அது 80 களின் நடுப்பகுதி. சிறுபராயம். காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிசேகம். ஏராளமான தவில், நாதஸ்வர கலைஞர்கள் வரிசையாக இருந்து கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவர் மட்டும் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நெடிய மெல்லிய தோற்றம். புன்னகை தவழும் வதனம். தலையிலே குடுமி. காதிலே கடுக்கன். நாதஸ்வரம் முழுவதும் தங்கப்பதக்கங்கள். முதன் முதலாக அவரை அங்கேதான் பார்க்கக் கிடைத்தது. இன்றும் அதே தோற்றம். முதுமை அவரை அணைத்துக் கொண்டாலும், அவருக்கேயான அடையாளங்கள் எதுவும் அகன்றதாகத் தெரியவில்லை. கம்பீரமாகவே நின்று தனக்கான கௌரவத்தை ஏற்றுக் கொண்டார். ஆம், அவர்தான் ஈழத்தின் சாவகச்சேரி மண் பெற்றெடுத்த ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞன் திருவாளர் முருகப்பா பஞ்சாபிகேசன். கடந்த வருடம்(2010) இதே தினத்தில் (ஒக்ரோபர் 6) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அவருக்கு “கௌரவ கலாநிதி” பட்டம் வழங்கி கௌரவித்தது.
தனது புகழையும் ஒரு படி உயர்த்திக் கொண்டது. வாழும்போதே அந்தக் கலைஞன் கௌரவிக்கப்பட்டிருக்கிறான் எனும் போது மகிழ்ச்சியே.
ஈழமண் தந்த நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் தங்களது பெயர்களை இசையுலகில் மிக ஆழமாகவே பதித்துள்ளார்கள். எம்மைப் பொறுத்தவரை கலைகளின் தாயகம் என்று நாம் நினைக்கின்ற இந்தியா குறிப்பாக தமிழகக் கலைஞர்கள் வியந்து நிற்கும் அளவு எங்கள் தேச இசைவேளாளர்களின் மரபும் வளர்ச்சியும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு வியாபித்து இருக்கிறது. எம் மண்ணின் அரும் பெரும் சொத்தாக இருந்து மறைந்த கலைஞர்களான தவில்மாமேதை வி.தெட்சணாமூர்த்தி, நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதன் வரிசையில் வாழும் கலைஞனாக இன்றும் எம்முடன் இருக்கும் சாவகச்சேரி தந்த எம்.பஞ்சாபிகேசன் அவர்களும் முக்கிய இடம் பெறுகிறார்.
பஞ்சாபிகேசன் அவர்களின் புகழும் நாமமும் என்றும் எமது தேசத்தையும் மக்களையும் தாண்டி உலகதோடும் பயணிக்க வேண்டும்.
மாதங்கி தர்மலிங்கம் என்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே திருவாளர் பஞ்சாபிகேசன் அவர்களின் இசைவாழ்வு தொடர்பாக ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருந்தார். தகவலுக்காக அவரது கட்டுரையும் உசாத்துனையாக பயன்பட்டது. அவருக்கும் நன்றிகள்.
நண்பன் தர்சனின் திருமண நிகழ்வின் காணொளிப் பதிவில் இருந்தே இந்தக் காணொளிக்காட்சி எடுக்கப்படு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கும் நன்றிகள்.
புகைப்படங்கள் பலவற்றைத் தந்த ”சதா வீடியோ” சதா அண்ணைக்கும் நன்றிகள்.
ஈழமண் தந்த நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் தங்களது பெயர்களை இசையுலகில் மிக ஆழமாகவே பதித்துள்ளார்கள். எம்மைப் பொறுத்தவரை கலைகளின் தாயகம் என்று நாம் நினைக்கின்ற இந்தியா குறிப்பாக தமிழகக் கலைஞர்கள் வியந்து நிற்கும் அளவு எங்கள் தேச இசைவேளாளர்களின் மரபும் வளர்ச்சியும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு வியாபித்து இருக்கிறது. எம் மண்ணின் அரும் பெரும் சொத்தாக இருந்து மறைந்த கலைஞர்களான தவில்மாமேதை வி.தெட்சணாமூர்த்தி, நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதன் வரிசையில் வாழும் கலைஞனாக இன்றும் எம்முடன் இருக்கும் சாவகச்சேரி தந்த எம்.பஞ்சாபிகேசன் அவர்களும் முக்கிய இடம் பெறுகிறார்.
