வியாழன், 6 அக்டோபர், 2011

நாதஸ்வர மேதை கலாநிதி பஞ்சாபிகேசன்

அது 80 களின் நடுப்பகுதி. சிறுபராயம். காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிசேகம். ஏராளமான தவில், நாதஸ்வர கலைஞர்கள் வரிசையாக இருந்து கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவர் மட்டும் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நெடிய மெல்லிய தோற்றம். புன்னகை தவழும் வதனம். தலையிலே குடுமி. காதிலே கடுக்கன். நாதஸ்வரம் முழுவதும் தங்கப்பதக்கங்கள். முதன் முதலாக அவரை அங்கேதான் பார்க்கக் கிடைத்ததுஇன்றும் அதே தோற்றம். முதுமை அவரை அணைத்துக் கொண்டாலும், அவருக்கேயான அடையாளங்கள் எதுவும் அகன்றதாகத் தெரியவில்லை. கம்பீரமாகவே நின்று தனக்கான கௌரவத்தை ஏற்றுக் கொண்டார்ஆம், அவர்தான் ஈழத்தின் சாவகச்சேரி மண் பெற்றெடுத்த ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞன் திருவாளர் முருகப்பா பஞ்சாபிகேசன். கடந்த வருடம்(2010) இதே தினத்தில் (ஒக்ரோபர் 6) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அவருக்குகௌரவ கலாநிதிபட்டம் வழங்கி கௌரவித்தது. தனது புகழையும் ஒரு படி உயர்த்திக் கொண்டது. வாழும்போதே அந்தக் கலைஞன் கௌரவிக்கப்பட்டிருக்கிறான் எனும் போது மகிழ்ச்சியே.


ஈழமண் தந்த நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் தங்களது பெயர்களை இசையுலகில் மிக ஆழமாகவே பதித்துள்ளார்கள். எம்மைப் பொறுத்தவரை கலைகளின் தாயகம் என்று நாம் நினைக்கின்ற இந்தியா குறிப்பாக தமிழகக் கலைஞர்கள் வியந்து நிற்கும் அளவு எங்கள் தேச இசைவேளாளர்களின் மரபும் வளர்ச்சியும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு வியாபித்து இருக்கிறது. எம் மண்ணின் அரும் பெரும் சொத்தாக இருந்து மறைந்த கலைஞர்களான தவில்மாமேதை வி.தெட்சணாமூர்த்தி, நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதன் வரிசையில் வாழும் கலைஞனாக இன்றும் எம்முடன் இருக்கும் சாவகச்சேரி தந்த எம்.பஞ்சாபிகேசன் அவர்களும் முக்கிய இடம் பெறுகிறார்.

கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற போது
1924ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி அக்காலத்தில் புகழ்பெற்ற தவில் வித்துவான் கே.முருகப்பாபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இருவர். அவர்களுள் ஒருவரான நடராஜசுந்தரம் ஈழத்தில் புகழுக்குரிய ஒரு தவில் வித்துவான். அண்ணனோடு இணைந்து 40 ஆண்டுகள் தவில் வாசித்தவர். இவரது சகோதரி இராசம்பாள் என்பவர் தனித்தவில் மணியம் என்றழைக்கப்பட்ட சுப்ரமணியத்தின் மனைவியாவார்.

1930 களில், அப்போது நாதஸ்வர உலகில் கொடிகட்டிப் பறந்த வித்துவான்களாக சண்முகலிங்கம்பிள்ளை மற்றும் அப்புலிங்கம்பிள்ளை இருந்தனர். ஒரு நாதஸ்வரத்துக்கு ஒரு தவில் என்று இருந்த காலத்தில் முதன் முதலாக சோடியாகச் சேர்ந்து நாதஸ்வரம் வாசித்த பெருமை இவ்விருவரையும் சாரும்இவர்களுக்கு தவில் வாசித்தவர்களுள் முருகப்பாபிள்ளையும் ஒருவர். தனது மகன் நாதஸ்வரம் பயில இவர்களே சிறந்த குரு என எண்ணி பஞ்சாபிகேசனை அவரது 10வது வயதிலேயே இவர்களிடம் அனுப்பி வைத்தார். தொடர்ந்து இராமையாபிள்ளை என்பவரிடமும் பி.எஸ். கந்தசாமிப்பிள்ளையிடமும் முறையாக நாதஸ்வரம் பயின்றதன் பேறாக தனது 15வது வயதில் முதற் கச்சேரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆலயத்தில் அரங்கேற்றினார் பஞ்சாபிகேசன்.

