ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009
பங்களாதேஷின் பாய்ச்சல்...!
இந்தியா வென்றால் இணையம் எல்லாம் அலறும். தோற்றால் கதறும். அதோடு நக்கல் பதிவுகளும் பளிச்சிடும். ஆஸ்திரேலியா வென்றால், மீண்டும் அசத்தல் என்று அதிரடி பதிவுகள் வரும். இலங்கை வென்றால், அவர்களுக்கு என்னவோ இப்ப வெற்றிகள்தான் அடிக்கடி என்பது போல கட்டுரைகள் வரும். ஆனால் பங்களாதேஷ் வென்றுவிட்டது. எங்கும் எதிலும் பதிவுகளோ ஆர்ப்பாட்டங்களோ இல்லை. காரணம் ஒன்று அது பங்களாதேஷ் தானே என்கிற இளப்பம். இரண்டாவது அது பெற்ற வெற்றி மேற்கிந்தியரின் இரண்டாம் தர அணியுடன் தானே என்ற ஏளனம்.
பங்களாதேஷ் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் மேற்கிந்தியரை வாரிச்சுருட்டி விட்டது. டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்றும் ஒருநாள் போட்டிகளில் 3-0 என்றும் WHITE WASH அடிப்படையில் மேற்கிந்தியரை மண்கவ்வச் செய்தது.
ஒரு காலத்தில் கிரிக்கட்டின் ஜாம்பவான்கள் மேற்கிந்தியர்கள். அதுவும் அவர்கள் மண்ணில் அவர்களை அசைப்பது கடினம். அவர்களின் எகிறுப்பந்துகளுக்கான ஆடுகளங்களில் ஆசிய அணிகள் உட்பட அனைத்து அணிகளும் தடுமாறித்தான் இருந்தது. விக்கட்டுகளை வீச்சாளர்கள் பதம்பார்க்கிறார்களோ இல்லையோ துடுப்பாட்டக்காரர்களை பௌன்சர் பந்துகளால் மிரட்டுவர். இதனால்தானோ என்னவோ விக்கட்டுகள் எடுப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. துடுப்பாட்டமும் அதிரடிதான். அவர்கள் ஆடும் பாணி எல்லோரையும் விட வித்தியாசமானது. எல்லோரும் ஜாம்பவான்கள். அடித்து நொருக்கும் வல்லமை படைத்தவர்கள்.
ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழ். குறிப்பாக 1990 களின் ஆரம்பத்தில் இருந்து இந்த சரிவினை மேற்கிந்தியர்கள் சந்தித்து வருகின்றனர். பந்துவீச்சில் ஓரளவு அசத்தினர். அதுவும் அம்புறோஸ், வோல்ஷ், பிசப் ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் அதிலும் அவர்களுக்கு சரிவே. ஆங்காங்கே லாரா தனி ஒருவராக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அவர்களின் துடுப்பாட்டம் இன்னமும் மறையவில்லை என காட்டுவார். அவரோடு சந்தர்போல் உம் தம்பங்கினை சரிவர செய்தார். இப்போதும் செய்தும் வருகிறார். இவைகளைத் தவிர மேற்கிந்தியரின் சாதனைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லைத்தான். காரணம் தேடிப்போனால் நிறைய இருக்கிறது. அவர்களுடைய கட்டுப்பாட்டுச்சபையினுடைய அக்கறையின்மை காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன். அதேவேளை அந்த அணி வீரர்கள் அனைவரும் விளையாட்டாய் விளையாட்டாய் விளையாடுவது. இதுதான் அவர்களின் பலமும் பலவீனமும். இன்னும் நிறைய காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது பற்றி பின்னர் ஒருமுறை பார்க்கலாம்.
பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை எதிர்பார்ப்புகளோ அழுத்தங்களோ அற்ற அணி. அவர்கள் தோற்றாலும் அவர்களுக்கான விமரிசனங்கள் குறைவாகவே இருக்கும். அது அவர்களைப் பொறுத்தவரை ஒரு கவலையற்ற விடயம். ஆனால் பெரிய அணிகள் அவ்வாறில்லை. தோற்றால் போதும் ஊடகங்களோ ரசிகர்களோ வறுத்தெடுத்துவிடுவார்கள். மிகுந்த அழுத்தம் அவர்களுக்கு சிறிய அணிகளுடன் விளையாடும் போது இருக்கும். ஆனால் அவர்கள் இலகுவில் வெற்றி பெற்றுவிடுவார்கள் காரணம் அவர்களின் அனுபவம். கத்துக்குட்டிகளாக இருக்கும் சிறிய அணிகள் பெரும் அணியுடன் விளையாடுகிறோம் என்ற பயத்திலேயே விளையாடுவார்கள். வெற்றிக்கான ஒரு வாய்ப்பு இருந்தால் என்ன விலை கொடுத்து என்றாலும் பெறத்தயங்காமல் விளையாடுவார்கள். இதற்கு நல்ல உதாரணமாக அமைந்த போட்டிகள் தான் அண்மையவை.
