செவ்வாய், 2 டிசம்பர், 2008

எமது வாழ்வின் பொற்காலம்....!

பொதுவாகவே தமிழர் வாழ்வை இனப்போராட்டம் வெகுவாகவே பாதித்துள்ளது. அவர்கள் இந்த பேரினவாதிகளால் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காது. இருந்த போதும் அவர்கள் விழ விழ எழும் மனவலிமை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த போராட்ட காலங்களில் எல்லாம் மக்கள் தமது கவனத்தையெல்லாம் ஆண்மீகத்திலும், உள்ளூர் விளையாட்டுக்களிலும் செலுத்தினர். குறிப்பாக 1995ம் ஆண்டு அந்த பாரிய இடப்பெயர்வின் முன்னரான காலத்தின் பதிவுகளை மீட்டலாம் என நினைத்தேன்.

யாழ்ப்பாணம் தனித்து விடப்பட்ட மாதிரியொரு உள்ளுணர்வு. அந்த காலங்களில் நடைபெறும் கிரிக்கட் போட்டிகள், உதைபந்தாட்டப் போட்டிகள், கரப்பந்தாட்டப் போட்டிகள், மாட்டுவண்டிச்சவாரி என்பன மக்களின் மனதிற்கு ஒரு ஆறுதலை தந்து யுத்த வடுக்களை ஓரளவேனும் மறக்கச் செய்தது. இப்பதிவில் கிரிக்கட் போட்டிகள் பற்றிய நினைவுகளை வருடுவோம்.

அன்றைய காலங்களில் நிறைய போட்டிகள் நடைபெற்றன. நிறைய தரமான வீரர்கள் இருந்தார்கள். தரமான ஆட்டங்களை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அவையெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது. இதுவும் ஒரு திட்டமிட்ட அழிப்பா என புரியவில்லை. அப்போதைய துடுப்பாட்ட போட்டிகளில் சில அணி வீரர்கள் காற்காப்பு (Pads)களில் கயிறு அல்லது துணி கட்டியே துடுப்பெடுத்தாடுவார்கள். இது அப்போதைய வசதியின்மையை காட்டியது. சில வேளைகளில் ஆட்டமிழந்த வீரர் அரங்கு வந்து தனது காட்காப்பு,கையுறை,துடுப்பு என்பவற்றை கொடுத்தால்தான் புதிய துடுப்பாட்டவீரர் உள்ளே நுழைய முடியும். அப்படியொரு சாபக்கேடு இருந்ததை போட்டிகளை நன்கு கவனித்தவர்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஒரு வீரரே தனக்கு தேவையான எல்லா உபகரணங்களையும் வாங்கக்கூடிய வசதி இருந்தும் விளையாட்டின் தரம் முன்பை விட அதழபாதாளத்திற்குள் போய் விழுந்து விட்டது. ஏன் என்பதை சமபந்தப்பட்டவர்கள் ஆராய வேண்டும். இதற்கு ஒரு சான்று யாழ்ப்பாணத்தின் பிரபல தேசிய பாடசாலை 19வயதிற்குட்பட்டவர் அணிக்கு விளையாடுவதற்கு வீரர்களை தேடி எடுக்க வேண்டிய நிலை. அதிலும் நன்றாக விளையாடக் கூடியவர்கள் அணியை திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதனால் பாடசாலையின் விளையாட்டு முதல்வர்(Prefect of Games- POG) வீரர்களை வெருட்டுவார் "நீ வந்து விளையாடினால்தான் உன்னை க.பொ.த(உ/த) [A/L Exam] பரீட்சை எழுத விடுவோம்." இப்படிதான் அந்த ஆண்டில் அணிக்கு வீரர்கள் தெரிவானார்கள். சிலமாணவர்கள் சிந்திப்பதுண்டு எமது ஒரே ஒரு சொத்து கல்வி. அதிலும் க.பொ.த(உ/த) வாழ்வின் ஒரு மைல்கல். அதை தவறவிட்டால் தமிழனை பொறுத்த வரையில் எல்லாவற்றையும் தவறவிட்ட உணர்வுதான் மிஞ்சும். அப்படிப்பார்க்கின்ற போது அவர்கள் சிந்தனை வாஸ்தவம்தான். ஆனால் 95ற்கு முற்பட்ட காலங்களில் எல்லாம் இவ்வாறில்லை. வீரர்கள் முண்டியடித்துக் கொள்வார்கள். திறமை இருந்தும் வாய்ப்புக் கிடைக்காமல் இருப்பார்கள். இதனால்தான் அன்றைய காலங்களில் ஒரே அணி தனது பெயருடன் 'A' அணி, 'B' அணி என்ற பெயருடன் போட்டிகளில் பங்குபற்றும்.

