அணிகளும் தயாராகின. நாணயச் சுழற்சியில் ஆஸ்திரேலியா அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இல்லை. 4வது போட்டியில் விளையாடிய அதே அணி. ஆனால் தென்னாபிரிக்காவுக்கு ஆரம்பமே சவால்தான். சகலதுறை ஆட்டக்காரர் பொல்லக் அணியில் இல்லை. அவரிற்குப் பதிலாக ஜோன் வன்டர் வாத் இணைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஆரம்ப ஜோடி கில்கிறிஸ்ட், மற்றும் சைமன் கட்டிச் களம் புகுந்தனர்.
முதலாவது பந்து வீச்சினை வீச மக்காயா நிற்ரினி தயாரானார். முதலாவது ஓவரின் நான்காவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தினை கில்கிறிஸ்ட் பெற்று கணக்கினை ஆரம்பித்தார். என்ரினியுடன் அன்ரூ ஹோல் இணைந்து பந்து வீசினார். இருவரும் ஆஸ்திரேலியருக்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை. பொல்லக் இல்லை என்ற துணிவில் ஆரம்ப ஜோடி அனாசயமாக அடித்தாடியது. ஓர் அட்டகாசமான ஆரம்பம். ஆரம்பமே அனல் பறந்தது. கில்கிறிஸ்டின் துடுப்பில் இருந்து பந்துகள் சீறிக்கொண்டு எல்லைக் கோடுகளைத் தொட்டது. 12வது ஓவரில் கில்கிறிஸ்ட் 35 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் அரைச் சதத்தைத் தொட்டார். 15 ஓவர் நிறைவில் இலக்கு நஷ்டமின்றி 96 ஓட்டங்கள். சிறந்த ஒரு அடித்தளம். ஆனால் அடுத்த ஓவரில் ரெலிமேக்கஸ் வீசிய பந்தினை கில் கிறிஸ்ட் அடிக்க அன்ருஹோல் ஒரு கையால் அற்புதமாக பிடியெடுக்க 1வது விக்கட் வீழ்ந்தது. அடுத்து கட்டிச் உடன் இணைந்தார் அணித்தலைவர் பொண்டிங்.
இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 93 ஓட்டங்களுக்குள் சுருண்டது, அவரின் மனதிற்குள் ரணமாக இருந்தது. இருந்தாலும் தனது கணக்கை ஆரம்பிக்க 7 பந்துகள் காத்திருந்தார். இதற்கிடையில் கட்டிச் தனது அரைச் சதத்தை 60வது பந்தில் 6 நான்குகள், ஒரு ஆறுடன் நிறைவு செய்தார். கட்டிச்சின் அரைச்சதத்தை பொண்டிங் ஒரு நான்குடன் கொண்டாடினார். அந்த நான்குடன் பொண்டிங் ஒரு தெம்பு பெற்றார். அதை 22வது ஓவரில் ரெலிமேக்கஸ் இன் பந்துக்களில் 3 நான்கு ஓட்டங்களைப் பெற்று நிரூபித்தார். பிறகென்ன ஆட்டம் சூடுபிடித்தது. மளமளவென்று ஓட்டங்கள் ஏறின. இதற்கு சான்றாக கலிஸின் ஒரு ஓவரில் பொண்டிங் 2 ஆறு ஓட்டங்களை அடுத்தடுத்து பெற்றார். இரண்டாவது ஆறுடன் தனது அரைச்சதத்தை அட்டகாசமாகக் கடந்தார். இதற்காக பொண்டிங் 43 பந்துகளை எதிர்கொண்டார். 6 நான்குகள், 2 ஆறுகள் அடக்கம். இந்தத் தெம்புடன் பொண்டிங்கின் துடுப்பு சுழன்றது. ஓட்டங்கள் இலகுவாகக் கிடைத்தன. அப்போது கட்டிச் 79 ஓட்டங்களுடன் என்ரினியின் பந்தில் ரெலிமேக்கஸிடம் பிடிகொடுத்து அவுட்டானார்.
44வது ஓவரின் இறுதிப்பந்தில் பொண்டிங்கின் அடித்த ஆறுடன் ஆஸ்திரேலியா 350 ஐக் கடந்தது. அடுத்த பந்தில் என்னாலும் இயலும் என்று ஹசியும் தன்பங்கிற்கு ஒரு ஆறு ஓட்டத்தை அரங்குக்குள் அடித்து பெற்றார். ஒவ்வொரு ஓவரிலும் ஆறுகள், நான்குகளுக்கு பஞ்சம் இல்லை. பந்துகள் பஞ்சாய் பறந்தன. அணி 374 ஓட்டங்களை பெற்ற போது ஹோலின் பந்தில் என்ரினியிடம் பிடிகொடுத்து ஹசி ஆட்டமிழந்தார். ஹசி 51 பந்தில் 81 ஓட்டங்களை பெற்றார். இவர் பொண்டிங்குடன் இணைந்து 97 பந்தில் 154 ஓட்டங்களை இணைப்பாட்டத்தின் மூலம் தமக்குள் பகிர்ந்து கொண்டார். அவர் ஆட்டமிழந்தால் என்ன நான் இருக்கிறேன் என்பது போல ஹோலின் பந்தில் ஒரு ஆறை அடித்து தனது 150 ஓட்டங்களைக் கடந்தார் பொண்டிங். அடுத்து சைமன்ட்ஸ் வந்து பொண்டிங்குடன் இணைந்தார்.
