திங்கள், 27 ஜூலை, 2009

நல்லூர் கந்தனுக்கு கொடி...!


அலைகடல் சூழும் ஈழநாட்டின் தலையெனத் திகழும் யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற பதியில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம்தான் நல்லூர்க் கந்தசுவாமி கோவில். தமிழ்க்கடவுள் முருகன். யாழ்ப்பாண அரசாட்சி காலங்களில் எல்லாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சிறப்பு மேலோங்கித்தான் இருந்தது. இது தொடர்பாக கானாபிரபா 2007 ம் ஆண்டு 25 நாட்களும் சிறப்பு பதிவிட்டிருந்தார். அதனை பார்வையிட......!

ஏனோ தெரியவில்லை நல்லூர்க்கந்தனுக்கு திருவிழா என்றதும் மனது குதூகலிக்கிறது. இனி 25 நாட்களும் ஒரே கொண்டாட்டம்தான். அனைத்து மக்களும் பால் வயது என எந்த வர்க்க பேதமுமின்றி ஒன்று கூடும் ஒரு ஈழநாட்டு கலாசார நிகழ்வுதான் நல்லூர்க் கந்தனின் வருடாந்த உற்சவம். ஒரு படி மேலாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்களும் இங்கே அதிகமாக ஒன்று கூடுவார்கள்.

ஆலயச் சூழல் எங்கும் ஒரே பக்திமயமாகத்தான் இருக்கும். அப்படித்தான் ஆலய சுற்றாடலும் அமைந்து இருக்கிறது. அதிகாலை 4 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை ஆலயம் அமைந்த பகுதிகள் பெரும் அமளியாகவே இருக்கும். அங்க பிரதட்சனை, அடி அழிப்பு என அதிகாலையிலேயே பக்தர்கள் கூடிவிடுவர். காலை நேரம் மிக ரம்மியமாகவே இருக்கும். அலுவலகங்கள் செல்வோர், பாடசாலை மாணவர்கள் என எல்லோரும் காலைப் பூசையில் கலந்து கொள்வர். காரணம் அவர்களால் பகற் திருவிழாவினை கண்டு களிக்க முடியாது. ஆனால் மாலைநேரம் எல்லோரும் அங்கே கூடுவர். மனதிற்கு இதமான பொழுதில் முருகவேற் பெருமான் தன் துணைவியர் வள்ளி தெய்வயானை சமேதராக திருவீதியுலா வருகின்ற காட்சி அற்புதமாக இருக்கும்.

நல்லூர் ஆலயத்தினை எல்லோரும் ரசிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நேரத்தினை கடைப்பிடிக்கும் பாங்கு. எல்லாமே சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தேறிவிடும். இதையெல்ல்லாம் நெறிப்படுத்துபவர் ஆலயத்தின் ஆதீன்கர்த்தாவாக இருக்கின்ற மாப்பாண முதலி மரபில் வந்த சண்முகதாச மாப்பாண முதலியார் அவர்கள். அவர் மூப்படைந்தாலும் மகனின் உதவியுடன் ஆலயத்தினை திறம்பட முகாமைத்துவம் செய்து வருகிறார்.

மாலை வேளைகளில் ஆலய வீதிகளில் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கங்கள், இசைக்கச்சேரிகள் என கலை கலாசார நிகழ்வுகள் ஒரு புறம். மறுபுறம் சிறிய சிறிய பெட்டிக் கடைகள், சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், குளிர்களி (ஐஸ்கிறீம்) நிலையங்கள் என எங்கும் மக்களை கவரக்கூடிய வகையில் வணிக நிறுவனங்கள் அமைந்திருக்கும்.

இன்று காலை சரியாக பத்து மணிக்கு கொடித்தம்ப மரத்தில் வேலவனின் கொடி ஏறிவிடும். இனி 25 நாட்களும் கோலாகலமும் குதுகலமும்தான்.

கடந்த வருட திருவிழாவிற்காக கிடுகுவேலி தாங்கிய பதிவு
இங்கே....!

