செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

நல்லூர் கந்தன் திருவிழா 2008

ஈழத்தமிழரின் ஒரு பெரும் கலாச்சார விழாவாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை(06.08.2008) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இதுவரையில் முடிந்திருக்கும். அதுதான் நல்லூரின் முகாமைத்துவ சிறப்பம்சம்.

இன்று நல்லூர் வாழ் மக்கள் வீதிகளையும், வீடுகளையும் பெருக்கி சுத்தப்படுத்தி நாளை அந்த கொடியேற்றும் நாளிகைக்காக காத்திருப்பர். யாழ்ப்பாண மாநகர சபையும் தன் பங்கிற்கு வீதிகளை சுத்தப்படுத்தி ஆங்காங்கே கழிவுப்பொருட்களை இட சிறிய தொட்டிகளை வைத்து சுத்தத்தை பேண நடவடிக்கை எடுப்பர். கச்சான், சிறு தீன் பண்டங்களை விற்பனை செய்வோர் தமக்கான இடங்களை யாழ்.மாநகர சபையிடம் இருந்து வாடகைக்கு பெற்று சிறு சிறு கொட்டில்களை தமது ஒரு மாத வியாபாரத்திற்காக தயார் செய்வார்கள். ஆங்காங்கே தண்ணீர்ப்பந்தல் அமைப்பதற்கு பொதுமக்கள் ஈடுபடுவார்கள். சிறுவர்கள் பெரும் கனவுடன் காத்திருப்பர் தாம் இம்முறை நிறைய விளையாட்டுப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று.

இது ஒருபுறம் இருக்க இன்று நல்லூர் ஆலயத்திற்கு நாளை கொடியேற இருக்கின்ற 'கொடிச்சீலை' நல்லூர் முடமாவடியில் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள கதிர்காமசுவாமி ஆலயத்தில் இருந்து வீதிவலமாக எடுத்து வரப்படும். பின்னராக வைரவர் சாந்தி இடம்பெற்று அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டிருக்கும்.
இவை எல்லாம் விட பிரதட்டை செய்யும் வீதிக்கு இன்றே யாழ்.மாநகர சபை சுத்தமான வெள்ளை மணல் கொண்டு வந்து கொட்டி அதை பரவி கிருமிகளை அழிக்க மருந்து அடித்து துப்பரவாக வைத்திருப்பர்.

யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகள் இன்று தமது தொண்டர் படைகளை சேவைக்கு அமர்த்தியிருப்பர். சாரணர் அணி, பரி.யோவான் முதலுதவிப்படையணி, செஞ்சிலுவைச்சங்க அணி என எல்லோரும் காத்திருப்பர்.

பாடசாலை அல்லாமல் இருக்கும் சேவைக்கழகங்கள் ஆன இலங்கை செஞ்சிலுவைச்சங்கம், யாழ்ப்பாணம் நலன்புரிச்சங்கம், யாழ்.பரி.யோவான் முதலுதவிப்படை என எல்லோரும் சேவை புரிய தயாராக இருப்பர்.

யாழ். மாநகர சபையும் வீதித்தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்து வசதியினை சுலபமாக்குவர். நல்லூரில் உள்ள சனசமூக நிலையங்கள் சைக்கிள் பாதுகாப்பு நிலையங்கள் அமைத்து ஒரு சிறிய கட்டணத்துடன் வாகனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருப்பர்.
இளைஞர்கள் தங்களுக்குள் கதைக்க தொடங்கியிருப்பார்கள். "மச்சான் நாளை நல்லூர் கொடி இனி 25நாளுக்கு ஒண்டும் இல்லையடா (எது இல்லை)." சிறிய கவலையுடன் அதை மகிழ்ச்சியாக தெரிவிப்பர். "என்னமாதிரி நாளை பிரதட்டை செய்கிறியா? என ஒருவர் கேட்க "ஓமடாப்பா, செய்வம் எண்டு இருக்கன், நாளைவரை உயிரோடு இருந்தால் அல்லது காணாமல் போகாமல் இருந்தால் செய்வேன்டா" என ஒருவன் சொல்வான். இன்னொருவன் "கொஞ்சம் நேரம் சிக்கலடாப்பா, அப்ப தினத்துக்கு தினம் செய்வோம் எண்டு இருக்கேன்" என்பான் இன்னொருவன். இம்முறை காவடி எடுக்கிற ஒரு எண்ணம் இருக்கு மச்சான் எல்லாம் கை கூட வேணும் என உரைப்பான் மற்றுமொருவன். ஆலயத்திற்கு சென்றவர்களுக்கு தெரியும் எங்கு பார்த்தாலும் இளைஞர்களின் பக்தி சற்று தூக்கலாகத்தான் தெரியும்.