ஆஸ்திரேலியா அணி வீரர்களின் ஓய்வு அறையில் வீரர்கள் மிகவும் குதூகலமாக இருந்தார்கள். தாம் ஒரு உலக சாதனையை நிகழ்த்திய பெருமிதம் இருந்தது. பொதுவாகவே ஆஸ்திரேலியர்களுக்கு இருக்கும் ஏளனப்பார்வைகள் அன்றைக்கு சற்று அதிகமாகவே இருந்தது. ரசிகர்கள் போல் தாமும் வாய்க்குள் விரல் வைத்து விசில் அடித்து சாதனையை கொண்டாடினர். முன்னதாக புகழ்பெற்ற வர்ணனையாளர் ரொனிகிரேய்க் 31வது ஓவர் நடந்து கொண்டு இருந்த போது ஆஸ்திரேலியர்களின் ஆட்டத்தை நன்கு கணித்து இலகுவாக 400 ஓட்டங்களைப் பெறுவார்கள் என்று ஆரூடம் சொன்னதை ஆஸதிரேலியர்கள் நிரூபித்தனர். ஆஸ்திரேலியர்கள் மீண்டும் தாங்கள்தான ஒருநாள் ஜாம்பவான்கள் என்பதை வொன்டரர்ஸ் அரங்கில் காட்டினர். ஆஸதிரேலியர்கள் ஆட்டம் ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமைந்தது. தென்னாபிரிக்க ரசிகர்களுக்கு ஆத்திரமாகவும் அவமானமாகவும் இருந்தது. இந்த சாதனையை தமக்கு எதிராக பெற்றுவிட்டார்களே என்று. இருந்தாலும் என்னதான் நடக்கும் என்று பொறுமையுடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.
இனி ஆஸ்திரேலியா களத்தடுப்பு. தென்னாபிரிக்கா துடுப்பாட்டம். ரசிகர்கள் நெஞ்சில் கலக்கம். இந்த ஓட்ட எண்ணிக்கையை இவர்களால் எட்ட முடியுமா? அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக.... பொதுவாக வெற்றி இலக்கு 300 ஐ கடந்தாலே ஒரு உளவியல் அழுத்தம் வந்துவிடும். இந்த அழுத்தத்திற்குள் எதை சாதிக்க போகிறார்கள்... களமிறங்கிய ஆஸதிரேலிய அணிவீரர்களின் முகத்தில் ஒரே மகிழ்ச்சி. அனைவரும் சிரித்த முகத்துடன் இருந்தனர். இது வேறு தென்னாபிரிக்கர்களை வெறுப்பேற்றியது.
இருவரும் இணைந்து 128 பந்துகளில் 187 ஓட்டங்களை மணியாக சேகரித்த போது 23வது ஓவரில் ஸ்மித் கிளார்க வீசிய முதற்பந்தை ஆறாக மாற்ற முனைந்தார். உயர்ந்து சென்றதை எல்லைக்கோட்டிற்கு மிகமிகமிக அருகே வைத்து ஹசி அதனை அழகாக பிடி எடுத்தார். ஆக வெறும் 55 பந்தில் 13 நான்குகள் 2 ஆறுகள் அடங்கலாக 90 ஓட்டங்களுடன் ஸ்மித் அவுட்டானார். தென்னாபிரிக்க 190/2. ஸ்மித் அவுட்டான அடுத்த பந்தில் கிப்ஸ், ஸமித்தை எடுத்து விட்டீர்கள் , உங்களுக்கு தலையிடியாக நான் இருப்பேன் என்பது போல அரங்குக்குள் அடித்து அட்டகாசமான ஆறு ஓட்டத்தை பெற்றார். அந்த ஓவரின் இறுதியிலேயே தென்னாபிரிக்கா 200 ஐ கடந்தது. 23 ஓவர் நிறைவில் 200/2.
முன்பும் இப்படித்தான் 99ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்டீவ் வோவின் பிடியை கிப்ஸ் தவற விட உலகக்கோப்பை ஆஸ்திரேலியர்கள் வசமானது. இப்போது பிராக்கன். உண்மையில் ஆஸதிரேலியர்கள் அசந்துதான் போனார்கள். பந்தை எங்கு விழுத்தினாலும் கிப்ஸ் அதை எல்லைக் கோட்டிற்கு அனுப்பத் தவறுவதில்லை.