"பஞ்சம் படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி.."

வியாழன், 23 ஜூலை, 2009

ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

காலப்பெருவெளியின் ஓட்டத்தில் நாம் கட்டுண்டு அதனோடு அடித்துச் செல்லப்படுகிறோம். கடுகதி வாழ்க்கை. கண்டவருடன் கதைக்க முடியாத நிலை. காரணம். காலத்தின் வேகம். நேற்று நடந்தது போல் உள்ளது ஆனால் இன்று ஒரு வருடம் ஆகிவிட்டது. இரு வருடம் ஆகிவிட்டது என்றெல்லாம் புலம்புகிறோம். எல்லாமே காலம் எம்மை தன்னோடு கடத்தியதால் வந்த மாயம். ஆனாலும் அவ்வப்போது நாம் அன்றாட வாழ்வில் நடந்தவற்றை நினைவு கூறுகின்றோம். சிலவற்றை தவறவிடுகிறோம்.

எங்கே போனாலும், எதை செய்தாலும் இன்றும் பசுமரத்தாணி போல இருப்பது நமது பராய வாழ்வு தந்த பலாச்சுளை நினைவுகள் தான். தனியே இருந்து வானம் பார்த்து அல்லது இயற்கையோடு அளவளாவி நினைத்து பார்க்கின்ற போது அவை கனத்த நினைவுகளாகவும் இருக்கலாம் அல்லது கனிவான நினைவுகளாகவும் இருக்கலாம். அந்த இனிய நினைவுகளால் சிரிப்பும் வரும். சில வேளை விழியோரம் சிறு துளி எட்டியும் பார்க்கும்.

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா....?" இந்தப்பாடல் கேட்காத தமிழ்க்காது இருக்கவே முடியாது. அதுவும் ஈழத்தமிழர்களில் அநேகம்பேர் இந்தப் பாடலை கேட்காவிட்டாலும் இந்த வரிகளை சொல்லி இருப்போம். காரணம் எமது மக்களின் இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளுமே.

வரலாறு படிக்கின்ற பாடசாலைக்காலங்களில் ஒரு பாடம் இருக்கும் தென்மேற்கு நோக்கிய இராசதானி நகர்வு. அதாவது அந்தக்காலங்களில் இலங்கையில் ஆண்ட மன்னர்கள் தமது அரசாட்சியை பல்வேறு காரணங்களுக்காக தென்மேற்கு நோக்கி நகர்த்தினர். ஆக அந்தக்காலத்திலும் இடப்பெயர்வுகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஈழத்தமிழர் கண்ட இடப்பெயர்வுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

சொந்த வீடு, சேர்த்த சொத்து, காலம் காலமாக கட்டிகாத்து வந்த பல முதுசங்கள் எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை. இப்படி இடம்பெயர்ந்து மரங்கள், பாடசாலைகள், உறவினர் வீடு என சென்று இருந்தாலும் நாம் எமது வீட்டில் வசிப்பது போன்று வருமா. இன்றும் உயர்பாதுகாப்பு வலயம் என எமது தாய்நிலங்கள் அபகரிக்கப்பட , அதனை இழந்த அப்பாவி மக்கள் வெறும் குடிசைகளில் தமது வாழ்வைக் கழிக்கின்றனர். குடியிருக்கின்றனர். கேட்பார் எவரும் இல்லை. இவர்கள் செய்த பாவம்தான் என்ன? சொந்த நிலம், தமது உழைப்பு பணத்தில் கட்டிய சொந்த வீடு எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத ஏதிலி நிலை.

--------

அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படப்பாடல். நெஞ்சை நெக்குருக வைத்துவிட்டது. "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டொழிய அருள்வாயோ....." பம்பே ஜெயஸ்ரீ அவர்களின் தேனான குரல். பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் இறவனை இறைஞ்சும் குரல் மூலம் அற்புதமாக அமைந்துள்ளது. மனதைப் பிழியும் ஒரு பாடல். படத்தின் கதைக்கு இந்தப்பாடல் பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது. ஈழத்தமிழனின் துயர் சொல்லும் அருமையான பாடல். இந்தப் படைப்பை எமக்கான படைப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்!
வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ!
புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்!
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

சோறில்லை! சொட்டு மழை நீரில்லை!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்!
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே!