கம்பன் கழகம் “இசைப் பேரறிஞர்” விருது வழங்கிய போது
இசையறிவை மேலும் வளர்க்கும் நோக்கோடு தமிழகம் சென்றார். அங்கே இவருக்கு குருவாக அமைந்தவர் கக்காயி நடராஜசுந்தரம்பிள்ளை. இவர் உலகம் போற்றிய நாதஸ்வர மேதை திருவாவடுதுறை இராஜரத்தினம்பிள்ளையின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலேயே மேலும் அய்யம்பேட்டை வேணுகோபாலபிள்ளையிடம் தனது இசையறிவை மெருகேற்றும் வாய்ப்பு பஞ்சாபிகேசனுக்கு அமைந்ததுஇராஜரத்தினம்பிள்ளையும் , மகராஜபுரம் விஸ்வநாத ஐயரும் இணைந்து படைத்த இசைநிகழ்ச்சிகளை நேரே பார்த்தும் கேட்டும் உருகியதை இன்றும் நெகிழ்வோடு பகிர்ந்து கொள்ளுவார். அதனை தனக்குக் கிடைத்த பெரும்பாக்கியமாகவே கருதுகிறார்.
தாயகம் திரும்பியதும் அவர் ஈழத்து இசையுலகில் ஒரு மறுக்க முடியாத ஆளுமையாக இருந்தார் என்பதில் ஐயமேதுமில்லை. ஈழத்தில் பல பாகத்திலும் ஆயிரக்கணக்கான கச்சேரிகளை நடாத்தியிருப்பார். இசை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வலம் வந்தவர். அவர்களின் நெஞ்சங்களில் எல்லாம் குடியிருந்தவர். இன்றும் குடியிருப்பவர். சபையினைக் கண்ணால் அளப்பதும், அவர்களின் நாடியறிந்து அவர்களுக்கு நாதத்தை வழங்குவதிலும் பஞ்சாபிகேசனுக்கு நிகர் அவரே. இதனை இன்றும் பல இசை இரசிகர்கள் நினைத்து மகிழ்கிறார்கள்.

அப்போது திமிரி (கட்டைக்குழல்), பாரி (நெட்டைக்குழல்) என கலைஞர்கள் தமக்கிடையே முறுகிக் கொண்டிருந்த நேரம். ஆண்டாண்டு காலமாக இசைவேளாளர்கள் வாசித்து வந்த பாரியையே தொடர்ந்து தனது கைகளில் ஏந்தி வாசித்து வந்தார். தனக்கென ஒரு பாணி அமைத்து அதன் வழியே தொடர்ந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் இசையுலகில் கோலோச்சி இருந்திருக்கிறார். முதுமையின் காரணமாக கச்சேரிகளில் கால்வைக்க முடியாமல் இருந்தாலும் இதுநாள் வரை இசையுலகில் தனது கால்களை ஆழமாகவே பதித்திருக்கிறார். இசைக் கலைஞனுக்கு கற்பனை சக்தி அபாரமாக இருத்தல் வேண்டும். அத்தோடு அரங்கைக் கவரும் வண்ணமும் படைக்கவேண்டும். இவையெல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர் பஞ்சாபிகேசன். தனது கச்சேரியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் பாதிப்பு இருப்பதாக அவரே அடிக்கடி கூறுவார். அதனால்தானோ தெரியாது இவர் வாசிக்கும் போதுசிங்காரவேலனே தேவா...” என்ற பாடல் இரசிகர்களை கட்டிப் போட்டுவிடும்.

நாதஸ்வர மேதை நடுநாயகமாக....
தமிழகத்தில் இருந்து நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் ஈழத்தில் வந்து வாசித்த காலங்களில் எல்லாம் சற்றேனும் சளைக்காது அவர்கள் வியக்கும் வண்ணம் பல கச்சேரிகளை  படைத்திருக்கிறார். அவர்கள் பாராட்டையும் பெற்றிருக்கிறார். திருவாரூர் இராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் லெச்சையப்பா, அம்பல் இராமச்சந்திரன், பந்தனை நல்லூர் தெட்சணாமூர்த்திப்பிள்ளை, கோட்டூர் இராஜரத்தினம்பிள்ளை என தமிழக வித்துவான்களோடு சரிநிகராக நின்று வாசித்த பெருமை பஞ்சாபிகேசனைச் சாரும்.

ஈழத்து தவில் வித்துவான்களான தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி, என்.ஆர். சின்னராசா, எம். நடராஜசுந்தரம். என். குமரகுரு, நாச்சிமார்கோவிலடி கணேசபிள்ளை, ஆர். புண்ணியமூர்த்தி, என்.ஆர்.எஸ் சுதாகர் (சின்னராசாவின் மகன்) ரி.உதயசங்கர்( தெட்சணாமூர்த்தியின் மகன்), கே. சிவகுமார், ஆர். நித்தியானந்தம் எனப்பலரும் பஞ்சாபிகேசனுக்கு தவில் வாசித்திருக்கிறார்கள்மேலும் இவரோடு ஈழத்தின் அனைத்து முன்னனி நாதஸ்வரக் கலைஞர்களும் பல்வேறு கச்சேரிகளில் இணைந்து வாசித்திருக்கிறார்கள். இன்று வாழ்ந்து வரும் பல வித்துவான்கள் அதனை பேறாகக் கருதும் அதேவேளை, இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு அவரோடு இணைந்து வாசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் என்றும் இருக்கத்தான் செய்யும்.

