திங்கள், 27 ஜூலை, 2009

நல்லூர் கந்தனுக்கு கொடி...!


அலைகடல் சூழும் ஈழநாட்டின் தலையெனத் திகழும் யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற பதியில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம்தான் நல்லூர்க் கந்தசுவாமி கோவில். தமிழ்க்கடவுள் முருகன். யாழ்ப்பாண அரசாட்சி காலங்களில் எல்லாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சிறப்பு மேலோங்கித்தான் இருந்தது. இது தொடர்பாக கானாபிரபா 2007 ம் ஆண்டு 25 நாட்களும் சிறப்பு பதிவிட்டிருந்தார். அதனை பார்வையிட......!

ஏனோ தெரியவில்லை நல்லூர்க்கந்தனுக்கு திருவிழா என்றதும் மனது குதூகலிக்கிறது. இனி 25 நாட்களும் ஒரே கொண்டாட்டம்தான். அனைத்து மக்களும் பால் வயது என எந்த வர்க்க பேதமுமின்றி ஒன்று கூடும் ஒரு ஈழநாட்டு கலாசார நிகழ்வுதான் நல்லூர்க் கந்தனின் வருடாந்த உற்சவம். ஒரு படி மேலாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்களும் இங்கே அதிகமாக ஒன்று கூடுவார்கள்.

ஆலயச் சூழல் எங்கும் ஒரே பக்திமயமாகத்தான் இருக்கும். அப்படித்தான் ஆலய சுற்றாடலும் அமைந்து இருக்கிறது. அதிகாலை 4 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை ஆலயம் அமைந்த பகுதிகள் பெரும் அமளியாகவே இருக்கும். அங்க பிரதட்சனை, அடி அழிப்பு என அதிகாலையிலேயே பக்தர்கள் கூடிவிடுவர். காலை நேரம் மிக ரம்மியமாகவே இருக்கும். அலுவலகங்கள் செல்வோர், பாடசாலை மாணவர்கள் என எல்லோரும் காலைப் பூசையில் கலந்து கொள்வர். காரணம் அவர்களால் பகற் திருவிழாவினை கண்டு களிக்க முடியாது. ஆனால் மாலைநேரம் எல்லோரும் அங்கே கூடுவர். மனதிற்கு இதமான பொழுதில் முருகவேற் பெருமான் தன் துணைவியர் வள்ளி தெய்வயானை சமேதராக திருவீதியுலா வருகின்ற காட்சி அற்புதமாக இருக்கும்.

நல்லூர் ஆலயத்தினை எல்லோரும் ரசிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நேரத்தினை கடைப்பிடிக்கும் பாங்கு. எல்லாமே சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தேறிவிடும். இதையெல்ல்லாம் நெறிப்படுத்துபவர் ஆலயத்தின் ஆதீன்கர்த்தாவாக இருக்கின்ற மாப்பாண முதலி மரபில் வந்த சண்முகதாச மாப்பாண முதலியார் அவர்கள். அவர் மூப்படைந்தாலும் மகனின் உதவியுடன் ஆலயத்தினை திறம்பட முகாமைத்துவம் செய்து வருகிறார்.

மாலை வேளைகளில் ஆலய வீதிகளில் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கங்கள், இசைக்கச்சேரிகள் என கலை கலாசார நிகழ்வுகள் ஒரு புறம். மறுபுறம் சிறிய சிறிய பெட்டிக் கடைகள், சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், குளிர்களி (ஐஸ்கிறீம்) நிலையங்கள் என எங்கும் மக்களை கவரக்கூடிய வகையில் வணிக நிறுவனங்கள் அமைந்திருக்கும்.

இன்று காலை சரியாக பத்து மணிக்கு கொடித்தம்ப மரத்தில் வேலவனின் கொடி ஏறிவிடும். இனி 25 நாட்களும் கோலாகலமும் குதுகலமும்தான்.

கடந்த வருட திருவிழாவிற்காக கிடுகுவேலி தாங்கிய பதிவு
இங்கே....!

"பஞ்சம் படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி.."

18 கருத்துகள்:

நிஷாந் சொன்னது…

நிஜங்களே தாக்கத்தை ஏற்படுத்தாத போது வெறும் நிழல்கள் என்ன செய்யும்??? நினைவுக் கல்லை இன்னமும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதுடன் திருப்திப் படுவார்கள்...

