ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பங்களாதேஷின் பாய்ச்சல்...!

ம்ம்ம்...டெஸ்ட் போட்டித்தொடர் கோப்பை எம் வசம்.....!

இந்தியா வென்றால் இணையம் எல்லாம் அலறும். தோற்றால் கதறும். அதோடு நக்கல் பதிவுகளும் பளிச்சிடும். ஆஸ்திரேலியா வென்றால், மீண்டும் அசத்தல் என்று அதிரடி பதிவுகள் வரும். இலங்கை வென்றால், அவர்களுக்கு என்னவோ இப்ப வெற்றிகள்தான் அடிக்கடி என்பது போல கட்டுரைகள் வரும். ஆனால் பங்களாதேஷ் வென்றுவிட்டது. எங்கும் எதிலும் பதிவுகளோ ஆர்ப்பாட்டங்களோ இல்லை. காரணம் ஒன்று அது பங்களாதேஷ் தானே என்கிற இளப்பம். இரண்டாவது அது பெற்ற வெற்றி மேற்கிந்தியரின் இரண்டாம் தர அணியுடன் தானே என்ற ஏளனம்.

பங்களாதேஷ் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் மேற்கிந்தியரை வாரிச்சுருட்டி விட்டது. டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்றும் ஒருநாள் போட்டிகளில் 3-0 என்றும் WHITE WASH அடிப்படையில் மேற்கிந்தியரை மண்கவ்வச் செய்தது.

ஒரு காலத்தில் கிரிக்கட்டின் ஜாம்பவான்கள் மேற்கிந்தியர்கள். அதுவும் அவர்கள் மண்ணில் அவர்களை அசைப்பது கடினம். அவர்களின் எகிறுப்பந்துகளுக்கான ஆடுகளங்களில் ஆசிய அணிகள் உட்பட அனைத்து அணிகளும் தடுமாறித்தான் இருந்தது. விக்கட்டுகளை வீச்சாளர்கள் பதம்பார்க்கிறார்களோ இல்லையோ துடுப்பாட்டக்காரர்களை பௌன்சர் பந்துகளால் மிரட்டுவர். இதனால்தானோ என்னவோ விக்கட்டுகள் எடுப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. துடுப்பாட்டமும் அதிரடிதான். அவர்கள் ஆடும் பாணி எல்லோரையும் விட வித்தியாசமானது. எல்லோரும் ஜாம்பவான்கள். அடித்து நொருக்கும் வல்லமை படைத்தவர்கள்.
ம்ம்ம்...ஒருநாள் போட்டித்தொடர் கோப்பையும் எம் வசம்.....!!

ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழ். குறிப்பாக 1990 களின் ஆரம்பத்தில் இருந்து இந்த சரிவினை மேற்கிந்தியர்கள் சந்தித்து வருகின்றனர். பந்துவீச்சில் ஓரளவு அசத்தினர். அதுவும் அம்புறோஸ், வோல்ஷ், பிசப் ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் அதிலும் அவர்களுக்கு சரிவே. ஆங்காங்கே லாரா தனி ஒருவராக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அவர்களின் துடுப்பாட்டம் இன்னமும் மறையவில்லை என காட்டுவார். அவரோடு சந்தர்போல் உம் தம்பங்கினை சரிவர செய்தார். இப்போதும் செய்தும் வருகிறார். இவைகளைத் தவிர மேற்கிந்தியரின் சாதனைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லைத்தான். காரணம் தேடிப்போனால் நிறைய இருக்கிறது. அவர்களுடைய கட்டுப்பாட்டுச்சபையினுடைய அக்கறையின்மை காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன். அதேவேளை அந்த அணி வீரர்கள் அனைவரும் விளையாட்டாய் விளையாட்டாய் விளையாடுவது. இதுதான் அவர்களின் பலமும் பலவீனமும். இன்னும் நிறைய காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது பற்றி பின்னர் ஒருமுறை பார்க்கலாம்.

பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை எதிர்பார்ப்புகளோ அழுத்தங்களோ அற்ற அணி. அவர்கள் தோற்றாலும் அவர்களுக்கான விமரிசனங்கள் குறைவாகவே இருக்கும். அது அவர்களைப் பொறுத்தவரை ஒரு கவலையற்ற விடயம். ஆனால் பெரிய அணிகள் அவ்வாறில்லை. தோற்றால் போதும் ஊடகங்களோ ரசிகர்களோ வறுத்தெடுத்துவிடுவார்கள். மிகுந்த அழுத்தம் அவர்களுக்கு சிறிய அணிகளுடன் விளையாடும் போது இருக்கும். ஆனால் அவர்கள் இலகுவில் வெற்றி பெற்றுவிடுவார்கள் காரணம் அவர்களின் அனுபவம். கத்துக்குட்டிகளாக இருக்கும் சிறிய அணிகள் பெரும் அணியுடன் விளையாடுகிறோம் என்ற பயத்திலேயே விளையாடுவார்கள். வெற்றிக்கான ஒரு வாய்ப்பு இருந்தால் என்ன விலை கொடுத்து என்றாலும் பெறத்தயங்காமல் விளையாடுவார்கள். இதற்கு நல்ல உதாரணமாக அமைந்த போட்டிகள் தான் அண்மையவை.

