திங்கள், 8 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா....!!!!

காதல் எவ்வளவு சுகமானது. எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறது என்பது கேள்வியே....!. சிலருக்கு கற்பனையாக, சிலருக்கு வாழக்கையாக, காதல் இனித்தே இருக்கிறது. சிலருக்கு அது கசக்கத்தான் செய்கிறது. இன்னும் சிலர் அது எமக்கு ஒவ்வாது என்று ஒதுங்கியே செல்கிறார்கள். திரைப்படங்களில் ஒவ்வொரு காதல் காட்சிகளையும் பார்க்கும் போதும் அல்லது சிறந்த ஒரு காதல் கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போதும் ஏன் ஒவ்வொரு காதலர்களையும் பார்க்கும் போதும் நாம் இப்படி எல்லாம் காதலிப்போமா அல்லது ஏன் எமக்கு இப்படி அமையவில்லை என்று எத்தனை பேர் மனதுக்குள் மறைவாக நினைத்திருப்போம். இரகசியமாக இரசித்தும் இருக்கிறோம், ஏங்கியும் இருக்கிறோம். எமக்கு அது கிடைக்கவில்லை என்றால் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது என எம்மை நாமே சமாதனாப்படுத்தி போய்க் கொண்டே இருக்கிறோம்.

படைப்பு என்பது எந்த ஒருவிதத்திலாவது ஒருவரின் மனதில் பதிந்து விட்டால் அது அந்தப் படைப்பாளியின் வெற்றியே. ரசனைகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டே தீரும். ஒத்த ரசனைகள் கொண்டவர்களை காண்பது அரிது. ரசிக்கும் பொருள் எது என்பதில் இங்கே பிரச்சினை இல்லை. ரசிப்புத்தன்மை என்பதுதான் வேறுபடுகிறது. ஒவ்வொருவர் மனதிலும் எது கூடியளவு தாக்கத்தை செலுத்துகிறதோ அதனை அவர்கள் ரசிக்கத்தொடங்கி விடுவார்கள். திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு கோணத்திலேயே இருக்கும். திரைப்பட அறிவு பூச்சியமாக கொண்ட ஒருவரின் இரசனையும் அதிலே அதிக நுணுக்கங்கள் தெரிந்த ஒருவரின் ரசனையும் வேறுபடும். ஒரு பொதுவான நிலைக்கு வரமுடியாமல் இரசனைகள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களா அல்லது இளையராஜா பாடல்களா சிறந்தது என்று இன்றும் வாதிட்டு காலத்தைக் கழிப்போர் பலர். சிவாஜிகணேசனா கமல்ஹாசனா சிறந்த நடிகர்கள் என்று போட்டி போடுவோர் அதிகம். ஒரு துறையில் அதிக அறிவு கொண்டவர்களின் பார்வையும், அந்தத்துறையில் பாமர அறிவு கொண்டவர்களின் பார்வையும் வேறுபடுகின்றது. எது நல்ல இசை, எது நல்ல திரைப்படம், எது நல்ல படைப்பு என்று விவாதங்களைத்தவிர்த்து அவரவர் ரசனைக்கேற்ப எதனையும் ரசிப்பது நல்லது.

கவிதைப் புத்தகங்கள் நிறைய வாசித்திருந்தும் ஒரு காதல் கவிதைத் தொகுப்பை முழு மூச்சில் ரசித்து வாசித்த திருப்தி “விண்ணைத்தாண்டி வருவாயா...” என்ற திரைப்படம் பார்த்தபின்பு கிடைத்தது. காதல்....! ஒரு மகத்தான வார்த்தை. எல்லோர்க்கும் கைகூடுவதில்லை. கைகூடியவர்களும் அதனை இறுதி வரை கட்டிக்காத்தார்களா என்பதெல்லாம் கேள்வியே...! ஆனால் அந்தக் காதல் வயப்பட்ட கணங்கள் எப்படி இருக்கும், ஒரு காதலன் அல்லது காதலியின் தவிப்பு எப்படி இருக்கும், இவையெல்லாம் நாம் நண்பர்களின் காதலின் போதோ அல்லது தெரிந்தவர்களின் காதலின் போது பார்த்திருக்கிறோம். அவற்றை எல்லாம் திரையில் வித்தியாசமான காட்சிகளோடு கண்டு களித்தேன்.

