புதன், 9 செப்டம்பர், 2009

முதிர்கன்னி.....!

அண்மைக்காலமாக மனதில் அடிக்கடி ஒலிக்கின்ற ஒரு பாடல், ‘சொல்லாயோ வாய்திறந்து...வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய்திறந்து....’ மோகமுள் படத்தில் வரும் ஒரு அருமையான பாடல். ஜானகியின் குரல் மனதை பிழிகிறது. பல விருதுகளைக் பெற்றாலும் நாவல் படமாக்கப்பட்ட விதத்தில் சில விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு பெண்ணின் அதுவும் முதிர்கன்னி ஒருவரின் மனநிலையை, அவளின் உணர்வலைகளை வெளிக்காட்டுகின்ற ஒரு அற்புதமான பாடல். வாலியும் தன்பங்கிற்கு வார்த்தைகளில் கோலம் போட்டு அந்த உணர்வுகளின் விம்பமாக வரிகளை வடித்திருக்கிறார்.




முதிர்கன்னி...இன்று எமது சமூகத்தில் இருக்கின்ற ஒரு பிரச்சினை. ஒரு பெண் தன்னுடைய உணர்ச்சிகளுடன் போராடும் போராட்டம். எவருக்கும் தெரியாத இரகசிய வேதனை. வெளியே சொல்லமுடியாததும் உள்ளே எதுவும் செய்ய முடியாததும் ஆன ஒரு உளவியல் யுத்தம்.

‘கோயிலை இடிச்செண்டாலும் குமரை கரை சேர்க்க வேண்டும்’ இது அந்தநாட்களில் எம்மவரிடையே உலாவந்த ஒரு சொல்லாடல். இந்த ஒன்று போதும் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது எவ்வளவுதூரம் முக்கியம் என்பதற்கு. எங்கள் ஊரில் சொல்வார்கள் அக்கா இருக்க தம்பி மணம் செய்து கொண்டால்....குமர் வீட்டுக்க இருந்து மூச்சு விட இவன் ஏன் இப்படி செய்தவன்.. இப்படி எல்லாம் சொல்வது எங்கள் ஊரில் இருக்கின்ற பெண்கள்தான். அவர்களுக்குத்தானே எம்மை விட வலிகளின் வேதனை அதிகம் தெரியும். அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணலாம்...அல்லது அந்தக் கற்பனை மூலம் காட்சிப்படுத்தலாம்.. ஆனால் எப்பொழுதும் எம்மால் உணரமுடியாது.

எனக்கு தெரிந்த ஒரு இலட்சாதிபதி, தன்னுடைய பணத்தை முன்வைத்து தன்னுடைய மகளுக்கு டாக்குத்தர் அல்லது எஞ்சினியர் அல்லது அக்கவுண்டன் அல்லது படித்த மாப்பிள்ளை தேடித்திரிந்தார். இதுவரை அகப்படவில்லை. இது 30 வருடங்களாக தொடர்ந்து, இன்று அந்த பெண் 50 வயதை கடந்துவிட்டாள். விடயத்தை ஊன்றிப் பார்த்தால், அவருடைய வரட்டு கௌரவமும், அந்த பணத்திமிரும் தான் காரணமாக தெரிகிறது. அவருடைய அந்த நினைப்பால் இன்றும் அந்தப் பெண் மணவாழ்வின் சுகம் அனுபவிக்காமல் இருக்கிறாள்.

சில இடங்களில் பெண்களின் அழகு, குறைபாடுகள், ஊனம் என்பன இவற்றிற்கு காரணமாக இருந்தாலும் அதையும் தாண்டி எந்த ஒரு குறையும் இல்லாதவர்கள் கூட இன்றும் முதின்ம வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் முன்வைக்கப்படுகின்ற ஒரு முக்கியமான குற்றச்சாட்டு ஆண்கள் கேட்கும் சீதனம். ஆனால் அதை கொடுக்கின்ற அளவிற்கு வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் சில விட்டுக்கொடுக்காத தன்மைகளால் அந்த திருமணங்கள் தள்ளிப்போய் பெண்கள் காணும் திருமணம் என்ற கனவு சிதைந்து விடுகிறது.