1924ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி அக்காலத்தில் புகழ்பெற்ற தவில் வித்துவான் கே.முருகப்பாபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இருவர். அவர்களுள் ஒருவரான நடராஜசுந்தரம் ஈழத்தில் புகழுக்குரிய ஒரு தவில் வித்துவான். அண்ணனோடு இணைந்து 40 ஆண்டுகள் தவில் வாசித்தவர். இவரது சகோதரி இராசம்பாள் என்பவர் தனித்தவில் மணியம் என்றழைக்கப்பட்ட சுப்ரமணியத்தின் மனைவியாவார்.
1930 களில், அப்போது நாதஸ்வர உலகில் கொடிகட்டிப் பறந்த வித்துவான்களாக சண்முகலிங்கம்பிள்ளை மற்றும் அப்புலிங்கம்பிள்ளை இருந்தனர். ஒரு நாதஸ்வரத்துக்கு ஒரு தவில் என்று இருந்த காலத்தில் முதன் முதலாக சோடியாகச் சேர்ந்து நாதஸ்வரம் வாசித்த பெருமை இவ்விருவரையும் சாரும். இவர்களுக்கு தவில் வாசித்தவர்களுள் முருகப்பாபிள்ளையும் ஒருவர். தனது மகன் நாதஸ்வரம் பயில இவர்களே சிறந்த குரு என எண்ணி பஞ்சாபிகேசனை
அவரது 10வது வயதிலேயே இவர்களிடம் அனுப்பி வைத்தார். தொடர்ந்து இராமையாபிள்ளை என்பவரிடமும் பி.எஸ். கந்தசாமிப்பிள்ளையிடமும் முறையாக நாதஸ்வரம் பயின்றதன் பேறாக தனது 15வது வயதில் முதற் கச்சேரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆலயத்தில் அரங்கேற்றினார் பஞ்சாபிகேசன்.
கம்பன் கழகம் “இசைப் பேரறிஞர்” விருது வழங்கிய போது |
இசையறிவை மேலும் வளர்க்கும் நோக்கோடு தமிழகம் சென்றார். அங்கே இவருக்கு குருவாக அமைந்தவர் கக்காயி நடராஜசுந்தரம்பிள்ளை. இவர் உலகம் போற்றிய நாதஸ்வர மேதை திருவாவடுதுறை இராஜரத்தினம்பிள்ளையின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலேயே மேலும் அய்யம்பேட்டை வேணுகோபாலபிள்ளையிடம் தனது இசையறிவை மெருகேற்றும் வாய்ப்பு பஞ்சாபிகேசனுக்கு அமைந்தது. இராஜரத்தினம்பிள்ளையும் , மகராஜபுரம் விஸ்வநாத ஐயரும் இணைந்து படைத்த இசைநிகழ்ச்சிகளை நேரே பார்த்தும் கேட்டும் உருகியதை இன்றும் நெகிழ்வோடு பகிர்ந்து கொள்ளுவார். அதனை தனக்குக் கிடைத்த பெரும்பாக்கியமாகவே கருதுகிறார்.
தாயகம் திரும்பியதும் அவர் ஈழத்து இசையுலகில் ஒரு மறுக்க முடியாத ஆளுமையாக இருந்தார் என்பதில் ஐயமேதுமில்லை. ஈழத்தில் பல பாகத்திலும் ஆயிரக்கணக்கான கச்சேரிகளை நடாத்தியிருப்பார். இசை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வலம் வந்தவர். அவர்களின் நெஞ்சங்களில் எல்லாம் குடியிருந்தவர். இன்றும் குடியிருப்பவர். சபையினைக் கண்ணால் அளப்பதும், அவர்களின் நாடியறிந்து அவர்களுக்கு நாதத்தை வழங்குவதிலும் பஞ்சாபிகேசனுக்கு நிகர் அவரே. இதனை இன்றும் பல இசை இரசிகர்கள் நினைத்து மகிழ்கிறார்கள்.
