திங்கள், 31 ஆகஸ்ட், 2009

பகிடிவதை - ராகிங்

வந்தியர் 'ராகிங்' தொடர்பாக உளறியது (தப்பாக எண்ண வேண்டாம், அவரது வலைப்பூவின் பெயர் 'என் உளறல்கள்')கண்டு அது தொடர்பாக எனது எண்ண அலைகளையும் பதிவிடலாம் என்று நினைத்து வரைந்தது இது.

அது 1997 ம் ஆண்டின் ஒரு நாள். பத்திரிகைகள் எல்லாம் பல்கலைக்கழகங்கள் மீது வசைமாரி பொழிந்த நாள். பகிடிவதையின் உச்சக்கட்டமாக பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வரப்பிரகாஷ் என்ற ஒரு மாணவன் 1000 தோப்புக்கரணம் போட பணிக்கப்பட்டு முடியாது போக இடையில் மயக்கமுற்று விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட, அங்கே சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக வைத்தியர்கள் அறிவித்து சில நாட்களில் அவன் இவ்வுலகை விட்டு நீங்குகிறான்.

என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிலை. ஒரு சில மாணவர்களிடையே எழும் ஒரு வக்கிரபுத்திதான் இதற்கு காரணமா? இல்லை இதை ஒரு உளரீதியான பாதிப்பு என்று அணுகுவதா? என்று பார்த்தால் இரண்டும் கலந்த கலவை என்றே சில சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஏன் இவ்வாறு நடக்கிறார்கள். இதனால் சாதிக்கப்போவது என்ன? 'ராகிங்' என்ற நிகழ்வுக்கு நான் முற்றிலும் எதிரானவன் அல்ல. உடல் ரீதியாக இழைக்கும் தீங்கு, சில வார்த்தைப் பிரயோகங்கள் என்பன தவிர்க்கப்பட்டு, பகிடிவதையாக இல்லாமல் பகிடியாக இருக்கவேண்டும் என பிரயாசைப்படுபவன். அதில் இருக்கும் சுகம் தனிசுகம் அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

எனக்குத்தெரிந்த எமது கல்லூரி மாணவன் நல்ல புள்ளிகள் எடுத்தும் சந்தர்ப்பவசத்தால் யாழ்ப்பாண் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு தெரிவு செய்யப்படுகிறான். அவன் புகுமுக மாணவனாக அங்கே சென்றதும் நடந்த சம்பவங்கள் அவனை வெறுப்புக்கு உள்ளாக்குகின்றன. அவன் உள்ளம் உடைந்தவனாக சொன்னான் "காத்திருப்பு பட்டியலில் உள்ளே சென்றவன் எல்லாம் எனக்கு ராகிங் தாறானடா..இதைவிட என்ன கொடுமை வேண்டிக்கிடக்கு". இவனின் உளப்பாங்கு இப்படி இவனை சிந்திக்க தூண்டுகிறது. காத்திருப்புப் பட்டியலில் பல்கலைக் கழகம் சென்றால் அங்கே நடக்கும் செயற்பாடுகளில் பங்கெடுக்க கூடாதா? அது சரி பிழை என்பது அடுத்த நிலை. இந்த மனப்பாங்கு மாறவேண்டும் என்பது எனது அவா.

பொதுவாக சொல்வார்கள் "நல்லா ராகிங் வாங்கினவனும், ராகிங் வாங்காதவனும் ராகிங் கொடுக்க மாட்டார்கள் என்று". இது ஒரு குறிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உண்மைதான். ஆனால் நான் ராகிங் வாங்கினான் கட்டாயம் கொடுப்பேன் என்போரும் உள்ளனர். நான் குறிப்பிட்ட அந்த மாணவன் பின்னர் தனக்கான சந்தர்ப்பம் வரும்போது கண்டபடி ராகிங் கொடுத்து பிரச்சினைகளைச் சந்தித்து ஒரு வாரம் பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார். வேதனையான ஒரு விடயம்.

