புதன், 5 ஆகஸ்ட், 2009

ஈழத்துச் சதன் - பல குரல் - மிமிக்ரி

விஜய் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. பெயர் "கலக்கப் போவது யாரு". இது ஒரு வெறும் நகைச்சுவைக்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் உள்ளூர், வெளியூர் கலைஞர்கள் , இலை மறை காயாக சமூகத்திற்குள் ஒளிந்திருந்த சில கலைஞர்களை வெளிக்கொணரும் ஒரு முயற்சி. இதில் விஜய் தொலைக்காட்சி இலாபத்துக்காக செய்கிறதா என அலசும் அபத்தத்தை தவிர்ப்போம். அது தேவையற்ற ஒன்றே. இதை விடுத்து அவர்கள் 10 பெண்களை நடனமாட விட்டு பிழைத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு சமூக அக்கறையோடு இப்படியான நிகழ்ச்சிகளை தயாரிக்கின்றனர். அந்த நிகழ்ச்சிகள் தரமாகவும் இருக்கின்றன. இவைதான் இன்றளவும் இதயத்துள் 'விஜய் ரீவி' இருப்பதற்கான காரணங்கள். இவர்களைப் பின்பற்றி சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளும் இப்படியான நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடாத்தி வருகிறது.

மிமிக்ரி - பலகுரலில் பேசுவது. இந்த கலை எவ்வாறு ஆரம்பத்தில் உருவானது என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் எழுதினால் அறிய ஆர்வம். ஆனால் இந்தக்கலை மீது ஏனோ தெரியவில்லை ஒரு அபரிமிதமான காதல் இருக்கிறது. எங்காவது மிமிக்ரி நிகழ்ச்சி இருந்தால் அதை தவறவிடாமல் பார்ப்பது வழக்கம். இந்த பலகுரல் நிகழ்ச்சிகளை தமிழகத்தை சேர்ந்த கலைஞர்கள் நடாத்தி அதனை நான் பார்க்கும் முன்னர், நான் பார்த்த, ரசித்த , பிரமித்த ஒரு கலைஞன் "ஈழத்துச் சதன்".

ஈழத்தின் யாழ்ப்பாண வலிகாமத்தை சேர்ந்த ஒரு குள்ளமான மனிதன். சிறிய முகம். மிக மிக சிறுவனாக இருந்த போது (8 வயது) எமது ஊர் பாடசாலையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்காக இந்த மனிதரை முதலில் பார்த்தேன். அவரது நடவடிக்கைகளே நகைச்சுவையாக இருந்தது. அதிலும் சிறுவர் என்றால் சிறிய விடயங்களிற்கே சிரிப்பு வரும். அந்த நிகழ்ச்சியில் தான் அவர் பல மிருகங்களின் குரல்களை தனது வாய் மூலம் எமக்கு தெரியப்படுத்தினார். நிச்சயமாக அப்போதுதான் பல மிருகங்கள் எவ்வாறு கத்தும் எனத் தெரிந்தது. யானை பிளிறும் என படித்திருந்தாலும் பிளிறல் எப்படி இருக்கும் என தெரியாது. இப்படி பல மிருகங்களின் குரலை தெரியப்படுத்தியது ஈழத்துச் சதனே. அதேபோல பறவைகள். காகம், கிளி, மைனா, குயில் போன்ற சில குரல்களைத்தவிர எமக்கு வேறு ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அன்று பல பறவைகளின் குரல்களையும் அறிந்து கொண்டோம்.

புரட்டாதிச்சனி, அமாவாசை போன்ற தினங்களில் அல்லது விரத தினங்களில் காகத்துக்கு உணவு வைத்து விட்டு உண்ணுவது வழக்கம். அதற்காக உணவை ஒரு இடத்தில் வைத்து 'கா கா கா கா...' என அழைத்து அந்த காகம் உணவு உண்ணும் வரை காத்திருந்து உண்ணுவோம். அன்றும் ஈழத்துச்சதன் பல்வேறு விதமாக காகம் கரைவதை வெளிப்படுத்தி இருந்தார். உணவுக்காக அழைப்பது, ஒரு காகம் இறந்தால் அதற்கு எப்படி அழைப்பது என காகத்தின் கரைதலில் உள்ள வேறுபாடுகளை தெரியப்படுத்தினார். நிறைய காகங்கள் அந்த இடத்தில் கரைந்தபடி சூழ்ந்து கொண்டன. பிரமிப்பாக இருந்தது. விரத நேரங்களில் அழைக்கும் போது ஐந்திற்கு உட்பட்ட காகங்களே வரும். இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சி அவரது வெறும் வாய் மூலம் வந்த குரல்தான். ஒலிவாங்கியோ (மைக்) ஒலிபெருக்கியோ இல்லை. அப்படித்தான் எமது வாழ்வும் வசதிகளும் இருந்தது. ஆனாலும் நிம்மதியும் இருந்தது.