வேராகி, ஐம்புலனும் வேறாகி,
பொன்னுலகம் சேறாகி போகமாட்டோம்!
எம் தஞ்சை, யாம் பிறந்த பொன்தஞ்சை,
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும், சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே! வெம் புலித்தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ!
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வைரமுத்துவின் வைர வரிகள். வைரமுத்து இந்தப் பாடலை எழுதுவதற்கு அருகதை உடையவரே. ஏற்கனவே "கன்னத்தில் முத்தமிட்டால்.." படத்தில் வந்த 'விடை கொடு எங்கள் நாடே...' பாடலை ஈழத்தமிழ் இனத்தின் அவலத்திற்காக எழுதியவர். மீண்டும் அவருக்கு அரிய சந்தர்ப்பம். நான் நினைக்கிறேன் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக இந்தப்பாடல் எழுதிக் கொண்டிருந்த சமயம் ஈழத்தில் தமிழினம் சொல்லொனாத் துன்பத்தை சந்தித்துக்கொண்டிருந்தது. அந்த பாடலுக்கு மனதில் ஈழ அவலமும் சோழநாடும் கருவாக வைரமுத்து அவர்களுக்கு தோன்ற பாடல் பிறந்திருக்க வேண்டும். இப்போது கேட்கும் போதெல்லாம் இதயத்தை பிசைகிறது.

அதே 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் வருகின்ற மற்றொரு பாடல் 'தாய் தின்ற மண்ணே...' எனத்தொடங்குகிறது. வைரமுத்துவின் வைர வரிகளுக்கு குரல் விஜய் யேசுதாஸ். அருமையான இசை. விழியோரம் கசியும் நீரை தவிர்க்க முடியவில்லை.

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா........!
------------------
ஒவ்வொரு இடப்பெயர்வும் ஆறாத ரணம்தான். பெரும் வலிகளையே தந்தது.
'வைகைல ஊர் முழுக
வல்லோரும் சேர்ந்தெழுக
கைப்பிடியாய் கூட்டி வந்து
கரைசேர்த்து விட்டவளே'
என வைரமுத்து பாடி ஒருமுறை மேடையிலேயே கண்ணை கசக்கி நா தளுதளுத்தார். அவரைப்போலவே எமக்கு ஒன்றல்ல, நூறு இருக்கின்றன. எதை சொல்வது. ஏன் இப்பொழுது இறுதியாக இந்த வன்னி மக்கள் பட்ட அவலம் உலகில் வேறு எவனும் பட்டிருக்க முடியாது. அந்த மக்களின் மனோபலத்திற்கு முன்னால் நான் மண்டியிடுகிறேன். வானிலே இரண்டு மழை. ஒன்று எறிகணை மழை, இரண்டு விண்ணில் இருந்து வருண பகவானின் கண்ணீர் மழை. எல்லாம் தாங்கி இன்றும் ஏதிலிகளாக யாருமற்ற அனாதைகளாக முட்கம்பி முகாமுக்குள் வாழும் அந்த மக்களுடன் ஒப்பிடும் போது நாம் என்ன சந்தித்தோம். அந்த அவலங்களுடன் ஒப்பிடும் போது எமக்கிருந்த சொந்தப் பிரச்சினைகள் எல்லாம் சொத்தைப் பிரச்சினைகள்.


பிறந்த மனிதன் வாழும், ஏன் உண்ணும் உரிமை கூட மறுக்கப்பட்ட ஒரு கேவலமான இனமாக இந்த தமிழினம் இருக்கிறது. இவர்களின் இதயம் எவ்வாறு இருக்கும். எத்தனை கொடுமைகளை சந்தித்து இருக்கிறார்கள். எத்தனை வலிகளை தாங்கி கொண்டு இருக்கிறார்கள். சென்னை மரீனா கடற்கரையில் அண்ணா சமாதியிலே ஒரு வரி உண்டு. "எதையும் தாங்கும் இதயம் இங்கே அமைதியாக உறங்குகிறது". அண்ணாவை தெய்வமாக மதிப்பவர்கள் என்னை மன்னியுங்கள். ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் தன்னுடைய இதயத்தில் தாங்கியதை விடவா அண்ணா தாங்கிவிட்டார்.

