திங்கள், 8 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா....!!!!

காதல் எவ்வளவு சுகமானது. எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறது என்பது கேள்வியே....!. சிலருக்கு கற்பனையாக, சிலருக்கு வாழக்கையாக, காதல் இனித்தே இருக்கிறது. சிலருக்கு அது கசக்கத்தான் செய்கிறது. இன்னும் சிலர் அது எமக்கு ஒவ்வாது என்று ஒதுங்கியே செல்கிறார்கள். திரைப்படங்களில் ஒவ்வொரு காதல் காட்சிகளையும் பார்க்கும் போதும் அல்லது சிறந்த ஒரு காதல் கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போதும் ஏன் ஒவ்வொரு காதலர்களையும் பார்க்கும் போதும் நாம் இப்படி எல்லாம் காதலிப்போமா அல்லது ஏன் எமக்கு இப்படி அமையவில்லை என்று எத்தனை பேர் மனதுக்குள் மறைவாக நினைத்திருப்போம். இரகசியமாக இரசித்தும் இருக்கிறோம், ஏங்கியும் இருக்கிறோம். எமக்கு அது கிடைக்கவில்லை என்றால் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது என எம்மை நாமே சமாதனாப்படுத்தி போய்க் கொண்டே இருக்கிறோம்.

படைப்பு என்பது எந்த ஒருவிதத்திலாவது ஒருவரின் மனதில் பதிந்து விட்டால் அது அந்தப் படைப்பாளியின் வெற்றியே. ரசனைகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டே தீரும். ஒத்த ரசனைகள் கொண்டவர்களை காண்பது அரிது. ரசிக்கும் பொருள் எது என்பதில் இங்கே பிரச்சினை இல்லை. ரசிப்புத்தன்மை என்பதுதான் வேறுபடுகிறது. ஒவ்வொருவர் மனதிலும் எது கூடியளவு தாக்கத்தை செலுத்துகிறதோ அதனை அவர்கள் ரசிக்கத்தொடங்கி விடுவார்கள். திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு கோணத்திலேயே இருக்கும். திரைப்பட அறிவு பூச்சியமாக கொண்ட ஒருவரின் இரசனையும் அதிலே அதிக நுணுக்கங்கள் தெரிந்த ஒருவரின் ரசனையும் வேறுபடும். ஒரு பொதுவான நிலைக்கு வரமுடியாமல் இரசனைகள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களா அல்லது இளையராஜா பாடல்களா சிறந்தது என்று இன்றும் வாதிட்டு காலத்தைக் கழிப்போர் பலர். சிவாஜிகணேசனா கமல்ஹாசனா சிறந்த நடிகர்கள் என்று போட்டி போடுவோர் அதிகம். ஒரு துறையில் அதிக அறிவு கொண்டவர்களின் பார்வையும், அந்தத்துறையில் பாமர அறிவு கொண்டவர்களின் பார்வையும் வேறுபடுகின்றது. எது நல்ல இசை, எது நல்ல திரைப்படம், எது நல்ல படைப்பு என்று விவாதங்களைத்தவிர்த்து அவரவர் ரசனைக்கேற்ப எதனையும் ரசிப்பது நல்லது.

கவிதைப் புத்தகங்கள் நிறைய வாசித்திருந்தும் ஒரு காதல் கவிதைத் தொகுப்பை முழு மூச்சில் ரசித்து வாசித்த திருப்தி “விண்ணைத்தாண்டி வருவாயா...” என்ற திரைப்படம் பார்த்தபின்பு கிடைத்தது. காதல்....! ஒரு மகத்தான வார்த்தை. எல்லோர்க்கும் கைகூடுவதில்லை. கைகூடியவர்களும் அதனை இறுதி வரை கட்டிக்காத்தார்களா என்பதெல்லாம் கேள்வியே...! ஆனால் அந்தக் காதல் வயப்பட்ட கணங்கள் எப்படி இருக்கும், ஒரு காதலன் அல்லது காதலியின் தவிப்பு எப்படி இருக்கும், இவையெல்லாம் நாம் நண்பர்களின் காதலின் போதோ அல்லது தெரிந்தவர்களின் காதலின் போது பார்த்திருக்கிறோம். அவற்றை எல்லாம் திரையில் வித்தியாசமான காட்சிகளோடு கண்டு களித்தேன்.