கலைஞர்கள் பிரபல்யம் அடைந்துவிட்டால் அவர்களது தனிமனித ஒழுக்கம் என்பது சிறிது தடம்புரண்டுவிடும் என்பது பொதுவான கருத்து. வித்துவக்காய்ச்சல் அவர்களைப் பற்றிக் கொண்டுவிடும். ஆனால் அவற்றிற்கெல்லாம் மசிந்து விடாமல், நிலை தளம்பாமல் இன்றுவரையும் வாழ்ந்து வரும் உத்தமசீலர் என்றால் அது முற்றிலும் உண்மையே. இன்முகத்தோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிய பண்பாளர். எதுவித பேதமும் பாராட்டாமல் அனைவரோடும் அன்பாக உறவைப் பேணினார். இவருக்கு முதன்முதலில் தங்கப் பதக்கம் கிடைத்தது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு மீலாத் நபி விழாவில்தான். இன, மதம் கடந்து இவரது இசை எல்லோரையும் ஈர்த்தது என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதன் பின்னர் இவருக்கு பட்டங்கள், பதக்கங்கள், பாராட்டுகள் குவிந்த வண்ணமே இருந்தது.

"லய ஞான குபேர பூபதிஎன்று எல்லோராலும் போற்றப்பட்ட தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் தவில் வாசிக்கமாட்டேன் என்று ஒதுங்கியிருந்தவேளை, எல்லோரும் அவரை அணுகி நீங்கள் தொடர்ந்தும் வாசிக்க வேண்டும், உங்கள் தனித்தவில் நாதத்தில் நாம் மூழ்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, வாசித்தால் பஞ்சாபிகேசனுக்கு மட்டுமே தவில் வாசிப்பேன் என்று மீண்டும் இசையுலகிற்குள் வந்தார் என்றால் பஞ்சாபிகேசனின் புகழ் வானளாவ நிற்கிறது என்பதில் எதுவித ஐயமுமில்லை.

ஒருதடவை மட்டுவில் அம்மன் கோவிலில் ஒரு திருவிழாவுக்காக சகல பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களை அழைத்திருந்தனர். அதை பத்திரிகையிலும் பிரசுரித்திருந்தனர். ஆனால் பஞ்சாபிகேசனுக்கு அவர்கள் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல் தெட்சணாமூர்த்தியை அழைக்கும் போது பஞ்சாபிகேசன் வாசிக்கிறார் என்று சொல்லியிருந்தனர். அப்படியே திருவிழாவிற்கு தெட்சணாமூர்த்தி வந்திருந்தார். கோவிலுக்கு வந்திருந்த பஞ்சாபிகேசனின் மகனிடம் அப்பா வரவில்லையா என்று வினாவ, மகனோ அப்பாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறினார். அவ்வளவுதான் தெட்சணாமூர்த்தி தவிலையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அந்தளவிற்கு பஞ்சாபிகேசனின் வித்துவத்தின் மீதும், மனிதப் பண்பின் மீதும் அளவற்ற காதல் கொண்டவர் தெட்சணாமூர்த்தி.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள், தனது குலதெய்வமான தனங்களப்பு பிள்ளையார் கோவில் மணவாளக்கோலத் திருவிழாவுக்கு திரு.பஞ்சாபிகேசன் அவர்கள் வந்து வாசித்தால் சிறப்பாக இருக்கும் என அழைத்த போது, அதே தினத்தில் வேறு ஒரு ஆலயத்தில் கச்சேரி செய்வதற்கு ஒத்துக் கொண்டுவிட்டார். பண்டிதமணி அழைக்கிறாரே என்று ஒப்புக்கொண்டதைத் தட்டாமால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். பண்டிதமணி அவர்கள் ஊஞ்சற்பாடலின் போதாவது வாசித்துத் தரும்படி கேட்க அதனை ஏற்று குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து வாசித்து அவரின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார். அந்தளவுக்கு பண்டிதமணி அவர்களின் மனத்தையும் வென்ற இசைக்கலைஞர் இவர். இவ்வாறுதான் பஞ்சாபிகேசன் அவர்கள் எல்லோருடனும் ஒன்றிப் பழகும் தன்மை கொண்டவர்.

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் மரபுகளை எல்லாம் உடைத்து, சமய முறைகள் அற்று, மந்திரம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட போது இராச வாத்தியமாகிய நாதஸ்வரம், தவிலை தவிர்க்க முடியாது எனச் சொல்லி, அதிலும் பஞ்சாபிகேசன் வந்து வாசித்தலே சிறப்பு என்று அழைத்து கௌரவித்தார். அதேபோல் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவருக்கு மட்டும் இரண்டு கச்சேரிகளை ஒழுங்கு செய்திருந்தார். அந்தளவுக்கு பஞ்சாபிகேசன் தனது இசையால் எல்லோரையும் கவர்ந்தவர்.

