வியாழன், 12 மார்ச், 2009

கிரிக்கெட்டில் ஒரு சாதனைப் போட்டி..!

கிரிக்கட் வரலாற்றில் ஓர் பொன்நாள். சாதனை ஏட்டின் சரித்திரநாள். அதுதான் 12.03.2006. ஆம் இந்தத் திகதியில் தான் அந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி நடைபெற்றது. தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதின. இது ஒருநாள் போட்டி வரலாற்றின் 2349வது போட்டி. ஏற்கனவே இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் இந்த 5வது போட்டி மிகமிக முக்கியமானதாக இருந்தது. தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ் பேர்க் நகரின் புதிய வொன்டரஸ் அரங்கத்தில் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. அனல் பறக்கும் போட்டியாக இது அமையும் என்பதால் 32000 ற்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கில் காத்திருக்கிறார்கள்.

அணிகளும் தயாராகின. நாணயச் சுழற்சியில் ஆஸ்திரேலியா அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இல்லை. 4வது போட்டியில் விளையாடிய அதே அணி. ஆனால் தென்னாபிரிக்காவுக்கு ஆரம்பமே சவால்தான். சகலதுறை ஆட்டக்காரர் பொல்லக் அணியில் இல்லை. அவரிற்குப் பதிலாக ஜோன் வன்டர் வாத் இணைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஆரம்ப ஜோடி கில்கிறிஸ்ட், மற்றும் சைமன் கட்டிச் களம் புகுந்தனர்.


முதலாவது பந்து வீச்சினை வீச மக்காயா நிற்ரினி தயாரானார். முதலாவது ஓவரின் நான்காவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தினை கில்கிறிஸ்ட் பெற்று கணக்கினை ஆரம்பித்தார். என்ரினியுடன் அன்ரூ ஹோல் இணைந்து பந்து வீசினார். இருவரும் ஆஸ்திரேலியருக்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை. பொல்லக் இல்லை என்ற துணிவில் ஆரம்ப ஜோடி அனாசயமாக அடித்தாடியது. ஓர் அட்டகாசமான ஆரம்பம். ஆரம்பமே அனல் பறந்தது. கில்கிறிஸ்டின் துடுப்பில் இருந்து பந்துகள் சீறிக்கொண்டு எல்லைக் கோடுகளைத் தொட்டது. 12வது ஓவரில் கில்கிறிஸ்ட் 35 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் அரைச் சதத்தைத் தொட்டார். 15 ஓவர் நிறைவில் இலக்கு நஷ்டமின்றி 96 ஓட்டங்கள். சிறந்த ஒரு அடித்தளம். ஆனால் அடுத்த ஓவரில் ரெலிமேக்கஸ் வீசிய பந்தினை கில் கிறிஸ்ட் அடிக்க அன்ருஹோல் ஒரு கையால் அற்புதமாக பிடியெடுக்க 1வது விக்கட் வீழ்ந்தது. அடுத்து கட்டிச் உடன் இணைந்தார் அணித்தலைவர் பொண்டிங்.


இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 93 ஓட்டங்களுக்குள் சுருண்டது, அவரின் மனதிற்குள் ரணமாக இருந்தது. இருந்தாலும் தனது கணக்கை ஆரம்பிக்க 7 பந்துகள் காத்திருந்தார். இதற்கிடையில் கட்டிச் தனது அரைச் சதத்தை 60வது பந்தில் 6 நான்குகள், ஒரு ஆறுடன் நிறைவு செய்தார். கட்டிச்சின் அரைச்சதத்தை பொண்டிங் ஒரு நான்குடன் கொண்டாடினார். அந்த நான்குடன் பொண்டிங் ஒரு தெம்பு பெற்றார். அதை 22வது ஓவரில் ரெலிமேக்கஸ் இன் பந்துக்களில் 3 நான்கு ஓட்டங்களைப் பெற்று நிரூபித்தார். பிறகென்ன ஆட்டம் சூடுபிடித்தது. மளமளவென்று ஓட்டங்கள் ஏறின. இதற்கு சான்றாக கலிஸின் ஒரு ஓவரில் பொண்டிங் 2 ஆறு ஓட்டங்களை அடுத்தடுத்து பெற்றார். இரண்டாவது ஆறுடன் தனது அரைச்சதத்தை அட்டகாசமாகக் கடந்தார். இதற்காக பொண்டிங் 43 பந்துகளை எதிர்கொண்டார். 6 நான்குகள், 2 ஆறுகள் அடக்கம். இந்தத் தெம்புடன் பொண்டிங்கின் துடுப்பு சுழன்றது. ஓட்டங்கள் இலகுவாகக் கிடைத்தன. அப்போது கட்டிச் 79 ஓட்டங்களுடன் என்ரினியின் பந்தில் ரெலிமேக்கஸிடம் பிடிகொடுத்து அவுட்டானார்.