'ராகிங்' - இது மாணவர்களிடையே கூச்ச சுபாவத்தை போக்குவதற்கும், வரும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வினை போக்கி ஒரு சீராக அவர்களிடத்தில் நெருக்கத்தினை பேணுவதற்கும், ஈகோ போன்ற அற்ப உளப்பிரச்சினைகளை அகற்றுவதற்குமாக உருவாக்கப்பட்ட ஒன்று. அந்த காலப்பகுதியில் காலில் பாத்ரூம் ஸ்லிப்பர்ஸ் மட்டும் அணிய வேண்டும். சேர்ட். உள்ளே பனியன் இல்லை. கையில் மணிக்கூடு இருக்காது. எந்த ஆபரண அணிகலன்களும் இருக்க முடியாது. இது ஒரு நல்ல விடயம்.காரணம் ஒரு வறிய மாணவன் இந்த நிலையில் தான் பல்கலைக்கழகம் புகுவான். அவன் அங்கே வந்து வசதிபடைத்தவர்கள் முன்னால் கூனிக்குறுகி நின்று (காதல் கொண்டேன் தனுஷ் நிலையை காட்சிப்படுத்தலாம். அது கொஞ்சம் ஓவராக இருந்தாலும்..நல்ல உதாரணம்) என்னால் எதையும் செய்யமுடியாது என்ற ஒரு மோசமான முடிவெடுக்க அவன் உந்தப்படலாம். இவ்வாறு அந்தஸ்துகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு வருவது அவர்களுக்கு இடையிலான இடைவெளியினை அதிகரிக்குமே தவிர குறைக்காது. எனவேதான் இப்படியான சில உப்புச்சப்பற்ற பிரச்சினைகளைக் களைந்து மாணவர்கள் எல்லோரும் சரிசமமாக மதிக்கப்பழகுவதற்காக இப்படியான 'ராகிங்' என்ற கரு உருவானது. ஆனால் இதனை புரிந்துகொள்ளாமல் அதனை காட்டுமிராண்டித்தனமாகவும் வன்முறையாகவும் சிலர் மாற்றியமைத்து விட்டார்கள்.

சிங்கள மாணவர்களில் பெம்பாலானோர் 'ராகிங்' இல் ஈடுபடுவதில்லை என்ற ஒரு கருத்து இருக்கின்றது. அது பெரும்பாலும் உண்மையே. ஒன்று அவர்களில் ஒரு சதவீதம் காதலோடும், பெண்களோடும் பொழுதைப் போக்கும். சிலர் வார இறுதிநாட்களில் வீடு சென்று திரும்புவர். அவர்களிலும் சிலர் இந்தக் கொடுமையை செய்யத் தவறுவதில்லை.

ஒரு மூத்த மாணவன் ‘ராகிங்’ இன் போது எமக்கு உடல்ரீதியாக (அடி.......)தாக்குகிறார் என்றால் எமக்கு எவ்வளவு கோபம் வருகிறது. அதை நாம் இன்னொருவருக்கு செய்ய எப்படி எங்கள் மனம் விழைகிறது. அவன் திருப்பி அடிக்க மாட்டான் என்ற நப்பாசை. இப்படி வன்முறையோடு பழகும் அந்த சிரேஷ்ட மாணவனோடு எவ்வாறு சிரித்து கதைக்க மனம் வரும். அவர்கள் அந்த ’ராகிங்’ காலம் முடிந்த பின்னர் அவர்களிடம் சென்று “இது ராகிங் ற்காக மட்டும்தான்...மனசில வச்சிருக்க கூடாது...இதையெல்லாம் மறந்து இனி நண்பர்களாக இருப்போம்...என்று பாசக்கரம் கூட நீட்டுவதில்லை..! சில மாணவர்கள் அப்படி செய்வார்கள். சிலர் அப்படி நான் எதுவுமே செய்யவில்லை என்பது போல திரிவார்கள். பல்கலை வாழ்வு முடிந்த பின்னர்....நாம் ‘ராகிங்’ கொடுத்த ஒரு மாணவன் நமக்கு மேல்திகாரியாக இருந்தால், அவருக்கு கீழே வேலை செய்ய மனம் இடம் கொடுக்குமா....!