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாக ஆஸ்தான வித்துவானாக தொடர்ந்து வாசித்த பெருமையும் இவருக்குரியது
தந்தையும் தனயனும்
1949ம் ஆண்டில் அளவெட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகளான இரத்தினம் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார். குடும்பவாழ்வின் பயனாக ஆறு பிள்ளைகள் இவருக்கு. அதிலே இருவரை தனது வழியிலேயே நாதஸ்வர இசைக்கென அர்ப்பணித்துக் கொண்டார். தந்தையைப் போல தனயன்மாரும் வித்துவத்திலே மட்டுமல்லாது பண்பாலும் அன்பாலும் அனைவரையும் கவர்ந்தனர். ஒருவர் எம்.பி. நாகேந்திரன். அடுத்தவர் எம்.பி.விக்னேஸ்வரன். ஈழமும் அதனைக் கடந்து உலகின் பல பாகங்களிலும் தந்தையைப் போல இசையால் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர்.
தன்னுடைய 72 வயதில் பக்கவாத நோய் அவரை ஆட்கொண்டு உடலின் ஒரு பாகத்தை செயலிழக்கச் செய்த போது கூட, தனது மனவுறுதியால் அதனை எதிர்கொண்டு நோயிலிந்து மீண்டு வந்தார். தொடர்ந்தும் பல கச்சேரிகள் செய்தார். 2006 ம் ஆண்டு நண்பர் ஒருவரின் திருமண வீட்டிற்கு வந்து கச்சேரி செய்து சபையைச் சிறப்பித்தார். அந்த 82 வயதிலும் அவரின் அதே கம்பீரம், அதே இன் முகம், மக்களை மதிக்கின்ற மாண்பு எதுவும் குறைந்ததாகத் தெரியவில்லை. சற்று வியப்பாகவே இருந்தது. அந்தப் பெற்றோர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அரங்கிலே மங்கள வாத்தியம் வாசித்தது கலைக்காகவும், தன் மக்களுக்காகவும் அவர் எப்படி தன்னை அர்ப்பணித்திருந்தார் என்பதைப் புரியக் கூடியதாக இருந்தது.

ஏலவே குறிப்பிட்டது போல .வி.எம் சுல்தான் அவர்கள் மீலாத் விழாவில் வழங்கிய முதல்பதக்கத்தோடு இவர் பெற்ற கௌரவங்கள் தொடங்குகின்றன. இப்படிப்பட்ட ஒரு மகத்தான கலைஞனை எல்லோரும் கௌரவித்திருக்கிறார்களே என்று எண்ணும் போது அதில் வியப்பேதும் இல்லை.

திருக்கேதீஸ்வர தேவஸ்தானம் இவருக்குஇசை வள்ளல் நாதஸ்வர கலாமணிஎன்ற பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தது. சாவகச்சேரி இசை இரசிகர்கள்நாதஸ்வர இசை மேதைஎன்று விருது கொடுத்து மகிழ்ந்தனர். தென்மராட்சி இலக்கிய மன்றம்நாதஸ்வர சிரோன்மணிஎன்ற பட்டமும் பதக்கமும் கொடுத்து பாராட்டியது. இலங்கையின் கல்வி அமைச்சராக பதியுதீன் முகமது இருந்த காலத்தில், அமைச்சு மூலம்  “நாதஸ்வர கான வாரிதி”  என்ற கௌரவம் வழங்கப்பட்டது. திரு செல்லையா இராசதுரை அவர்கள் கலாசார அமைச்சராக இருந்த போது, அமைச்சினால்சுவர்ண ஞான திலகம்என்ற பட்டம் கிடைக்கப்பெற்றது. யாழ்ப்பாணக் கம்பன் கழகம்இசைப் பேரறிஞர்விருதினை வழங்கி சிறப்பித்தனர். “சிவகலாபூஷணம்என்ற பட்டத்தினை யாழ்ப்பாண இந்து கலாசார மன்றம் வழங்கி மாண்பு சேர்த்தது. வடக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் விருதும், இலங்கை அரசின்கலாபூஷணம்விருதும் அவருக்குக் கிடைத்த கௌரவங்களில் சேர்ந்து கொண்டன. இதே போல இவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கச்சேரி வாசித்த பல ஆலயங்களிலும், மன்றங்களிலும் தங்கப்பதக்கங்களும், பாராட்டுப்பத்திரங்களும் இவரது இசைக்கு கௌரவங்களாகக் கிடைத்தன

இவற்றிற்கெல்லாம் சிகரமாக அமைந்தது, இவரது வித்துவத்திறமையையும் தனியொழுக்க மாண்பையும் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2010 ம் ஆண்டு ஒக்ரோபர் 6ம் திகதிகௌரவ கலாநிதிபட்டம் வழங்கி இவரைக் கௌரவித்ததே. வாழும் போதே ஒரு கலைஞன் கௌரவிக்கப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதுமே அவன் கலைக்கு ஆற்றிய சேவையை உணர்ந்து கொள்ளப் போதுமானது. அந்தவகையில் திரு. பஞ்சாபிகேசன் போற்றுதலுக்கு உரிய ஒப்பற்ற கலைஞன் ஆவார்