திடீர் திருப்பம். யாரும் எதிர்பாராத வகையில் மைக்கல் ஹசி களமிறங்கினார். பொண்டிங்குடன் இணைந்தார். அப்போது ஆஸ்திரேலியா 216/2, பொண்டிங் 72. இதன் பிறகுதான் தென்னாபிரிக்காவிற்கு சோதனை தொடங்கியது. பந்து வீச்சாளர்களுக்கு மதிப்பு தராமல் இருவரும் ஓட்டங்களைக் குவித்தனர். பொண்டிங் தான் சந்தித்த 71வது பந்தில் 9 நான்கு, 5 ஆறு அடங்கலாகத் தனது 20வது சதத்தை எட்டினார். 40வது ஓவரில் ஆஸ்திரேலியா 300 என்ற பெரிய ஓட்ட எண்ணிக்கையைத் தொட்டது. இன்னமும் 8 விக்கட்டுக்கள் இறுதி 10 ஓவரில் எதுவும் நடக்கலாம். கிறீம் ஸ்மித்தின் முகத்தில் ஈயாடவில்லை. 41வது ஓவரில் ஹசியும் ஐம்பதைக் கடந்தார். 33 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்குகள் ஒரு ஆறு அடங்கலாக அரைச்சதம் இருந்தது. பின்பு என்ன? எல்லாப் பந்துகளும் எல்லைக் கோடுகளுக்கு சென்றது. பொண்டிங்கும் ஹசியும் இணைந்து தென்னாபிரிக்க வீரர்களை துவம்சம் செய்தனர். வான வேடிக்கை நடத்தினர்.எங்களையா 93 ஓட்டங்களுக்குள் அடக்கினீர்கள் என்று ஆர்ப்பரித்து எழுந்து கேட்பது போல் அடி இருந்தது. பந்துகள் நாலா திசையும் பறந்தன.

44வது ஓவரின் இறுதிப்பந்தில் பொண்டிங்கின் அடித்த ஆறுடன் ஆஸ்திரேலியா 350 ஐக் கடந்தது. அடுத்த பந்தில் என்னாலும் இயலும் என்று ஹசியும் தன்பங்கிற்கு ஒரு ஆறு ஓட்டத்தை அரங்குக்குள் அடித்து பெற்றார். ஒவ்வொரு ஓவரிலும் ஆறுகள், நான்குகளுக்கு பஞ்சம் இல்லை. பந்துகள் பஞ்சாய் பறந்தன. அணி 374 ஓட்டங்களை பெற்ற போது ஹோலின் பந்தில் என்ரினியிடம் பிடிகொடுத்து ஹசி ஆட்டமிழந்தார். ஹசி 51 பந்தில் 81 ஓட்டங்களை பெற்றார். இவர் பொண்டிங்குடன் இணைந்து 97 பந்தில் 154 ஓட்டங்களை இணைப்பாட்டத்தின் மூலம் தமக்குள் பகிர்ந்து கொண்டார். அவர் ஆட்டமிழந்தால் என்ன நான் இருக்கிறேன் என்பது போல ஹோலின் பந்தில் ஒரு ஆறை அடித்து தனது 150 ஓட்டங்களைக் கடந்தார் பொண்டிங். அடுத்து சைமன்ட்ஸ் வந்து பொண்டிங்குடன் இணைந்தார்.

48 வது ஓவரில் நிறையவே நடந்தது. வீசியவர் ரெலிமேக்கஸ். இந்த ஓவரில் சைமன்ட்ஸ் அடித்த ஒரு ஆறு இலங்கை அணிக்கு ஆப்பாக இருந்தது. ஆம் அஸ்திரேலியா, இலங்கை அணியின் 398 என்ற ஓட்டத்தை கடந்து 400 ஐ எட்டியது. உலக கிரிக்கட் வரலாற்றில் 400 ஓட்டங்கள். நினைக்கவே தலைசுற்றும். இதே ஓவரில் அணியின் எண்ணிக்கை 407 ஆக இருந்த போது பொண்டிங் அவுட்டானார். அவர் அணித்தலைவர் என்கிற ரீதியில் பொறுப்பாகவும், அதிரடியாகவும் ஆடி 105 பந்தில் 13 நான்குகள் 9 ஆறுகள் அடங்கப்பெற்ற அட்டகாசமான 164 ஓட்டங்களைப் பெற்றார். அடித்தாடவேண்டிய நேரம், எனவே பிரட்லீ களமிறங்கினார். ஓவர் நிறைவுக்கு வர, இந்த ஓவரில் ரெலமேக்கஸ் 28 ஓட்டங்களை அள்ளி வழங்கினார். 50 ஓவர் நிறைவில் ஆஸ்திரேலியா ஒரு இமாலய இலக்கான 434 ஓட்டங்களை 4 விக்கட்டுக்களை இழந்து பெற்றது. இதற்குள் 43 நான்குகள் மற்றும் 14 ஆறுகள் அடங்கும்.

ஆஸ்திரேலியா அணி வீரர்களின் ஓய்வு அறையில் வீரர்கள் மிகவும் குதூகலமாக இருந்தார்கள். தாம் ஒரு உலக சாதனையை நிகழ்த்திய பெருமிதம் இருந்தது. பொதுவாகவே ஆஸ்திரேலியர்களுக்கு இருக்கும் ஏளனப்பார்வைகள் அன்றைக்கு சற்று அதிகமாகவே இருந்தது. ரசிகர்கள் போல் தாமும் வாய்க்குள் விரல் வைத்து விசில் அடித்து சாதனையை கொண்டாடினர். முன்னதாக புகழ்பெற்ற வர்ணனையாளர் ரொனிகிரேய்க் 31வது ஓவர் நடந்து கொண்டு இருந்த போது ஆஸ்திரேலியர்களின் ஆட்டத்தை நன்கு கணித்து இலகுவாக 400 ஓட்டங்களைப் பெறுவார்கள் என்று ஆரூடம் சொன்னதை ஆஸதிரேலியர்கள் நிரூபித்தனர். ஆஸ்திரேலியர்கள் மீண்டும் தாங்கள்தான ஒருநாள் ஜாம்பவான்கள் என்பதை வொன்டரர்ஸ் அரங்கில் காட்டினர். ஆஸதிரேலியர்கள் ஆட்டம் ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமைந்தது. தென்னாபிரிக்க ரசிகர்களுக்கு ஆத்திரமாகவும் அவமானமாகவும் இருந்தது. இந்த சாதனையை தமக்கு எதிராக பெற்றுவிட்டார்களே என்று. இருந்தாலும் என்னதான் நடக்கும் என்று பொறுமையுடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.