நன்றி : ஷீ-நிசி கவிதைகள் வலைப்பூ

தற்காலத்தில் வேலைக்கு போகின்ற பெண்கள் தங்களுடைய சொந்தக்காலில் நிற்கிறார்கள். வேலைகளில் பதவி உயர்வு மற்றும் சில சலுகைகள் காரணமாக திருமணங்களை தள்ளிப் போடுகிறார்கள். அது அவரவர் விருப்பம். அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் இவர்கள் நாலு இடங்களுக்கு சென்று படித்து, நாலு இடம் பார்த்து ஒரு பட்டறிவு பெற்ற நிலையில் உதிர்க்கும் வார்த்தைகளில் முக்கியமானவை ‘திருமணம் மட்டுமா வாழ்க்கை, எங்களால் திருமணம் இல்லாமல் வாழமுடியும்....’ என்பதாக அமைகிறது. இந்தக் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால் கிராமத்தில் பாமரனாக இருந்து கல்வியறிவு போதாத நிலையில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலைகளை மட்டும் செய்து கொண்டு நான்கு சுவர்களுக்குள் தங்களையும், தங்கள் எண்ணங்களை மட்டும் அகன்ற வானில் சிறகடிக்க விட்டு விட்டு இன்றும் மணநாளிற்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், வேலைசெய்பவர்கள் தங்கள் புலன்களை வேறு இடத்தில் செலுத்தி சில உளப்பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வார்கள். இவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது மிகப்பெரிய விடயம். அதைக் கனவாக நினைத்தே வாழ்கிறார்கள்.

சில இடங்களில் தாய், தந்தையர் ஒவ்வொரு காரணங்களை சொல்லி திருமணங்களை தட்டிக்கழிக்கின்ற போது அவர்கள் தாங்களாகவே தங்கள் மனதுக்கு பிடித்த ஒருவரை பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டு போய்விடுவார்கள். சமூகம் அவனுக்கோ அல்லது அவளுக்கோ மிக உயரிய விருதான ‘ஓடுகாலி’ விருதை வழங்கிவிடும். திருமணம் எனக்கு வேண்டாம் என்ற அந்தப் பெண்கள் சொல்லியிருந்தால் எவராலும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் பெற்றோரின் சில அசமந்தப் போக்கும், அவர்களின் வீணான பிடிவாதங்களும் இளம் கன்னிகளை முதிர்கன்னி என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. வீட்டுக்காரரை நம்பியோ அல்லது இந்த சமூகத்தை நம்பியோ எந்த வாழ்வுக்குள்ளும் புக முடியாத பெண்கள் இறுதியில் சாதி, மத, வயது எந்த வேறுபாடுமின்றி ஒரு ஆண்மகனுடன் சென்று தன்னுடைய புதிய வாழ்வை தொடங்கும் சந்தர்ப்பங்கள் எங்கள் கண் முன்னே நாம் பார்த்திருக்கிறோம்.

