
தூய்மை, ஒழுக்கம், கட்டுக்கோப்பு இவற்றிற்கு பெயர்போன நாடு சிங்கை. அழகிய தீவு. செல்வம் கொழிக்கிறது. பல்லின மக்களும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் உன்னத தேசம். எமது மக்கள் இங்கும் தமது கால்களை ஊன்றி பின்னர் அகலக்கால் பதித்தனர். ஈழத்தமிழரை பொறுத்தவரை அநேகர் இந்துக்கள். 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற வாக்குக்கு அமைய வாழ்ந்தவர்கள். கோயில் இருக்கும் இடத்தில் தாம் இருக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் சிங்கப்பூரை 'குட்டி யாழ்ப்பாணம்' என்று அழைப்பார்களாம். (கடவுளே இப்ப முடியுமா...?). இங்கு வாழ்ந்து வந்தவர்கள் தாம் வழிபடவேண்டும் என்று எண்ணிய போது, யாரோ ஒருவருக்கு எங்கோ குளத்திற்கு அருகில் கிடைத்த விநாயகர் விக்கிரகம் ஒன்றை கொண்டு சிறிய ஆலயத்தை காத்தோங் நகரில் 'சிலோன்' சாலையில் உருவாக்கினர்.

இதுதான் இன்று பெயரோடும் பூகழோடும் விளங்கும் சிங்கப்பூர் செண்பக விநாயாகர் ஆலயம். இது இடம்பெற்றது 1870 காலப்பகுதிகளில். பின்னர் இந்த ஆலயம் 1910 ம் ஆண்டு காலப்பகுதிகளில் சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் என்ற அமைப்பின் கீழ் பரிபாலிக்கப்பட்டது. அது இன்றும் தொடர்கிறது. தமிழனுக்கு எங்கும் சோகம்தான். ஏனெனில் இந்த ஆலயமும் 1942 ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரில் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த சேதமடைந்தது.

மிகுந்த வனப்பு மிக்க அழகுடன் தோற்றம் அளிக்கும் இந்த ஆலயம் சிங்கையின் அழகை மேலும் ஒரு படி செழுமையுற வைத்துள்ளது. ஈழத்து ஆலயங்களில் நடைபெறுகின்ற ஆகமவிதிப்படியே இங்கும் பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றது. இது ஒரு வெளிநாட்டு ஆலயம் என்று சில பரிமாணங்களில் தோன்றினாலும் வழிபடுகின்ற போது எமக்கு எல்லாம் அந்த மண்வாசனையை கொண்டு வரும். அல்லது எம்மை அந்த மண்வாசனைக்கு அழைத்துச் செல்லும். அழகிய தூலலிங்கம் என்ற சொல்லப்படுகின்ற இராசகோபுரம், அழகிய மண்டபங்கள், விநாயகபெருமானின் எழில்மிகு விமானம், அதிலே தங்க அங்கி, மாபிள் பதித்த தரை, வண்ணமிகு ஓவியங்கள், அந்த ஓவியங்கள் சொல்லும் புராண இதிகாச கதைகள் என செல்வமும் எழிலும் பக்தியும் கொட்டிகிடக்கும் ஆலயமாக காட்சி அளிக்கிறது. இருந்தாலும் ஆலயத்தில் ஒரு அடக்கம் இருக்கிறது. பணிவு இருக்கிறது. பக்தி இருக்கிறது. மனதை பிழியும் ஒரு மாயை இருக்கிறது என்றே சொல்லத்தோணுகிறது. நேரம் தவறாத பூசை. செவ்வந்தி, மல்லிகை, மரிக்கொழுந்து என அழகிய மலர்களால் ஆன மாலைகளும், தங்க ஆபரணங்களும் அணிவிக்கப்பட்ட அருள் ஒழுகும் அற்புத அலங்கார சாத்துப்படி.