இந்த போட்டிகளை கவனித்தவர்களுக்கு தெரியும். முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடி மேற்கிந்தியரை அசத்தலான பந்துவீச்சில் துவைத்தெடுத்துவிட்டது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் விரட்டினார்கள் அவர்களின் ஓட்ட எண்ணிக்கையை. இரண்டும் பெரிய இலக்குகள். அவரவர் தங்கள் தங்கள் பங்கிற்கு துடுப்பெடுத்தாடி அணியை கரைசேர்த்தனர் வெற்றியை நோக்கி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அணியை வழிநடத்தி ஒருநாள் போட்டித்தொடரிலும் வெற்றிக்கனியைத் தேடித்தந்த பெருமைக்குரிய அணித்தலைவராக ஸகிப் அல் ஹசன் திகழ்கிறார். மிக இளம் வயதிலே இப்படி ஒரு வெற்றியைத் தேடிகொடுத்திருக்கிறார். முன்னாலே இருந்து வழிநடத்தி சகலதுறைகளிலும் பிரகாசித்தார்.
பங்களாதேஷ் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது 2000ம் ஆண்டில். இன்று வரை அது 61 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கின்றது. இதில் கடைசியாகப் பெற்ற வெற்றிகளுடன் அது மொத்தம் 3 போட்டிகளில் வென்றுள்ளது. அதில் இறுதியாக பெற்ற வெற்றி ஒரு தொடர் வெற்றி. அதுவும் வெளிநாட்டு மண்ணில். பொதுவாக ஆசியர்கள் வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்வது மிகவும் சவாலான விடயம். இப்போது பங்களாதேஷ் அணி அதனை சாதித்துவிட்டது. அவர்களுக்கு இப்போ உளவுரன் அதிகாமாகி இருக்கும். இது அடுத்துவரும் போட்டித்தொடர்களில் நிறைய எதிர்பார்ப்புகளைக் கூட்டும். அடுத்து வரும் தொடர்களை அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது சவாலான விடயமே.
மேற்கிந்திய அணியைப் பொறுத்தவரை அந்த அணி இரண்டாம் தர அணி என்ற ஒரு நிலை இருக்கிறது. ஆனால் அதில் அனேகம் பேர் முன்பு தேசிய அணிக்காக விளையாடி இருக்கிறார்கள். அனுபவம் குறைவுதான். அதுவும் வங்க தேச அணிக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதை அவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். எது எவ்வாறாகினும் பங்களாதேஷ் வென்றுவிட்டது. அவ்வளவுதாங்க. இனி எவ்வாறு இந்த வெற்றி முகத்தை தக்கவைக்கிறார்களோ என்று பார்ப்போம்.
சனி, 20 ஜூன், 2009
அரையிறுதியும் இறுதியும்.....!
நேற்றைய 20-20 அரையிறுதிப்போட்டியில் மேற்கிந்தியா தோற்க வேண்டும் என்று விளையாடி அதில் வெற்றி கண்டு இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் தமது நாடு திரும்புகிறார்கள். சிறீலங்கா வெல்ல வேண்டும் என்று விளையாடி அதிலே வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்கிறார்கள். அங்கே பாகிஸ்தானுடன் மோத உள்ளார்கள்.
வியாழன், 12 மார்ச், 2009
கிரிக்கெட்டில் ஒரு சாதனைப் போட்டி..!
கிரிக்கட் வரலாற்றில் ஓர் பொன்நாள். சாதனை ஏட்டின் சரித்திரநாள். அதுதான் 12.03.2006. ஆம் இந்தத் திகதியில் தான் அந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி நடைபெற்றது. தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதின. இது ஒருநாள் போட்டி வரலாற்றின் 2349வது போட்டி. ஏற்கனவே இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் இந்த 5வது போட்டி மிகமிக முக்கியமானதாக இருந்தது. தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ் பேர்க் நகரின் புதிய வொன்டரஸ் அரங்கத்தில் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. அனல் பறக்கும் போட்டியாக இது அமையும் என்பதால் 32000 ற்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கில் காத்திருக்கிறார்கள். அணிகளும் தயாராகின. நாணயச் சுழற்சியில் ஆஸ்திரேலியா அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இல்லை. 4வது போட்டியில் விளையாடிய அதே அணி. ஆனால் தென்னாபிரிக்காவுக்கு ஆரம்பமே சவால்தான். சகலதுறை ஆட்டக்காரர் பொல்லக் அணியில் இல்லை. அவரிற்குப் பதிலாக ஜோன் வன்டர் வாத் இணைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஆரம்ப ஜோடி கில்கிறிஸ்ட், மற்றும் சைமன் கட்டிச் களம் புகுந்தனர்.
முதலாவது பந்து வீச்சினை வீச மக்காயா நிற்ரினி தயாரானார். முதலாவது ஓவரின் நான்காவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தினை கில்கிறிஸ்ட் பெற்று கணக்கினை ஆரம்பித்தார். என்ரினியுடன் அன்ரூ ஹோல் இணைந்து பந்து வீசினார். இருவரும் ஆஸ்திரேலியருக்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை. பொல்லக் இல்லை என்ற துணிவில் ஆரம்ப ஜோடி அனாசயமாக அடித்தாடியது. ஓர் அட்டகாசமான ஆரம்பம். ஆரம்பமே அனல் பறந்தது. கில்கிறிஸ்டின் துடுப்பில் இருந்து பந்துகள் சீறிக்கொண்டு எல்லைக் கோடுகளைத் தொட்டது. 12வது ஓவரில் கில்கிறிஸ்ட் 35 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் அரைச் சதத்தைத் தொட்டார். 15 ஓவர் நிறைவில் இலக்கு நஷ்டமின்றி 96 ஓட்டங்கள். சிறந்த ஒரு அடித்தளம். ஆனால் அடுத்த ஓவரில் ரெலிமேக்கஸ் வீசிய பந்தினை கில் கிறிஸ்ட் அடிக்க அன்ருஹோல் ஒரு கையால் அற்புதமாக பிடியெடுக்க 1வது விக்கட் வீழ்ந்தது. அடுத்து கட்டிச் உடன் இணைந்தார் அணித்தலைவர் பொண்டிங்.
இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 93 ஓட்டங்களுக்குள் சுருண்டது, அவரின் மனதிற்குள் ரணமாக இருந்தது. இருந்தாலும் தனது கணக்கை ஆரம்பிக்க 7 பந்துகள் காத்திருந்தார். இதற்கிடையில் கட்டிச் தனது அரைச் சதத்தை 60வது பந்தில் 6 நான்குகள், ஒரு ஆறுடன் நிறைவு செய்தார். கட்டிச்சின் அரைச்சதத்தை பொண்டிங் ஒரு நான்குடன் கொண்டாடினார். அந்த நான்குடன் பொண்டிங் ஒரு தெம்பு பெற்றார். அதை 22வது ஓவரில் ரெலிமேக்கஸ் இன் பந்துக்களில் 3 நான்கு ஓட்டங்களைப் பெற்று நிரூபித்தார். பிறகென்ன ஆட்டம் சூடுபிடித்தது. மளமளவென்று ஓட்டங்கள் ஏறின. இதற்கு சான்றாக கலிஸின் ஒரு ஓவரில் பொண்டிங் 2 ஆறு ஓட்டங்களை அடுத்தடுத்து பெற்றார். இரண்டாவது ஆறுடன் தனது அரைச்சதத்தை அட்டகாசமாகக் கடந்தார். இதற்காக பொண்டிங் 43 பந்துகளை எதிர்கொண்டார். 6 நான்குகள், 2 ஆறுகள் அடக்கம். இந்தத் தெம்புடன் பொண்டிங்கின் துடுப்பு சுழன்றது. ஓட்டங்கள் இலகுவாகக் கிடைத்தன. அப்போது கட்டிச் 79 ஓட்டங்களுடன் என்ரினியின் பந்தில் ரெலிமேக்கஸிடம் பிடிகொடுத்து அவுட்டானார்.
44வது ஓவரின் இறுதிப்பந்தில் பொண்டிங்கின் அடித்த ஆறுடன் ஆஸ்திரேலியா 350 ஐக் கடந்தது. அடுத்த பந்தில் என்னாலும் இயலும் என்று ஹசியும் தன்பங்கிற்கு ஒரு ஆறு ஓட்டத்தை அரங்குக்குள் அடித்து பெற்றார். ஒவ்வொரு ஓவரிலும் ஆறுகள், நான்குகளுக்கு பஞ்சம் இல்லை. பந்துகள் பஞ்சாய் பறந்தன. அணி 374 ஓட்டங்களை பெற்ற போது ஹோலின் பந்தில் என்ரினியிடம் பிடிகொடுத்து ஹசி ஆட்டமிழந்தார். ஹசி 51 பந்தில் 81 ஓட்டங்களை பெற்றார். இவர் பொண்டிங்குடன் இணைந்து 97 பந்தில் 154 ஓட்டங்களை இணைப்பாட்டத்தின் மூலம் தமக்குள் பகிர்ந்து கொண்டார். அவர் ஆட்டமிழந்தால் என்ன நான் இருக்கிறேன் என்பது போல ஹோலின் பந்தில் ஒரு ஆறை அடித்து தனது 150 ஓட்டங்களைக் கடந்தார் பொண்டிங். அடுத்து சைமன்ட்ஸ் வந்து பொண்டிங்குடன் இணைந்தார்.
ஆஸ்திரேலியா அணி வீரர்களின் ஓய்வு அறையில் வீரர்கள் மிகவும் குதூகலமாக இருந்தார்கள். தாம் ஒரு உலக சாதனையை நிகழ்த்திய பெருமிதம் இருந்தது. பொதுவாகவே ஆஸ்திரேலியர்களுக்கு இருக்கும் ஏளனப்பார்வைகள் அன்றைக்கு சற்று அதிகமாகவே இருந்தது. ரசிகர்கள் போல் தாமும் வாய்க்குள் விரல் வைத்து விசில் அடித்து சாதனையை கொண்டாடினர். முன்னதாக புகழ்பெற்ற வர்ணனையாளர் ரொனிகிரேய்க் 31வது ஓவர் நடந்து கொண்டு இருந்த போது ஆஸ்திரேலியர்களின் ஆட்டத்தை நன்கு கணித்து இலகுவாக 400 ஓட்டங்களைப் பெறுவார்கள் என்று ஆரூடம் சொன்னதை ஆஸதிரேலியர்கள் நிரூபித்தனர். ஆஸ்திரேலியர்கள் மீண்டும் தாங்கள்தான ஒருநாள் ஜாம்பவான்கள் என்பதை வொன்டரர்ஸ் அரங்கில் காட்டினர். ஆஸதிரேலியர்கள் ஆட்டம் ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமைந்தது. தென்னாபிரிக்க ரசிகர்களுக்கு ஆத்திரமாகவும் அவமானமாகவும் இருந்தது. இந்த சாதனையை தமக்கு எதிராக பெற்றுவிட்டார்களே என்று. இருந்தாலும் என்னதான் நடக்கும் என்று பொறுமையுடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.
