அன்பு நண்பா!
எங்குற்றாய் நீ....!
நீ எண்ண முடியாத தொலைவில் நான்.
உன்னைப் பற்றி நினைத்து நினைத்து இழைத்து விட்டேன் என்பது பொய்..
மேலாக ஒரு சுற்று பருத்துவிட்டேன்.
உன்னை நினைத்து நான் என்னில் வெட்கப்படுகிறேன்..
என்ன வாழ்க்கை வாழ்கிறேன் நான்.
முட்கம்பியால் அடைக்கப்பட்ட முகாமுக்குள் நீ....
முடிவில்லாத துயரத்தின் முடியில் நீ...
எதிர்காலம் பற்றி எழும் எண்ணம் எல்லாம் - இனி
ஏலாது என்ற ஏக்கத்தில் நீ..
எப்படி எல்லாம் இருப்போம் என்ற எதிர்பார்ப்பு அழிந்து
இப்படியாகிவிட்டோமே என்ற ஏமாற்றத்தில் நீ....
மூன்று நேர உணவு எல்லாம் இப்ப உனக்கு கனவு - அதிலும்
முழுமையான உணவு உன்னால் நினைக்க கூட முடியாது.
ஆனாலும் நான்..
மூன்று நேரம் மூக்கு முட்ட முழுங்குகிறேன்.
சதுர்த்தி விரதம் என்றதும் சலிக்காமல் பிடிக்கிறேன்..
உன்னை எண்ணி நான் உணவில்லாமல் ஒரு கணம் கூட இருந்ததில்லை.. வெட்கப்படுகிறேன்... வேதனைப்படுகிறேன்..
என்ன வாழ்க்கை என்று என்னையே கேள்வி கேட்கிறேன்..
ஏன் பிறந்தேன் என்றுதான் இப்பொழுதெல்லாம் என் கவலை..
களிப்பு வாழ்வில் நான் கலந்துதான் போனேன்.
விஜய் ரீவியின் விசுவாச ரசிகன் - அதை
விலக்கி விட்டு என்னால் இருக்க முடியவில்லையே.
முருங்கன், முகமாலை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என எல்லாமே
முற்று முழுதாய் போகும் போதெல்லாம்....
முழு சோகத்துடன் எல்லோரையும் எண்ணும் போது உன்னையும் எண்ணுவேன்.
எத்தனை நாள் உன் வாழ்வு பதுங்கு குழிக்குள்
எத்தனை நாள் உன் வாழ்வு உணவின்றி...
ஏவப்பட்ட எறிகணை என் மேல் விழக்கூடாது என்று
எத்தனை தரம் கடவுளிடம் இரஞ்சியிருப்பாய்...
எத்தனை தடவை கடவுளை திட்டித்தீர்த்தாய்...
நீ கடந்து வந்த உடலங்கள் எத்தனை...
நீ கட்டுப் போட்ட காயங்கள் எவ்வளவு...
அண்ணன் மீது வீழ்ந்த எறிகணை...அவனின்
அரைக்கு கீழே அள்ளிக்கொண்டு போய்விட்டாம் என்றனர்..
என்ன கொடுமையடா இது.
அவன் மிதிச்ச இடத்தில் புல் கூட சாகாதே...
அப்பாவி என்பதற்கு அகராதியே அவன்தானே
அவனை வசைபாடி இவனை வசைபாடி..
அவன் விட்ட பிழை இவன் விட்ட பிழை என
எல்லா வித்துவான்களும் எழுத்தித்தள்ளிவிட்டனர்...
அவர்களாலும் அதைத்தான் செய்ய முடியும்..
எல்லாம் வெறுமையாய் போன உணர்வில்தான் எல்லோரும்..
அழவே முடியாத இறுக்கத்தில்தான் அனைவரும்
அவ்வப்போது எட்டிப்பார்க்கும் உங்கள் நினைவால்
ஆத்திரம் அடியில் இருந்து வரும்..
கையகலாத்தன்மையில் கண்ணீரோடு அது கரைந்து விடும்..
எத்தனை எத்தனை கனவுகள்..