அப்போது திமிரி (கட்டைக்குழல்), பாரி (நெட்டைக்குழல்) என கலைஞர்கள் தமக்கிடையே முறுகிக் கொண்டிருந்த
நேரம். ஆண்டாண்டு காலமாக இசைவேளாளர்கள் வாசித்து வந்த பாரியையே தொடர்ந்து தனது கைகளில் ஏந்தி வாசித்து வந்தார். தனக்கென ஒரு பாணி அமைத்து அதன் வழியே தொடர்ந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் இசையுலகில் கோலோச்சி இருந்திருக்கிறார். முதுமையின் காரணமாக கச்சேரிகளில் கால்வைக்க முடியாமல் இருந்தாலும் இதுநாள் வரை இசையுலகில் தனது கால்களை ஆழமாகவே பதித்திருக்கிறார். இசைக் கலைஞனுக்கு கற்பனை சக்தி அபாரமாக இருத்தல் வேண்டும். அத்தோடு அரங்கைக் கவரும் வண்ணமும் படைக்கவேண்டும். இவையெல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர் பஞ்சாபிகேசன். தனது கச்சேரியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் பாதிப்பு இருப்பதாக அவரே அடிக்கடி கூறுவார். அதனால்தானோ தெரியாது இவர் வாசிக்கும் போது “சிங்காரவேலனே தேவா...” என்ற பாடல் இரசிகர்களை கட்டிப் போட்டுவிடும்.
நாதஸ்வர மேதை நடுநாயகமாக.... |
தமிழகத்தில் இருந்து நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் ஈழத்தில் வந்து வாசித்த காலங்களில் எல்லாம் சற்றேனும் சளைக்காது அவர்கள் வியக்கும் வண்ணம் பல கச்சேரிகளை படைத்திருக்கிறார். அவர்கள் பாராட்டையும் பெற்றிருக்கிறார். திருவாரூர் இராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் லெச்சையப்பா, அம்பல் இராமச்சந்திரன், பந்தனை நல்லூர் தெட்சணாமூர்த்திப்பிள்ளை, கோட்டூர் இராஜரத்தினம்பிள்ளை என தமிழக வித்துவான்களோடு சரிநிகராக நின்று வாசித்த பெருமை பஞ்சாபிகேசனைச் சாரும்.
ஈழத்து தவில் வித்துவான்களான தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி, என்.ஆர். சின்னராசா, எம்.
நடராஜசுந்தரம். என். குமரகுரு, நாச்சிமார்கோவிலடி கணேசபிள்ளை, ஆர். புண்ணியமூர்த்தி, என்.ஆர்.எஸ் சுதாகர் (சின்னராசாவின் மகன்) ரி.உதயசங்கர்( தெட்சணாமூர்த்தியின் மகன்), கே. சிவகுமார், ஆர். நித்தியானந்தம் எனப்பலரும் பஞ்சாபிகேசனுக்கு தவில் வாசித்திருக்கிறார்கள். மேலும் இவரோடு ஈழத்தின் அனைத்து முன்னனி நாதஸ்வரக் கலைஞர்களும் பல்வேறு கச்சேரிகளில் இணைந்து வாசித்திருக்கிறார்கள். இன்று வாழ்ந்து வரும் பல வித்துவான்கள் அதனை பேறாகக் கருதும் அதேவேளை, இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு அவரோடு இணைந்து வாசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் என்றும் இருக்கத்தான் செய்யும்.
