புதன், 19 ஆகஸ்ட், 2009

தேரேறி வருகிறான் நல்லைக் கந்தன்...!

"வெள்ளை மணல் மீதுருண்டு
வேலவனே என்றழுதேன்
எங்கயடா போய் ஒழிந்தாய் முருகா...!"

நல்லூர்....நாவினில் உச்சரிக்கும் போதெல்லாம் உடலில் ஓர் பரவசம். தன்னையறியாமலே உள்ளம் பூரிக்கும். ஏனோ தெரியவில்லை அந்தக்கந்தனை எண்ணும் போதெல்லாம் என்னுள் ஒரு கிறக்கம். இதை அனுபவித்தவர்கள் ஏராளம்.
இன்று நல்லைக்கந்தன் தேரேறி வருகிறான். பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் இந்த தருணம் அலங்காரக்கந்தனாம் ஆறுமுக சுவாமிக்கு வசந்த மண்டப பூசை நிறைவுற்றிருக்கும்.

வசந்த மண்டப பூசை.......வார்த்தைகள் இல்லை விபரிக்க. அற்புதமாக இருக்கும். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கே ஆலயத்துக்கு வந்து அந்த வசந்த மண்டபத்தில் கூடி கந்தவேள் பெருமானின் பூசை பார்க்க காத்திருப்பர். அது சன சமுத்திரம். அழித்தல் தொழில் குறிக்கும் சிவப்பு நிறத்துடன் இருக்கும் சாத்துப்படி. ஆலயக் குருக்கள் மற்றும் ஏனைய அந்தணப்பெருமக்களும் சிவப்பு நிற வேட்டியுடன் நின்றிருப்பர்.

வெள்ளிப்பீடத்தில் வேலவன் எழுந்தருளி அடியவர்களின் தோளில் அசைந்து வருகின்ற காட்சி....காணக் கண் கோடி வேண்டும். அழகனைக் காண கோடி அல்ல பல கோடிக் கண்கள் வேண்டும். தங்கம் தகதகவென மின்னும். சுவாமியின் அருகே நின்றவர்களுக்கு தெரியும் 'சிலிங் சிலிங்' என்ற மெல்லிய ஒலியுடன் பன்னிருகரத்தான் வந்து கொண்டிருப்பான்.

எந்தக் கணமும் பிசகாத சரியாக 7.00 மணிக்கு கோபுர வாசலினூடாக வெளியே வரும் அந்தக்காட்சி அனைவரையும் நெக்குருக வைத்து விடும். தாமரை மலர்கள் சொரிய , அரோகரா ஓசை வானைப் பிளக்கும். மங்கள் வாத்தியங்கள் முழங்கும்.

சனசமுத்திரம் மத்தியில் முருகப்பெருமான் அசைந்து அசைந்து வருவார். "உன்னையல்லாது துணை எவருமுண்டோ வையகம் புகழ் நல்லை வாழ் வடிவேலனே....நீதான் உய்ய வழி காட்ட வேண்டும்" என்ற அடியவர்களின் மனக்குமுறல் மௌனமாகவே இருக்கும். அங்கப் பிரதட்டனை செய்பவர்களும் அடி அழிப்பவர்களும் கற்பூரச்சட்டி எடுப்பவர்களும் காவடிகளும் என அடியவர்களின் நேர்த்திக்கடன் வேலவனின் வீதியில் தீர்க்கப்படும்.

இவ்வளவு அழிவிற்கு பின்னமும் இந்த திருவிழா ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்ற சிலரின் கேள்வி மனதை நெருடாமல் இல்லைத்தான்.

ஆனாலும் கந்தனே நீ " வந்திருந்து பூச்சொரிந்து வாசலிலே கையசைத்தால் வல்ல வினைகள் எல்லாம் அகன்று விடும்". எம்மக்கள் அவலமற்ற அமைதி வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் எமது பிரார்த்தனை இருக்கும். அதுதான் அங்கிருக்கும் அடியவர்களின் இதயத்தில் அடியில் இருக்கும் ஒரு எண்ணமாக இருக்கும்.