பல வாகனங்களின் ஓசை எவ்வாறு இருக்கும் என எமக்கு ஒலி எழுப்பி காட்டினார். அவர் செய்ததிலேயே இரண்டு விடயங்கள் அசத்தலானவை. ஒன்று குரங்கு செய்யும் சேட்டைகள். மிக மிக தத்ரூபமாக இருந்தது. அதன் நடவடிக்கைகள் , அதன் உடல் அசைவுகள் என எல்லாவற்றையும் அனாசயமாக செய்து காட்டினார். அடுத்தது ஒரு பெண் எப்படி தன்னை அலங்கரிப்பாள் என்பது. அவரின் அந்த நிகழ்ச்சிகளை பார்த்தவர்களுக்கு தெரியும். உன்னதமான ஒரு அபிநயமாக இருக்கும். மிக மிக இலாவகமாக இருக்கும் அவரது செய்கைகள். தலை முடி வாருவது, வாரும் போது தலையில் இருந்து ஒரு பேன் அல்லது ஈர் வந்தால் அதை எடுத்து விரல் நகங்களுக்கு இடையில் வைத்து நசுக்குவது. நசுக்கும் போது 'ஸ்ஸ்..' என்று சத்தமிடுவது என எல்லா நுணுக்கங்களையும் உன்னிப்பாக அவதானித்து எம்முன்னே படைத்தார். அதிலும் தலைமுடியை பின்னுவது, முடிவது என அப்படியே அச்சொட்டாக ஏன் பெண்களிலும் பிரமாதமாக செய்வார். இன்னும் இன்னும் நிறைய.

பின்னர் ஒரு தடவை கல்லூரிக் காலத்திலும் கண்டு களித்தேன். கல்லூரியில் இயங்கும் ஒரு கழகம் தன்னுடைய வளர்ச்சி நிதிக்காக (எமது கல்லூரியில் வளர்ச்சி நிதி என்பது சிரிப்பான விடயம்) ரூபா5 வாங்கி எமக்கு அந்த நிக்ழச்சியை வழங்கினர். நான் நினைக்கிறேன் இந்த ஈழத்துச் சதன் இரணடாயிரம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் (2003 அல்லது 2004) அளவில் மரணமடைந்திருக்க வேண்டும். நிஜமாக சொல்வேன் மிக அற்புதமான ஒரு கலைஞன். ஒழுங்கான சந்தர்ப்பங்களும் களங்களும் கிடைக்காமல் எம்மோடு மட்டும் வாழ்ந்த மறைந்த ஒரு கலைஞன்.

நாம் செய்த அல்லது செய்கின்ற ஒரு வரலாற்றுத்தவறு என்னவென்றால் எமக்குள் இருக்கும் கலைஞர்களை ஊக்குவிக்காமலும், பாராட்டாமலும் அந்தக் கலைஞர்கள் பறிய பதிவுகளை பேணாமலும் விட்டு பெரும் குற்றத்தை இழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

தயவுசெய்து இந்த "ஈழத்துச் சதன்" பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாம். அவர் சம்பந்தமான தகவல்கள், படங்கள், ஒலிப்பேழைகள் இருந்தால் kidukuveli@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அல்லது நீங்களாகவே உங்கள் வலைப்பூவில் பதிவிடலாம். அல்லது ஏதாவது இணையத்தில் ஏற்றலாம். எவர் செய்தாலும் நல்லது நடக்கட்டும். தகவல்களை பேணுவோம்.

இந்த ஈழத்துச்சதனுக்கு பின்னர்தான் இப்படியான பலகுரல் நிகழ்ச்சிகளில் பல கலைஞர்களை தெரிந்து கொண்டேன். தாமு, சின்னி ஜெயந்த், படவா கோபி,சேது, ஜெயராம், விவேக், மயில்சாமி பலரும் இருந்தனர். இவர்கள் பல ஒலிகளோடு மட்டும் இல்லாமல் நடிகர்களின் குரலை தமது குரல் மூலம் வெளிப்படுத்தி கைதட்டல்கள் வாங்கினர். சின்னி ஜெயந்த் இதிலே எனக்குப் பிடித்த ஒரு கலைஞர். அவரது மிமிக்ரி கேட்டு பார்த்து பலதடவை மகிழ்ந்திருக்கிறேன்.

