ஆழிப்பேரலை அடித்து இன்றுடன் 4 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும் அது தந்த வடுக்களும் துயரங்களும் இன்னமும் ஆறாமல் மனங்களில் உள்ளது. மீள் கட்டுமானம் இன்றியும் எமது மக்கள் இன்னும் சொல்லொனாத்துயரத்துள். அதன் நினைவாக இந்தப்பதிவு.
ஏய் சுனாமியே !
நின்னை நினைக்கையில்
நெஞ்சு வெடிக்குது.
அன்னை தமீழீழம்
ஆ... வென்று அலறுது.
இதற்கு முன் எப்போதும் - உனை
அறிந்திலோம்
இனிமேல் ஒருபோதும் - உனை
மறக்கிலோம்.
இந்தமண்ணில் இனவாதம்
கால் நூற்றாண்டில்
காவு கொண்டதில் பாதியை – நீ
கால் மணி நேரத்துள்
கவர்ந்து சென்றாயே!
சொத்தோடு சேர்த்து
எம்மினத்தை சுத்தமாய்
துடைத்து விட்டாய்.
ஆர்ப்பரிக்கும் கடலே!
உனைஅம்மா கடல்தாயே – என
ஆராதனைகள் செய்தோமே
இன்று
ஐயோ என அழவைத்த
அரக்கியாகி விட்டாயே!
பெற்றதுகளை, பெற்றவர்களை
பிரித்துச்சென்று – மற்றோரை
பித்தராக்கி விட்டாயே!
கட்டடங்கள், களஞ்சியங்கள்
கல்விச்சாலைகள்
கல்வீடுகள், களிமண்வீடுகள் - என
எல்லாம் கரைத்து - இன்று
கண்ணீரைத் தந்தாயே!
வந்து பார் !
பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரை - இன்று
பொலிவிழந்து போச்சு.
இதுவரையும் இனிமேலும்
நிம்மதியும் இல்லை.
நித்திரையும் இல்லை.
ஒரு புறம்
இனவாதம் எம்மை
அணுஅணுவாய் அழிக்க
இயற்கை நீயோ – எம்மை
அப்படியே முழுங்கினாயே!
பிஞ்சுகள் , காய்கள்,கனிகள் - என்று
மொத்தமாய் உண்டுவிட்டு
மிச்சமாய் மரத்தை - ஏன்
விட்டு வைத்தாய்?
வெஞ்சமராடி வெற்றிகள் பெற்றது - உனக்கு
பிடிக்கவில்லையா?
ஏ கடலே!
இத்துடன் நிறுத்து!!
இனியும் வேண்டாம் இந்த அழிவு.
அந்நியர் ஆக்கிரமிப்பால்
அழிந்து அழிந்து
நொந்து போனது எம்மினம்.
இனவாதத்துடன்
போட்டி போட்டு – இயற்கையே
நீயும் வதைக்காதே!
கடல் தாயே!
எம்மை வாழவிடு
என்றும் உமைப் பணிவோம்!
(2004 ம் ஆண்டின் சுனாமிக்கு பின்னரான மீட்புப்பணியில் நின்ற பின்னர் ஏற்பட்ட தாக்கத்தில் கிறுக்கியது....)
இதில் இருக்கும் பாடல் தாயகத்தில் இருந்து மலர்ந்த ஒரு பாடல். எத்த்னை பாடல்கள் சுனாமிக்கு என வந்தாலும் இந்தப்பாடல் என் மனதை எப்போதும் பிழியும்.
பாடியவர் : வசீகரன்
பாடல் : கலைப்பருதி
இசை : இசைப்பிரியன்
|
19 கருத்துகள்:
4 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் பலர் இன்னும் அதன் பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பதே உண்மை. உங்கள் வரிகள் உணர்வு பூர்வமான வரிகள்.
நீங்கள் சொன்ன பாடலை கேட்டிருக்கிறேன். அதுபோல வைரமுத்துவின் வரிகளில் வெளியான வீழமாட்டோம் தொகுப்பிலும் நல்ல பாடல்கள் உள்ளன
நன்றி அருண்மொழிவர்மன், ஆழிக்கடல் பேரலை அழித்த ஒரு இடத்தில் மீட்புபணிக்காக சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 10நாட்கள் அந்த இடத்திலேயே இருந்தேன். அவ்விடத்து மக்களின் உணர்வுகளுடன் சங்கமித்துவிட்டோம். அவைகள்தாம் இந்த தாக்கத்தை தந்தன.
//பெற்றதுகளை, பெற்றவர்களை
பிரித்துச்சென்று – மற்றோரை
பித்தராக்கி விட்டாயே!
கட்டடங்கள், களஞ்சியங்கள்
கல்விச்சாலைகள்
கல்வீடுகள், களிமண்வீடுகள் - என
எல்லாம் கரைத்து - இன்று
கண்ணீரைத் தந்தாயே!
///
மிக குறைவான நேரத்தில் எத்தனை
எத்தனையோ பேர்களை தம் உறவுகளை இழந்து நிற்கவைத்த ஆழிப்பேரலை
இந்த கோரம் இனி ஒரு பொழுதும் நிகழாது இருக்கவும்,இறந்தவர்களுக்கும் இறைவனிடம் பிரார்த்திர்ப்போம்!
பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரை - இன்று
பொலிவிழந்து போச்சு.//
உணர்வின் வரிகள் மனதை உருக்கிறது.... ''பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பொங்கும் கடல் வழங்கள்......
மேலே தவறு இடம் பெற்று விட்டது.. அது வழங்கள் அல்ல வளங்கள்.....