ஒரு வருடத்தில் நிறைய சுற்றுப்போட்டிகள் நடைபெறும். வருட தொடக்கத்தில் கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் நடாத்தும் விக்ரம்-ராஜன்-கங்கு('கங்கு' நினைவுப் பெயர் 2000ற்கு பின் இணைக்கப்பட்டது) ஞாபகார்த்த சுற்றுப்போட்டி இடம்பெறும். தொடர்ந்து கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் நடாத்தும் KCCC வெற்றிக்கேடயம், ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சுற்றுப்போட்டி, சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் டொனால்ட்கணேஷகுமார் ஞாபகார்த்த சுற்றுப்போட்டி, சில வேளைகளில் சில கழகங்கள் நடாத்தும் சுற்றுப்போட்டிகள் என கிரிக்கட் போட்டிகள் களைகட்டும். இதில் டொனால்ட்கணேஷகுமார் ஞாபகார்த்த சுற்றுப்போட்டி மட்டுமே 50 ஓவர்களை கொண்டதாக அமைந்தது. ஏனையவை எல்லாம் 30 ஓவர்களை கொண்ட போட்டிகள். குறிப்பாக யாழ்.இந்துக் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போது ரசிகர்களின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் நகரின் மத்தியில் இருப்பதால் பல்வேறு தேவைகளுக்கு வருபவர்கள் கூட சற்று நேரம் நின்று போட்டியை கண்டு களித்து ஓரளவு ஆறுதல் அடைவார்கள்.

போட்டிகள் எல்லாமே வார இறுதி நாடகளில் நடைபெறுவதால் மாணவர்களின் வரவும் அதிகமாக இருக்கும். தனியார் கல்வி நிலையங்களில் போட்டி நடைபெறும் போது வரவு குறைவாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக எடிசன் அக்கடமி, மணி கல்வி நிறுவனம், விக்னா கல்வி நிறுவனம், என எல்லாம் சற்று வெறிச்சோடியே இருக்கும். ஒரு சில மாணவர்கள் மட்டும் செல்வார்கள். ஆசிரியர்கள் சில வேளைகளில் தங்கள் பலத்தை காட்ட அன்றைய தினம் அதிகமாக கற்பிப்பார்கள். அன்றைய வகுப்பு குறிப்பு(Notes) பின்னர் எடுக்கலாம். ஆனால் போட்டியில் அடிக்கும் 'சிக்ஸர்' பிறகு காணமுடியுமா என்ன?மைதானத்தினை சுற்றி இருக்கும் மலைவேம்புகளுக்கு கீழ், வீட்டு மதில்களின் மேல், கஸ்தூரியார் வீதியில் அமைந்த அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் மேல், என ரசிகர்களின் இருப்பிடங்கள் பார்க்க அலாதியானது. குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட ரசிகர்களின் அளவுதான் அதிகமாக இருக்கும். அவர்களின் 'சார'க்கட்டும் அவர்களின் நட்புவலைகளும் பார்க்க ஒரு பரவசத்தை தரும். ஒவ்வொருவரும் தமக்கென்று ஒரு அணியை தம்முடைய அணியாக வரித்துக் கொள்வார்கள். பொதுவாக யாழ்.மாவட்ட அணிகள் பாடசாலையை மையமாக கொண்டே இருக்கும். அந்தந்த பாடசாலைகளின் பழைய மாணவர்களே அந்த அணிகளில் அங்கம் வகிப்பார்கள். எனவே மாணவர்களின் ஆதரவு தமது பாடசாலையை பின்புலமாக கொண்ட அணிக்கே இருக்கும். எனவே மாணவர் அல்லாத ரசிகர்கள்தான் முக்கியமாக இருந்தனர்.