என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சிரேஷ்ட மாணவர்கள் ஒரு 10 பேர் அளவில் அறைக்குள் பூட்டி போட்டு அடித்தனர். எவ்வாறு அவர்களுடன் நட்பு பாராட்ட மனம் வரும்...! இதே போல இன்னுமொரு நண்பனுக்கு அவன் இருந்த வீடு புகுந்து தாக்கினார்கள். அடுத்தநாள் அவனின் சிவந்த மேனியில் கன்னத்தில் கறை. முஷ்டியால் இடித்த கறை அது. அந்த நண்பன், ”அண்ணா எனது 22 வருட வாழ்வில் எனது அப்பா அம்மா கூட ஒருதடவை அடித்ததில்லை” என்றான் அழுது கொண்டு. நட்போ அல்லது எந்தவிதமான உறவோ மலரும் என எவ்வாறு எதிர்பார்க்கலாம்...?

என்னுடைய சக பிரிவு தோழன், அவன் ‘ராகிங்’ கொடுத்த பின்னர், கனிஷ்ட மாணவர்கள் அதை எண்ணி பிற்காலங்களில் சிரித்து மகிழ்வார்கள். அவனுடன் அவர்கள் நட்பு பாராட்டிய விதம் அல்லது அந்த உறவு எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ‘ராகிங்’ தான்.

வரப்பிரகாஷ் என்ற மாணவன் எம்மைப் பிரிந்த நேரம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் தான் இதனை செய்தது என்று சாரப்பட அன்றைய ‘உதயன்’ பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. உடனே எங்களுக்கு எல்லாம் ரோசம் வர, எமது நண்பன் ஒருவன் ’கண்டிக்கின்றோம்’ என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் எழுதி...அதில் 1000 பிரதிகள் அளவில் அச்சடித்து எல்லா இடங்களிலும் விநியோகித்தோம். காரணம், அந்த மாணவன் செய்த தவறுக்கு கல்லூரி எவ்வாறு காரணமாக முடியும்..? அது அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு..அவரின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினை...!

அன்றைய தினம் எமக்கு கற்பித்து கொண்டிருந்த பௌதிகவியல் ஆசான் திரு. ரவீந்திரநாதன் தங்களுடைய காலத்தில் இருந்த ‘ராகிங்’ தொடர்பாகவும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இரண்டு பாடவேளையும் இதுதான் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருந்தது. அப்படியான ‘ராகிங்’ இருந்திருந்தால் வரப்பிரகாஷை இழந்திருக்க மாட்டோமல்லவா?

ஒரு சில மாணவர்கள் தங்களது மேலாதிக்கத்தை காட்ட நினைப்பதும், தம்முடைய பலத்தை காட்ட நினைப்பதும், தாங்கள் ஒரு நாயகனாக வலம் வரவேண்டும் என நினைப்பதும்..இதற்கு காரணமாக அமையலாம். இது என்னைப் பொறுத்தவரை எல்லாம் அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சினையே தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் ‘ராகிங்’ என்ற ஒன்றை நான் எப்போதும் எதிர்ப்பவன் இல்லை. மீண்டும் சொல்கிறேன் அது பகிடி ‘வதை’ யாக இல்லாமல் பகிடியாக நடந்தால் நல்லது.

15 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

விசாகன்...கிட்டத்தட்ட பகிடியாக ஆரம்பிச்ச இந்த ராகிங் தான் வதையாகி வன்முறையாக மாறுகின்றது.