ஒருமுறை வானொலி அஞ்சல் நிகழ்வில் இளையதம்பி தயானந்தா அற்புதமாக சொல்லுவார். தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. கற்பூரங்கள் எரிக்கப்படுகின்றன. உடைக்கப்பட்டதும் எரிக்கப்பட்டதுமான எண்ண அலைகளோடு அடியவர்கள் அங்கே காணப்படுகிறார்கள் என....!

உண்மைதான் கண்ணீரோடும் அவலங்களோடும் அலையும் ஈழத்தமிழன் இப்போது தண்ணீருக்குள் முகாம்களில் மிதக்கிறான். அவலம் அழிவில்லாமல் தொடர்கிறது. ஒன்றும் வேண்டாம் கந்தவேளே....! அது வேண்டாம் இது வேண்டாம் எமக்கு எதுவும் வேண்டாம்...! எம் கண் முன்னால் நிகழும் இந்த அவலம் அகலட்டும். "கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம்...' இன்று கூற்றுவர்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் எம்மினத்தவரை காப்பாற்றாதா? என்றே எண்ணுகிறோம்.

முருகா காப்பாற்று...! முழுவினைகளும் அகலட்டும்....!! அவலமற்று அமைதி வாழ்வு மலரட்டும்!!!

தேர்த்திருவிழா பற்றிய ஒரு அருமையான பாடல்......
பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்
இசை : இசைவாணர் கண்ணன்
பாடல் : புதுவை இரத்தினதுரை

7 கருத்துகள்:

lavanyan சொன்னது…

கண்களில் கண்ணீர் வர வைக்கின்றன... விட்டுவிட்டு வந்தவைகளை நினைக்க... வாசிக்கும்போது கற்பனை மனதுக்குள் ஓடுகின்றது

”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்”

கானா பிரபா சொன்னது…

வணக்கம் நண்பா

அருமையாக நம் பக்திச் சூழலைப் பதிவு செய்து நல்லைக்கந்தனின் நினைப்பில் ஆழ்த்தி விட்டீர்கள் மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல பக்தி பதிவு..

காண்டீபன் சொன்னது…

அருமையான பதிவு.

இளையதம்பி தயானந்தா சொன்னது…

நன்றி, நான் மறந்தாலும் மறக்காத கிடுகுவேலியின் நேய நெஞ்சத்திற்கு

அன்புடன்,
இளையதம்பி தயானந்தா

கிடுகுவேலி சொன்னது…

//.....kidukuveli said...
ஒருமுறை வானொலி அஞ்சல் நிகழ்வில் இளையதம்பி தயானந்தா அற்புதமாக சொல்லுவார். தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. கற்பூரங்கள் எரிக்கப்படுகின்றன. உடைக்கப்பட்டதும் எரிக்கப்பட்டதுமான எண்ண அலைகளோடு அடியவர்கள் அங்கே காணப்படுகிறார்கள் என....//

//..இளையதம்பி தயானந்தா said...

நன்றி, நான் மறந்தாலும் மறக்காத கிடுகுவேலியின் நேய நெஞ்சத்திற்கு

அன்புடன்,
இளையதம்பி தயானந்தா

..///
எதை மறந்தோம் அண்ணா உங்களை மறக்க....அல்லது உங்கள் வானொலி நிகழ்ச்சிகளை மறக்க...இன்றும் காதுக்குள் உங்கள் குரல்களும்....நிகழ்ச்சிகளும்...ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. கிடுகுவேலி நோக்கிய உங்களின் வருகைக்கு நன்றிகள்...!!!

கிடுகுவேலி சொன்னது…

நன்றிகள் லாவண்யன், கானாபிரபா, ஆ.ஞானசேகரன், காண்டீபன் உங்கள் வருகைக்கும் கடுத்துக்கும்.

கருத்துரையிடுக