செவ்வாய், 15 டிசம்பர், 2009

சைக்கிள் கனவு...!

அவன் தரம் 5 படித்துக் கொண்டிருந்தான். அந்த வருடத்தின் ஆவணி மாதத்தில் அவனுக்கு புலமைப்பரிசில் பரீட்சை. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை கல்விதான் மூலதனம். அத்திவாரமே மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என அவனின் பெற்றோர் நினைத்து அதிக ஆர்வத்தோடு கற்பித்தனர். காரணம் பல இருந்தது. பெரிய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வு. முதன்முதலில் சந்திக்கும் பெரும் பரீட்சை. இதில் சித்தியடைந்தால் தேசிய கல்லூரிகளில் அனுமதி கிடைக்கும். மாதந்தோறும் கல்விச்செலவுக்கு அரசின் ஊக்குவிப்புப் பணம். அவன் மனமோ சைக்கிள் வாங்க வேண்டும். இரண்டு கைகளையும் விட்டு விட்டு காற்றில் பறப்பது போல ஓட வேண்டும் என சதா எண்ணிக் கொண்டிருந்தது. தனது பெற்றோரிடம் கேட்டும் விட்டான். அவனுக்கு அவர்களின் பொருளாதார நிலைமை தெரிய வாய்ப்பில்லை. அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடும் ஒரு வறிய குடும்பம். ஆனால் அதனை அவனுக்கு தெரியப்படுத்தாமல், “நீ பரீட்சையில் சித்தியெய்தினால் உனக்கு புது சைக்கிள் நிச்சயம்” என தந்தை அவனுக்கு உறுதி மொழி அளித்தார்.

அவன் மனம், இப்போது மெதுவாக படிப்பில் கவனம் செலுத்தியது. ஓய்வு நேரத்தில் வந்து வீதியால் போய்வரும் சைக்கிள்களைப் பார்த்து தனது மனதைச் சாந்தப்படுத்துவான். இடைக்கிடை தகப்பனிடம் கேட்டு அவர் கொடுத்த வாக்கினை உறுதிப்படுத்திக் கொள்வான். பரீட்சையும் வந்தது. அன்றைய தினம் அவனை பரீட்சைக்கு தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக் கொண்ட சென்ற தந்தையிடம் “அப்பா வாங்கித்தருவீங்களா...?” என்று கேட்டுக் கொண்டே சென்றான். அவனிடம் தந்தையும் “ஓம் ஓம் ...” என்று பதிலளித்தார். பரீட்சை முடிந்தது. அவனுக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை...! அடிக்கடி எப்பொழுது பரீட்சை பெறுபேறு வரும் என்று அங்கலாய்த்தபடி இருந்தான். இப்போது தந்தைக்கு சிறு பயம் தொற்றிக் கொண்டது. மகன் சித்தியடைந்துவிட்டால் எப்படியும் வாங்கிக் கொடுக்க வேண்டும். சித்தியடையாவிட்டாலும் சைக்கிளை வாங்கிக் கொடுத்து அவனது கவலையை நீக்கவேண்டும். நண்பர்களிடத்திலும் தெரிந்தவர்களிடத்திலும் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

பரீட்சை மறுமொழி வரும் நாளும் வந்தது. அன்று அவன் கோவிலுக்கு சென்று விட்டு பாடசாலைக்குப்போய் அங்கே பெறுபேறுப் பட்டியலில் தன்னுடைய பெயரைத்தேடினான். 174 (200 இற்கு) புள்ளிகள் பெற்று அவன் முதலிடத்தில் தேறியிருந்தான். அவனுக்கு பரீட்சையில் சித்தியடைந்தது பெரிய விடயமாகத் தெரியவில்லை. தனக்கு சைக்கிள் வரப்போகுதே என்றே துள்ளிக் குதித்தான். அந்தச் சிறிய பாடசாலையில் அவன் மட்டுமே சித்தியடைந்தவன். ஆசிரியர்கள் தந்தையை பாராட்டினர். அவன் தந்தையின் கையைப் பிடித்து இழுத்து அவரை வேகப்படுத்தினான். தந்தையும் அவனை உச்சிமோந்து, தாயிடம் அழைத்துச் சென்று செய்தியைக் கூறிவிட்டு யாழ்நகரப் பட்டணம் சென்றார் சைக்கிள் வாங்க. தாயோ ஆனந்தக் கண்ணீர் மல்க அவனை கட்டியணைத்தாள்.