முதுமையிலும் கம்பீரம் குறையாமல்......! 
கௌரவ கலாநிதிப் பட்டம் கிடைத்தமைக்காக இசைக் கலைஞர்கள் சேர்ந்து நடாத்திய ஒரு கௌரவிப்பு விழாவில் பஞ்சாபிகேசன் அவர்கள் இணுவில் கந்தசுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார். அங்கே கலாமண்டபத்தில் பெரும் விழா நடந்தது.  கல்விமான்கள், கலைஞர்கள், வர்த்தகப் பெருமக்கள் என அனைவரும் ஒன்றுகூடி வாழ்த்தி மகிழ்ந்தனர். இது ஒரு கலைஞன் வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கொள்ளலாம். வாழும் போதே கௌரவிக்கப் பட்ட ஒரே ஒரு நாதஸ்வரக் கலைஞர் இவர் என்றே நான் கருதுகிறேன். அதனால்தானோ தெரியாது பெரும் திரளாகத் திரண்டு தங்கள் பிதாமகரை வாழ்த்தியும் வணங்கியும் மகிழ்ந்தனர்இந்த ஆண்டு (2011) பெப்ருவரி மாதம் 27ம் திகதி சாவகச்சேரி மண் பஞ்சாபிகேசனுக்கு பெருவிழா எடுத்து கௌரவித்தது. சாவகச்சேரி சிவன் கோவில் கலாசார மண்டபத்தில் தென்மராட்சி கல்விமான்கள், கலைஞர்கள், வணிகர்கள், கலாரசிகர்கள் என அனைவரும் திரண்டிருந்தனர். இசைக்காக தன்னை அர்ப்பணித்த ஏந்தலை உள்ளத்தில் ஏற்றி வைத்து வணங்கி மகிழ்ந்தார்கள்.
 
பஞ்சாபிகேசன் அவர்களின் புகழும் நாமமும் என்றும் எமது தேசத்தையும் மக்களையும் தாண்டி உலகதோடும் பயணிக்க வேண்டும்.
===============================================================================
நன்றி 
இந்தத் தகவல்களை சேகரிப்பதற்கு உதவிய பஞ்சாபிகேசனின் மகன் எம்.பி.நாகேந்திரன், அவரது மருமகன் பாலகிருஸ்ணன், மற்றும் நண்பர்கள் சிவதீபன், சிவரதன், நவநீதன் ஆகியோருக்கு நன்றிகள்

மாதங்கி தர்மலிங்கம் என்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே திருவாளர் பஞ்சாபிகேசன்  அவர்களின் இசைவாழ்வு தொடர்பாக ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருந்தார்தகவலுக்காக அவரது கட்டுரையும் உசாத்துனையாக பயன்பட்டது. அவருக்கும் நன்றிகள்


நண்பன் தர்சனின் திருமண நிகழ்வின் காணொளிப் பதிவில் இருந்தே இந்தக் காணொளிக்காட்சி எடுக்கப்படு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கும் நன்றிகள்.


புகைப்படங்கள் பலவற்றைத் தந்தசதா வீடியோ” சதா அண்ணைக்கும் நன்றிகள்

செவ்வாய், 18 மே, 2010

இது இங்கே மலிவு....!!!

"இஞ்சே உங்க யாரையும் ஒரு ரெண்டு வேலைகாரரைப் பிடிக்கலாமே?” என்று தனக்குத் தெரிந்த ஒரு ஐயாவிடம் கேட்டாள் லட்சுமி. “எங்கயனை பிடிக்கப் போறாய் இந்த நேரத்தில...அது சரி என்னத்துக்கு மோனை?” என்ற ஐயாவிடம் . “ஒரு பங்கர்* வெட்ட வேணும் அப்பு, காசு கூட எண்டாலும் குடுக்கலாமனை, குறைஞ்சது ஒராளைத் தன்னும் பிடிச்சுத் தரமாட்டியளே...?” என்றவளிடம் “பாப்பம் உதில சந்திக்குத்தான் போறன், ஆரும் நிண்டால் கூட்டியாறன்......” என்று சொல்லி வெளிக்கிட்டார் ஐயா.

“ப்ச்ச்ச்...” என்றபடி நகர்ந்தாள் லட்சுமி. வீடு இல்லை. பத்தோடு பதினொன்றாக எல்லோருடனும் அவள் இருந்தாள். “ச்சீ ஒரு வேலைக்காரரையும் பிடிக்க முடியல...இந்த ஊட்டுக்க** வெட்டினாத்தான் உண்டு...இல்லாட்டி பாழ்படுவார் தொடங்கிடுவானவை..” என புறுபுறுத்தவளிடம் வந்தார்கள், அருகில் இருந்த மணியத்தாரும் மனைவி கமலாவும். ”என்ன பிள்ளை என்ன ஆச்சு..” என்று வாடிய முகத்துடன் இருந்த லட்சுமியிடம் கேட்டார் மணியண்ணை. “ஒரு பங்கர் வெட்ட ஆள் தேடினால் ஒருத்தரும் கிடைக்கல...இந்த அமைதிக்குள்ள வெட்டி முடிச்சிடோணும்.....” என்றாள் லட்சுமி. “ஏன் பிள்ளை அவர் எங்க..? நீங்கதானே ஒரு பங்கர் வெட்டி வச்சிருந்தனியள் .....அதுக்கு என்ன நடந்தது ..?” என கேட்டாள் கமலா.