இனி ஆஸ்திரேலியா களத்தடுப்பு. தென்னாபிரிக்கா துடுப்பாட்டம். ரசிகர்கள் நெஞ்சில் கலக்கம். இந்த ஓட்ட எண்ணிக்கையை இவர்களால் எட்ட முடியுமா? அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக.... பொதுவாக வெற்றி இலக்கு 300 ஐ கடந்தாலே ஒரு உளவியல் அழுத்தம் வந்துவிடும். இந்த அழுத்தத்திற்குள் எதை சாதிக்க போகிறார்கள்... களமிறங்கிய ஆஸதிரேலிய அணிவீரர்களின் முகத்தில் ஒரே மகிழ்ச்சி. அனைவரும் சிரித்த முகத்துடன் இருந்தனர். இது வேறு தென்னாபிரிக்கர்களை வெறுப்பேற்றியது.

வழமை போல ஸ்மித்தும் டிப்பெனரும் துடுப்புடன் களமிறங்கினர். ஆஸ்திரேலியாவின் வேகப்புயல் பிரட்லீ பந்தை கையில் எடுத்தார். முதற் பந்தே ஒரு அகலப்பந்து. தென்னாபிரிக்காவின் கணக்கு தொடங்கியது. இரண்டாவது ஒவரில் பிராக்கன் வீசிய பந்தில் துடுப்பில் பட்ட பந்து நேரடியாகவே விக்கட்டில் பட டிப்பெனர் அவுட். ஆரம்பமே அதிர்ச்சி. ஆஸ்திரேலியர்கள் ஆரவாரித்தனர்.களமிறங்கினார் ஹேர்சல் கிப்ஸ். ரசிகர்கள் பயந்தனர், 2வது போட்டியில் தாம் ஆஸ்திரேலியர்களை சுருட்டியதற்கு இன்று அவர்கள் தம்மை சுருட்டப்போகிறார்களோ என்று. ஆனால் கிப்ஸும் ஸ்மித்தும் எல்லோர் எண்ணங்களையும் மாற்றத் தயாராகினர். மெதுவாக அடி எடுத்து வைத்து தொடங்கினர்.பந்துகள் எல்லைக்கோடுகளை எளிதாக கடந்தன. ஓட்டங்கள் குவிந்தன. 8வது ஓவரின் முதற்பந்தில் கிப்ஸ் பெற்ற நான்கு ஓட்டத்துடன் தென்னாபிரிக்கா 50 ஐ கடந்தது. அந்த ஓவர் நிறைவில் 57/1.
அடுத்து வந்த ஓவர்கள் அதிரடியாக அமைந்தன. தென்னாபிரிக்கா நிதானமாக முன்னேறியது. நான்குகள்தான் அதிகமாக நாலாபுறமும் பறந்தன. ஒரு பறம் ஸமித். மறுபுறம் கிப்ஸ். இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் அரைச்சதத்தை பெற்றனர். முதலில் கிப்ஸ் 46 பந்தில் 6 நான்குகள் ஒரு ஆறுடன் பெற்றார். ஸமித் 36 பந்தில் 10 நான்குகளுடன் சிறப்பாக அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இப்போது தென்னாபிரிக்கா 15 ஓவர்கள் நிறைவில் 120 ஓட்டங்கள். மிகச்சிறந்த ஓட்ட விகிதம். பொண்டிங் சிறிது கலங்கினார். ஆனால் அவர் நினைத்தது இந்த ஆட்டத்தை அடக்கலாம் என்று. முடியவில்லை. கிப்ஸும் ஸ்மித்தும் எங்களுக்கா அடித்து காட்டினீர்கள், எமக்கும் தெரியும் வித்தை என்பது போல் கொளுத்தித் தள்ளினர். ஹசி மற்றும் பொண்டிங் ஜோடி எப்படி தென்னாபிரிக்காவிற்கு நெருக்கடி கொடுத்ததோ அதே போன்று கிப்ஸ் மற்றும் ஸ்மித் ஜோடி ஆஸ்திரேலியாவிற்கு ஆக்கினையாக இருந்தது.தென்னாபிரிக்காவில் போட்டி என்பதால் தென்னாபிரிக்க ரசிகர்களே அதிகம். ஒவ்வொரு நான்கு மற்றும் ஆறு ஓட்டங்களுக்கும் அரங்கம் ஒரு தடவை அதிரும். இருவரும் மதம் கொண்ட யானை போல் மூர்க்கமாக ஆஸ்திரேலியர்களைத் தாக்கினர். எப்போதும் ஓட்ட விகிதத்தை 8 ற்கு மேலேயே வைத்திருந்தனர். ஸ்மித்தின் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது. சைமன்ட்ஸ் மற்றும் கிளார்க்கின் பந்துகளில் அவர் பெற்ற இரண்டு ஆறுகள் அவரின் ஆட்டத்திற்கு சிகரமாக அமைந்தது.