முகாமில் வாழும் இல்லை இல்லை வாடும் மக்களே உங்களுக்கு முன்னால் நாம் கால் தூசிக்கு சமன். உங்கள் முகங்களை நேருக்கு நேர் பார்க்கும் அருகதை அற்றவர் நாம். விடியாத இரவென்று வானில் ஏதும் உண்டா என்ற அதே வைரமுத்துவின் வரிதான் மீண்டும் நினைவில் நிழலாடுகிறது.

திங்கள், 6 ஜூலை, 2009

முட்கம்பி முகாமுக்குள் வாழும் நண்பா..!

அன்பு நண்பா!
எங்குற்றாய் நீ....!
நீ எண்ண முடியாத தொலைவில் நான்.
உன்னைப் பற்றி நினைத்து நினைத்து இழைத்து விட்டேன் என்பது பொய்..
மேலாக ஒரு சுற்று பருத்துவிட்டேன்.
உன்னை நினைத்து நான் என்னில் வெட்கப்படுகிறேன்..
என்ன வாழ்க்கை வாழ்கிறேன் நான்.

முட்கம்பியால் அடைக்கப்பட்ட முகாமுக்குள் நீ....
முடிவில்லாத துயரத்தின் முடியில் நீ...
எதிர்காலம் பற்றி எழும் எண்ணம் எல்லாம் - இனி
ஏலாது என்ற ஏக்கத்தில் நீ..
எப்படி எல்லாம் இருப்போம் என்ற எதிர்பார்ப்பு அழிந்து
இப்படியாகிவிட்டோமே என்ற ஏமாற்றத்தில் நீ....

மூன்று நேர உணவு எல்லாம் இப்ப உனக்கு கனவு - அதிலும்
முழுமையான உணவு உன்னால் நினைக்க கூட முடியாது.
ஆனாலும் நான்..
மூன்று நேரம் மூக்கு முட்ட முழுங்குகிறேன்.
சதுர்த்தி விரதம் என்றதும் சலிக்காமல் பிடிக்கிறேன்..
உன்னை எண்ணி நான் உணவில்லாமல் ஒரு கணம் கூட இருந்ததில்லை.. வெட்கப்படுகிறேன்... வேதனைப்படுகிறேன்..
என்ன வாழ்க்கை என்று என்னையே கேள்வி கேட்கிறேன்..
ஏன் பிறந்தேன் என்றுதான் இப்பொழுதெல்லாம் என் கவலை..

களிப்பு வாழ்வில் நான் கலந்துதான் போனேன்.
விஜய் ரீவியின் விசுவாச ரசிகன் - அதை
விலக்கி விட்டு என்னால் இருக்க முடியவில்லையே.

முருங்கன், முகமாலை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என எல்லாமே
முற்று முழுதாய் போகும் போதெல்லாம்....
முழு சோகத்துடன் எல்லோரையும் எண்ணும் போது உன்னையும் எண்ணுவேன்.

எத்தனை நாள் உன் வாழ்வு பதுங்கு குழிக்குள்
எத்தனை நாள் உன் வாழ்வு உணவின்றி...
ஏவப்பட்ட எறிகணை என் மேல் விழக்கூடாது என்று
எத்தனை தரம் கடவுளிடம் இரஞ்சியிருப்பாய்...
எத்தனை தடவை கடவுளை திட்டித்தீர்த்தாய்...

நீ கடந்து வந்த உடலங்கள் எத்தனை...
நீ கட்டுப் போட்ட காயங்கள் எவ்வளவு...