கமலாவை விளித்து பார்த்துவிட்டு....எங்கோ பார்த்தபடி சொன்னாள், “ நேற்றைக்கு இரவு என்னை பங்கருக்குள்ள இருக்க சொல்லிப்போட்டு மனுசன் வெளியாலை வந்தவர். அந்த நேரம் பார்த்து கூவிக்கொண்டு வந்த ஷெல் அவருக்கு பக்கத்துல விழுந்தது போல.....அவர் அதிலையே .........” என்று இழுத்தாள். எந்த சலனமும், துக்கமும் இன்றி சொன்ன அவளின் கண்களில் நீர் உருண்டு கன்னத்தில் வழிந்தது. விம்மல்கள் எதுவும் இல்லை. உதடு துடித்து அழுகை எதுவும் இல்லை. ”அதுக்குள்ளயே அவரை புதைச்சுப் போட்டன். இப்ப ரெண்டு பிள்ளையளையாவது காப்பாத்த வேணும் அதுக்கு புது பங்கர் வெட்ட வேணும்” என்றவளைப் பார்த்து விறைத்து, விக்கித்து நின்றனர் மணியண்ணையும் கமலாவும்....!

* பங்கர் - பதுங்குகுழி
** ஊட்டுக்க - இடைவெளிக்குள் (வட்டாரச்சொல்)

மே 18 முள்ளிவாய்க்காலில் மரணமடைந்த அனைத்து ஈழத்தமிழ் உறவுகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்....!!!!!

திங்கள், 8 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா....!!!!

காதல் எவ்வளவு சுகமானது. எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறது என்பது கேள்வியே....!. சிலருக்கு கற்பனையாக, சிலருக்கு வாழக்கையாக, காதல் இனித்தே இருக்கிறது. சிலருக்கு அது கசக்கத்தான் செய்கிறது. இன்னும் சிலர் அது எமக்கு ஒவ்வாது என்று ஒதுங்கியே செல்கிறார்கள். திரைப்படங்களில் ஒவ்வொரு காதல் காட்சிகளையும் பார்க்கும் போதும் அல்லது சிறந்த ஒரு காதல் கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போதும் ஏன் ஒவ்வொரு காதலர்களையும் பார்க்கும் போதும் நாம் இப்படி எல்லாம் காதலிப்போமா அல்லது ஏன் எமக்கு இப்படி அமையவில்லை என்று எத்தனை பேர் மனதுக்குள் மறைவாக நினைத்திருப்போம். இரகசியமாக இரசித்தும் இருக்கிறோம், ஏங்கியும் இருக்கிறோம். எமக்கு அது கிடைக்கவில்லை என்றால் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது என எம்மை நாமே சமாதனாப்படுத்தி போய்க் கொண்டே இருக்கிறோம்.

படைப்பு என்பது எந்த ஒருவிதத்திலாவது ஒருவரின் மனதில் பதிந்து விட்டால் அது அந்தப் படைப்பாளியின் வெற்றியே. ரசனைகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டே தீரும். ஒத்த ரசனைகள் கொண்டவர்களை காண்பது அரிது. ரசிக்கும் பொருள் எது என்பதில் இங்கே பிரச்சினை இல்லை. ரசிப்புத்தன்மை என்பதுதான் வேறுபடுகிறது. ஒவ்வொருவர் மனதிலும் எது கூடியளவு தாக்கத்தை செலுத்துகிறதோ அதனை அவர்கள் ரசிக்கத்தொடங்கி விடுவார்கள். திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு கோணத்திலேயே இருக்கும். திரைப்பட அறிவு பூச்சியமாக கொண்ட ஒருவரின் இரசனையும் அதிலே அதிக நுணுக்கங்கள் தெரிந்த ஒருவரின் ரசனையும் வேறுபடும். ஒரு பொதுவான நிலைக்கு வரமுடியாமல் இரசனைகள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களா அல்லது இளையராஜா பாடல்களா சிறந்தது என்று இன்றும் வாதிட்டு காலத்தைக் கழிப்போர் பலர். சிவாஜிகணேசனா கமல்ஹாசனா சிறந்த நடிகர்கள் என்று போட்டி போடுவோர் அதிகம். ஒரு துறையில் அதிக அறிவு கொண்டவர்களின் பார்வையும், அந்தத்துறையில் பாமர அறிவு கொண்டவர்களின் பார்வையும் வேறுபடுகின்றது. எது நல்ல இசை, எது நல்ல திரைப்படம், எது நல்ல படைப்பு என்று விவாதங்களைத்தவிர்த்து அவரவர் ரசனைக்கேற்ப எதனையும் ரசிப்பது நல்லது.

