வெள்ளி, 19 ஜூன், 2009

தென்னாபிரிக்கா VS அரையிறுதி

மீண்டும் ஒரு அரையிறுதிப்போட்டி. மீண்டும் அதிலே தென்னாபிரிக்கா. மீண்டும் ஒரு பரிதாப தோல்வி. இரண்டாவது உலக 20-20 கிண்ணத்துக்கான போட்டித்தொடரில் தோல்வியே இல்லாமல் வலம் வந்து பாகிஸ்தானிடம் இன்று மண் கவ்வி பரிதாபமாக வெளியேறுகிறது.


1992 இல் வருணபகவானின் வரம் சாபம் ஆனதால் ஒரு பந்தில் 22 என்ற ஒரு நினைத்துப்பார்க்க முடியாத இலக்கால் தோல்வியுற்றது. 1999 உலகக் கோப்பையில்

லான்ஸ் குலூஸ்னர் ஏமாற்ற தென்னாபிரிக்காவின் கோப்பைக் கனவு தகர்ந்தது. 2003 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக மழை குறுக்கிட்டது.
ஆனாலும் அவர்கள் கணித்த டக்வேர்த்-லூயிஸ் கணிப்பில் ஏற்பட்ட தவறால் தொடரில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. வலுவான அணியாக இருந்தும் கோப்பையை தட்டிசெல்லக்கூடிய அணி என்று எதிர்பார்த்தாலும் அவர்களை ஏனோ ஒரு காரணி தடுத்தே வந்தது. இம்முறை அப்படி அல்ல என்று நினைக்கிறேன்.
150 என்ற இலக்கு. எட்டக்கூடிய ஓட்ட எண்ணிக்கை. ஏனோ அவர்கள் வெற்றியை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்து கொடுத்தனர். கிறீம் ஸ்மித் அணித்தலைவர் என்ற ரீதியில் சில விமரிசனங்களுக்கு ஆளாகிறார் இங்கே.
12 ஓவர்களுக்கு பிறகு உமர் குல் வந்து மிரட்டுவார் என்பதை கணிக்கத்தவறி விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அதே நேரத்தில் எனது அபிப்பிராயப்படி ஜேபி டும்னி T20 போட்டிகளுக்கான ஒரு விசேட வீரர் இல்லை என்றே சொல்வேன். இங்கே 100 என்ற ஓட்டவிகிதம் வைத்திருப்பதை பெரிய விடயமாக கருத முடியாது. அடித்தாடும் ஆற்றல் கொண்டவர்கள் வேண்டும். டும்னியை களம் இறக்கிய இடத்திற்கு அல்பி மோர்க்கல் வந்திருக்க வேண்டும். தொடர்ந்து பௌச்சரும் பின்னர் வன்டர் மேவ் களமிறங்கியிருக்க வேண்டும். இந்த 3 பேரும் டும்னியை விட அடித்தாடும் வல்லமை படைத்தவர்கள்.

ஆட்ட முடிவில் நசீர் ஹுசைன் இன் "அல்பி மோர்க்கல் துடுப்பாட்ட வரிசையில் முன்னாலே வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? " என்ற கேள்விக்கு சரியான பதில் வராமல், ஏதும் ஆட்டமிழப்பு நடந்திருந்தால் அவருக்கு ஆட வாய்ப்பு கிடைத்திருக்கும். தூரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை என்றார். உண்மையில் அல்பி மோர்க்கல் 4 அல்லது 5 ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கியிருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் நிலைமை மாறி இருக்கும்.
கிறீம் ஸ்மித், இவரது துடுப்பாட்டம் T20 போட்டிகளில் மோசமாகவே உள்ளது. ஓட்டங்கள் குறைவாக பெற்றாலும் அவர் அதிக பந்துகளை தின்றே இந்த பெறுதிகளை பெற்றுக் கொள்கிறார். இது பின்னால் வரும் வீரர்களுக்கு சுமையாக இருக்கிறது. ஸ்மித் இனுடைய மோசமான துடுப்பாட்டம் ஐபிஎல் எல் இருந்தே ஆரம்பிக்கிறது. அங்கே ராஜஸ்தான் றோயல்ஸ் இனுடைய தோல்விகளுக்கு ஸ்மித் பெரிதாக துடுப்பெடுத்தாடாமை காரணம் என்றால் மிகையல்ல. 2007 ம் ஆண்டு போட்டிகளுக்கு பின்னர் ஸ்மித் சர்வதேச போட்டிகளில் ஒரு அரைச்சதத்தை தன்னும் பெறவில்லை. இத்தனைக்கும் அவர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர். அவருக்கு நீண்ட நேரம் துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைத்திருக்கும். சாதிக்க தவறிவிட்டார். தென்னாபிரிக்கா வெற்றிகளை பெறுவதால் அவர் மீதான விமரிசனம் குறைவாகவே உள்ளது.

