புதன், 31 டிசம்பர், 2008

ஈழத்துச் சிதம்பரமும் திருவாதிரை உற்சவமும்

அலைகடல் சூழும் ஈழமணித் திருநாட்டின் தலை எனத்திகழ்வது யாழ்ப்பானம். அதற்கு வடமேற்கே 20கி.மீ தொலைவில் ஒரு தீவு உள்ளது. இங்குதான் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகிய "ஈழத்துச் சிதம்பரம்" உள்ளது. இந்த ஊரின் புகழுக்கு மேலும் வலுச்சேர்ப்பது அது தன்னகத்தே கொண்டுள்ள "கசூரினா பீச்". ஆமாம் அதுதான் காரைநகர்.

சைவம் தழைத்தோங்கும் இவ்வூரில் இருந்து திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப இவ்வூர் மக்கள் எங்கும் வியாபித்திருக்கிறார்கள். இதனால்தானன்றோ "காகம் பறவாத இடமும் இல்லை. காரைதீவான் போகாத இடமும் இல்லை" என செல்லமாக(?) சொல்வார்கள். கற்றோரும் சான்றோரும் வாழும் இவ்வூரின் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று திருவாதிரை உற்சவம் ஆரம்பமாகிறது.

இந்தியாவின் சிதம்பரத்தில் எவ்வாறு திருவாதிரை உற்சவம் நடைபெறுமோ அதே போன்று இங்கும் நடைபெறுவதால இந்த ஆலயம் ஈழத்துச் சிதம்பரம் என வழங்கலாயிற்று. கனகசபையில் வீற்றிருந்து நல்லாட்சி புரிகின்ற சிவகாமசுந்தரி சமேத சிதம்பர நடராஜப் பெருமான் இங்கும் அருளாட்சி புரிகிறார்.

அப்பர் பெருமானின் "ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொண்டது..." என்பதற்கேற்ப நடராஜப்பெருமானின் திருநடனம் புரிகின்ற அந்த திருமூர்த்தம் மிக அற்புதமானது. பலமுறை இங்கு விஜயம் மேற்கொண்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் "தான் இங்குள்ளது போன்ற அற்புதமான நடராஜர் திருவுருவத்தை எங்கும் கானவில்லை" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதே போன்ற கருத்தை தமிழகத்தின் மு. பாஸ்கரத்தொண்டைமானும் தெரிவித்திருந்தார்கள்.

மூல மூர்த்திகளாக சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானும், பூரணை புட்கலாம்பிகா சமேத ஆண்டி கேணி ஐயனாரும் இருக்கிறார்கள். ஈழத்தில் இன்றும் ஆதீனகர்த்தாக்கள் இருந்து நிர்வகிக்கின்ற ஒரு சில ஆலயங்களுல் இதுவும் ஒன்று. இவர்கள் ஆ.அம்பலவிமுருகன் மற்றும் மு.சுந்தரலிங்கம். இரண்டு மூலமூர்த்திகள். இரண்டு இராஜ கோபுரங்கள். இரண்டு ஆதீனகர்த்தாக்கள். இரண்டு கொடியேற்றத்துடன் கூடிய மகோற்சவங்கள் என ஆலயத்திற்கும் இரண்டுக்கு இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. இருந்தாலும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவம்தான் இங்கு பெரும் புகழ் கொண்டது. உலகத்தின் பல பாகத்தில் இருந்தும் காரைநகர் மக்கள் அந்த திருநடனத்தை கண்ணாரக் கண்டு களிக்க மார்கழி மாதம் அங்கு ஆஜராகி விடுவார்கள். உலக நாடுகளில் இருந்து வருகிறார்கள் எனும் போது ஈழத்தில் இருந்து....சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஆலயத்தில் பஞ்சரத பவனி வருடத்தில் இரண்டு தடவைகள் நடைபெறும். ஈழத்தில் பஞ்சரத பவனி ஒரு சில ஆலயங்களில் மாத்திரமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மார்கழி மாத பஞ்சரத பவனி மிக அற்புதமாக இருக்கும். காரணம் சில நேரங்களில் 1 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் தேங்கி நிற்கும். அதனூடாக தேர் பவனி வரும். அதேவேளை அடியவர்களின் அங்கப்பிரதட்சனையும் அடி அழிப்பும் தயக்கமின்றி நடக்கும்.

காரைநகர் சிவன் கோவிலில் திருவிழாவா? தவில் நாதஸ்வரக் கச்சேரிக்கு பஞ்சமே இல்லை. ஈழத்தின் அனைத்து பிரபல வித்துவான்களும் அங்கே நிற்பார்கள். இது மட்டுமா தமிழகத்தின் புகழ்பூத்த வித்துவான்களை அழைத்து சாமகாணப்பிரியனுக்கு நாதகாண மழையால் குளிர்விப்பார்கள்.


உலகப்புகழ் பெற்ற ஈழத்தின் தவில் வித்துவான் விசுவலிங்கம் தெட்சனாமூர்த்தி இந்த ஆலயத்தின் ஐயனார் வாசலில் இருந்துதான் சிறு வயதில் தவில் கற்க ஆரம்பித்தார். புகழின் உச்சிக்கு சென்றாலும் ஆண்டி கேணி ஐயனாரை மறக்காமல் அவர் அடிக்கடி ஆலயம் வருவார். இந்த தெட்சனாமூர்த்தி சிறுபராயத்தில் ஒருதடவை ஆலய தீர்த்தக்கேணிக்குள் (சித்தாமிர்த வாவி)மூழ்கிவிட்டார். உடனே ஆதினகர்த்த பரம்பரையை சேர்ந்த ஒருவர் குளத்தில் குதித்து அவரைக்காப்பாற்றினார். இதை உலகநாடுகளுக்கு கச்சேரிக்கு சென்ற திரும்பிய ஒவ்வொரு தடவையும் உடன் அவரை சந்தித்து கரம் கூப்பி வணங்கி மகிழ்வாராம். இதற்காகத்தான் மகன் உதயசங்கர் எப்பொழுதும் சிவன் கோவிலில் திருவிழா என்றால் மறுக்காமல் வந்து வாசிப்பார்.

