செவ்வாய், 17 நவம்பர், 2009

வெல்லத்தமிழ் இனி மெல்லச்சாகுமா?

அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அவர்களின் நண்பர்களாக இரண்டு குடும்பங்கள். எல்லோரும் சேர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். முழுவதும் ஆங்கிலத்தில்தான். அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் நல்ல புலமையானவர்கள் போல இருந்தது. சரளமாக கதைத்தார்கள். ஒபாமாவின் ‘எபெக்’ வருகை முதல் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் வரை அலசினார்கள். ஆனால் எல்லாம் ஆங்கிலத்தில். அதுவும் அனைவரும் தமிழ்க் குடிமக்கள். இலங்கையில் இருந்து வந்து இங்கே குடியேறியவர்கள். நல்ல பதவிகளில் இங்கே வேலை செய்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் அவர்கள் பேசுவதைக் கண்டதும் மனதுக்கு கவலையாக இருந்தது. ஏன்தான் இவர்கள் இப்படியோ ? இரண்டு சீன மொழி பேசுபவர்கள் சந்தித்தால் அவர்கள் சீன மொழியில் பேசுகிறார்கள். இரண்டு மலாய் மொழி பேசுபவர்கள் சந்தித்தால் மலாய் மொழியில் பேசுகிறார்கள். இரண்டு சிங்கள் மொழி பேசுபவர்கள் சந்தித்தால் சிங்களத்தில் பேசுகிறார்கள். ஆனால் தமிழர்கள் நாமோ....? மொழி ஒரு ஊடகம். எமது மொழியை தெரியாதவர்களுடன் கதைப்பதற்கு அதனை உபயோகிக்கிறோம். அவ்வளவே. தமிழர்களுடன் தமிழில் கதைக்கலாந்தானே? எல்லோருக்கும் எல்லா வார்த்தைகளும் தெரியும் என்பதல்ல. அந்த தெரியாத வார்த்தைகள் ஆங்கிலத்தில் தெரியும் என்றால் அந்த மொழியில் பேசலாம். ஆங்கிலம் ஓரளவு கலப்பதில் தப்பில்லை. ஆனால் முற்றிலுமாக ஆங்கிலத்தில் இரு தமிழர்கள் கதைப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் சாகும் என்ற வாக்கியம் மெய்த்துப்போய் விடும்.

****************

உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) அண்மையில் நடாத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு - 2009 இல் சிங்கப்பூரில் இருந்து பலர் கலந்து கொண்டு தமது புதுமையான படைப்புக்களை - கணினி மூலம் எவ்வாறு தமிழினை மேம்படுத்தலாம் என்ற அடிப்படையில் - அங்கே வெளிக்கொணர்ந்திருந்தார்கள். தமிழ் செம்மொழியாகவும் சிறப்பாகவும் கையாளப்படுகின்ற ஒரு நாடு சிங்கப்பூர் என்றால் அது மிகையல்ல. அத்தகைய தேசத்தில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அங்கே சிறப்பாக தமது படைப்புகளை தெரியப்படுத்தினர். இது தொடர்பாக அவர்களிடம் சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியும் சிறப்பு பேட்டி எடுத்து ஒளிபரப்பினர். பின்னர் அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு சிறப்பு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே சென்ற எனக்கு ஏமாற்றமே. ஒரு 15 பேர் அளவில் வந்திருந்தார்கள். ஏற்பாடு செய்தவர்களும் ஒரு 20 அல்லது 25 பேர் இருக்க கூடிய ஒரு வகுப்பறையையே தெரிவு செய்திருந்தார்கள். ஏற்பாடு செய்தவர்கள் முன்னரே எதிர்பார்த்துத்தான் இருந்தார்களோ தெரியாது இவ்வளவு பேர்தான் வருவார்கள் என்று. ஆனாலும் அவர்களின் அக்கறையான, ஆரோக்கியமான முயற்சிக்கு முதலில் நன்றிகள். ஆனால் அங்கே ஏன் மற்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக தமிழ் கற்பிக்கின்ற “ஆசிரிய மணிகள்”. இந்த இணைய மாநாட்டின் முக்கிய நோக்கமே கணினி மூலம் எவ்வாறு தமிழை இலகுவாக கற்பிக்கலாம் அல்லது எல்லாத் தரப்பினருக்கும் எடுத்துச் செல்லலாம் என்பதே. ஆனால் அதனை கற்பிக்கின்றவர்கள் எவரும் புதிய விடயங்களில் ஆர்வம் காட்டாமை வருத்தத்துக்குரியதே. கற்பிப்பது அவர்கள் பிரச்சினை. ஆனால் இந்த ஆக்கங்களை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கி பணம் செலவழித்து அங்கே சென்று வெளிப்படுத்திவிட்டு வந்தவர்களை ஊக்கப்படுத்தவாவது அவர்கள் வந்திருக்கலாம். பலநூற்றுக்கணக்கான தமிழ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் வரவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம். இப்படியான சில புறக்கணிப்புக்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவு வளர்ச்சியினை மந்தகதியாக்கும். தமிழின் சாவையும் விரைவாக்கும்.