இந்த போட்டிகளை கவனித்தவர்களுக்கு தெரியும். முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடி மேற்கிந்தியரை அசத்தலான பந்துவீச்சில் துவைத்தெடுத்துவிட்டது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் விரட்டினார்கள் அவர்களின் ஓட்ட எண்ணிக்கையை. இரண்டும் பெரிய இலக்குகள். அவரவர் தங்கள் தங்கள் பங்கிற்கு துடுப்பெடுத்தாடி அணியை கரைசேர்த்தனர் வெற்றியை நோக்கி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அணியை வழிநடத்தி ஒருநாள் போட்டித்தொடரிலும் வெற்றிக்கனியைத் தேடித்தந்த பெருமைக்குரிய அணித்தலைவராக ஸகிப் அல் ஹசன் திகழ்கிறார். மிக இளம் வயதிலே இப்படி ஒரு வெற்றியைத் தேடிகொடுத்திருக்கிறார். முன்னாலே இருந்து வழிநடத்தி சகலதுறைகளிலும் பிரகாசித்தார்.
இப்போதைக்கு பங்களாதேஷில் நானே ஹீரோ....!

பங்களாதேஷ் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது 2000ம் ஆண்டில். இன்று வரை அது 61 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கின்றது. இதில் கடைசியாகப் பெற்ற வெற்றிகளுடன் அது மொத்தம் 3 போட்டிகளில் வென்றுள்ளது. அதில் இறுதியாக பெற்ற வெற்றி ஒரு தொடர் வெற்றி. அதுவும் வெளிநாட்டு மண்ணில். பொதுவாக ஆசியர்கள் வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்வது மிகவும் சவாலான விடயம். இப்போது பங்களாதேஷ் அணி அதனை சாதித்துவிட்டது. அவர்களுக்கு இப்போ உளவுரன் அதிகாமாகி இருக்கும். இது அடுத்துவரும் போட்டித்தொடர்களில் நிறைய எதிர்பார்ப்புகளைக் கூட்டும். அடுத்து வரும் தொடர்களை அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது சவாலான விடயமே.

மேற்கிந்திய அணியைப் பொறுத்தவரை அந்த அணி இரண்டாம் தர அணி என்ற ஒரு நிலை இருக்கிறது. ஆனால் அதில் அனேகம் பேர் முன்பு தேசிய அணிக்காக விளையாடி இருக்கிறார்கள். அனுபவம் குறைவுதான். அதுவும் வங்க தேச அணிக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதை அவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். எது எவ்வாறாகினும் பங்களாதேஷ் வென்றுவிட்டது. அவ்வளவுதாங்க. இனி எவ்வாறு இந்த வெற்றி முகத்தை தக்கவைக்கிறார்களோ என்று பார்ப்போம்.

9 கருத்துகள்:

புழுதிப்புயல் சொன்னது…

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பணம் என்ற ஒன்றை மட்டுமே பார்க்கிறார்கள்.. வங்க தேசமோ அதையும் தாண்டி வெற்றியை மட்டுமே பார்த்தது.. எதிர் பாரத திருப்பங்களை கொடுப்பதில் இந்த இரண்டு அணிகளுமே முதல் இடம் தாங்க .. மேற்கிந்திய தீவுகள் ஒரு ஆட்டத்தில் அசத்துவார்கள்.. மற்றைய ஆட்டத்தில் சொதப்புவார்கள்.. வங்க தேசத்தினரோ இதற்கு எதிர் மாறு.. எல்லா ஆட்டத்திலும் சொதப்புவார்கள்.. ஒன்றில் அசத்திவிடுவார்கள்.

சி தயாளன் சொன்னது…

மேற்கிந்திய அணி சிக்கலில் இருக்க, வங்க தேசம் பாய்ந்து விட்டது.

பெயரில்லா சொன்னது…

Bangala played against WI's school team...not even "A" team...Bangala should have returned without playing

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துகள்

கிடுகுவேலி சொன்னது…

//..sutharshan said...
எதிர் பாரத திருப்பங்களை கொடுப்பதில் இந்த இரண்டு அணிகளுமே முதல் இடம் தாங்க .. ///

உண்மைதான் நண்பரே...
பங்களாதேஷ் கொடுத்த அதிர்ச்சி தான் இந்த வெற்றி...! நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//... ’டொன்’ லீ said...
மேற்கிந்திய அணி சிக்கலில் இருக்க, வங்க தேசம் பாய்ந்து விட்டது....//

மேற்கிந்தியா சிக்கலில்தான். ஆனாலும் பெற்ற வெற்றி சும்மாவல்ல....! நன்றி 'டொன்'லீ வரிகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//... Anonymous said...

Bangala played against WI's school team...not even "A" team...Bangala should have returned without playing...//

இது அபத்தம் என நான் கருதுகிறேன். அதில் அநேகம் பேர் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் முன்னர் விளையாடி உள்ளனர். பாடசாலை அணி என்றோ 'A' அணி அல்ல என்றோ சொல்ல முடியாது என்பது என்கருத்து. வணக்கம் அனானி வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் ஞானசேகரன் வருகைக்கும் கருத்துக்கும்....!

mathu சொன்னது…

கிடுகு வேலி என்ற தலைப்பைப் பார்த்து தாயக நினைவுகளை மீட்டும் என எண்ணி உங்கள் வலைபூவை மேய்ந்தேன் ஆனால் பெரும்பாலும் கிரிக்கெட் பற்றியே பதிவுகள் அமைந்துள்ளன.

கருத்துரையிடுக