அங்கே போட்டிகள் நடைபெறும் போது மணியண்ணை 'காரம்' சுண்டல் (கரம் சுண்டல்) மற்றும் கிளிச்சொண்டு மாங்காய் (வாய் ஊறுகிறதா? அதுதான் மாங்காய்) விற்பார். அவரது தள்ளுவண்டியில் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் கிரிக்கட் போட்டி நடைபெறுவது பொன்ற ஒரு படம் வரையப்பட்டிருக்கும். அவர் விற்கும் அந்த மாங்காய் எல்லாப்பக்கத்திலும் சிறு கீறுகளாக வெட்டி அதற்கு உப்பும் தூளும் கலந்த கலவையை கொட்டி தின்னும் போது நாம் ஏதோ இவ்வுலகில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறோம் என்றதொரு மாய உணர்வு. அப்போதெல்லாம் இதுதான் எமக்கு உலகமாக இருந்தது. என்ன செய்வது எமக்கு அந்த நேரங்களில் எதையும் சிந்திக்கும் ஆற்றல் இருக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீரரை பிடிக்கும். சில வீராகளின் அதிரடி பிடிக்கும். சில வீரர்களின் துல்லியமான பந்து வீச்சு பிடிக்கும்.


பொதுவாக அந்தக்கால கட்டத்தில் ஷப்றா, ஜொனியன்ஸ், சென்றலைட்ஸ், பல்கலைக்கழக அணி, ஜொலிஸ்ரார், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி (KCCC) , மானிப்பாய் பரிஷ், பற்றீசியன்ஸ், ஸ்ரான்லி, தெல்லிப்பளை கிறாஸ்கொப்பர்ஸ், மல்லாகம் RDS , வட்டுக்கோட்டை ஒல்ட்கோல்ட்ஸ், மேலும் சில அணிகள் சில சுற்றுப்போட்டிகளுக்காக மட்டும் களம் இறங்கி விளையாடும். ஒவ்வொரு அணியிலும் ஒரு சில பிரபலம் வாய்ந்த வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இப்பொழுது எங்கு இருக்கிறார்களோ தெரியாது. சில வேளைகளில் அவர்கள் கூட இதனை வாசிக்கலாம். அந்த வீரர்கள் எல்லாம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்கள்தான். இவர்களுக்கென்றே சில ரசிகர்கள் வட்டம் இருக்கும். பொதுவாக 40 வயதை தாண்டிய ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்கமுடியாதது. வீரர்கள் ஆட்டமிழந்தால் அவர்களின் பிரதிபலிப்புகள் சுவாரசியமாக இருக்கும். அவர்கள் உச்சு கொட்டுவதும், அவர்களின் ஏமாற்றங்களும் முகத்தில் தெரியும்.


அந்தக்காலத்தில் விளையாடி ரசிகர்களின் இதயம் வென்ற சில பிரபலங்கள் இவை. 1991ம் ஆண்டிற்கு பின்னராக இருந்தவர்களில் எனது ஞாபகத்தில் வந்தவர்கள். சில பிரபலங்கள் நிஜமாகவே ஞாபகங்களுக்கு அப்பால் சென்று விட்டார்கள்.
ஜொனியன்ஸ் அணியில் அப்போது சூரியகுமார்,பிரஷாந்தன், காண்டீபன்,பரிசித்து,நரேஷ், அகிலன்,சிவசுதன், (நரேஷ், அகிலன்,சிவசுதன் இவர்கள் பல்கலைக்கழக அணியிலும் அங்கம் வகித்தவர்கள்) இன்னும் பலர் எனது ஞாபகங்களுக்கு எட்டாமல் உள்ளனர். (தெரிவித்தால் அதனை நன்றியுடன் இணைத்துக் கொள்வேன்).
நினைவுகள் வருடப்படும்......................