தமிழகத்தின் பிரபல தவில் வித்துவான்கள் வலையப்பட்டி சுப்பிரமணியம், அரித்துவரமங்கலம் பழனிவேல், கலியமூர்த்தி தற்போது பிரபலமாக இருக்கும் திருப்புன்கூர் முத்துக்குமாரசுவாமி, வாசுதேவன் ஆகியோரும் நாதஸ்வர வித்துவான்களாகிய நாமகிரிப்பேட்டை கணேசன், காருக்குறிச்சி அருணாசலம், ராஜரத்தினம்பிள்ளை, மாம்பழம் சிவா சகோதரர்கள் என பலரும் இந்த ஆலயத்தில் நாதகாணமழை பொழிந்திருக்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார்கள் எல்லோரும் முன்னர் குளக்கோட்ட மன்னனால் திருவுத்தரகோச மங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட அந்தணர் பரம்பரையே. இதன் படி இப்போது இருப்பது 27வது பரம்பரையை சேர்ந்த சிவஸ்ரீ.வி.ஈஸ்வரக்குருக்கள் அவர்கள்.

இந்த ஆலயத்தில் தேவார திருவாசகம் பாடுபவர் ஆலயத்தின் ஆதீனகர்த்தாக்களில் ஒருவராகிய திரு.மு.சுந்தரலிங்கம் அவர்கள். அவர் தனக்கேயுரித்தான பாணியில் மிக அற்புதமாக பாடுவார். இதைக்கேட்கவே அடியவர் கூட்டம் அலைமோதும். இது கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் அற்புதமாக இருக்கும்.

அவர் பாடிய திருவெம்பாவை பாடலில் இருந்து ஒரு பாடல்......!



ஊர் இப்பொழுதே சுத்தமாக்கப்பட்டு மிக நேர்த்தியாக அழகாக இருக்கும். இனி பத்து நாளும் எல்லோரும் சைவம்தான். ஈழத்துச் சிதம்பரம் நோக்கி விசேட போக்குவரத்து சேவை நடைபெறும். இந்த பத்து நாட்களும் ஆலய மாணிக்கவாசகர் மடாலயத்தில் குறைவின்றி போதுமென திருப்திப்படும் அளவிற்கு அன்னதானம் வழங்கப்படும். இது பிறவூரில் இருந்து வரும் அடியவர்களுக்கு சௌகரியமாக இருக்கும். இப்போது முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டவருமான இந்த காரை மண் பெற்றெடுத்த மைந்தன் தியாகராஜா மகேஸ்வரன் கோவிலுக்கு என கட்டிய மண்டபத்திலும் மகேஸ்வரனின் செலவில் அன்னதானம் வழங்கப்படும். (இன்றைய தினத்திலேதான் கடந்த வருடம் கொழும்பு பொன்னம்பலவானேச்சரம் ஆலயத்தில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது இந்த இடத்தில் ஈண்டு குறிப்பிடத்தக்கது.)

இது தவிர இந்த உற்சவத்தை முன்னிட்டு காரைநகர் மணிவாசகர் சபை அந்த ஊர் மாணவர்களிடையே சமய அறிவை வளர்க்கும் நோக்குடன் பல் போட்டிகளை நடாத்தும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் கடைசி மூன்று நாள் நடக்கும் மணிவாசகர் விழாவில் வழங்கப்படும். இந்த மணிவாசகர் விழாவில் ஈழ அறிஞர்கள் மட்டுமல்ல தமிழக அறிஞர்களும் கலந்து கொண்டு சமய, தமிழ் அறிவை போதித்திருக்கிறார்கள்.

இம்முறையும் திருவிழா களைகட்டும் என எதிர்பார்க்கிறேன். இம்முறை ஆலயத்தில் நிறைய புனருத்தாரணம் நடைபெற்றுள்ளது. தில்லைக்கூத்தன் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.

"நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!!"

செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஆடிப்போனது ஆஸ்திரேலியா...!

ஆஸ்திரேலியாதான் உலகின் முதல்தர அணி என்ற மகுடம் மெதுவாக சரிந்து கொண்டிருக்கிறது. இப்போது தென்னாபிரிக்காவின் கை ஓங்கியே வருகிறது.

தென்னாபிரிக்காவிற்கு இமாலய தொடர் வெற்றி. மெல்பேர்ன் மைதானத்தில் இன்றைய வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு பேரிடியாக மாறி உள்ளது. பெரும் தலைகள் உருளும் அபாயம் தோன்றியுள்ளது. குறிப்பாக மத்யூ ஹைடன். இவரின் கடைசி 15 இன்னிங்ஸ்சில் வெறும் 313 ஓட்டங்களே பெற்றார். இது ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்க்க முடியாத பெறுதி. இப்பொழுதே விமரிசனங்கள் பலவாறாக எழத்தொடங்கிவிட்டன. இப்போது ஹைடன் தலைவிதி தேர்வாளர்களின் கைகளில். வயதும் 37ஐத் தாண்டி விட்டது. பார்ப்போம்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்சில் சற்று பலமாக இருப்பதாகவே பட்டது. பொண்டிங் பெற்ற வேகமான சதம் (101), கிளார்க்(88) மற்றும் கட்டிச்(54) பெற்ற அரைச்சதங்கள் 394 என்ற ஓட்டங்கள் பெற உதவின. டேல் ஸ்ரைன் தன் பங்கிற்கு 5 விக்கட்டுக்களை சாய்த்தார். தென்னாபிரிக்க துடுப்பாட்டத்தில் சொதப்பியது. கிறீம் ஸ்மித் பெற்ற 62 ஓட்டங்கள் தவிர மற்றவர்கள் சோபிக்கத்தவறினர். 184-7 என்ற ஒரு மோசமான நிலையில் இருந்தனர். களத்தில் இருந்த போல் டும்னி பின்னால் வந்த வீரர்களை தன்னோடு சேர்த்து அனாசயமாக விளையாடினார். ஆஸ்திரேலியா பந்து வீச்சுகளை துவம்சம் செய்து மெதுவாக முன்னேறினர்.