இவர்கள் இப்படி என்றால் மகளிர் அணி தங்களுக்குள் கொஞ்சம் வித்தியாசமாக பேசுவார்கள். தாங்கள் அடி அழிக்க போவதாகவும், ஒரு சிலர் தாம் அதிகாலை சென்று (ஆமி விட்டால்) உள்வீதியில் செய்வதாகவும், வேறு சிலரோ தாம் வெளிவீதியிலும் செய்வதாக எண்ணம் இருப்பதாகவும், எதோ அந்த நேரம் உள்ளபாடு என தம்முள் அலசும் நேரம், கொஞ்சப்பேர் தமது 25நாள் சேலை,அணிகலன்கள் பற்றி விவாதிப்பர்.

நாளை அதிகாலை பள்ளியெழுச்சிப் பூசையுடன் அடியவர்கள் அங்க பிரதட்டை செய்ய தொடங்கி இருப்பார்கள். அடியவர்கள் செய்யும் அந்த பிரதட்டை காண்பதற்கு மிக அழகாக இருக்கும். ஒரு குழுவாக அல்லது தனியொருவராக தமது பிரதட்டை காரியத்தை செய்து முடிப்பார்கள். குழுவாக செல்வோரில் முன்னால் செல்பவர் பாதை காட்டுபவராகவும் இடைநடுவில் செல்பவர் 'அரோகரா' என்று ஓசை எழுப்பிய படி செல்ல அவருக்கு இசைவாக எனையோர் அதனை சொல்வர்.

"முருகனுக்கு அரோகரா,
கந்தனுக்கு அரோகரா,
அழகனுக்கு அரோகரா,
அப்பனுக்கு அரோகரா,
வள்ளிமணவாளனுக்கு அரோகரா,
ஞானபண்டிதனுக்கு அரோகரா,
ஈசன் உமை பாலனுக்கு அரோகரா,
பழனியாண்டவருக்கு அரோகரா,
அலங்காரக் கந்தனுக்கு அரோகரா,
அன்னதானக் கந்தனுக்கு அரோகரா,
அபிஷேகக் கந்தனுக்கு அரோகரா,
வேலுக்கு அரோகரா,
மயிலுக்கு அரோகரா,
வேல் வேல் வெற்றிவேல்,
வேலும் மயிலும் வேலாயுதம்,
அரோகரா அரோகரா"