ஆண்களும் இந்த இடங்களில் நிறையவே பிழைவிடுகிறார்கள். தேவையற்ற முறையில் சீதனம் கேட்பது. அது கிடைக்கவில்லை என்றால் எந்த சமரசமும் இன்றி திருமணம் வேண்டாம் என்பது. இவைகள் எல்லாம் அந்தப் பெண்களின் உளவுரணை வெகுவாக பாதிக்கின்றது. பெண்ணைப் பெற்றவர்கள் வறுமையானவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களிடம் அதிகமாக சீதனம் கேட்டு அவர்களை மேலும் சிக்கலாக்குகிறார்கள். இந்த விடயங்களில் அந்த பெண்ணோ அல்லது அவர்களைப் பெற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. ஆண்களாக திருந்தாவிட்டால் இந்த சீதனப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நண்பன் ஒருவனிடம் இது சம்பந்தமாக உரையாடிய போது, அவன் பகிர்ந்து கொண்டான், தன்னுடைய உறவினர் ஒருவர் காலம் பிந்தி செய்து கொண்ட திருமணம் மூலம் பெற்றுக் கொண்ட குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்ததாகக் கூறினான். மருத்துவரிடம் இது தொடர்பாக ஆராய்ந்தால் அது பிந்திய திருமணத்தால் ஏற்பட்டது என்று தெரிவித்துவிட்டாராம். இன்னொரு நண்பனின் மனக்குமுறல் இது...இது சரியா அல்லது பிழையா என்பது பற்றி இங்கு நான் விவாதிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அது சரி என்றே சொல்வேன். அவனின் மணமகாத ஒரு உறவுக்காரப் பெண். அந்தப்பெண் யாருடனாவது களவாக உறவு வைத்திருக்கிறார் என்பதை அறிந்தால் நான் மகிழ்வடைவேன் என்றான். அவனின் எண்ண ஓட்டத்தை என்னால் ஊகிக்க முடிந்தது. காரணம் அந்தப்பெண்ணின் திருமணத்திற்காக அவனின் குடும்பம் அலைந்த அலைச்சல். ஒவ்வொரு திருமண முயற்சியிலும் தோல்விகள். அதனால் அந்தப் பெண் சந்தித்த திருமண ஏமாற்றங்கள். இவை எல்லாம் அவனின் மனதில் இப்படி ஒரு எண்ணத்தை தோற்றுவித்துவிட்டது.

==நிலாரசிகனின் கவிதைகள்
வலைப்பூவில் இருந்து ஒரு சில காட்டமான வரிகள்...======

முப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு
தெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு

மூணுமுடிச்சு மட்டும் கிடைக்கலையே
ஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே

பூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்
பூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்?

===
ஆறாம் திணை தந்த இன்னொரு வலி......
மார்கழி தோறும்
நோன்புகள் இருந்து
மணாளன் நோன்பைத்
தொடர்கிறாயே அக்கா..!

அகவை நாற்பதைத்
தாண்டியபின்னுமா
புரியவில்லை
நோன்பின் சிறப்பு.?

இது எனது நண்பர்கள் மூலமாக நான் கேட்டறிந்த கதைகளும், எனது உறவுகளிலே இன்னும் முதிர்கன்னியாக இருக்கும் அந்த பெண்களுமே எண்ணத்தில் எழுந்த கருக்கள். மனதிலே ஆழமாக கிடந்த ஒரு ஆதங்கம். ஆங்காங்கே இவற்றை பார்த்துப் பார்த்து வளர்ந்திருக்கிறோம். சாத்திரம் பார்த்து திருமணம்...குறிப்பு பொருந்தவில்லை அதனால் ஒன்றும் சரிவருதில்லை என்ற எண்ணம்....இந்த வட்டத்துக்குள் இருந்து வெளியே வர நாம் முயற்சிக்காத வரைக்கும், சீதனம் என்ற சமூக வியாதி அழியாத வரைக்கும் இந்த வேதனைகளை நாம் கண்டுகொண்டே வாழ வேண்டும்.

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

முதிர் காளைகளின் நிலை கூட வீணான வறட்டுக் கெளரவமும் பிடிவாதமுமே.

பல முதிர்கன்னிகளை வாழ்க்கையில் சந்தித்தபோது, பலர் தமது குடும்பப்பொறுப்பை ஏற்று நடத்தியது, அதிலிருந்து விடுபட முடியாமற் போனதுமே காரணம் என்றார்கள். அவ்வகையில் அவர்களால் சீதனம் கொடுக்கத்தான் முடியுமா?

அத்துடன், குடும்பத்தினர் கூட இவளின் எதிர்கால வாழ்க்கையை நினைக்கவில்லையோ என தோண்றியது.

சி தயாளன் சொன்னது…

மோகமுள் நாவல் நான் படித்திருக்கவில்லை. ஆனால் படம் பார்த்துள்ளேன்....அவர்கள் நிலை பரிதாபகரமானது தான்...

கிடுகுவேலி சொன்னது…

//..Anonymous said...