யாருமே எதிர்பார்க்க முடியாத இணைப்பாட்டம் ஒன்றினை டும்னியும் டேல் ஸ்ரைனும் ஏற்படுத்தி ஆஸ்திரேலியாவிற்கு தலையிடி கொடுத்தனர். இருவரும் தம்மிடையே 180 ஓட்டங்களை பகிர்ந்தனர். டும்னி தன்னுடைய கன்னி சதத்தைப் பெற்றார். ஸ்ரைனும் தன்னுடைய கன்னி அரைச்சதத்தைப் பெற்றார். ஒரு ஆஸ்திரேலியர் CricInfo இணையத்தளத்தில் எழுதியிருந்தார். ஸ்ரைன் சதம் அடித்தால் தான் ஆஸ்திரேலியாவிற்கான தந்து குடியுரிமையை கைவிடப்போவதாக. அந்தளவு கடுப்பில் ஆஸ்திரேலியர் இருந்தனர். ஆனால் தூரதிஷ்டவசமாக ஸ்ரைன் சதம் பெறாமல் 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டும்னியும் 166 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா இப்போது 459 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பந்துவீச்சில் சிடில் 4, ஹோரிட்ஸ் 3. ஆஸ்திரேலியவின் இரண்டாவது இன்னிங்ஸ் முதலாவதை விட மோசமாக இருந்தது. விக்கட்டுகள் ஒரு சீரான இடைவெளிகளில் வீழ்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் முதல் இன்னிங்ஸ்சில் சதமடித்த பொண்டிங் இம்முறையும் பொறுப்பாக விளையாடினார். ஆனால் மனிதர் தன்னுடைய 38வது சதத்தை வெறும் ஒரு ஓட்டத்தால் தவறவிட்டார். இப்போ ஆஸ்திரேலியா 247 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. வெற்றி இலக்கான 183 இனை தென்னாபிரிக்கா ஒரு விக்கட்டை மட்டும் இழந்து பெற்றனர். மகத்தான வெற்றி தென்னாபிரிக்காவிற்கு. அது மட்டுமல்ல தொடரையும் கைப்பற்றிவிட்டனர்.

  • மைக்கல் ஹசி, மத்யூ ஹைடன் துடுப்பாட்ட பெறுதிகள் மிக மோசமாக உள்ளது. பந்து வீச்சில் பிரெட் லீ இடையில் காயப்பட்டு அதிக நேரம் பந்து வீசவில்லை.

  • ஆஸ்திரேலியாவில் வைத்து தென்னாபிரிக்கா பெற்ற முதலாவது தொடர் வெற்றி இது.

  • ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் 1991-92 பருவகாலத்தில் மேற்கிந்தியரிடம் 2-1 என தோற்ற பின்னர் ஒருதொடரை இழப்பது இதுவே 17வருடத்தின் பின் முதல் தடவை.
  • கடைசியாக விளையாடிய 10 தொடர்களில் தென்னாபிரிக்கா இன்னமும் ஒரு தொடரை தன்னும் தோற்கவில்லை.

  • இந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் ஸ்மித் 15 போட்டிகளில் 1656 ஓட்டங்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். பந்து வீச்சில் டேல் ஸ்ரைன் 13 போட்டிகளில் 74 விக்கட்டுக்கள் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியர் காலம் அஸ்தமித்து கொண்டு வருகிறதா என எண்ணத் தோன்றுகிறது. தோல்வியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா அண்மைக்காலமாக தடுமாறியே வருகிறது.

தென்னாபிரிக்காவும் இந்தியாவும் பெரும் எழுச்சி கண்டுள்ளன. அடுத்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் தொடரின் எல்லாப் போட்டிகளையும் வென்ற White Wash வெற்றி. இது ஆஸ்திரேலியாவின் முதலாம் ஸ்தானத்தை தகர்க்கலாம். அடுத்த போட்டி சிட்னி மைதானத்தில் புதுவருடத்தில் ஜனவரி 3. இந்த வருடம் ஆஸ்திரேலியர்களுக்கு பெரும் சோதனை வருடம். இந்தையாவிடம் தொடர் தோல்வி. இப்போ தென்னாபிரிக்காவிடாம். மீண்டும் ஆஸ்திரேலியா துளிர்க்குமா? அல்லது வாடிவிடுமா?

வெள்ளி, 26 டிசம்பர், 2008

ஆழிப்பேரலை தந்த ஆறாத்துயர்.....!















ஆழிப்பேரலை அடித்து இன்றுடன் 4 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும் அது தந்த வடுக்களும் துயரங்களும் இன்னமும் ஆறாமல் மனங்களில் உள்ளது. மீள் கட்டுமானம் இன்றியும் எமது மக்கள் இன்னும் சொல்லொனாத்துயரத்துள். அதன் நினைவாக இந்தப்பதிவு.

ஏய் சுனாமியே !
நின்னை நினைக்கையில்
நெஞ்சு வெடிக்குது.
அன்னை தமீழீழம்
ஆ... வென்று அலறுது.
இதற்கு முன் எப்போதும் - உனை
அறிந்திலோம்
இனிமேல் ஒருபோதும் - உனை
மறக்கிலோம்.

இந்தமண்ணில் இனவாதம்
கால் நூற்றாண்டில்
காவு கொண்டதில் பாதியை – நீ
கால் மணி நேரத்துள்
கவர்ந்து சென்றாயே!
சொத்தோடு சேர்த்து
எம்மினத்தை சுத்தமாய்
துடைத்து விட்டாய்.

ஆர்ப்பரிக்கும் கடலே!
உனைஅம்மா கடல்தாயே – என
ஆராதனைகள் செய்தோமே
இன்று
ஐயோ என அழவைத்த
அரக்கியாகி விட்டாயே!
பெற்றதுகளை, பெற்றவர்களை
பிரித்துச்சென்று – மற்றோரை
பித்தராக்கி விட்டாயே!
கட்டடங்கள், களஞ்சியங்கள்
கல்விச்சாலைகள்
கல்வீடுகள், களிமண்வீடுகள் - என
எல்லாம் கரைத்து - இன்று
கண்ணீரைத் தந்தாயே!

வந்து பார் !

பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரை - இன்று
பொலிவிழந்து போச்சு.
இதுவரையும் இனிமேலும்
நிம்மதியும் இல்லை.
நித்திரையும் இல்லை.

ஒரு புறம்
இனவாதம் எம்மை
அணுஅணுவாய் அழிக்க
இயற்கை நீயோ – எம்மை
அப்படியே முழுங்கினாயே!
பிஞ்சுகள் , காய்கள்,கனிகள் - என்று
மொத்தமாய் உண்டுவிட்டு
மிச்சமாய் மரத்தை - ஏன்
விட்டு வைத்தாய்?
வெஞ்சமராடி வெற்றிகள் பெற்றது - உனக்கு
பிடிக்கவில்லையா?

ஏ கடலே!
இத்துடன் நிறுத்து!!
இனியும் வேண்டாம் இந்த அழிவு.
அந்நியர் ஆக்கிரமிப்பால்
அழிந்து அழிந்து
நொந்து போனது எம்மினம்.
இனவாதத்துடன்
போட்டி போட்டு – இயற்கையே
நீயும் வதைக்காதே!
கடல் தாயே!
எம்மை வாழவிடு
என்றும் உமைப் பணிவோம்!

(2004 ம் ஆண்டின் சுனாமிக்கு பின்னரான மீட்புப்பணியில் நின்ற பின்னர் ஏற்பட்ட தாக்கத்தில் கிறுக்கியது....)

