வியாழன், 28 மே, 2009

சிங்கப்பூர் செண்பக விநாயகர்

'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஈழத்தமிழனுக்கு மிக அதிகமாகவே பொருந்தியுள்ளது. இன்று தமிழன் இல்லாத நாடும் இல்லை, தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை என்ற நிலை. மொழியால் கலாசாரத்தால் தனக்கென ஒரு தனியிடம் வைத்திருந்தும் மற்றவர்களோடு ஒன்றித்து வாழவேண்டிய ஒரு சூழல். இருந்தும் அந்த ஏக்கமும் தாக்கமும் இன்னும் அடிமனதில் இருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியே. இப்படி கடல் கடந்து செல்வம் சேர்க்க வேண்டும் என்ற அவாவில் சகல நாடுகளுக்கும் அடி எடுத்து வைத்து வளம் குவிக்கத்தொடங்கினான். அந்த வரிசையில்தான் சிங்கப்பூரும் தமிழனை ஏற்று தன்னகப்படுத்தி கொண்டது.
தூய்மை, ஒழுக்கம், கட்டுக்கோப்பு இவற்றிற்கு பெயர்போன நாடு சிங்கை. அழகிய தீவு. செல்வம் கொழிக்கிறது. பல்லின மக்களும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் உன்னத தேசம். எமது மக்கள் இங்கும் தமது கால்களை ஊன்றி பின்னர் அகலக்கால் பதித்தனர். ஈழத்தமிழரை பொறுத்தவரை அநேகர் இந்துக்கள். 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற வாக்குக்கு அமைய வாழ்ந்தவர்கள். கோயில் இருக்கும் இடத்தில் தாம் இருக்க வேண்டும். அல்லது தாங்கள் இருக்கின்ற இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும். இதுதான் அவர்கள் சிந்தை. இறைவனுக்கு அள்ளி அள்ளி கொடுத்த இனம். தண்ணீரும் இறைக்க இறைக்கத்தான் ஊறும் என்பது போல் வாரி வாரி வழங்கி பொருள் குவித்தனர்.

ஆரம்ப காலத்தில் சிங்கப்பூரை 'குட்டி யாழ்ப்பாணம்' என்று அழைப்பார்களாம். (கடவுளே இப்ப முடியுமா...?). இங்கு வாழ்ந்து வந்தவர்கள் தாம் வழிபடவேண்டும் என்று எண்ணிய போது, யாரோ ஒருவருக்கு எங்கோ குளத்திற்கு அருகில் கிடைத்த விநாயகர் விக்கிரகம் ஒன்றை கொண்டு சிறிய ஆலயத்தை காத்தோங் நகரில் 'சிலோன்' சாலையில் உருவாக்கினர்.
இதுதான் இன்று பெயரோடும் பூகழோடும் விளங்கும் சிங்கப்பூர் செண்பக விநாயாகர் ஆலயம். இது இடம்பெற்றது 1870 காலப்பகுதிகளில். பின்னர் இந்த ஆலயம் 1910 ம் ஆண்டு காலப்பகுதிகளில் சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் என்ற அமைப்பின் கீழ் பரிபாலிக்கப்பட்டது. அது இன்றும் தொடர்கிறது. தமிழனுக்கு எங்கும் சோகம்தான். ஏனெனில் இந்த ஆலயமும் 1942 ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரில் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த சேதமடைந்தது. மூல விக்கிரகம் தவிர அனைத்தும் நிர்மூலமானது எனலாம். (இங்கும் தமிழினம் சோதனை சந்தித்துத்தான் சாதனை கண்டது. அங்கும்...?)