இருவரும் இணைந்து 128 பந்துகளில் 187 ஓட்டங்களை மணியாக சேகரித்த போது 23வது ஓவரில் ஸ்மித் கிளார்க வீசிய முதற்பந்தை ஆறாக மாற்ற முனைந்தார். உயர்ந்து சென்றதை எல்லைக்கோட்டிற்கு மிகமிகமிக அருகே வைத்து ஹசி அதனை அழகாக பிடி எடுத்தார். ஆக வெறும் 55 பந்தில் 13 நான்குகள் 2 ஆறுகள் அடங்கலாக 90 ஓட்டங்களுடன் ஸ்மித் அவுட்டானார். தென்னாபிரிக்க 190/2. ஸ்மித் அவுட்டான அடுத்த பந்தில் கிப்ஸ், ஸமித்தை எடுத்து விட்டீர்கள் , உங்களுக்கு தலையிடியாக நான் இருப்பேன் என்பது போல அரங்குக்குள் அடித்து அட்டகாசமான ஆறு ஓட்டத்தை பெற்றார். அந்த ஓவரின் இறுதியிலேயே தென்னாபிரிக்கா 200 ஐ கடந்தது. 23 ஓவர் நிறைவில் 200/2.

24வது ஓவரில் கிப்ஸ் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். இதற்காக அவர் 79 பந்துகளை எதிர் கொண்டார். 11 நான்குகள், 3 ஆறுகளை அடித்தார். கிப்ஸ் சதத்தை கடந்ததும் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆஸ்திரேலியர்களை 'சுனாமி' போல தாக்கினார். ஓட்ட விகிதத்தை 9 ற்கு உயர்த்தினார். அதிரடியான அட்டகாசமான துடுப்பாட்டம். கண்களுக்கு பெரு விருந்தாக அமைந்தது. இதற்கிடையில் கிப்ஸ் 130 ஓட்டங்களை பெற்ற போது லூயிஸின் பந்தை ஓங்கி அடித்தார். களத்தடுப்பில் பிராக்கன் அதனை பிடி எடுக்க முயல, கையை பறித்துக் கொண்டு பந்து தரையை தொட்டது. கிப்ஸ் தப்பிப்பிழைத்தார்.

முன்பும் இப்படித்தான் 99ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்டீவ் வோவின் பிடியை கிப்ஸ் தவற விட உலகக்கோப்பை ஆஸ்திரேலியர்கள் வசமானது. இப்போது பிராக்கன். உண்மையில் ஆஸதிரேலியர்கள் அசந்துதான் போனார்கள். பந்தை எங்கு விழுத்தினாலும் கிப்ஸ் அதை எல்லைக் கோட்டிற்கு அனுப்பத் தவறுவதில்லை.

29வது ஓவரில் கிப்ஸ் லூயிசை உதைத்தார். ஆறு பந்துகளையும் தானே எதிர் கொண்டு அதில் 3 நான்குகள் ஒரு ஆறைப்பெற்றார். அந்த ஆறுடன் கிப்ஸ் 150 ஐ தொட்டார். அந்த 29 வது ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 271/2.

31வது ஓவரில் பிராக்கன் வீசிய பந்தை கிளார்க்கிடம் பிடி கொடுத்து டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். அந்த ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 284/3. அடுத்த ஓவர் சைமன்ட்ஸ் இனுடையது. கிப்ஸ் அடுத்தடுத்து 2 ஆற ஓட்டங்களைப்பெற்றார். அதற்கடுத்த பந்தில் பிரடலீயிடம் பிடி கொடுத்து கிப்ஸ் ஆட்டமிழந்தார். அப்போது கிப்ஸ் 111 பந்துகளில் 21 நான்குகள், 7 ஆறுகள் அடங்கலான அற்புதமான 175 ஓட்டங்களை குவித்திருந்தார். இது அவருடைய சொந்த அதிக பட்ச ஓட்டமாகும். உண்மையில் கிப்ஸின் ஆட்டம் மிக அற்புதமான ஆட்டம். அவர் ஆஸ்திரேலியர்களுக்கு நிறையவே நெருக்கடிகள் கொடுத்தார். அவரின் ஆட்டமிழப்பு ஆஸ்திரேலியர்களை நம்பிக்கையுற வைத்தது.

இப்போது இரண்டு பதிய வீரர்கள் களத்தில். கலிஸ் மற்றும் பவுச்சர். 32 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 284/4. இருவரும் ஆஸ்திரேலியர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை. மாறாக இருவரின் ஆட்டமும் தென்னாபிரிக்காவை நெருக்கடிக்குள் தள்ளியது என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியர்கள் போட்டியை ஓரளவிற்கு தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். 38வது ஓவரில் கலிஸ் சைமன்ட்ஸின் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போது 38 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 330/5. கடைசி ஆறு ஓவர்களில் 31 ஓட்டங்களைத்தான் பெற்றனர். இது வெற்றி பெறுவதற்கு தேவையான ஓட்ட விகிதத்தை அதிகரித்தது. பவுச்சருடன் ஜஸ்ரின் கெம்ப் இணைந்து கொண்டார். இவரும் பெரிதாக சாதிக்கவில்லை. ஒரு ஓவரிற்கு 10 எடுத்தால்தான் வெற்றி என்ற நிலையில் கெம்ப் ஆட்டமிழந்தார். நிறையவே எதிர்பார்க்கப்பட்டவர். சோபிக்கத் தவறினார். 43 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 358/6.

