செவ்வாய், 27 அக்டோபர், 2009

இதயம் வலிக்கும் ஒரு இடப்பெயர்வு....!

எமது வாழ்வில் ஒரு பெரும் சோகத்தை தந்தது, 1995 இன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு. ஒக்ரோபர் 30, வலிகாமம் வலிகளை தாங்கிக் கொண்டு ஒரு இரவுக்குள் தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்தது. வார்த்தைகள் கொண்டு இதனை வடித்துவிட முடியாது. அனுபவித்தவன் ஒவ்வொருவனும் ஒரு பெருமூச்சோடு அதனை நினைவு கூர்ந்து கொள்வான். 'சூரியக்கதிர்’ என்ற ஒரு இராணுவ நடவடிக்கை யாழ். தீபகற்பத்தினை விழுங்க ஆரம்பித்தது. மிகச்செறிவான எறிகணைகள்....! பலமான வான் தாக்குதல்கள்...!! கவச வாகனங்களின் குண்டு உமிழ்தல்...!!! என குடாநாடு அதிர்ந்த வண்ணமே இருந்தது. இதன் உச்சக்கட்டமாக நடந்ததுதான் அந்த பாரிய இடப்பெயர்வு. இன்று இலகுவாக 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. எத்தனை மாற்றங்கள். அதனை விட இப்போது எத்தனை கொடிய வலிகள்.

எல்லா இடத்திலும் பதட்டம். எல்லோர் முகத்திலும் கலக்கம். இப்படியான பல இடப்பெயர்வுகளை முன்னரே சந்தித்திருந்தாலும் இது ஒரு வித்தியாசமாக இருந்தது. காரணம் ஒரு சொற்ப பொழுதுக்குள் எல்லோரும் அகதியாக்கப்படுகிறோம் என்ற ஆதங்கம் தெரிந்தது. ஒரு இரவுக்குள் யாழ். குடாநாட்டின் வலிகாம பிரதேச மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து தென்மராட்சிக்குள் புகுந்தனர். ஏறத்தாழ அனைத்து மக்களும் ஊரோடின் ஒத்தோடு என புறப்பட்டே விட்டனர். தேடிய சொத்துக்கள், பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்த முதுசங்கள், சொந்த வீடு, காணி, வயல், தோட்டம், கால்நடைகள் எல்லாம் கண் முன் தெரியவில்லை. அரக்கர் கூட்டத்தின் கைகளில் அகப்படக்கூடாது என்பதும், எறிகணைகளுக்குள் அகப்பட்டு அநியாயமாக சாகக் கூடாது என்பதும் உடைமைகள் பற்றி எண்ண முடியாமல் போய்விட்டது. கையில் அகப்பட்டவற்றுடன் புறப்பட வேண்டிய ஒரு சூழல். ஆண்டாண்டு காலமாக வசித்த பூமியை விட்டு கணப்பொழுதில் அகல வேண்டிய ஒரு இக்கட்டான நிலை. இருந்தும் புறப்பட்டே தீரவேண்டும் என்பதால் அனைவரும் அகன்றனர்.

தென்மராட்சிப் பிரதேசத்துக்குள் நுழைய இரண்டு பாதைகள் மட்டுமே. அதுவும் பெரிய அளவில் இல்லை. இரண்டு வாகனங்கள் சமாந்தரமாக போக முடியும். இடையில் கடல் நீரேரிகள். அந்த சாலையில் பாலங்கள் வேறு. இலட்சக்கணக்கான மக்கள் இரவோடிரவாக புறப்பட்டனர். கால்கள் போகும் பாதையில் பயணம். இருளும் சூழ்ந்து கொண்டு விட்டது. எங்கே போகிறோம் என்பது தெரியாது. என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாது. எமக்கு என்ன நிகழப்போகிறது என தெரியாது. கர்ப்பினி, நிறைமாதக் கர்ப்பினி, கைக்குழந்தை, சிறுவர், இளைஞர்கள், வயது வந்தவர்கள், முதியவர்கள்....என எல்லோரும் ஏதிலிகள் போல் நடந்தனர்.

"பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடமறியாமல் - இங்கே
சாகும் வயதினில் வேரும் நடக்குது
தங்கும் இடம் தெரியாமல்............”

என்ற வரிகளை இங்கே தவிர்க்க முடியவில்லை. செம்மணி சுடலை தாண்டியவர்களில் சில பேரிற்கு நாவற்குழி சவக்குழியானது. கைதவறி விடப்பட்ட முதியவர்கள் நீரூள் மூழ்கினர். இருட்டுக்குள் எதுவும் தெரியவில்லை. பாதை எது தண்ணீர் எது என்று எண்ணுவதற்குள் சிலரது வாழ்வு முடிந்து விடுகிறது. ஒரு பத்து மீற்றர் தூரம் நடக்க ஒரு மணி நேரக் காத்திருப்பு. வாகனங்களும் அதற்குள்ளே. அழுகுரல்கள், அய்யோ, கடவுளே, என்ற ஓசைகள் தான் எங்கும். தரையில் தமிழனின் அவலம் கண்டு வானமும் கண்ணீர் சொரிந்தது... ! அது தாகமாக இருந்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. குடைகளில் தண்ணீரை ஏந்தி குழந்தைகளுக்கு பருக கொடுத்தனர். அண்ணாந்து வாய் திறந்து ஆகாயம் தந்த நீர்த்துளிகளை குடித்து பசி முடித்தனர். நினைத்துப் பார்க்க முடியாத அவலம். ஆனால் அந்த மழையும் மக்களை வதைத்ததாகவே தோன்றுகிறது. தெப்பமாக நனைந்து விறைத்து போனது பலரது உடல். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. பசிக்கு உணவில்லை. ஒரு வெட்ட வெளிக்குள் நின்றது போன்ற உணர்வு.

கைதடிச் சந்தி தாண்டியதும் ஒவ்வொருவரும் கிடைக்கின்ற இடங்களில் இருந்தனர். மரத்தடி, கோவில், பாடசாலை, சனசமூக நிலையம், உறவினர் வீடு, வீதியோரம் என கால் கடுக்க நடந்தவர்கள் களைப்பாறினர். ஆனால் பின்னர் அதுவே அவர்களின் நிரந்தர குடியிருப்பு பிரதேசங்களாக மாறிவிட்டன. மாளிகை வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மரநிழலில் இருந்தனர். கணப்பொழுதில் வாழ்வின் தத்துவம் விளங்கியது. ஒரு இரவில் எல்லாம் நடந்து முடிந்தது. அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருந்தவர்களும் வெளியேறினர். தமக்கான இடங்களை ஓரளவு தெரிவு செய்தபின்னர் மீண்டும் சென்று சில பொருட்களை எடுத்துவந்தனர். பலவீடுகளில் 50 பேர் 60 பேர் என இருந்தனர். இவை எல்லாம் 5 பேர் வாழ்ந்த வீடு. ஆனால் எல்லோரையும் தாங்கி நின்றது. குழந்தைகளும் முதியோருமே அவதிப்பட்டனர். படுக்கை விரிப்புகள், சாரம் (லுங்கி), சாக்கு, சேலை என்பன கூரைகள் ஆகின. முட்கள், குப்பை, சுகாதாரம் பற்றி எந்தவித கவலையுமின்றி இடம்பெயர்ந்த வாழ்வு தொடங்கியது. வழிமாறி உறவினர்களைத் தேடி அலைந்தவர்களின் அவஸ்தை சொல்லிமாளாது. பெற்றோரை தவறவிட்ட குழந்தைகள். முதியவர்களைத் தவறவிட்ட உறவினர்கள். இன்னார் அவரைத்தேடுகிறார். அவர்கள் இவர்களைத்தேடுகிறார்கள். அறிந்தவர்கள் தகவல் தரவும் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்தும் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். பத்திரிகைகள் கூட ஒரு வாரம் கழித்தே வெளிவந்தது. கடைகளில் சாமான்கள் இல்லை. இருந்தவை கூட பதுக்கப்பட்டது.

முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு உணவு என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்தது. உணவுப் பொருட்கள் இல்லை. இருந்தாலும் சமைப்பதற்கு பாத்திரங்களோ அல்லது வசதிகளோ இருக்கவில்லை. முதல் நாள் மாலைப் பொழுதிலேயே சனம் வெதுப்பகங்களுக்கு (பேக்கரி) முன்னால் காத்திருக்க தொடங்கிவிடும், அடுத்தநாள் காலை விற்க இருக்கும் பாண் வாங்குவதற்கு. அதுவும் ஒருவருக்கு ஒரு இறாத்தல் (450கிராம்) அல்லது அரை இறாத்தல். சில பொதுமக்கள், தன்னார்வ ஊர் அமைப்புகள், ஆலயங்கள் தாமாக முன்வந்து சமைத்த உணவுகளை பொதிகளாக்கி வழங்கினர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயம் சுதாரிப்பதற்கு நீண்ட காலம் எடுத்தது. அதன் பின்னரே ஓரளவு நிலைமைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் 1996 ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்துக்குள் காலடி எடுத்து வைத்தோம். ஆனால் அதற்குள் நிறைய பட்டு விட்டோம். படித்து விட்டோம். முகத்தில் அறைந்தது போல் சில யதார்த்தங்களை ஏற்றுக் கொண்டோம். காலம் நிறையவே கற்றுத்தந்தது. சில மனிதர்களை அடையாளம் காட்டியது. சில மனித வேடம் தாங்கிய ஜீவன்களை அடையாளம் காட்டியது. செம்மணி கடக்கும் போது அதிலே இடப்பெயர்வின் போது இறந்தவர்களின் கனமான நினைவு வந்தது. ஆனால் அதே செம்மணிக்குள் யாழ்ப்பாணம் திரும்பிய பின் நடந்த அந்த படுகொலைகளும் புதைகுழிகளும் என்றென்றும் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிக்கொண்டே இருக்கும்.

இன்றளவும் நாம் சந்தித்த இடப்பெயர்வுகள், அவலங்கள் என நிறைய இருந்தாலும் இந்த வலிகாமத்தின் வெளியேறல் ஒரு சரித்திர புள்ளியே. ஒரு இரவுக்குள் சுமார் 4.5 லட்சம் மக்கள் வெளியேறியது என்பது அராஜகப் பிடிக்கு எதிரான ஒரு கிளர்ச்சியே. அன்று 1995 ஒக்ரோபர் 30 ந்திகதி வெளியேறிய எத்தனையோ மக்கள் இன்னமும் சொந்த ஊர் போகவில்லை. தாய் மண்ணில் சாகாமல் வாழ்வை முடித்தவர்கள் பலர். காலங்கள் மாறும். ஆனால் அது தந்த வடுக்கள் மாறாது.

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மறக்க முடியாத இடப்பெயர்வு பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்.
ஒரு பகுதியினர் வடமராட்சி பகுதிக்கு இடம்பெயர்ந்திருந்தாலும் கூட
பெருந்திரளான மக்கள் தொகையை ஏற்க தென்மராட்சி திக்குமுக்காடிவிட்டது
என்று சொல்லலாம்.

2000 இல் ஏற்பட்ட தென்மராட்சி இடப்பெயர்வும் மிகவும் கொடியது என்றாலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வலிகாம இடப்பெயர்வுடன் ஒப்பிடும் போது மிக சிறிய அளவு என்பதால் வெளியுலகத்திற்கு பெரிதாக தெரியாது என நினைக்கிறேன். முதன் முதலில் பல் குழல் எறிகணை (ஒரு தடவையில் 40 ) பாவிக்கப்பட்டது தென்மராட்சி சண்டையில் தான்.

முல்லைப்பிளவான் சொன்னது…

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் நடைபெற்ற மிகப்பேரிய இடப்பெயர்வு இது. யாராலும் வாழ்க்கiயில் மறக்க முடியாதது. நல்ல பதிவு இதனை எனது வலப்பக்கத்தில் ஈட்டுக்கொள்கின்றேன். நன்றி

பெயரில்லா சொன்னது…

1987ல் நடந்த ஒப்பரேசன் லிபரேசன் தான் முதல் இடப்பெயர்பு வடமராட்சி மக்கள் தென்மராட்சியிலும் வலிகாமத்திலும் இடம் பெயர்ந்து கிட்டத்தட்ட 45 நாட்கள் தங்கியிருந்தார்கள். எத்தனையோ கசப்பான சம்பவங்கள் சில வலிகாம டமிலர்களால் வடமராட்சி மக்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் ஆனால் அவர்கள் வலிகாமம் இடம்பெயர்ந்தபோது தென்மராட்சி வடமராட்சி மக்கள் காட்டிய அன்பையும் அக்கறையையும் இன்றைக்கும் அந்த மக்கள் நினைவுகூறுகின்றார்கள்.