கலைஞர்கள் பிரபல்யம் அடைந்துவிட்டால் அவர்களது தனிமனித ஒழுக்கம் என்பது சிறிது தடம்புரண்டுவிடும் என்பது பொதுவான கருத்து. வித்துவக்காய்ச்சல் அவர்களைப் பற்றிக் கொண்டுவிடும். ஆனால் அவற்றிற்கெல்லாம் மசிந்து விடாமல், நிலை தளம்பாமல் இன்றுவரையும் வாழ்ந்து வரும் உத்தமசீலர் என்றால் அது முற்றிலும் உண்மையே. இன்முகத்தோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிய பண்பாளர். எதுவித பேதமும் பாராட்டாமல் அனைவரோடும் அன்பாக உறவைப் பேணினார். இவருக்கு முதன்முதலில் தங்கப் பதக்கம் கிடைத்தது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு மீலாத் நபி விழாவில்தான். இன, மதம் கடந்து இவரது இசை எல்லோரையும் ஈர்த்தது என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதன் பின்னர் இவருக்கு பட்டங்கள், பதக்கங்கள், பாராட்டுகள் குவிந்த வண்ணமே இருந்தது.
"லய ஞான குபேர பூபதி” என்று எல்லோராலும் போற்றப்பட்ட தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் தவில் வாசிக்கமாட்டேன் என்று ஒதுங்கியிருந்தவேளை, எல்லோரும் அவரை அணுகி நீங்கள் தொடர்ந்தும் வாசிக்க வேண்டும், உங்கள் தனித்தவில் நாதத்தில் நாம் மூழ்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, வாசித்தால் பஞ்சாபிகேசனுக்கு மட்டுமே தவில் வாசிப்பேன் என்று மீண்டும் இசையுலகிற்குள் வந்தார் என்றால் பஞ்சாபிகேசனின் புகழ் வானளாவ நிற்கிறது என்பதில் எதுவித ஐயமுமில்லை.
ஒருதடவை
மட்டுவில் அம்மன் கோவிலில் ஒரு திருவிழாவுக்காக சகல பிரபல நாதஸ்வர, தவில்
வித்துவான்களை அழைத்திருந்தனர். அதை பத்திரிகையிலும் பிரசுரித்திருந்தனர். ஆனால்
பஞ்சாபிகேசனுக்கு அவர்கள் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல்
தெட்சணாமூர்த்தியை அழைக்கும் போது பஞ்சாபிகேசன் வாசிக்கிறார் என்று சொல்லியிருந்தனர்.
அப்படியே திருவிழாவிற்கு தெட்சணாமூர்த்தி வந்திருந்தார். கோவிலுக்கு வந்திருந்த
பஞ்சாபிகேசனின் மகனிடம் அப்பா வரவில்லையா என்று வினாவ, மகனோ அப்பாவிற்கு அழைப்பு
விடுக்கவில்லை என்று கூறினார். அவ்வளவுதான் தெட்சணாமூர்த்தி தவிலையும் எடுத்துக்
கொண்டு சென்றுவிட்டார். அந்தளவிற்கு பஞ்சாபிகேசனின் வித்துவத்தின் மீதும், மனிதப்
பண்பின் மீதும் அளவற்ற காதல் கொண்டவர் தெட்சணாமூர்த்தி.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள், தனது குலதெய்வமான தனங்களப்பு பிள்ளையார் கோவில் மணவாளக்கோலத் திருவிழாவுக்கு திரு.பஞ்சாபிகேசன் அவர்கள் வந்து வாசித்தால் சிறப்பாக இருக்கும் என அழைத்த போது, அதே தினத்தில் வேறு ஒரு ஆலயத்தில் கச்சேரி செய்வதற்கு ஒத்துக் கொண்டுவிட்டார். பண்டிதமணி அழைக்கிறாரே என்று ஒப்புக்கொண்டதைத் தட்டாமால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். பண்டிதமணி அவர்கள் ஊஞ்சற்பாடலின் போதாவது வாசித்துத் தரும்படி கேட்க அதனை ஏற்று குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து வாசித்து அவரின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார். அந்தளவுக்கு பண்டிதமணி அவர்களின் மனத்தையும் வென்ற இசைக்கலைஞர் இவர். இவ்வாறுதான் பஞ்சாபிகேசன் அவர்கள் எல்லோருடனும் ஒன்றிப் பழகும் தன்மை கொண்டவர்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் மரபுகளை எல்லாம் உடைத்து, சமய முறைகள் அற்று, மந்திரம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட போது இராச வாத்தியமாகிய நாதஸ்வரம், தவிலை தவிர்க்க முடியாது எனச் சொல்லி, அதிலும் பஞ்சாபிகேசன் வந்து வாசித்தலே சிறப்பு என்று அழைத்து கௌரவித்தார். அதேபோல் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவருக்கு மட்டும் இரண்டு கச்சேரிகளை ஒழுங்கு செய்திருந்தார். அந்தளவுக்கு பஞ்சாபிகேசன் தனது இசையால் எல்லோரையும் கவர்ந்தவர்.
திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாக ஆஸ்தான வித்துவானாக தொடர்ந்து வாசித்த பெருமையும் இவருக்குரியது.
தந்தையும் தனயனும் |
1949ம் ஆண்டில் அளவெட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகளான இரத்தினம் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார். குடும்பவாழ்வின் பயனாக ஆறு பிள்ளைகள் இவருக்கு. அதிலே இருவரை தனது வழியிலேயே நாதஸ்வர இசைக்கென அர்ப்பணித்துக் கொண்டார். தந்தையைப் போல தனயன்மாரும் வித்துவத்திலே மட்டுமல்லாது பண்பாலும் அன்பாலும் அனைவரையும் கவர்ந்தனர். ஒருவர் எம்.பி. நாகேந்திரன். அடுத்தவர் எம்.பி.விக்னேஸ்வரன். ஈழமும் அதனைக் கடந்து உலகின் பல பாகங்களிலும் தந்தையைப் போல இசையால் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர்.
தன்னுடைய 72 வயதில் பக்கவாத நோய் அவரை ஆட்கொண்டு உடலின் ஒரு பாகத்தை செயலிழக்கச் செய்த போது கூட, தனது மனவுறுதியால் அதனை எதிர்கொண்டு நோயிலிந்து மீண்டு வந்தார். தொடர்ந்தும் பல கச்சேரிகள் செய்தார். 2006 ம் ஆண்டு நண்பர் ஒருவரின் திருமண வீட்டிற்கு வந்து கச்சேரி செய்து சபையைச் சிறப்பித்தார். அந்த 82 வயதிலும் அவரின் அதே கம்பீரம், அதே இன் முகம், மக்களை மதிக்கின்ற மாண்பு எதுவும் குறைந்ததாகத் தெரியவில்லை. சற்று வியப்பாகவே இருந்தது. அந்தப் பெற்றோர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அரங்கிலே மங்கள வாத்தியம் வாசித்தது கலைக்காகவும், தன் மக்களுக்காகவும் அவர் எப்படி தன்னை அர்ப்பணித்திருந்தார் என்பதைப் புரியக் கூடியதாக இருந்தது.
ஏலவே குறிப்பிட்டது போல ஏ.வி.எம் சுல்தான் அவர்கள் மீலாத் விழாவில் வழங்கிய முதல்பதக்கத்தோடு இவர் பெற்ற கௌரவங்கள் தொடங்குகின்றன. இப்படிப்பட்ட ஒரு மகத்தான கலைஞனை எல்லோரும் கௌரவித்திருக்கிறார்களே என்று எண்ணும் போது அதில் வியப்பேதும் இல்லை.
திருக்கேதீஸ்வர தேவஸ்தானம் இவருக்கு “இசை வள்ளல் நாதஸ்வர கலாமணி” என்ற பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தது. சாவகச்சேரி இசை இரசிகர்கள் “நாதஸ்வர இசை மேதை” என்று விருது கொடுத்து மகிழ்ந்தனர். தென்மராட்சி இலக்கிய மன்றம் “நாதஸ்வர சிரோன்மணி” என்ற பட்டமும் பதக்கமும் கொடுத்து பாராட்டியது. இலங்கையின் கல்வி அமைச்சராக பதியுதீன் முகமது இருந்த காலத்தில், அமைச்சு மூலம் “நாதஸ்வர கான வாரிதி” என்ற கௌரவம் வழங்கப்பட்டது. திரு செல்லையா இராசதுரை அவர்கள் கலாசார அமைச்சராக இருந்த போது, அமைச்சினால் “சுவர்ண ஞான திலகம்” என்ற பட்டம் கிடைக்கப்பெற்றது. யாழ்ப்பாணக் கம்பன் கழகம் “இசைப் பேரறிஞர்” விருதினை வழங்கி சிறப்பித்தனர். “சிவகலாபூஷணம்” என்ற பட்டத்தினை யாழ்ப்பாண இந்து கலாசார மன்றம் வழங்கி மாண்பு சேர்த்தது. வடக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் விருதும், இலங்கை அரசின் “கலாபூஷணம்” விருதும் அவருக்குக் கிடைத்த கௌரவங்களில் சேர்ந்து கொண்டன. இதே போல இவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கச்சேரி வாசித்த பல ஆலயங்களிலும், மன்றங்களிலும் தங்கப்பதக்கங்களும், பாராட்டுப்பத்திரங்களும்
இவரது இசைக்கு கௌரவங்களாகக் கிடைத்தன.