இனி ஆஸ்திரேலியா களத்தடுப்பு. தென்னாபிரிக்கா துடுப்பாட்டம். ரசிகர்கள் நெஞ்சில் கலக்கம். இந்த ஓட்ட எண்ணிக்கையை இவர்களால் எட்ட முடியுமா? அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக.... பொதுவாக வெற்றி இலக்கு 300 ஐ கடந்தாலே ஒரு உளவியல் அழுத்தம் வந்துவிடும். இந்த அழுத்தத்திற்குள் எதை சாதிக்க போகிறார்கள்... களமிறங்கிய ஆஸதிரேலிய அணிவீரர்களின் முகத்தில் ஒரே மகிழ்ச்சி. அனைவரும் சிரித்த முகத்துடன் இருந்தனர். இது வேறு தென்னாபிரிக்கர்களை வெறுப்பேற்றியது.
இருவரும் இணைந்து 128 பந்துகளில் 187 ஓட்டங்களை மணியாக சேகரித்த போது 23வது ஓவரில் ஸ்மித் கிளார்க வீசிய முதற்பந்தை ஆறாக மாற்ற முனைந்தார். உயர்ந்து சென்றதை எல்லைக்கோட்டிற்கு மிகமிகமிக அருகே வைத்து ஹசி அதனை அழகாக பிடி எடுத்தார். ஆக வெறும் 55 பந்தில் 13 நான்குகள் 2 ஆறுகள் அடங்கலாக 90 ஓட்டங்களுடன் ஸ்மித் அவுட்டானார். தென்னாபிரிக்க 190/2. ஸ்மித் அவுட்டான அடுத்த பந்தில் கிப்ஸ், ஸமித்தை எடுத்து விட்டீர்கள் , உங்களுக்கு தலையிடியாக நான் இருப்பேன் என்பது போல அரங்குக்குள் அடித்து அட்டகாசமான ஆறு ஓட்டத்தை பெற்றார். அந்த ஓவரின் இறுதியிலேயே தென்னாபிரிக்கா 200 ஐ கடந்தது. 23 ஓவர் நிறைவில் 200/2.
முன்பும் இப்படித்தான் 99ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்டீவ் வோவின் பிடியை கிப்ஸ் தவற விட உலகக்கோப்பை ஆஸ்திரேலியர்கள் வசமானது. இப்போது பிராக்கன். உண்மையில் ஆஸதிரேலியர்கள் அசந்துதான் போனார்கள். பந்தை எங்கு விழுத்தினாலும் கிப்ஸ் அதை எல்லைக் கோட்டிற்கு அனுப்பத் தவறுவதில்லை.
31வது ஓவரில் பிராக்கன் வீசிய பந்தை கிளார்க்கிடம் பிடி கொடுத்து டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். அந்த ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 284/3. அடுத்த ஓவர் சைமன்ட்ஸ் இனுடையது. கிப்ஸ் அடுத்தடுத்து 2 ஆற ஓட்டங்களைப்பெற்றார். அதற்கடுத்த பந்தில் பிரடலீயிடம் பிடி கொடுத்து கிப்ஸ் ஆட்டமிழந்தார். அப்போது கிப்ஸ் 111 பந்துகளில் 21 நான்குகள், 7 ஆறுகள் அடங்கலான அற்புதமான 175 ஓட்டங்களை குவித்திருந்தார். இது அவருடைய சொந்த அதிக பட்ச ஓட்டமாகும். உண்மையில் கிப்ஸின் ஆட்டம் மிக அற்புதமான ஆட்டம். அவர் ஆஸ்திரேலியர்களுக்கு நிறையவே நெருக்கடிகள் கொடுத்தார். அவரின் ஆட்டமிழப்பு ஆஸ்திரேலியர்களை நம்பிக்கையுற வைத்தது.
இப்போது வெற்றிபெறத் தேவையான ஓட்டவிகிதம் சரியாக 11. அதாவது 7 ஓவர்களில் 77 ஓட்டங்கள் தேவை. கையில் இருப்பது 4 விக்கட்டுகள். கதிரையின் விளிம்பில் ரசிகர்கள். ஆஸ்திரேலியர்களுக்கு நம்பிக்கை துளிர் விட்டது. பவுச்சர் தான தலையிடி கொடுப்பார். இன்னமும் 4 விக்கட்டுக்கள். மறுபுறத்தால் கழட்டினால் வெற்றி நமதே. இது பொண்டிங்கின் நினைப்பு. பவுச்சருடன் இணைந்த வனடர் வாத், பொண்டிங்கின் நினைப்பில் மண் அள்ளிப்போட்டார். ஆறுகள், நான்குகள் பறந்தன. இரண்டு ஓவர்களில் 3 ஆறுகள், 1 நான்கு பெற்றார். வன்டர்வாத்தின் துடுப்பாட்டம் போட்டியை ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பறித்தது. 42 பந்தில் 72 ஓட்டஙகள் தேவை என்ற நிலையை இவரும் பவுச்சரும் சேர்ந்து அற்புதமாக ஆடி 24 பந்தில் 38 ஓட்டங்கள் என்ற நிலைக்கு மாற்றினர். 46 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 397/6.