இடம்பெயர்வுக்கு முதல்நாள் நாவற்குழிப் பாலத்தினூடாக நான் கடைசியாக யாழ்ப்பாணம் போனேன் அடுத்தநாளும் போகவேண்டியிருந்தது ஆனால் சில காரணங்களால் போகவில்லை, நல்லகாலம் இல்லையென்றால் நான் மீண்டும் ஒருமுறை இடம்பெயர்ந்திருப்பேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இடம் பெயர்வு சாதாரணமானது அல்ல.

ரணமானது, மிகுந்த வலியை தரவல்லது.

அந்த வலியை உணர்கிறேன்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//"பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடமறியாமல் - இங்கே
சாகும் வயதினில் வேரும் நடக்குது
தங்கும் இடம் தெரியாமல்............”//

வலியை உணரமுடிகின்றது...

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

இந்த பூவும் நடக்குது என்ற பாடல் நீங்கள் வலிகாம இடப்பெயர்வுக்குஎடுத்தாண்டிருந்தாலும் அது உண்மையில் முன்னோக்கிய பாய்ச்சல் என்ற நடவடிக்கையில் இடம்பெயந்த மக்களை வைத்துஎழுதப்பட்டது. இதற்கு பதிலாக புலிப்பாய்ச்சல் நடந்து வெற்றியாக முடிந்தபின்னர் இப்பாடல் ஒளிக்காட்சியாகவும் பதியப்பட்டது.

ஆனால் இந்தப் பாடல் எங்களின் ஒவ்வொரு இடம்பெயர்வுக்கும் ஏற்புடையது என்பதையும் நான் ஏற்’றுக் கொள்கிறேன்.

JV சொன்னது…

Thank you very much for your precious time to describe our past true experiences in your great words... I really appreciate this article and please write more... I am hoping to translate this into English and let other community know about this sad moment.

Thanks Again,
JV

வலசு - வேலணை சொன்னது…

பதினான்கு ஆண்டுகள் முடிந்த பின்பும் கூட இடம்பெயர்ந்த மக்களில் பலர் இன்னமும் தடுப்புமுகாம்களில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் மழைக்காலம் வருகிறது. உரியவர்கள் யாரும் அவர்களைக் கணக்கில் எடுப்பதாய்த் தெரியவில்லை.

விரும்பி சொன்னது…

வணக்கம் கதியால்

சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர் இழந்தோம்
தென்னிலங்கை சீமையினால் நாமிருந்த ஊர்பிரிந்தோம்
கண்களிலே நீர்வழிய கால்கடுக்க நாம் நடந்தோம்
செம்மனிக்கு வந்தபின்பும் செய்வதறியாதிருந்தோம்

புதுவையின் பாடல் வரிகள்

14 வருடங்களிற்கு முன்னைய துன்பியல் நிகழ்வின் நினைவுப்பதிவு நல்லாயிருக்கு


1983 கொழும்பிலிருந்து தொடங்கி ஓப்பிறேசன் லிபறேசன்,இந்திய இராணுவப்போர், சூரியகதிர். சத்ஜெய, ஜெயசிக்குறு, வாகரை, சம்பூர்,இறுதியாக நடந்த வன்னி யுத்தம் வரை எம்மக்களின் இடப்பெயர்வினால் பட்ட வலிகள் வேதனைகள் என்றும் எம்மக்களின் ஆறாதவடுக்கள்தான்

தொடரட்டும் வாழ்த்துக்கள்

neruppu சொன்னது…

மனிதர்கள் வாழ்வதற்காக போராடுகிறார்கள்.....
எம் மக்களோ போராட்டதுக்க்காகவோ உசிர் வாழ்கிறார்கள்....
எம் இழப்புகள் வீண் போகக்கூடாது....போக மாட்டாது...