அண்ணன் மீது வீழ்ந்த எறிகணை...அவனின்

அரைக்கு கீழே அள்ளிக்கொண்டு போய்விட்டாம் என்றனர்..
என்ன கொடுமையடா இது.
அவன் மிதிச்ச இடத்தில் புல் கூட சாகாதே...
அப்பாவி என்பதற்கு அகராதியே அவன்தானே

அவனை வசைபாடி இவனை வசைபாடி..
அவன் விட்ட பிழை இவன் விட்ட பிழை என
எல்லா வித்துவான்களும் எழுத்தித்தள்ளிவிட்டனர்...
அவர்களாலும் அதைத்தான் செய்ய முடியும்..

எல்லாம் வெறுமையாய் போன உணர்வில்தான் எல்லோரும்..
அழவே முடியாத இறுக்கத்தில்தான் அனைவரும்
அவ்வப்போது எட்டிப்பார்க்கும் உங்கள் நினைவால்

ஆத்திரம் அடியில் இருந்து வரும்..
கையகலாத்தன்மையில் கண்ணீரோடு அது கரைந்து விடும்..

எத்தனை எத்தனை கனவுகள்..
எத்தனை எத்தனை ஏக்கங்கள்...
எத்தனை எத்தனை தியாகங்கள்..
எல்லாம் இன்று காற்றோடு காற்றாகி கலந்து விட்டதுவே..

நண்பா..!
கனவில் உன்னை கன தடவை கண்டேன்
காணும் பொழுதெல்லாம் கண்ணீரையும் கண்டேன்.
ஏன் என்பதெல்லாம் விடை காண முடியா கேள்வி.

உன்னை நானறிவேன்...
என்னையன்றி உன்னை யார் அறிந்தாலும்
உன்னை நானறிவேன்..
அன்று உனக்கு செய்த ஒரு தப்புக்காய்
இன்றும் இப்பொழுதும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

பல்கலையின் பிரிபுவபசார விழா..
எல்லோர் கண்களும் ஆறாய் பெருகி..
எல்லோரையும் அணைத்து அழுகிறோம்.
பிரிவுத்துயரின் உச்ச நேரம்..
ஒவ்வொருவர் தோள்களிலும் ஓவென்றபடி
ஒவ்வொருவர் முகங்கள்...
இனி எங்கு காண்போம் என்ற ஏக்கம் இப்பொழுது
உண்மையாய் போனது போல
நண்பா இனி எங்கு காண்போம்....?
எப்பொழுது காண்போம்...?

எப்படி இருக்கிறாய்...

இப்போது எது உந்தன் மரம்...
எந்த மரத்தடியில் உனது வாசம்..
யார் உனது நண்பர்கள்...
யாருடன் பகிடி விடுகிறாய்...
யாரைக் கடிக்கிறாய்...
உனது கடிகளை எண்ணி எண்ணிச் சிரித்தாலும்
சிரித்து முடிக்கு முன்னம் கண்ணில் நீர்த்திவலைதான்டா..

எப்படி இருந்தாய்...!
உன்னை சுற்றி உன் கதை கேட்க ஒரு பத்து பேர்
எப்போதும் நின்றோமே...
உன்னை ஒருவனுக்கு பிடிக்கவில்லை என்றால்..
அவனுக்கு ஒருவனையும் பிடிக்காது...!

பல்கலைக்கழகம் முழுவதும் பறவைகளாய் திரிந்தோம்..
கல்லாசனத்தில் கவிழ்ந்து படுத்தோம்...
களிப்புற்றோம்...
கவலை மறந்தோம்...

விழாக்கள் என்றால் வீற்றிருப்போம்...
வீரம் காட்ட வேண்டி வந்தால் வெளுத்துக்கட்டுவோம்..
ஆடலுக்கு ஆடல் பாடலுக்கு பாடல்
பகிடிக்கு பகிடி கடிக்கு கடி
அது நம்மை விட்டு போகும் என்று தெரிந்தும் செய்தோம்..
ஆனால் இன்று எமக்கானதுதான்,
எம்மை விட்டு போகாததுதான் என்ற இருந்த
எல்லாம் இழந்து ஏதிலி பட்டமல்லவா பெற்றோம்..