இப்போது விஜய் தொலைக்காட்சி கலக்கபோவது யாரு அறிமுகப்படுத்தியவுடன் ஏராளமான கலைஞர்கள் வெளியே தெரிந்தனர். இதனால் குரல் என்பதற்கு அப்பால் உடல் அசைவுகள், கருத்துக்கள், படைக்கும் பாணி என வேறுபடுத்தி பரிசில்கள் வழங்கினர். சன் தொலைக்காட்சியின் 'அசத்தப் போவது யாரு', பின்னர் கலைஞர் தொலைக்காட்சிலும் இது இருந்தது(பெயர் நினைவில்லை). கோவை குணா, ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன், குட்டிப்பையன் அர்ஜுன் என பலரும் கலக்கி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் விஜய் தொலைக்காட்சி மூலம் வெளியே வந்தவர்கள். இப்படி ஏனைய தொலைக்காட்சிகளும் ஒளிந்து கிடக்கும் கலைஞர்களை வெளியே தருவிக்கிறார்கள். நல்ல முயற்சியே.

எமது மண்ணிலே பிறந்த ஒரு கலைஞன் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் அந்தக்கலைஞனை நாம் சரிவரக் கையாளாமல் விட்டு விட்டோமோ எனத் தோன்றுகிறது. அந்தக் கலைஞன் மறைந்தாலும் என்றும் எமது நெஞ்சத்துள் வாழ்வான்.

கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் வீரர்களை அப்படியே பிரதிபலிப்பாக செய்யும் ஒரு கானொளிக்காட்சி இது. பார்த்து மகிழுங்கள்.

31 கருத்துகள்:

வந்தியத்தேவன் சொன்னது…

நான் படிக்கும் போதும் பாடசாலையில் ஈழத்துச் சதனின் நிகழ்ச்சி நடத்தினார்கள். பிறகு கொஞ்ச நாள் ரியூசனிலும் நடத்தினார்கள். ஒருமுறை அவர் காகாகா எனக் காகம் போல் கரையும் போது உண்மையான காகங்கள் அந்த மண்டபத்திற்க்குள் வந்துவிட்டன.

இந்தியாவிலும் சில படங்களில் இவரின் மிமிக்ரியை பாவித்திருப்பார்கள். கமலின் கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலில் அந்த சத்தங்களைச் செய்பவர் இவர்தான்.

கிஷோர் சொன்னது…

சுகமானதொரு நினைவு மீட்டல். நன்றி நண்பனே...!

ப்ரியா பக்கங்கள் சொன்னது…

///பின்னர் ஒரு தடவை கல்லூரிக் காலத்திலும் கண்டு களித்தேன். கல்லூரியில் இயங்கும் ஒரு கழகம் தன்னுடைய வளர்ச்சி நிதிக்காக (எமது கல்லூரியில் வளர்ச்சி நிதி என்பது சிரிப்பான விடயம்) ரூபா5 வாங்கி எமக்கு அந்த நிக்ழச்சியை வழங்கினர்.

இன்றும் அந்த நாள் ஞாபகம் இருக்கிறது. அதே நிகழ்ச்சியை நானும் ஐந்து ருபாய் கொடுத்து (Cumaraswamy Hall ) பார்த்தேன். நான் நினைக்கிறன் Service Club தான்.

கானா பிரபா சொன்னது…

அருமையான நினைவு மீட்டல் சதனின் நிகழ்ச்சியை பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு. தமிழ் நாட்டிலும் இதே பெயரில் ஒருவர் பல்குரல் நிகழ்ச்சி செய்திருக்கிறார்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

///யானை பிளிறும் என படித்திருந்தாலும் பிளிறல் எப்படி இருக்கும் என தெரியாது. இப்படி பல மிருகங்களின் குரலை தெரியப்படுத்தியது ஈழத்துச் சதனே. அதேபோல பறவைகள். காகம், கிளி, மைனா, குயில் போன்ற சில குரல்களைத்தவிர எமக்கு வேறு ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அன்று பல பறவைகளின் குரல்களையும் அறிந்து கொண்டோம்.///