“விண்ணைத்தாண்டி வருவாயா..” என்ற திரைப்படம் பார்த்த பின்பு அது மனதில் எக்கச்சக்கமாக பதிந்து விட்டது. பாதித்துவிட்டது. காரணம் தெரியவில்லை. கௌதம் வாசுதேவ் மேனன் மீது கொண்ட நம்பிக்கையில் படம் பார்க்க சென்றேன் (நீண்ட காலத்தின் பின் பெரும் படையாக சென்றோம்). காதலை பல பரிமானங்களில் காட்டியாகிவிட்டது. இவர் எதை காதலில் புதிதாக சொல்லப் போகிறார் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் கௌதம் என்ற இயக்குநர் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தேன். சிம்பு என்ற ‘விரல் வித்தைக்காரன்’ கொஞ்சம் கண் முன்னால் வந்து மிரட்டினாலும்....இது கௌதம் படம் ஆகவே வாய் , கை பொத்திக் கொண்டு இருந்திருப்பார் என்பதால் துணிவோடே சென்றோம். இது விமர்சனம் அல்ல. அந்தப் படத்தைப் பார்த்ததும் எழுந்த என் எண்ணத்தின் பிரதிபலிப்பு அவ்வளவே....!!

பாடல்கள் வித்தியாசமாக இசையமைக்கப்பட்டிருந்தது. விருதுகளின் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல்களை மிக நுணுக்கமாகத்தான் வாங்கியிருக்கிறார் இயக்குநர். பாடல்களின் வெற்றியில் எனது சிற்றறிவுக்கு எட்டின வகையில் இசையமைப்பாளர்களை விட இயக்குநரே காரணமாக அமைகிறார் என்பது என் எண்ணம். அவர்கள்தான் இது வேண்டாம் அது வேண்டாம் அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என பிழிந்து வாங்குகிறார்கள். பிரபல இயக்குநர்கள் எடுத்த படங்களின் பாடல்களை நினைத்தால் உண்மை புலப்படும். பொதுவாகவே கௌதம் இயக்கும் படங்களின் பாடல்கள் ஒரு போதும் சோடை போனதில்லை. ஹரிஸ் ஜெயராஜ் உடன் முரன் பட்ட பின் பாடல்கள் தோற்று விடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருந்து ரஹ்மானிடம் வாங்கியிருக்கிறார். இதுவரை ரஹ்மானிடம் காணாத ஒரு வித்தியாசமான இசை.ஒரு காதல் நிரம்பி வழியும் ஒரு படத்திற்கு இசை எவ்வாறு இருக்க வேண்டும் என ரஹ்மானும் உணர்ந்து அனுபவித்து இசையமைத்திருக்கிறார்.

கௌதம் என்ற படைப்பாளி ஒவ்வொரு காட்சியையும் மிக அருமையாகவே எடுத்திருக்கிறார் என்பதை விட சிற்பத்தைப் போல செதுக்கியிருக்கிறார். அவருக்கு துணை புரிந்தவர்கள் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும். பின்னிப் பிணைந்து அருமையான ஒரு படத்தைத் தந்திருக்கிறார்கள். அனுபவித்து எடுத்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. அதுமட்டுமல்ல எம்மையும் அனுபவிக்க வைத்துவிட்டார். கேரளா அழகை அப்படியே கமெராவிற்குள் அள்ளிக் கொண்டு வந்து திரையில் எமக்கு முன்னால் கொட்டுகிறார்கள். கேரளாவிற்கு போகவேண்டும் என்ற ஆவல் நெருப்பில் எண்ணை ஊற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். கண்டதும் காதல்....! காதல் வரக் காரணம் த்ரிஷாவின் பேரழகும் நளினமும்....! சிம்பு காதலில் உருகுவதும், த்ரிஷாவை சந்தித்து கதைக்க முயற்சிக்கும் அல்லது கதைக்கும் காட்சிகள் அருமை...! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹைக்கூ கவிதைகள். ரசித்துத்தான் பார்க்க வேண்டும். வார்த்தைகளில் வெளிப்படுத்துவது என்பது கடினம். ஆனால் இவ்வளவு பெண்கள் இருக்கும் போதும் ஜெஸ்சியை ஏன் காதலித்தேன் என்று சிம்பு கேட்பதும் அந்தக் கேள்வியை அடிக்கடி ஒவ்வொருவரைக் கொண்டு கேட்கவைப்பதும் சிறப்பாக இருந்தது . காதலித்தவர்கள் எல்லோரும் மிக மிக இரசித்துத்தான் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். வாசகர்களில் அநேகம் பேர் “தபூ சங்கர்” அவர்களின் காதல் ஒழுகும் கவிதைகளை வாசித்திருப்பீர்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு அந்த உணர்வே இருந்தது.