பெயரில்லா சொன்னது…

கூப்பிடு தூரத்தில் 3 லட்சம் மக்கள் வதை முகாமில் தவிக்கின்ற போதும் எந்த வித சஞ்சலமும் இல்லாமல் தேரும் திருவிளாவும் கொண்டாட்டமும் கூதூகலிப்பும் பணத்தை வைத்து தம்பட்டமும் என எத்தனை இழவெடுப்புகள். இதற்குப்பெயர் பக்தியா? எந்த ஒரு கடவுளாலும் எள்ளளவும் மக்களை காப்பாற்ற முடியவில்லை. இது திருவிழா அல்ல எமது இனத்தின் ஈனத்தனத்தையும் சாபக்கேட்டையும் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு கரிநாள். கேவலமான நாள். பக்தி என்ற பெயரில் மனதில் வக்கிரங்களை விருத்தி செய்யும் நாள். ஈழத்தமிழனின் முதன்மை சாபக்கேட்டுச் சின்னமான நல்லூர் ஒருநாள் சம்பல் மேடாகியே தீரும். நிச்சயம் நடக்கும்.

தங்க முகுந்தன் சொன்னது…

பாவம்! இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னும் நல்லூரும் சாம்பல் மேடாக வேண்டுமாம்! ஐயோ! ஐயோ! முருகா இந்தப் புத்தியில்லாத மனிசருக்குப் புத்தியைக் கொடு முருகா என்று இறைஞ்சுவோமாக!
பதிவைப் பற்றி எழுதவேண்டும் என வந்த நான் இந்தப் பெயரில்லா விசரனுக்குப் பதிலளிக்கப் போய் விட்டேன்! மன்னிக்கவும்! கிடுகுவேலி - கதியால் இவை யாழ்ப்பாணக் கிராமங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும்! அருமையான பதிவு! நல்லூருக்குப் போய் நேரில் கும்பிட்ட மன நிறைவைத் தந்தது! நல்லூரானையே நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு இது தேனும் தினை மாவும் உண்ட ருசியைத் தந்தது! மனப்பூர்வமான நன்றிகள்!

பெயரில்லா சொன்னது…

தங்க முகுந்து அய்யா

எனக்கு புத்தியை கொடுக்கிற சக்தி முருகனுக்கு இருந்த ஏன் அந்த புத்திய மகிந்தனுக்கு கொடுத்து கொத்துக் கொத்தாய் மடிந்து போன குஞ்சு குருமனை காப்பாத்தியிருக்க முடியாது?

தேனும் தினைமாவும் உனக்கு கேடா வவுனியாவில வாடுற மூன்று லட்சம் சனத்துக்கு ஒழுங்க ஒருவேளை சாப்பாடு கிடைக்கவேண்டும் என்று இறைஞ்ச முடியாது உனக்கு தேனும் தினை மாவும் ருசியாய் இருக்கோ?

நீ நல்லூரான நினைச்சுக்கொண்டிரு அது பக்தி அல்ல பெருமை. உங்க முக்காவாசி சனமும் எவடம் எண்டு கேட்டா நல்லுரடி எண்டுதான் சொல்லுவினம் கண்டியோ ஏன் எண்டு தெரியாதோ? உப்பிடித்தாண்டா முந்தி படிச்ச பருப்புகள் எண்டு சிங்களவன போட்டு நக்கலடிச்சாங்கள் அவன் வந்து நூலகத்த எரிச்சான். படிச்சததை விட அத வச்சு அடுத்தவன முட்டாளாக்கினதால வந்த வினை அது. இப்பவும் பக்தி முத்தி படம் ஓட்டுறியள் கந்தனே உங்களுக்கு ஒரு ஆப்பு வைப்பான்டா.

துர்க்கா-தீபன் சொன்னது…

வணக்கம் கதியால்!

நல்லூர் கந்தன் திருவிழாவை பதிவு செய்ததற்கு. சில நிகழ்வுகள் எப்போதும் ஒரு நிழலைப்போல எம்மோடு தொடர்பவை. தூரத்தாலோ துயரத்தாலோ அறுத்தெறிய முடியாதவை. யாழ்ப்பாண நினைவுகளில் நல்லுரை புறந்தள்ள முடியாது. அது ஒரு இனிய படலமாக எப்போதும் எல்லோருக்குள்ளும் வாழ்கிறது.