நல்ல விடயங்களை நல்ல பகிர்வாக பகிர்துள்ளீர்கள் நண்பா

அருண்மொழிவர்மன் சொன்னது…

ஈழத்துச் சதனின் மரணம் பற்றி நான் இப்போதுதான் அறிந்துகொண்டேன். அவரை நீங்கள் சொன்னது போலவே நானும் என்அது ஆரம்ப கல்விக் காலங்களிலும், பின்னர் கல்லூரிக்காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியிலும் பார்த்தேன். அவர் காகம் போலம் கரைந்தபோது காகங்கள் எஙிருந்தோ பறந்து குழுமியது நினைவில் உள்ளது. திறமையான கலைஞர். நீங்கள் சொன்னது போலவே எம்மவர்கள் திறமைகள் சரியான முறையில் பதிவிடப்படவெஏண்டும் என்பதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு

RVRPhoto சொன்னது…

மிக நல்லவிடயத்தை பற்றி எழுதியதற்கு நன்றி.
கொக்குவில் இந்து கல்லூரியில் படிக்கும் போது இவருடைய நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன்.

//அவர் காகாகா எனக் காகம் போல் கரையும் போது உண்மையான காகங்கள் அந்த மண்டபத்திற்க்குள் வந்துவிட்டன. //

எனக்கும் இது நினைவு இருக்கிறது.

சி தயாளன் சொன்னது…

நான் கேள்விப்படிருக்கவில்லை. :-(( தகவலுக்கு நன்றி..

கிடுகுவேலி சொன்னது…

// வந்தியத்தேவன் said...
இந்தியாவிலும் சில படங்களில் இவரின் மிமிக்ரியை பாவித்திருப்பார்கள். கமலின் கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலில் அந்த சத்தங்களைச் செய்பவர் இவர்தான்...//

ஓ தகவலை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி வந்தியரே....இப்போதுதான் இதை அறிகிறேன்...!

கிடுகுவேலி சொன்னது…

//...கிஷோர் said...

சுகமானதொரு நினைவு மீட்டல். நன்றி நண்பனே...!

..//

நன்றி கிஷோர் வருகைக்கும் கருத்துக்கும்....! (இவர் அந்த 'கிஷோர்' ஆ)

கிடுகுவேலி சொன்னது…

//.... ப்ரியானந்த சுவாமிகள் said...
இன்றும் அந்த நாள் ஞாபகம் இருக்கிறது. அதே நிகழ்ச்சியை நானும் ஐந்து ருபாய் கொடுத்து (Cumaraswamy Hall ) பார்த்தேன். நான் நினைக்கிறன் Service Club தான்....//

எந்தக் கல்லூரி என போட்டு உடைத்து விட்டீர்களே ப்ரியானந்த...நன்றி வருகைக்கும் கருத்துக்கும்....!

கிடுகுவேலி சொன்னது…

//..கானா பிரபா said...

அருமையான நினைவு மீட்டல் சதனின் நிகழ்ச்சியை பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு. தமிழ் நாட்டிலும் இதே பெயரில் ஒருவர் பல்குரல் நிகழ்ச்சி செய்திருக்கிறார்.

..//

நன்றி கானாபிரபா தகவலுக்கும் வருகைக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

நன்றி ஞானசேகரன்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...!

கிடுகுவேலி சொன்னது…

//... அருண்மொழிவர்மன் said...
ஈழத்துச் சதனின் மரணம் பற்றி நான் இப்போதுதான் அறிந்துகொண்டேன். அவரை நீங்கள் சொன்னது போலவே நானும் என்அது ஆரம்ப கல்விக் காலங்களிலும், பின்னர் கல்லூரிக்காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியிலும் பார்த்தேன். அவர் காகம் போலம் கரைந்தபோது காகங்கள் எஙிருந்தோ பறந்து குழுமியது நினைவில் உள்ளது. திறமையான கலைஞர். நீங்கள் சொன்னது போலவே எம்மவர்கள் திறமைகள் சரியான முறையில் பதிவிடப்படவெஏண்டும் என்பதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு
..///
நன்றி அருண்மொழிவர்மன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும். நிச்சயமாக எம்மால் ஆன சகல வேலைகளையும் முடிந்த வரை செய்து எல்லாவற்றையும் காப்பாற்ற வேண்டும்.

கிடுகுவேலி சொன்னது…

//.. piratheepan said...