எத்தனை எத்தனை ஏக்கங்கள்...
எத்தனை எத்தனை தியாகங்கள்..
எல்லாம் இன்று காற்றோடு காற்றாகி கலந்து விட்டதுவே..
நண்பா..!
கனவில் உன்னை கன தடவை கண்டேன்
காணும் பொழுதெல்லாம் கண்ணீரையும் கண்டேன்.
ஏன் என்பதெல்லாம் விடை காண முடியா கேள்வி.
உன்னை நானறிவேன்...
என்னையன்றி உன்னை யார் அறிந்தாலும்
உன்னை நானறிவேன்..
அன்று உனக்கு செய்த ஒரு தப்புக்காய்
இன்றும் இப்பொழுதும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
பல்கலையின் பிரிபுவபசார விழா..
எல்லோர் கண்களும் ஆறாய் பெருகி..
எல்லோரையும் அணைத்து அழுகிறோம்.
பிரிவுத்துயரின் உச்ச நேரம்..
ஒவ்வொருவர் தோள்களிலும் ஓவென்றபடி
ஒவ்வொருவர் முகங்கள்...
இனி எங்கு காண்போம் என்ற ஏக்கம் இப்பொழுது
உண்மையாய் போனது போல
நண்பா இனி எங்கு காண்போம்....?
எப்பொழுது காண்போம்...?
எப்படி இருக்கிறாய்...
இப்போது எது உந்தன் மரம்...
எந்த மரத்தடியில் உனது வாசம்..
யார் உனது நண்பர்கள்...
யாருடன் பகிடி விடுகிறாய்...
யாரைக் கடிக்கிறாய்...
உனது கடிகளை எண்ணி எண்ணிச் சிரித்தாலும்
சிரித்து முடிக்கு முன்னம் கண்ணில் நீர்த்திவலைதான்டா..
எப்படி இருந்தாய்...!
உன்னை சுற்றி உன் கதை கேட்க ஒரு பத்து பேர்
எப்போதும் நின்றோமே...
உன்னை ஒருவனுக்கு பிடிக்கவில்லை என்றால்..
அவனுக்கு ஒருவனையும் பிடிக்காது...!
பல்கலைக்கழகம் முழுவதும் பறவைகளாய் திரிந்தோம்..
கல்லாசனத்தில் கவிழ்ந்து படுத்தோம்...
களிப்புற்றோம்...
கவலை மறந்தோம்...
விழாக்கள் என்றால் வீற்றிருப்போம்...
வீரம் காட்ட வேண்டி வந்தால் வெளுத்துக்கட்டுவோம்..
ஆடலுக்கு ஆடல் பாடலுக்கு பாடல்
பகிடிக்கு பகிடி கடிக்கு கடி
அது நம்மை விட்டு போகும் என்று தெரிந்தும் செய்தோம்..
ஆனால் இன்று எமக்கானதுதான்,
எம்மை விட்டு போகாததுதான் என்ற இருந்த
எல்லாம் இழந்து ஏதிலி பட்டமல்லவா பெற்றோம்..
போகட்டும் எல்லாம் போகட்டும்...
வெறுமையான வெளிக்குள் நாம் இப்போது...
வீசும் காற்றும் எம்மைக் கண்டதும் கனலாய் மாறுகிறது..- யாரும்
பேசும் சொற்களும் எமக்கு இயைவாக இருப்பதாய் இல்லைத்தான்..
உன்னோடு ஒன்றாய் இருந்த நண்பன் பகர்ந்தான்...
இன்றோடு உலகில் ஒரு புதிய இனம்
அநாதை என்ற பெயரோடு....!
உன்னை நினைத்து இது கட்டுரை அல்ல
கவிதை அல்ல...உனது நண்பர்கள் அத்துணை பேரின்
உள்ளக்கிடக்கை.....!
சந்திப்போமடா...
அந்தக் கல்லாசனத்தில்..
அதே களிப்புடன்..
அதே கடிகளுடன்...
அதே இனிய நினைவுகளுடன்..
கண்ணதாசன் சொன்னதை எமக்காய் இப்போது...
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் வரும் சந்திப்போம்...!