1997 அல்லது 98 நல்லூர் தேர் திருவிழா அன்று உதயனில் வெளிவந்த கவிஞர் ஜெயபாலனின் கவிதை வரிகள்

"உனதாணை ஏற்று உயிர் கூடத் தருவோம்
உதயத்தை மீட்டு தருவாயோ? .."

என்று இருந்தததாக நினைவு. மேலும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை!

வாணன் சொன்னது…

அனானியின் பதில்கள் மிகவும் கீழ்த்தரமானவை. இவன் ஒரு சைகோவாகத்தான் இருக்கவேண்டும். நல்லூர் என்பது ஒரு கலாச்சாரக் குறியீடு. மூன்று லட்சம் பேருகாக கவலைப்படும் அனானி அவர்களைப் பற்றி கவலையே படமால் இருக்கும் கருணா, சங்கரி டக்கிளசிடம் இந்தக்கேள்வியைக்கேட்பாரா? எத்தனையோ ஆயிரம் மக்கள் வலிகாமத்திலிருந்து தங்கள் சொந்த வீடுகளில் குடியிருக்க வசதி செய்துகொடுக்காத ஓட்டுப்பொறுக்கிகளிடம் இதனைக்கேட்பாரா? இல்லை காரணம் அவருக்கு முதுகெலும்பு இல்லை இருந்தால் அனானியாக வருவாரா?

பெயரில்லா சொன்னது…

பெருமதிப்புக்குரிய வாணண்

நல்லூர் ஒரு கலாச்சாரக் குறியீடு என்று நீங்களே சொல்கின்றீர்கள். இறைமார்க்கம் பக்தி ஆன்மீகம் என்ற தொனிகளுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியவில்லை. கலாச்சாரத்தை வெளி்ப்படுத்தும் ஒரு இடமாக நல்லூர் அமைகின்றது. நீங்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தும் ஆபரணங்களை அணிந்தும் போட்டி போட்டு செலவு செய்து அடயாளம் தேடியும் உங்கள் கலாச்சார பெருமைகளை வெளிப்படுத்துகின்றீர்கள் தவிர பக்தி என்பதோ இறை நம்பிக்கை என்பதோ இங்கு ஒரு கேலிப்பொருளாகின்றது.

இந்த முறை கஸ்ரப்படும் மக்களை காப்பாற்றும் படி கந்தனை வேண்டுவது ஒரு உயர்ந்த எண்ணம் ஆனால் நீங்களோ கலாச்சார பணியாரம் சுட்டு விற்கப்போகின்றீர்கள் உண்மையில் கந்தனே யோசிப்பான் இந்தச் சனங்கள் இப்படி அனியாயமாக்கும் பணத்தை வவுனியா மக்களுக்கு கொடுக்கலாமே என்று யோசிப்பான் கூடவே வள்ளியும் தெய்வானையும் யோசிப்பார்கள். ஆனா எங்கட சனம் யோசிக்குமா? துயரம் படிந்து தேசம் கிடக்கின்றது அதன் நிமிர்த்தம் அமைதியாக மக்களின் நலனுக்கான பிரார்த்தனையாக இந்த வருட திருவிழாவை மாற்றினால் கந்தனுக்கும் மனம் குளிரும். சனத்துக்கும் மனம் நிறைவாகும் ஆனால் நீங்கள் கலாசராத்தை நிலை நிறுத்தப்போகின்றீர்களே தவிர கந்தனை நோக்கிப்போகவில்லை.

முகுந்துவாக இருந்தாலும் நீராக இருந்தாலும் நான் சொல்வது கந்தனுக்கு விரோதமானது இல்லை. அன்மீகத்தக்கு விரோதமானது இல்லை ஆனால் ஈனத்தனத்தக்கு எதிரானது. கேவலமான காவலித்தனத்துக்கு விரோதமானது. ஆன்மீகத்தையே கலாச்சாரம் என்ற பெயரில் குப்பையாக்கும் நாதாரிகளுக்கு விரோதமானது. இன்றும் தமிழகத்தில் பலர் வன்னி மக்களுக்காக சைக்கிள் பயணம் செய்கின்றார்கள். எத்தனையோ ஆன்மீக வாதிகள் வழிபாடுகள் செய்கின்றார்ள் அவங்கள் மனுசர் கோயில் திருவிழா எண்ட பெயரில தம்பட்டமடிக்கும் நீங்கள் மனுசரா? யாருக்கு சைக்கோ?