******************

சங்கீத இசைக்கச்சேரி மேடைகள் எல்லாவற்றிலும் அநேக தமிழ்ப் பாடகர்களால் வேற்று மொழிப்பாடல்கள் பாடுவது என்பது வழமையான ஒன்றாகிவிட்டது. இசைக்கு மொழியேது என்பது உண்மைதான். ஆனால் சபையறிந்து பாடுவது என்பது ஒரு நல்ல பாடகருக்கு அழகு. அப்போதுதான் அந்த அரங்கினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இல்லையேல் அரங்கம் சலசலக்கத் தொடங்கிவிடும். முற்றிலும் தமிழர்கள் நிறைந்த அரங்கிலே பிற மொழிக் கீர்த்தனைகளை பாடுகின்ற சங்கீதப் பெருமக்களை என்ன சொல்வது? பிறநாடுகளை விடுங்கள். இலங்கையில் கம்பன் கழகம் நடாத்துகின்ற இசைவேள்வியில் பாடுவதற்கு வருகின்ற இந்திய கர்நாடக சங்கீத வித்துவான்கள் எல்லாம் தெலுங்கு கீர்த்தனைகள் உட்பட பிற மொழிப்பாடல்களை பாடுவதற்கு தயங்குவதில்லை. அந்த அரங்கம் முழுவதும் தமிழ் பேசும் நல்லுள்ளங்கள் மட்டுமே இருக்கும். சிறிது நேரத்தில் அவர்கள் குசுகுசுக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனை ஏன் அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல ஏற்பாட்டாளர்களும் இதிலே சிரத்தை எடுப்பதில்லை. பெரிய வித்துவான் வந்து இசைநிகழ்ச்சி நிகழ்த்தினால் போதும் எப்படி, எதை பாடவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதில்லை. இதற்குமப்பால் முன் வரிசையில் இருந்து தாம் ஏதோ பாரிய இசை ஞானத்துடன் இருப்பதாக நினைத்து தலையாட்டி, தாளம் போடுவது அவர்களை இன்னும் அங்கீகரிப்பதாகவே இருக்கும். இப்படி தமிழ்ப் பாடல்களை மறந்து சென்றால் தமிழ்ப் பாடல்கள் காலப்போக்கில் காணாமலே போய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு யார் மணிகட்டுவது. கலைஞர்களும் திருந்தவேண்டும். ஏற்பாட்டாளர்களும் இதிலே முன்னின்று உழைத்து தமிழ்ப் பாடல்களைப் பாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மெல்ல இனிச்சாவதை எவரும் தடுக்க முடியாது.
இந்தப் படத்தினை உருவாக்கி அனுப்பி உதவிய நண்பர் கு. அசோக்பரன் அவர்களுக்கு நன்றிகள்..!