கவிதைப் புத்தகங்கள் நிறைய வாசித்திருந்தும் ஒரு காதல் கவிதைத் தொகுப்பை முழு மூச்சில் ரசித்து வாசித்த திருப்தி “விண்ணைத்தாண்டி வருவாயா...” என்ற திரைப்படம் பார்த்தபின்பு கிடைத்தது. காதல்....! ஒரு மகத்தான வார்த்தை. எல்லோர்க்கும் கைகூடுவதில்லை. கைகூடியவர்களும் அதனை இறுதி வரை கட்டிக்காத்தார்களா என்பதெல்லாம் கேள்வியே...! ஆனால் அந்தக் காதல் வயப்பட்ட கணங்கள் எப்படி இருக்கும், ஒரு காதலன் அல்லது காதலியின் தவிப்பு எப்படி இருக்கும், இவையெல்லாம் நாம் நண்பர்களின் காதலின் போதோ அல்லது தெரிந்தவர்களின் காதலின் போது பார்த்திருக்கிறோம். அவற்றை எல்லாம் திரையில் வித்தியாசமான காட்சிகளோடு கண்டு களித்தேன்.

“விண்ணைத்தாண்டி வருவாயா..” என்ற திரைப்படம் பார்த்த பின்பு அது மனதில் எக்கச்சக்கமாக பதிந்து விட்டது. பாதித்துவிட்டது. காரணம் தெரியவில்லை. கௌதம் வாசுதேவ் மேனன் மீது கொண்ட நம்பிக்கையில் படம் பார்க்க சென்றேன் (நீண்ட காலத்தின் பின் பெரும் படையாக சென்றோம்). காதலை பல பரிமானங்களில் காட்டியாகிவிட்டது. இவர் எதை காதலில் புதிதாக சொல்லப் போகிறார் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் கௌதம் என்ற இயக்குநர் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தேன். சிம்பு என்ற ‘விரல் வித்தைக்காரன்’ கொஞ்சம் கண் முன்னால் வந்து மிரட்டினாலும்....இது கௌதம் படம் ஆகவே வாய் , கை பொத்திக் கொண்டு இருந்திருப்பார் என்பதால் துணிவோடே சென்றோம். இது விமர்சனம் அல்ல. அந்தப் படத்தைப் பார்த்ததும் எழுந்த என் எண்ணத்தின் பிரதிபலிப்பு அவ்வளவே....!!

பாடல்கள் வித்தியாசமாக இசையமைக்கப்பட்டிருந்தது. விருதுகளின் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல்களை மிக நுணுக்கமாகத்தான் வாங்கியிருக்கிறார் இயக்குநர். பாடல்களின் வெற்றியில் எனது சிற்றறிவுக்கு எட்டின வகையில் இசையமைப்பாளர்களை விட இயக்குநரே காரணமாக அமைகிறார் என்பது என் எண்ணம். அவர்கள்தான் இது வேண்டாம் அது வேண்டாம் அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என பிழிந்து வாங்குகிறார்கள். பிரபல இயக்குநர்கள் எடுத்த படங்களின் பாடல்களை நினைத்தால் உண்மை புலப்படும். பொதுவாகவே கௌதம் இயக்கும் படங்களின் பாடல்கள் ஒரு போதும் சோடை போனதில்லை. ஹரிஸ் ஜெயராஜ் உடன் முரன் பட்ட பின் பாடல்கள் தோற்று விடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருந்து ரஹ்மானிடம் வாங்கியிருக்கிறார். இதுவரை ரஹ்மானிடம் காணாத ஒரு வித்தியாசமான இசை.ஒரு காதல் நிரம்பி வழியும் ஒரு படத்திற்கு இசை எவ்வாறு இருக்க வேண்டும் என ரஹ்மானும் உணர்ந்து அனுபவித்து இசையமைத்திருக்கிறார்.

கௌதம் என்ற படைப்பாளி ஒவ்வொரு காட்சியையும் மிக அருமையாகவே எடுத்திருக்கிறார் என்பதை விட சிற்பத்தைப் போல செதுக்கியிருக்கிறார். அவருக்கு துணை புரிந்தவர்கள் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும். பின்னிப் பிணைந்து அருமையான ஒரு படத்தைத் தந்திருக்கிறார்கள். அனுபவித்து எடுத்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. அதுமட்டுமல்ல எம்மையும் அனுபவிக்க வைத்துவிட்டார். கேரளா அழகை அப்படியே கமெராவிற்குள் அள்ளிக் கொண்டு வந்து திரையில் எமக்கு முன்னால் கொட்டுகிறார்கள். கேரளாவிற்கு போகவேண்டும் என்ற ஆவல் நெருப்பில் எண்ணை ஊற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். கண்டதும் காதல்....! காதல் வரக் காரணம் த்ரிஷாவின் பேரழகும் நளினமும்....! சிம்பு காதலில் உருகுவதும், த்ரிஷாவை சந்தித்து கதைக்க முயற்சிக்கும் அல்லது கதைக்கும் காட்சிகள் அருமை...! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹைக்கூ கவிதைகள். ரசித்துத்தான் பார்க்க வேண்டும். வார்த்தைகளில் வெளிப்படுத்துவது என்பது கடினம். ஆனால் இவ்வளவு பெண்கள் இருக்கும் போதும் ஜெஸ்சியை ஏன் காதலித்தேன் என்று சிம்பு கேட்பதும் அந்தக் கேள்வியை அடிக்கடி ஒவ்வொருவரைக் கொண்டு கேட்கவைப்பதும் சிறப்பாக இருந்தது . காதலித்தவர்கள் எல்லோரும் மிக மிக இரசித்துத்தான் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். வாசகர்களில் அநேகம் பேர் “தபூ சங்கர்” அவர்களின் காதல் ஒழுகும் கவிதைகளை வாசித்திருப்பீர்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு அந்த உணர்வே இருந்தது.