இரண்டாவது தடவையாக ஒருநாள் போட்டிகளில் 400 ஓட்டம். அதுவும் ஒரே போட்டியில். பரபரப்பான போட்டி விறுவிறுப்பின் விளிம்பில் ரசிகர்கள். எதுவும் நடக்கலாம. ரெலிமேக்கஸும் பவுச்சரும் நான்குகளாக அடித்து வெற்றியை நெருங்கினர். 48வது ஓவரில் பவுச்சர் இரண்டு நான்குகள், ரெலிமேக்கஸ் ஒரு நான்கு. இந்த ஓவரில் தான் ஒரு தவிர்க்க முடியாத சாதனை. அவுஸ்திரேலியாவின் மிக்லூயிஸ் என்ற பந்து வீச்சாளர் அள்ளி அள்ளி ஓட்டங்களை வழங்கியோரின் சாதனையில் முதலாவதாக திகழ்ந்தார். இலங்கை அணியின் முரளீதரனின் 10 ஓவரில் 99 ஓட்டங்கள் கொடுத்த சாதனையை கடந்து 113 ஓட்டங்களை வாரி வழங்கினார். முன்பு 1983ம் ஆண்டு மார்க் ஸ்னெடீன் என்ற நியூசிலாந்து வீரர் 12 ஓவரில் 105 ஓட்டங்களைக் கொடுத்தார். இப்போது எல்லோரையும் முந்தி லூயிஸ் பெரும் வள்ளல் ஆனார்.
இறுதி ஓவர். தேவை 7 ஓட்டங்கள். ஒருநாள் போட்டியில் எதுவும் நடக்கலாம் ஆனால் தென்னாபிரிக்கா இப்போது தோற்றால் மீண்டும் ஒருதடவை பரிதாபத் தோல்வி. ரசிகர்களுக்கும், அணி வீரர்களுக்கும் திருப்தியான விடயம், பந்து வீச்சை எதிர் கொள்பவர் பவுச்சர். பந்து பிரட்லீயின் கையில். முதற்பந்தை பவுச்சர் ஓங்கி அடிக்க லீ தனது காலாலேயே தடுக்க ஒரு ஓட்டம் மட்டும் தான். இப்போது ஹோலின் முறை. 5 பந்தில் 6 ஓட்டங்கள். என்ன ஒரு போட்டி அரங்கம் கடும் பரபரப்புக்கு மத்தியில் உற்சாகப் படுத்தியது. லீயின் இரண்டாவது பந்தில் ஹோல் ஓங்கி அடித்து 4 ஓட்டம் பெற்றார். ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். அணி வீரர்கள் தமது ஓய்வறையில் ஆரவாரித்தனர். இலகுவாக வெற்றி கிடைக்கப் போகிறது. 4 பந்தில் இரண்டு ஓட்டங்கள். லீயின் அடுத்த பந்தில் ஹோல் ஓங்கி அடிக்க கிளார்க் அதனை பிடி எடுக்க ஹோலும் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா 433/9. அற்புதமான போட்டி. இப்போது போட்டி அவுஸ்திரேலியாவிடம். காரணம் துடுப்பாடவிருப்பவர் மக்காயா நிற்ரினி. எல்லோரும் எதிர்பார்த்தது தென்னாபிரிக்கா தோல்வி. இந்தப்பந்து லீயின் கதாயுதமான யோக்கர் பந்தாக இருக்கும். அதில் நிற்ரினி அவுட. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போல் லீ அப்படி பந்து வீசவுமில்லை. நிற்ரினி அவுட்டாகவுமில்லை. மாறாக ஒரு ஓட்டம் பெற்றார். இப்போது ஓட்ட எண்ணிக்கை சமம் 434/9. நிற்ரினி களமிறங்கும் போது தென்னாபிரிக்கா அணி வீரர்கள் முகத்தில் இறுக்கம். இப்போது துள்ளிக் குதித்து ஆரவாரித்தனர். வெற்றி இல்லை என்றாலும் சமம் என்ற கௌரவம். ஆனால் அடுத்த பந்தில் சரித்திரம் எழுதினார் பவுச்சார். ஓங்கி அடிக்கப்பட்ட பந்து எல்லைக் கோட்டை கடக்க தென்னாபிரிக்கா 438/9.
ஒரு பந்தும் ஒரு விக்கட்டும் மீதம் இருக்க மகத்தான வெற்றி. தென்னாபிரிக்கா வரலாறு படைத்தது. அந்த நான்குடன் பவுச்சரும் 50 ஓட்டத்தை பெற்றார். பவுச்சரின் பொறுப்பான ஆட்டம் வெற்றியைத் தேடித்தந்தது.
பவுச்சர் ஓங்கி அடித்ததும், ஓய்வறையில் நின்ற வீரர்கள் மைதானத்திற்குள் பாய்ந்து சென்று கட்டித்தழுவி வெற்றியைக் கொண்டாடினர். 400 ஓட்டங்கள் அடிப்பது சிரமம. உலகின் முன்னனி அணியான அவுஸ்திரேலியா அணி அதனை அடித்து தன்னை நிரூபித்தது. அதே போட்டியில், அதே அவுஸ்திரேலியாவிற்கு நீங்கள் அடிக்கும் போது எங்களுக்கு எப்படி இருந்தது என்று தாமும் 400 ஐ அடித்து வெற்றி பெற்றனர். சரித்திர வெற்றி.நிச்சயமாக ஆட்ட நாயகன் கிப்ஸ். ஆனால் மத்தியஸ்தர் ரிக்கி பொண்டிங், மற்றும் கிப்ஸ் இருவருக்கும் வழங்கினார்.