14 கருத்துகள்:

Unknown சொன்னது…

என்ன தான் சொன்னாலும், சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் மட்டுமே......

என்.கே.அஷோக்பரன் சொன்னது…

“மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும் என்றெந்தப் பேதையுரைத்தான்?” - மகாகவி சுப்ரமணிய பாரதி.

நீங்கள் சொன்ன விஷயம் உண்மை. தமிழர்கள் போகிற போக்கில் பாவம் அந்த பாரதியைப் பேதையாக்கி விடுவார்கள் போலும்....

பதிவர்களாகிய நாம் எமது பதிவுத் தளங்களில் போட வேண்டிய கட்டாய வாசகம் ”தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்”

பெயரில்லா சொன்னது…

வழி காட்ட வேண்டிய
கருணாநிதி போன்ற தலைவர்களும்.....
வாக்கு மாறும் சிவத்தம்பி போன்ற புலவர்களும் இருக்கும் போது....
தமிழ் என்றோ செத்து விட்டது...

voceofseeman.blogspot.com

வலசு - வேலணை சொன்னது…

தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாக நினைப்பவர்களாகவே பெரும்பான்மையான தமிழர்கள் விளங்குகின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமே.

'உத்தமம்' அமைப்பு தமிழ் மக்களிடையே பரவலாகச் சென்றடையவேண்டும்.

இப்போதைய தமிழ்த்திரையிசைப் பாடல்களிலும் தமிழ் மொழியினைக் காணமுடிவதில்லை.

என்.கே.அஷோக்பரன் சொன்னது…

தமிழரிடம் தமிழில் பேசுங்கள் அறிவுப்புப் படம்!
தயவு செய்து இதனை உங்கள் வலைப்பதிவில் இணைத்து விடுங்கள்...
இது சிறிய முயற்சி தான் ஆனால் காலப்போக்கில் பெரிய மாற்றத்தைக்கூட உருவாக்கலாம்...

இது வலைப்பதிவர்கள் எங்களின் நிகழ்ச்சித் திட்டமாகக் கொண்டு நடாத்துவோம்.

படத்தை தரவிறக்கி நீங்கள் விரும்பியபடி இணைக்க கீழே சொடுக்கவும்.

http://img263.imageshack.us/img263/9480/speaktamill.jpg

நன்றி.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

சரியான ஆதங்கம்.... மிக்க நன்றி நண்பா,..

sarva சொன்னது…

மொழியொன்று உலகில் நிலைத்து நிற்பதற்கு உலகின் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் தன்மை இருத்தல் வேண்டும். அதன் அடிப்படையில் தமிழை உலகின் அரங்கில் ஏற்ற சில காலத் தேவை கருதிய மாற்றங்கள் அவசியமானவையே

கிடுகுவேலி சொன்னது…

நன்றி சங்கர்,
நன்றி அஷோக்பரன்,
நன்றி அனானி,
நன்றி வேலனை வலசு,
நன்றி ஞானசேகரன்,
நன்றி சர்வீ,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் ஒரு தடவை நன்றி...!!!

ப்ரியா பக்கங்கள் சொன்னது…

என் வீட்டுக்கு( நான் நெதர்லாந்தை சொல்லுகிறேன்) அண்மையில் உள்ள கோவிலுக்கு செல்லும் போது கூட பார்த்து வேதனை அடைந்தது. அவர்கள்(பெரிசுகள்) எல்லாரும் இன்றைக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்தாலும் , கோவிலில் கூட ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். அப்படி பெற்றோரே செய்யும் போது அவரது பிள்ளைகளை எப்படி தமிழ் பேச முயற்சி செய்விப்பார்கள்.. காலத்தின் கோலம் தான்..:(

இடையிடையே ஆங்கில சொல்லை பாவித்தால் அது குற்றம் இல்லை .. என்று ஒரு சில ஊடகங்களில் அறிவிப்பாளர்கள் சிலர் சொன்னதை கூட கேட்டு உள்ளேன். இவர்களே இப்படி ஊக்குவித்தால் .. பிறகு எப்படி எதிர்காலத்தில் முடியும்.. ஊடகம் மூலம் தான் இப்போதைக்கு தமிழை இலகுவா பரவ செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இது தனிப்பட்ட கருத்து.