உன்னோடு உறவாடிய
நண்பன்...!
திங்கள், 6 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 கருத்துகள்:
இப்புட்டு பெரீய... கவிதை அம்புட்டும் அருமையா இருக்கு நண்பா
//
களிப்பு வாழ்வில் நான் கலந்துதான் போனேன்.
விஜய் ரீவியின் விசுவாச ரசிகன் - அதை
விலக்கி விட்டு என்னால் இருக்க முடியவில்லையே.
//
இறுதி யதார்த்தம் இதுவாகவே அமைந்து விடுமோ?
நெஞ்சு கனக்கிறது
"அவனை வசைபாடி இவனை வசைபாடி..
அவன் விட்ட பிழை இவன் விட்ட பிழை என
எல்லா வித்துவான்களும் எழுத்தித்தள்ளிவிட்டனர்...
அவர்களாலும் அதைத்தான் செய்ய முடியும்.."
கவிதை.. கவிதை..
அருமையான கவிதை..
உள்ள குமுறலை .... இல்லை உங்கள் கிறுக்கலை
உணர முடிகிறது என்னால்...
"சரிதான் போட தலைவிதி என்பது வெறும் கூச்சல்"
என்று சொன்னால் சரி என்பது பொய்த்துவிடும்...
தோல்வியே என்றும் இல்லை.
தடைகள் விலகும் என்று நம்புவோமாக
/... ஆ.ஞானசேகரன் said...
இப்புட்டு பெரீய... கவிதை அம்புட்டும் அருமையா இருக்கு நண்பா
..//
நன்றி ஞானசேகரன் வருகைக்கும் கருத்துக்கும்...ஒன்றாக படித்த ஒரு நண்பன் உள்ளே முகாமில்..அதனால் விளைந்தது தான் இது...!
//..வலசு - வேலணை said...
//களிப்பு வாழ்வில் நான் கலந்துதான் போனேன்.
விஜய் ரீவியின் விசுவாச ரசிகன் - அதை
விலக்கி விட்டு என்னால் இருக்க முடியவில்லையே.
//
இறுதி யதார்த்தம் இதுவாகவே அமைந்து விடுமோ?....//
நீங்கள் எவ்வாறு கவலைப்பட்டீர்களோ அவ்வாறுதான் நானும் கவலைப்படுகிறேன். எல்லாமும் எம்மை விட்டு போன பின்னர் இருப்புகளும் அப்படியே போய்விடுமோ என்ற கவலை...! மனதில் உள்ளது வார்த்தையாகி வலைப்பூவில் பதிவானது. அவ்வளவே...!
நெஞ்சு கனக்கிறது
//... sutharshan said...
உள்ள குமுறலை .... இல்லை உங்கள் கிறுக்கலை
உணர முடிகிறது என்னால்...
"சரிதான் போட தலைவிதி என்பது வெறும் கூச்சல்"
என்று சொன்னால் சரி என்பது பொய்த்துவிடும்...
தோல்வியே என்றும் இல்லை.
தடைகள் விலகும் என்று நம்புவோமாக...//
அப்படித்தான் எல்லோரும் நம்பிக்கையில் இருக்கிறோம்...!
தோற்றது நாமில்லை
எமைப் படைத்த இறைவா - நீ
தோற்றுப்போனாய் ....
எமைச்சூழ்ந்த இயற்கையே -நீ
தோற்றுப்போனாய் .....
எமை தாங்கும் உலகே -நீ
தோற்றுப்போனாய் ......
எமை வளர்த்த கனவே
தோற்றுப்போனாய் ......
கீதை கூறிய நீதி தோற்றது
குர்ரான் வளர்த்த ஞானம் தோற்றது
புத்தனின் தெளிந்ததத்துவம் தோற்றது
கலைஞனின் கவிதை தோற்றது
கண்ணகியின் காவியம் தோற்றது
கட்டபொம்மன் வீரம் தோற்றது
வள்ளுவனின் வரிகள் தோற்றது
தமிழ் தோற்றது தர்மம் தோற்றது
நிஜம் தோற்றது நேர்மை தோற்றது
மானம் தோற்றது மனிதம் தோற்றது
மொத்தத்தில் வாழ்தலின்
அர்த்தமே தோற்றது
இங்கு எதிலுமே ....