இப்போது வெற்றிபெறத் தேவையான ஓட்டவிகிதம் சரியாக 11. அதாவது 7 ஓவர்களில் 77 ஓட்டங்கள் தேவை. கையில் இருப்பது 4 விக்கட்டுகள். கதிரையின் விளிம்பில் ரசிகர்கள். ஆஸ்திரேலியர்களுக்கு நம்பிக்கை துளிர் விட்டது. பவுச்சர் தான தலையிடி கொடுப்பார். இன்னமும் 4 விக்கட்டுக்கள். மறுபுறத்தால் கழட்டினால் வெற்றி நமதே. இது பொண்டிங்கின் நினைப்பு. பவுச்சருடன் இணைந்த வனடர் வாத், பொண்டிங்கின் நினைப்பில் மண் அள்ளிப்போட்டார். ஆறுகள், நான்குகள் பறந்தன. இரண்டு ஓவர்களில் 3 ஆறுகள், 1 நான்கு பெற்றார். வன்டர்வாத்தின் துடுப்பாட்டம் போட்டியை ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பறித்தது. 42 பந்தில் 72 ஓட்டஙகள் தேவை என்ற நிலையை இவரும் பவுச்சரும் சேர்ந்து அற்புதமாக ஆடி 24 பந்தில் 38 ஓட்டங்கள் என்ற நிலைக்கு மாற்றினர். 46 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா 397/6.

மீண்டும் பிராக்கனின் பந்தில் வன்டர் வாத் பவிலியன் திரும்பினார். இவர் 18 பந்தில் 3 ஆறுகள், ஒரு நான்கு உட்பட 35 ஓட்டங்கள் பெற்றார். மறுபுறத்தில் பவுச்சர் 31 ஓட்டங்களுடன் சுமையை தனது தோளில் போட்டு பொறுமையாக இருந்தார். இப்போது போட்டி மீண்டும் ஆஸ்திரேலியாவின் கையில். தென்னாபிரிக்கா 399/7. உள்ளே நுழைந்தார் ரெலிமேக்கஸ். 3 வது போட்டியில் அட்டகாசமாக ஆறுகள் அடித்தார். ஆகவே இப்போது எதிர்பார்ப்பு அவரிடம். அவரும் அதற்கேற்றால் போல் ஒரு நான்கைப் பெற்றார். இப்போது தென்னாபிரிக்காவும் 400 ஐ எட்டியது.

இரண்டாவது தடவையாக ஒருநாள் போட்டிகளில் 400 ஓட்டம். அதுவும் ஒரே போட்டியில். பரபரப்பான போட்டி விறுவிறுப்பின் விளிம்பில் ரசிகர்கள். எதுவும் நடக்கலாம. ரெலிமேக்கஸும் பவுச்சரும் நான்குகளாக அடித்து வெற்றியை நெருங்கினர். 48வது ஓவரில் பவுச்சர் இரண்டு நான்குகள், ரெலிமேக்கஸ் ஒரு நான்கு. இந்த ஓவரில் தான் ஒரு தவிர்க்க முடியாத சாதனை. அவுஸ்திரேலியாவின் மிக்லூயிஸ் என்ற பந்து வீச்சாளர் அள்ளி அள்ளி ஓட்டங்களை வழங்கியோரின் சாதனையில் முதலாவதாக திகழ்ந்தார். இலங்கை அணியின் முரளீதரனின் 10 ஓவரில் 99 ஓட்டங்கள் கொடுத்த சாதனையை கடந்து 113 ஓட்டங்களை வாரி வழங்கினார். முன்பு 1983ம் ஆண்டு மார்க் ஸ்னெடீன் என்ற நியூசிலாந்து வீரர் 12 ஓவரில் 105 ஓட்டங்களைக் கொடுத்தார். இப்போது எல்லோரையும் முந்தி லூயிஸ் பெரும் வள்ளல் ஆனார்.

48 ஓவர் முடிவில் 422/7. 12 பந்தில் 13 ஓட்டங்கள். இப்போது வெற்றியின் விளிம்பில் தென்னாபிரிக்கா. 49வது ஓவரை பிராக்கன் வீச இரண்டாவது பந்தில் ரெலிமேக்கஸ் அவுட். மீண்டும் போட்டி அவுஸ்திரேலியாவிடம். உள்ளே நுழைந்தார் அன்ரூஹோல். பவுச்சர் நிதானமாக மறுபுறத்தில் ஆடிக்கொண்டிருந்தார். இந்த ஓவரும் நிறைவுக்குவர தென்னாபிரிக்கா 428/8.