மிகுந்த வனப்பு மிக்க அழகுடன் தோற்றம் அளிக்கும் இந்த ஆலயம் சிங்கையின் அழகை மேலும் ஒரு படி செழுமையுற வைத்துள்ளது. ஈழத்து ஆலயங்களில் நடைபெறுகின்ற ஆகமவிதிப்படியே இங்கும் பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றது. இது ஒரு வெளிநாட்டு ஆலயம் என்று சில பரிமாணங்களில் தோன்றினாலும் வழிபடுகின்ற போது எமக்கு எல்லாம் அந்த மண்வாசனையை கொண்டு வரும். அல்லது எம்மை அந்த மண்வாசனைக்கு அழைத்துச் செல்லும். அழகிய தூலலிங்கம் என்ற சொல்லப்படுகின்ற இராசகோபுரம், அழகிய மண்டபங்கள், விநாயகபெருமானின் எழில்மிகு விமானம், அதிலே தங்க அங்கி, மாபிள் பதித்த தரை, வண்ணமிகு ஓவியங்கள், அந்த ஓவியங்கள் சொல்லும் புராண இதிகாச கதைகள் என செல்வமும் எழிலும் பக்தியும் கொட்டிகிடக்கும் ஆலயமாக காட்சி அளிக்கிறது. இருந்தாலும் ஆலயத்தில் ஒரு அடக்கம் இருக்கிறது. பணிவு இருக்கிறது. பக்தி இருக்கிறது. மனதை பிழியும் ஒரு மாயை இருக்கிறது என்றே சொல்லத்தோணுகிறது. நேரம் தவறாத பூசை. செவ்வந்தி, மல்லிகை, மரிக்கொழுந்து என அழகிய மலர்களால் ஆன மாலைகளும், தங்க ஆபரணங்களும் அணிவிக்கப்பட்ட அருள் ஒழுகும் அற்புத அலங்கார சாத்துப்படி. கோடிக்கண் கொண்டு காணவேண்டிய காட்சிகள். இவை எல்லாம் எனக்கு எப்போதும் நல்லூர்க்கந்தனையே எனக்கு நினைவு படுத்துகின்றன. அலங்காரக் கந்தனின் அழகும் நேரம் தவறாத பூசையும் மீண்டும் சிங்கை செண்பக விநாயகர் ஆலயத்தில் கண்டு மகிழ்ந்தேன்.

பக்தர்கள் அநேகம் ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்கள் ஒன்றுகூடவும் தமது கலாசார பண்பாட்டை வெளிப்படுத்தவும் சிறந்த இடமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு பலபல துறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஈழத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒற்றுமையாக இந்த ஆலயத்தில் தொண்டு செய்யும் பாங்கு மனதிற்கு மகிழ்வையே தருகிறது. அவர்களின் பக்திநெறி அல்லது அதன் மீதான பற்று அல்லது ஆன்மீக நாட்டம் எல்லாம் சைவத்துக்கும் தமிழுக்கும் வளமான எதிர்காலம் உள்ளது என்பதில் மிகையில்லை. ஈழத்து நாதஸ்வர தவில் கலைஞர்களின் நாத இசை எல்லாப் பூசைகளுக்கும் உண்டு. இதனை நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆலயங்களிலேயே காணலாம். தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓதுவார் அவர்களின் திருமுறைப் பாடல்கள் மிக அற்புதமாக இருக்கும். பண்ணோடு இசைக்கும் அவரது பாங்கு பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.

இந்தக்காலப் பகுதியில் ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக அற்புதமான திருவிழாக்கள். அழகாகவும் நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டு நேரத்தோடு ஒழுகி நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவுக்காக ஈழத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களின் நாதஸ்வர இசை திருவிழாவை மேலும் மேன்மையாக்குகிறது. அவரின் இசைமழையில் அனைவருமே நனைகின்றனர் நாள்தோறும். அற்புதமான நாதஸ்வர இளவல். இவர்தான் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஆஸ்தான வித்துவான். இவை எல்லாம் சேர்ந்துதான் வெள்ளை மணல் மீது உருண்டு வேலவனே என்று அழுத நல்லூர்க்கந்தனின் நினைவுகள் கண்முன்னே நிழலாடுகிறது. (பாலமுருகன் தொடர்பான பதிவு வெகு விரைவில்....). முன்னர் எமது தாயகத்தில் ஒரு நாதஸ்வர அல்லது தவில் வித்துவானை மலேசியா, சிங்கப்பூர் புகழ் என்று அறிமுகம் செய்வார்கள். அந்த சிங்கப்பூர் என்பது இந்த ஆலயத்தினையே குறிக்கும். எண்ணற்ற ஈழத்து கலைஞர்கள் தமது இசைப்பயணத்தின் அங்கமாக இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இசைவெள்ளத்தில் அனைவரையும் மூழ்கச் செய்திருக்கிறார்கள். இது இன்னமும் தொடர வேண்டும்.
'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம்பெற்ற பாடல் இது...'சிங்கார வேலனே தேவா..' இந்தப்பாடல் மூலம் புகழ் உச்சியை அடைந்தவர் எஸ். ஜானகி. நாதஸ்வரம் வாசித்தவர் காருகுறிச்சி அருணாசலம். இந்த பாடல் இங்கே பாலமுருகனின் நாதஸ்வரம் மூலம் உங்கள் செவிகளுக்கு விருந்தாக...!


குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய ஒன்று இந்த ஆலயத்தில் நடைபெறுகின்ற சமூக சேவைகள். இந்த ஆலயத்தை மையமாக கொண்டு சிங்கப்பூர் வாழ் தமிழ் சிறார்களுக்கான சைவசமயமும் தமிழும் கற்கும் பள்ளி மற்றும் இசை, நடன பள்ளி என்பதோடு சகல வயதினரும் கலந்து ஆன்மீக அறிவைப் பெறுவதற்கான சைவசித்தாந்த வகுப்புக்கள், ஆலய ஓதுவார்களின் நெறிப்படுத்தலில் பண்ணிசை வகுப்புகள் என தன்னாலான பணிகளை செய்வது போற்றுதற்குரியது. இந்த ஆலயத்தில் அடிக்கடி நடைபெறும் மகேசுவர பூசை (அன்னதானம்) நிறைய மக்களுக்கு மனநிறைவையும் மகிழ்வையும் தருவதோடு ஆறுதலாகவும் உள்ளது.

விக்கினங்கள் தீர்க்கும் விநாயகன் வீற்றிருக்கிறான் சிங்கையில். சைவமும் தமிழும் இன்னும் நன்றாக வாழும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை. மூத்தோர்களின் வழிகாட்டல், இளைஞர்களின் உற்சாகம், சிறுவர்களின் ஆர்வம், யாத்திரிகர்களின் வருகை எல்லாம் இந்த ஆலயத்தை மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்யும் அதேநேரத்தில் எமது மண்தாங்கி நின்ற கலை கலாசாரம் வேர்விட்டு விழுதுகள் பரப்பி திசையெங்கும் உலாவரும்.

இங்கு நடைபெற்ற ஆருத்திரா தரிசனத்தின் போது சிவகாமசுந்தரி சமேத சிவசிதம்பர நடாராச பெருமானின் திருநடனக்காட்சியும் ஒழுங்கமைக்கப்பட்ட விதமும் என்னை வெகுவாக பாதித்தது என்று சொல்லலாம். இதோ உங்களுக்காக....!

20 கருத்துகள்:

Unknown சொன்னது…

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

Mouthayen Mathivoli சொன்னது…

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவிலுக்கு , இரண்டு வருடங்கள் முன் ஒரு விநாயகர் சதுர்த்தி அன்று சென்றேன். மிகவும் அருமை யான கோவில். யாழ்பாணத்தில் இருந்ததில்லை, ஆகையால் எங்கள் ஊரான புதுச்சேரி இல் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் இருப்பது போன்றே உணர்ந்தேன். அந்த விநாயகரை மனம் உருகி வேண்டிய போது உள்ளுக்குள் ஏதோ உணர்ந்தேன்.
அன்புடன் முத்தையன் மதிவொளி, சிங்கப்பூர்

கானா பிரபா சொன்னது…

ஈழத்துக்கு வெளியே சொந்த ஊர்க்கோயிலில் நின்று கும்பிடுவது போன்ற உணர்வு இந்தக் கோயிலுக்கு நான் வந்த 2 முறையும் ஏற்பட்டது. மிகவும் சிறப்பானதொரு வரலாற்றுத் தொகுப்பாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள், அருமை அருமை.

வடுவூர் குமார் சொன்னது…

This is one of the way even temples being utlised and promoted by Govt too.Social activities are organized frequently.
Can't type in Tamil now.

Unknown சொன்னது…

அருமையான நடை. தொடரட்டும். வாழ்த்துக்கள்

கிடுகுவேலி சொன்னது…

//...மதிவொளி பகிர்ந்தது..... புதுச்சேரி இல் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் இருப்பது போன்றே உணர்ந்தேன்.....//

நன்றி மதிவொளி உங்கள் வருகைக்கும் இடுகைக்கும். மணக்குள விநாயகரை ஒரு பக்தி பாடல் மூலம் கேள்விப் பட்டிருக்கிறேன். சிங்கை ஆலயத்திலும் ஒரு பக்தி மணம் கமழுவதாகவே நான் கருதுகிறேன்.