//

'ராகிங்' - இது மாணவர்களிடையே கூச்ச சுபாவத்தை போக்குவதற்கும், வரும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வினை போக்கி ஒரு சீராக அவர்களிடத்தில் நெருக்கத்தினை பேணுவதற்கும், ஈகோ போன்ற அற்ப உளப்பிரச்சினைகளை அகற்றுவதற்குமாக உருவாக்கப்பட்ட ஒன்று
//

இப்படி சொல்லிச் சொல்லித்தான் இன்னும் ராகிங்கை பலரும் வளர்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த கூத்து இல்லாமல் சகஜநிலமை ஏற்படாதா..? வெளிநாடுகளில் ராகிங் வைத்தா சமநிலை ஏற்படுத்துகிறார்கள்...? இல்லையே....

team bonding activities, விளையாட்டுக்கள் போன்றவையே போதும் மாணாக்கரிடையே நட்புறவை வளர்க்க. :-))

சிறுபாராயத்தில் நாம் பாடசாலைக்கு செல்லும் போது நமக்கு யாரவது ராகிங் தந்தா உள்ள விட்டவையள்..? இல்லையே...?

ராகிங்...நமக்கு நாமே நமது வக்ரங்களை வெளிக்காட்ட ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடுதான் ....இது களையப்படவேண்டிய விசச்செடி....

நிலாமதி சொன்னது…

இள வயதுபாடசாலைநினைவுகள் நிழலாடின உங்க பதிவு ...மிக நன்று.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//'ராகிங்' என்ற நிகழ்வுக்கு நான் முற்றிலும் எதிரானவன் அல்ல. உடல் ரீதியாக இழைக்கும் தீங்கு, சில வார்த்தைப் பிரயோகங்கள் என்பன தவிர்க்கப்பட்டு, பகிடிவதையாக இல்லாமல் பகிடியாக இருக்கவேண்டும் என பிரயாசைப்படுபவன். அதில் இருக்கும் சுகம் தனிசுகம் அனுபவித்தவர்களுக்கு தெரியும்.//

மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்

செ.பொ. கோபிநாத் சொன்னது…

உங்கள் கருத்துடன் பல இடங்களில் நான் உடன்படுகின்றேன். இருந்தாலும் புதிய மாணவர்களை வரவேற்பதற்கும், அவர்களுடனான புரிந்துணர்வையும் வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக 'றேகிங்' அமைகின்றது என்ற உங்கள் கருத்தும், மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான உடைகள் குறித்த விடயமும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. றேகிங் என்ற ஆங்கிலப் பதத்தைதானே நாம் பகிடிவதை எனப் பயன்படுத்துகின்றோம். றேகிங் என்ற ஆங்கிலப் பதத்தின் அர்த்தம் :"'Ragging' means the doing of any act which causes, or is likely to cause any physical, phsycological or physiological harm of apprehension or shame or embarrassment to a student, and includes– (a) teasing or abusing of playing Practical joke on, or causing hurt to any student. or (b) asking any student to do any act, or perform any thing, which he/she would not, in the ordinary course, be willing to do or perform." எனினும், பல வருடங்களாக இந்த பகிடிவதை என்பது பல்கலைக்கழக மட்டங்களில் மாத்திரமல்லாது கல்லூரிகள் சிலவற்றிலும் புதிய மாணவர்களை வரவேற்பதற்கான கலாசாரமாக மாற்றப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. எவரொருவருக்கும் தீங்கு ஏற்படாத வரை எந்தவொரு செயலையும் சரியானதாக நிரூபிக்க இயலும்.

அருண்மொழிவர்மன் சொன்னது…

பகிடி வதை என்று சொல்ல்ப்படும்போது, பகிடி, வதை என்ற இரண்டு சொற்களின் இடையே உள்ள முரண் கவ்னிக்கப்படவேண்டியது. பகிடி ஒரு போதும் வதையாக முடியாது அப்படி ஆனால் அது பகிடி ஆகாது. இது பற்றி மேலும் சொல்ல முன்னர் கோபிநாத் இட்ட பின்னூட்டதில் சொன்ன “எவரொருவருக்கும் தீங்கு ஏற்படாத வரை எந்தவொரு செயலையும் சரியானதாக நிரூபிக்க இயலும்.” என்ற கருத்துடன் தொடர்கிறேன்.
முதலில் ராகிங் என்ற விடயம் என்பது செய்யும், செய்யப்படும் இரண்டு நபர்களின் இயல்புகளுடன் சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு பகிடியாக இருப்பது, இன்னொருவருக்க பாதிக்கும் விடயமாக இருக்கலாம். அப்படி இருக்கும்போது எந்த அளவீட்டை வைத்து இதை அளவிடுவது? மேலும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ராகிங்தான் சுமுகமான வழி என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. உதாரணமாக கனடாவைப் பொறுத்தவரை ராகிங் இல்லை. ஆனால் புதிய மாணாவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் தொடங்கும்போது ஒரு வாரம் (அல்லது 2வாரம்) முன்னதாகவே தொடங்குகிறார்கள். இது புது மாணாவர்களைடையே ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திவிடுகிறது. பின்னர் பழைய மாணவர்கள் இணையும்போது புது மாணவர்களுக்கும், பல்கலைக்கழகம் ஒரு பழக்கமான இடமாகவே இருக்கிறது.