இறுதி ஓவர். தேவை 7 ஓட்டங்கள். ஒருநாள் போட்டியில் எதுவும் நடக்கலாம் ஆனால் தென்னாபிரிக்கா இப்போது தோற்றால் மீண்டும் ஒருதடவை பரிதாபத் தோல்வி. ரசிகர்களுக்கும், அணி வீரர்களுக்கும் திருப்தியான விடயம், பந்து வீச்சை எதிர் கொள்பவர் பவுச்சர். பந்து பிரட்லீயின் கையில். முதற்பந்தை பவுச்சர் ஓங்கி அடிக்க லீ தனது காலாலேயே தடுக்க ஒரு ஓட்டம் மட்டும் தான். இப்போது ஹோலின் முறை. 5 பந்தில் 6 ஓட்டங்கள். என்ன ஒரு போட்டி அரங்கம் கடும் பரபரப்புக்கு மத்தியில் உற்சாகப் படுத்தியது. லீயின் இரண்டாவது பந்தில் ஹோல் ஓங்கி அடித்து 4 ஓட்டம் பெற்றார். ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். அணி வீரர்கள் தமது ஓய்வறையில் ஆரவாரித்தனர். இலகுவாக வெற்றி கிடைக்கப் போகிறது. 4 பந்தில் இரண்டு ஓட்டங்கள். லீயின் அடுத்த பந்தில் ஹோல் ஓங்கி அடிக்க கிளார்க் அதனை பிடி எடுக்க ஹோலும் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா 433/9. அற்புதமான போட்டி. இப்போது போட்டி அவுஸ்திரேலியாவிடம். காரணம் துடுப்பாடவிருப்பவர் மக்காயா நிற்ரினி. எல்லோரும் எதிர்பார்த்தது தென்னாபிரிக்கா தோல்வி. இந்தப்பந்து லீயின் கதாயுதமான யோக்கர் பந்தாக இருக்கும். அதில் நிற்ரினி அவுட. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போல் லீ அப்படி பந்து வீசவுமில்லை. நிற்ரினி அவுட்டாகவுமில்லை. மாறாக ஒரு ஓட்டம் பெற்றார். இப்போது ஓட்ட எண்ணிக்கை சமம் 434/9. நிற்ரினி களமிறங்கும் போது தென்னாபிரிக்கா அணி வீரர்கள் முகத்தில் இறுக்கம். இப்போது துள்ளிக் குதித்து ஆரவாரித்தனர். வெற்றி இல்லை என்றாலும் சமம் என்ற கௌரவம். ஆனால் அடுத்த பந்தில் சரித்திரம் எழுதினார் பவுச்சார். ஓங்கி அடிக்கப்பட்ட பந்து எல்லைக் கோட்டை கடக்க தென்னாபிரிக்கா 438/9.
ஒரு பந்தும் ஒரு விக்கட்டும் மீதம் இருக்க மகத்தான வெற்றி. தென்னாபிரிக்கா வரலாறு படைத்தது. அந்த நான்குடன் பவுச்சரும் 50 ஓட்டத்தை பெற்றார். பவுச்சரின் பொறுப்பான ஆட்டம் வெற்றியைத் தேடித்தந்தது.

ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த போட்டியாக இது அமையும். இப்படிப்பட்ட போட்டியை இதற்கு முன் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. வர்ணனையாளர் ரொனி கிரேய்க் 400 ஐ தென்னாபிரிக்கா எட்டிய போது சொன்னார். "இங்கு என்ன நடக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை" என்று. உண்மைதான். உன்னதமான போட்டி. அற்புதமான வெற்றி. அவுஸ்திரேலியா தான் அதிகூடிய ஓட்டம் என்று வைத்திருந்த 434 ஐ நான்கு மணித்தியாலத்தில் தென்னாபிரிக்கா முறியடித்தது. அவுஸ்திரேலியாவிற்கு ஒரு பலத்த அடி. 375 பிறகு தென்னாபிரிக்கா பெற்ற ஒவ்வொரு ஓட்டத்திற்கும் ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தி ஆரவாரித்தனர்.

பவுச்சர் ஓங்கி அடித்ததும், ஓய்வறையில் நின்ற வீரர்கள் மைதானத்திற்குள் பாய்ந்து சென்று கட்டித்தழுவி வெற்றியைக் கொண்டாடினர். 400 ஓட்டங்கள் அடிப்பது சிரமம. உலகின் முன்னனி அணியான அவுஸ்திரேலியா அணி அதனை அடித்து தன்னை நிரூபித்தது. அதே போட்டியில், அதே அவுஸ்திரேலியாவிற்கு நீங்கள் அடிக்கும் போது எங்களுக்கு எப்படி இருந்தது என்று தாமும் 400 ஐ அடித்து வெற்றி பெற்றனர். சரித்திர வெற்றி.நிச்சயமாக ஆட்ட நாயகன் கிப்ஸ். ஆனால் மத்தியஸ்தர் ரிக்கி பொண்டிங், மற்றும் கிப்ஸ் இருவருக்கும் வழங்கினார்.


இதில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 872 ஓட்டங்களை 13 விக்கட்டுகளை இழந்து பெற்றனர். தென்னாபிரிக்கா மொத்தம் 44 பவுண்டரிகள், 12 ஆறுகள் பெற்றனர். மொத்தமாக இந்தப் போட்டியில் 87 நான்குகளும், 26 ஆறுகளும் குவிக்கப்பட்டன. தென்னாபிரிக்கா அணி ஆகக் கூடிய மொத்த ஓட்ட எண்ணியையும், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிகூடிய ஓட்டம் என்ற சாதனையையும் தனதாக்கியது.