குடும்பத்தினர் கூட இவளின் எதிர்கால வாழ்க்கையை நினைக்கவில்லையோ என தோண்றியது...//

வணக்கம் அனானி, பெற்றோர்கள் ஒரு கட்டத்தின் பின்னர் தங்களின் எதிர்காலத்தை கவனிக்க ஒருவர் தேவை என்பதாலும் தமது பிள்ளைகளின் திருமணங்களை தள்ளிப் போடுகிறார்கள் அல்லது அவற்றை நடாத்துவதற்கு பின்னடிக்கிறார்கள் என்ற கசப்பான உண்மைகளும் இருக்கவே செய்கின்றன..!

கிஷோர் சொன்னது…

ஆண்கள் திருந்துவது,சமூகம் திருந்துவது இவை எல்லாத்திற்கும் முதலில் பெண்கள் திருந்த வேண்டும். பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி.

எனக்கு தெரிந்த அம்மா ஒருவர் தன்னுடைய மகள் கணவன் வழி சொந்தம் ஒன்றை காதலித்ததால் பிள்ளைக்கு கட்டி வைக்கவில்லை.

இன்னொரு அக்கா, தான் கல்யாணம் செய்யாத்தால் தனக்கு துணைக்கு தங்கையின் திருமணத்திற்கு எல்லாவிதத்திலும் முட்டு போடுகிறார்.

இப்படி பல கதைகள் இருக்கு.

ஆண்களால், முதிர்கன்னிகளாவது என்பது..இலங்கையை பொறுத்தவரை மிக,மிக குறைவு என்பது என்னுடைய பார்வை.

கிடுகுவேலி சொன்னது…

//....டொன்’ லீ said...
....அவர்கள் நிலை பரிதாபகரமானது தான்...///

வணக்கம் லீ...இந்தப் பரிதாப நிலைகள் தொடராமல் இருப்பது நல்லது. நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..!

//...கிஷோர் said...

ஆண்கள் திருந்துவது,சமூகம் திருந்துவது இவை எல்லாத்திற்கும் முதலில் பெண்கள் திருந்த வேண்டும். பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி.

எனக்கு தெரிந்த அம்மா ஒருவர் தன்னுடைய மகள் கணவன் வழி சொந்தம் ஒன்றை காதலித்ததால் பிள்ளைக்கு கட்டி வைக்கவில்லை.

இன்னொரு அக்கா, தான் கல்யாணம் செய்யாத்தால் தனக்கு துணைக்கு தங்கையின் திருமணத்திற்கு எல்லாவிதத்திலும் முட்டு போடுகிறார்.

இப்படி பல கதைகள் இருக்கு.

ஆண்களால், முதிர்கன்னிகளாவது என்பது..இலங்கையை பொறுத்தவரை மிக,மிக குறைவு என்பது என்னுடைய பார்வை...//

உங்கள் கருத்துக்களும் சரியே..பெண்களும் பல இடங்களில் இதற்கு காரணமாக போகிறார்கள்..நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...!!

வலசு - வேலணை சொன்னது…

பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு காரணிகளால் குதிர்கன்னிகள் முதிர்கன்னிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
1) யுத்த சூழ்நிலையால் இளைஞர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது யுவதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிக் காணப்படுவது.

2)உயர்கல்வி வாய்ப்பு அதிகரிப்பினால் படிப்பு முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்ற எண்ணம். அதனால் 25 வயதாவது முடிந்த பின்னரே திருமணப் பேச்சை ஆரம்பிக்கின்றார்கள்.

3)ஆண் பெண் இருதரப்பு குடும்பத்தாரிடமும் காணப்படும் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளும், வரட்டுக் கௌரவங்களும்.

4)வேலைவாய்ப்பும் அதனூடு பரவிவிட்டிருக்கும் மேலைத்தேயப் பண்பாடுகளினால் உண்டான குழப்பங்களும்.

tharuha சொன்னது…

வாழ்க்கையை அனுபவித்து முடித்தவர்களினது கவுரவத்திர்ககவும், குறுகிய வட்டம் போட்டு அதற்குள்ளே நின்று வறட்டு நியாயம் பேசும் சமூகதிர்ககவும் ,தமது கனவுகளை தொலைத்துவிட்டு வாழ்கின்ற எமது சமூகப் பெண்களின் வெளிவராத கண்ணீர் கதைகள் ஏராளம்
அருமையான ஆக்கம் ....பாராட்டுக்கள்

கிடுகுவேலி சொன்னது…

//....வலசு - வேலணை said...

பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு காரணிகளால் குதிர்கன்னிகள் முதிர்கன்னிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
1) யுத்த சூழ்நிலையால் இளைஞர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது யுவதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிக் காணப்படுவது.

2)உயர்கல்வி வாய்ப்பு அதிகரிப்பினால் படிப்பு முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்ற எண்ணம். அதனால் 25 வயதாவது முடிந்த பின்னரே திருமணப் பேச்சை ஆரம்பிக்கின்றார்கள்.

3)ஆண் பெண் இருதரப்பு குடும்பத்தாரிடமும் காணப்படும் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளும், வரட்டுக் கௌரவங்களும்.

4)வேலைவாய்ப்பும் அதனூடு பரவிவிட்டிருக்கும் மேலைத்தேயப் பண்பாடுகளினால் உண்டான குழப்பங்களும்.
...///
வணக்கம் வலசு...சில இடங்களில் வரம்புகளை கட்டுடைக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கைப்பயிர் நன்றாக செழிப்பாக வளரும். உங்கள் எல்லாக் கருத்தோடும் நான் ஒத்துப்போகிறேன்...! நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..!!

கிடுகுவேலி சொன்னது…

//... tharuha said...
வாழ்க்கையை அனுபவித்து முடித்தவர்களினது கவுரவத்திர்ககவும், குறுகிய வட்டம் போட்டு அதற்குள்ளே நின்று வறட்டு நியாயம் பேசும் சமூகதிர்ககவும் ,தமது கனவுகளை தொலைத்துவிட்டு வாழ்கின்ற எமது சமூகப் பெண்களின் வெளிவராத கண்ணீர் கதைகள் ஏராளம்
அருமையான ஆக்கம் ....பாராட்டுக்கள்..//

சில தகப்பன்மாரை நினைக்கும் போது ஆத்திரமாகவே இருக்கின்றது. நான் குறிப்பிட்ட அந்த மனிதர் தன்னுடைய இளமைக்காலத்தை -மணம் முடித்த பின்னர் கூட - மிகவும் அனுபவித்தவர்....!! நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...!!!

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

ம்
இதையெல்லாம் இளங்கிழவன் எழுதியிருக்கிறான்.
நன்று

கிடுகுவேலி சொன்னது…

//....K.Guruparan said...ம்
இதையெல்லாம் இளங்கிழவன் எழுதியிருக்கிறான்.
நன்று...///

வணக்கம் குரு, உங்களைப்போன்ற மிக வயதானவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்த்தேன்..வரவில்லை.. நாளைக்கு என் மகன் இதை எழுதிவிடக்கூடாதல்லவா...? (லொள்ளு)....நிறைய வலிகளை கண்ணால் கண்டேன் என்ற வேதனையோடு அது இருந்தது...!

குறும்பு குண்டன் சொன்னது…

முதிர்கன்னி தொடர்பான வெளிப்படையான கருத்தாடலுக்கு எனது பாராட்டுகள்
அதேவேளை முதிர்கன்னி தொடர்பாக தங்களது பார்வைக்குட்பட்டவர்களின் அளவு மிகக்குறைவே. ஆனால் அதற்கு வெளியில் உள்நாட்டு யுத்தம் காரணமாக பெருளாதார சுபீட்சமிமற்ற நிலையில் முதிர்கன்னிகளாக உள்ளவர்களும் யுத்தத்தினால் இளம் ஆண்களின் இறப்பு வீதம் அதிகரித்ததாலும் உருவாகியுள்ள நிலைமையே மிக முக்கியமாக தமிழர் தாயகத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பாரிய சவாலாக உள்ளது. எனவே இதற்கு என்ன வழிமுறை? எவ்வாறு எமது சமூகம் இதை எதிர்கொள்ளப்போகின்றது? இதற்கு சமூகம் என்ன முடிவெடுக்கப்போகின்றது?
போன்ற விடயங்களை தொடுவது மிகவும் முக்கியமானது எனவே தங்களின் ஆக்கபூர்வமான கருத்தை எதிர்பார்க்கின்றேன் ஏனேனில் இவ்விடயம் முதிர்கன்னிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் மிகவும் தொடர்படையதாகும் ஆதலால் விவாதத்திற்கெடுப்பது நல்லது

கிடுகுவேலி சொன்னது…

//...குறும்பு குண்டன் said...

