சைவம் தழைத்தோங்கும் இவ்வூரில் இருந்து திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப இவ்வூர் மக்கள் எங்கும் வியாபித்திருக்கிறார்கள். இதனால்தானன்றோ "காகம் பறவாத இடமும் இல்லை. காரைதீவான் போகாத இடமும் இல்லை" என செல்லமாக(?) சொல்வார்கள். கற்றோரும் சான்றோரும் வாழும் இவ்வூரின் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று திருவாதிரை உற்சவம் ஆரம்பமாகிறது.

இந்தியாவின் சிதம்பரத்தில் எவ்வாறு திருவாதிரை உற்சவம் நடைபெறுமோ அதே போன்று இங்கும் நடைபெறுவதால இந்த ஆலயம் ஈழத்துச் சிதம்பரம் என வழங்கலாயிற்று. கனகசபையில் வீற்றிருந்து நல்லாட்சி புரிகின்ற சிவகாமசுந்தரி சமேத சிதம்பர நடராஜப் பெருமான் இங்கும் அருளாட்சி புரிகிறார்.
அப்பர் பெருமானின் "ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொண்டது..." என்பதற்கேற்ப நடராஜப்பெருமானின் திருநடனம் புரிகின்ற அந்த திருமூர்த்தம் மிக அற்புதமானது. பலமுறை இங்கு விஜயம் மேற்கொண்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் "தான் இங்குள்ளது போன்ற அற்புதமான நடராஜர் திருவுருவத்தை எங்கும் கானவில்லை" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதே போன்ற கருத்தை தமிழகத்தின் மு. பாஸ்கரத்தொண்டைமானும் தெரிவித்திருந்தார்கள்.
இந்த ஆலயத்தில் பஞ்சரத பவனி வருடத்தில் இரண்டு தடவைகள் நடைபெறும். ஈழத்தில் பஞ்சரத பவனி ஒரு சில ஆலயங்களில் மாத்திரமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மார்கழி மாத பஞ்சரத பவனி மிக அற்புதமாக இருக்கும். காரணம் சில நேரங்களில் 1 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் தேங்கி நிற்கும். அதனூடாக தேர் பவனி வரும். அதேவேளை அடியவர்களின் அங்கப்பிரதட்சனையும் அடி அழிப்பும் தயக்கமின்றி நடக்கும்.
உலகப்புகழ் பெற்ற ஈழத்தின் தவில் வித்துவான் விசுவலிங்கம் தெட்சனாமூர்த்தி இந்த ஆலயத்தின் ஐயனார் வாசலில் இருந்துதான் சிறு வயதில் தவில் கற்க ஆரம்பித்தார். புகழின் உச்சிக்கு சென்றாலும் ஆண்டி கேணி ஐயனாரை மறக்காமல் அவர் அடிக்கடி ஆலயம் வருவார். இந்த தெட்சனாமூர்த்தி சிறுபராயத்தில் ஒருதடவை ஆலய தீர்த்தக்கேணிக்குள் (சித்தாமிர்த வாவி)மூழ்கிவிட்டார். உடனே ஆதினகர்த்த பரம்பரையை சேர்ந்த ஒருவர் குளத்தில் குதித்து அவரைக்காப்பாற்றினார். இதை உலகநாடுகளுக்கு கச்சேரிக்கு சென்ற திரும்பிய ஒவ்வொரு தடவையும் உடன் அவரை சந்தித்து கரம் கூப்பி வணங்கி மகிழ்வாராம். இதற்காகத்தான் மகன் உதயசங்கர் எப்பொழுதும் சிவன் கோவிலில் திருவிழா என்றால் மறுக்காமல் வந்து வாசிப்பார்.
தமிழகத்தின் பிரபல தவில் வித்துவான்கள் வலையப்பட்டி சுப்பிரமணியம், அரித்துவரமங்கலம் பழனிவேல், கலியமூர்த்தி தற்போது பிரபலமாக இருக்கும் திருப்புன்கூர் முத்துக்குமாரசுவாமி, வாசுதேவன் ஆகியோரும் நாதஸ்வர வித்துவான்களாகிய நாமகிரிப்பேட்டை கணேசன், காருக்குறிச்சி அருணாசலம், ராஜரத்தினம்பிள்ளை, மாம்பழம் சிவா சகோதரர்கள் என பலரும் இந்த ஆலயத்தில் நாதகாணமழை பொழிந்திருக்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார்கள் எல்லோரும் முன்னர் குளக்கோட்ட மன்னனால் திருவுத்தரகோச மங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட அந்தணர் பரம்பரையே. இதன் படி இப்போது இருப்பது 27வது பரம்பரையை சேர்ந்த சிவஸ்ரீ.வி.ஈஸ்வரக்குருக்கள் அவர்கள்.