இதில் இருக்கும் பாடல் தாயகத்தில் இருந்து மலர்ந்த ஒரு பாடல். எத்த்னை பாடல்கள் சுனாமிக்கு என வந்தாலும் இந்தப்பாடல் என் மனதை எப்போதும் பிழியும்.
பாடியவர் : வசீகரன்
பாடல் : கலைப்பருதி
இசை : இசைப்பிரியன்
Get this widget Track details eSnips Social DNA

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

அசத்தியது தென்னாபிரிக்கா.................! அச(சை)ந்தது ஆஸ்திரேலியா.................!!

இது கிரிக்கட். இறுதிப்பந்து வரை எதையும் சொல்லமுடியாதாம். உண்மைதான். இன்று ஆஸ்திரேலியாவின் 'பேர்த்' இல் உள்ள 'வகா - (WACA- Western Australia Cricket Association)மைதானத்தில் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு அபார வெற்றியை பெற்றுள்ளது. இது ஆஸ்திரேலியர்களின் டெஸ்ட் நிலையை சற்று ஆட்டம் காண செய்துள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என் இரண்டிலும் அசத்தி வந்த ஆஸ்திரேலியா இப்போதெல்லாம் சரிவுகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் ஆரம்ப துடுப்பாட்ட முதுகெலும்பாகிய மத்யூ ஹைடன் அண்மைக்காலமாக சொதப்பியே வருகிறார். இது ஆஸ்திரேலியர்களுக்கு பெரிய தலையிடி. அவர் நல்ல நிலைக்கு (போர்ம்) திரும்பாதது கவலையே. அதேபோல மைக்கல் ஹசி யினதும் பொண்டிங்கினதும் பெறுபேறு இந்தப்போட்டியில் சோபிக்கவில்லை. இது அவர்களை துடுப்பாட்டத்தில் பெரிதும் சரிவை கொடுத்தது. ஹைடன் (12,4) , பொண்டிங் (0,32) , ஹசி (0,8). ஆனாலும் இரண்டு இன்னிங்ஸ்சிலும் பின்வரிசை வீரர்களின் பொறுப்பான(?) தடாலடி ஆட்டம் அவர்களைக் காப்பாற்றியது. குறிப்பாக விக்கட் காப்பாளர் பிராட் ஹடின் பெற்ற 46+94 மற்றும் ஜேசன் கிறேசா பெற்ற 30* + 32 என்பவை முக்கியமானது. பொதுவாக சொன்னால் ஆஸ்திரேலியர்கள் துடுப்பாட்டத்தில் பெரிதாக சாதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

முதல் இன்னிங்ஸ்சில் பந்துவீச்சில் மக்காயா என்ரினி 4விக்கட்டுக்களை சாய்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேல் ஸ்ரைன் 2 விக்கட்டுக்களை பெற்றார்.

தென்னாபிரிக்காவும் ஆஸ்திரேலியர்களுக்கு நாம சளைத்தவர்கள் அல்ல என முதல் இன்னிங்ஸ்சில் தடுமாறினர். ஆனால் அவர்கள் வலுவான நிலையில் இருந்தனர். அதாவது ஒரு நிலையில் 234-3. ஆனால் பின்னர் மிச்சல் ஜோன்சனின் வேகம் அவர்களை நிலைகுலைய வைத்தது. 281 ற்கே ஆட்டமிழந்துவிட்டனர். கலிஸ்-63, டிவில்லியேர்ஸ்-63, ஸ்மித்-48, அம்லா-47. ஜோன்சன் தனது சிறப்பு பெறுதியாக வெறும் 61 ஓட்டங்களை கொடுத்து 8 விக்கட்டுக்களை அள்ளி எடுத்தார். இப்போ ஆஸ்திரேலியா 94 ஓட்டங்கள் முன்னிலையில்.

இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் ஆஸ்திரேலியா துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. ஒரு கட்டத்தில் 162/7 என்ற மோசமான நிலையில் இருந்தனர். அப்பொழுது அவர்கள் 256 ஓட்டங்கள் மட்டும் முன்னிலையில் இருந்தனர். பின்னர் ஹடின் பின்வரிசை சகபாடிகளுடன் இணைந்து அசத்தி ஆஸ்திரேலியாவை 319 வரை உயர்த்தி வெற்றிக்கான இலக்கை 414 என நிர்ணயித்தார். பந்து வீச்சை பொறுத்தவரை எல்லோரும் தம்பங்கை சிறப்பாகவ்வே செய்தனர்.

வெற்றி இலக்கு 414. தென்னாபிரிக்கா ஒருவித நம்பிக்கையுடன் களமிறங்கியது. மக்கன்ஸி (2+10) மீண்டும் ஏமாற்ற, மீண்டும் ஸ்மித் மற்றும் அம்லா ஜோடி இணைந்து ஆஸ்திரேலியாவை மிரட்டியது. சிறப்பாக ஆடினர். பொண்டிங் ஜோகன்னர்ஸ்பேர்க் 438 ஓட்டங்களை வாழ்வில் மறக்கமாட்டார். அந்த உணர்வை மீண்டும் பெறத்தொடங்கினார் போலும். மனுஷன் களத்தில் விரல் நகங்களை கடித்து துப்பிய வண்ணமே இருந்தார் (போட்டிக்கு முன்னர் வளர்ப்பாரோ?). இந்த ஜோடி 153 ஓட்டங்களை பகிர்ந்தது. இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்னாபிரிக்கா இப்போது 179-3. இப்போது கலிசும் டிவில்லியர்ஸ்சும் தலையிடி கொடுத்தனர். இந்த ஜோடியும் அபாரமாக ஆடி வெற்றியை நோக்கி பயணித்தது. 124 ஓட்டங்களை இணைப்பாக பெற்றதும் கலிஸ் ஆட்டமிழந்தார். அப்போது நிலை 303-4. பரபரப்பான சூழலில் தனது கன்னி போட்டியில் விளையாடும் போல் டும்னி டீவில்லியர்ஸ் உடன் இணைந்து அபாரமாக ஆடி வெற்றியை எட்டினர். டிவில்லியர்ஸ் அற்புதமான சதம் பெற்றார்(106*). இவ்வேளை டும்னியோ வெற்றிக்கான ஓட்டங்களை பெற்றதோடு தனது அரை சதத்தையும் எட்டினார்(50*). வெறும் 4 விக்கட்டுக்களை மட்டும் இழந்து அவர்கள் தமது வெற்றி இலக்கான 414 இனை எட்டினர். ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் தென்னாபிரிக்கா அதிர்ச்சி வைத்தியம் பார்த்தனர். எதிர்பாராத ஆனால் அற்புதமான வெற்றி தென்னாபிரிக்காவிற்கு. இரண்டு இமாலய இலக்குகளை தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெற்று சாதனை படைத்துள்ளது. ஒன்று ஜோகன்னஸ்பேர்க்கில் பெற்ற 438. மற்றையது இன்று. ஆனால் முதலாவது ஒருநாள் போட்டியில். இரண்டாவது டெஸ்ட் போட்டியில்.