....உள்நாட்டு யுத்தம் காரணமாக பெருளாதார சுபீட்சமிமற்ற நிலையில் முதிர்கன்னிகளாக உள்ளவர்களும் யுத்தத்தினால் இளம் ஆண்களின் இறப்பு வீதம் அதிகரித்ததாலும் உருவாகியுள்ள நிலைமையே மிக முக்கியமாக தமிழர் தாயகத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பாரிய சவாலாக உள்ளது. எனவே இதற்கு என்ன வழிமுறை? எவ்வாறு எமது சமூகம் இதை எதிர்கொள்ளப்போகின்றது? இதற்கு சமூகம் என்ன முடிவெடுக்கப்போகின்றது?...////

வணக்கம் குறும்புக்குண்டன்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.....பெண்கள் யுத்தத்தால் எதிர் நோக்கும் சவால்கள் என்ன என்பதை அந்த மண்ணூடு பயணித்தோம் என்ற வகையில் அறிந்தாலும், அது தொடர்பான ஒரு பதிவு அவசியம்தான். விரைவில் தொடங்கலாம்....!நன்றி..!!

Punnakaimannan சொன்னது…

தனியே ஒரு பாலாரை முதிர்கன்னிப் பிரச்சினைக்குக் குற்றஞ்சாட்டிவிட முடியாது. அடிப்படையில் எல்லா மாற்றங்களுக்கும் முதலில் எமது சமூகத்தில் கருத்து மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு சமூக விழிப்புணர்வு அவசியம்.அதனால் இது குறுகிய கால எல்லைக்குள் தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சினையன்று. எனினும் மிகவும் முக்கியமானதொரு சமூகப்பிரச்சினையை முக்கிறுத்த முனைந்தமைக்கு வாழ்த்துக்கள்.

கிடுகுவேலி சொன்னது…

//.....Kavi said...
...........அடிப்படையில் எல்லா மாற்றங்களுக்கும் முதலில் எமது சமூகத்தில் கருத்து மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு சமூக விழிப்புணர்வு அவசியம்.அதனால் இது குறுகிய கால எல்லைக்குள் தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சினையன்று.....//

நிச்சயமாக, மாற்றம் அவசியம் அதேநேரத்தில் விழிப்புணர்வும் அவசியம். இவைகள் நாம் இருக்கும் தளத்தில் ஆரம்பிக்க இந்தப் பிரச்சினைகள் தாமாகவே அகன்று விடும். உங்கள் கருத்துடன் முழுதாகவே உடன்படுகிறேன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

முல்லைப்பிளவான் சொன்னது…

முதிர் கன்னிகள் தொடர்பான இந்த கருத்து களம் மிக நன்றாக உள்ளது அனைத்து விடயங்களும் அலசப்பட வேண்டியவைதான். இதில் அலசப்படுவதுடன் மட்டும் நின்று விடாமல் அடுத்த கட்ட செயற்பாட்டிற்கும் எமது சமூகத்தினை கொண்டு செல்வதற்கும் முயற்சிகள் செய்வது நல்லது.

எமது சமூகத்தில் தற்போது முதிர் கன்னிகளின் அளவினை விட இளம் விதவைகளின் அளவு மிகவும் கூடுதலாக உள்ளதாக நான் கருதுகின்றேன். இது தொடர்பிலும் எமுது சமூகம் சரியான திர்மானத்திற்கு வருதல் வேண்டும். இல்லாவிடில் பாரிய சமூகப்பிரச்சனைகளை எமுது சமூகம் எதிர்காலத்தில் சந்திக்கலாம். இது தொடர்பிலும் கருத்துகளையும் தாங்கள் மேற்கொள்வது நல்லது.