என ஒரு கிரமமாகச் செய்வர். இதோ சில கானொளிக்காட்சிகள்...... காட்சித்துண்டு -01

காட்சித்துண்டு -02
காட்சித்துண்டு - 03
தொடங்கும் போது எல்லோரும் வேட்டியை மடித்துக்கட்டி அதற்கு மேல் தமது சால்வையை கட்டி பிரதட்டை செய்ய தயாராகுவர். சிலர் வேட்டியை கொடுக்கு போல கட்டுவர். பின்னர் கோபுர வாசலுக்கு நேரே நின்று கந்தனை வணங்கி கீழே விழுந்து கும்பிட்டு அரோகரா என தொடங்குவர். அப்படியே வீதி வழியே வந்து தேர்முட்டியை சுற்றி வந்து அப்படியே தூலலிங்கமாகிய இராஜகோபுர வாசலுக்கு வந்து கும்பிட்டு எழும்புவர். பின்னர் வேட்டியின் கட்டுக்களை அவிழ்த்து மீண்டுமொருமுறை வீதியை சுற்றி வருவர். வரும்போது மேற்கு வீதியில் தேநீர் கொடுப்பார்கள். அதனை அருந்தி விட்டு அப்படி சுற்றி வந்து கும்பிட்டு ஆலயத்திற்கு முன்னால் உள்ள மணலில் இருந்து உரையாடுவர். இந்த 25நாளும் மிக அற்புதமான நாட்கள் என்பர்.
இவை எல்லாம் நான் சொல்வது 3ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலைமையில் திருவிழாவிற்கு முதல் நாள் உள்ள எதிர்பார்ப்பு. இப்போதுள்ள நிலமை எல்லோரும் அறிந்ததே. இதுவரை பாதுகாப்பு படையினர் நல்லூர் தொடர்பாக வாய் திறக்கவில்லை. பார்ப்போம் பொறுத்திருந்து.
கந்தனை அழுது தொழுவதற்கு பக்தர்கள் தாயார். எம்மை காப்பாற்று. எமக்கான ஒரு நிம்மதி வாழ்வை தா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.
நாளை யாழ்ப்பாணம் களைகட்டும். 10மணிக்கு கொடியேற்றம்.
சென்றமுறை கானா பிரபா வின் பதிவு மிக அற்புதமானது.அரிய கருத்துக்களை தந்த கானா பிரபாவிற்கு நன்றிகள். அதற்கு செல்ல......
=========ஒளிப்பதிவில் உள்ள தெளிவின்மைக்கு வருந்துகிறோம். இது 2007ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

14 கருத்துகள்:

கானா பிரபா சொன்னது…

நல்லூர்க் கந்தனோடு பதிவுலகிற்கு மீண்ட உங்களுக்கு நன்றி, பழைய ஞாபகங்கள் பலதைக் கிளறி விட்டீங்கள், அருமை.

கிடுகுவேலி சொன்னது…

//...கானா பிரபா said....
பழைய ஞாபகங்கள் பலதைக் கிளறி விட்டீங்கள்...........//

நன்றி பிரபா. இப்படித்தான் மீண்டும் வரவேண்டும் என கந்தன் நினைத்தானோ? நினைவுகள் எப்பொழுதும் எம்மை தாலாட்டும். நினைவுகளுக்காகத்தானே நிகழ்வுகள்.

பெயரில்லா சொன்னது…

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஊரை விட்டுத் தூர இருக்கும் நாட்களில் நல்லூர் தொடர்பான நினைவுகளை மீட்டுத்தந்தது மிகுந்த மகிழ்வளிக்கிறது.. வாழ்த்துக்கள்.

கிடுகுவேலி சொன்னது…

//.....anonymous said...
ஊரை விட்டுத் தூர இருக்கும் நாட்களில் நல்லூர் தொடர்பான நினைவுகளை மீட்டுத்தந்தது.....//

நன்றிகள். முகமும் பெயரும் இல்லை. இருந்தாலும் நன்றிகள். எல்லோருக்கும் அதே ஏக்கம். எல்லாம் விரைவில் மலரும். நம்பிக்கைதான் வாழ்க்கை. வெல்வோம்.

அருண்மொழிவர்மன் சொன்னது…

எனது நினைவுப் பெட்டகத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு நினைவு நாம் 95ல் (தயா, நீ, நான், பாலன், சூரி) தேர்த்திருவிழாவுக்கு போனது. அப்போது ஐஸ் கிறீம் போட்டிக்கு சாப்பிட்டது...... இவையெல்லாம் என்றும் அழியாத, கலையாத நினைவுகள்.

கிடுகுவேலி சொன்னது…

//...அருண்மொழிவர்மன் said...
எனது நினைவுப் பெட்டகத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் என்றும் அழியாத, கலையாத நினைவுகள்.
..............//

நிச்சயமாக நண்பா! எல்லாம் இனிய நினைவுகள். இப்பொழுதும் கண்முன்னே நிற்கிறது. இனிவருமா? காலம் கைகூடுமா? எப்பொழுதும் போல காத்திருப்போம் நண்பா...!