“விண்ணைத்தாண்டி வருவாயா..” என்ற திரைப்படம் பார்த்த பின்பு அது மனதில் எக்கச்சக்கமாக பதிந்து விட்டது. பாதித்துவிட்டது. காரணம் தெரியவில்லை. கௌதம் வாசுதேவ் மேனன் மீது கொண்ட நம்பிக்கையில் படம் பார்க்க சென்றேன் (நீண்ட காலத்தின் பின் பெரும் படையாக சென்றோம்). காதலை பல பரிமானங்களில் காட்டியாகிவிட்டது. இவர் எதை காதலில் புதிதாக சொல்லப் போகிறார் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் கௌதம் என்ற இயக்குநர் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தேன். சிம்பு என்ற ‘விரல் வித்தைக்காரன்’ கொஞ்சம் கண் முன்னால் வந்து மிரட்டினாலும்....இது கௌதம் படம் ஆகவே வாய் , கை பொத்திக் கொண்டு இருந்திருப்பார் என்பதால் துணிவோடே சென்றோம். இது விமர்சனம் அல்ல. அந்தப் படத்தைப் பார்த்ததும் எழுந்த என் எண்ணத்தின் பிரதிபலிப்பு அவ்வளவே....!!

பாடல்கள் வித்தியாசமாக இசையமைக்கப்பட்டிருந்தது. விருதுகளின் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல்களை மிக நுணுக்கமாகத்தான் வாங்கியிருக்கிறார் இயக்குநர். பாடல்களின் வெற்றியில் எனது சிற்றறிவுக்கு எட்டின வகையில் இசையமைப்பாளர்களை விட இயக்குநரே காரணமாக அமைகிறார் என்பது என் எண்ணம். அவர்கள்தான் இது வேண்டாம் அது வேண்டாம் அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என பிழிந்து வாங்குகிறார்கள். பிரபல இயக்குநர்கள் எடுத்த படங்களின் பாடல்களை நினைத்தால் உண்மை புலப்படும். பொதுவாகவே கௌதம் இயக்கும் படங்களின் பாடல்கள் ஒரு போதும் சோடை போனதில்லை. ஹரிஸ் ஜெயராஜ் உடன் முரன் பட்ட பின் பாடல்கள் தோற்று விடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருந்து ரஹ்மானிடம் வாங்கியிருக்கிறார். இதுவரை ரஹ்மானிடம் காணாத ஒரு வித்தியாசமான இசை.ஒரு காதல் நிரம்பி வழியும் ஒரு படத்திற்கு இசை எவ்வாறு இருக்க வேண்டும் என ரஹ்மானும் உணர்ந்து அனுபவித்து இசையமைத்திருக்கிறார்.