தொடரட்டும்

voice of seeman

சயந்தன் சொன்னது…

இந்த பூவும் நடக்குது என்ற பாடல் நீங்கள் வலிகாம இடப்பெயர்வுக்குஎடுத்தாண்டிருந்தாலும் அது உண்மையில் முன்னோக்கிய பாய்ச்சல் என்ற நடவடிக்கையில் இடம்பெயந்த மக்களை வைத்துஎழுதப்பட்டது.//

அந்தப்பாடல் முகங்கள் என்கிற ஈழப்படத்தில் இடம்பெற்றது. பின்னர் பிபிசி நடாத்திய உலகின் பத்துப் பாடல்கள் வரிசையில் 4 வது இடத்தை பிடித்தது.

2005 இல் நான் எழுதிய இடுகையொன்று
http://sajeek.com/archives/95

கிடுகுவேலி சொன்னது…

நன்றி அனாமதேயர்கள்,

நன்றி ஜோதிபாரதி,ஞானசேகரன்
..எங்கள் வலிகளை பகிர்ந்து கொண்டதற்கு

நன்றி முல்லைப்பிளவான்,
நன்றி வேலனை வலசு,
நன்றி ஜேவி,
நன்றி குருபரன்,

நன்றி விரும்பி,
நன்றி நெருப்பு,
நன்றி சயந்தன்...உங்கள் பதிவினை முன்னரும் பார்த்திருக்கிறேன். அருமை. குடையில் தண்ணீர் குடித்தது என்பதனை நீங்களும் குறிப்பிட்டிருகிறீர்கள். வலியைத் தரும் நினைவு.

பாலா சொன்னது…

சுமக்கும் போது இருந்த கனத்தை விட,
சுமந்தவைகள் வீணாகி விடுமோ என்ற நினைவு தான் வலிக்கிறது.

Unknown சொன்னது…

1995 வலிகாம இடப்பெயர்வு, 2000 தென்மராட்சி இடப்பெயர்வு இரண்டும் ஞாபகத்தில் இருக்கிறது. இரு முறையும் எங்கள் அம்மாவின் சகோதரிகளின் வீடுகளில் இடம்பெயர்ந்த உறவுகள் தங்கியிருந்தார்கள். தென்மராட்சி இடப்பெயர்வால் எங்களூர் வந்த மக்கள் வாழ வழியற்று ஏதிலிகளாகி இன்றைக்கும் எங்களூரில் கூலி வேலை செய்து பிழைக்கிறார்கள். சில பின்னூட்டங்கள், வேறு சில பதிவுகள் (உங்களுடையவை அல்ல) சொல்வதுபோல் ‘இந்த இடப்பெயர்வின் வலி பெரியது, அந்த இடப்பெயர்வின் வலி சிறியது' என்றெல்லாம் ஒப்பிட்டு நோக்க என்னால் முடியவில்லை. எல்லா இடப்பெயர்வுமே நரக வேதனைகளே. அந்த இடப்பெயர்வுக்காலங்களை, வலிகளை மீட்டிச் சென்றிருக்கிறீர்கள். அப்போது என்னுடன் வாழ்ந்த, சேர்ந்து விளையாடிய, சண்டைபிடித்த முகங்கள் எல்லாம் ஞாபகத்தில் வந்து மனசு கனக்கிறது கதியால்.(நன்றி, நல்ல பதிவு, வாழ்த்துக்கள் போன்ற கொச்சையான வார்த்தைகளை இங்கே இடமுடியவில்லை நண்பா)

கிடுகுவேலி சொன்னது…

நன்றி பாலமுருகன்
நன்றி கீத்

பைரவி சொன்னது…

naangal anubhavikkatha thuyarangal ungalathu eluthukkalal unarkirom
vasikkum poluthu emathu ithayangal valikirathu...