இந்த ஆலயத்தில் தேவார திருவாசகம் பாடுபவர் ஆலயத்தின் ஆதீனகர்த்தாக்களில் ஒருவராகிய திரு.மு.சுந்தரலிங்கம் அவர்கள். அவர் தனக்கேயுரித்தான பாணியில் மிக அற்புதமாக பாடுவார். இதைக்கேட்கவே அடியவர் கூட்டம் அலைமோதும். இது கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் அற்புதமாக இருக்கும்.
அவர் பாடிய திருவெம்பாவை பாடலில் இருந்து ஒரு பாடல்......!
ஊர் இப்பொழுதே சுத்தமாக்கப்பட்டு மிக நேர்த்தியாக அழகாக இருக்கும். இனி பத்து நாளும் எல்லோரும் சைவம்தான். ஈழத்துச் சிதம்பரம் நோக்கி விசேட போக்குவரத்து சேவை நடைபெறும். இந்த பத்து நாட்களும் ஆலய மாணிக்கவாசகர் மடாலயத்தில் குறைவின்றி போதுமென திருப்திப்படும் அளவிற்கு அன்னதானம் வழங்கப்படும். இது பிறவூரில் இருந்து வரும் அடியவர்களுக்கு சௌகரியமாக இருக்கும். இப்போது முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டவருமான இந்த காரை மண் பெற்றெடுத்த மைந்தன் தியாகராஜா மகேஸ்வரன் கோவிலுக்கு என கட்டிய மண்டபத்திலும் மகேஸ்வரனின் செலவில் அன்னதானம் வழங்கப்படும். (இன்றைய தினத்திலேதான் கடந்த வருடம் கொழும்பு பொன்னம்பலவானேச்சரம் ஆலயத்தில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது இந்த இடத்தில் ஈண்டு குறிப்பிடத்தக்கது.)
இது தவிர இந்த உற்சவத்தை முன்னிட்டு காரைநகர் மணிவாசகர் சபை அந்த ஊர் மாணவர்களிடையே சமய அறிவை வளர்க்கும் நோக்குடன் பல் போட்டிகளை நடாத்தும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் கடைசி மூன்று நாள் நடக்கும் மணிவாசகர் விழாவில் வழங்கப்படும். இந்த மணிவாசகர் விழாவில் ஈழ அறிஞர்கள் மட்டுமல்ல தமிழக அறிஞர்களும் கலந்து கொண்டு சமய, தமிழ் அறிவை போதித்திருக்கிறார்கள்.
இம்முறையும் திருவிழா களைகட்டும் என எதிர்பார்க்கிறேன். இம்முறை ஆலயத்தில் நிறைய புனருத்தாரணம் நடைபெற்றுள்ளது. தில்லைக்கூத்தன் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.
"நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!!"
21 கருத்துகள்:
அருமையான பதிவும், பாடலும், மிக்க நன்றி நண்பா, ஈழத்துச் சிதம்பரத்தை இன்னும் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை.
அருமையான பதிவு நண்பரே..... ஈழத்து சிதம்பரத்தினை படம் பிடித்து காடியுள்ளீர்
சிறப்பான பதிவு. நேரில் பார்ப்பது போலச் சித்தரித்து உள்ளீர்கள்.
GREAT DOCUMENTATION. KEEP EVER.
