வியாழன், 2 ஜூலை, 2009

முதுமொழிகளும் நாமும்....!

பழமொழிகள் அல்லது சில சொல்லாடல்கள் என்பன எல்லா மொழிகளுக்கும், அந்த மொழி சார்ந்த இனத்திற்கும் உரிய சில அடையாளங்கள். நாம் சில வேளைகளில் அவதானித்து இருக்கிறோம், ஒவ்வொருவரும் பேசும் போது அல்லது உரையாடும் போது தமக்கு தெரிந்த பழமொழிகளை அல்லது சில சொல்லாடல்களை சொல்வார்கள். " எங்கட ஊரில ஒரு பழமொழி சொல்லுவினம்" அல்லது "இதுக்குத்தான தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு" அல்லது "சீன மொழில ஒரு பழமொழி இருக்காம்". இப்படியான சில வாசகங்களை நம் காதினூடாக கேட்டிருக்கிறோம். அல்லது நாம் கூட பேசி இருக்கலாம்.

"முருங்கை முறிச்சு வளர்க்க வேணும்
வடலி வெட்டி வளர்க்க வேணும்
பிள்ளை அடிச்சு வளர்க்க வேணும்" என்று மூதாதையர்களிடம் அடிவாங்கிய நினைவுகள் இன்னும் மனக்கண் முன் தோன்றுகிறது. காலம் காலமாக இவர்கள் இதை சொல்லி வருகிறார்கள். இதிலே தப்பென்று எதுவுமில்லை. இந்த பழமொழிகளை ஒட்டியே உங்கள் வளர்ச்சிப் பாதை அமைய வேண்டும் என்பது எமது மூத்தோரின் எம்மீதான கரிசனை அல்லது பார்வை. நாம் அதனை பின்பற்றி நடக்கிறோமோ இல்லையோ, அவ்வப்போது அந்த பழமொழிகளை நினைவு கூருகிறோம்.

சில இப்படியான சொல்லாடல்கள் ஒரு நாட்டிலேயே குறித்த பிரதேசத்திற்கே பாவனையில் உள்ள பிரதேச வழக்காக இருக்கும். அது அந்த நாட்டின் அடுத்த பிரதேசத்தில் தெரியாத அல்லது பாவிக்காத ஒன்றாகவும் இருக்கும். இவ்வாறு நாட்டுக்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் என்று சொல்லாடல்கள் வேறு பட்டாலும் மொழியால் அவை ஒன்று பட்டு நிற்கின்றன. அவற்றை நாம் அறிந்து எமது வாழ்வினூடே புழக்கத்தில் விட்டு எல்லாவற்றையும் எமக்கான விழுமியமாக காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

பாடசாலைக் காலத்தில் தமிழ் மொழிக்கான பாடப்புத்தகத்தில் நிறைய பழமொழிகளும் அதற்கான விளக்கங்களையும் கற்றுக்கொண்டோம். ஒரு சம்பவத்தை வைத்து ஒரு பழமொழியை சொல்லும் போது அந்தப் பழமொழி மனதுக்குள் ஆழமாக பதிந்து விடும். ஆனால் இப்போதெல்லாம் யாராவது அடிக்கடி பழமொழிகளை சொன்னால் கிழடு என்றோ அல்லது தாத்தா என்றோ அல்லது கிழட்டு கதை கதைக்காதே என்றோ சொல்லி அவரை தலையடி போட்டு ஒதுக்கிவிடுகிறோம். இதையே இன்னொருவன் ஆங்கிலத்தில் சொன்னால் அவன் கொஞ்சம் விசயம் தெரிஞ்சவன் என கொண்டாடுகிறோம். இன்று இந்த நிலையில்தான் எமது பழமொழிக்கான அங்கீகாரம் உள்ளது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமக்கு எங்கோ ஒரு மூலையில் பழமொழிகளின் பாவனை இருந்து கொண்டே இருக்கும். அதை உணர்ந்திருக்கிறோம் என்பதை மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது.
இப்பொழுது பழமொழிகளை பாவித்தாலும் அதன் திரிபு கவலையாக உள்ளது. ஒரு பிழையான கருத்தை கொடுக்காவிட்டாலும் பிறிதொரு காலத்தில் ஏன் இப்படி ஒரு பழமொழி கொண்டுவரப்பட்டது என்ற சிந்தனையையும் அல்லது உருவாக்கியவர்கள் பிழையாகத்தான் உருவாக்கினார்களா என்ற எண்ணதையும் தோற்றுவிக்குமல்லவா? இப்படி எண்ணுவதற்கு ஒரு பழமொழி அல்லது சொல்லாடல் எப்போதும் மனதை குடைந்தபடியே உள்ளது.
"முட்டையில் மயிர் பிடுங்குவது" இதை நாம் பாவிக்காத இடமும் இல்லை. கேட்காத இடமும் இல்லை. ஒரு விடயத்தை செய்தால் அதில் நுட்பமாக ஆராய்ந்து பிழை அல்லது குற்றம் கண்டு பிடிக்கும் சந்தர்ப்பத்தில் நாம் இதனை பாவித்திருப்போம். "எல்லாம் சரியா செய்ய வேணும், இல்லாட்டி அந்தாள் முட்டைல மயிர் பிடுங்கும்" என எல்லோரும் சொல்லி இருப்போம். இப்பொழுது கேள்வி என்னவென்றால், "முட்டையில் மயிர் பிடுங்குதல்" என்பது சரியா? முட்டைக்கும் மயிருக்கும் தொடர்பு இருக்கா... என்றால் இல்லை. தொடர்பு இல்லாத இடத்தில் அந்த பதம் சரியாக இருக்குமா? மொட்டைக்கும் ( முடி அற்ற தலை) மயிருக்கும் தொடர்பு இருக்கிறது. மயிர் இல்லாவிட்டால்தானே அது மொட்டந்தலை. மொட்டந்தலையில் எப்படி மயிர் பிடுங்குவது. ஆனாலும் சிலர் அதிலே மயிர் இருக்கா இருக்கா என தேடுவார்களே? அப்படி தேடித்தேடி பிடுங்க எண்ணுவார்களே? இதனால்தான் அது "மொட்டைல மயிர் பிடுங்குதல்" என கூறலாயிற்று. அது காலப்போக்கிலே "முட்டைல மயிர் பிடுங்குதல்" என மருவிற்று.

