செவ்வாய், 15 டிசம்பர், 2009

சைக்கிள் கனவு...!

அவன் தரம் 5 படித்துக் கொண்டிருந்தான். அந்த வருடத்தின் ஆவணி மாதத்தில் அவனுக்கு புலமைப்பரிசில் பரீட்சை. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை கல்விதான் மூலதனம். அத்திவாரமே மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என அவனின் பெற்றோர் நினைத்து அதிக ஆர்வத்தோடு கற்பித்தனர். காரணம் பல இருந்தது. பெரிய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வு. முதன்முதலில் சந்திக்கும் பெரும் பரீட்சை. இதில் சித்தியடைந்தால் தேசிய கல்லூரிகளில் அனுமதி கிடைக்கும். மாதந்தோறும் கல்விச்செலவுக்கு அரசின் ஊக்குவிப்புப் பணம். அவன் மனமோ சைக்கிள் வாங்க வேண்டும். இரண்டு கைகளையும் விட்டு விட்டு காற்றில் பறப்பது போல ஓட வேண்டும் என சதா எண்ணிக் கொண்டிருந்தது. தனது பெற்றோரிடம் கேட்டும் விட்டான். அவனுக்கு அவர்களின் பொருளாதார நிலைமை தெரிய வாய்ப்பில்லை. அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடும் ஒரு வறிய குடும்பம். ஆனால் அதனை அவனுக்கு தெரியப்படுத்தாமல், “நீ பரீட்சையில் சித்தியெய்தினால் உனக்கு புது சைக்கிள் நிச்சயம்” என தந்தை அவனுக்கு உறுதி மொழி அளித்தார்.

அவன் மனம், இப்போது மெதுவாக படிப்பில் கவனம் செலுத்தியது. ஓய்வு நேரத்தில் வந்து வீதியால் போய்வரும் சைக்கிள்களைப் பார்த்து தனது மனதைச் சாந்தப்படுத்துவான். இடைக்கிடை தகப்பனிடம் கேட்டு அவர் கொடுத்த வாக்கினை உறுதிப்படுத்திக் கொள்வான். பரீட்சையும் வந்தது. அன்றைய தினம் அவனை பரீட்சைக்கு தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக் கொண்ட சென்ற தந்தையிடம் “அப்பா வாங்கித்தருவீங்களா...?” என்று கேட்டுக் கொண்டே சென்றான். அவனிடம் தந்தையும் “ஓம் ஓம் ...” என்று பதிலளித்தார். பரீட்சை முடிந்தது. அவனுக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை...! அடிக்கடி எப்பொழுது பரீட்சை பெறுபேறு வரும் என்று அங்கலாய்த்தபடி இருந்தான். இப்போது தந்தைக்கு சிறு பயம் தொற்றிக் கொண்டது. மகன் சித்தியடைந்துவிட்டால் எப்படியும் வாங்கிக் கொடுக்க வேண்டும். சித்தியடையாவிட்டாலும் சைக்கிளை வாங்கிக் கொடுத்து அவனது கவலையை நீக்கவேண்டும். நண்பர்களிடத்திலும் தெரிந்தவர்களிடத்திலும் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

பரீட்சை மறுமொழி வரும் நாளும் வந்தது. அன்று அவன் கோவிலுக்கு சென்று விட்டு பாடசாலைக்குப்போய் அங்கே பெறுபேறுப் பட்டியலில் தன்னுடைய பெயரைத்தேடினான். 174 (200 இற்கு) புள்ளிகள் பெற்று அவன் முதலிடத்தில் தேறியிருந்தான். அவனுக்கு பரீட்சையில் சித்தியடைந்தது பெரிய விடயமாகத் தெரியவில்லை. தனக்கு சைக்கிள் வரப்போகுதே என்றே துள்ளிக் குதித்தான். அந்தச் சிறிய பாடசாலையில் அவன் மட்டுமே சித்தியடைந்தவன். ஆசிரியர்கள் தந்தையை பாராட்டினர். அவன் தந்தையின் கையைப் பிடித்து இழுத்து அவரை வேகப்படுத்தினான். தந்தையும் அவனை உச்சிமோந்து, தாயிடம் அழைத்துச் சென்று செய்தியைக் கூறிவிட்டு யாழ்நகரப் பட்டணம் சென்றார் சைக்கிள் வாங்க. தாயோ ஆனந்தக் கண்ணீர் மல்க அவனை கட்டியணைத்தாள்.

இவனும் வீட்டின் வாசலில் காத்திருந்தான். தந்தை வருவார். புதுச்சைக்கிள் தருவார். எல்லா இடமும் போய்வரலாம். முன்பு ஓடிப்பார்க்க சைக்கிள் கேட்டு தர மறுத்த நண்பர்கள் முன்னால் போய் ஓடிக்காட்டவேண்டும் என்று எண்ணி எண்ணி குதூகலித்திருந்தான். மாலையானது அப்பவைக் காணவில்லை. வருவார் வருவார் என்று பார்த்துக் கொண்டிருக்க அயலவர் ஒருவர் ஓடிவந்து “அக்கா....அக்கா...இப்ப பின்னேரம் யாழ்ப்பாணத்தில மேலால வந்து, சுப்பர் சொனிக் போட்ட குண்டில அண்ணை............” என்று இழுத்தான். அவனின் தாய் “அய்யோ.....” என அலறித்துடித்து கீழே விழுந்தாள். அவனோ அம்மா, அம்மா என்னம்மா என்னம்மா எனக் கேட்டு அழுதான். பின்னர் தெரிந்து கொண்டான் அப்பா இறந்து விட்டார் என்று. மனம் கல்லானான். அழவில்லை. தன்னால்தானே அப்பா இப்படி ஆகினார் என மனம் பொருமினான். அன்றிலிருந்து சைக்கிளை வெறுத்தான்.