இது போன்ர மாற்று வழிகள் பற்றிய தேவைகள் பேசப்படுவது நல்லதென்றே நினைக்கிறேன். ராகிங் என்பது “நல்ல ராகிங், வக்கிர ராகிங் எதுவாக இருப்பினும்” அதில் செய்பவர் தான் சீனியர் என்ற அதிகாரத்தை ஜூனியர் மீது காட்டுவதாகவே உள்ளது

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் டொன் லீ...
தாமதத்துக்கு வருத்தம்....!

உங்கள் கருத்துக்கள் சரி. ஆனால் மாணவர்களுக்கு இடையில் எந்தவித பேதமும் வரக்கூடாது என்பதற்காகத்தான் பாடசாலைகளில் சீருடை கொண்டுவந்தார்கள். வறிய மாணவன் சப்பாத்து வாங்க கஷ்டம் என்றாலும் பாடசாலை அந்த செலவை தாங்கும் நிலைகளை பார்த்திருக்கிறோம். ஆரம்ப நிலைகளில் மாணவர்களின் அறியாமைகள் காரணமாக அவர்கள் நிலை வேறுபாட்டை பேணுவதை நாம் கண்கூடாக காண்கிறோம் இல்லையா? என்னவோ....இந்த பேதங்கள், தாழ்வுச்சிக்கல்கள் இவை எல்லாம் பல்கலைக்கழகங்களில் மலிந்து கிடக்கின்றன. கண்கூடாக கண்டேன் என்ற வகையில் அனுபவம் விரிகிறது. மேலைநாடுகளில் நிலைமை வேறாக இருக்கலாம். மறுக்கவில்லை.

நன்றி வருகைக்கும், கருத்துக்கும்..!

கிடுகுவேலி சொன்னது…

//.. நிலாமதி said...
இள வயதுபாடசாலைநினைவுகள் நிழலாடின உங்க பதிவு ...மிக நன்று.
..//

//...ஆ.ஞானசேகரன் said...
//'ராகிங்' என்ற நிகழ்வுக்கு நான் முற்றிலும் எதிரானவன் அல்ல. உடல் ரீதியாக இழைக்கும் தீங்கு, சில வார்த்தைப் பிரயோகங்கள் என்பன தவிர்க்கப்பட்டு, பகிடிவதையாக இல்லாமல் பகிடியாக இருக்கவேண்டும் என பிரயாசைப்படுபவன். அதில் இருக்கும் சுகம் தனிசுகம் அனுபவித்தவர்களுக்கு தெரியும்.//

மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்

..//

நிலாமதி மற்றும் ஞானசேகரன் உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி...!

கிடுகுவேலி சொன்னது…

//...செ.பொ. கோபிநாத் said...
உங்கள் கருத்துடன் பல இடங்களில் நான் உடன்படுகின்றேன். இருந்தாலும் புதிய மாணவர்களை வரவேற்பதற்கும், அவர்களுடனான புரிந்துணர்வையும் வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக 'றேகிங்' அமைகின்றது என்ற உங்கள் கருத்தும், மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான உடைகள் குறித்த விடயமும் ஏற்றுக் கொள்ளக் கூடியது...///

நிச்சயமாக...நன்றி...!!