பக்தர்கள் அநேகம் ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்கள் ஒன்றுகூடவும் தமது கலாசார பண்பாட்டை வெளிப்படுத்தவும் சிறந்த இடமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு பலபல துறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஈழத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒற்றுமையாக இந்த ஆலயத்தில் தொண்டு செய்யும் பாங்கு மனதிற்கு மகிழ்வையே தருகிறது. அவர்களின் பக்திநெறி அல்லது அதன் மீதான பற்று அல்லது ஆன்மீக நாட்டம் எல்லாம் சைவத்துக்கும் தமிழுக்கும் வளமான எதிர்காலம் உள்ளது என்பதில் மிகையில்லை. ஈழத்து நாதஸ்வர தவில் கலைஞர்களின் நாத இசை எல்லாப் பூசைகளுக்கும் உண்டு. இதனை நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆலயங்களிலேயே காணலாம். தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓதுவார் அவர்களின் திருமுறைப் பாடல்கள் மிக அற்புதமாக இருக்கும். பண்ணோடு இசைக்கும் அவரது பாங்கு பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.
இந்தக்காலப் பகுதியில் ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக அற்புதமான திருவிழாக்கள். அழகாகவும் நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டு நேரத்தோடு ஒழுகி நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவுக்காக ஈழத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களின் நாதஸ்வர இசை திருவிழாவை மேலும் மேன்மையாக்குகிறது. அவரின் இசைமழையில் அனைவருமே நனைகின்றனர் நாள்தோறும். அற்புதமான நாதஸ்வர இளவல்.
'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம்பெற்ற பாடல் இது...'சிங்கார வேலனே தேவா..' இந்தப்பாடல் மூலம் புகழ் உச்சியை அடைந்தவர் எஸ். ஜானகி. நாதஸ்வரம் வாசித்தவர் காருகுறிச்சி அருணாசலம். இந்த பாடல் இங்கே பாலமுருகனின் நாதஸ்வரம் மூலம் உங்கள் செவிகளுக்கு விருந்தாக...!
குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய ஒன்று இந்த ஆலயத்தில் நடைபெறுகின்ற சமூக சேவைகள். இந்த ஆலயத்தை மையமாக கொண்டு சிங்கப்பூர் வாழ் தமிழ் சிறார்களுக்கான சைவசமயமும் தமிழும் கற்கும் பள்ளி மற்றும் இசை, நடன பள்ளி என்பதோடு சகல வயதினரும் கலந்து ஆன்மீக அறிவைப் பெறுவதற்கான சைவசித்தாந்த வகுப்புக்கள், ஆலய ஓதுவார்களின் நெறிப்படுத்தலில் பண்ணிசை வகுப்புகள் என தன்னாலான பணிகளை செய்வது போற்றுதற்குரியது. இந்த ஆலயத்தில் அடிக்கடி நடைபெறும் மகேசுவர பூசை (அன்னதானம்) நிறைய மக்களுக்கு மனநிறைவையும் மகிழ்வையும் தருவதோடு ஆறுதலாகவும் உள்ளது.
விக்கினங்கள் தீர்க்கும் விநாயகன் வீற்றிருக்கிறான் சிங்கையில். சைவமும் தமிழும் இன்னும் நன்றாக வாழும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை. மூத்தோர்களின் வழிகாட்டல், இளைஞர்களின் உற்சாகம், சிறுவர்களின் ஆர்வம், யாத்திரிகர்களின் வருகை எல்லாம் இந்த ஆலயத்தை மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்யும் அதேநேரத்தில் எமது மண்தாங்கி நின்ற கலை கலாசாரம் வேர்விட்டு விழுதுகள் பரப்பி திசையெங்கும் உலாவரும்.
இங்கு நடைபெற்ற ஆருத்திரா தரிசனத்தின் போது சிவகாமசுந்தரி சமேத சிவசிதம்பர நடாராச பெருமானின் திருநடனக்காட்சியும் ஒழுங்கமைக்கப்பட்ட விதமும் என்னை வெகுவாக பாதித்தது என்று சொல்லலாம். இதோ உங்களுக்காக....!