கிடுகுவேலி சொன்னது…

//....கானா பிரபா பகிர்ந்தது.....
ஈழத்துக்கு வெளியே சொந்த ஊர்க்கோயிலில் நின்று கும்பிடுவது போன்ற உணர்வு இந்தக் கோயிலுக்கு நான் வந்த 2 முறையும் ஏற்பட்டது. மிகவும் சிறப்பானதொரு வரலாற்றுத் தொகுப்பாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள், அருமை அருமை.....//

நிச்சயமாக கானாபிரபா, அப்படி நானும் உணர்ந்ததால்தான் இந்தப் பதிவு பிறந்தது. அதே நேரத்தில் எமது மிக்கபெரிய தவறாகிய ஆவணப்படுத்தலில் கவனமெடுக்காமை என்ற அடிப்படையில் இதனை அவ்வாறு சேர்க்க முயன்றேன். உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதத்துடன் தொடரும் எம்மாலான பணிகள்.

கிடுகுவேலி சொன்னது…

//.... OVIYA said...
அருமையான நடை. தொடரட்டும். வாழ்த்துக்கள்...//

நன்றி ஓவியா!
உங்களைப் போன்றவர்களின் ஆதரவுகள் இருக்கும் வரை அது எமக்கு உந்துசக்தியாகவே இருக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் தமிழினி இந்த வலைப்பூவும் உங்கள் தமிழ்10 வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளது.

அருண்மொழிவர்மன் சொன்னது…

உங்களுக்கேயுரிய தெளிவான தொனியில் நல்ல ஒரு பதிவு.

ஆலயங்களில் இருக்கும் ஓயாத இரைச்சல், ஒலி பெருக்கியின் சத்தம் இவற்றால் ஆலயங்களை, வழிபாட்டுக்கான இடங்கள் என்பதை விட அதிகமாக ஒரு கலாசார மையமாகத்தான் நான் பார்க்கின்றேன். இன்றைய நாட்களில் அருகிவரும் எமது மரபுக் கலைகளை (தமிழர்களின் மரபிசைகள் எப்போதோ காலாவதியாகிவிட்டன, இப்போது தவில், நாதஸ்வர இசையும் அருகி வருகின்றன) வளார்ப்பதில் ஆலய நிர்வாகிகள் பெரும் கவனம் செலுத்தவேண்டும் என்பது என் அவா. அண்மையில் அருமையான ஒரு கூத்துக் கலைஞரை சந்தித்தேன். அவருடன் கதைத்துக் கொண்டிருந்தபோது மெல்ல மறைந்துவரும் அந்த கலை பற்றிய கவலைகள் மட்டுமே மிஞ்சி நின்றன. தென் மோடிக் கூத்துக் கலை இப்போது கத்தோலிக்கர்களால் அதிகம் நிகழ்த்தப்படும்போதும், புனிதத்தை காப்பதற்காக கூத்துக் கலையின் கட்டமைப்பு எவ்வளவு மாற்றப்பட்டது என்று அறிய முடிந்தது.

இது போல, பட்டி மன்றாங்களில் கூட நடப்பு வாழ்க்கையுடன் ஒன்றிய சில தலைப்புகளை தேர்ந்தெடுக்கலாம் என்று நினைக்கின்றேன்.

நல்லது நண்பரே......

தொடரட்டும் உங்கள் பணி

கிடுகுவேலி சொன்னது…

//.... அருண்மொழிவர்மன் .....

ஆலயங்களில் இருக்கும் ஓயாத இரைச்சல், ஒலி பெருக்கியின் சத்தம் இவற்றால் ஆலயங்களை, வழிபாட்டுக்கான இடங்கள் என்பதை விட அதிகமாக ஒரு கலாசார மையமாகத்தான் நான் பார்க்கின்றேன்....//

வணக்கமும் நன்றிகளும் அருண்மொழிவர்மன். நிச்சயமாக, உங்கள் கருத்தினை ஆமோதிக்கிறேன். அதுதான் இவ்வாறானதொரு சூழலில் கலை, கலாசாரம் வளர்க்க ஆலயங்களை தக்கதொரு களமாக பயன்படுத்துதல் அவசியம். அதனை நிர்வகிப்பவர்கள் உணர்ந்தாலும் மக்களும் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் எமது கலாசாரம் அழிந்து விடலாம். எங்களால் இயன்றதை நாம் செய்வோம்.

கிடுகுவேலி சொன்னது…

வடுவூர் குமார் உங்கள் கருத்துக்கு நன்றி. எல்லோரும் மனதளவில் கருதாமல் செயலளவில் இறங்கினால்தான் ஏதோ ஒரு கொஞ்சமாவது எமது எதிர்கால சந்ததிக்கு மிஞ்சும். இல்லையேல்...அவர்கள் ஆராய்ச்சி செய்யும் நிலைதான் இருக்கும்.