மிக நல்லவிடயத்தை பற்றி எழுதியதற்கு நன்றி.
கொக்குவில் இந்து கல்லூரியில் படிக்கும் போது இவருடைய நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன்.

//அவர் காகாகா எனக் காகம் போல் கரையும் போது உண்மையான காகங்கள் அந்த மண்டபத்திற்க்குள் வந்துவிட்டன. //

எனக்கும் இது நினைவு இருக்கிறது....//

நன்றி பிரதீபன் உங்கள் வருகைக்கும் நினைவை பகிர்ந்து கொண்டதுக்கும்...!

கிடுகுவேலி சொன்னது…

//... ’டொன்’ லீ said...

நான் கேள்விப்படிருக்கவில்லை. :-(( தகவலுக்கு நன்றி..

...///

மிகச்சிறந்த ஒரு பல் குரல் மன்னன்..

நன்றி லீ வருகைக்கும் கருத்துக்கும்...!

சயந்தன் சொன்னது…

எனது ஏழு அல்லது எட்டுவயதுகளிலும் அவர் நமது பாடசாலைக்கு வந்திருந்தார். நல்ல பதிவு

கிடுகுவேலி சொன்னது…

//.. சயந்தன் said...

எனது ஏழு அல்லது எட்டுவயதுகளிலும் அவர் நமது பாடசாலைக்கு வந்திருந்தார். நல்ல பதிவு

...//

நன்றி சயந்தன் வருகைக்கும், உங்கள் நினைவினை பகிர்ந்ததற்கும்...!

Unknown சொன்னது…

எமது தாய் நாட்டின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான ஈழத்துச் சதன் பற்றிய நினைவுகளை மீட்டியதற்காக எனது நன்றிகள், உண்மையை சொலலப்போனால் இவரின் நிகழ்ச்சிகள் நடைபெறாத பாடசாலைகளே குடாநாட்டில் இல்லை என்று கூறலாம்,மிமிக்ரி எனற சொல்லை நான் அறிந்ததே இவர் மூலம் தான். மற்றும் இவரைப் பற்றிய பிழையான தகவல் ஒன்றினை வாசகர் கருத்துக்களில் காணக்கூடியதாக இருக்கிறது அது அவள் ஒரு தொட்கதை திரைப்படத்தில் கடவுள் அமைத்துவைத்த மேடை பாடலில் இவர் மிமிக்ரி செய்துள்ளார் என்பதாகும் ஆனால் உண்மையில் அப்பாடலிற்கு குரல் கொடுத்தவர் தமிழ் நாட்டை சேர்ந்த சதன் என்பவர் இவரின் தாக்கத்தினாலேயே நம் நாட்டுக்கலைஞரை எல்லோரும் "ஈழத்துச் சதன்" என்று அழைத்தார்கள். எனினும் இவரின் இயற்பெயர் வேறு அது தற்போது எனது ஞாபகத்தில் இல்லை, தெரிந்தவர்கள் அறியப்படுத்துங்கள்.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வலசு - வேலணை சொன்னது…

மிகத் தேவையானதும் கட்டாயம் செய்யவேண்டியதுமான பதிவு இது.
மனம் திறந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். சந்தர்ப்பங்கள் சரிவர அமைந்திருந்தால் எல்லோர் மனங்களிலும் சிம்மாசனமிட்டிருப்பார்.
ஈழத்து முற்றத்திலும் இப்பதிவினை இணைத்து விடுங்கள்.

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

nalla pagirvu

வேந்தன் சொன்னது…

நான் ஈழத்துச் சதனின் நிகழ்ச்சியை எனது ஆரம்ப பாடசாலையில் (7 வயதில்) பார்த்திருக்கின்றேன். அந்த ஒரு நிகழ்ச்சி மூலமே என் நினைவில் பதிந்த திறமையான கலைஞர்.

கிடுகுவேலி சொன்னது…

//....B.Balamurali said...