ஸ்மித் ஒரு சுற்று பருத்திருக்கிறார். அவரால் முன்பு போல களத்திலே லாவகமாக விளையாட முடியவில்லை என்று கருதுகிறேன். உடல் எடை அவருக்கு பெரும் சிக்கலாக இருக்கலாம் என்பது எனது கருத்து. விழுந்து களத்தடுப்பு செய்ய சிரமப்படுகிறார். விக்கட்டுக்கு இடையில் ஓட முற்பட்டு எதிர்முனை வீரர் வேண்டாம் என்கிற போது திரும்பி வர சிரமப்படுகிறார். வயது 28. இடையிலேயே இவரது கிரிக்கட் காலம் முடியுமா அல்லது தொடருமா என்று...!
பாகிஸ்தான் ஒரு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என்று எண்ணிய போது அப்ரிடியின் ஆட்டம் இழப்புடன் அவர்களது ஓட்டக் குவிப்பை தென்னாபிரிக்கா கட்டுப்படுத்தியது. பாகிஸ்தானிலும் சொயிப் மலிக் பெரிதாக சோபிக்கவில்லை. யூனிஸ்கான் இடையில் அதிரடி என எண்ணி முட்டாள்தனமாக பாவெட் அலாம் இடம் பந்தினை வீசச்சொல்லி கொடுக்க கலிஸ் அதனை அற்புதமாக தமக்கு சாதகமாக மாற்றி 18 ஓட்டங்களை பெற்றார். ஏன் இப்படி இடையில் யூனிஸ் குழம்பினாரோ தெரியாது. அதே போல 20 ஓவரை உமர் குல் இடம் கொடுத்து 19வது ஓவரை மொஹமட் அமீர் இடம் கொடுத்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். காரணம் அமீர் 17 வயதான பாலகன். இதுதான் அவருக்கு கன்னி தொடர். அனுபவமற்ற வீரர். பொறுத்த நேரம். ஆனால் அவர் இறுதி ஓவரை வீச வரும் போது 23 ஓட்டங்கள் தேவை. அது கொஞ்சம் ஆறுதலாக அவருக்கு இருந்திருக்கும். ஆனால் கிரிக்கட்டில் எதுவும் நடக்கலாம். யூனிஸ்கான் நினைத்திருப்பார் 19வது ஓவரில் உமர் குல் வீசி ஓட்டங்களை கட்டுப்படுத்தினால் 20 வது ஓவர் வீசுபவருக்கு பதட்டம் இருக்காது என்று. ஆனால் உமர் குல் இனை பொறுத்தவரை ஒரு ஓவருக்கு 5 ஓட்டங்கள் தேவை என்றாலும் அதை தடுக்கக்கூடிய அளவிற்கு வல்லமையுள்ளவராக இருந்தார். எல்லாம் பாகிஸ்தானை வெற்றி பெற செய்தது. ஆட்ட நாயகன் சந்தேகமே இல்லாமல் அப்ரிடி. இப்பொழுதெல்லாம் அவரை பந்துவீச்சுக்காகத்தான் எடுக்கிறார்கள். அவரும் தனக்கு பந்துவீச்சில் தானாம் கூட விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் நல்ல அரசியல்வாதி.
வெல்ல வேண்டிய போட்டியை தென்னாபிரிக்கா தன்னாலேயே தோல்வியை தழுவியது. மீண்டும் ஒருதடவை அரையிறுதியில் தென்னாபிரிக்கா தோற்று தனக்கான ஒரு அனுதாபத்தை சுமந்து நிற்கிறது. தென்னாபிரிக்காவிற்கும் அரையிறுதிக்குமான போட்டியில் அரையிறுதியே மீண்டும் ஒரு தடவை வென்றுள்ளது.


2 கருத்துகள்:

Kapilan சொன்னது…

தென் ஆப்ரிக்காவின் உலககோப்பை கனவு மீண்டும் ஒரு முறை கலைந்தது.இந்த முறை தொடர்ந்து வெற்றிகளை குவித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் அரையிறுதி "அலர்ஜி' தொடர, பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் கபிலன், நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். தென்னாபிரிக்கா என்றாலே அரையிறுதியில் ஆட்டம் காணும் அணி என்று எழுதாத விதி ஆகிவிட்டது. உண்மையில் அவர்கள் பாவம். நான் நினைக்கிறேன் இப்படி பலநாடுகள் பங்கு பற்றும் கோப்பை ஒன்றை பெற்றது ஹன்சி குரேன்ஞ்சி தலமையில் 1998 ல் மினி உலகக் கிண்ணம் என்று. பார்ப்போம் இதனை இம்முறை செப்ரெம்பர் ஐசிசி கிண்ண போட்டியில் உடைக்கிறார்களா என்று.

கருத்துரையிடுக