டிவில்லியர்ஸ்சின் அற்புதமான துடுப்பாட்டத்திற்கும் அவரது அபாரமான களத்தடுப்பிற்குமாக ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

* டெஸ்ட் வரலாற்றில் 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெற்ற இரண்டாவது பெரிய வெற்றி. முதலாவது மேற்கிந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 418 இனை சென்ற்.ஜோன்ஸ் அன்ரிகுவாவில் பெற்றது.

*ஸ்மித் இப்போது 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெற்ற சாராசரி ஆனது கிரிக்கட் வரலாற்றில் மூன்றாவது நல்ல பெறுதி. முதலாவது ஜெவ்ரி போய்கொட், மற்றும் சுனில் கவாஸ்கர். ஆனால் ஸ்மித் 4வது இன்னிங்ஸ்சில் 3 சதம் பெற்றுள்ளார். இந்த 3 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வென்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளும் எப்போதும் விறுவிறுப்பானவை என அண்மைக்காலப் போட்டிகள் நிரூபித்துள்ளன. அதற்கு சிகரமாக இந்தப் போட்டி அமைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்கா இப்போது 1-0 என்று முன்னிலை. ஆஸ்திரேலியா அசத்துமா? அல்லது அமிழ்ந்து போகுமா பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்தது 'பொக்சிங் டே' (டிசம்பர் 26) போட்டி மெல்பேர்னில் நடைபெறும்.


மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்......!

புதன், 17 டிசம்பர், 2008

ராகுல் ட்ராவிட்: காலம் முடிகிறதா...?


1996ம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடிய போது இரண்டு புதிய வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஒருவர் சவுரவ் கங்குலி. இன்னுமொருவர் ராகுல் ட்ராவிட். முன்னவர் வங்கதேசம் பின்னவர் கர்நாடக மாநிலம்.

இந்த இருவரும் தமக்கு தந்த பணியை செவ்வனே செய்தனர். கங்குலி ஓய்வும் பெற்றுவிட்டார். ஆனால் ட்ராவிட் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் அதேவேளை அவருக்கான ஓய்வு நேரம் நெருங்குகிறதா? அல்லது கட்டாய ஓய்விற்கு தள்ளப்படுவாரா என்ற பல கருத்துக்கள் எழுந்துள்ளது.

இந்தியாவின் துடுப்பாட்ட சுவர் (BATTING WALL) என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். நிதானமாக தொடங்குவார். பின்னர் களத்தில் இவர் நின்றால் ஓட்டம் ஏறுவது தெரியாது. அதிரடியும் இல்லை. ஆமை வேகமும் இல்லை. நிதானமாக ஓட்டங்களை குவித்து எதிரணியை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவார். இவரால் இந்தியா பெற்ற வெற்றிகள் ஏராளம். ஏன் தனித்து நின்றே வெற்றிகளைக் குவித்து இருக்கிறார். அப்துல் ஜபார் தமிழில் அழகாக சொல்வதானால் மிகச்சிறந்த மட்டையாளர்.

சிறிதுகாலமாகவே ட்ராவிட் உடைய மட்டை ஓட்டங்களை சேகரிக்க தவறுகிறது. காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. இது ட்ராவிட்டுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஏன் தேர்வாளர்களுக்கு கூட சங்கடமாகத்தான் இருக்கிறது. அற்புதமான வீரர். Class is Permanent. Form is Temporary. ட்ராவிட் இடம் எப்போதும் தரம் இருக்கிறது. ஆனால் இப்போது நேரம் இல்லை. நன்றாக ஆடக்கூடியவர். ஆனால் இப்போது முன்பு மாதிரி இல்லை. 2006 ம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கான் சுற்றுப்பயணத்தில் இருந்து இந்த பிரச்சினையை ட்ராவிட் எதிர் கொள்கிறார் என்றுதான் கூறவேண்டும். அதற்கு முன்னதாக மேற்கிந்தியாவிற்கெதிரான தொடரை வராலாற்று வெற்றியாக படைத்ததில் ட்ராவிட்டின் துடுப்பாட்டமும் தலைமைத்துவமும் காரணம்.

2006 இறுதியில் தென்னாபிரிக்கத் தொடரில் இருந்து கடைசியாக சென்னையில் நடந்த இங்கிலாந்திற்கெதிரான போட்டி வரை உள்ள தொடர்களின் பெறுபேறுகள் கொண்ட அட்டவனை கீழே உள்ளது.



மேலுள்ள அட்டவணையில் இருந்து ட்ராவிட்டின் மோசமான பெறுபேறு பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். எல்லா காலத்திலும் எந்த துடுப்பாட்ட வீரனும் சாதிக்க முடியாதுதான். லாறா, சச்சின், பொண்டிங், சங்ககார போன்றவர்களும் சொதப்பித்தான் இருக்கிறார்கள். இவர்களை நினைத்து ரசிகர்களும் கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு தொடர்களுக்கு பிறகு தேறி விடுவார்கள். இப்போது ட்ராவிட் அப்படியும் இல்லை. போர்மில் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவரின் தரமான விளையாட்டிற்காகத்தான் இவ்வளவு நாளும் அணியில் சேர்த்திருந்தார்கள். அவர் மீண்டு வருவார் மீண்டு வருவார் என்றால் ட்ராவிட் மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்.

தென்னாபிரிக்காத் தொடருக்கு முன்னர் அவரது சராசரி 58.75 இப்போது அவரைப் பொறுத்தவரைக்கும் அதளபாதாளம். முன்பு தொடக்கத்திற்குத்தான் அதிக பந்துகளை சந்திப்பார். ஆனால் போகப்போக ஓட்டங்களை குவித்து 100 பந்துக்கான ஓட்டவீதத்தை(Strike Rate)நன்றாக பேணுவார். இப்போது துடுப்பாடும் போது கூட தெரிகிறது. தற்காப்பு ஆட்டமும், பதட்டத்துடனும் கூடிய நிதானமும் கொண்டதாக உள்ளது. சில வேளைகளில் ட்ராவிட் தானா இப்படி துடுப்பெடுத்தாடுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு துடுப்பாட்ட சுவர் சரிகிறது என்று எல்லோருக்கும் கவலை.