கௌதம் என்ற படைப்பாளி ஒவ்வொரு காட்சியையும் மிக அருமையாகவே எடுத்திருக்கிறார் என்பதை விட சிற்பத்தைப் போல செதுக்கியிருக்கிறார். அவருக்கு துணை புரிந்தவர்கள் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும். பின்னிப் பிணைந்து அருமையான ஒரு படத்தைத் தந்திருக்கிறார்கள். அனுபவித்து எடுத்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. அதுமட்டுமல்ல எம்மையும் அனுபவிக்க வைத்துவிட்டார். கேரளா அழகை அப்படியே கமெராவிற்குள் அள்ளிக் கொண்டு வந்து திரையில் எமக்கு முன்னால் கொட்டுகிறார்கள். கேரளாவிற்கு போகவேண்டும் என்ற ஆவல் நெருப்பில் எண்ணை ஊற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். கண்டதும் காதல்....! காதல் வரக் காரணம் த்ரிஷாவின் பேரழகும் நளினமும்....! சிம்பு காதலில் உருகுவதும், த்ரிஷாவை சந்தித்து கதைக்க முயற்சிக்கும் அல்லது கதைக்கும் காட்சிகள் அருமை...! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹைக்கூ கவிதைகள். ரசித்துத்தான் பார்க்க வேண்டும். வார்த்தைகளில் வெளிப்படுத்துவது என்பது கடினம். ஆனால் இவ்வளவு பெண்கள் இருக்கும் போதும் ஜெஸ்சியை ஏன் காதலித்தேன் என்று சிம்பு கேட்பதும் அந்தக் கேள்வியை அடிக்கடி ஒவ்வொருவரைக் கொண்டு கேட்கவைப்பதும் சிறப்பாக இருந்தது . காதலித்தவர்கள் எல்லோரும் மிக மிக இரசித்துத்தான் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். வாசகர்களில் அநேகம் பேர் “தபூ சங்கர்” அவர்களின் காதல் ஒழுகும் கவிதைகளை வாசித்திருப்பீர்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு அந்த உணர்வே இருந்தது.

படத்தில் ஒரு கட்டத்தில் த்ரிஷாவின் திருமணம் குழம்பிய அந்தத் தினத்தின் இரவு நேரத்தில், த்ரிஷாவின் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருவரும் (சிம்பு + த்ரிஷா) பயந்து பயந்து கதைப்பார்கள். மிக அருமையான காட்சி. வசனங்களும் காட்சி அமைப்புகளும் நேர்த்தியாக இருந்தது. அப்படியே மனதை மயிலிறகால் வருடுவது போல இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே உன்னை காதலிக்க ஆரம்பித்தேன் என்று மிக லாவகமாக அனாசயமாக சிம்புவிடம் த்ரிஷா சொல்லும் காட்சி அதி அற்புதம். நடுநிசியில் எவருக்கும் தெரியாமல் காதலி வீட்டில் நுழைந்து காதலியுடன் பேசுவது என்பதனை கௌதம் எங்கோ தன்வாழ்விலும் சந்தித்து இருக்க வேண்டும். காரணம் அப்படி இருந்தது அந்தக் காட்சி. அதே போல சிம்புவின் நண்பர் கணேஷ் அவர்களின் வீட்டில் யாரும் இல்லாத ஒரு தனிமைப் பொழுதில் விரிகிறது திரையில்....அத்தனையும் கவிதையே...!! அந்த ஒவ்வொரு காட்சியிலும் காதல் வழிகிறது. ”ஏன் இந்தக் கணம் இவ்வளவு இனிமையாக இருக்கிறது..” என்று சிம்பு கேட்க....அதற்கு த்ரிஷா....”இப்படி நாம் இருப்பது இதுதான் கடைசியோ....” என்று சொல்வார். அதன் போது த்ரிஷாவை சிம்பு பார்க்கும் பார்வையும்....த்ரிஷாவின் பதட்டமில்லாத பதிலும்....அருமை...!!! இப்படி இப்படி சொல்ல்லிக் கொண்டே போகலாம்...!!