6 கருத்துகள்:

அருண்மொழிவர்மன் சொன்னது…

ஒட்டுமொத்தமாகவே அங்கிருக்கும் தற்போதைய நிலை மிகுந்த மன உளைச்சலை தருகின்றது. அதற்கெல்லாம் மருந்து அந்த அழகிய நாட்களின் மீளும் நினைவுகள்தான்.

93 முதல் 95வரை இப்படியான எத்தனையோ ஆட்டங்களை மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்துபார்த்தவன் நான். அதிலும் யாழ் இந்துவின் ஸ்ரீகுமார், ஷன் வரதன், நரேன் இவர்களின் தீவிர ரசிகன் நான். எம்மைவிட சில ஆண்டுகளே மூத்தவரான ஸ்ரீகுமார் எனக்கும் , நான் அவருக்கும் அறிமுகம் உள்ளவர்கள் என்பதே அப்போது எனக்கு பெருமிதமாக இருந்தது. 2 ஆண்டுகளின் முன்னர் அவர் கனடா வந்தபோது அவர் கவர் ட்ரைவ் செய்து அடித்த 2 நான்குகளும், ஹூக் பண்ணி அடித்த 6களும் என்னை சில நாட்களுக்கு அதே 14 வயதில் வைட்திருந்தன

நீங்கள் சொன்ன பிரஷாந்தன், நவாலி, நவீன், மற்றும் சொனி போன்றோரின் ஆட்டங்களை அவ்வப்போது கனடாவிலும் பார்ப்பது வழக்கம்....

மீட்டுதந்த நினைவுகளுக்கு நன்றிகள்

கிடுகுவேலி சொன்னது…

நன்றி அருண்மொழிவர்மன். ஆம் அந்த ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக வீரர்கள் பற்றிய பதிவு விரைவில். நிச்சயமாக இவை எல்லோர் மனதிலும் பதிந்த ஒன்று. மீட்டுத்தர வேண்டும் என்ற நீண்ட நாள் அவா! இன்னும் வரும். வரவிற்கும். இடுகைக்கும் நன்றிகள்.

கானா பிரபா சொன்னது…

மறக்க முடியுமா அந்த நினைவுகளை, உதயன் சஞ்சீவியில் எல்லாம் தலைசிறந்த அணியைத் தேர்வு செய்யும் போட்டி எல்லாம் இருந்ததே. நீங்கள் குறிப்பிட்ட அகிலன், முரசொலி ஆசிரியர் ஒரே மகன் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

அழகான நினைவுகள் வாசிக்கும் போதே ஏக்கம் வருகின்றது.

தமிழ் விரும்பி சொன்னது…

நன்றி கானா பிரபா. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

ஆம் அகிலன் அவர்கள் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியல் துறையில் ஒரு விரிவுரையாளராக இருந்தவர். இலண்டனில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். தன்னடக்கமான அற்புதமான மனிதர். இப்பொழுது கனடாவில் இருக்கிறார்.

அந்த அழகிய நிலாக்காலம் எப்பொழுதும் மனதை வருடும். நெகிழச் செய்யும். தொடர்ந்தும் வரும். ஆதரவு எப்பொழுதும் தேவை.

பெயரில்லா சொன்னது…

I too can’t forget those days, the old days when we cut classes and enjoyed almost all the series which took place during the golden period time…But the poor fellows of these days can’t even understand those even if you explain…Once again many thanks to you my dear frnd.

பெயரில்லா சொன்னது…

R u talking abt the suriyakumar anna who played in 91. We were his kutti fans. I still remember his "adi". And I guess, kandi anna is kannadi kandi anna. Some masters son I think. I forgot. But, I remember his name.

Central college captain - 95 - Aagash (??!!??) was good too. I remember how we go crazy during the big match. Central annakal used to put their flag on our hostel roof then st.johns annakal come n shout at us for not removing it. those silly annakal dun even realize that we girls cant climb the roof.

They remove it and in an hour central annakal come n put their flag again.

Central guys even made us remove our ties as ours n st.johns ties are just the same. Then st.johns come & bug us to wear it. God we were like a mathalam u know.

Good old days

கருத்துரையிடுக