தேர்வாளர்களின் தலைவராக இப்போது ஸ்ரீகாந்த். இவர் மனது வைத்தாலே ஒழிய, மற்றபடி இந்த துன்ப நிலை நீடித்தால் ட்ராவிட் அடுத்த தொடருக்கு தெரிவு செய்யப்படுவது சந்தேகமே. ஏனெனில் புள்ளிவிபரங்கள் எல்லாம் ட்ராவிட்டுக்கு எதிராகவே உள்ளன. வரப்போகின்ற போட்டிகள் இந்தியா, இங்கிலாந்தை விட ட்ராவிட்டுக்கு கடும் சோதனையாக இருக்கும். சென்னையில் வெற்றி பெற்றதால் வெற்றி அணியை (WINNING COMBINATION) குலைக்காமல் விளையாடுவார்கள். ஒருவேளை தோற்றிருந்தால் நிலைமை வேறுமாதிரியாக மாறி இருக்கும்.

நல்ல துடுப்பாட்ட வீரனை இந்திய அணி இழக்கிறது என்ற வருத்தம் எல்லோரிடமும் உள்ளது. அதே நேரத்தில் வெளியே நிறைய இளைய வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரோகித் சர்மா, விராத் கோழி, விஜய், பத்ரிநாத், சுரேஷ் றைனா என நிறையவீரர்கள். ட்ராவிட் போல இவர்கள் எல்லாம் வருவார்களா? ட்ராவிட் இடத்தை நிரப்பமுடியுமா? என்றால் வாய்ப்பு கொடுத்துப்பார்த்தால்தான் தெரியும். அதேநேரத்தில் டோனியும் இளம் அணி இளம் அணி என அடம்பிடிப்பதால் தேர்வாளர்களும் அவர் பின்னால் நிறக நேரிடுகிறது. காரணம் இந்தியாவிற்கு எதிர்பாராமல் நிறைய வெற்றிகளைத் தேடித்தந்து விட்டார்

ஒருநாள் அணி. கதையே வேண்டாம் கனவில கூட ட்ராவிட் அந்த இடத்தை நினைக்க முடியாத அளவிற்கு துடுப்பாட்ட வரிசை உள்ளது. இப்போது பந்து ட்ராவிட்டின் துடுப்பை நோக்கி வீசப்படுகிறது. லாவகமாக தட்டிவிட்டு நான்கு ஓட்டத்தைப் பெற்று அணிக்குள் இருப்பாரா? அல்லது கிளீன் போல்ட் ஆகி வாழ்வை முடித்துக்கொள்வாரா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

(மீண்டும் வருவேன் என்கிறாரா? அல்லது போகிறேன் என்கிறாரா?)
மீண்டு வரவேண்டும் அதுதான் எல்லோர் விருப்பமும். மீண்டும் வரும் நேரத்தில் அவரைப் பற்றி மீண்டும் எழுதவேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது.

திங்கள், 15 டிசம்பர், 2008

இந்தியாவின் இமாலய வெற்றி!

இப்போது ஆஸ்திரேலியர்களின் பேச்சு கிரிக்கட்டில் அடிபடுவது குறைந்து கொண்டு வருகிறது. காரணம் இந்தியாவின் அசுர எழுச்சி. 'அட நம்மாளா இப்படி பொழந்து கட்டுறான்' என சில இந்திய ரசிகரே வியக்கும் அளவிற்கு இருக்கிறது. மகிழ்ச்சிதானே. தொடரட்டும் வெற்றிக் குவிப்புகள்.

இங்கிலாந்தின் வெற்றிக் கனவை சேவாக் அடித்து நொருக்கி ஆட்டம் காணவைத்தார். பின்னர் சச்சினும் யுவராஜ் சிங்கும் இணைந்து இந்தா அந்தா இங்கிலாந்து வெல்லுது என்ற போட்டியை இலகுவாக தம்பக்கம் திருப்பி வெற்றிக்கனியை சுவைத்தனர்.

டெஸ்ட் போட்டி வரலாற்றில் மகத்தான வெற்றி. 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெறப்பட்ட நான்காவது பெரிய வெற்றி. இரண்டாவதும் இந்தியாவிடம்தான் உள்ளது.

உண்மையில் சேவாக்கின் அதிரடிதான் போட்டியின் போக்கையே மாற்றியது. 1999ல் இப்படித்தான் பாகிஸ்தனிற்கு எதிராக அதுவுமிதே சென்னையில் நடந்த போட்டியில் சச்சின் இறுதி நேரத்தில் காலை வார இந்தியாவிற்கு ஒரு பரிதாப தோல்வி நிகழ்ந்தது. 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த இந்தியா ஆரம்பத்தில் தடுமாறி பின்னர் சச்சின் மொங்கியா இணை மூலம் வெற்றியை எட்டும் நேரத்தில் 17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 7வது விக்கட்டாக சச்சின் ஆட்டமிழந்தார். பின்னர் என்ன 4 ஓட்டங்களுக்குள் கதை முடிந்துவிட்டது.

இன்றும் வருணனையாளர்கள் அதை திரும்ப திரும்ப சொல்லிக்காட்டினார்கள். ஆனால் சச்சின் இம்முறை தேவையற்ற எந்த விதமான அடித்தெரிவுகளுக்கும் (Shot Selection) ற்கும் போகவில்லை. மிக மிக நிதனாமாக, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் போட்டியை வைத்திருந்தார். Class is Permanent. Form is Temporary. என்பார்கள் ஆனால் இரண்டும் கைவரப்பெற்றவர் சச்சின். இதை இன்று எல்லோரும் அவதானித்திருப்பார்கள். இதே வாசகத்திற்கு ராவிட்டும் பொருத்தம்தான். இப்போது அவரிற்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனிதர் இவ்வளவு மோசமாக ஆடுகிறாரே. எல்லோருக்கும் இது மிகப்பெரிய கவலை. துடுப்பாட்ட சுவர் இடிந்து விழுகிறதா? அல்லது விழுந்து விட்டதா?

இங்கிலாந்து ஏன் தோற்க வேண்டும்? என்ன தவறு செய்தார்கள்? இதை விட எவ்வாறு நன்றாக விளையாட முடியும்? பிளிண்டொவ் நிறையவே மிரட்டுகிறார். பந்துடன் ஜாலங்கள் காட்டுகிறார். இந்தியர்கள் அவரை மதித்தே ஆடினர். ஆனால் அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இன்னமும் கொஞ்சம் வேகமாக விளையாடி ஓட்டங்களை சேகரித்திருக்கலாம்.

மும்பை பயங்கரத்திற்கு பிறகும் இங்கிலாந்து இங்கே வந்து விளையாடி இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பாராட்டு உண்டு.