போகட்டும் எல்லாம் போகட்டும்...
வெறுமையான வெளிக்குள் நாம் இப்போது...
வீசும் காற்றும் எம்மைக் கண்டதும் கனலாய் மாறுகிறது..- யாரும்
பேசும் சொற்களும் எமக்கு இயைவாக இருப்பதாய் இல்லைத்தான்..

உன்னோடு ஒன்றாய் இருந்த நண்பன் பகர்ந்தான்...
இன்றோடு உலகில் ஒரு புதிய இனம்
அநாதை என்ற பெயரோடு....!

உன்னை நினைத்து இது கட்டுரை அல்ல
கவிதை அல்ல...உனது நண்பர்கள் அத்துணை பேரின்
உள்ளக்கிடக்கை.....!

சந்திப்போமடா...
அந்தக் கல்லாசனத்தில்..
அதே களிப்புடன்..
அதே கடிகளுடன்...
அதே இனிய நினைவுகளுடன்..

கண்ணதாசன் சொன்னதை எமக்காய் இப்போது...
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் வரும் சந்திப்போம்...!

உன்னோடு உறவாடிய
நண்பன்...!

வியாழன், 2 ஜூலை, 2009

முதுமொழிகளும் நாமும்....!

பழமொழிகள் அல்லது சில சொல்லாடல்கள் என்பன எல்லா மொழிகளுக்கும், அந்த மொழி சார்ந்த இனத்திற்கும் உரிய சில அடையாளங்கள். நாம் சில வேளைகளில் அவதானித்து இருக்கிறோம், ஒவ்வொருவரும் பேசும் போது அல்லது உரையாடும் போது தமக்கு தெரிந்த பழமொழிகளை அல்லது சில சொல்லாடல்களை சொல்வார்கள். " எங்கட ஊரில ஒரு பழமொழி சொல்லுவினம்" அல்லது "இதுக்குத்தான தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு" அல்லது "சீன மொழில ஒரு பழமொழி இருக்காம்". இப்படியான சில வாசகங்களை நம் காதினூடாக கேட்டிருக்கிறோம். அல்லது நாம் கூட பேசி இருக்கலாம்.

"முருங்கை முறிச்சு வளர்க்க வேணும்
வடலி வெட்டி வளர்க்க வேணும்
பிள்ளை அடிச்சு வளர்க்க வேணும்" என்று மூதாதையர்களிடம் அடிவாங்கிய நினைவுகள் இன்னும் மனக்கண் முன் தோன்றுகிறது. காலம் காலமாக இவர்கள் இதை சொல்லி வருகிறார்கள். இதிலே தப்பென்று எதுவுமில்லை. இந்த பழமொழிகளை ஒட்டியே உங்கள் வளர்ச்சிப் பாதை அமைய வேண்டும் என்பது எமது மூத்தோரின் எம்மீதான கரிசனை அல்லது பார்வை. நாம் அதனை பின்பற்றி நடக்கிறோமோ இல்லையோ, அவ்வப்போது அந்த பழமொழிகளை நினைவு கூருகிறோம்.

சில இப்படியான சொல்லாடல்கள் ஒரு நாட்டிலேயே குறித்த பிரதேசத்திற்கே பாவனையில் உள்ள பிரதேச வழக்காக இருக்கும். அது அந்த நாட்டின் அடுத்த பிரதேசத்தில் தெரியாத அல்லது பாவிக்காத ஒன்றாகவும் இருக்கும். இவ்வாறு நாட்டுக்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் என்று சொல்லாடல்கள் வேறு பட்டாலும் மொழியால் அவை ஒன்று பட்டு நிற்கின்றன. அவற்றை நாம் அறிந்து எமது வாழ்வினூடே புழக்கத்தில் விட்டு எல்லாவற்றையும் எமக்கான விழுமியமாக காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