உன்னையும் எமாத்தி முருகனையும் ஏமாத்தி ஆன்மீகத்தையும் கேலிப்பொருளாக்கி பன்னாடைத்தனம் பண்ணிக்கொண்டு சைக்கோ விசரன் என்னும் என்ன சொல்லப்போறா? சரி அப்படியே இருந்திட்டுப்போறன் ஊரில நாலு விசரன் இருந்தா தான் மற்றவங்களுக்கு விசர் இல்லை எண்டு உறுதிப்படுத்தலாம். விசரனும் பயனுள்ளவனே

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் நண்பர்களே....!

நிஷாந்த், அனானி, தங்க முகுந்தன்..உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள். காலம் காட்டிய கோலத்தில் எல்லாம் நடந்து விட்டது. யாரும் யாரிலையும் பிழை சொல்ல வேண்டாம். எங்களுக்குள் பிணக்குகள் வேண்டாம். உணர்வு வசப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீச வேண்டாம். நல்லூர்த் திருவிழா ஒரு கலாசார விழா அவ்வளவே. கடவுள் இருக்கிறார் இல்லை என்பதற்கு அப்பால் இப்படி சிந்தித்து பாருங்கள். எமது மக்களுக்கு இடர் என்று நாம் எதையாவது செய்யாமல் விட்டோமா? தனிப்பட நாம் என்ன செய்தோம் அந்த மக்களுக்காய். கவலைகள் இருக்கின்றன. எல்லாம் சமமாகப் பயணிக்க வேண்டும். தொய்வில்லாமல் போவது நல்லது என நினைக்கின்றேன். இங்கே இந்த பின்னுட்டங்கள் எல்லாம் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்துதான் வருகிறது என்றால் தயவு செய்து தவிருங்கள். அங்கே மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள வேளை அவர்களுக்கான உள ஆற்றுப்படுத்துகை இவ்வாறுதான் அமையலாம். மன அமைதிக்கான ஒரு மையமாக அல்லது நிகழ்வாக பாருங்கள். உங்கள் எல்லோரினது உணர்வுகளையும் கருத்துக்களையும் மதிக்கிறேன். நன்றிகளும் வணக்கங்களும்.

tharuha சொன்னது…

நல்லூரன்தான் எல்லோருக்கும் ஒரேயடியா ஒரு பெரிய அரோகரா சொல்லிட்டாரே ...எங்கட அரோகரா எல்லாம் அவருக்கு கேக்குமோ தெரியாது. என்றாலும் அந்த தேரடி மணல் பரப்பில் ஒரு முறை இளைப்பாற மனம் தவிப்பதை தவிர்க்க முடியவில்லை

கிடுகுவேலி சொன்னது…

//..tharuha said

அந்த தேரடி மணல் பரப்பில் ஒரு முறை இளைப்பாற மனம் தவிப்பதை தவிர்க்க முடியவில்லை...//

வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதோம்...தொல்லைகள் போகவில்லை....!
நன்றிகள் வருகைக்கும் கருத்துக்கும்...!

கிடுகுவேலி சொன்னது…

//... துர்க்கா-தீபன் said...


1997 அல்லது 98 நல்லூர் தேர் திருவிழா அன்று உதயனில் வெளிவந்த கவிஞர் ஜெயபாலனின் கவிதை வரிகள்

"உனதாணை ஏற்று உயிர் கூடத் தருவோம்
உதயத்தை மீட்டு தருவாயோ?...//

வணக்கம் துர்க்கா-தீபன்..! நன்றிகள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..!

அருமையான ஆழமான வரிகள்.

புதுவையின் வரிகளோடு
வாசலிலே கையசைத்தால் மட்டும் போதும் நாம் வெல்வோம்....! முருகா எப்போது அது....!

வலசு - வேலணை சொன்னது…

//
நல்லூர் ஆலயத்தினை எல்லோரும் ரசிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நேரத்தினை கடைப்பிடிக்கும் பாங்கு. எல்லாமே சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தேறிவிடும்.
//
உண்மைதான்.

இப்போது கலாச்சாரக் காவலர்கள் இல்லாத நிலையில் நல்லூரில் கலாச்சாரம் பாதுகாக்கப் படுமா? இல்லை மேலும் சீரழிக்கப்படுமா?