யுவராஜ் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தப் போட்டியில் வென்றதால் இப்போதைக்கு ராவிட்டின் தலை உருளாது. மீண்டும் இதே அணி மொகாலியில் விளையாடும். ராவிட் அந்தப்போட்டியை தனக்கு சாதகமாக்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நிறைய சாதனைகள் நிறைந்த போட்டியாக இது அமைந்துவிட்டது. இங்கிலாந்து அணியிலும் பெரிதாக மாற்றம் இருக்காது. ஓவே ஷா வின் இடத்தில் அமர்ந்த போல் கொலிங்வூட் தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். எனவே ஷா இப்போதைக்கு வெளியில் இருந்து போட்டியை கண்டுகளிக்க வேண்டியதுதான். கிறீம் சுவானும் நன்றாக கவர்ந்திருக்கிறார். அண்டர்சன் அல்லது ஹார்மிசனுக்கு பதிலாக ஸ்ருவர்ட் புரோட் இற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் ஒரு கிரிக்கட் பதிவில்........!

செவ்வாய், 2 டிசம்பர், 2008

எமது வாழ்வின் பொற்காலம்....!

பொதுவாகவே தமிழர் வாழ்வை இனப்போராட்டம் வெகுவாகவே பாதித்துள்ளது. அவர்கள் இந்த பேரினவாதிகளால் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காது. இருந்த போதும் அவர்கள் விழ விழ எழும் மனவலிமை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த போராட்ட காலங்களில் எல்லாம் மக்கள் தமது கவனத்தையெல்லாம் ஆண்மீகத்திலும், உள்ளூர் விளையாட்டுக்களிலும் செலுத்தினர். குறிப்பாக 1995ம் ஆண்டு அந்த பாரிய இடப்பெயர்வின் முன்னரான காலத்தின் பதிவுகளை மீட்டலாம் என நினைத்தேன்.

யாழ்ப்பாணம் தனித்து விடப்பட்ட மாதிரியொரு உள்ளுணர்வு. அந்த காலங்களில் நடைபெறும் கிரிக்கட் போட்டிகள், உதைபந்தாட்டப் போட்டிகள், கரப்பந்தாட்டப் போட்டிகள், மாட்டுவண்டிச்சவாரி என்பன மக்களின் மனதிற்கு ஒரு ஆறுதலை தந்து யுத்த வடுக்களை ஓரளவேனும் மறக்கச் செய்தது. இப்பதிவில் கிரிக்கட் போட்டிகள் பற்றிய நினைவுகளை வருடுவோம்.

அன்றைய காலங்களில் நிறைய போட்டிகள் நடைபெற்றன. நிறைய தரமான வீரர்கள் இருந்தார்கள். தரமான ஆட்டங்களை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அவையெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது. இதுவும் ஒரு திட்டமிட்ட அழிப்பா என புரியவில்லை. அப்போதைய துடுப்பாட்ட போட்டிகளில் சில அணி வீரர்கள் காற்காப்பு (Pads)களில் கயிறு அல்லது துணி கட்டியே துடுப்பெடுத்தாடுவார்கள். இது அப்போதைய வசதியின்மையை காட்டியது. சில வேளைகளில் ஆட்டமிழந்த வீரர் அரங்கு வந்து தனது காட்காப்பு,கையுறை,துடுப்பு என்பவற்றை கொடுத்தால்தான் புதிய துடுப்பாட்டவீரர் உள்ளே நுழைய முடியும். அப்படியொரு சாபக்கேடு இருந்ததை போட்டிகளை நன்கு கவனித்தவர்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஒரு வீரரே தனக்கு தேவையான எல்லா உபகரணங்களையும் வாங்கக்கூடிய வசதி இருந்தும் விளையாட்டின் தரம் முன்பை விட அதழபாதாளத்திற்குள் போய் விழுந்து விட்டது. ஏன் என்பதை சமபந்தப்பட்டவர்கள் ஆராய வேண்டும். இதற்கு ஒரு சான்று யாழ்ப்பாணத்தின் பிரபல தேசிய பாடசாலை 19வயதிற்குட்பட்டவர் அணிக்கு விளையாடுவதற்கு வீரர்களை தேடி எடுக்க வேண்டிய நிலை. அதிலும் நன்றாக விளையாடக் கூடியவர்கள் அணியை திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதனால் பாடசாலையின் விளையாட்டு முதல்வர்(Prefect of Games- POG) வீரர்களை வெருட்டுவார் "நீ வந்து விளையாடினால்தான் உன்னை க.பொ.த(உ/த) [A/L Exam] பரீட்சை எழுத விடுவோம்." இப்படிதான் அந்த ஆண்டில் அணிக்கு வீரர்கள் தெரிவானார்கள். சிலமாணவர்கள் சிந்திப்பதுண்டு எமது ஒரே ஒரு சொத்து கல்வி. அதிலும் க.பொ.த(உ/த) வாழ்வின் ஒரு மைல்கல். அதை தவறவிட்டால் தமிழனை பொறுத்த வரையில் எல்லாவற்றையும் தவறவிட்ட உணர்வுதான் மிஞ்சும். அப்படிப்பார்க்கின்ற போது அவர்கள் சிந்தனை வாஸ்தவம்தான். ஆனால் 95ற்கு முற்பட்ட காலங்களில் எல்லாம் இவ்வாறில்லை. வீரர்கள் முண்டியடித்துக் கொள்வார்கள். திறமை இருந்தும் வாய்ப்புக் கிடைக்காமல் இருப்பார்கள். இதனால்தான் அன்றைய காலங்களில் ஒரே அணி தனது பெயருடன் 'A' அணி, 'B' அணி என்ற பெயருடன் போட்டிகளில் பங்குபற்றும்.

ஒரு வருடத்தில் நிறைய சுற்றுப்போட்டிகள் நடைபெறும். வருட தொடக்கத்தில் கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் நடாத்தும் விக்ரம்-ராஜன்-கங்கு('கங்கு' நினைவுப் பெயர் 2000ற்கு பின் இணைக்கப்பட்டது) ஞாபகார்த்த சுற்றுப்போட்டி இடம்பெறும். தொடர்ந்து கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் நடாத்தும் KCCC வெற்றிக்கேடயம், ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சுற்றுப்போட்டி, சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் டொனால்ட்கணேஷகுமார் ஞாபகார்த்த சுற்றுப்போட்டி, சில வேளைகளில் சில கழகங்கள் நடாத்தும் சுற்றுப்போட்டிகள் என கிரிக்கட் போட்டிகள் களைகட்டும். இதில் டொனால்ட்கணேஷகுமார் ஞாபகார்த்த சுற்றுப்போட்டி மட்டுமே 50 ஓவர்களை கொண்டதாக அமைந்தது. ஏனையவை எல்லாம் 30 ஓவர்களை கொண்ட போட்டிகள். குறிப்பாக யாழ்.இந்துக் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போது ரசிகர்களின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் நகரின் மத்தியில் இருப்பதால் பல்வேறு தேவைகளுக்கு வருபவர்கள் கூட சற்று நேரம் நின்று போட்டியை கண்டு களித்து ஓரளவு ஆறுதல் அடைவார்கள்.