பாடசாலைக் காலத்தில் தமிழ் மொழிக்கான பாடப்புத்தகத்தில் நிறைய பழமொழிகளும் அதற்கான விளக்கங்களையும் கற்றுக்கொண்டோம். ஒரு சம்பவத்தை வைத்து ஒரு பழமொழியை சொல்லும் போது அந்தப் பழமொழி மனதுக்குள் ஆழமாக பதிந்து விடும். ஆனால் இப்போதெல்லாம் யாராவது அடிக்கடி பழமொழிகளை சொன்னால் கிழடு என்றோ அல்லது தாத்தா என்றோ அல்லது கிழட்டு கதை கதைக்காதே என்றோ சொல்லி அவரை தலையடி போட்டு ஒதுக்கிவிடுகிறோம். இதையே இன்னொருவன் ஆங்கிலத்தில் சொன்னால் அவன் கொஞ்சம் விசயம் தெரிஞ்சவன் என கொண்டாடுகிறோம். இன்று இந்த நிலையில்தான் எமது பழமொழிக்கான அங்கீகாரம் உள்ளது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமக்கு எங்கோ ஒரு மூலையில் பழமொழிகளின் பாவனை இருந்து கொண்டே இருக்கும். அதை உணர்ந்திருக்கிறோம் என்பதை மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது.
இப்பொழுது பழமொழிகளை பாவித்தாலும் அதன் திரிபு கவலையாக உள்ளது. ஒரு பிழையான கருத்தை கொடுக்காவிட்டாலும் பிறிதொரு காலத்தில் ஏன் இப்படி ஒரு பழமொழி கொண்டுவரப்பட்டது என்ற சிந்தனையையும் அல்லது உருவாக்கியவர்கள் பிழையாகத்தான் உருவாக்கினார்களா என்ற எண்ணதையும் தோற்றுவிக்குமல்லவா? இப்படி எண்ணுவதற்கு ஒரு பழமொழி அல்லது சொல்லாடல் எப்போதும் மனதை குடைந்தபடியே உள்ளது.
"முட்டையில் மயிர் பிடுங்குவது" இதை நாம் பாவிக்காத இடமும் இல்லை. கேட்காத இடமும் இல்லை. ஒரு விடயத்தை செய்தால் அதில் நுட்பமாக ஆராய்ந்து பிழை அல்லது குற்றம் கண்டு பிடிக்கும் சந்தர்ப்பத்தில் நாம் இதனை பாவித்திருப்போம். "எல்லாம் சரியா செய்ய வேணும், இல்லாட்டி அந்தாள் முட்டைல மயிர் பிடுங்கும்" என எல்லோரும் சொல்லி இருப்போம். இப்பொழுது கேள்வி என்னவென்றால், "முட்டையில் மயிர் பிடுங்குதல்" என்பது சரியா? முட்டைக்கும் மயிருக்கும் தொடர்பு இருக்கா... என்றால் இல்லை. தொடர்பு இல்லாத இடத்தில் அந்த பதம் சரியாக இருக்குமா? மொட்டைக்கும் ( முடி அற்ற தலை) மயிருக்கும் தொடர்பு இருக்கிறது. மயிர் இல்லாவிட்டால்தானே அது மொட்டந்தலை. மொட்டந்தலையில் எப்படி மயிர் பிடுங்குவது. ஆனாலும் சிலர் அதிலே மயிர் இருக்கா இருக்கா என தேடுவார்களே? அப்படி தேடித்தேடி பிடுங்க எண்ணுவார்களே? இதனால்தான் அது "மொட்டைல மயிர் பிடுங்குதல்" என கூறலாயிற்று. அது காலப்போக்கிலே "முட்டைல மயிர் பிடுங்குதல்" என மருவிற்று.

இவ்வாறு திரிபடைதலை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் அடுத்த தலைமுறை இதனை பார்க்கும் போது எமக்கு மூத்த தலைமுறைகளை தப்பாக நினைக்கலாம் இல்லையா? எனவே நாமும் கொஞ்சம் அவதானமாக இருந்து செயற்படுவோம். எமது மொழியையும் எமக்கான அடையாளத்தையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும்.