ஹேமா சொன்னது…

நன்றி கதியால் உங்களுக்கும் பிரபாக்கும்.பழைய ஞாபகங்களோடு முருகனை நினைத்துக்கொள்வோம்.

ஏன் தான் இந்த அனானிகள் எண்டு பெயர்கூடச் சொல்லமுடியாமல் அவ்ஸ்தைப்படும் ஜென்மங்களை என்னெண்டு சொல்றது.

இவர்கள் உண்மையில் தமிழர்களா?இவர்களது மனநிலை என்ன?விளங்கவே இல்லை.நாங்கள் இப்படியே அழிந்து எங்கள் இருப்பிடம்-நாங்கள் வாழ்ந்ததுக்கு உண்டான சாட்சியங்கள் எதுவுமே இலாமல் போகவேணும் என்று நினைக்கிறார்களா?

சரி அனானி,முடிந்தால் நாங்கள் எப்படி வாழவேணும் என்றாவது உங்கள் மனக் கருத்துக்களைச் சொல்லுங்களேன் தயவு செய்து.

கதியால் என் பதிவிலும் இவர்கள் அட்டகாசம்.கொழும்பில் இருந்துதான் வருகிறார்கள்.

கிடுகுவேலி சொன்னது…

//...வலசு - வேலணை said...

நல்லூர் ஆலயத்தினை எல்லோரும் ரசிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நேரத்தினை கடைப்பிடிக்கும் பாங்கு. எல்லாமே சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தேறிவிடும்.....//

உண்மைதான்.

இப்போது கலாச்சாரக் காவலர்கள் இல்லாத நிலையில் நல்லூரில் கலாச்சாரம் பாதுகாக்கப் படுமா? இல்லை மேலும் சீரழிக்கப்படுமா?

..//

வணக்கம் வேலணை வலசு..நன்றிகள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்றே நம்புவோம்.

கிடுகுவேலி சொன்னது…

//..ஹேமா said...

நன்றி கதியால் உங்களுக்கும் பிரபாக்கும்.பழைய ஞாபகங்களோடு முருகனை நினைத்துக்கொள்வோம்.

ஏன் தான் இந்த அனானிகள் எண்டு பெயர்கூடச் சொல்லமுடியாமல் அவ்ஸ்தைப்படும் ஜென்மங்களை என்னெண்டு சொல்றது.

இவர்கள் உண்மையில் தமிழர்களா?இவர்களது மனநிலை என்ன?விளங்கவே இல்லை.நாங்கள் இப்படியே அழிந்து எங்கள் இருப்பிடம்-நாங்கள் வாழ்ந்ததுக்கு உண்டான சாட்சியங்கள் எதுவுமே இலாமல் போகவேணும் என்று நினைக்கிறார்களா?

சரி அனானி,முடிந்தால் நாங்கள் எப்படி வாழவேணும் என்றாவது உங்கள் மனக் கருத்துக்களைச் சொல்லுங்களேன் தயவு செய்து.
..//

வணக்கம் ஹேமா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். அவர்களின் கருத்துக்கும் மதிப்பளிக்கிறோம். ஆரோக்கியமான கருத்துக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும். இப்படியான வைபவங்கள் கலாசாரம் பாதுகாக்கப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.

பெயரில்லா சொன்னது…

//சரி அனானி,முடிந்தால் நாங்கள் எப்படி வாழவேணும் என்றாவது உங்கள் மனக் கருத்துக்களைச் சொல்லுங்களேன் தயவு செய்து.//