ஆச்சாரமான பதிவுக்கு அசைவமாக பதிலிடவேண்டிய சுழலுக்கு மன்னிக்கவும் ( எதன் காரணம் என்பதை எவருக்கும் சொல்லிப் புரிய வைக்க தேவையில்லை.) ஒரு புதிய வருடத்தின் முதல் தமிழ் பதிவாக சைவ மரபு ரீதியான உங்கள் பதிவினை கண்டது மனதுக்கு இதமாக உள்ளது. இதுபோன்ற ஒவ்வொரு நன்னாளிலும் அவரவர் ஊரில் அவரவர் கோவிலின் ஞாபகங்கள்...... நன்றி உங்கள் பகிர்தலுக்கும் தேடலுள்ள பதிவுக்கும்.. கோவில் என்பது தனியே இறைவன் மற்றும் மதம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது எங்கள் நினைவுகளில் வாழும் பல ஞாபகங்களின் தூய்மையான சாட்சி.. ஓரிரு நிமிடங்களேனும் எம்மை அதில் நிறுத்தியம்மை தொடர்பில் புனித பைபிள் வாசகம் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன் "ஒரு கலசம் நீர் தரப்பட்ட உதவியை கூட ஆண்டவன் மறப்பதில்லை.".
வணக்கம் கானா பிரபா,
எல்லோரும் கசூரினா பீச் சென்று இருப்பார்கள். ஆனால் ஈழத்துச் சிதம்பரம் சென்றிருக்க மாட்டார்கள். உங்களின் அந்தக் கனவு நிச்சயம் வெற்றி பெற என பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு. உங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.
வணக்கம் கவின்,
நிச்சயமாக இன்னும் இன்னும் சுவையாக உள்ளன. ஆனால் பத்தியின் நீளம் கருதி குறைத்து விட்டேன். தேர்த்திருவிழா அன்று மீண்டும் சந்திப்போம். நன்றி உங்கள் வருகைக்கும் இடுகைக்கும்.
வணக்கம் டாக்டர் ஐயா, உங்கள் வருகைக்கு நன்றி. உங்களைப் போன்றவர்களின் வருகை என்னை மேலும் எழுத தூண்டுகிறது.
வணக்கம் ஜெயந்தன்,
நிச்சயமாக இப்படியான முயற்சிகள் இன்னமும் தொடரும். நன்றி உங்கள் வருகைக்கும் இடுகைக்கும்.
வணக்கம் அனானி,
நிச்சயமாக. இந்தக் கவலை எனக்கு நிறையவே உண்டு. தென் தமிழீழத்தின் பதிவுகள் என் கண்ணுக்கெட்டின வரையில் குரைவாகவே கருதுகிறேன். அது தப்பு தாராளமாக வருகிறது என யாரும் சொல்லி இணைப்புகளை தந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எமது பண்பாடு, கலாசாரம் போன்ற விழுமியங்களை நாம் காக்கவில்லை என்று சொன்னால் வேறு யார் காப்பாற்றுவார்கள். சிறிதோ பெரிதோ, சரியோ தவறோ முயற்சி செய்தால் உங்கள் போன்றவரின் ஆதரவோடு எமது விழும்மியங்களை ஆவணமாக்கலாம்.
ஆழ்ந்த உங்கள் கருத்துக்கு நன்றி.
Hi
Nice
Keep it up!!
Write about the light house!
The ferry!
மிக அழகாய் விவரித்திருக்கிறீர்கள் ஈழத்து சிதம்பரத்தின் எழில்மிகு உற்சவத்தினை போட்டோக்களுடன்..!
புதிதாய் தெரிந்துக்கொண்டேன்!
நன்றி!
//ஒவ்வொரு நன்னாளிலும் அவரவர் ஊரில் அவரவர் கோவிலின் ஞாபகங்கள்...... நன்றி உங்கள் பகிர்தலுக்கும் தேடலுள்ள பதிவுக்கும்.. கோவில் என்பது தனியே இறைவன் மற்றும் மதம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது எங்கள் நினைவுகளில் வாழும் பல ஞாபகங்களின் தூய்மையான சாட்சி..///
அத்தனையும் அருமை!
நன்றி அன்பரே, பெறுமதியான பதிவுகள். என்று காணலாம் தில்லைக்கூத்தனை அதே மன நிலையோடு.....??
புத்தாண்டு கழிந்து இன்றுதான் வலையில் சற்று நேரம் ஒதுக்க முடிந்தது. நல்ல் பதிவு. இந்த கோஉஇல் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சென்று வர முடியவில்லை. காலம் கனியும் போது அது நிறைவேறும் என்றெண்ணுகிறேன்.
