திங்கள், 19 அக்டோபர், 2009

வாழ்க ”தமில்” - தீபா”வலி”

மூன்று நாட்களிற்கு முன்னர் முகப்புத்தகத்தில் ஒரு நண்பர் இரண்டு நிழற்படங்களை தன்னுடைய முதல் பக்கத்திலே போட்டிருந்தார். பார்த்ததும் ஒரு புறம் சிரிப்பு மறுபுறம் வேதனை. ஏன் என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள் புரியும்.
இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்பான “வெண் தாமரை இயக்கம்” என்ற அமைப்பே இந்தப் பிரசுரத்தினை வெளியிட்டிருக்க வேண்டும். அமைப்பினைப் பொறுத்தவரை அது ஒரு தேசிய அமைப்பு. இலங்கையிலே இருக்கின்ற அனைத்து தேசிய மக்களையும் இணைத்துத்தான் (பெயரளவில்)அது உருவாக்கப்பட்டது. அவர்களுடைய அசட்டைத்தனம் இந்தப் பிரசுரத்திலே அப்பட்டமாக தெரிகிறது. இதன் உள்நோக்கம் (உள்குத்து) என்ன..? என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் தமிழ் மொழியில் பிழையாக, பிரசுரம் ஒன்றை வெளியிட்டால் அதிலே பிழை இருந்தால் எவரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம்தான் மேலோங்கி நின்றிருக்க வேண்டும். ஒரு தேசிய அமைப்பிலே தமிழ் தெரிந்த ஒருவர் இல்லாது இருக்க வேண்டும். அப்படி என்றால் அது ஒரு தேசிய அமைப்பு அல்ல. தமிழர் ஒருவர் இருந்திருந்தால் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான பிரசுரங்கள் வெளியிடும் நேரத்தில் தன்னும் அவர்கள் அந்த தமிழ் அன்பரை நாடியிருப்பார்கள். ஆகவே எதுவாயினும் வேண்டும் என்றே செய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இப்படியான தமிழ் கொலை வெறும் அனாசயமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஏன் தமிழர் கொலையே அவ்வாறு நடக்கும் போது தமிழ் கொலை என்பது பற்றி கதைப்பது அர்த்தமில்லைத்தானே.
ஆனால் இப்படியான சம்பவங்கள் நிறைய இன்னமும் நடந்து கொண்டே இருக்கின்றன. இதனை கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் பார்த்தும் மௌனிகளாக இருக்கிறார்கள் என்று எண்ணும் போது வருத்தமே அதிகமாகிறது. இந்து சமுத்திரத்தின் முத்து என்ற அந்த அழகிய தீவின் அழிவுகளுக்கு காரணங்களில் முக்கியமானது மொழி மீதான வல்லாதிக்கமே.
சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா? திருந்தாவிட்டால்....இந்த பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

******************

தீபாவளி பற்றி அனைவரும் பதிந்தாகிவிட்டது. அடுத்தவர்களுக்கு தீபாவளி ஈழத்தமிழனுக்கோ அது தீபா’வலி’ என்று சொல்லி வலிக்களை தந்த வடுக்களை மீண்டும் ஒருதடவை வருடியாகி விட்டது. ஆனால் தீபாவளி தந்த வடுக்களில் முக்கியமானது. 1987 ம் ஆண்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மீது இந்திய அமைதி காக்கும் படையினரால் (?) நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான ஒரு படுகொலை. அங்கே வைத்தியர்கள், தாதியர்கள், அப்பாவி பொது மக்கள் என பலதரப்பட்டவர்களும் குண்டடி பட்டு கீழே வீழ்கிறார்கள். உயிரையும் விட்டுவிடுகிறார்கள். காலநதி உருண்டோடி கரைசேர்ந்தாலும் ஆறாமல் மனதில் இருக்கக்கூடிய வடுக்கள் இவை. ஆனால் இந்த இந்த வடுக்கள் என்றும் மாறதவை....அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் நினைக்காமல் இருக்கவும் முடியாது. இது தொடர்பாக வலைப்பூவில் உலாவிய போது இந்த இணைப்பு கிடைத்தது. உங்களுடனும் பகிர்ந்து கொகிறேன். அவலங்கள்