இது சாதனைகளின் சிகரமாக அமைந்த போட்டி. மொத்தத்தில் ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமைந்தது.


இந்த பதிவு 2006 ல் இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளிவந்த "வேடிக்கை" திங்கள் இதழில் வெளிவந்தது. இது நீண்ட பதிவுதான். ஆனால் தவிர்க்க முடியவில்லை. இதனை தட்டச்சு செய்து உதவிய நண்பன் தீபனுக்கு நன்றிகள்.

28 கருத்துகள்:

அருண்மொழிவர்மன் சொன்னது…

இந்த ஆட்டத்தை நான் நேரடியாக தொலைக்காட்சியூடாக நண்பர்கள் உடன் பார்த்தேன். அவுஸ்திரேலியா அந்த இமாலய ஸ்கோரை அடைந்ததும் உறக்கமாகிவிட்டேன். சில பியர்கள் கூட சென்று இருந்தன. மெல்ல கண் விழித்து பார்த்தால் தென்னாபிரிக்கா 35 ஓவரில் 300 ஐ தாண்டியிருந்தது. தொடர்ந்து பார்த்தோம்.

விடிகாலையில் கனேடிய அணியில் ஆடிய வேகப்பந்து வீச்சாளார் சஞ்சயனை தொலைபேசியில் அழைத்து ஆட்டத்தின் முடிவை சொல்ல, வெறியடிச்சிட்டு உங்களுக்கு வேற வேலை இல்லை என்று சொல்லி அழைப்பை நிறுத்தினார். மறக்கமுடியாத அனுபவம்.

மீட்டி தந்ததுக்கு நன்றிகள்

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் அருண்மொழிவர்மன்,

இப்படித்தான் எல்லோரும் ஆட்டத்தை கைவிட்டு விட்டார்கள். யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான். இமாலய வெற்றி தென்னாபிரிக்கர்களுக்கு. அந்த போட்டி நடைபெற்ற தினம் இன்று என்ற படியால் அதனை மீட்டுவது பொருத்தம் என்று மீட்டினேன்.

உங்கள் வருகைக்கும் கருத்தினை பகிர்ந்து கொண்டதுக்கும் நன்றிகள்!

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

ம்
வேடிக்கையில் வாசித்தது தான் என்றாலும் மீண்டும் வாசிக்க ஏதோ மைதானத்திலே இருப்பதுபோல ஒரு உணர்வு

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் குருபரன், வருகைக்கும் உங்கள் கருத்திற்கும். இது ஒரு நினைவை மீட்டும் மீள் பதிவு. வலைப்பூவில் முன்னர் இடம்பெறவில்லை என்பதால் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது. நன்றி.

www.narsim.in சொன்னது…

புதிய முயற்சி,வெற்றி!அருமை

கிடுகுவேலி சொன்னது…

"NEWSPANAI" உங்களின் திரட்டியிலும் இணைத்துவிட்டேன் கிடுகுவேலியை. தங்களின் அறிமுகத்திற்கு நன்றி. பணியை தொடருங்கள்.

கிடுகுவேலி சொன்னது…

NARSIM, உங்கள் வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

நீண்ட நாட்களின் பின்னர்,
சிறந்த நடை, ஆங்காங்கே ஜப்பாரின் பாதிப்பும் தெரிகிறது.
இன்னும் பல பதிவுள் இட வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

தட்டச்சு செய்து உதவியதல்ல தீபனின் வேலை... வேடிக்கைக்காய் தட்டச்சிய மென்பதிவை பெற்றுத்தந்தமையே அவரின் உதவி...
விறுவிறுப்பான நீண்ட ஆக்கம். மீழ படிக்கையில் பழைய பசுமையுடன் பல நினைவுகள். தொடரட்டும் கிடுகுவேலியின் அடைப்புக்கள்...

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சு உலகத்தில் இருக்கும் அனைத்து வகைக் கிரிக்கெட் (எல்.கே.ஜி. அணியைவிட) அணிகளைவிட கேவலமாக இருந்த நாள். அந்த அணியின் களத்தடுப்பு கூட அப்படித்தான். அவர்கள் களத்தடுப்பு செய்ததற்குப் பதில் பேசாமல் நட்சத்திர ஓட்டலில் குப்புறப் படுத்து தூங்கி இருக்கலாம்.




அந்த ஆட்டத்தை இப்படியும் சொல்லலாம். இந்த இடுகைக்கு ஒரு தொடுப்பு எனது தளத்திலிருந்து கொடுத்துள்ளேன்

ISR Selvakumar சொன்னது…

ஏற்கனவே தெரிந்த முடிவுதான். ஆனாலும் படிக்கும்போது படு சுவாரசியமாக இருந்தது. அபார எழுத்து.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

நண்பரே.. உங்கள் ஈ.ரெஃபரலைக் கவனித்தீர்களா..? கனவுகளே வ்லிருந்து 145பேர் வந்திருக்கிறார்கள். (??????? என்ற பெயரில் இருக்கிறது நண்பரே..)

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் குணா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக, அப்துல் ஜப்பார் இனுடைய பரமவிசிறி ஆக இருக்கிறேன். பாதிப்பு இருக்குத்தான். அவரது தமிழும், அந்த காந்த குரலும், அந்த தமிழோடு விளையாடும் அவரின் லாவகமான பேச்சுக்கு யார்தான் அடிமை இல்லை.