இவற்றிற்கெல்லாம் சிகரமாக அமைந்தது, இவரது வித்துவத்திறமையையும் தனியொழுக்க மாண்பையும் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2010 ம் ஆண்டு ஒக்ரோபர் 6ம் திகதி “கௌரவ கலாநிதி” பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்ததே. வாழும் போதே ஒரு கலைஞன் கௌரவிக்கப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதுமே அவன் கலைக்கு ஆற்றிய சேவையை உணர்ந்து கொள்ளப் போதுமானது. அந்தவகையில் திரு. பஞ்சாபிகேசன் போற்றுதலுக்கு உரிய ஒப்பற்ற கலைஞன் ஆவார்.
முதுமையிலும் கம்பீரம் குறையாமல்......! |
கௌரவ கலாநிதிப் பட்டம் கிடைத்தமைக்காக இசைக் கலைஞர்கள் சேர்ந்து நடாத்திய ஒரு கௌரவிப்பு விழாவில் பஞ்சாபிகேசன்
அவர்கள் இணுவில் கந்தசுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக இணுவில் பரராஜசேகரப்
பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார். அங்கே கலாமண்டபத்தில் பெரும் விழா
நடந்தது. கல்விமான்கள், கலைஞர்கள்,
வர்த்தகப் பெருமக்கள் என அனைவரும் ஒன்றுகூடி வாழ்த்தி மகிழ்ந்தனர். இது ஒரு கலைஞன்
வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கொள்ளலாம். வாழும் போதே கௌரவிக்கப் பட்ட ஒரே ஒரு நாதஸ்வரக் கலைஞர் இவர் என்றே நான் கருதுகிறேன். அதனால்தானோ தெரியாது பெரும் திரளாகத் திரண்டு தங்கள் பிதாமகரை வாழ்த்தியும் வணங்கியும் மகிழ்ந்தனர். இந்த
ஆண்டு (2011) பெப்ருவரி மாதம் 27ம் திகதி சாவகச்சேரி மண் பஞ்சாபிகேசனுக்கு
பெருவிழா எடுத்து கௌரவித்தது. சாவகச்சேரி சிவன் கோவில் கலாசார மண்டபத்தில்
தென்மராட்சி கல்விமான்கள், கலைஞர்கள், வணிகர்கள், கலாரசிகர்கள் என அனைவரும்
திரண்டிருந்தனர். இசைக்காக தன்னை அர்ப்பணித்த ஏந்தலை உள்ளத்தில் ஏற்றி வைத்து
வணங்கி மகிழ்ந்தார்கள்.
===============================================================================
நன்றி
இந்தத் தகவல்களை சேகரிப்பதற்கு உதவிய பஞ்சாபிகேசனின் மகன் எம்.பி.நாகேந்திரன், அவரது மருமகன்
பாலகிருஸ்ணன், மற்றும் நண்பர்கள் சிவதீபன், சிவரதன், நவநீதன் ஆகியோருக்கு நன்றிகள்.
நண்பன் தர்சனின் திருமண நிகழ்வின் காணொளிப் பதிவில் இருந்தே இந்தக் காணொளிக்காட்சி எடுக்கப்படு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கும் நன்றிகள்.
புகைப்படங்கள் பலவற்றைத் தந்த ”சதா வீடியோ” சதா அண்ணைக்கும் நன்றிகள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக