவம் எண்டில்லை, அப்பிடியே இருந்திட்டாய். இனி நான் இல்லாக்காலம் இந்த வளவு வாய்க்காலை ஆர் பார்க்கிறது எண்டு கொஞ்சம் யோசி. பரம்பரை பரம்பரையா நிறையச் சாமான்கள் கிடக்கு. பெட்டகம், தைலாப்பெட்டி எண்டு இப்ப எடுக்கவே ஏலாது. உதெல்லாம் இனி ஆர் கூட்டித் துடைக்கிறது. நான் இனி ஒரு கொஞ்சக்காலம்தான். அதுக்குப் பிறகு நீயாச்சு உன்ர வாழ்க்கையாச்சு. சும்மா வேலை காசு எண்டு திரியாதை. அடிக்கடி வந்து போ. மனிசி பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வா. அவைக்கும் அப்பதான் ஊர், வளவு, வீடு எண்டு ஒரு பிடிப்பு இருக்கும். சும்மா உழைச்சமாம், காசு அனுப்பினமாம் எண்டு இருந்து போடாதை. பிள்ளையளையும் கொண்டு வந்தால்தான் அவையும் சொந்த பந்தங்களோட அந்நியப்படாம இருப்பினம். நான் ம்ம்ம் எண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன். என்ன சொல்றது எண்டே தெரியேல்லை. எல்லாம் பார்ப்பம் எண்டு எழும்பிட்டன்.
ஒரு பக்கம் யோசனை. மற்றப் பக்கம் அழுகை. நித்திரை வரவில்லை. விடிஞ்சதும் இந்தா எண்டு தேத்தண்ணி தந்து குளிச்சிட்டு கோயில்ல போய் தேங்காய் உடைச்சு கற்பூரம் கொளுத்திப் போட்டுவா கெதியா என்றா. சரி எண்டு எல்லாம் முடிச்சு வெளிக்கிடும் நேரம், கவனமாய் போய் வா, பிள்ளையளைக் கவனமாப் படிப்பி. அடிக்கடி வந்து போ எண்டா. நானும் ஓம் என்று சொல்லி ஓட்டோக்குள்ள ஏறினேன். வழிந்த கண்ணீரைப் பார்த்து ஏனப்பு அழுகிறாய்....சந்தோசமாய் போட்டுவா எண்டு உறுதியாய்ச் சொன்னா அம்மா. நான்தான் உடைஞ்சு போனேன். புழுதி பறக்க கிளம்பிச்சு ஓட்டோ. மனசும் கனத்துப் போச்சு.
புதன், 9 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)