இதில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 872 ஓட்டங்களை 13 விக்கட்டுகளை இழந்து பெற்றனர். தென்னாபிரிக்கா மொத்தம் 44 பவுண்டரிகள், 12 ஆறுகள் பெற்றனர். மொத்தமாக இந்தப் போட்டியில் 87 நான்குகளும், 26 ஆறுகளும் குவிக்கப்பட்டன. தென்னாபிரிக்கா அணி ஆகக் கூடிய மொத்த ஓட்ட எண்ணியையும், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிகூடிய ஓட்டம் என்ற சாதனையையும் தனதாக்கியது.
இது சாதனைகளின் சிகரமாக அமைந்த போட்டி. மொத்தத்தில் ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமைந்தது.
இந்த பதிவு 2006 ல் இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளிவந்த "வேடிக்கை" திங்கள் இதழில் வெளிவந்தது. இது நீண்ட பதிவுதான். ஆனால் தவிர்க்க முடியவில்லை. இதனை தட்டச்சு செய்து உதவிய நண்பன் தீபனுக்கு நன்றிகள்.
செவ்வாய், 30 டிசம்பர், 2008
ஆடிப்போனது ஆஸ்திரேலியா...!
ஆஸ்திரேலியாதான் உலகின் முதல்தர அணி என்ற மகுடம் மெதுவாக சரிந்து கொண்டிருக்கிறது. இப்போது தென்னாபிரிக்காவின் கை ஓங்கியே வருகிறது.தென்னாபிரிக்காவிற்கு இமாலய தொடர் வெற்றி. மெல்பேர்ன் மைதானத்தில் இன்றைய வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு பேரிடியாக மாறி உள்ளது. பெரும் தலைகள் உருளும் அபாயம் தோன்றியுள்ளது. குறிப்பாக மத்யூ ஹைடன். இவரின் கடைசி 15 இன்னிங்ஸ்சில் வெறும் 313 ஓட்டங்களே பெற்றார். இது ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்க்க முடியாத பெறுதி. இப்பொழுதே விமரிசனங்கள் பலவாறாக எழத்தொடங்கிவிட்டன. இப்போது ஹைடன் தலைவிதி தேர்வாளர்களின் கைகளில். வயதும் 37ஐத் தாண்டி விட்டது. பார்ப்போம்.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்சில் சற்று பலமாக இருப்பதாகவே பட்டது. பொண்டிங் பெற்ற வேகமான சதம் (101), கிளார்க்(88) மற்றும் கட்டிச்(54) பெற்ற அரைச்சதங்கள் 394 என்ற ஓட்டங்கள் பெற உதவின. டேல் ஸ்ரைன் தன் பங்கிற்கு 5 விக்கட்டுக்களை சாய்த்தார். தென்னாபிரிக்க துடுப்பாட்டத்தில் சொதப்பியது. கிறீம் ஸ்மித் பெற்ற 62 ஓட்டங்கள் தவிர மற்றவர்கள் சோபிக்கத்தவறினர். 184-7 என்ற ஒரு மோசமான நிலையில் இருந்தனர். களத்தில் இருந்த போல் டும்னி பின்னால் வந்த வீரர்களை தன்னோடு சேர்த்து அனாசயமாக விளையாடினார். ஆஸ்திரேலியா பந்து வீச்சுகளை துவம்சம் செய்து மெதுவாக முன்னேறினர்.

யாருமே எதிர்பார்க்க முடியாத இணைப்பாட்டம் ஒன்றினை டும்னியும் டேல் ஸ்ரைனும் ஏற்படுத்தி ஆஸ்திரேலியாவிற்கு தலையிடி கொடுத்தனர். இருவரும் தம்மிடையே 180 ஓட்டங்களை பகிர்ந்தனர். டும்னி தன்னுடைய கன்னி சதத்தைப் பெற்றார். ஸ்ரைனும் தன்னுடைய கன்னி அரைச்சதத்தைப் பெற்றார். ஒரு ஆஸ்திரேலியர் CricInfo இணையத்தளத்தில் எழுதியிருந்தார். ஸ்ரைன் சதம் அடித்தால் தான் ஆஸ்திரேலியாவிற்கான தந்து குடியுரிமையை கைவிடப்போவதாக. அந்தளவு கடுப்பில் ஆஸ்திரேலியர் இருந்தனர். ஆனால் தூரதிஷ்டவசமாக ஸ்ரைன் சதம் பெறாமல் 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டும்னியும் 166 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா இப்போது 459 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பந்துவீச்சில் சிடில் 4, ஹோரிட்ஸ் 3. ஆஸ்திரேலியவின் இரண்டாவது இன்னிங்ஸ் முதலாவதை விட மோசமாக இருந்தது. விக்கட்டுகள் ஒரு சீரான இடைவெளிகளில் வீழ்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் முதல் இன்னிங்ஸ்சில் சதமடித்த பொண்டிங் இம்முறையும் பொறுப்பாக விளையாடினார். ஆனால் மனிதர் தன்னுடைய 38வது சதத்தை வெறும் ஒரு ஓட்டத்தால் தவறவிட்டார். இப்போ ஆஸ்திரேலியா 247 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. வெற்றி இலக்கான 183 இனை தென்னாபிரிக்கா ஒரு விக்கட்டை மட்டும் இழந்து பெற்றனர். மகத்தான வெற்றி தென்னாபிரிக்காவிற்கு. அது மட்டுமல்ல தொடரையும் கைப்பற்றிவிட்டனர்.