5 கருத்துகள்:

விரும்பி சொன்னது…

வணக்கம் கதியால்

முக்கியமான விடத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்

ஒரு இனத்தை அழிப்பதற்கு முதலில் அந்த இனத்தின் அடிப்படைகளை அழிக்க வேண்டும் என்ற கொள்கையை சிங்களம் நீண்ட காலமாகவே கடைப்பிடிக்கின்றது. மொழி,கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்,பாரம்பரிய பிரதேசம் போன்றன. மொழிப்பிழையை திருத்த எத்தனையோ பேர் இருக்க அதைக்கவனிக்காமல் விட்டது என்பது திட்டமிட்ட செயல். பாடப்புத்தகங்களிலே ஏராளமான தமிழ் பிழைகள் உள்ளது. மீண்டும் வேதாளம் முருங்கைமரத்தில் ஏறியதைப்போல தமிழினத்தின் அடிப்படைகளை அழிப்பதற்கான திட்டத்தை தற்போது முழு வீச்சுடன் தொடங்கிவிட்டது. தமிழர்களிற்கு அரசியல் பலம் இல்லை என்று நினைப்பதால் எனவே இனம்பாதுகாக்க, மொழியை அழியாமல் பாதுகாக்க தேவையானது ஒன்றே சுதந்திரம் என்பது நினைவூட்டப்படுகின்றதை வெளிப்படுத்தும் செயற்பாடுகளிவை.

தொடரட்டும் சுட்டிக்காட்டல்கள், அதுவே இனத்தின் விடுதலையின் தேவையை இயம்பி நிற்கும்

வாழ்த்துக்களுடன் நன்றி

அருண்மொழிவர்மன் சொன்னது…

இதைக்காணும் போது ஏற்பட்டிருக்கக்கூடிய வலியை உணர முடிகின்றது. அவர்கள் செய்வது நாம் எதிர்பார்த்ததும் பார்ப்பதும்தானே. அதே நேரம், எம்மவர்கள் தமிழைப் படுகொலை செய்யும் சந்தர்ப்பங்களும் நிறைய இருக்கின்றன.

உதாரணமாக இங்கே நீங்கள் சொன்ன அதே “தீபாவலி” என்ற சொல், 2000 -2003 வரையான காலப் பகுதியில் ”ரமி இசை நிறுவனம்” வெளியிட்ட இசைத்தட்டு ஒன்றில் இடம்பெற்றிருந்தது. தமிழ் தான் எனக்கு மூச்சு, என்கிற உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களை எல்லாம் நான் முழுக்க ஏற்றுக் கொள்வதில்லை, அதே நேரம் நாம் பேசும் மொழியை நாமே சரியாக பயன்படுத்தவும், பிரயோகிக்கவும் தவறும்போது, பிற மொழியினரிடம் அதை எப்படி எதிர் பார்ப்பது?

புழுதிப்புயல் சொன்னது…

இது எல்லாம் வேணும் எண்டு செய்யிறது. எங்களை வெறுப்பேத்த எண்டு செய்யிறது. இங்கிலாந்தில www .tfl .gov .uk எண்டு ஒரு இணையதளம் இருக்கு. அங்க போய் பாருங்கோ. தமிழ எவ்வளவு அருமையா எழுதியிருப்பங்கள். என்னத்த சொல்ல.

கானா பிரபா சொன்னது…

:( என்ன சொல்வது
தமிழையும் அழிக்கிறார்கள்

மக்கள் தளபதி/Navanithan/ナパニ சொன்னது…

தமிழை உலகறிய செய்ததில், கனிணியில் ஏற்றியதில் இலங்கை தமிழர்களின் பங்குதான் அதிகம் என்பதைவிட முழுக்காரணம் என்ற சொல்ல விரும்புகின்றேன்.. இன்றோ இப்படி...வேதனையான விடயம்..

கருத்துரையிடுக