மேலும், சுட்டிபுரம் அம்மன் கோயில் பற்றியும் அஙு சீர்காழி வந்து பாடிய நிகழ்வு பற்றியும் எழுதங்களேன். 95 இடப்பெயர்வில் அந்த ஆலயத்துடன் ஒரு பந்தம் ஏற்பட்டது
வணக்கம் பொலிவு, உங்கள் வருகைக்கு நன்றி. ஈழத்துச் சிதம்பரத்தின் தில்லைக்கூத்தனை காண கண் கோடி வேண்டும். அத்தனை அழகு. காலம் கனியும். அன்று கூத்தனை கண்டு கண்ணீர் சொரிவோம்.
வணக்கம் அருண்மொழிவர்மன்,
உங்கள் வருகைக்கு நன்றி. நிச்சயமாக ஈழத்துச்சிதம்பரம் ஆலயம் நிறைய பேர் கேள்விப்பட்டாலும் கூட "கசூரினா பீச்" ற்கு போய் வருவதோடு சரி. ஒரு மார்கழி தேர்த்திருவிழா அன்று செல்ல வேண்டும். நீங்கள் சென்று அதைப்பார்க்க தில்லைக்கூத்தன் அருள் புரிவாராக.
கதியால்,இன்றுதான் கிடுகுவேலி இரித்து வந்தேன்.அழகான குடில்கள்.
கொஞ்சம் தங்கிப் போகலாம்.இனி அடிக்கடி வருவேன்.
அருமையான பதிவு.நான் ஒருமுறை காரைநகர் சிவன்கோவில் போயிருக்கிறேன்.திருவெண்பாவையும் காதுக்கு சுகம் சேர்த்தது.எனக்குத் தெரிய காரநகர் கணேஸ் என்று சொல்லப்படுகிற நாதஸ்வரக் கலைஞர் பிற்காலங்களில்
கோண்டாவிலில் இருந்தார்.அவரது மகள் கூட,நாதஸ்வரம் அளவெட்டி பத்மநாதனின் மகனைத் திருமணம் செய்திருந்தார்.
வணக்கம் ஹேமா, நன்றி உங்கள் வருகைக்கு. ஆமாம். அந்த நாதஸ்வர வித்துவான் பெயர் என்.கே.கணேசன். மிகச்சிறந்த அற்புதமான கலைஞன். மிகச்சிறந்த ஒரு நல்ல மனிதன். எதற்கும் கோபப்படாத ஒரு பண்பட்ட உத்தமன். என்.கே.பத்மநாதனின மகனை இவரின் மகள் மணம் முடித்தார். மணமாகி சில வருடங்களில் மகள் இறந்துவிட்டார். அர்ஜுன் என்ற மகனுடன் தந்தை இப்போது பிரான்ஸ்சில் இருக்கிறார். ஈழத்துச் சிதம்பரத்தில் திருவெம்பாவை கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க விளைவார்கள். இந்த என்.கே.கணேசன் ஈழத்துச் சிதம்பரத்தின் ஆஸ்தான வித்துவான். இப்பொழுது அவர் மகன் பவப்பிரியன் ஈழம் அறிந்த ஒரு மிகச்சிறந்த கலைஞன்.
கதியால் நல்ல தகவல்கள்... நல்லதொரு ஆவணப் பதிவு.. எங்கள் ஊரின் சிறப்புக்களைத் தொடர்ந்தும் பதிவாக்கித் தாருங்கள்..இந்த ஆலயத்திற்குச் செல்லும் அதி பாக்கியம் இவ் அடியவனுக்குக் கிட்டவில்லை நண்பரே! என்ன செய்வது????
வணக்கம் கமல்,
வருகைக்கும் இடுகைக்கும். நிச்சயமாக இங்கே எல்லாம் முடிந்தவரை பதியப்படும். உங்கள் ஊர் என்றீர்கள். காரைநகர் உங்கள் ஊரா? அல்லது பொதுவாக சொன்னீரா? நேற்றைய தினம்தான் திருவாதிரை உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்று முடிந்தது. www.karainews.com இந்த சுட்டிக்கு சென்றால் நீங்கள் நிழற்படங்களை பார்வையிடலாம். நன்றி.
கருத்துரையிடுக