இவனும் வீட்டின் வாசலில் காத்திருந்தான். தந்தை வருவார். புதுச்சைக்கிள் தருவார். எல்லா இடமும் போய்வரலாம். முன்பு ஓடிப்பார்க்க சைக்கிள் கேட்டு தர மறுத்த நண்பர்கள் முன்னால் போய் ஓடிக்காட்டவேண்டும் என்று எண்ணி எண்ணி குதூகலித்திருந்தான். மாலையானது அப்பவைக் காணவில்லை. வருவார் வருவார் என்று பார்த்துக் கொண்டிருக்க அயலவர் ஒருவர் ஓடிவந்து “அக்கா....அக்கா...இப்ப பின்னேரம் யாழ்ப்பாணத்தில மேலால வந்து, சுப்பர் சொனிக் போட்ட குண்டில அண்ணை............” என்று இழுத்தான். அவனின் தாய் “அய்யோ.....” என அலறித்துடித்து கீழே விழுந்தாள். அவனோ அம்மா, அம்மா என்னம்மா என்னம்மா எனக் கேட்டு அழுதான். பின்னர் தெரிந்து கொண்டான் அப்பா இறந்து விட்டார் என்று. மனம் கல்லானான். அழவில்லை. தன்னால்தானே அப்பா இப்படி ஆகினார் என மனம் பொருமினான். அன்றிலிருந்து சைக்கிளை வெறுத்தான்.

14 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

உண்மை கதையா பாஸ்?

கிடுகுவேலி சொன்னது…

//... கலையரசன் said...
உண்மை கதையா பாஸ்?...///

இப்படி நிறைய நடந்திருக்கலாம் என்ற ஒரு ஊகம்.....!

பெயரில்லா சொன்னது…

உண்மையோ ஊகமோ நெஞ்சை நெருடுவதாக உள்ளது கரு - Kuna

பெயரில்லா சொன்னது…

இதுபோல் பற்பல நிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றது -நடகின்றது-நடக்கும் :-(
மேலும் ஒரு உதாரணம் :- தாவரவியல் ஆசிரியர் குணசீலன் அவர்களுக்கும் நடந்திருக்கின்றது .அவருக்காக கைகடிகாரம் வாங்கப்போன அவர் தந்தை சிங்கள காடையர்களால் ஜூலை கலவரத்தில் படுகொலை செய்யப்படார். அதன் பாதிப்பினால் அவர் இன்றும் என்றும் கைகடிகாரம் அணிவதில்லை.-Niru-

Gunalan G சொன்னது…

நிஜத்தின் நினைவுகளை மீட்டிப் பார்த்த ஒரு பதிவு :-( திரு.குணசீலன் ஆசிரியர் பற்றிய மேலதிக தகவல் பின்னூடத்திற்கு நன்றி.

Unknown சொன்னது…

அருமையாக உள்ளது! இருப்பினும் தவறிழைக்க வாய்ப்புகள் இன்றி தவறுகள் இழைக்கப்படுமா? எப்படியாயினும், குணசீலன் ஆசிரியர்க்கு நடந்தது வருத்தப்படத்தக்கதே!!

கிடுகுவேலி சொன்னது…

நன்றி குணா, நிரு, குணாளன்....!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..!!

உண்மைதான் நிரு எனக்கும் குணசீலன் ஆசிரியருடன் கதைத்துக் கொண்டு இருக்கும் ஒரு வீடியோ காட்சித்துண்டினை வைத்திய நண்பன் ஒருவன் முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட போது நினைத்தேன். அவரது அந்த மணிக்கூட்டின் பின்னால் இருக்கின்ற வருத்தம் தோய்ந்த கதையும் இதன் கருவுக்கு ஒரு காரணம்...!

கிடுகுவேலி சொன்னது…

//...shanger said...

தவறிழைக்க வாய்ப்புகள் இன்றி தவறுகள் இழைக்கப்படுமா? ..//

தவறாக புரிந்து கொண்டீர்கள் போலும்..! இது அங்கே வாழ்ந்த ஒரு சாதாரண பொது மகனின் கதை..! அவ்வளவே..!! அதற்கப்பால் சிந்திக்காதீர்கள்..!!!

கானா பிரபா சொன்னது…

நடந்த நிகழ்வைக் கதையாகப் படித்த உணர்வு, கொடுத்த விதம் சிறப்பு

Unknown சொன்னது…

இப்பிடிக் கனக்க.... இன்னும் கொஞ்சம் உப்புப் புளி சேத்திருக்கலாம் கதியால். உம்மால முடியும்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம்..... பகிர்வுக்கு நன்றிபா

கிடுகுவேலி சொன்னது…

நன்றி கானாபிரபா...!
நன்றி கிருத்திகன்...!
நன்றி ஞானசேகரன்...!

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்..!!

பெயரில்லா சொன்னது…

:-( is this a real story.???

I remember one anna got 174 / 176 in 92 april. They supposed to take the exam in 91. But cos of kottai adipadu they took it in 92. My cousin took exams with him. Later she told me that his dad died. & he is not doing well in his studies. Do u know him. How is he now?

வடலியூரான் சொன்னது…

nensaith thodukinrana ovvoru varikalum vaazththukkal

கருத்துரையிடுக