திடீர் திருப்பமாக அமெரிக்காவில் த்ரிஷாவைச் சந்திக்கும் சிம்புவிடம்...”எப்படி இருப்பாள் உன்னவள்...” என்பது போன்ற த்ரிஷாவின் கேள்விக்கு சிம்புவின் பதில்களும் நடிப்பும் இவ்வளவு நாளும் எங்கைய்யா இருந்தாய் என்று கேட்க தோன்றுகிறது. தன்னால் இதுவரை தான் அழிந்தார் என்பதே சிம்பு விடயத்தில் உண்மை....! எவருமே எதிர்பாராதவிதமாக அமைந்திருந்தது முடிவு. இந்த இடத்தில் கௌதம் மேனனுக்கு எழுந்து நின்று கைதட்டினால் என்ன...! அருமை..!! நிச்சயமாக எல்லோரையும் பாதித்தே இருக்கும். தெலுங்கில் வேறு ஒரு முடிவும் தமிழில் வேறு ஒரு முடிவுமாக கௌதம் அவர்களின் ஆளுமையும் அவரின் இரசிப்புத்தன்மையும் பட்டவர்த்தனமாக இதிலே தெரிந்தது. த்ரிஷாவை ஓவியமாக காட்டிய கௌதம் மேனன் சிம்புவில் கூடிய கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ’மின்னலே’ மாதவன்....’வாரணம் ஆயிரம்’ சூரியா இவர்களிடம் இருந்த அந்த ஒளிமுகம் சிம்புவிடம் இல்லை என்பது எண்ணம்....!!!

இது விமர்சனம் இல்லை...என்னளவில் இந்தப் படத்திற்கான பதிவு. ஆழமாக மனதில் ஊடுருவி விட்டது. இது புலம்பலாக இருந்தாலும் அதுவும் பாதிப்பின் ஒரு வெளிப்பாடே...! இன்னும் காதுகளில் ஒலிக்கும் இசை. வசன அமைப்பு, காட்சி அமைப்பு ஒளிப்பதிவு, இசையமைப்பு எல்லாமே அவரவர்களின் கைவண்ணங்களே...! விண்ணில் இருந்தாலும் என்னவளே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மண்ணுக்கு என்று கேட்க தோன்றுகிறது....!!! (எவரும் இல்லை என்பது வேதனை...!!)

செவ்வாய், 15 டிசம்பர், 2009

சைக்கிள் கனவு...!

அவன் தரம் 5 படித்துக் கொண்டிருந்தான். அந்த வருடத்தின் ஆவணி மாதத்தில் அவனுக்கு புலமைப்பரிசில் பரீட்சை. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை கல்விதான் மூலதனம். அத்திவாரமே மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என அவனின் பெற்றோர் நினைத்து அதிக ஆர்வத்தோடு கற்பித்தனர். காரணம் பல இருந்தது. பெரிய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வு. முதன்முதலில் சந்திக்கும் பெரும் பரீட்சை. இதில் சித்தியடைந்தால் தேசிய கல்லூரிகளில் அனுமதி கிடைக்கும். மாதந்தோறும் கல்விச்செலவுக்கு அரசின் ஊக்குவிப்புப் பணம். அவன் மனமோ சைக்கிள் வாங்க வேண்டும். இரண்டு கைகளையும் விட்டு விட்டு காற்றில் பறப்பது போல ஓட வேண்டும் என சதா எண்ணிக் கொண்டிருந்தது. தனது பெற்றோரிடம் கேட்டும் விட்டான். அவனுக்கு அவர்களின் பொருளாதார நிலைமை தெரிய வாய்ப்பில்லை. அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடும் ஒரு வறிய குடும்பம். ஆனால் அதனை அவனுக்கு தெரியப்படுத்தாமல், “நீ பரீட்சையில் சித்தியெய்தினால் உனக்கு புது சைக்கிள் நிச்சயம்” என தந்தை அவனுக்கு உறுதி மொழி அளித்தார்.