நல்லூர் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடு இல்லை. அது ஒரு தரப்பாரின் எண்ணப்பாடு ஆகும். ஈழத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள் இஸ்லாமிய மக்கள் இருக்கின்றார்கள் வன்னி கிழக்கு மன்னார் போன்ற அனைத்து மக்களுக்கும் நல்லூரில் வெளிப்படுத்தும் பண்பாடு கலாச்சாரம் பொதுவானது இல்லை. அவ்வாறு இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. கேயிலை பக்தியோடு பாருங்கள். எமது மக்களின் துன்பங்களுக்காக வேண்டுங்கள். ஆன்மீகத்துக்கு நேர்மையாக இருங்கள் அதை விடுத்து இது தான் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடு என்று ஒரு குறிப்பிட்ட தரப்பு தம்பட்டம் அடிப்பதில் எந்த வித நேர்மையும் இல்லை. பக்தி வேறு இனத்துக்கான கலாச்சாரம் பண்பாடு வேறு. அவைகளில் எதுவும் உயர்ந்ததும் தாழ்ந்ததும் கிடையாது. இஸ்லாமியமக்களின் பக்திமார்க்கம் அவர்களுக்கு பவித்திரமானது அவ்வாறே கிறித்தவர்களுக்குமாகும். ஆனால் இந்த நல்லூர் கலாச்சார பண்பாட்டுக்குறியீடு என்பது பக்தியை நிராகரித்து சமுகத்தை ஆதிக்கம் செலுத்த முனைகின்றது. ஒட்டுமொத்த இனத்தையும் ஆதிக்கம் செலுத்த முனைகின்றது. இன்று இஸ்லாமியத் தமிழர்களுக்கும் எமக்குமான பிளவுக்கும் கிழக்குமாகாண மக்களுக்கும் எமக்குமான பிளவுக்கும் இந்த ஆதிக்க மனோபாவமே காரணமாகின்றது. பக்தி என்ற போர்வையில் இங்கு நடப்பது அனைத்தும் அழிவுக்கான அடிப்படைகள். இனச் சிதைவுக்கான அடிப்படைகள். இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். இதனாலேயே இது தமிழனின் சபக்கேட்டுச் சின்னம் என்று கூறினேன். எங்களிடம் பல மதங்கள் பல பண்பாடுகள் கலாச்சாரங்கள் இருக்கின்றது ஆனால் நல்லூர் எமது இனத்துக்கு பொதுவான பண்பாட்டுக் குறியீடு கிடையாது. பக்தியோடு நில்லுங்கள் ஆன்மீகத்துக்கு நேர்மையாக இருங்கள் என்பதையே நான் சொல்ல முனைந்தேன். நீங்கள் ஆன்மீகத்தை ஆதிக்கக் கருவியாக பாவிப்பது முருகனுக்கும் செய்யும் துரோகம்.

கிடுகுவேலி சொன்னது…

ஈழத்தில் வேறெந்த ஆலயத்திற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு அல்லது தனிப்புகழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு உண்டு. ஈழத்தில் அதிகம் அறியப்பட்ட ஆலயம் என ஒன்று இருக்குமானால் அது நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம்தான். இதில் எவருக்கும் மறுகருத்து இல்லை. நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் மட்டுமல்ல ஏனைய பிரதேச ஆலயங்களும் கலாசாரத்தை பேணுபவைதான். இந்த ஆலயத்திற்கு அதிகளவான அடியவர்கள் வருகிறார்கள். எனவே இதன் புகழ் உச்சம்தான். இப்படியான திருவிழாக்கள் இல்லை என்றால் எமது மக்கள் என்றோ மனநோயாளிகள் ஆகியிருப்பர். எமது பிரதேசங்களில் மேலை நாடுகளை போல என்ன பொழுது போக்கு அம்சம் இருக்கிறது. அப்படி இருக்கின்ற ஒரு சிலவற்றை கூட அணுக முடியாத படி ஆக்கிரமிப்பு. ஆனால் அந்த ஆக்கிரமிப்பாளர்கள் கூட இப்படியான ஆலயம் என்றதும் கொஞ்சம் தங்களது பிடிகளை தளர்த்துகிறார்கள். இவை மக்களின் மனதை ஆற்றுப்படுத்த உதவுகிறது. யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த ஒரு தொண்டு நிறுவனம் (பெயர் நினைவில் இல்லை) நடாத்திய ஒரு ஆய்வில் ஆலயங்களும் திருவிழாக்களும் தான் மக்களின் மனதை சாந்தப்படுத்தி ஆசுவாசப்படுத்தி யுத்த பீதி, யுத்த வடுக்கள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களில் இருந்து காப்பாற்றிக் கொண்டு இருப்பதாக சொன்னார்கள். இப்படியான திருவிழாக்கள் நடைபெறட்டும். ஆன்மீகம் ஊடாகவாவது எமது பண்பாடு, கலாசாரம் விழுமியம் பாதுகாக்கப்படட்டும்.

வேந்தன் சொன்னது…

உங்களுக்கு நான் "சுவாரஸ்ய பதிவர்" விருதை வழங்க விரும்புகின்றேன். அதை ஏற்பீர்கள் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள்.
http://skylinelk.blogspot.com/2009/07/blog-post_30.html

கருத்துரையிடுக