கிடுகுவேலி சொன்னது…

தீபன் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி. உங்களுக்கு நினைவில்லையா? நிச்சயமாக உங்களுக்கு நன்றிகள்!

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் சுரேஷ்,
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும். எனது பதிவை உங்கள் வலைப்பூவில் இணைத்துள்ளமைக்கு மனப்பூர்வமான நன்றிகள்.

நிச்சயமாக அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு மோசமாக இருந்ததுதான். ஆனால் தென்னாபிரிக்காவும் மனச்சோர்வின்றி தக்க பதிலடி கொடுத்தது.

இ-ரெப்ஃரரில் உள்ள பிரச்சினையை சரி பார்க்கிறேன். நன்றி சுரேஷ்.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் செல்வகுமார்,

ஆமாம் முடிவு தெரிந்த போட்டிதான். ஆனாலும் ஒரு சரித்திர போட்டி. அது நடைபெற்ற தினம் இன்றுதான். அதன் நினைவாக இது வரையப்பட்டது.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

பெயரில்லா சொன்னது…

என்ன நண்பா....
ரொம்ப நாளா ஆளைகாணம்னு இருந்தன், இதை தான இவ்வளவு நாளும் டைப்பிட்டு இருந்தாய்????
விறுவிறுபான போட்டிதான்...

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் கவின்,

நன்றி வருகைக்கும் உங்கள் கருத்துக்கும். ஆமாம் நீண்ட நாட்கள்தான். ஆனால் தட்டச்சுக்காக அல்ல. இது நண்பன் ஒருவன் தட்டச்சு செய்து உதவினான். இனி தொடருவோம்.

பெயரில்லா சொன்னது…

மாசத்துக்கு குறஞ்சது ஒரு பதிவானாலும் போட்டுடப்பா???
டச்சு வுட்டுட போகுது!
தொடருங்கள் வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

naan enna solla irukku... mmm............ supper da..........

rathan

துர்க்கா-தீபன் சொன்னது…

'கரைகள் ஒய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை..." நீண்ட ஓய்வுக்குப்பிறகு நீங்களும் எழுச்சி கொண்டிருப்பதாகவே பதிவை படிக்கையில் தோன்றுகிறது. அந்த போட்டி இடம் பெற்றமைதானமும் சற்று அளவு குறைந்தது என்று எங்கோ கேள்விப்பட்டேன். அது உண்மைதானா?

கிடுகுவேலி சொன்னது…

//....naan enna solla irukku... mmm............ supper da..........

rathan...../

ரதன் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி! என்ன இப்படி சொல்லி விட்டீர்கள். நீங்கள் தானே சொல்ல வேண்டும்.

கிடுகுவேலி சொன்னது…

//... thurka said...
'கரைகள் ஒய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை..." நீண்ட ஓய்வுக்குப்பிறகு நீங்களும் எழுச்சி கொண்டிருப்பதாகவே பதிவை படிக்கையில் தோன்றுகிறது.
..../

வணக்கம் துர்க்கா, எல்லோரினது முயற்சிகளும் ஓயாத அலைகளாகவே இருக்கின்றன. மைதானத்தின் அளவு பற்றி எனக்கு இப்போது தெரியவில்லை. அறிந்து சொல்கிறேன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து இடுகைக்கும்.

Anbu சொன்னது…

அருமையான ஆட்டம் அண்ணா அது. அந்த மேட்சை நான் டி.வி.டி இல் தான் பார்த்தேன்.ஒவ்வொரு பந்தும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள் நன்றி அண்ணா!!

நாளை நடைபெறும் ஆட்டமும் அது மாதிரி நடக்கும் என எதிர்பார்க்கிறேன்

கிடுகுவேலி சொன்னது…

/.... Anbu said...
அருமையான ஆட்டம் அண்ணா அது. அந்த மேட்சை நான் டி.வி.டி இல் தான் பார்த்தேன்.ஒவ்வொரு பந்தும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள் நன்றி அண்ணா!!

நாளை நடைபெறும் ஆட்டமும் அது மாதிரி நடக்கும் என எதிர்பார்க்கிறேன்
...../


வணக்கம் அன்பு, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முடிந்தால் தருவேன் இங்கே. நன்றி.

கிருஷ்ணா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கிருஷ்ணா சொன்னது…

சில விடயங்கள் எப்போதும் சலிப்பதில்லை. மீண்டும் அந்தப் போட்டியை நேரடியாகப் பார்க்கும்போது ஏற்பட்ட விறுவிறுப்பும் பரபரப்பும் வாசிக்கும்போதும் உணர முடிகிறது. அட்டகாசமான நடை.. வாழ்த்துக்கள் நண்பா.. அடிக்கடி எழுது.

கிடுகுவேலி சொன்னது…

//......கிருஷ்ணா said...

சில விடயங்கள் எப்போதும் சலிப்பதில்லை...../

நிச்சயமாக கிருஷ்ணா, சிலவற்றை எப்போது நினைத்தாலும் சலிக்காது. அப்படி ஒன்றுதான் இதுவும். இன்னும் இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன. காலம் கனியும் போது எல்லாம் வரும்.

கருத்துரையிடுக