போட்டிகள் எல்லாமே வார இறுதி நாடகளில் நடைபெறுவதால் மாணவர்களின் வரவும் அதிகமாக இருக்கும். தனியார் கல்வி நிலையங்களில் போட்டி நடைபெறும் போது வரவு குறைவாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக எடிசன் அக்கடமி, மணி கல்வி நிறுவனம், விக்னா கல்வி நிறுவனம், என எல்லாம் சற்று வெறிச்சோடியே இருக்கும். ஒரு சில மாணவர்கள் மட்டும் செல்வார்கள். ஆசிரியர்கள் சில வேளைகளில் தங்கள் பலத்தை காட்ட அன்றைய தினம் அதிகமாக கற்பிப்பார்கள். அன்றைய வகுப்பு குறிப்பு(Notes) பின்னர் எடுக்கலாம். ஆனால் போட்டியில் அடிக்கும் 'சிக்ஸர்' பிறகு காணமுடியுமா என்ன?மைதானத்தினை சுற்றி இருக்கும் மலைவேம்புகளுக்கு கீழ், வீட்டு மதில்களின் மேல், கஸ்தூரியார் வீதியில் அமைந்த அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் மேல், என ரசிகர்களின் இருப்பிடங்கள் பார்க்க அலாதியானது. குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட ரசிகர்களின் அளவுதான் அதிகமாக இருக்கும். அவர்களின் 'சார'க்கட்டும் அவர்களின் நட்புவலைகளும் பார்க்க ஒரு பரவசத்தை தரும். ஒவ்வொருவரும் தமக்கென்று ஒரு அணியை தம்முடைய அணியாக வரித்துக் கொள்வார்கள். பொதுவாக யாழ்.மாவட்ட அணிகள் பாடசாலையை மையமாக கொண்டே இருக்கும். அந்தந்த பாடசாலைகளின் பழைய மாணவர்களே அந்த அணிகளில் அங்கம் வகிப்பார்கள். எனவே மாணவர்களின் ஆதரவு தமது பாடசாலையை பின்புலமாக கொண்ட அணிக்கே இருக்கும். எனவே மாணவர் அல்லாத ரசிகர்கள்தான் முக்கியமாக இருந்தனர்.

அங்கே போட்டிகள் நடைபெறும் போது மணியண்ணை 'காரம்' சுண்டல் (கரம் சுண்டல்) மற்றும் கிளிச்சொண்டு மாங்காய் (வாய் ஊறுகிறதா? அதுதான் மாங்காய்) விற்பார். அவரது தள்ளுவண்டியில் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் கிரிக்கட் போட்டி நடைபெறுவது பொன்ற ஒரு படம் வரையப்பட்டிருக்கும். அவர் விற்கும் அந்த மாங்காய் எல்லாப்பக்கத்திலும் சிறு கீறுகளாக வெட்டி அதற்கு உப்பும் தூளும் கலந்த கலவையை கொட்டி தின்னும் போது நாம் ஏதோ இவ்வுலகில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறோம் என்றதொரு மாய உணர்வு. அப்போதெல்லாம் இதுதான் எமக்கு உலகமாக இருந்தது. என்ன செய்வது எமக்கு அந்த நேரங்களில் எதையும் சிந்திக்கும் ஆற்றல் இருக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீரரை பிடிக்கும். சில வீராகளின் அதிரடி பிடிக்கும். சில வீரர்களின் துல்லியமான பந்து வீச்சு பிடிக்கும்.


பொதுவாக அந்தக்கால கட்டத்தில் ஷப்றா, ஜொனியன்ஸ், சென்றலைட்ஸ், பல்கலைக்கழக அணி, ஜொலிஸ்ரார், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி (KCCC) , மானிப்பாய் பரிஷ், பற்றீசியன்ஸ், ஸ்ரான்லி, தெல்லிப்பளை கிறாஸ்கொப்பர்ஸ், மல்லாகம் RDS , வட்டுக்கோட்டை ஒல்ட்கோல்ட்ஸ், மேலும் சில அணிகள் சில சுற்றுப்போட்டிகளுக்காக மட்டும் களம் இறங்கி விளையாடும். ஒவ்வொரு அணியிலும் ஒரு சில பிரபலம் வாய்ந்த வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இப்பொழுது எங்கு இருக்கிறார்களோ தெரியாது. சில வேளைகளில் அவர்கள் கூட இதனை வாசிக்கலாம். அந்த வீரர்கள் எல்லாம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்கள்தான். இவர்களுக்கென்றே சில ரசிகர்கள் வட்டம் இருக்கும். பொதுவாக 40 வயதை தாண்டிய ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்கமுடியாதது. வீரர்கள் ஆட்டமிழந்தால் அவர்களின் பிரதிபலிப்புகள் சுவாரசியமாக இருக்கும். அவர்கள் உச்சு கொட்டுவதும், அவர்களின் ஏமாற்றங்களும் முகத்தில் தெரியும்.


அந்தக்காலத்தில் விளையாடி ரசிகர்களின் இதயம் வென்ற சில பிரபலங்கள் இவை. 1991ம் ஆண்டிற்கு பின்னராக இருந்தவர்களில் எனது ஞாபகத்தில் வந்தவர்கள். சில பிரபலங்கள் நிஜமாகவே ஞாபகங்களுக்கு அப்பால் சென்று விட்டார்கள்.
ஜொனியன்ஸ் அணியில் அப்போது சூரியகுமார்,பிரஷாந்தன், காண்டீபன்,பரிசித்து,நரேஷ், அகிலன்,சிவசுதன், (நரேஷ், அகிலன்,சிவசுதன் இவர்கள் பல்கலைக்கழக அணியிலும் அங்கம் வகித்தவர்கள்) இன்னும் பலர் எனது ஞாபகங்களுக்கு எட்டாமல் உள்ளனர். (தெரிவித்தால் அதனை நன்றியுடன் இணைத்துக் கொள்வேன்).
நினைவுகள் வருடப்படும்......................