படத்தில் ஒரு கட்டத்தில் த்ரிஷாவின் திருமணம் குழம்பிய அந்தத் தினத்தின் இரவு நேரத்தில், த்ரிஷாவின் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருவரும் (சிம்பு + த்ரிஷா) பயந்து பயந்து கதைப்பார்கள். மிக அருமையான காட்சி. வசனங்களும் காட்சி அமைப்புகளும் நேர்த்தியாக இருந்தது. அப்படியே மனதை மயிலிறகால் வருடுவது போல இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே உன்னை காதலிக்க ஆரம்பித்தேன் என்று மிக லாவகமாக அனாசயமாக சிம்புவிடம் த்ரிஷா சொல்லும் காட்சி அதி அற்புதம். நடுநிசியில் எவருக்கும் தெரியாமல் காதலி வீட்டில் நுழைந்து காதலியுடன் பேசுவது என்பதனை கௌதம் எங்கோ தன்வாழ்விலும் சந்தித்து இருக்க வேண்டும். காரணம் அப்படி இருந்தது அந்தக் காட்சி. அதே போல சிம்புவின் நண்பர் கணேஷ் அவர்களின் வீட்டில் யாரும் இல்லாத ஒரு தனிமைப் பொழுதில் விரிகிறது திரையில்....அத்தனையும் கவிதையே...!! அந்த ஒவ்வொரு காட்சியிலும் காதல் வழிகிறது. ”ஏன் இந்தக் கணம் இவ்வளவு இனிமையாக இருக்கிறது..” என்று சிம்பு கேட்க....அதற்கு த்ரிஷா....”இப்படி நாம் இருப்பது இதுதான் கடைசியோ....” என்று சொல்வார். அதன் போது த்ரிஷாவை சிம்பு பார்க்கும் பார்வையும்....த்ரிஷாவின் பதட்டமில்லாத பதிலும்....அருமை...!!! இப்படி இப்படி சொல்ல்லிக் கொண்டே போகலாம்...!!

திடீர் திருப்பமாக அமெரிக்காவில் த்ரிஷாவைச் சந்திக்கும் சிம்புவிடம்...”எப்படி இருப்பாள் உன்னவள்...” என்பது போன்ற த்ரிஷாவின் கேள்விக்கு சிம்புவின் பதில்களும் நடிப்பும் இவ்வளவு நாளும் எங்கைய்யா இருந்தாய் என்று கேட்க தோன்றுகிறது. தன்னால் இதுவரை தான் அழிந்தார் என்பதே சிம்பு விடயத்தில் உண்மை....! எவருமே எதிர்பாராதவிதமாக அமைந்திருந்தது முடிவு. இந்த இடத்தில் கௌதம் மேனனுக்கு எழுந்து நின்று கைதட்டினால் என்ன...! அருமை..!! நிச்சயமாக எல்லோரையும் பாதித்தே இருக்கும். தெலுங்கில் வேறு ஒரு முடிவும் தமிழில் வேறு ஒரு முடிவுமாக கௌதம் அவர்களின் ஆளுமையும் அவரின் இரசிப்புத்தன்மையும் பட்டவர்த்தனமாக இதிலே தெரிந்தது. த்ரிஷாவை ஓவியமாக காட்டிய கௌதம் மேனன் சிம்புவில் கூடிய கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ’மின்னலே’ மாதவன்....’வாரணம் ஆயிரம்’ சூரியா இவர்களிடம் இருந்த அந்த ஒளிமுகம் சிம்புவிடம் இல்லை என்பது எண்ணம்....!!!

இது விமர்சனம் இல்லை...என்னளவில் இந்தப் படத்திற்கான பதிவு. ஆழமாக மனதில் ஊடுருவி விட்டது. இது புலம்பலாக இருந்தாலும் அதுவும் பாதிப்பின் ஒரு வெளிப்பாடே...! இன்னும் காதுகளில் ஒலிக்கும் இசை. வசன அமைப்பு, காட்சி அமைப்பு ஒளிப்பதிவு, இசையமைப்பு எல்லாமே அவரவர்களின் கைவண்ணங்களே...! விண்ணில் இருந்தாலும் என்னவளே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மண்ணுக்கு என்று கேட்க தோன்றுகிறது....!!! (எவரும் இல்லை என்பது வேதனை...!!)