தோற்றது நாமில்லை ......
//.. tharuha said...
தமிழ் தோற்றது தர்மம் தோற்றது
நிஜம் தோற்றது நேர்மை தோற்றது
மானம் தோற்றது மனிதம் தோற்றது
மொத்தத்தில் வாழ்தலின்
அர்த்தமே தோற்றது
இங்கு எதிலுமே ....
தோற்றது நாமில்லை ......
..//
வணக்கம் தாருகா,
உள்ளத்தின் அனலை இங்கே வார்த்தைகளாகவும், நம்பிக்கை கீற்றுகளை இங்கே ஒளிக்க விடுவதாகவும் உங்கள் பின்னூட்டம் அமைந்துள்ளது. அருமையாக உள்ளது. நன்றி.
வணக்கம் நண்பா
எங்கே செல்வது, யாரிடம் நீதி கேட்பது, யார் நமக்கு காவல் என்று விடைதெரியாக் கேள்விகளோடு நாம் எல்லோருமே :(
//..கானா பிரபா said...
வணக்கம் நண்பா
எங்கே செல்வது, யாரிடம் நீதி கேட்பது, யார் நமக்கு காவல் என்று விடைதெரியாக் கேள்விகளோடு நாம் எல்லோருமே :(
..//
வணக்கம் கானாபிரபா,
இப்படித்தான் எல்லோரும் வலிக்கும் இதயத்தோடும், கையகலாத நிலையிலும் காலத்தை ஓட்டுகிறார்கள். நடைப்பிணமாக நாள்தோறும் நமது வாழ்வு கழிகிறது. நண்பனின் நினைவுத்துயரில் எழுந்த பதிவு!
கனக்குது... வலியது வாழும். அல்லது அழியும் - டார்வின். பலமே வாழ்வு, பலவீனமே மரணம் - விவேகானந்தர். சான் ஏற Km சறுக்கியதே...! தயவு செய்து புலத்தார் எல்லாருமா சேர்ந்து ஒரு அணுக்குண்டு போடமாட்டியளோ.....
//... OVIYA said...
கனக்குது... வலியது வாழும். அல்லது அழியும் - டார்வின். பலமே வாழ்வு, பலவீனமே மரணம் - விவேகானந்தர். சான் ஏற Km சறுக்கியதே...! தயவு செய்து புலத்தார் எல்லாருமா சேர்ந்து ஒரு அணுக்குண்டு போடமாட்டியளோ.....//
ஓவியா, நெஞ்சம் கனக்குதுதான். ஜீரனிக்க முடியவில்லை. தக்கன பிழைத்தலும் அல்லாதன மடிதலும் வாழ்வின் தத்துவமே..! அணுகுண்டு....??? போட வேண்டாம். சும்மா காட்டினாலே கருகும் தேசம் அந்த சிங்கள தேசம். பார்ப்போம்.
வணக்கம் கதியால்
//எல்லாம் வெறுமையாய் போன உணர்வில்தான் எல்லோரும்..
அழவே முடியாத இறுக்கத்தில்தான் அனைவரும்//
இந்த நிலையில்தான் எல்லாரும் இருக்கின்றோம். உண்மையில் எல்லா வார்த்தைகளும் வாய் மூடிப் போய்விட, மௌனத்தின் துணை மட்டுமே எம் கையறு நிலையை சொல்கின்றது
//... அருண்மொழிவர்மன் said...
உண்மையில் எல்லா வார்த்தைகளும் வாய் மூடிப் போய்விட, மௌனத்தின் துணை மட்டுமே எம் கையறு நிலையை சொல்கின்றது..//
உண்மைதான் நண்பரே...! எல்லாம் இருந்தும் ஏதும் இல்லா நிலை...!!
//முருங்கன், முகமாலை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என எல்லாமே
முற்று முழுதாய் போகும் போதெல்லாம்....//
பெருமூச்சுத்தான் விட முடிகிறது..............ம்
கருத்துரையிடுக