எமது தாய் நாட்டின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான ஈழத்துச் சதன் பற்றிய நினைவுகளை மீட்டியதற்காக எனது நன்றிகள், உண்மையை சொலலப்போனால் இவரின் நிகழ்ச்சிகள் நடைபெறாத பாடசாலைகளே குடாநாட்டில் இல்லை என்று கூறலாம்,மிமிக்ரி எனற சொல்லை நான் அறிந்ததே இவர் மூலம் தான். மற்றும் இவரைப் பற்றிய பிழையான தகவல் ஒன்றினை வாசகர் கருத்துக்களில் காணக்கூடியதாக இருக்கிறது அது அவள் ஒரு தொட்கதை திரைப்படத்தில் கடவுள் அமைத்துவைத்த மேடை பாடலில் இவர் மிமிக்ரி செய்துள்ளார் என்பதாகும் ஆனால் உண்மையில் அப்பாடலிற்கு குரல் கொடுத்தவர் தமிழ் நாட்டை சேர்ந்த சதன் என்பவர் இவரின் தாக்கத்தினாலேயே நம் நாட்டுக்கலைஞரை எல்லோரும் "ஈழத்துச் சதன்" என்று அழைத்தார்கள். எனினும் இவரின் இயற்பெயர் வேறு அது தற்போது எனது ஞாபகத்தில் இல்லை, தெரிந்தவர்கள் அறியப்படுத்துங்கள்...///

வணக்கம் பாலமுரளி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். நீங்கள் குறிப்பிடுவது போலேயே நானும் அறிந்தேன். உறுதிப்படுத்தமுடியவில்லை. உங்கள் "அவள் ஒரு தொடர் கதை" பட விடயம் வந்தியத்தேவனுக்கே சரணம். நிச்சயமாக எனக்கு வரும் பின்னூட்டங்கள் எல்லாவற்றிலும் இவர் நிகழ்ச்சிகள் பாடசாலைகள் அதிகமாக நடந்தன என்றும் தாம் இதனை பார்த்து மகிழ்ந்தோம் எனவும் கூறுகின்றனர். மகிழ்ச்சிதான்.

கிடுகுவேலி சொன்னது…

//... வலசு - வேலணை said...

மிகத் தேவையானதும் கட்டாயம் செய்யவேண்டியதுமான பதிவு இது.
மனம் திறந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். சந்தர்ப்பங்கள் சரிவர அமைந்திருந்தால் எல்லோர் மனங்களிலும் சிம்மாசனமிட்டிருப்பார்.
ஈழத்து முற்றத்திலும் இப்பதிவினை இணைத்து விடுங்கள்....//

நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். நிச்சயமாக சந்தர்ப்பங்கள் சரிவர அமையாவிட்டாலும் அவர் எம் மனங்களில் முத்தென பதிந்தே விட்டார். ம்ம்ம் முற்றத்திலும் மணக்க விடுகிறேன்....!

கிடுகுவேலி சொன்னது…

//... [பி]-[த்]-[த]-[ன்] said...

nalla pagirvu..//

வணக்கம் பித்தன்..
வருகைக்கும் இடுகைக்கும்...!

கிடுகுவேலி சொன்னது…

//.... வேந்தன் said...

நான் ஈழத்துச் சதனின் நிகழ்ச்சியை எனது ஆரம்ப பாடசாலையில் (7 வயதில்) பார்த்திருக்கின்றேன். அந்த ஒரு நிகழ்ச்சி மூலமே என் நினைவில் பதிந்த திறமையான கலைஞர்....//

எல்லோரும் பாடசாலைகளில் பார்த்திருக்கின்றனர். பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துதான் விட்டார். நன்று வேந்தன் வருகைக்கும் கடுத்துக்கும்.

பெயரில்லா சொன்னது…

vanakkam,mr.balamurali sonnathu sari.appaadalukku kuralkoduththavar thamizhnaadu sathan.ungal pathivugal magaththaram...!enathu 7,8vayathil sathanin palakural kedga kidaiththathu.-raavan rajhkumar.

கிடுகுவேலி சொன்னது…

//... Anonymous said...

vanakkam,mr.balamurali sonnathu sari.appaadalukku kuralkoduththavar thamizhnaadu sathan.ungal pathivugal magaththaram...!enathu 7,8vayathil sathanin palakural kedga kidaiththathu.-raavan rajhkumar...//

வணக்கம் ராஜ்குமார்..உங்கள் வருகைக்கு நன்றிகள்..கருத்துக்கும் நன்றிகள்..!

வலசு - வேலணை சொன்னது…

சோமக்கிளி என ஊரவர்களாலும் ஈழத்துச்சதன் என ஏனையவர்களாலும் அழைக்கப்படும் அந்தப் பல்குரல்க் கலைஞன் வேலணையைச் சேர்ந்தவர்

மேலதிக தகவல்களுக்கு
முற்றத்து மல்லிகையாகிய ஈழததுச் சதன் என்னும் சோமக்கிளி

கருத்துரையிடுக