9 கருத்துகள்:

Sudar Nimalan சொன்னது…

எதையும் ரசிக்க தெரிந்தவனின் இனிமையான படைப்பு - இரண்டையும் சொன்னேன்

பெயரில்லா சொன்னது…

உண்மைதான்... உங்களின் வரிகளில் நீங்கள் எவ்வளவு தூரம் இந்த படத்தை ரசித்திருகிரீன்கள் என்று புரிகிறது.. கவிதைப் புத்தகங்கள் நிறைய வாசித்திருந்தும் ஒரு காதல் கவிதைத் தொகுப்பை முழு மூச்சில் ரசித்து வாசித்த திருப்தி “விண்ணைத்தாண்டி வருவாயா...” இந்த வரிகள் நீங்கள் ஒரு கவிதைகளின் ரசிகன் அல்லது நீங்களும் ஒரு கவிஞ்ஜன் என்பதை புலப்படுத்துகிறது.. உங்களின் பார்வையில் விண்ணைத்தாண்டி வருவாயவின் நல்ல பகுதிகளை மட்டும் சொன்னதால் உண்மையில் இது விமர்சனம் ஆகாது..தொடரட்டும் உங்களின் எழுத்து பணி.. நீண்ட இடைவெளியின் பின் உங்கள் பதிவு வந்திருப்பது சந்தோசத்தை தருகிறது..

RATHAN...

sweet சொன்னது…

So u hate simbu... huh

compared to surya, vijay - simbu is best

i like simbu

madhumidha

கிடுகுவேலி சொன்னது…

நன்றி நிமலன்...!

நன்றி ரதன்....! ஆனாலும் இது விமர்சனம் இல்லை என்னளவில் விண்ணத்தாண்டி வருவாயா எந்தளவு பாதித்தது என்பதை சொல்லியிருந்தேன் அவ்வளவே..!!

நன்றி மதுமிதா..!! சிம்புவை பிடிக்கவில்லைத்தான் விரல் வித்தைகள் காட்டும் போது...!!

கானா பிரபா சொன்னது…

பதிவை ரசித்தேன், படத்தைப் போல

அருண்மொழிவர்மன் சொன்னது…

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை என்பார்கள். அது போலவே விண்ணைத்தாண்டி வருவாய் திரைப்படமும். கோயில்களில் நடைபெறும் பலித்திருவிழாக்கள் போலவே ரத்தமும், வன்முறையும் கூச்சலும் நிறைந்து வருகின்ற அண்மைக் காலங்களில் சற்றே மென்மையாக வெளி வந்திருக்கின்ற விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றி பெற்றிருக்கின்றது என்றே சொல்லவேண்டும். அதைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த இரண்டு வாரங்களாக வலைப் பதிவுகளில் மாறி மாறி எழுதப்படும் அளவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயில் பெரிதாக ஒன்றும் இல்லை. இன்னும் திருத்தமாகச் சொல்வதானால், இதைவிட அழுத்தமான, உணர்வு பூர்வமான எத்தனையோ காதல் கதைகளை தமிழ் சினிமா தந்திருக்கின்றது.

முகவை மைந்தன் சொன்னது…

படம் முழுவதும் ஒவ்வொரு திரை நகர்விலும் காதலர்களோடு கூடவே பயணம் போன மாதிரி ஒரு உணர்வு. அவ்வளவு நேரமும் இருண்டு பேரை மட்டும் மாத்தி, மாத்திப் பாத்துக்கிட்டு இருக்கம்னு தோணவே இல்லை. எவ்வளவோ காதல் படங்கள் இருக்கும் போது அந்தப் படத்தை ஏன் விரும்புனேன்னு திரும்பிப் பாத்தா இவ்வளவு நெருகத்துல காதலை பாத்தது இல்லைங்கறது தான் விடையாக் கிடைக்குது. சிம்பு, திரிசா இருவரும் அருமையான நடிப்பை வெளிப் படுத்தி இருக்காங்க. உங்க உணர்வுகளோட நெம்பவே ஒத்துப் போறேன். நல்ல இடுகை. (நல்ல விமர்சனம்னு சொல்ல வந்தேன், நீங்க தான் உணர்வின் வெளிப்பாடுன்னுட்டீங்களே:-)

Veliyoorkaran சொன்னது…

சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கருத்துரையிடுக