அவன் மனம், இப்போது மெதுவாக படிப்பில் கவனம் செலுத்தியது. ஓய்வு நேரத்தில் வந்து வீதியால் போய்வரும் சைக்கிள்களைப் பார்த்து தனது மனதைச் சாந்தப்படுத்துவான். இடைக்கிடை தகப்பனிடம் கேட்டு அவர் கொடுத்த வாக்கினை உறுதிப்படுத்திக் கொள்வான். பரீட்சையும் வந்தது. அன்றைய தினம் அவனை பரீட்சைக்கு தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக் கொண்ட சென்ற தந்தையிடம் “அப்பா வாங்கித்தருவீங்களா...?” என்று கேட்டுக் கொண்டே சென்றான். அவனிடம் தந்தையும் “ஓம் ஓம் ...” என்று பதிலளித்தார். பரீட்சை முடிந்தது. அவனுக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை...! அடிக்கடி எப்பொழுது பரீட்சை பெறுபேறு வரும் என்று அங்கலாய்த்தபடி இருந்தான். இப்போது தந்தைக்கு சிறு பயம் தொற்றிக் கொண்டது. மகன் சித்தியடைந்துவிட்டால் எப்படியும் வாங்கிக் கொடுக்க வேண்டும். சித்தியடையாவிட்டாலும் சைக்கிளை வாங்கிக் கொடுத்து அவனது கவலையை நீக்கவேண்டும். நண்பர்களிடத்திலும் தெரிந்தவர்களிடத்திலும் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

பரீட்சை மறுமொழி வரும் நாளும் வந்தது. அன்று அவன் கோவிலுக்கு சென்று விட்டு பாடசாலைக்குப்போய் அங்கே பெறுபேறுப் பட்டியலில் தன்னுடைய பெயரைத்தேடினான். 174 (200 இற்கு) புள்ளிகள் பெற்று அவன் முதலிடத்தில் தேறியிருந்தான். அவனுக்கு பரீட்சையில் சித்தியடைந்தது பெரிய விடயமாகத் தெரியவில்லை. தனக்கு சைக்கிள் வரப்போகுதே என்றே துள்ளிக் குதித்தான். அந்தச் சிறிய பாடசாலையில் அவன் மட்டுமே சித்தியடைந்தவன். ஆசிரியர்கள் தந்தையை பாராட்டினர். அவன் தந்தையின் கையைப் பிடித்து இழுத்து அவரை வேகப்படுத்தினான். தந்தையும் அவனை உச்சிமோந்து, தாயிடம் அழைத்துச் சென்று செய்தியைக் கூறிவிட்டு யாழ்நகரப் பட்டணம் சென்றார் சைக்கிள் வாங்க. தாயோ ஆனந்தக் கண்ணீர் மல்க அவனை கட்டியணைத்தாள்.

இவனும் வீட்டின் வாசலில் காத்திருந்தான். தந்தை வருவார். புதுச்சைக்கிள் தருவார். எல்லா இடமும் போய்வரலாம். முன்பு ஓடிப்பார்க்க சைக்கிள் கேட்டு தர மறுத்த நண்பர்கள் முன்னால் போய் ஓடிக்காட்டவேண்டும் என்று எண்ணி எண்ணி குதூகலித்திருந்தான். மாலையானது அப்பவைக் காணவில்லை. வருவார் வருவார் என்று பார்த்துக் கொண்டிருக்க அயலவர் ஒருவர் ஓடிவந்து “அக்கா....அக்கா...இப்ப பின்னேரம் யாழ்ப்பாணத்தில மேலால வந்து, சுப்பர் சொனிக் போட்ட குண்டில அண்ணை............” என்று இழுத்தான். அவனின் தாய் “அய்யோ.....” என அலறித்துடித்து கீழே விழுந்தாள். அவனோ அம்மா, அம்மா என்னம்மா என்னம்மா எனக் கேட்டு அழுதான். பின்னர் தெரிந்து கொண்டான் அப்பா இறந்து விட்டார் என்று. மனம் கல்லானான். அழவில்லை. தன்னால்தானே அப்பா இப்படி ஆகினார் என மனம் பொருமினான். அன்றிலிருந்து சைக்கிளை வெறுத்தான்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

வெல்லத்தமிழ் இனி மெல்லச்சாகுமா?

அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அவர்களின் நண்பர்களாக இரண்டு குடும்பங்கள். எல்லோரும் சேர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். முழுவதும் ஆங்கிலத்தில்தான். அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் நல்ல புலமையானவர்கள் போல இருந்தது. சரளமாக கதைத்தார்கள். ஒபாமாவின் ‘எபெக்’ வருகை முதல் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் வரை அலசினார்கள். ஆனால் எல்லாம் ஆங்கிலத்தில். அதுவும் அனைவரும் தமிழ்க் குடிமக்கள். இலங்கையில் இருந்து வந்து இங்கே குடியேறியவர்கள். நல்ல பதவிகளில் இங்கே வேலை செய்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் அவர்கள் பேசுவதைக் கண்டதும் மனதுக்கு கவலையாக இருந்தது. ஏன்தான் இவர்கள் இப்படியோ ? இரண்டு சீன மொழி பேசுபவர்கள் சந்தித்தால் அவர்கள் சீன மொழியில் பேசுகிறார்கள். இரண்டு மலாய் மொழி பேசுபவர்கள் சந்தித்தால் மலாய் மொழியில் பேசுகிறார்கள். இரண்டு சிங்கள் மொழி பேசுபவர்கள் சந்தித்தால் சிங்களத்தில் பேசுகிறார்கள். ஆனால் தமிழர்கள் நாமோ....? மொழி ஒரு ஊடகம். எமது மொழியை தெரியாதவர்களுடன் கதைப்பதற்கு அதனை உபயோகிக்கிறோம். அவ்வளவே. தமிழர்களுடன் தமிழில் கதைக்கலாந்தானே? எல்லோருக்கும் எல்லா வார்த்தைகளும் தெரியும் என்பதல்ல. அந்த தெரியாத வார்த்தைகள் ஆங்கிலத்தில் தெரியும் என்றால் அந்த மொழியில் பேசலாம். ஆங்கிலம் ஓரளவு கலப்பதில் தப்பில்லை. ஆனால் முற்றிலுமாக ஆங்கிலத்தில் இரு தமிழர்கள் கதைப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் சாகும் என்ற வாக்கியம் மெய்த்துப்போய் விடும்.

****************

உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) அண்மையில் நடாத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு - 2009 இல் சிங்கப்பூரில் இருந்து பலர் கலந்து கொண்டு தமது புதுமையான படைப்புக்களை - கணினி மூலம் எவ்வாறு தமிழினை மேம்படுத்தலாம் என்ற அடிப்படையில் - அங்கே வெளிக்கொணர்ந்திருந்தார்கள். தமிழ் செம்மொழியாகவும் சிறப்பாகவும் கையாளப்படுகின்ற ஒரு நாடு சிங்கப்பூர் என்றால் அது மிகையல்ல. அத்தகைய தேசத்தில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அங்கே சிறப்பாக தமது படைப்புகளை தெரியப்படுத்தினர். இது தொடர்பாக அவர்களிடம் சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியும் சிறப்பு பேட்டி எடுத்து ஒளிபரப்பினர். பின்னர் அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு சிறப்பு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே சென்ற எனக்கு ஏமாற்றமே. ஒரு 15 பேர் அளவில் வந்திருந்தார்கள். ஏற்பாடு செய்தவர்களும் ஒரு 20 அல்லது 25 பேர் இருக்க கூடிய ஒரு வகுப்பறையையே தெரிவு செய்திருந்தார்கள். ஏற்பாடு செய்தவர்கள் முன்னரே எதிர்பார்த்துத்தான் இருந்தார்களோ தெரியாது இவ்வளவு பேர்தான் வருவார்கள் என்று. ஆனாலும் அவர்களின் அக்கறையான, ஆரோக்கியமான முயற்சிக்கு முதலில் நன்றிகள். ஆனால் அங்கே ஏன் மற்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக தமிழ் கற்பிக்கின்ற “ஆசிரிய மணிகள்”. இந்த இணைய மாநாட்டின் முக்கிய நோக்கமே கணினி மூலம் எவ்வாறு தமிழை இலகுவாக கற்பிக்கலாம் அல்லது எல்லாத் தரப்பினருக்கும் எடுத்துச் செல்லலாம் என்பதே. ஆனால் அதனை கற்பிக்கின்றவர்கள் எவரும் புதிய விடயங்களில் ஆர்வம் காட்டாமை வருத்தத்துக்குரியதே. கற்பிப்பது அவர்கள் பிரச்சினை. ஆனால் இந்த ஆக்கங்களை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கி பணம் செலவழித்து அங்கே சென்று வெளிப்படுத்திவிட்டு வந்தவர்களை ஊக்கப்படுத்தவாவது அவர்கள் வந்திருக்கலாம். பலநூற்றுக்கணக்கான தமிழ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் வரவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம். இப்படியான சில புறக்கணிப்புக்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவு வளர்ச்சியினை மந்தகதியாக்கும். தமிழின் சாவையும் விரைவாக்கும்.