- மைக்கல் ஹசி, மத்யூ ஹைடன் துடுப்பாட்ட பெறுதிகள் மிக மோசமாக உள்ளது. பந்து வீச்சில் பிரெட் லீ இடையில் காயப்பட்டு அதிக நேரம் பந்து வீசவில்லை.
- ஆஸ்திரேலியாவில் வைத்து தென்னாபிரிக்கா பெற்ற முதலாவது தொடர் வெற்றி இது.
- ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் 1991-92 பருவகாலத்தில் மேற்கிந்தியரிடம் 2-1 என தோற்ற பின்னர் ஒருதொடரை இழப்பது இதுவே 17வருடத்தின் பின் முதல் தடவை.
- கடைசியாக விளையாடிய 10 தொடர்களில் தென்னாபிரிக்கா இன்னமும் ஒரு தொடரை தன்னும் தோற்கவில்லை.
- இந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் ஸ்மித் 15 போட்டிகளில் 1656 ஓட்டங்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். பந்து வீச்சில் டேல் ஸ்ரைன் 13 போட்டிகளில் 74 விக்கட்டுக்கள் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியர் காலம் அஸ்தமித்து கொண்டு வருகிறதா என எண்ணத் தோன்றுகிறது. தோல்வியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா அண்மைக்காலமாக தடுமாறியே வருகிறது.
தென்னாபிரிக்காவும் இந்தியாவும் பெரும் எழுச்சி கண்டுள்ளன. அடுத்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் தொடரின் எல்லாப் போட்டிகளையும் வென்ற White Wash வெற்றி. இது ஆஸ்திரேலியாவின் முதலாம் ஸ்தானத்தை தகர்க்கலாம். அடுத்த போட்டி சிட்னி மைதானத்தில் புதுவருடத்தில் ஜனவரி 3. இந்த வருடம் ஆஸ்திரேலியர்களுக்கு பெரும் சோதனை வருடம். இந்தையாவிடம் தொடர் தோல்வி. இப்போ தென்னாபிரிக்காவிடாம். மீண்டும் ஆஸ்திரேலியா துளிர்க்குமா? அல்லது வாடிவிடுமா?
ஞாயிறு, 21 டிசம்பர், 2008
அசத்தியது தென்னாபிரிக்கா.................! அச(சை)ந்தது ஆஸ்திரேலியா.................!!
புதன், 17 டிசம்பர், 2008
ராகுல் ட்ராவிட்: காலம் முடிகிறதா...?

1996ம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடிய போது இரண்டு புதிய வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஒருவர் சவுரவ் கங்குலி. இன்னுமொருவர் ராகுல் ட்ராவிட். முன்னவர் வங்கதேசம் பின்னவர் கர்நாடக மாநிலம்.
இந்த இருவரும் தமக்கு தந்த பணியை செவ்வனே செய்தனர். கங்குலி ஓய்வும் பெற்றுவிட்டார். ஆனால் ட்ராவிட் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் அதேவேளை அவருக்கான ஓய்வு நேரம் நெருங்குகிறதா? அல்லது கட்டாய ஓய்விற்கு தள்ளப்படுவாரா என்ற பல கருத்துக்கள் எழுந்துள்ளது.
இந்தியாவின் துடுப்பாட்ட சுவர் (BATTING WALL) என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். நிதானமாக தொடங்குவார். பின்னர் களத்தில் இவர் நின்றால் ஓட்டம் ஏறுவது தெரியாது. அதிரடியும் இல்லை. ஆமை வேகமும் இல்லை. நிதானமாக ஓட்டங்களை குவித்து எதிரணியை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவார். இவரால் இந்தியா பெற்ற வெற்றிகள் ஏராளம். ஏன் தனித்து நின்றே வெற்றிகளைக் குவித்து இருக்கிறார். அப்துல் ஜபார் தமிழில் அழகாக சொல்வதானால் மிகச்சிறந்த மட்டையாளர்.
சிறிதுகாலமாகவே ட்ராவிட் உடைய மட்டை ஓட்டங்களை சேகரிக்க தவறுகிறது. காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. இது ட்ராவிட்டுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஏன் தேர்வாளர்களுக்கு கூட சங்கடமாகத்தான் இருக்கிறது. அற்புதமான வீரர். Class is Permanent. Form is Temporary. ட்ராவிட் இடம் எப்போதும் தரம் இருக்கிறது. ஆனால் இப்போது நேரம் இல்லை. நன்றாக ஆடக்கூடியவர். ஆனால் இப்போது முன்பு மாதிரி இல்லை. 2006 ம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கான் சுற்றுப்பயணத்தில் இருந்து இந்த பிரச்சினையை ட்ராவிட் எதிர் கொள்கிறார் என்றுதான் கூறவேண்டும். அதற்கு முன்னதாக மேற்கிந்தியாவிற்கெதிரான தொடரை வராலாற்று வெற்றியாக படைத்ததில் ட்ராவிட்டின் துடுப்பாட்டமும் தலைமைத்துவமும் காரணம்.