31வது ஓவரில் பிராக்கன் வீசிய பந்தை கிளார்க்கிடம் பிடி கொடுத்து டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். அந்த ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 284/3. அடுத்த ஓவர் சைமன்ட்ஸ் இனுடையது. கிப்ஸ் அடுத்தடுத்து 2 ஆற ஓட்டங்களைப்பெற்றார். அதற்கடுத்த பந்தில் பிரடலீயிடம் பிடி கொடுத்து கிப்ஸ் ஆட்டமிழந்தார். அப்போது கிப்ஸ் 111 பந்துகளில் 21 நான்குகள், 7 ஆறுகள் அடங்கலான அற்புதமான 175 ஓட்டங்களை குவித்திருந்தார். இது அவருடைய சொந்த அதிக பட்ச ஓட்டமாகும். உண்மையில் கிப்ஸின் ஆட்டம் மிக அற்புதமான ஆட்டம். அவர் ஆஸ்திரேலியர்களுக்கு நிறையவே நெருக்கடிகள் கொடுத்தார். அவரின் ஆட்டமிழப்பு ஆஸ்திரேலியர்களை நம்பிக்கையுற வைத்தது.
இப்போது வெற்றிபெறத் தேவையான ஓட்டவிகிதம் சரியாக 11. அதாவது 7 ஓவர்களில் 77 ஓட்டங்கள் தேவை. கையில் இருப்பது 4 விக்கட்டுகள். கதிரையின் விளிம்பில் ரசிகர்கள். ஆஸ்திரேலியர்களுக்கு நம்பிக்கை துளிர் விட்டது. பவுச்சர் தான தலையிடி கொடுப்பார். இன்னமும் 4 விக்கட்டுக்கள். மறுபுறத்தால் கழட்டினால் வெற்றி நமதே. இது பொண்டிங்கின் நினைப்பு. பவுச்சருடன் இணைந்த வனடர் வாத், பொண்டிங்கின் நினைப்பில் மண் அள்ளிப்போட்டார். ஆறுகள், நான்குகள் பறந்தன. இரண்டு ஓவர்களில் 3 ஆறுகள், 1 நான்கு பெற்றார். வன்டர்வாத்தின் துடுப்பாட்டம் போட்டியை ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பறித்தது. 42 பந்தில் 72 ஓட்டஙகள் தேவை என்ற நிலையை இவரும் பவுச்சரும் சேர்ந்து அற்புதமாக ஆடி 24 பந்தில் 38 ஓட்டங்கள் என்ற நிலைக்கு மாற்றினர். 46 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 397/6.
இரண்டாவது தடவையாக ஒருநாள் போட்டிகளில் 400 ஓட்டம். அதுவும் ஒரே போட்டியில். பரபரப்பான போட்டி விறுவிறுப்பின் விளிம்பில் ரசிகர்கள். எதுவும் நடக்கலாம. ரெலிமேக்கஸும் பவுச்சரும் நான்குகளாக அடித்து வெற்றியை நெருங்கினர். 48வது ஓவரில் பவுச்சர் இரண்டு நான்குகள், ரெலிமேக்கஸ் ஒரு நான்கு. இந்த ஓவரில் தான் ஒரு தவிர்க்க முடியாத சாதனை. அவுஸ்திரேலியாவின் மிக்லூயிஸ் என்ற பந்து வீச்சாளர் அள்ளி அள்ளி ஓட்டங்களை வழங்கியோரின் சாதனையில் முதலாவதாக திகழ்ந்தார். இலங்கை அணியின் முரளீதரனின் 10 ஓவரில் 99 ஓட்டங்கள் கொடுத்த சாதனையை கடந்து 113 ஓட்டங்களை வாரி வழங்கினார். முன்பு 1983ம் ஆண்டு மார்க் ஸ்னெடீன் என்ற நியூசிலாந்து வீரர் 12 ஓவரில் 105 ஓட்டங்களைக் கொடுத்தார். இப்போது எல்லோரையும் முந்தி லூயிஸ் பெரும் வள்ளல் ஆனார்.