******************

சங்கீத இசைக்கச்சேரி மேடைகள் எல்லாவற்றிலும் அநேக தமிழ்ப் பாடகர்களால் வேற்று மொழிப்பாடல்கள் பாடுவது என்பது வழமையான ஒன்றாகிவிட்டது. இசைக்கு மொழியேது என்பது உண்மைதான். ஆனால் சபையறிந்து பாடுவது என்பது ஒரு நல்ல பாடகருக்கு அழகு. அப்போதுதான் அந்த அரங்கினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இல்லையேல் அரங்கம் சலசலக்கத் தொடங்கிவிடும். முற்றிலும் தமிழர்கள் நிறைந்த அரங்கிலே பிற மொழிக் கீர்த்தனைகளை பாடுகின்ற சங்கீதப் பெருமக்களை என்ன சொல்வது? பிறநாடுகளை விடுங்கள். இலங்கையில் கம்பன் கழகம் நடாத்துகின்ற இசைவேள்வியில் பாடுவதற்கு வருகின்ற இந்திய கர்நாடக சங்கீத வித்துவான்கள் எல்லாம் தெலுங்கு கீர்த்தனைகள் உட்பட பிற மொழிப்பாடல்களை பாடுவதற்கு தயங்குவதில்லை. அந்த அரங்கம் முழுவதும் தமிழ் பேசும் நல்லுள்ளங்கள் மட்டுமே இருக்கும். சிறிது நேரத்தில் அவர்கள் குசுகுசுக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனை ஏன் அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல ஏற்பாட்டாளர்களும் இதிலே சிரத்தை எடுப்பதில்லை. பெரிய வித்துவான் வந்து இசைநிகழ்ச்சி நிகழ்த்தினால் போதும் எப்படி, எதை பாடவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதில்லை. இதற்குமப்பால் முன் வரிசையில் இருந்து தாம் ஏதோ பாரிய இசை ஞானத்துடன் இருப்பதாக நினைத்து தலையாட்டி, தாளம் போடுவது அவர்களை இன்னும் அங்கீகரிப்பதாகவே இருக்கும். இப்படி தமிழ்ப் பாடல்களை மறந்து சென்றால் தமிழ்ப் பாடல்கள் காலப்போக்கில் காணாமலே போய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு யார் மணிகட்டுவது. கலைஞர்களும் திருந்தவேண்டும். ஏற்பாட்டாளர்களும் இதிலே முன்னின்று உழைத்து தமிழ்ப் பாடல்களைப் பாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மெல்ல இனிச்சாவதை எவரும் தடுக்க முடியாது.
இந்தப் படத்தினை உருவாக்கி அனுப்பி உதவிய நண்பர் கு. அசோக்பரன் அவர்களுக்கு நன்றிகள்..!