கானா பிரபா சொன்னது…

வெளிநாட்டில் நம்மவர் இன்னொரு தமிழருடன் ஆங்கிலத்தில் பேசுவது அப்பட்டமான நாகரீக மோக வெளிப்பாடு, வெளிநாட்டில் கனகாலம் இருந்ததால் தமிழ் வரவில்லை என்று பீலா விடுவார்கள்.

இங்கே பல்கலைக்கழக அனுமதித்தேர்வுக்கான தமிழ் மதிப்பீட்டு வகுப்புக்கு ஒவ்வொரு வருஷமும் நான் போவதுண்டு. தமிழும் இங்கே பல்கலைக்கழக புகுமுக வகுப்பு பாடமாக (அவுஸ்திரேலியாவில்) இருக்கிறது. வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளையே மிக அழகாக அட்சர சுத்தமாக தமிழ் பேசும். எனவே தமிழ் அழிவதும் வாழ்வதும் ஒவ்வொரு தமிழ்மகன் கையில்

முல்லைப்பிளவான் சொன்னது…

அருமையான ஆக்கம். நீங்கள் ஏழுதியுள்ளமை உண்மையே. தமிழை தமிழ் நாட்டில் தமிழங்களமக்குகின்றார்கள்.

எங்களிடமும் எங்களின் பெற்றோரிடமும் ஆங்கிலம் பேசுபவர்கள் பெரியவர்கள், எல்லாம் தெரிந்த மேதைகள் என்ற எண்ணம் உள்ளமை தான் இதன் பிரதான காரணம் என நினைக்கிறேன்.

ஈழத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழ் நடமுறையில் கொண்டு வந்தவர்கள். ஆனால் அது முழுமை பெறவில்லை. வெளிநாகளில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். அதனை சரியான முறையில் ஊடங்களும் பெற்றோருமம், எமக்கான அரசியல் தலைமைகளும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் ஒழுங்கு படுத்தினால் தமிழ் அழிவினை தடுக்க முடியும். முடியாது என்று ஒன்றும் இல்லை முயற்சித்தால் முடியும் என நான்நினைக்கிறேன்.

எல்லாத்திற்கும் எங்களுக்கு சரிpயான அரசியல் தலைமையும் நாடும் உருவாக்கப்பட் வேண்டும். தமிழ் அழியாது அழிக்க வும் முடியாது என்பதனை அப்போதுதான் முடிவு செய்ய முடியும்

தமிழ் நாட்டில் ஒரு பகுதியில் தமிழ் நன்கு அழியாமல் இருந்தாலும் நடைமுறையில், மக்களிடையே தமிங்களம் தான் உள்ளது. இது மிக கவலையான விடயம். தமிழ் தமிழ் என கத்தும் தமிழ் நாட்டு தலைவர்கள் நடைமுறையில் மக்களிடையே துய தமிழ் பழக்கங்களை கொண்டுவர முயற்சிக்கவில்லை என்பது தான்.

ஈழத்து தமிழர்கள் வாழும் புலம் பெயர் நாடுகளில் உருவாகியுள்ள இளைய சமூதாயம் தமிழை வளக்கும் வளர்ப்பதற்கு அனைவரும் உறுதுணையாக இருந்தால் தமிழ் அழியாது.

முல்லைப்பிளவான் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கிடுகுவேலி சொன்னது…

உண்மைதான் தமிழர்கள் நாமேதான் நம் மொழி தமிழைக் காப்பாற்றவேண்டும். இல்லையேல் எவர் காப்பாற்றுவார்கள்.
நன்றி ப்ரியானந்தசுவாமிகள், கானபிரபா. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

பெயரில்லா சொன்னது…

http://www.psminaiyam.com

கருத்துரையிடுக