Chandravathanaa சொன்னது…

நிறையச் சிந்திக்க வைக்கும் யதார்த்தமான பதிவு.

'திருமணம் மட்டுமா வாழ்க்கை, எங்களால் திருமணம் இல்லாமல் வாழமுடியும்....' என்று
பேசுவதும், எழுதுவதும் மிகச்சுலபம்.

கிடுகுவேலி சொன்னது…

//...முல்லைப்பிளவான் said...

முதிர் கன்னிகள் தொடர்பான இந்த கருத்து களம் மிக நன்றாக உள்ளது அனைத்து விடயங்களும் அலசப்பட வேண்டியவைதான். இதில் அலசப்படுவதுடன் மட்டும் நின்று விடாமல் அடுத்த கட்ட செயற்பாட்டிற்கும் எமது சமூகத்தினை கொண்டு செல்வதற்கும் முயற்சிகள் செய்வது நல்லது.

எமது சமூகத்தில் தற்போது முதிர் கன்னிகளின் அளவினை விட இளம் விதவைகளின் அளவு மிகவும் கூடுதலாக உள்ளதாக நான் கருதுகின்றேன். இது தொடர்பிலும் எமுது சமூகம் சரியான திர்மானத்திற்கு வருதல் வேண்டும். இல்லாவிடில் பாரிய சமூகப்பிரச்சனைகளை எமுது சமூகம் எதிர்காலத்தில் சந்திக்கலாம். இது தொடர்பிலும் கருத்துகளையும் தாங்கள் மேற்கொள்வது நல்லது...///

நிச்சயமாக...அதுவும் இப்போதுள்ள ஒரு சூழலில் சமூகப் பிரச்சினையாகவே மாறி உள்ளது. அந்த சிக்கல் தொடர்பாகவும் ஒரு ஆரோக்கியமான ஆராய்வு தேவை...!! நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//....Chandravathanaa said...

நிறையச் சிந்திக்க வைக்கும் யதார்த்தமான பதிவு.

'திருமணம் மட்டுமா வாழ்க்கை, எங்களால் திருமணம் இல்லாமல் வாழமுடியும்....' என்று
பேசுவதும், எழுதுவதும் மிகச்சுலபம்...///

என்க்கு அந்தக் கருத்தில் மனதளவில் உடன்பாடு இல்லை. அப்படி எவர் வாழ்ந்தாலும் தங்கள் உணர்வுகளை வதைக்கிறார்கள் நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். வலைப்பூ உலகில் நன்கு அறியப்பட்ட்ட ஒரு மூத்தவர். இங்கே பின்னூட்டமிட்டது மகிழ்வே.

பெயரில்லா சொன்னது…

இந்நிலையில் எம் இளைஞர்கள் வெளிநாட்டீல் இருந்து கொண்டு படுத்தம் பாடு சொல்ல முடியாது. அழகான வெள்ளை, இளமை என்று 1000 தெரிவுகள்... அதைவிட கொடுமை ஏராளமான ஈழத்தமிழர்களுக்கு வேறு இன துணை தான் சரிவருகிறது, நாட்டில் எத்தனை பெண்கள் கஸ்டப்பட்டாலும் இவர்களுக்கு வெள்ளையும் சொள்ளையும் தான் வேணும்.

S Mayurathan சொன்னது…

I do fully agree with your comment. I know some friends who got married without any negotiation on the 'seethanam'. I know many friends they married after intensive negotiation on the 'seethanam'. Yor article captured many families' real life scenario. Well thought and constructed article. We need more writings on this kind. Thank you. Mayu

Gajen சொன்னது…

100% உண்மை
மேலும் பல பெண்கள் தாம் சிறு வயதிலிருந்து வளர்ந்த விதத்தாலோ என்னவோ தெரியாது.
தமது எதிர்பார்ப்புக்களை மிகவும் உயர்வாக வைத்துக் கொள்கிறார்கள்.
வயது செல்லச் செல்ல தெரிவுகளும் குறைந்து செல்வதால் விரக்தியே எஞ்சுகிறது

கருத்துரையிடுக