படத்தில் ஒரு கட்டத்தில் த்ரிஷாவின் திருமணம் குழம்பிய அந்தத் தினத்தின் இரவு நேரத்தில், த்ரிஷாவின் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருவரும் (சிம்பு + த்ரிஷா) பயந்து பயந்து கதைப்பார்கள். மிக அருமையான காட்சி. வசனங்களும் காட்சி அமைப்புகளும் நேர்த்தியாக இருந்தது. அப்படியே மனதை மயிலிறகால் வருடுவது போல இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே உன்னை காதலிக்க ஆரம்பித்தேன் என்று மிக லாவகமாக அனாசயமாக சிம்புவிடம் த்ரிஷா சொல்லும் காட்சி அதி அற்புதம். நடுநிசியில் எவருக்கும் தெரியாமல் காதலி வீட்டில் நுழைந்து காதலியுடன் பேசுவது என்பதனை கௌதம் எங்கோ தன்வாழ்விலும் சந்தித்து இருக்க வேண்டும். காரணம் அப்படி இருந்தது அந்தக் காட்சி. அதே போல சிம்புவின் நண்பர் கணேஷ் அவர்களின் வீட்டில் யாரும் இல்லாத ஒரு தனிமைப் பொழுதில் விரிகிறது திரையில்....அத்தனையும் கவிதையே...!! அந்த ஒவ்வொரு காட்சியிலும் காதல் வழிகிறது. ”ஏன் இந்தக் கணம் இவ்வளவு இனிமையாக இருக்கிறது..” என்று சிம்பு கேட்க....அதற்கு த்ரிஷா....”இப்படி நாம் இருப்பது இதுதான் கடைசியோ....” என்று சொல்வார். அதன் போது த்ரிஷாவை சிம்பு பார்க்கும் பார்வையும்....த்ரிஷாவின் பதட்டமில்லாத பதிலும்....அருமை...!!! இப்படி இப்படி சொல்ல்லிக் கொண்டே போகலாம்...!!

திடீர் திருப்பமாக அமெரிக்காவில் த்ரிஷாவைச் சந்திக்கும் சிம்புவிடம்...”எப்படி இருப்பாள் உன்னவள்...” என்பது போன்ற த்ரிஷாவின் கேள்விக்கு சிம்புவின் பதில்களும் நடிப்பும் இவ்வளவு நாளும் எங்கைய்யா இருந்தாய் என்று கேட்க தோன்றுகிறது. தன்னால் இதுவரை தான் அழிந்தார் என்பதே சிம்பு விடயத்தில் உண்மை....! எவருமே எதிர்பாராதவிதமாக அமைந்திருந்தது முடிவு. இந்த இடத்தில் கௌதம் மேனனுக்கு எழுந்து நின்று கைதட்டினால் என்ன...! அருமை..!! நிச்சயமாக எல்லோரையும் பாதித்தே இருக்கும். தெலுங்கில் வேறு ஒரு முடிவும் தமிழில் வேறு ஒரு முடிவுமாக கௌதம் அவர்களின் ஆளுமையும் அவரின் இரசிப்புத்தன்மையும் பட்டவர்த்தனமாக இதிலே தெரிந்தது. த்ரிஷாவை ஓவியமாக காட்டிய கௌதம் மேனன் சிம்புவில் கூடிய கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ’மின்னலே’ மாதவன்....’வாரணம் ஆயிரம்’ சூரியா இவர்களிடம் இருந்த அந்த ஒளிமுகம் சிம்புவிடம் இல்லை என்பது எண்ணம்....!!!

இது விமர்சனம் இல்லை...என்னளவில் இந்தப் படத்திற்கான பதிவு. ஆழமாக மனதில் ஊடுருவி விட்டது. இது புலம்பலாக இருந்தாலும் அதுவும் பாதிப்பின் ஒரு வெளிப்பாடே...! இன்னும் காதுகளில் ஒலிக்கும் இசை. வசன அமைப்பு, காட்சி அமைப்பு ஒளிப்பதிவு, இசையமைப்பு எல்லாமே அவரவர்களின் கைவண்ணங்களே...! விண்ணில் இருந்தாலும் என்னவளே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மண்ணுக்கு என்று கேட்க தோன்றுகிறது....!!! (எவரும் இல்லை என்பது வேதனை...!!)