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

நல்லாயிருக்கு!

பெயரில்லா சொன்னது…

Nice one visakan,
I did not know that u r the writer of the blog.......
-Elil

கிடுகுவேலி சொன்னது…

//.... K.Guruparan said...
நல்லாயிருக்கு!...//
வணக்கம் குரு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

கிடுகுவேலி சொன்னது…

//... Tharshan said...
very nice

...//

வணக்கமும் நன்றிகளும் தர்சன்..!

கிடுகுவேலி சொன்னது…

//....Elil Said...
Nice one...,
I did not know that u r the writer of the blog.......
-Elil

வணக்கம் எழில்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..!ஏதோ எங்களால் முடிந்தது...!

tharuha சொன்னது…

எப்போது விடிவாய் என் மண்ணே!!!
எங்கோ ஒரு மூலையில்...
யாரும் இல்லாத் தனிமையில் ...-நான்
தொலைத்து விட்ட தேசத்தை
தெருத் தெருவாய்த் தேடுகின்றேன் ....

பீசாவும் பேகரும்
மீகொரிங்கும் நாசியும்...
என் முன்னே உணவு வகை
எத்தனையோ பெயர்களிலே ....

அம்மாவின் சாப்பாடு
தவிக்கிறது அடிமனது
அறு சுவைதான் இல்லாவிடிலும்
அதில் அன்பு கலந்திருக்கும்
ஒருசுவைதான் என்றாலும்
ஒருவாயில் பசியடங்கும் ..
ஒடியல் புட்டும் மீன்குழம்பும்
உருத்திதரும் சுறா வறையும்
இனிப்பான குழல் புட்டும்
இரப்பை இங்கே இரக்கிறது...

அதிகாலை எனை எழுப்பும்
பறவைகளின் பாட்டொலியும்
புதிதான வண்ணத்தில்
தினமுதிக்கும் சூரியனும்
முற்றத்து மல்லிகையும்
பூத்துக்குலுங்கும் ரோசாவும்
மெல்லென மேனி தழுவும்
தென்றல்க் காற்றும் ...

தத்தித்தாவும் குருவிகளும்
முத்து முத்தாய்ப்பனித்துளியும்
மழைத்துளி எழுப்புகின்ற
மண் மணமும் ..
நல்லூர்த் தேரடியின்
மணற்பரப்பும் ..

இதுவென்ன விதியோ
எதுவுமே இங்கில்லை ...


விண்முட்டும் கட்டிடங்கள்
மண்ணில்லா சாலைகள் ...
சீரான ஆடையுடன்
செயற்கைப்புன்னகையில்
அங்குமிங்கும் அவசரமாய்
பறந்தபடி மனிதர்கள் ......
எங்கும் அறிவுறுத்தல் பலகைகள்
எதிலுமே நவீனதொழினுட்பங்கள் ...
புதிது புதிதாய் அறிந்திராத
அதிசயங்கள் .....

எல்லாம் இருக்கிறது இங்கே !!!
எதுவுமே இல்லை என் மண்போலே ...

என் தேசமே என் தேசமே ...
ஏன் உன் பிள்ளைகளை
எங்கெங்கோ அலையவிட்டாய் ?
எப்போது விடிவாய் என் மண்ணே
நீ இருட்டாக இருந்தாலும்
எனை அருகில் இருத்திவிடு
கறுப்பான கருவைறைக்குள்
படுத்திருக்கும் சுகமிருக்கும் ...
உனக்கான விடிவை
ஒருநோடியும் எதிர்பார்த்து
மரத்துப்போன மனதுடன்
தினமும் விடிகிறது
இங்கே எம்விடியல் .............

கிடுகுவேலி சொன்னது…

அருமை தாருகா, அப்படியே எமது நினவுகளை குழைத்து தந்துள்ளீர்கள் உண்ண சொல்லி...! காலம் கடந்து சென்றாலும் தந்த நினைவுகள் மட்டுமே மிச்சமாக உள்ள இனம் எமது இனம். நிச்சயம் ஒரு நாள் திரும்புவோம். நம்பிக்கையுடன் காத்திருப்போம்...! நன்றி உங்கள் வருகைக்கும் கவிதைக்கும்...!

Tamil Home Recipes சொன்னது…

உங்கள் ப்ளாக் மிகவும் நல்ல ப்ளாக்.

கருத்துரையிடுக