பெயரில்லா சொன்னது…

சென்ற திருவிழாவில் 25நாளும் அங்கப்பிரதட்சணம் செய்யகூடிய வாய்ப்பு எனக்கிருந்தது. முழுமையாக அனுபவித்தேன்... அதுவே முடிவாகவும் போய்விட்டது...!

மீண்டும் காலம் வரும்... ஆனால், அன்று நம் இளமை திரும்புமா...? (படுக்கையில் புரளவே உடம்பு நம்மில் பலருக்கு ஒத்துழைக்குதில்ல...).

நினைவுகளை கிளறிய பதிவுக்கும் படத்திற்கும் நன்றிகள் நண்பா.

-ஜேனா.

கிடுகுவேலி சொன்னது…

//.....ஜேனா Said....
மீண்டும் காலம் வரும்... ஆனால், அன்று நம் இளமை திரும்புமா...? (படுக்கையில் புரளவே உடம்பு நம்மில் பலருக்கு ஒத்துழைக்குதில்ல...).

நினைவுகளை கிளறிய பதிவுக்கும் படத்திற்கும் நன்றிகள் நண்பா..../

வணக்கம் ஜேனா,
வருகைக்கும் இடுகைக்கும் நன்றிகள். அதிகாளையில் வீடுவீடாக பொடியளை எழுப்பி உங்களுடன் இணைந்து பிரதட்டை செய்த அந்த பசுமையான நினைவுகள் இன்றும் கண் முன்னாலே. ஆனால் நல்லூரான் சேவடியை நினைத்தவுடனேயே ஒரு புது தெம்பு பிறக்கும். பின்னர் ஏன் கவலை. எந்த வயதானாலும் அரங்கில் ஏறுவோம் பிரதட்டை செய்யும் பக்தர்களாக.

nallurpakthan சொன்னது…

please pass this url to others. thankyou
http://nallurkanthswamykovil.blogspot.com/

ஜேனா சொன்னது…

இன்று தீர்த்த திருவிழா... சென்ற ஆண்டு, கூடி ஆட்டம்போட தோழரின்றி தனியே செறிருந்த போதும், இளையவர்களின் ஆர்ப்பரிப்பில் நம் கடந்த காலங்களை நேரில் கண்டு மீட்டகூடியாதாக இருந்தது. இம்முறை அதுவுமில்லை...!
எதிர்காலம் நோக்கிய பயணத்தில், நிகழ்காலம், கடந்தகால நினைப்பிலேயே களிகிறதே...!
-ஜேனா.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் நல்லூர் பக்தா!
வருகைக்கு நன்றி. உங்கள் வலைப்பூவை என்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன். நன்றி.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் நண்பன் ஜேனா!

உங்கள் வருகைக்கும், பதிவுக்கும். தீர்த்தக்கேணி என்ன பாடுபட்டது என்ற கடந்த கால நினைவுகளைத்தான் இப்போது நம்மால் மீட்டக் கூடியவாறு உள்ளது. நினைவுகள் எல்லாம் மீண்டும் மலர்ந்து அந்த நாட்கள் போல மீண்டும் அனுபவிப்போம் விரைவில். காத்திருபோம் கடந்த கால நினைவுகளுடனும் எதிர்கால கனவுகளுடன்.

tharuha சொன்னது…

athikali veli ...arohara oliyodu sillenra thenral katru menithaluva nalloor manalil ilaipparum suhame thanithan....

thanks for your vedeo clips.

கிடுகுவேலி சொன்னது…

//.... tharuha said...
nalloor manalil ilaipparum suhame thanithan....//

ஆமாம் தாருகா, நல்லைக் கந்தன் வீதி வெள்ளை மணல், வேப்பமர நிழல், தெய்வீக மணம் கமழும் ஆலய சூழல்....இவைகள் வார்த்தைகளுக்குள் வசப்படாதவை. அனுபவித்தால்தான் புரியும். மீண்டுமொருமுறை சென்றால் புரண்டு அழுதால்தான் தீரும்.

கருத்துரையிடுக