//...கல்லூரிகள் சிலவற்றிலும் புதிய மாணவர்களை வரவேற்பதற்கான கலாசாரமாக மாற்றப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. எவரொருவருக்கும் தீங்கு ஏற்படாத வரை எந்தவொரு செயலையும் சரியானதாக நிரூபிக்க இயலும்.
..///
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி (சென்.ஜோன்ஸ் கல்லூரி) யில் இன்றளவும் மாணவ முதல்வர்களுக்கிடையில் பகிடிவதை என்பது உள்ளதாக தெரிகிறது.

நன்றி கோபிநாத் வருகைக்கும் இடுகைக்கும்...!

கிடுகுவேலி சொன்னது…

அருண்மொழிவர்மன் said...
பகிடி வதை என்று சொல்ல்ப்படும்போது, பகிடி, வதை என்ற இரண்டு சொற்களின் இடையே உள்ள முரண் கவ்னிக்கப்படவேண்டியது. பகிடி ஒரு போதும் வதையாக முடியாது அப்படி ஆனால் அது பகிடி ஆகாது..////

ஆமாம்....பகிடி வதை ஆனால் அது ஆபத்திலும் வன்முறையிலும் தான் போய் முடியும்..


//....இது போன்ர மாற்று வழிகள் பற்றிய தேவைகள் பேசப்படுவது நல்லதென்றே நினைக்கிறேன். ராகிங் என்பது “நல்ல ராகிங், வக்கிர ராகிங் எதுவாக இருப்பினும்” அதில் செய்பவர் தான் சீனியர் என்ற அதிகாரத்தை ஜூனியர் மீது காட்டுவதாகவே உள்ளது...///

நிச்சயமாக அதிகாரம் இல்லாமல் எப்போதும் அன்பாக நடந்துகொண்டால் மிக மிக ரசனையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் இந்த ‘ராகிங்’.

நன்றி அருண்மொழிவர்மன் கருத்துக்கும் வருகைக்கும்....!

வலசு - வேலணை சொன்னது…

வரப்பிரகாஷை இழந்த அதே காலகட்டத்தில் இந்தியாவிலும் ராகிங் காரணமாக ஒரு மாணவன் பலியானது நினைவிருக்கிறது.

புழுதிப்புயல் சொன்னது…

நல்லதொரு பதிவு.. சிறிக்குமரன் சேர் பரின்சிபலா இருக்கேக்க நீங்களும் படிச்சனியல் எண்டத நீங்கள் பிரயோகித்த 'வக்கிர புத்தி' எண்ட பதம் எடுத்து காட்டுது.. அவர் எத்தினை தரம் 'வக்கிர புத்தி' எண்டு திட்டி இருப்பார். சரி அதை எல்லாம் விடுவம்..
பகிடி வதை என்பது உண்மையில இருக்க வேண்டிய விஷயம்.. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு வரையறை, வரம்பு என்பது உண்டு.. எனக்கு இலங்கை பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்றாலும்.. இந்திய மற்றும் மலேசிய பல்கலையில் படித்துள்ளேன்..
இந்திய பல்கலைகளில் இந்த 'பகிடிவதை' என்ற சம்பவம் உண்டு.. முதல் ஆறு மாதங்களுக்கு இந்த கொடுமை இருக்கும்.. ஆனால் உடல் ரீதியாக தண்டிக்கமாடார்கள்.. அந்த பகிடிவதைகளை எங்களால் தாங்கிக்கொள்ள முடியும்.. உண்மையில் நான் அதை ரசித்தேன்... அப்படி ஒரு பகிடிவதை இருந்ததால் தான் நான் பல சிரேஸ்ட மாணவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது.
மலேசிய பல்கலைகளில் இந்த 'பகிடிவதை' என்ற சம்பவம் முற்றாக இல்லை.. ஆனால் அதை நான் விரும்பவில்லை.. ஏன் என்றால் இங்கு ௩௦௦௦ இக்கு மேற்ப்பட்ட மாணவர்கள் படித்தும்... எனக்கு சிலரை மட்டுமே தெரியும் என்பது வெட்ககேடான விடயம்.. அவனவன் தன் தன் வேலையை பார்த்து கொண்டு திரிவான்.. 'பகிடி வதை' என்ற ஒன்று இருந்திருந்தால் இவ்வாறன சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது என்பது எனது அபிப்பிராயம்.
எது எவ்வாறாயினும்.. எல்லாவற்றுக்கும் ஒரு அளவு, எல்லை என்பது உண்டு.... எல்லைகளை தாண்டும் போது தான் பிரச்சினைகளை உண்டு பண்ணும்..