வணக்கம் ஆயில்யன், வருகைக்கு நன்றி! நாம் வீழமாட்டோம் என்பதல்ல....விழ விழ எழுவோம். அதுதான் எமது வரலாறு. எத்தனை துயரங்கள் தந்த தினம். மௌன அஞ்சலிகள் தவிர எம்மால் என்ன முடியும்?
வணக்கம் கமல், "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பொங்கும் கடல் வளங்கள் பொலிந்திருக்கு....." இந்தப் பாடல் வரிதான் எனக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இன்று பொலிவிழந்து போச்சு என வரக்காரணம். நன்றி வருகைக்கு!
சத்தியமான உண்மை. இதில் கொடுமை என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில் எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு. இப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS) அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service" யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணையதள முகவரி http://www.ina.in/itws/
குறிப்பு : இந்த பதிவில் http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html இலங்கையை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்டிருந்தேன். இதுவரை கிட்டவில்லை. மேலும் இலங்கையை சுனாமி இன்னொரு முறை தாக்கினால் அங்கு வாழும் தமிழர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். காரணம் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிப்பிடம் கடலை ஒட்டியே இருக்கின்றது. என்னிடம் இலங்கையை சார்ந்த செல்லிட பேசி எண்கள் வெறும் 5 (ஐந்து) தான் உள்ளது.
with care and love,
Muhammad Ismail .H, PHD
வணக்கம் இஸ்மாயில், நிச்சயமாக இந்த அனர்த்தத்தின் வலி இப்போது எமக்கு நன்கு புரியும். இனிமேலும் இப்படி நடைபெறாமல் இருப்பதற்கு தொடர்பாடலே அவசியம். உங்களின் ஆக்கபூர்வமான முயற்சிக்கு எங்களின் மனப்பூர்வமான ஆதரவு என்றும் இருக்கும். நன்றி. வருகைக்கும் இடுகைக்கும்.
முன்பு ஒருமுறை கலங்கிய கண்கள் மீண்டும் ஒரு முறை கண்களை கலங்க வைத்து விட்டன உங்கள் கவிதை . மறக்கத குடாத நிகழ்வுகளை மிண்டும் நினைவுபடுத்தியமைக்கு உங்கள் தளம் எனக்கு உதவி செய்துள்ளது. உங்கள் சேவை தொடர நல் வாழ்த்துக்கள்.
வணக்கம் நெருப்பு. உங்கள் வருகைக்கும் இடுகைக்கும். நிச்சயமாக அது ஒரு இதயத்தை பிழியும் நிகழ்வு.
\\இதற்கு முன் எப்போதும் - உனை
அறிந்திலோம்
இனிமேல் ஒருபோதும் - உனை
மறக்கிலோம்.
\\
அருமையானா கவிதை
சுனாமி எங்கள் இதயங்களில் பெரும் வடு ஒன்றினை கீறிவிட்டு சென்றிருக்கிறது
வணக்கம் கவின்! சுனாமி முன்னர் பலதடவைகள் பல இடங்களை தாக்கி இருந்தாலும் நாம் இதன்போதுதானே அறிந்தோம். "அன்பே சிவம்" படத்தில் கமல்ஹாசன் சுனாமி பற்றி குறிப்பிட்டது கூட இந்த அனர்த்தத்தின் பின் தானே உணர்ந்து கொண்டோம். வருகைக்கும் இடுகைக்கும் நன்றி!!!
Nice
My worries r not the natural disasters but the man made war kills still thousands of the people.
வணக்கம் குருபரன்,
நிச்சயமாக இனவாதம் எம்மை அழிக்கும் போது வருத்தமாக இருந்தாலும் வெளியே சொல்ல முடியாத நிலை. காலம்தான் இவற்றிற்கு பதில் சொல்ல வேண்டும். நன்றி உங்கள் வருகைக்கும் இடுகைக்கும்.
வணக்கம் நண்பா
ஆழிப்பேரலை தந்த வடுக்கள் மாற யுகங்கள் எடுக்கும், உங்கள் வரிகள் அந்த ரணங்களை காட்டுகின்றன
26-12-2004 அந்த நாளை மறக்க நினைக்கின்றேன். ஆனால், மறக்க முடியாத சொந்தங்களின் நினைவுகள் வந்து என் நெஞ்சில் பாரமாக அழுத்துகின்றன.
இப்பாடலினைக் கொண்ட வீடியோக் காட்சிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. முழுக்க முழுக்க முல்லைத்தீவு, வடமராட்சிகிழக்கு பகுதி மக்களின் அவலங்களைத் தாங்கி வந்துள்ள காட்சிகள் எம்மக்களின் சோகங்களைப் பேசுகின்றன.
வணக்கம் கானாபிரபா!
நிச்சயமாக அது பெரும் வடு. பனையால விழுந்தவனை மாடேறி மிதித்தாற் போல் யுத்த வடுக்களை தாங்கி நின்ற எம்மை இயற்கையும் உதைத்தது.
பெரும் அழிவை சந்தித்த கிழக்கின் ஒரு பகுதியில் மீட்புப்பணிக்காக சென்றிருந்தேன். அது தந்த நினைவு வலிகள்தாம் இவை.
நன்றி பிரபா வருகைக்கும் இடுகைக்கும்.
வணக்கம் ஆதிரை,
இதே போல இன்னுமொரு தாயக பாடல் வந்தது "ஏனோ இடி விழுந்தது எந்தன் நெஞ்சினில்...". ஒரு சிறுமி அனாதையாக உணர்ந்து பாடுவது போன்று காட்சியமைக்கப்பட்ட ஒரு கானொளிப்பாடல்.
விழ விழ எழுவோம்!!!!
நன்றி ஆதிரை வருகைக்கும் இடுகைக்கும்.
கருத்துரையிடுக