2006 இறுதியில் தென்னாபிரிக்கத் தொடரில் இருந்து கடைசியாக சென்னையில் நடந்த இங்கிலாந்திற்கெதிரான போட்டி வரை உள்ள தொடர்களின் பெறுபேறுகள் கொண்ட அட்டவனை கீழே உள்ளது.
மேலுள்ள அட்டவணையில் இருந்து ட்ராவிட்டின் மோசமான பெறுபேறு பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். எல்லா காலத்திலும் எந்த துடுப்பாட்ட வீரனும் சாதிக்க முடியாதுதான். லாறா, சச்சின், பொண்டிங், சங்ககார போன்றவர்களும் சொதப்பித்தான் இருக்கிறார்கள். இவர்களை நினைத்து ரசிகர்களும் கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு தொடர்களுக்கு பிறகு தேறி விடுவார்கள். இப்போது ட்ராவிட் அப்படியும் இல்லை. போர்மில் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவரின் தரமான விளையாட்டிற்காகத்தான் இவ்வளவு நாளும் அணியில் சேர்த்திருந்தார்கள். அவர் மீண்டு வருவார் மீண்டு வருவார் என்றால் ட்ராவிட் மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்.
தென்னாபிரிக்காத் தொடருக்கு முன்னர் அவரது சராசரி 58.75 இப்போது அவரைப் பொறுத்தவரைக்கும் அதளபாதாளம். முன்பு தொடக்கத்திற்குத்தான் அதிக பந்துகளை சந்திப்பார். ஆனால் போகப்போக ஓட்டங்களை குவித்து 100 பந்துக்கான ஓட்டவீதத்தை(Strike Rate)நன்றாக பேணுவார். இப்போது துடுப்பாடும் போது கூட தெரிகிறது. தற்காப்பு ஆட்டமும், பதட்டத்துடனும் கூடிய நிதானமும் கொண்டதாக உள்ளது. சில வேளைகளில் ட்ராவிட் தானா இப்படி துடுப்பெடுத்தாடுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு துடுப்பாட்ட சுவர் சரிகிறது என்று எல்லோருக்கும் கவலை.

தேர்வாளர்களின் தலைவராக இப்போது ஸ்ரீகாந்த். இவர் மனது வைத்தாலே ஒழிய, மற்றபடி இந்த துன்ப நிலை நீடித்தால் ட்ராவிட் அடுத்த தொடருக்கு தெரிவு செய்யப்படுவது சந்தேகமே. ஏனெனில் புள்ளிவிபரங்கள் எல்லாம் ட்ராவிட்டுக்கு எதிராகவே உள்ளன. வரப்போகின்ற போட்டிகள் இந்தியா, இங்கிலாந்தை விட ட்ராவிட்டுக்கு கடும் சோதனையாக இருக்கும். சென்னையில் வெற்றி பெற்றதால் வெற்றி அணியை (WINNING COMBINATION) குலைக்காமல் விளையாடுவார்கள். ஒருவேளை தோற்றிருந்தால் நிலைமை வேறுமாதிரியாக மாறி இருக்கும்.
நல்ல துடுப்பாட்ட வீரனை இந்திய அணி இழக்கிறது என்ற வருத்தம் எல்லோரிடமும் உள்ளது. அதே நேரத்தில் வெளியே நிறைய இளைய வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரோகித் சர்மா, விராத் கோழி, விஜய், பத்ரிநாத், சுரேஷ் றைனா என நிறையவீரர்கள். ட்ராவிட் போல இவர்கள் எல்லாம் வருவார்களா? ட்ராவிட் இடத்தை நிரப்பமுடியுமா? என்றால் வாய்ப்பு கொடுத்துப்பார்த்தால்தான் தெரியும். அதேநேரத்தில் டோனியும் இளம் அணி இளம் அணி என அடம்பிடிப்பதால் தேர்வாளர்களும் அவர் பின்னால் நிறக நேரிடுகிறது. காரணம் இந்தியாவிற்கு எதிர்பாராமல் நிறைய வெற்றிகளைத் தேடித்தந்து விட்டார்

ஒருநாள் அணி. கதையே வேண்டாம் கனவில கூட ட்ராவிட் அந்த இடத்தை நினைக்க முடியாத அளவிற்கு துடுப்பாட்ட வரிசை உள்ளது. இப்போது பந்து ட்ராவிட்டின் துடுப்பை நோக்கி வீசப்படுகிறது. லாவகமாக தட்டிவிட்டு நான்கு ஓட்டத்தைப் பெற்று அணிக்குள் இருப்பாரா? அல்லது கிளீன் போல்ட் ஆகி வாழ்வை முடித்துக்கொள்வாரா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

(மீண்டும் வருவேன் என்கிறாரா? அல்லது போகிறேன் என்கிறாரா?)
மீண்டு வரவேண்டும் அதுதான் எல்லோர் விருப்பமும். மீண்டும் வரும் நேரத்தில் அவரைப் பற்றி மீண்டும் எழுதவேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது.
திங்கள், 24 நவம்பர், 2008
பொறுப்பற்ற ஆட்டம்....!