கிஷோர் சொன்னது…

ஓம்...ஓம்..ஒன்றாக படிச்சனாங்கள் என்று சொல்லி, புதுமுக மாணவனாக வந்த நண்பனை, ராக்கிங் மாதிரி “பாவ்லா” காட்டி காப்பற்றச்சென்று,அவன் அதை பிழையாக புரிந்துகொண்டு,எங்கள் உறவில் விரிசல் விழுந்த அனுபங்களும் இருக்குது கண்டியலோ....

கிடுகுவேலி சொன்னது…

//....sutharshan said...
.....எது எவ்வாறாயினும்.. எல்லாவற்றுக்கும் ஒரு அளவு, எல்லை என்பது உண்டு.... எல்லைகளை தாண்டும் போது தான் பிரச்சினைகளை உண்டு பண்ணும்..
...//

வணக்கம் சுதர்ஷன்,
எல்லாவிடயத்திலும் எல்லைகள் தாண்டும் போது நிலைமைகள் தலைகீழாகி விடும். ‘ராகிங்’ ஒரு சமூக விசச்செடி என்று விமரிசனம் செய்பவர்களும் உள்ளனர். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//..கிஷோர் said...
ஓம்...ஓம்..ஒன்றாக படிச்சனாங்கள் என்று சொல்லி, புதுமுக மாணவனாக வந்த நண்பனை, ராக்கிங் மாதிரி “பாவ்லா” காட்டி காப்பற்றச்சென்று,அவன் அதை பிழையாக புரிந்துகொண்டு,எங்கள் உறவில் விரிசல் விழுந்த அனுபங்களும் இருக்குது கண்டியலோ....
...//

வணக்கம் கிஷோர், உறவில் விரிசல் ஏற்பட காரணம் ‘ராகிங்’ அல்ல...! சில தவறான புரிதல்களே...!! எல்லாம் ஆற அமர்ந்து யோசிக்கும் போது சில தவறுகள் வெளிக்கும்...!!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!!

முல்லைப்பிளவான் சொன்னது…

பகிடிவதை என்பது புகுமுக மாணவர்களை வரவேற்பதற்கான நிலமைதான். ஆனால் இன்று பகிடிவதை என்பதை வைத்து ஒவ்வொருவரும் தங்களின் கால்புனர்ச்சியினையும் தங்களின் பழிவாங்கல்களையுமே மிக கூடுதலாக இலங்கையில் அதுவும் குறிப்பாக தமிழ் மாணவர்கள் மேற்கொள்கின்றார்கள். இது தங்களும் அறிந்ததே. பகிடிவதை பகிடியாக யதார்த்தத்தில் நடைபெறுவது மிக குறைவே மாறாக பழிவாங்களாகவும் வக்கிரங்களை வெளிப்படுத்துவதாகபுமே தற்போது நடைபெறுகின்றது.
நான் நீங்கள் சொல்லும் பகிடிவதைக்கு எதிரானவன் அல்லா ஆனால் நடைமுறையில் நடைபெறும் பகிடிவதைக்கு எதிரானவன். நீங்கள் கூறும் பகிடிவதை நடைமுறையில் 50 வீதத்திற்கு குறைவாகவே உள்ளது. என்பதனை தாங்கள் படித்த பல்கலைக்கழகத்தில் தங்களின் துறையிலேயே அறிந்திருப்பீர்கள்.

கருத்துரையிடுக