இவ்வாறு திரிபடைதலை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் அடுத்த தலைமுறை இதனை பார்க்கும் போது எமக்கு மூத்த தலைமுறைகளை தப்பாக நினைக்கலாம் இல்லையா? எனவே நாமும் கொஞ்சம் அவதானமாக இருந்து செயற்படுவோம். எமது மொழியையும் எமக்கான அடையாளத்தையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும்.

17 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//எமது மொழியையும் எமக்கான அடையாளத்தையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும்.//

நல்ல அனுகுமுறையுடன் எழுதியுள்ளிர்கள் பாராட்டுகள்

கிடுகுவேலி சொன்னது…

//....ஆ.ஞானசேகரன் said...
//எமது மொழியையும் எமக்கான அடையாளத்தையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும்.//

நல்ல அனுகுமுறையுடன் எழுதியுள்ளிர்கள் பாராட்டுகள்...//

நன்றி ஞானசேகரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...!

வேடிக்கை மனிதன் சொன்னது…

//இவ்வாறு திரிபடைதலை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் அடுத்த தலைமுறை இதனை பார்க்கும் போது எமக்கு மூத்த தலைமுறைகளை தப்பாக நினைக்கலாம் இல்லையா? எனவே நாமும் கொஞ்சம் அவதானமாக இருந்து செயற்படுவோம். எமது மொழியையும் எமக்கான அடையாளத்தையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும்.//

உண்மைதான் நண்பரே.

நல்ல பதிவு பாராட்டுகள்

சி தயாளன் சொன்னது…

எம்மிடையே காலம் காலமாக இருந்து வரும் முதுமொழிகளை நாம் காப்பாற்றி ஆகவேண்டும். :-)

கிடுகுவேலி சொன்னது…

//.... வேடிக்கை மனிதன் said...
//இவ்வாறு திரிபடைதலை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் அடுத்த தலைமுறை இதனை பார்க்கும் போது எமக்கு மூத்த தலைமுறைகளை தப்பாக நினைக்கலாம் இல்லையா? எனவே நாமும் கொஞ்சம் அவதானமாக இருந்து செயற்படுவோம். எமது மொழியையும் எமக்கான அடையாளத்தையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும்.//

உண்மைதான் நண்பரே.

நல்ல பதிவு பாராட்டுகள்
..//

வணக்கம் வேடிக்கை மனிதா, நீங்களும் உங்கள் ஊர் வழக்க குறியீடுகளை தெரியப்படுத்துங்கள். எல்லோரும் அறியலாம். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//....’டொன்’ லீ said...
எம்மிடையே காலம் காலமாக இருந்து வரும் முதுமொழிகளை நாம் காப்பாற்றி ஆகவேண்டும். :-)
..//

நிச்சயமாக அவன்செய்வான் இவன்செய்வான் என இருந்து இன்று ஏதுமற்ற கையறு நிலை. எம்மை எமதை நாம்தானே காப்பாற்ற வேண்டிய நிலை.முயல்வோம் வெல்வோம். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....!

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

// இதையே இன்னொருவன் ஆங்கிலத்தில் சொன்னால் அவன் கொஞ்சம் விசயம் தெரிஞ்சவன் என கொண்டாடுகிறோம்//

-:) 100%

கிடுகுவேலி சொன்னது…

//... பித்தன் said...
// இதையே இன்னொருவன் ஆங்கிலத்தில் சொன்னால் அவன் கொஞ்சம் விசயம் தெரிஞ்சவன் என கொண்டாடுகிறோம்//

-:) 100%
...//
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் பித்தனே.....!

வாசுகி சொன்னது…

நீங்கள் கொஞ்சம் பழமொழிகளையும் சேர்த்திருந்தால் நாமும் படித்திருப்போம்.
பயனுள்ள இடுகை.

அருண்மொழிவர்மன் சொன்னது…

இப்படி அர்த்தம் மாறிப்போன பல பழமொழிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். முன்பு அறிவுக்களஞ்சியம் வெளிவந்த நாட்களில் (யாழ்ப்பாணத்தில் இருந்து) சிற்பி தொடராக இவை பற்றி எழுதினார்.

அது போல பிரதேச மட்டங்கலில் சொல்லப்படும் சொலவடைகள் பற்றியும் யாராவது தொகுத்தால் நன்றாக இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

எழுத்தும் தகவலும் சுவையாக இருந்தன.

பழமொழிகள் குறும் கவிதைப் போல சிறிதாகச் சொல்லி பெரிதாக விளங்க வைக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//... வாசுகி said...
நீங்கள் கொஞ்சம் பழமொழிகளையும் சேர்த்திருந்தால் நாமும் படித்திருப்போம்.
பயனுள்ள இடுகை.....//

நிச்சயமாக அவ்வப்போது சில கிராம வழக்கில் உள்ள பழமொழிகளையும் அதற்கான விளக்கங்களையும் கொண்டு வருவோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..!!

கிடுகுவேலி சொன்னது…

//.. அருண்மொழிவர்மன் said...
இப்படி அர்த்தம் மாறிப்போன பல பழமொழிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். முன்பு அறிவுக்களஞ்சியம் வெளிவந்த நாட்களில் (யாழ்ப்பாணத்தில் இருந்து) சிற்பி தொடராக இவை பற்றி எழுதினார்.

அது போல பிரதேச மட்டங்கலில் சொல்லப்படும் சொலவடைகள் பற்றியும் யாராவது தொகுத்தால் நன்றாக இருக்கும்...//

ஆம் சிற்பி சரவணன் அவர்களின் அந்தக் கருத்துக்களை சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீண்டும் இங்கே பதிவிடலாம். அந்த பிரதேச சொலவடைகள் பற்றி பதிவிடலாம். நன்றி அருண்மொழிவர்மன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...!

கிடுகுவேலி சொன்னது…

//... கோவி.கண்ணன் said...
எழுத்தும் தகவலும் சுவையாக இருந்தன.

பழமொழிகள் குறும் கவிதைப் போல சிறிதாகச் சொல்லி பெரிதாக விளங்க வைக்கும்.
..//

வணக்கம் கோவி அண்ணா,
முதலில் நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். நிச்சயமாக பழமொழிகள் சில வாழ்வியலின் அடிநாதமாய் விளங்குகிறது. அதன் தத்துவங்களை சொல்லுகிறது. நாம்தான் அதை புறந்தள்ளி விட்டு செல்கிறோம்.

tharuha சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கிடுகுவேலி சொன்னது…

//... tharuha said...
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4209:2008-10-08-04-59-48&catid=125:2008-07-10-15-34-57&Itemid=86

இந்த வலைத்தளம் உதவும் இல்லையா?..//


வணக்கம் தாருகா,

உங்கள் வருகைக்கும் இணைப்புக்கும் நன்றிகள். ஆமாம் அந்த இணைப்புச்சுட்டி மிகவும் பயனுள்ளது....!நிச்சயமாக உதவும்....நன்றி

Unknown சொன்னது…

அம்சம்.... நன்பரே,1)"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்". விளக்கம்...??? 2)Could you please create or find the Tamil word for "Hello". Please.....

கருத்துரையிடுக