பெயரில்லா சொன்னது…

http://www.psminaiyam.com/

சிவாஜி சொன்னது…

”மெள்ள மெள்ளத் தமிழ் இனித்தேயாகும்”

அதாவது தமிழ் மொழியை அனுபவித்து சுவைக்க சுவைக்க தமிழ்மொழி இனித்துக் கொண்டேயிருக்கும். அது சுந்தரத் தமிழ். காலத்தாலும் ஒருபோதும் அழியாத சாகாமொழி. இது நம்முடைய மேன்மையான கருத்து.மெதுவாகவோ வேகமாகவோ சாகடிக்கப்படமுடியாதது அருந்தமிழ் மொழி.

பெயரில்லா சொன்னது…

கண் முன்னே இன்னும் நிக்கிறது 95ம் ஆண்டு இடப்பெயர்வு... 5 லட்சம் சனம் ஒரே இரவில் இடம் பெயர்ந்ததை மறக்கவா முடியும்.. என்ன கஷ்டப்பட்டாலும் ஓரளவு நிம்மதியாகவே வாழ்ந்தோம் அங்கே.. 90ம் ஆண்டு இடப்பெயர்வை மறந்திட்டியளோ.. விடிய ஆமி மூவ் பண்ண சின்ன கால்களால் 5கிலோ மீற்றர் நாங்கள் நடந்தது பிறகு பஸ் பிடிச்சு கொடிகாமம் போனது இன்னும் ஞாபகம் இருக்கு. 2000ம் ஆண்டு இடப்பெயர்வு என்டு எதை சொல்லுறியள். 96 ஏப்ரல் முற்றாக யாழை விட்டு சனம் வெளிக்கிட்டது ஞாபகம். பிறகு 96 ஓகஸ்ட் கிளிநொச்சி வட்டக்கச்சி வரை ஆமி வந்த ஞாபகம். பிறகு 97 ஒட்டி சுட்டானால் இடப்பெயர்வு.. அத்துடன் நெடுங்கேணியால் இடம் பெயர்வு. பிறகு 2000ம் ஆண்டு இயக்கம் பளை பிடிக்கேக்க நடந்த இடப்பெயர்வையோ சொல்லுறியள். அதுக்குப் பிறகு 2007 வரை ஒரு இடப்பெயர்வும் இருக்கேல்ல. பிறகு தொடங்கியது வன்னி இடப்பெயர்வு.. 2 வருசம் சனம் ஓடுப்பட்டது. கடவுளே. 90 இற்கு முன் ஒப்பரேசன் லிபரேசன் மூட்டம் நாங்கள் இலங்கையில் இருந்தாலும் இடப்பெயர்வு பற்றி ஞாபகம் இல்லை. ஓடி ஓடி களைச்சிட்டம். என்ன!!??!!

பெயரில்லா சொன்னது…

2006 August இயக்கம் யாழ் பிடிக்க வெளிக்கிட்ட நேரம் இடப்பெயர்வு நடந்ததா? சனம் கஷ்டப்பட்டது தெரியும் ஊரடங்கால்.

தீபிகா(Theepika) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தீபிகா(Theepika) சொன்னது…

முன்பொரு காலம் ஊர் இருந்தோமே...
முழு நிலா நாளில் அகமகிழ்ந்தோமே....
விளக்கேற்றும் நேரம் வீடிழந்தோமே...
விழிகளில் நீர்வழிய நாம் நடந்தோமே..

ஆலமரத்தருகிருந்து அடுப்பெரித்தோமே..
நாங்கள் அகதி என்ற பெயருடனே
பாய் விரித்தோமே...

மாளிகையை கட்டி விட்டு
விட்டு வந்தோமே..வந்து
மண்குடிசை கூட இன்றி
அந்தரித்தோமே....

நான் வளர்த்த மாமரமும்
பூத்திருக்குமா? இல்லை
நான் வரட்டும் என்று சொல்லி
காத்திருக்குமா?

இது வேலணையூர் சுரேஸ் அவர்களின்
பாடல் வரிகள்.

என்றைக்கும் விழி நிறைக்கும் ஞாபகங்களை தாங்கிய அந்தப் பாடலை மிளவும் ஞாபகப்படுத்தியிருக்கிறது உங்கள் பதிவு.

http://theepikatamil.blogspot.com/

தீபிகா.
08.12.11

கருத்துரையிடுக