இறுதி ஓவர். தேவை 7 ஓட்டங்கள். ஒருநாள் போட்டியில் எதுவும் நடக்கலாம் ஆனால் தென்னாபிரிக்கா இப்போது தோற்றால் மீண்டும் ஒருதடவை பரிதாபத் தோல்வி. ரசிகர்களுக்கும், அணி வீரர்களுக்கும் திருப்தியான விடயம், பந்து வீச்சை எதிர் கொள்பவர் பவுச்சர். பந்து பிரட்லீயின் கையில். முதற்பந்தை பவுச்சர் ஓங்கி அடிக்க லீ தனது காலாலேயே தடுக்க ஒரு ஓட்டம் மட்டும் தான். இப்போது ஹோலின் முறை. 5 பந்தில் 6 ஓட்டங்கள். என்ன ஒரு போட்டி அரங்கம் கடும் பரபரப்புக்கு மத்தியில் உற்சாகப் படுத்தியது. லீயின் இரண்டாவது பந்தில் ஹோல் ஓங்கி அடித்து 4 ஓட்டம் பெற்றார். ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். அணி வீரர்கள் தமது ஓய்வறையில் ஆரவாரித்தனர். இலகுவாக வெற்றி கிடைக்கப் போகிறது. 4 பந்தில் இரண்டு ஓட்டங்கள். லீயின் அடுத்த பந்தில் ஹோல் ஓங்கி அடிக்க கிளார்க் அதனை பிடி எடுக்க ஹோலும் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா 433/9. அற்புதமான போட்டி. இப்போது போட்டி அவுஸ்திரேலியாவிடம். காரணம் துடுப்பாடவிருப்பவர் மக்காயா நிற்ரினி. எல்லோரும் எதிர்பார்த்தது தென்னாபிரிக்கா தோல்வி. இந்தப்பந்து லீயின் கதாயுதமான யோக்கர் பந்தாக இருக்கும். அதில் நிற்ரினி அவுட. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போல் லீ அப்படி பந்து வீசவுமில்லை. நிற்ரினி அவுட்டாகவுமில்லை. மாறாக ஒரு ஓட்டம் பெற்றார். இப்போது ஓட்ட எண்ணிக்கை சமம் 434/9. நிற்ரினி களமிறங்கும் போது தென்னாபிரிக்கா அணி வீரர்கள் முகத்தில் இறுக்கம். இப்போது துள்ளிக் குதித்து ஆரவாரித்தனர். வெற்றி இல்லை என்றாலும் சமம் என்ற கௌரவம். ஆனால் அடுத்த பந்தில் சரித்திரம் எழுதினார் பவுச்சார். ஓங்கி அடிக்கப்பட்ட பந்து எல்லைக் கோட்டை கடக்க தென்னாபிரிக்கா 438/9.
ஒரு பந்தும் ஒரு விக்கட்டும் மீதம் இருக்க மகத்தான வெற்றி. தென்னாபிரிக்கா வரலாறு படைத்தது. அந்த நான்குடன் பவுச்சரும் 50 ஓட்டத்தை பெற்றார். பவுச்சரின் பொறுப்பான ஆட்டம் வெற்றியைத் தேடித்தந்தது.
பவுச்சர் ஓங்கி அடித்ததும், ஓய்வறையில் நின்ற வீரர்கள் மைதானத்திற்குள் பாய்ந்து சென்று கட்டித்தழுவி வெற்றியைக் கொண்டாடினர். 400 ஓட்டங்கள் அடிப்பது சிரமம. உலகின் முன்னனி அணியான அவுஸ்திரேலியா அணி அதனை அடித்து தன்னை நிரூபித்தது. அதே போட்டியில், அதே அவுஸ்திரேலியாவிற்கு நீங்கள் அடிக்கும் போது எங்களுக்கு எப்படி இருந்தது என்று தாமும் 400 ஐ அடித்து வெற்றி பெற்றனர். சரித்திர வெற்றி.நிச்சயமாக ஆட்ட நாயகன் கிப்ஸ். ஆனால் மத்தியஸ்தர் ரிக்கி பொண்டிங், மற்றும் கிப்ஸ் இருவருக்கும் வழங்கினார்.
இதில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 872 ஓட்டங்களை 13 விக்கட்டுகளை இழந்து பெற்றனர். தென்னாபிரிக்கா மொத்தம் 44 பவுண்டரிகள், 12 ஆறுகள் பெற்றனர். மொத்தமாக இந்தப் போட்டியில் 87 நான்குகளும், 26 ஆறுகளும் குவிக்கப்பட்டன. தென்னாபிரிக்கா அணி ஆகக் கூடிய மொத்த ஓட்ட எண்ணியையும், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிகூடிய ஓட்டம் என்ற சாதனையையும் தனதாக்கியது.
இது சாதனைகளின் சிகரமாக அமைந்த போட்டி. மொத்தத்தில் ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமைந்தது.
இந்த பதிவு 2006 ல் இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளிவந்த "வேடிக்கை" திங்கள் இதழில் வெளிவந்தது. இது நீண்ட பதிவுதான். ஆனால் தவிர்க்க முடியவில்லை. இதனை தட்டச்சு செய்து உதவிய நண்பன் தீபனுக்கு நன்றிகள்.